சனி, 31 டிசம்பர், 2011

புத்தாண்டு வாழ்த்துக்கள்



//எதிர்காலம் கடந்த காலத்தை விடக் கண்டிப்பாய்
சிறப்பானது தான். நாம் தான் முன்னேறிச்
செல்ல வேண்டும். //-- அன்னை


வலை அன்பர்களுக்கும் அவர்கள் குடும்பத்தார்களுக்கும், நண்பர்களுக்கும் எங்கள் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

வாழ்க வளமுடன்.

புதன், 21 டிசம்பர், 2011

திருக்கயிலை யாத்திரை -பகுதி -4

காவாய் கனகத் திரளே போற்றி!
கயிலை மலையானே போற்றி!

7.09.11

இன்று காலை 7 மணியளவில் சாகாவிலிருந்து புறப்பட்டோம். வழி முழுதும்
மலைப்பாலைவனம் எனலாம். குடியிருப்புப் பகுதிகள் அநேகமாகஇல்லை எனலாம்.
சீனாவில் நெடுஞ்சாலைகள் நன்கு பராமரிக்கப்படுகின்றன. போக்குவரத்துக்குறியீடுகள்
சில இடங்களில் காணப்படுகின்றன. கைகாட்டிகளில் ஊர்ப்பெயர்கள் சித்திர எழுத்துக்களில் மட்டுமே உள்ளன. சீனமொழி என்றார்கள். ஆங்கிலப் பயன்பாடு எங்குமே இல்லை.
ஊர்களுக்கிடையே உள்ள தூரம் குறிக்கும் கற்கள் மிகச்சிலவே. எல்லா நெடுஞ்சாலைகளிலும்
ஆங்காங்கே கடல்மட்டத்திலிருந்து அந்த அந்த இடத்தின் உயர விவரங்கள் மீட்டர் அளவில் காணப்படுகிறது. வழியில் ஒரு சிறிய விடுதியில் காலை உணவு உண்டோம்.


மீண்டும் பயணம்.மதியத்தில் zhongba என்ற சிற்றூரை அடைநதோம். old drong payak hotel என்ற விடுதியில் மதிய உணவு உண்டோம்.வசதிகள் இல்லாத விடுதி.மண்விடுதி (mud house)
என்றுதான் சொல்ல வேண்டும்.(கயிலையிலிருந்து திரும்பிவந்த போது இங்கு ஓர் இரவு தங்கினோம்.)


பிற்பகல் 3 மணியளவில் பரியாங்(buryong) என்னும் ஊரைச் சென்றடைந்தோம்.சிறிய ஊர். வசதிகள் இல்லாத ஊர்.






அங்கு ”தேஜி ஓட்டல்”(deji hotel)என்னும் விடுதியில் தங்கினோம். அடிப்படை வசதிகள் சரியில்லை.அது ஒரு mud house.ஒரு சிறிய வளாகத்தில் விடுதி அமைந்துள்ளது.

அங்கு எங்களுக்கு அறைகள் ஒதுக்கப்பட்டன.ஆறு பேர்,4பேர்



எனத் தங்கும்
அறைகள் உள்ளன. இரவு நேரங்களில் வளாகத்தை விட்டு வெளியே செல்வது உசிதம் அல்ல. நாய்கள் நிறைய உள்ளன.எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.


08.09.11.


இன்று காலை பர்யாங்கிலிருந்து புறப்பட்டோம். அருமையான சாலை.
இருபுறமும் அருமையான மலைகள். 10 மணியளவில் ஓரிடத்தில் இறங்கி
உணவு உணடோம். புளியோதரை, வத்தக்குழம்பு சாதம் சாப்பிட்டோம்.









அங்கிருந்து பேருந்தில் ஒரு மேடு ஏறி இறங்கியதும் திருக்கயிலாய மலை கண்முன்
தோன்றியது. அப்போது எங்களுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவேயில்லை!
ஓம் நமச்சிவாயா! ஓம் நமச்சிவாயா! என எல்லோரும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். காவாய் கனக திரளே போற்றி ! கயிலை மலையானே போற்றி போற்றி!என பக்தி மேலிடக் கூறி கற்பூரம் ஏற்றி வழிபட்டோம். ”வேற்றாகி விண்ணாகி’ என்று தொடங்கும்
திருமுறைப் பதிகத்தைப் பாடினோம்.

திருக்கயிலையின் வெள்ளிமுடி தரிசனம் கிடைத்தது. மானசரோவர் ஏரியையும் அங்கு தரிசிக்க முடிந்தது. மானசரோவர் ஏரியில் கயிலை மலை காட்சி தெரிந்த்தது. பின்னர் பேருந்திலேயே மானசரோவரை வலம் வரத் தொடங்கினோம். சுற்றி வரும் போது கயிலை காட்சியை பார்த்துக் கொண்டே வந்தோம்.கயிலை காட்சி தந்தவுடன் என் மனதில் என் மாமனார் சிவபூசை செய்யும் போது பாடும் பாட்டு நினைவுக்கு வந்தது. கண்களில் நீர் துளிர்த்தது.

அந்தப்பாடல்:

மனத்தகத்தான் தலைமேலான் வாக்கினுள்ளான்
வாயாரத் தன்னடியே பாடுந் தொண்டர்
இனத்தகத்தான் இமையவர் தஞ்சிரத்தின் மேலான்
ஏழண்டத் தப்பாலான் இப்பாற் செம்பொன்
புனத்தகத்தான் நறுங்கொன்றைப் போதினுள்ளான்
பொருப்பிடையான் நெருப்பிடையான் காற்றினுள்ளான்
கனத்தகத்தான் கயிலாயத்து உச்சி யுள்ளான்
காளத்தியான் அவனென் கண்ணுளானே

-திருநாவுக்கரசர்.




35 கிலோமீட்டர் தொலைவிற்கு ஏரியைச் சுற்றிவர நல்ல மண்சாலை உள்ளது.







அப்போது ஓரிடத்தில் பேருந்தை நிறுத்தி மானசரோவர் ஏரியில் இறங்கி நீராடினோம். மிகக் குளிர்ந்த தெளிவான நீர். முதலில் தண்ணீரில் காலை வைத்தவுடன் ஜில் என்று ஜஸ் மாதிரி இருந்தது. ஏரியில் மூன்று முங்கு முங்கியவுடன் குளிர் இருந்த இடம் தெரியவில்லை. நீரில் மூழ்கியெழுந்து கயிலையைநோக்கித் தரிசித்தோம். நீரில் மூழ்கி மூர்த்தங்கள் சேகரித்தோம். கண்களை மூடிக் கொண்டு மூர்த்தங்களை எடுக்க வேண்டும்.( நீரில் உள்ள கற்களை மூர்த்தங்கள் என்பார்கள்.) கேன்களில் புனித நீரை சேகரித்துக் கொண்டோம்.

அங்கு திபத்திய பெண்கள் மணி மாலைகள் விற்க வருகிறார்கள். அவர்கள் நம்மிடம் பொட்டு. வளையல் , கேட்கிறார்கள். ஒரு பெண் என் காலில் உள்ள மெட்டியைப் பார்த்து அதை தா என்று கேட்டார்கள்.திருவாரூரிலிருந்து எங்களுடன் வந்தவர்கள் தன்னிடமிருந்த ஒட்டுப் பொட்டுகளை கொடுத்தார்கள். பின்னர் பஸ்ஸிலே ஏறி வலம் வருதலைத் தொடர்ந்தோம்.

மானசரோவர் ஏரியில் அன்னப்பறவைகள்? நீந்திக்கொண்டிருந்தன. சீகல் பறவைகள் அங்குமிங்கும் பறந்து கொண்டிருந்தன. வலம் வரும்போது எங்கிருந்து பார்த்தாலும் கயிலையை நன்கு தரிசிக்க முடிந்தது. அவ்வப்போது மேகங்கள் அதைச் சூழ்ந்திருந்தன பின்னர் சூகேம்ப் என்னும் இடத்தில் இறங்கி ஒரு மண் விடுதியில் தங்கினோம்.


09.09.11

சூகேம்பிலிருந்து பார்த்தாலும் கயிலைமலை நன்கு தெரிந்தது. அன்று மாலைப் பொழுதில் இளம்வெயிலில் மானசரோவர் ஏரிக்கரையில் அமர்ந்து கயிலைமலையின் அழகையும், மானசரோவரின் அழகையும் கண்டு ரசித்தவண்ணமே இருந்தோம். எனினும் இந்த இடத்தில் ஏரியில் இறங்க முடியவில்லை. ஏரிக்குள் வேலி இடப்பட்டிருந்தது. குளிர்காலங்களில் ஏரி உறைந்து போய்விடுமாம். ஏரியின் மீது தரைப் போக்குவரத்து இருக்குமாம்.

