அத்தையும், மாமாவும் சிறுவயதில்
வெகு நாட்களாய் வலைப் பக்கம் வரவில்லை. மகனது ஊருக்குப் போய் இருந்தேன். டிசம்பர் 6ம் தேதி அத்தை அவர்களை (மாமியார்) உடல்நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் சேர்த்து இருப்பதாய் நாங்கள் அமெரிக்காவில் இருக்கும்போது தகவல் வந்தது . மருத்துவர்கள் காலக்கெடு கொடுத்து விட்டார்கள். அவர்களைப் பார்த்து விட வேண்டும் என்று தெய்வங்களை வேண்டி வந்தோம்.
டிக்கட்டை மாற்றி உடனடியாக மகன் ஏற்பாடு செய்து கொடுத்தான் .8ம் தேதி புறப்பட்டு டிசம்பர் 10 தேதி கோவை வந்து விட்டோம்.
ஸ்பெஷல் வார்டுக்கு அழைத்து வந்து விட்டார்கள் , ICU விலிருந்து சொந்த பொறுப்பில் . அப்போதான் பேரன் , பேத்திகள், மற்றும் உறவினர்கள் எல்லோரும் பார்க்க முடியும் என்று.
நாங்கள் வந்தவுடன் அத்தை அவர்கள் உங்களைப் பார்க்காமலே போய் விடுவேனோ! என்று எங்களை மகிழ்ச்சியாக வரவேற்றார்கள். ஆக்ஸிசன் மாஸ்க், உணவுக்கு மூக்கில் டியூப் இத்தனை வேதனையிலும் எங்களைப் பார்த்து நலம் விசாரித்தார்கள். இன்று ஞாயிறே ! நீங்கள் உணவு மதியம் தானே சாப்பிடுவீர்கள் குளித்து சாப்பிட்டு வாருங்கள் என்று சொன்னார்கள்.
சகோதரர் திரு. துரைசெல்வராஜூ அவர்கள் எங்கள் ப்ளாக்கிற்கு கேட்டு வாங்கி போடும் கதை பகுதியில் எழுதிய கதை பாக்கியம் அந்த கதையில் வரும் ஆச்சி போல் பேத்தியின் அன்பான தொடுதல், அன்பான பேச்சால் பிழைத்து கொண்டது போல் என் அத்தையும் பேத்திகள், பேரன்கள். பேரன் மனைவியின் அன்புக் கவனிப்பில் சிறிது காலம் மகிழ்ச்சியாக இருந்தார்கள்..
ஆச்சி ஆச்சி என்று பேரக் குழந்தைகளும், பூட்டி ஆச்சி என்று அழைத்துப் பேத்தி பேரன்களின் குழந்தைகளும் ஆஸ்பத்திரியில் ஆச்சியை நோயின் துன்பம் தெரியாமல் மகிழ்ச்சியாகப் பார்த்துக் கொண்டார்கள். பேரன் பழங்கதைகளைப் பேசச் சொல்லி வீடியோ எடுத்தான்.
சகோதரர் திரு. துரைசெல்வராஜூ அவர்கள் கதைக்கு என் பின்னூட்டமும், அவர்களிம் மறுமொழியும் கீழே:-
கோமதி அரசு said..
//அதான் ஆச்சி மறு ஜென்மம் எடுத்துட்டாள்...ல!.. அழுவாதே!..
வாஞ்சையுடன் சுகந்தியின் கண்ணீரைத் துடைத்து விட்டார்கள்...//
என்ன ஒரு பாசமும் நேசமும்!
பேத்தியின் அணைப்பில், வருடலில் அன்பின் உயிர்நிலை திரும்பி வந்து விட்டது.
ஆரம்பித்திலிருந்து படிக்க விறு விறுப்பு.
முடிந்தவுடன் கண்ணில் கண்ணீர் துளி.
வாழ்த்துக்கள்.
எங்கள் ப்ளாகிற்கும் வாழ்த்துக்கள்.//
அவர்களுடன் நாம் மனம் திறந்து பேசுதலே -
அவர்களுக்கு நாம் செய்யும் நன்றிக் கடன்...
அதனால் விளையும் மகிழ்ச்சியே அனைவரையும் வாழ்விக்கும்..//
முதலில் வந்த வரிகளின் பலத்தை நிறைவில் பார்த்து விட்டேன்.
அருமை.//
>>> அவர்களுடன் நாம் மனம் திறந்து பேசுதலே -
அவர்களுக்கு நாம் செய்யும் நன்றிக் கடன்... <<<
எத்தனை பேருக்கு இப்படியான பேறு கிடைக்கின்றது?..
எல்லாருக்கும் இப்படியான பேத்திகள் கிடைக்க பிரார்த்திப்போம்..
தங்களது வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..//
சகோதரர் சொன்னது போல் என் அத்தை அவர்களுக்கு இந்த பேறு கிடைத்தது பேரனின் மனைவிவரை நன்கு கவனித்துக் கொண்டார்கள். எல்லோரும் அன்பாய்ப் பேசினார்கள்.