மானசரோவர் நீர்ப்பரப்பில் நள்ளிரவு நேரங்களில் வானிலிருந்து நட்சத்திரங்கள் இறங்கி வரும் எனக்கூறுகிறார்கள். (தேவர்கள் முதலியோர் அந்த நேரங்களில் வருவார்கள் என்று புராணம் கூறுகிறது.) எங்களில் சிலர் அக்காட்சியைக்காண ஆவலாய் விழித்திருந்தார்கள் . எனினும் அன்று முன்னிரவிலிருந்தே பலத்த காற்றும்,நல்ல மழையும் இருந்தது. ஓயவேயில்லை. எனவே அந்த அரிய காட்சியைக்காணும் வாய்ப்பு கிட்டாமல் போய்விட்டது.

மறுநாள் மானசரோவர் ஏரிக்கரையில் வேள்வி செய்தோம். அதை அடுத்த பதிவில் பார்ப்போம்.

திருக்கயிலை யாத்திரை - பகுதி- 3

காவாய் கனகத் திரளே போற்றி!
கயிலை மலையானே போற்றி!


4. 09. 2011 அன்று காலை 7 மணிக்கு காத்மாண்டு விடுதியிலிருந்து புறப்பட்டோம். சற்று தூரம் நடந்து சென்று சுற்றுலாப் பேருந்தில் ஏறினோம்.

நாங்கள் எடுத்துச்செல்லும் பெரிய சுற்றுலாப் பைகளுக்கு ,யாருடையது என்பதைத் தெரிந்து கொள்வதற்காக அவற்றுக்கு எண்ணிடப் பெற்றன.அவற்றை நடத்துநர் குழுவினரே தங்கள் பொறுப்பில் எடுத்துவந்து தங்கும் இடம் வந்தவுடன் எங்களிடம் ஒப்படைப்பார்கள்.


பின்னர் பாணிபா(banepa)என்கிற நகரம், சுகூட்(sukute) என்கிற கிராமம் ஆகிய ஊர்களின் வழியாகச் சென்றோம். மலைகளும்,ஆறுகளும்,பள்ளத்தாக்குகளுமாக இயற்கை, அற்புதம் புரிந்திருந்தது. ஆற்றோரங்களில் சில இடங்களில் வாழை மரங்கள் செழுமையாக வளர்ந்திருந்தன. படிப்படியான தோற்றத்துடன் வயல்கள் இருந்தன.

வழிகளில் ஆங்காங்கே இராணுவத்தினரின் சோதனைகள் இருந்தன.

பார்க்பிசே (bhargbise town), சிந்துபால் சவுக் ஆகிய இடங்களைக் கடந்தோம். பின்னர் நேபாள-சீன எல்லையில் அமைந்துள்ள கோத்தாரி என்னும் இடத்தை அடைந்தோம். காத்மாண்டுவில் இருந்து சுமார் 115 கி.மீ தூரத்தில் உள்ள இவ்வூருக்கு காலை 10 மணிக்கு சுமாருக்கு வந்து சேர்ந்தோம். அங்கு ஒரு உணவு விடுதியில் உணவு உண்டோம். அந்த ஓட்டலில் நம் ஊர்ப் பணத்தைக் கொடுத்து சீனப்பணம் பெற்றுக்கொள்ளலாம். அந்த ஒட்டலின் பின்புறம் ஆற்று நீர் சல சல என்று அருவி மாதிரி ஓடுகிறது.
பார்க்கக் கொள்ளை அழகு. அங்கு மானஸரோவர் கயிலை படங்களை விற்கிறார்கள்.

அந்த ஓட்டலில் இருந்து ’நட்பு பாலம்’ வரை நடந்து போக வேண்டும். நம் முதுகில் மாட்டி இருக்கும் பையைத் தூக்கிக்கொள்ள திபெத்திய சிறு பெண்கள், பெரிய ஆட்கள் , சிறு பையன்கள் போட்டி போட்டுக் கொண்டு வருகிறார்கள். ஒருவர் சுமையை தூக்கி வர 50 ரூபாய் வாங்கிக் கொள்கிறார்கள். அங்கு சுமார் ஒரு மணி நேரத்திற்கு நல்ல மழை இருந்தது. சுற்றுலாப்பைகளை உதவியாளர்கள் எடுத்து வரும்போது அவை நனைந்துவிட்டன.

















பெரிய ஆறு ஒன்று இரண்டு நாட்டுக்கும் எல்லையாக அமைந்துள்ளது. அதன் மீது அமைந்துள்ள பாலம் “நட்புப் பாலம்”(friendship bridge)என்று அழைக்கப்படுகிறது. அந்தப் பாலத்தின் பாதிப் பகுதி நேபாளத்திற்கும் பாதிப் பகுதி சீனாவிற்கும் உரிமையானது. சீனப் பகுதிக்குள் நுழைய இமிகிரேஷன் ஆவணங்கள் சரிபார்க்கப்படுகின்றன. சுங்க இலாகாவின் சோதனை நடக்கிறது.அந்தப் பாலத்தின் நுழைவாயிலில் இரண்டு புறமும் துவார பாலகரைப் போல் சீனச் சிப்பாய்கள் ஆடாமல் அசையாமல் நிற்கிறார்கள். சுற்றுலாப் பயணிகளைக் காட்டிலும் நேபாளத்திலிருந்து சீனாவுக்குத் தினமும் சென்றுவரும் கூலித்தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதிக சுமைகளைத் தலையிலும் முதுகிலுமாகத் தூக்கிச் செல்லும் ஆண்களையும்,பெண்களையும் பார்க்க வேதனையாக உள்ளது. பெண்கள் பொருட்களோடு தங்கள் கைக்குழந்தைகளையும் தங்கள் முதுகுத் தொட்டிலில் தூக்கிச் செல்கின்றனர்.

சோதனைகளைக் கடந்து சென்ற பின்னர் 3 மணி அளவில் சீனப் பகுதியில் எங்களுக்கு அமர்த்தப்பட்டிருந்த பேருந்தில் ஏறினோம். மலைப்பகுதிகளில் வளைந்து வளைந்து சென்றது பஸ்.

மலையுச்சியிலிருந்து மிக நீண்டு விழும் அருவிகள் பல. பள்ளத்தாக்குகள், அடுக்கடுக்காய் அமைந்த குடியிருப்புப் பகுதிகள், நிலச்சரிவுத் தடங்கள், வழியாக எங்கள் பேருந்து சென்றது. குளிர் காரணமாய் ஜன்னல்கள் அடைத்து பஸ்ஸில் ஹீட்டர் போட்டு இருந்தார்கள். ஜன்னல் வழியாகத்தான் போட்டோ எடுக்க முடிந்தது. நிறைய படம் கயிலையில் எடுக்க வேண்டும் (கேமிரா பேட்டரி சார்ஜ் செய்யும் முறை) என்று அழகிய அருவிகளை எடுக்க வில்லை வரும் போது எடுக்கலாம் என்று விட்டு விட்டோம். திரு.ஏ.பி. நாகராஜன் அவர்கள் எடுக்கும் பக்தி படத்தில் காட்டும் காட்சிகள் போல் இருந்தன பலஇடங்கள்.

























பிற்பகல் 3.35 மணிக்கு நியாலம் என்னும் ஊரை அடைந்து she sha bang ma hotel என்ற விடுதியில் தங்கினோம். அங்கு சென்ற உடனேயே கடுங்குளிரை உணரத்தொடங்கினோம்.





இறங்கினவுடனேயே ஸ்வெட்டர் மட்டுமின்றி ஜெர்க்கினையும் கட்டாயம் போடவேண்டியிருந்தது. குரங்குக் குல்லா, கையுறையையும் அணிய வேண்டியிருந்தது.அந்த வளாகத்திலேயே ஒரு விற்பனை நிலையம் இருந்தது. அங்கு கம்பளி ஆடைகள் சூடாக விற்பனையானது. ஐ.எஸ்.டி வசதியும் அங்கே இருந்தது. பயன்படுத்திக்கொண்டோம். அங்கு தங்கும் அறைகள் வசதியாகவே உள்ளன.
படுக்கை வசதி, மின்விளக்கு, கழிவறை வசதிகள் நன்றாகவே இருந்தன. இரவு கூட்டுவழிபாடு செய்தோம்.

உணவு தயார் செய்ய சமையலாளர் குழு எங்களுடன் வந்தது. ஒரு தனி லாரியில் காய்கறிகள், மளிகை சாமான்கள்,காஸ் அடுப்புகள் முதலியவற்றை எடுத்து வந்தனர். பஃபே முறையில் உணவுகள் வழங்கினர்.
















05.09.11 அன்று காலை எழுந்தோம்.கடுங்குளிரையும் உணர்ந்தோம்.குளிக்க வெந்நீர் வசதியில்லை, குளியல் அறையும் கிடையாது. முகம் கழுவ, பல்தேய்க்க வெந்நீர் தருவார்கள். காலை, காப்பி, டீ, ஹார்லிஸ் அல்லது பூஸ்ட் தருவார்கள் நமக்கு வேண்டியதை வாங்கி பருகலாம். பூரி,உருளைக்கிழங்கு, சேமியா பாயசம், ஓட்ஸ் கஞ்சி, பப்பாளி ஸ்லைஸ் முதலியவற்றைக் காலை உணவாகக் கொண்டோம்.

சிலர் அருகிலிருந்த பாதையில் மலையேற்றப் பயிற்சி மேற்கொண்டனர். கடுங்குளிருக்கு எங்கள் உடம்பை பழக்கப்படுத்திக்கொள்வதற்காக அன்று நியாலத்திலேயே தங்கினோம்.


முந்திய நாளில் நனைந்திருந்த எங்கள் உடைகளையும் உடைமைகளையும் வெயிலில் காயவைத்து எடுத்துவைத்துக் கொண்டோம். மதிய உணவு, அருமையாக சமைத்து இருந்தார்கள். இரவு உணவுக்கு பின் நாங்கள் தங்கி இருந்த அறையில் தான் எல்லோரும் அமர்ந்து கூட்டு வழி பாடு செய்தோம். ’தினமும் போற்றித் திருத்தாண்டகம் படிக்க வேண்டும், அப்போது தான் திருக்கயிலை தரிசனம் நன்கு கிடைக்கும்; என்று மனோகர் சொல்லிக் கொண்டு இருப்பார். எங்கள் குழுவில் உள்ள வய்து முதிர்ந்தவர்(வயதில் பெரியவர், உற்சாகம் சுறு சுறுப்பில் இளைஞர்) மூன்றாவது முறையாக கயிலை வந்த இளமுருகுசார் சொல்லச் சொல்ல நாங்கள் சொல்வோம்.அவர் சைவ சித்தாந்தம் படித்தவர்.




06.09.11.அன்று இந்திய நேரப்படி காலை நியாலத்திலிருந்து பேருந்தில் புறப்பட்டோம். சாகா என்னும் ஊரை நோக்கிப் பயணமானோம்
. வழியில் இரண்டு பக்கங்களிலும் மலைப்பகுதிகள்,
சமதளங்கள், பரந்த வெளிகள்; மரங்கள் கிடையாது. புல்,பூண்டுகள் மட்டுமே. பனிமூடிய மலைகள் ஆங்காங்கே தெரிந்தன.நீண்டும் வளைந்தும் உள்ள சாலைகள் 10,15 மைல்களுக்கு மேலாகக் கண்களுக்குத்தெரிந்தன. தார்ச்சாலைகள் செம்மையாக உள்ளன.குறிப்பிடும்படியாக எங்கும் ஊர்களே இல்லை. 50 மைல்களுக்கு ஒருமுறை 10,15 வீடுகள் காணப்படும். அவையும் வசதிகளற்றவை. சுமார் 100 கி.மீ அளவில்சென்றால் மிகச்சிறு விடுதிகள் உள்ளன.




சாம்பல் நிற மண்பூமியே எங்கும். விலங்குகள், பறவைகளைக் காண்பது மிக மிகஅரிது. மனிதர்கள் வாழிடங்களில் மட்டும், நாய்கள், காகங்கள் முதலியவற்றைக் காணமுடிகிறது.

சாகா ,பிரம்மபுத்ரா நதிக்கரையில் உள்ளது. குளிர்ந்த தெளிந்த நீரோட்டத்தோடு விரைந்து செல்கிறது,பிரம்மபுத்திரா.





பிற்பகல் 2 மணி அளவில் சாகா நகரை அடைந்தோம்.அங்கு jilin tour hotel என்னும் விடுதியில் தங்கினோம். விடுதி நல்ல வசதியாகவே இருந்தது.
டி.வி, கெய்சர் வசதிகள் இருந்தன. டி.வியில் 50 மேற்பட்ட சேனல்கள் தெரிந்தன. ஆனால் அனைத்தும் சீன மொழி சேனல்களாகவே இருந்தன. ஆங்கில சேனல் கூட இல்லை.
விடுதியுடன் சூப்பர் மார்க்கெட் இணைந்துள்ளது. வளாகத்தின் அருகில்சிட்டுக்குருவிகளின் ஒலி கேட்டவண்ணம் இருந்தது.

மறுநாள் பயணம் குறித்து அடுத்த பகுதியில் காணலாம்.

செவ்வாய், 20 டிசம்பர், 2011

திருக்கயிலை யாத்திரை- பகுதி 2

திருக்கயிலாய யாத்திரைத் தொடர் - 2

கயிலை மலையானே போற்றி போற்றி!
----------------------------------------








03.09.2011 அன்று காலை உணவுக்குப் பின் எங்களில் சிலர் எவரெஸ்ட் சிகரம் முதலிய காட்சிகளை விமானம் மூலம் காணச் சென்றார்கள். நாங்கள் சிலர் செல்லவில்லை. போய் வந்தவர்கள் இயற்கைக் காட்சி மிகவும் நன்றாக இருந்ததாய்ச் சொன்னார்கள்.

காலை 10 மணிக்கு மேல் ஒரு தனிப்பேருந்தில் ஏறி, காத்மாண்டுவில் உள்ள பசுபதிநாத் கோயில், புத்தநீல்கந்த் கோயில், குஹேஸ்வரி அம்மன் கோயில், உத்திராட்சம், சாளக்கிரமம் விற்கும் கடைகள் ஆகிய இடங்களுக்குப் போனோம்.

பசுபதிநாத் கோயில் போனபோது முதலில் உத்திராட்ச கடையில் நம் உடமைகளை கொடுத்து விட்டு பின் கோயிலுக்கு போகலாம் என்று எங்களை அழைத்து சென்ற ’மது’ சொன்னார். (பெல்ட் அணிந்து கோவிலுக்கு போகக்கூடாது என்று அதையும் வாங்கி வைத்துக் கொண்டார்கள்.தோல் பொருட்களுக்கு அனுமதி இல்லை கோயிலில்) கடையில் நம்மை பிரமாதமாய் வரவேற்று டீ கொடுத்து உபசரித்து கடையில் உள்ள பொருட்களை வாங்க நிறைய பேசினார்கள். ஆனால் நாங்கள் முதலில் பசுபதி நாதரை பார்த்தபின் தான் எல்லாம் என்றவுடன் அவர்கள் கடையிலிருந்து அழகான சிறு வயது உள்ள பெண்ணைக் கூடவே கோயிலுக்கு எங்களுடன் அனுப்பினார்கள், தரிசனம் முடிந்தவுடன் கையோடு கூட்டிவர. நல்ல சுறு சுறுப்பான பெண். கோயிலின் உள்ளே போட்டோ எடுக்கக் கூடாது, அதனால் வெளிப் புறம் தான் எடுத்தோம்.

பசுபதி நாதரை உள்ளே பார்க்கப் போவதற்கு முன்பு அங்கு உள்ள குருஜிகள் நம்மை பிடித்துக் கொள்கிறார்கள். உத்திராட்சம் ஹோமத்தில் வைத்து பூஜை செய்தது, ரூபாய் 100 க்கு வாங்க சொல்கிறார்கள். இதை அணிந்து கொண்டு சாமியைப் பார்த்தால் நல்லது என்கிறார்கள். ஒரு சிலர் வாங்கினார்கள். வரிசையாக நின்று 15 நிமிடங்களுக்கு பின் பசுபதி நாதரைப் பார்த்தோம். அங்கு காசு கொடுத்தால் தான் பிரசாதம்.இல்லையென்றால் நம் நெற்றியில் ஒரு குங்குமத்தை வைத்து ’போங்க போங்க’ என்கிறார்கள். நிறைய பணம் கொடுப்பவர்களுக்கு சாமிக்கு அணிவித்த உத்திராட்சம் கிடைக்கும்.(பெரிய உத்திராட்ச மணிகள் கொண்டது வெளியே அது 20 ரூபாய்)பசுபதிநாதருக்குப் போட்ட ருத்ராட்ச மாலையை 100 ரூபாய் கொடுத்தும் வாங்கிக் கொள்ளலாம். பெண் காவலர்கள், கோயில் பணியாளர்கள் நம்மை நகர்ந்து கொண்டே இருங்கள் என வழி நடத்துகிறார்கள்.