அத்தையின் தங்கை, தம்பி, அண்ணன் என்று அவர்களின் மகன் , மகள், அவர்களின், பேத்தி, பேரன்கள் என்று வெளியூர்களிலிருந்து வந்து ஆச்சியிடம் அன்பாய் பேசி மகிழ்வித்தனர்.
அருமை தங்க்கையுடன்.
இவர்களும் தன் தள்ளாத வயதில் மகள் , மகளின் பேத்தியுடன் வந்து போனார்கள்பார்க்க திருநெல்வேலியிலிருந்து.
அவர்கள் எட்டாவது படித்த சர்டிபிகட் இன்னும் பத்திரமாய் இருக்கிறது. அவர்கள் படித்த பள்ளியில் ஆசிரியர் வேலைக்கு அழைத்த அழைப்பும் இருக்கிறது இன்னும்.
அத்தையின் சான்றிதழ்.
ஆஸ்பத்திரி மருத்துவர்களும் அன்பாய் அழைத்துக் கொண்டே வந்து கவனித்துச் செல்வார்கள்.
நர்ஸ்கள் எல்லாம் சின்னம் சிறிய பெண்கள். அவர்கள் எல்லோரும் ஆச்சி ஆச்சி என்று அழைத்துக்கொண்டு மகிழ்ச்சியுடன் அத்தையோடு உரையாடுவார்கள், கேலி கிண்டல் தான். மாலை வசந்த் தொலைக்காட்சியில் 'சஷ்டிகவசம்' ஆலய தரிசனம் எல்லாம் பார்ப்பார்கள்.
அடுத்து என்ன பார்ப்பீர்கள் என்று நர்ஸ் பெண்கள் கேட்பார்கள்.
ஆஸீர்வாதம் செய்யுங்கள் பாட்டி என்று ஆசீர்வாதம் வாங்கிச் செல்வார்கள்.
ஆஸ்பத்திரியில் வெளியிலிருந்து சாப்பாடு கொண்டு போகக் கூடாது அதனால் அங்குள்ள காண்டீனில் எல்லோரும் உணவு சாப்பிடுவோம். சுவையாகப் பலவித உணவுகள் உண்டு. உடம்புக்குக் கெடுதல் செய்யாத உணவுகள்.
இன்று என்ன சாப்பிட்டீர்கள் என்று வந்தவுடன் கேட்டு இப்போது எவ்வளவு வசதி வந்து விட்டது? அந்தக் காலத்தில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டு இருப்பவருக்கு ஏற்ற உணவு அவரைப் பார்த்துக் கொள்பவர்களுக்கு உணவு என்று கஷ்டப்பட்டு சுமந்துவர வேண்டும் , காப்பி, வெந்நீர், பாலுக்கு ப்ளாஸ்க் எல்லாம் அடங்கிய கூடையைத் தூக்கி வர வேண்டும். காலம் மாறி விட்டது என்றும், தொலைக்காட்சியை பார்த்து அரசியல் நிலவரம் எல்லாம் பார்க்க வந்த உறவினர்களிடமும், நண்பர்களிடமும் பேசி வியந்து போனார்கள்.
மிக நெருங்கிய உறவினர்களிடம் கடைசி வரை என் வேலைகளை நானே பார்த்துக் கொண்டு இறந்து போவேன் என்று நினைத்தேன் , இப்படி வந்து படுப்பேன் எல்லோரையும் தொந்தரவு செய்வேன் என்று நினைக்கவில்லையே என்று வருத்தப்படுவார்கள்.
95 வயதிலும் தன்னம்பிக்கை அதிகம் . நவம்பர் 14 தேதி பிறந்தவர். மகன் வீட்டிலிருந்து பிறந்த நாள் வாழ்த்து சொன்ன போது நீ வந்த பின் உன் வீட்டுக்கு வருகிறேன் பேரன் வீட்டைப் பார்க்க வேண்டும் என்று சொன்னார்கள்.
இறைவன் அதற்குச் சந்தர்ப்பம் கொடுக்காமல் அழைத்துச் சென்று விட்டான் ஜனவரி 9ம் தேதி.
இறக்கும் வரை தன் குடும்பத்தார் மற்றும் உறவுகள், நட்புகள் நலமாய் இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்தார்கள்.
நாடு ஏன் இப்படி ஆகி விட்டது? எப்போது சரி ஆகும் என்பதும் கவலை , சரியாக வேண்டும் என்ற பிரார்த்தனையும் தான்.
வீட்டுக்கு வந்த திருமுருக கிருபானந்தவாரியார் அவர்களுக்குத் தன் கணவர் மாலை போடுவதை மகிழ்ந்து பார்க்கும் அத்தை அவர்கள்.
அத்தை அவர்களின் கோலங்கள்
எங்கள் குடும்பம்
மணி விழாவின் போது எடுத்த படம்
நூற்றாண்டின் போது எடுத்த படம்.
இறைவனிடம் போன பின்
அவர்களின் அன்பான ஆசிகள் குடும்பத்தினரை வாழ வைக்கும்.
வாழ்க வளமுடன்.