கருவறை பெரிய அளவில் சதுரமாய் இருக்கிறது. கருவறையில் உள்ள நான்கு முகம் உடைய சிவலிங்கப்பெருமானை நான்கு வாசல்களின் வழியாகவும் பார்க்கலாம். கருவறையை நிமிர்ந்து பார்த்துக் கொண்டு தங்க கவசம் அணிந்த நந்தி மிகப் பெரிதாய் உள்ளது. நான்கு வாயில்களின் கதவுகளிலும் சுவர்களிலும் வெள்ளி தகடுகள் பதிக்கப் பட்டுள்ளன. அழகிய உலோகச் சிற்பங்கள் உள்ளன.

பசுபதி கோயில் அருகில் பாகுமதி ஆறு ஓடிக் கொண்டு இருக்கிறது. நிறைய படிக்கட்டுகள் அமைந்துள்ளன. அந்த இடத்திற்கு ’ஆரியா காட்’ என்று பெயர். இங்கு இறந்தவர்களை எரிப்பார்களாம்.



கோயிலில் புறாக்கள் நிறைய உள்ளன. குரங்குகளும் நிறைய உள்ளன. வெளி வாயிலில் பெண் தபசிகள் இருக்கும் மடம் இருக்கிறது.



கோயில் தரிசனம் முடிந்தவுடன் உத்திராட்சக்கடைப் பெண்ணுடன் கடைக்குப் போய் எங்கள் பொருட்களை பெற்றுக் கொண்டோம். அந்த கடையில் ஒருமுக உத்திராட்சத்திலிருந்து 14 முக உத்திராட்சம் வரை இருக்கிறது. இரண்டு முகம் இணைந்த உத்திராட்சத்தை ’கெளரி சங்கர்’ ,’சிவ பார்வதி உத்திராட்சம்’ என்கிறார்கள். நீண்ட மூக்கு உள்ள உத்திராட்சத்தை ’கணேஷ் உத்திராட்சம்’ என்கிறார்கள். எங்களுடன் வந்தவர்கள் சிலர் சாளக்கிரமங்கள், ஒருமுக, சிவகெளரி உத்திராட்சங்கள் வாங்கினார்கள். லட்சுமி நாராயண, சங்கு சக்கர, சந்தானகோபால், சுதர்ஸன , வாசுதேவ், நரசிம்ம என்ற பெயர்களுடன் சாளக்கிரமங்கள் உள்ளன.





பின் குஹேஸ்வரி கோயில் போனோம். 64 சக்தி பீடங்களில் இதுவும் ஒன்று.(பார்வதி தேவியின் உடல் பாகம் விழுந்த இடம்) பிரதாப் மல்லா என்ற ராஜா 17ம் நூற்றாண்டில் கட்டிய கோயில். இங்கும் குரங்குகள் நிறைய உள்ளன. அங்கு பழங்கள் குங்குமம் எல்லாம் வைத்து அபிஷேகம் செய்து கொண்டு இருந்தார்கள்.





இந்த கோயிலின் அருகிலும் ஆறு ஓடுகிறது. கோயில் வாசலின் இருபுறமும் கண்கள் ஒவியமாக வரைந்து இருக்கிறார்கள். கோயில் உள்ளே ஜன்னல்கள் அழகாய் உள்ளன. புகைப் படம் எடுக்கக் கூடாது என்கிறார்கள்.

கோயிலில் நேபாள கல்யாணம் ஒன்று நடந்து கொண்டு இருந்தது. சிறிது நேரம் பார்த்தோம்.
அங்கு கோயிலுக்கு வெளியே நிறைய கலைப் பொருட்கள் விற்றார்கள். பேரம் பேசத் தெரிய வேண்டும்.விலை இரண்டு மடங்காய் சொல்கிறார்கள். பாதி விலைக்குக் கேட்டு வாங்கி தந்தார்கள், உடன் வந்தவர்கள்.




அடுத்து புத்தநீல்கந்த் என்ற கோவிலுக்கு போய் இருந்தோம்.அங்கே போக காத்மாண்டுவிலிருந்து ஒருமணி நேரம் ஆகிறது. 9 கிலோ மீட்டர் தூரம் தான்.சிவபுரி மலை அடிவாரத்தில் இக்கோயில் உள்ளது. அங்கு 11 தலை உடைய பாம்புப் படுக்கையில் சங்கு, சக்கரம், கதை, தாமரை மலர் தாங்கிய நான்கு கரங்களுடன் அழகாய் நீரில் படுத்து இருக்கிறார் புத்தநீல்கந்த். ஜலசயனநாராயணன் என்றும் இவரைக்கூறுகிறார்கள் பெரிய மலைப்பாம்பு பின்னிப் பின்னி வளைந்தது போல் உள்ளது. கருவறை கிடையாது.ஒரு குளத்தின் நடுவில் திருவுருவம் மட்டும் உள்ளது. வெயில் படாமல் இருக்க அலங்காரப் பந்தல் போட்டு இருக்கிறார்கள்.நேரே போட்டோ எடுக்க அனுமதி இல்லை. வெளிப் பக்க மதில் ஓரத்திலிருந்து எடுத்தோம்.

அங்கு உருத்திராட்ச மரம் இருக்கிறது. அதன் பக்கத்தில் இரண்டு சிறிய கோயில்கள் உள்ளன. அங்கு வித விதமாய் தனி உத்திராட்சங்கள் விற்கிறார்கள்; ஒரு முகம், சிவகெளரி என்றெல்லாம் கூறி அதன் நன்மைகளையும் கூறி நிறைய பேர் விற்பதற்காக நம்மை சுற்றிக் கொள்வார்கள். நம் இந்தியப்பணம் கொடுத்தாலும் வாங்கிக் கொள்வார்கள். அங்கு வெளியே கோயில் சம்பந்தமான பொருட்களை விற்கும் கடைகளும் இருக்கின்றன.

அன்று மாலை காத்மாண்டு கடைவீதிக்குச் சென்று கயிலை பயணத்திற்குத் தேவையான சில விட்டுப் போன சாமான்களை வாங்கிக் கொண்டோம். வேள்விக்கு வேண்டிய நெய் பாட்டில் வாங்கி கொண்டோம். இரவு உணவு அருந்தி கயிலை நாதரை நினைத்து கூட்டுப் பிரார்த்தனை முடித்து உறங்கினோம்.

மறுநாள் கோத்தாரி என்ற இடத்தை அடைந்து ,நட்பு பாலத்தை கடந்து சீனப் பகுதிக்குச் சென்று கயிலை நோக்கிப் பயணமானோம்.அதைப்பற்றி அடுத்த பதிவில் கூறுகிறேன்.

திங்கள், 19 டிசம்பர், 2011

திருக்கயிலை யாத்திரை







சிவமயம்
காவாய் கனகத்திரளே போற்றி !
கயிலை மலையானே போற்றி!!

சென்ற செப்டம்பர் மாதம் நாங்கள் கயிலையாத்திரை சென்று வந்தோம். மனோகர்
ட்ராவல்ஸ் மூலம் சென்றுவர ஏற்பாடு செய்திருந்தோம்.அதற்கு 15 நாட்களுக்கு முன்தான் எங்கள் கயிலைப் பயணம் முடிவு செய்யப்பட்டது. அதற்கு முன் இரண்டு முறை போயிருந்த என் கணவரின் அண்ணன், அண்ணியின் அனுபவ உரைகளை கேட்டு தேவையானவைகளை எடுத்துக் கொண்டு அவர்கள் ஆசிகள். மற்றும் என் மாமனார், மாமியார் ஆசிகளுடனும், திருவருள் துணையோடும் 31.08.2011 அன்று நாங்கள் மயிலாடுதுறையிலிருந்து காலை 11 மணிக்கு சோழன் விரைவு ரயில் வண்டியில் சென்னைக்குப் புறப்பட்டோம். மாலை சென்னை சென்றடைந்த பின் கணவரின் பெரிய அண்ணா வீட்டில் தங்கி அவர்களிடம்ஆசி பெற்று எங்கள் கயிலை பயணத்தை தொடங்கினோம்.

02.09.2011 காலை 4.45 மணிக்கு விமானநிலையம் வந்தோம். கயிலை செல்லும்
எங்கள் குழுவினரில் பலர் அங்கு வந்திருப்பார்கள் என்று எதிர்பார்த்திருந்தோம்.எங்கள் குழுவில் மொத்தம் 27 பேர் என்ற விவரம்முன்பே தந்திருந்தனர். எங்கள் இருவரைத்தவிர இரண்டு பேர் மட்டுமே எங்களுடன் சென்னையிலிருந்து விமானத்தில் வந்தனர். 06.50 மணிக்கு ஜெட் ஏர்வேஸ் மூலம் டெல்லி புறப்பட்டோம். 09.30 மணிக்கு டெல்லி உள்நாட்டு விமானநிலையத்தை அடைந்தோம்.அங்கிருந்து சர்வதேச விமானநிலயத்திற்குச் சென்றோம். எங்களை வழிநடத்திச் செல்லும் திரு.மனோகர் எங்கள் எல்லோரையும் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வந்து குழுமச்செய்தார். பயணக்குழுவினரில் பெரும்பாலானோர் வந்து சேர்ந்திருந்தனர்.



ஆவணச்சரிபார்ப்பு,லக்கேஜ் செக்-இன் முதலியவை முடிந்து காத்மாண்டு செல்லும் ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் ஏறினோம்.பிற்பகல் 2 மணிக்கு காத்மாண்டு விமானநிலையத்தில் இறங்கினோம்.எங்களை மதுசூதன் என்பவர் அங்கிருந்து வேனில் ”ஹோலிஹிமாலயா” என்ற விடுதிக்கு அழைத்து சென்றார். அங்கு எங்களுக்கு நன்கு உபசாரம் செய்தனர். சற்று நேரம் ஓய்வு எடுத்தோம். பயணச்செலவுக்கெனக் கூடுதலாகக் கொஞ்சம் பணம் தேவைப்பட்டதால், ரிக்‌ஷாவில் ஏறி, தர்பார் ரோட்டில் உள்ள ”நேபாள் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா” ஏ.டி.எம்மில் பணம் எடுத்துக் கொண்டோம். நேபாள ரிக்‌ஷாகாரர் நல்ல மனிதர் ஊருக்குப் புதியவர்கள் என்று ஏமாற்றவில்லை. மாலையில் 8 மணிக்கு மீட்டிங் அறையில் கயிலைப் பயணிகளின் கூட்டம் திரு.மனோகர் தலைமையில் நடைபெற்றது.

இறைவழிபாட்டுடன் கூட்டம் துவங்கியது. நாங்கள் எடுத்துச் சென்று இருந்த ’பன்னிருதிருமுறை திரட்டை’ எங்களுடன் கயிலைக்கு வருபவர்களுக்கு கொடுத்தோம். மனோகர் அவர்களும் பன்னிருதிருமுறை திரட்டு புத்தகங்களை எல்லோருக்கும் கொடுத்தார். திருப்பராய்த்துறை ஸ்ரீ இராமகிருஷ்ணா மடாலயத்தில் இருந்து மூன்று ஸ்வாமிஜிக்கள்
எங்களுடன் பயணிகளாகக் கலந்து கொண்டனர். எல்லோரும் தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டனர்.


மனோகர் டிராவல்ஸ் அதிபர் ,திரு. மனோகர், சுற்றுலா அதிபர் திரு.ஜோதி அதிகாரி, வழிகாட்டி திரு.பதம் ஆகியோர் கயிலாயம் செல்லுவதற்குரிய குறிப்புகளைத் தந்தனர்.செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை, தேவையான பொருட்கள் முதலியவை பற்றிய குறிப்புகளைத் தம் பேச்சில் குறிப்பிட்டனர். மூன்று நாட்களுக்குத் தேவையான பொருட்களை எடுத்துச் செல்ல பெரிய சுற்றுலாப்பையும், முதுகில் சுமக்கக் கூடிய ஒரு சிறிய பையும், தொப்பியும் ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்டன. குளிருக்கு ஜெர்க்கின் தரப்பட்டது.

கொண்டு செல்ல கூடிய பொருட்களின் லிஸ்ட்: மூன்று செட் உடைகள் தனி தனி பாலுதீன் கவரில் வைத்து வைக்க வேண்டும், மருந்து மாத்திரைகள் ஒரு லிட்டர் பிடிக்கும் பிளாஸ்க், கையுறை, வாயுறை 10(டஸ்ட் மாஸ்க்), லைட் வெயிட் மழைகோட்டு, தெர்மல் வேர் பேண்ட், டாய்லெட் டிஸ்யூ, குளிக்க கப், 2 பேண்ட்ஜ் துணி ரோல், சிறிய கத்திரி, சன் ஸ்கின் லோஷன், பாண்ட்ஸ் லிப்ஸ்க்ரீம்,1 ஜோடி ட்ரெக்கிங் ஷூ, 1ஜோடி செருப்பு ,குரங்குக் குல்லா, முழுக்கை ஸ்வெட்டர், மானசரோவர் தீர்த்தம் கொண்டு வர 5லிட்டர் கேன் 1, வேள்விப் பொருட்கள், (மயக்கம் வந்தால் முகர்ந்து பார்க்க)பொடித்த சூடம், புளிப்பு மிட்டாய், இலந்தை வடை,உப்பு நார்த்தங்காய், சிகரெட் லைட்டர், பேனா, பென்சில், 1லிட்டர் பெட் பாட்டில், ஒரு சிறிய பை, பூட்டு, சாவி,டார்ச்லைட் ( உயரம் காரணமாய் பேட்டரிகள் சீக்கிரமே அதன் சக்தியை இழந்து விடுவதால் கைவசம் பேட்டரிகள் நிறைய வைத்துக் கொள்ளலாம் என்றார்).’மற்ற நம் லக்கேஜ்கள் நாம் திரும்பி வரும் வரை மீட்டிங் அறையில் பத்திரமாய் இருக்கும்’ என்றார்கள்.

இரவு உணவு சுவையாக சமைத்து அன்பாகப் பரிமாறினார்கள். நாங்களும் அளவாக உண்டு எங்களுக்கு தரப்பட்ட நல்ல வசதியான அறையில் உறங்கினோம்.மறுநாள் காட்மாண்டுவில்
உள்ள பசுபதிநாத் கோயில் முதலியவற்றிற்குச் சென்றோம். அது பற்றி அடுத்த பதிவில் கூறுகிறேன்.

சனி, 17 டிசம்பர், 2011

மார்கழியின் சிறப்பு



மார்கழி வந்து விட்டது. திருப்பாவையும், திருவெம்பாவையும் பாடி இறைவனை பூமாலையுடன், பாமாலையும் சேர்த்து சாற்றி வேண்டினால் வாழ்வில் எல்லா நலங்களும் பெறலாம். மனங்குளிர் மார்கழி என்று சொல்வது போல் உடம்பும் மனமும் குளிரக் குளிர குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும் என்பார்கள். குளிர்ந்த நீரில் குளித்தால் குளிர் போய் விடும் ஆனால் வெந்நீரில் குளித்தால் குளிர் தெரியும். என் அம்மா குளிர்ந்த நீரில் தான் குளிப்பார்கள். எங்களுக்கு எல்லாம் வெந்நீர் போட்டு கொடுப்பார்கள். குளித்து, கோலம் போட்டு, காலை கோவிலுக்குப் போய் இறைவனைக் கும்பிட்டு அங்கு தரும் வெண்பொங்கல் பிரசாதம் வாங்கிச் சாப்பிட்டு அப்பாவுக்குக் கொஞ்சம் எடுத்து வருவேன்.அடியார்கள் பஜனை பாடிக்கொண்டு தெருவில் வருவார்கள். வீடுகள் தோறும் விளக்கேற்றி அவர்களை வரவேற்பார்கள். பாடத் தெரியாதவர்களையும் பாட வைக்கும் பஜனைப் பாடல்.இப்படி இளமைக் கால மார்கழி மாதம் அருமையானது. இப்போதும் காலையில் அருகில் இருக்கும் கோவிலுக்குப் போகிறேன். அம்மாவுடன் போன மாதிரி இல்லை.

மார்கழி என்றால் இசைப்பிரியர்களுக்கு நல்ல விருந்து கிடைக்கும். இசையால் பாடகர்கள் வேள்வி செய்வார்கள்.மனித வாழ்வில் இசை நிறைய அற்புதங்களை செய்கிறது.
இசை வெறும் பொழுதுபோக்காக மட்டும் இல்லாமல் மனிதனின் உடலில் காணும் வலிகளை நீக்குவதற்கும், உடலுக்கும் உள்ளத்துக்கும் உற்சாகம் அளிப்பதற்கும் உதவியாக இருக்கும்.இசை,செவிக்கு விருந்து -உடலுக்கு மருந்து. மனோவியாதிக்கும் மருந்து. மனோவியாதி உள்ளவர்களை இசையால் குணப்படுத்தலாம். இப்படி இசையின் பெருமையை சொல்லிக் கொண்டு போகலாம்.

மார்கழி மாதம் பஜனை பாடல்களை கையைத் தட்டி பாடும் போது குளிர் நம்மை விட்டு போய் விடும். இரத்த ஓட்டம் நன்கு நடை பெறும்.உடலுக்கும் மனதிற்கும் உற்சாகம் ஏற்படும். அண்மையில் காலமான சிவானந்த விஜயலட்சுமி அவர்கள் தன் சொற்பொழிவைத் தொடங்கும் முன் ஒரு பாட்டு பாடுவார்கள். ’கோவிந்த கோவிந்த ராதா முகுந்தா ’எனப் பாட்டு பாடுவார்கள் அதில் ”பாடக்கிடைத்த வாய் ஒன்று,தாளம் போடக்கிடைத்த கை ரெண்டு,”இரு கையாலே தாளங்கள் போடு;” ஐந்து புலன்கள் செய்யும் வேலைகளை சொல்லி, இந்த பிறவியில் பாட வாய் கிடைத்திருக்கும்போது, பாடாமல் இருக்கலாமா என அர்த்தம் தோன்றும் பாடலைப் பாடுவார்கள். அந்த பாட்டு முழுமையாய் தெரிந்தவர்கள் சொல்லுங்கள் நான் சிறுமியாய் இருக்கும் போது கேட்டது. அந்த பாடல் வலைத்தளத்தில் தேடியும் கிடைக்க வில்லை.

பால் தினகரன் அவர்கள் ’ காலையில் நீ எழுந்து கடவுளைத் துதி நன்று, காலதாமதம் நன்றன்று, என் மனமே!’ என்று பாடுவார்.

எல்லா மதமும் காலையில் இறைவனைத் துதிப்பது நன்று என்று சொல்கிறது. பள்ளி வாசலில் 4.30க்கு பாங்கின் ஒலி இறைவனைத் தொழ வாருங்கள் என அழைக்கிறது. ஐயப்ப பகதர்கள் காலையில் இந்த மார்கழிக் குளிரிலும் பச்சைதண்ணீரில் குளித்து ஐயப்பனை வேண்டிப் பாடுவார்கள். எல்லாக் கோவில்களிலும் காலை வழிபாடு மிகவும் சிறப்பாய் நடைபெறும்.

மார்கழியில் இசை விழா சிறப்பாய் நடைபெறும். தொலைக்காட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு மார்கழி மகா உற்சவம் நடத்துகிறார்கள். வானொலியும் இசை விருந்து அளிக்கிறது.
இசை, நிறைய நன்மைகள் செய்யும் அதில் சில : வயலின் இசை,தந்தி வாத்தியங்கள் தலை முடியை நன்கு வளர செய்யும். வயிற்று நோய் போக்கும். வயிற்று நோய் உள்ளவர்கள் அவர்களுக்கு பிடித்த ஒரு குறிப்பிட்ட இசையை மூன்று வேளை சாப்பாட்டுக்கு பின் கேட்க வேண்டும். அப்போது வயிற்று வலி போய் விடும் என்பார்கள்.

வீணை இசை கேட்டால் நல்ல தூக்கம் வரும்.வீணை இசை உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது. மென்மையான பாட்டுக்கள் மனதை மயக்கும்.

நீலாம்பரிராகம்- நல்ல தூக்கம் வரும். ஸ்ரீ ராகம், நல்ல ஜீரணசக்தி தரும். துவிஜாவந்தி-நரம்பு தளர்ச்சி குணமாகும். சாமாராகம்- மன உளைச்சல் போகும். பைரவி, காம்போதி, கல்யாணி, வாசந்தி, சிவரஞ்சினி, கோசலம், அனுமத்தோடி, புராணிசாராகம், எல்லாம் பிணிதீர்க்கும் ராகங்கள்.

மார்கழிமாதம், கோலங்களுக்குச் சிறப்பு. வீடுகள் தோறும் வண்ணக் கோலங்கள் போட்டு, பசுஞ்சாணத்தில் பிள்ளையார் பிடித்துவைத்து, ஒற்றைப் படையில் பூ வைத்து(1,3,5,7,9,11) பின் காலை 11.30க்கு அதை எடுத்துத் தட்டி வைத்து விடுவார்கள் அதில் தான் சிறுவீட்டுப் பொங்கல் வைப்பார்கள். சிறுமிகள் எல்லோரும் சேர்ந்து அம்மா கட்டிக் கொடுத்த அல்லது வரைந்து கொடுத்த சிறுவீட்டில் சிறு வெண்கலப் பானை வைத்து, அதில் பால் காய்ச்சுவார்கள் அல்லது பொங்கல் வைப்பார்கள் எங்கள் ஊர் பக்கம். ( திருநெல்வேலியில்)

மார்கழி சிறப்பைப் பற்றி போன வருடம் இரண்டு பதிவு எழுதி இருக்கிறேன். பாவை நோன்பு, மார்கழி கோலங்கள் என்று.

கோலங்களைப் பற்றிக் கூறும் இன்னும் சில பாடல்கள்:


நாலாயிரதிவ்ய பிரபந்தத்தில் ஆண்டாள், கோலத்தை அழிக்கும் கண்ணனைப் பற்றி இப்படிக் கூறுகிறார்:

//வெள்ளைநுண்மணல் கொண்டுசிற்றில்
விசித்திரப்பட, வீதிவாய்த்
தெள்ளிநாங்களி ழைத்தகோல
மழித்தியாகிலும், உன்றன்மேல்
உள்ளமோடி யுருகலல்லால்
உரோடமொன்று மிலோங்கண்டாய்,
கள்ளமாதவா. கேசவா.உன்
முகத்தனகண்க ளல்லவே.//


’குடும்ப விளக்கில்’ கோலமிடும் பெண்ணைப் பற்றி பாரதிதாசன் இப்படிக் கூறுகிறார்:

//சின்ன மூக்குத் திருகொடு தொங்கும்
பொன்னாற் செய்த பொடிமுத் தைப்போல்
துளிஒளி விளக்கின் தூண்டு கோலைச்
செங்காந் தள்நிகர் மங்கை விரலால்
பெரிது செய்து விரிமலர்க் கையில்
ஏந்தி, அன்னம் வாய்ந்த நடையடு,
முல்லை அரும்பு முத்தாய்ப் பிறக்கும்,
கொல்லை யடைந்து குளிர்புதுப் புனலை
மொண்டாள்; மொண்டு, முகத்தைத் துலக்கி
உண்டநீர் முத்தாய் உதிர்த்துப் பின்னும்
சேந்துநீர் செங்கை ஏந்தித் தெருக்கதவு
சார்ந்ததாழ் திறந்து, தகடுபோற் குறடு
கூட்டி, மெருகு தீட்டிக் கழுவி,
அரிசிமாக் கோலம் அமைத்தனள்; அவளுக்குப்
பரிசில் நீட்டினான் பகலவன் பொன்னொளி!//
அவள் கோலம் போட்டு முடித்தபின் சூரியன் தன் பொன்னொளியால்  பரிசு தந்தான் என்கிறது.

கண்ணதாசன், ‘நீ’ என்ற திரைப்படப்பாடலில்,

//வெள்ளிக்கிழமை விடியும் வேளை வாசலில் கோலமிட்டேன்
வாசலில் கோலமிட்டேன்
வள்ளி கணவன் பேரை சொல்லி கூந்தலில் பூ முடித்தேன்
ஆ.. கூந்தலில் பூ முடித்தேன்
வெள்ளிக்கிழமை விடியும் வேளை வாசலில் கோலமிட்டேன்
வாசலில் கோலமிட்டேன்
வள்ளி கணவன் பேரை சொல்லி கூந்தலில் பூ முடித்தேன்

மஞ்சள் கொஞ்சிடும் மங்கள முகத்தில்
குங்குமம் விளங்கட்டுமே -கோவில்
குங்குமம் விளங்கட்டுமே
கைவளையாடலும் காலடி ஓசையும்
வருகையை முழங்கட்டுமே -பாவை
வருகையை முழங்கட்டுமே
வெள்ளிக்கிழமை விடியும் வேளை வாசலில் கோலமிட்டேன்
வாசலில் கோலமிட்டேன்

வள்ளி கணவன் பேரை சொல்லி கூந்தலில் பூ முடித்தேன்

மார்கழி திங்களை மூடிய பனித்திரை
காற்றினில் விலகட்டுமே -காலை
காற்றினில் விலகட்டுமே
வாடையில் வாடிய மேனியை மூடிய
மன்னவன் விழிக்கட்டுமே – காதல்
மன்னவன் விழிக்கட்டுமே

வெள்ளிக்கிழமை விடியும் வேளை வாசலில் கோலமிட்டேன்
வாசலில் கோலமிட்டேன்//

என்று கோலமிடும் பெண்ணின் உணர்வுகளை அழகாக வெளிப்படுத்துகிறார்.


ஆனால் இப்போது பாதிவீட்டில் காலை குளிருக்கு பயந்து இரவு போட்டு விடுகிறார்கள். தெருபக்கம்  வாசல் இருப்பவர்கள் திருடனுக்கு பயந்து சூரியன் வந்தபின் கோலம் போடுகிறார்கள்.

இந்த மார்கழி மாதத்தில், பக்தியோடு இறைவனை வணங்கியும்,இசையைக் கேட்டு மகிழ்ந்தும்,கோலங்கள் இட்டுக் கொண்டாடியும் மகிழ்வோம்.

புதன், 7 டிசம்பர், 2011

ஜோதி வழிபாடு


நன்றி: படம் - கூகுள்.

அண்ணாமலை உறை அண்ணா போற்றி!
கண்ணார் அமுதக் கடலே போற்றி!

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி


அக்னிஜுவாலை சொரூபமாகிய இறைவனை வழிபடும் நாள் கார்த்திகைத் தீபத்திருநாள்.  ஐசுவரியம், வீரம், தேஜஸ், செல்வம், ஞானம், வைராக்கியம் எனும்    ஆறுகுணங்களும்   ஆறுமுகங்களாய்  கார்த்திகைப்  பெண்களால்  வளர்க்கப்பட்ட முருகப் பெருமானை வணங்கும் நாளும் இந் நாளே.  கார்த்திகை நட்சத்திரத்தில் சரவணனை விரதமிருந்து  வணங்குவோர் நலம் பல பெற்று நற்கதி அடைவார்கள் என்று கந்த புராணம் சொல்கிறது.

அறிவை ஒளிக்கு உதாரணமாய் சொல்கிறார்கள். ‘சித்தமிசை குடி கொண்ட அறிவான தெய்வமே, தேஜோமய ஆனந்தமே!’ என்று தாயுமானவர் குறிப்பிடுகிறார்.

’அருளானோர்க்கு அகம்புறம் என்று உன்னாத
பூரண ஆனந்தமாகி இருள் தீர விலங்கு பொருள் யாது? அந்தப்
பொருளினை யாம் இறைஞ்சி நிற்பாம்.’

‘தூய அறிவான சுகரூப சோதிதன்பால்
தீயில் இரும்பென்னத் திகழுநாள்எந்நாளோ?’

என்றெல்லாம் தாயுமானவர் ஜோதிமயமான இறைவனைப் பாடுகிறார்.


காயத்ரீ மந்திரம் ,’ நம்முடைய உயிராற்றலாகவும் துக்கத்தை அழிப்பதாகவும்  இன்பமே வடிவமாகவும் உள்ள சூரியனைப் போன்ற ஒளிமயமானதும், தன்னை விட மேலாக ஒன்றும் இல்லாததும். நம் பாபங்களை அழிக்கக் கூடியதுமான தெய்வீகப் பரம் பொருள் நமது அறிவை நல்வழியில் ஈடுபடுத்தட்டும்.’என்று இறைவனை ஒளிக்கடவுளாய் உணர்த்துகிறது.

’எவர் நம் அறிவைத் தூண்டி பிரகாசிக்கச் செய்கின்றாரோ அந்த ஜோதிமயமான இறைவனைத் தியானிப்போமாக’ என்று அந்த மந்திரம் கூறுகிறது.

அருணகிரிநாதர் திருப்புகழில் ’தீபமங்கள ஜோதி நமோ நம’ முருகனைப் பாடுகிறார்.


வள்ளலார் தீப வழிபாடு செய்தார்.

’ஏகாந்த மாகிய ஜோதி--என்னுள்
என்றும் பிரியா திருக்கின்ற ஜோதி
சாகாத வரந்தந்த ஜோதி--என்னைத்
தானாக்கிக் கொண்டதோர் சத்திய ஜோதி!

அருட்பெருஞ் ஜோதி! அருட்பெருஞ் ஜோதி!
அருட்பெருஞ் ஜோதி! அருட்பெருஞ் ஜோதி!

அருள் ஒளி என் தனி அறிவினில் விரிந்தே
அருள் நெறி விளக்கெனும் அருட் பெருஞ் ஜோதி ’


’அருள் விளக்கே அருட்சுடரே அருட்சோதிச் சிவமே
அருள் அமுதே அருள் நிறைவே அருள் வடிவப் பொருளே
இருள்கடிந்தென் உளமுழுதும் இடங்கொண்ட பதியே
என் அறிவே என் உயிரே எனக்கினிய உறவே
மருள் கடிந்த மாமணியே மாற்றறியாப் பொன்னே
மன்றில் நடம் புரிகின்ற மணவாளா எனக்கே
தெருள் அளித்த திருவாளா ஞான உருவாளா
தெய்வநடத் தரசே நான் செய்மொழி ஏற்றருளே.’

என்று கூறி வள்ளலார் இறைவனை வழிபட்டார்

அறியாமை இருளைப் போக்கி அறிவு ஒளியை தந்த இறைவா எனப் பாடுகிறார்.

கருங்குழியில் வீட்டில் ஒருநாள் இராமலிங்க அடிகள் எழுதிக் கொண்டு இருக்கும் போது விளக்கு மங்கவே, எண்ணெய்ச் செம்பன நினைத்து தண்ணீர்ச் செம்பை எடுத்து விளக்கில்  ஊற்றினார். விளக்கு இரவு முழுவதும் நன்கு எரிந்தது. தண்ணீரில் விளக்கெரிந்த இந்த  அற்புதத்தை ஒரு பாடலில் குறிப்பிடுகிறார் வள்ளலார்.

அப்பாடல்:

’மெய் விளக்கே விளக்கல்லால் வேறுவிளக்கில்லை என்றார் மேலோர் நானும்
பொய்விளக்கே விளக்கென உட் பொங்கிவழி கின்றேன் ஓர் புதுமை அன்றே
செய்விளக்கும், புகழுடைய சென்னநகர் நண்பர்களே செப்பக் கேளீர்!
நெய்விளக்கே போன்றொருதண்ணீர் விளக்கும் எரிந்தது சந்நிதியின் முன்னே.’

அறுபத்து மூன்று நாயன்மர்களில் ஒருவரான கணம்புல்லர் கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்த்தால் தான் என்னமோ அவர் தான் பிறந்த இருக்குவேளூர் இறைவனுக்கு விளக்கெரித்துத் தொண்டு செய்தார்.வறுமை வந்த போதும் கணம்புல் என்னும் ஒருவகை புல்லை அறுத்து விலைக்கு விற்றுத் திருவிளக்கு ஏற்றி வந்தார்.ஒரு நாள் புல் விற்கவில்லை அதையே திருவிளக்குக்கு இட்டு எரிக்கமுற்பட,அதுவும் போதாமையால் தம் திருமுடியை விளக்கில் மடுத்து எரித்து மகிழ்ந்து இறைவனின் அருள் பெற்றார்.

நமி நந்தி அடிகள் என்னும் நாயனார் தண்ணீரில் விளக்கு எரித்து இருக்கிறார்.

மசூதியில் விளக்கேற்றி அது விடிய விடிய எரிவதை பார்ப்பதில் ஷீரடி சாய்பாபாவிற்கு மகிழ்ச்சி. அதற்காக பக்கத்தில் உள்ள இரண்டு கடைகளில் இலவசமாக எண்ணெய் பெற்று வந்தார். ஒருநாள் அந்த வியாபாரிகளின் எண்ணம் மாறியது. ‘நாம் இலவசமாக எண்ணெயைக் கொடுத்து பக்கிரி என்ன விள்க்கேற்றுவது? இனி நாம் எண்ணெய் கொடுக்கக் கூடாது. எண்ணெய் இல்லை என்று சொல்லிவிடவேண்டும்’என்று அவர்கள் பேசி வைத்துக் கொண்டார்கள். வழக்கம் போல் எண்ணெய் வாங்கும் தகரக் குவளையை எடுத்துக் கொண்டு
பாபா அக் கடைகளுக்குப் போனார்.’ஒரு துளி எண்ணெய் கூட இல்லை. இனி மேல்தான் வர வேண்டும்’ என்று அந்த வியாபாரிகள் கூறினார்கள்.

பாபா கிணற்றடிக்குச் சென்று நீர் இறைத்து அந்த குவளையில் ஊற்றி நன்றாகக் கழுவினார். பின்,அதில் தண்ணீரை எடுத்துக் கொண்டு மசூதிக்குச் சென்றார். அந்த த்ண்ணீரை விளக்கில் ஊற்றி ஏற்றினார்.

முன்னிலும் பிரகாசமாய் விளக்கு எரிந்ததாய் சாயி சரிதம் கூறுகிறது.

இசை மேதை தான் சேன் தன் இசையால் விளக்குகளை ஏற்றியதாக வரலாறு உள்ளது.


தீபத்திருநாள், தீபங்கள் ஒளி வீசும் நாள். கார்த்திகை மாதத்தில் மாலையில் சீக்கீரம் இருட்டி விடும். நம் தமிழ்நாட்டில்மாலை நேரத்தில் வீட்டு வாசலில் இரண்டு விளக்கு வைத்து இருளை நீக்கினார்கள். மார்கழி மாதத்தில் அதிகாலை நேரத்தில் வாசலில் இரண்டு விளக்கு வைப்பார்கள். தை மாதம் பொங்கல் வரை விளக்கு வைப்பது தொடரும். தீப வழிபாடு இங்கு மிகவும் போற்றப் படுகிறது.

அக இருளை விலக்கி அங்கு ஒளி பொருந்திய இறைவனைக் குடியேற்றினால் வாழ்வில் வளம் பெருகும்.

வலை அன்பர்கள் எல்லோருக்கும் தீபத்திருநாள் வாழ்த்துக்கள்.

சனி, 19 நவம்பர், 2011

என் முதல் கவிதை

கண்ணே கண் உறங்கு
செல்ல பெண்ணே நீ கண் உறங்கு

பூவே கண் உறங்கு
பூவின் தேனே நீ கண் உறங்கு

பொண்ணே கண் உறங்கு
தங்க பொண்ணே நீ கண் உறங்கு

மானே கண் உறங்கு
மானின் விழியே நீ கண் உறங்கு

விழியே கண் உறங்கு
கயல்விழியே நீ கண் உறங்கு


ஆரி ஆரிரரோ ஆரி ஆரிரரோ ஆரி ஆரோ

இந்த ஆரி ஆரிரரோவை அவள் தூங்கும் வரை பாடுவேன்.

முதலில் சின்ன சிறு கிளியே கண்ணம்மா செல்வ களஞ்சியமே தான் பாடுவேன்


வாராயோ வாராயோ தென்றல் காற்றே
வந்து எந்தன் சேயை கண்ணுறங்க வீசாயோ
வானகம் என்னும் சோலை தனிலே
வளரும் தாராகை நீயே!
இந்த நாலுவரியை திரும்ப திரும்ப பாடுவேன் .
அப்போது சிலோன் ரேடியோவில் பழைய பாடல் (எனக்கே இது பழைய பாடல் தான்)


தர்மபுர சுவாமி நாதன் பாடல் : வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை
என்ற பாடலை பாடுவேன்.

அப்புறம் நாமே தயார் செய்து பாடினால் என்ன தாலாட்டு பாடல் என்று பாடியது தான்.எழுதி எல்லாம் பார்க்க வில்லை கவிதைக்கு எப்படி எழுத வேண்டும் என்று தெரியாது மனதில் வந்ததை பாடினேன். இன்று தான் இதை எழுதி இருக்கிறேன். மனதில் தான் இருந்தது.
இப்போது என் பேரக் குழந்தைகளுக்கும் இதை பாடுகிறேன். சொற் குற்றம் பொருள் குற்றம் பார்க்காமல் சும்மா படித்துப் பாருங்கள். என் குடும்பத்தார் இவள் பாடும் பாட்டு எல்லோரையும் தூங்க வைத்து விடும் போலவே என்று கேலி செய்வார்கள்.

பேரனுக்கு ஒரு பாட்டு பாடினேன் அதையும் இப்போது குறிப்பிட்டு விடுகிறேன்

செல்ல தங்கமே செல்ல குட்டியே
செல்ல தங்கமே செல்லம் செல்லம்
வைர தங்கமே வைர குட்டியே
வைர தங்கமே வைரம் வைரம்
பொண்ணு குட்டியே பொண்ணு தங்கமே
பொண்ணு தங்கமே தங்கம் தங்கம்

செல்லம் செல்லம். வைரம், வைரம், தங்கம், தங்கம், தொடர்ந்து சொல்லும் போது அவன்
விழுந்து விழுந்து சிரிப்பான்.


என் முதல் கவிதை என்று தலைப்பை பார்த்தவுடன் அட! கவிதைகூட எழுதுவார்களா இவர்கள் என நினைப்பீர்கள். என் முதல் கவிதையே என் பெண்தான்.அவளுக்கு பாடிய தாலாட்டுப் பாட்டுதான் அது.


மருத்துவமனையில் அவள் பிறந்தவுடன் நர்ஸ் சொன்னது கோமதி உனக்கு மூக்கை எடுத்து விட வேண்டிய வேலையே இல்லை. நல்ல அழகான தீர்க்கமான மூக்குடன் பிறந்து இருக்கிறாள். இந்திரா காந்தி பிறந்த அன்று பிறந்து இருக்கிறாள் என்று பாராட்டினார்கள்.

என்ன பெயர் வைக்கலாம் என நினைத்த போது மதுரையில் பிறந்ததால் மதுரை மீனாட்சியின் பெயர் வைக்க வேண்டும் என்று நினைத்து நானும் என் கணவரும் கயல்விழி என்று தேர்வு செய்தோம். பின் மாமியார் பெயரையும் அம்மா பெயரையும் சேர்த்து கயல்விழி முத்துலெட்சுமி என்று வைத்தோம்.

இப்போது தெரிந்து இருக்குமே என் மகள் யார் என்று பதிவுலக நண்பர்களுக்கு.

இன்று அவள் நிறைய கவிதைகள் எழுதுகிறாள். அவள் மகள் கவிதை எழுதுகிறாள்.

என் மகள் பிரசவத்திற்கு நான் அம்மா வீட்டுக்கு போய் இருந்த போது அவள் அப்பா கடிதம் நாலுவரி நாலுவரிதான் எழுதுவார்கள் அப்போது நான் ’விரிவுரையாளரே விரிவாய் கடிதம் எழுத கூடாதா’ என்று கேட்டு கடிதம் எழுதினேன் அதற்கு என்னை மகிழ்ச்சிப் படுத்த இரண்டு கவிதை எழுதி அனுப்பினார்கள். அதைத் திரும்ப திரும்ப படித்த காரணத்தால் என் மகளுக்கு கவிதை மேல் ஆர்வம் வந்தது போல.

என் மகளுக்கு இன்று பிறந்த நாள். அவள் இறைவன் அருளால் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.

வாழ்க வளமுடன்.

சனி, 5 நவம்பர், 2011

சதயத் திருநாள்


ஐப்பசி சதய நட்சத்திரத்தில் சோழச்சக்கரவர்த்தி ராஜராஜ சோழன் பிறந்தது எல்லோருக்கும் தெரியும். ஆனால் என் மகன் அதே நட்சத்திரத்தில் பிறந்தான். அது தெரியாது அல்லவா உங்களுக்கு?

 
ராஜராஜ சோழன் சிவனுக்கு பெரிய கோவில் கட்டினார். அது போல் என் மகனும் சிவனுக்கு ஆலயம் கட்டினான். எப்படி என்று கேட்கிறீர்களா சாக்பீஸில் மெஷின் ஊசி என்னும் உளியால் செதுக்கி செதுக்கி கட்டினான். அவன் பாடம் படிக்கும் சோபா சேரில் உட்கார்ந்து எழுதும் அட்டையில் சாக்பீஸை வைத்துக் கொண்டும் பிளைடாலும் ஊசியாலும் செதுக்கி செதுக்கி செய்தான்.

ஒரு மாதகாலத்திற்கும் மேலாக அதைச் செய்தான். அப்போது பள்ளியில் அவன் பத்தாவது படித்துக் கொண்டிருந்தான். அவன் கட்டிய கோவிலில் தேவாரக் கல் வெட்டு இருக்கிறது. துவாரபாலகர் , லிங்கோத்பவர் இருக்கிறார்கள். கோவிலுக்கு முன்பு சுவாமி எழுந்தருளும் மண்டபம் கட்டி உள்ளான். ராஜ கோபுரம் கட்ட ஆரம்பித்து, படிக்க வேண்டியது நிறைய இருந்ததால் பாதியில் விட்டு விட்டான். பின் நேரம் இல்லை.

 புடவைகட்டி, கோட்டுப் போட்ட முதல்வர் ஜெயலலிதா, தபால் பெட்டி, கீரைக்காரம்மா, பலிபீடம், டிராபிக் போலீஸ், பள்ளி செல்லும் சிறுமி, சிறுவன் ஆண், பெண் என்று நிறைய கொலுவில் ஆங்காங்கு வைக்க செய்து தந்தான். இவை எல்லாம் கொலு பெட்டியில் இருக்கிறது.

 உங்களுடன் இன்னொரு முறை பகிர்ந்து கொள்ள்கிறேன். இந்த கோவிலை தூசுதட்டக் கூட பயம் எனக்கு. மிக கவனமாய் மெதுவாய் துடைப்பேன் எங்கு உடைந்து விடுமோ என்று.இப்போது இரண்டு வயதாகும் அவனுடைய மகனிடம் நாளை வளர்ந்தபின் காட்ட பத்திரப்படுத்தி வருகிறேன்.

நாளைதான் சதயத்திருநாள். தஞ்சையில் கோலாகலமாகக் கொண்டாடுகிறார்கள்.என் மகனும் தன் பிறந்த நாளைக் கொண்டாடுகிறான்.அவனுக்கு எங்களது வாழ்த்துக்கள்.நீங்கள் எல்லோரும் வாழ்த்துக்கள்.

                                         வாழ்க வளமுடன்.