சனி, 18 ஜூன், 2016

தியாகச் செம்மல் கக்கன்

பூக்கடை ஒன்றும் பக்கத்தில் இல்லை அதனால் மண்டபத்தில் உள்ள கோழிக் கொண்டைப் பூவை எடுத்து  அவர் உருவச்சிலைக்கு போட்டு வணங்குகிறார் என் கணவர்


வாழ்க்கை வரலாறு

நேரில் பார்ப்பது போல் ஓவியம்
ஹாலில் கடைசியில் நிற்பது போல் தோற்றம்
கக்கன் அவர்கள் உறவினர் (தம்பி மருமகள்)   மணிமண்டபத்தை சுத்தமாய் பராமரிக்கிறார்

மணிமண்டபத்திற்கு எதிரில் இருக்கும் நூலகத்தைப் பராமரித்து வருபவர்நூலகர் மணிமண்டபத்தின் சாவி வாங்கி வரும் வரை நூலகத்தில் நான் படித்த புத்தகம்
கைவிரல்களில் கலைமானின் வடிவம்  கொண்டு வந்து, இது என்ன என்று கேட்கும் விளையாட்டு
நூலகத்தில்   செய்தித்தாள் படித்துக் கொண்டு இருக்கும் அனபர்கள்

நாங்கள் மேலூர் வட்டம் தும்பைப் பட்டியில் உள்ள  திரு .கக்கன்ஜி அவர்களின் மணி மண்டபத்திற்கு டிசம்பர் மாதம் கடைசியில் போய் இருந்தோம்.

நாங்கள் போன போது மண்டபம் பூட்டி இருந்தது . காலை 9 மணி இருக்கும் . யாரைக் கேட்கலாம் என்று நினைத்துக் கொண்டு இருந்த போது ஒருவர் வந்தார், மணி மண்டபத்தை பார்க்க வந்தீர்களா ?என்று கேட்டார் ஆமாம் என்றோம் . அவர்,” எதிரில் இருக்கும் நூலகத்தில் அமர்ந்து இருங்கள். மண்டபத்தை பார்த்து கொள்பவர் வீடு அருகில் தான் இருக்கிறது” என்று கூறி, சாவி வாங்கி வருவதாக சொல்லி சென்றார்.

சாவியுடன் ஒரு அம்மாவும் வந்தார்கள், அவர்கள் கக்கன்ஜி அவர்களின் தம்பி மருமகள் என்று சொன்னார்கள். நூலகரும்,  மருமகள் அவர்களும்   உடன் வந்து திறந்து காட்டினார்கள். எல்லா தலைவர்களுடன் இருக்கும் படங்கள் உள்ளன .  பதவியை தன் குடும்ப மக்களுக்கு பயன்படுத்திக் கொள்ளாத நேர்மையானவர் என்று  தன் மாமாவின் பெருமைகளைச் சொன்னார் மருமகள். 

இருவருக்கும் நன்றி சொல்லி வந்தோம். 

இன்று அவர் பிறந்த நாள் இந்தச் சமயத்தில் தியாகச் செம்மலை ச்சென்று வணங்கி வந்ததைப் பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
தன்னலம் கருதாமல் நாட்டுக்கு உழைத்த தலைவரை வணங்குவோம்.
------------------------------
வாழக வளமுடன்.

வியாழன், 16 ஜூன், 2016

அன்பருடன் ராமர் வந்தார்

இன்று எங்கள் வீட்டுக்கு   எண்ணங்கள்  வலைத்தளம் வைத்து இருக்கும் திருமதி . கீதா சாம்பசிவம் அவர்கள்  துணைவருடன் வந்து இருந்தார்கள்.

கண்ணனுக்காக
சாப்பிடலாம் வாங்க
பேசும் பொற்சித்திரமே
என் பயணங்களில்
ஆன்மீக பயணம்
எண்ணங்கள்

என்று ஆறு வலைதளங்களில்  சளைக்காமல் எழுதி அசத்துபவர்.
எல்லோரிடமும்  அன்புடன் உரிமையுடன் பேசும் நேசமானவர்.

முகநூலிலும் அசத்தி வருகிறார்.

இன்று அவர்கள் எங்கள் இல்லத்திற்கு வருவதாய் நேற்று சொன்னார்கள்.  நண்பர் ஸ்ரீராமிடம்   போன் நம்பர் வீட்டு முகவரி  வாங்கி வீட்டுக்கு வந்து விட்டார்கள்.  ஸ்ரீராமுக்குநன்றி.

இன்று காலை மீனாட்சி தரிசனம் முடித்து  எங்கள் இல்லத்திற்கு வந்தார்கள்.  அவர்களை முதன் முதலில் பார்த்தாலும் வலைத்தளம் மூலம் பல ஆண்டுகள் பழகியதால்  சந்திப்பு  சரளமாய்  இருந்தது.
அவர்கள் நிறைய இடங்களுக்கு செல்ல வேண்டிய நிலையிலும் எங்கள் வீட்டுக்கு வந்து சென்றது மகிழ்ச்சியாக இருந்தது.  திரு, சாம்பசிவம் சாரும்   எங்கள் சாரிடம் கல கல என்று நன்கு பேசினார்கள். எங்களை அவர்கள் வீட்டுக்கு வரும் படி அழைத்து சென்றார்கள்.

பதிவர்கள் சந்திப்பு அடிக்கடி நடந்து இருக்கிறது கீதா அவர்கள் வீட்டில்.   அவர்கள் வீட்டில்  சந்திப்பு நடந்த   நிகழ்வுகளை நணபர்கள் அவர் அவர் வலைத்தளத்தில் பகிர்ந்து கொண்டதை   எல்லோரும் படித்து இருப்பீர்கள்.இன்று ஸர்வ  ஏகாதசி. ராமநாமம் சொன்னால் நல்லது என்பார்கள்.  கீதா வீட்டுக்குள் வந்தவுடன் என்னிடம் ராமர் பட்டாபிஷேக  படம் என்று சொல்லி  கொடுத்தார்கள் , மிகவும் மகிழ்ச்சி  அடைந்தேன். என்னிடம் அந்த படம் இல்லை.  அவர்கள் வீட்டு பூஜை அறையில் ராமர் பட்டாபிஷேக படம் வைத்து இருப்பார்கள்,  ராமநவமி பதிவுகளில் பார்த்து இருக்கிறேன் பழமையான படம் மிக அழகாய் இருக்கும்.   நிறைய படங்களை  மாட்ட இடம் இல்லை இந்த வீட்டில்  சாமி  படங்கள் எல்லாம் பெட்டியில்  அடைத்து வைக்கப்பட்டு உள்ளது. பூஜை செய்யும் போது மானசீகமாய் அவற்றிற்கு பூஜை செய்து கொள்வேன்.  அப்படியும் ராமர் வந்து விட்டார் வீட்டுக்கு என்றால் நல்லது தானே!

//நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
திண்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே இராம என்று  இரண்டு எழுத்தினால்.//
- கம்பராமாயணம்..

இனி நடப்பது எல்லாம் நன்மைதான் என்று  மனம் சொல்கிறது.

அவர்களின் பயணம் இனிதாக வேண்டும். 

                                                           வாழ்க வளமுடன்.

----------------------------------------------------------------------------------------------------------------------

சனி, 11 ஜூன், 2016

கர்னூல் கொண்டாரெட்டி கோட்டை

ஸ்ரீசைலம் கோவில், ஆலம்பூரில் உள்ள நவப்பிரம்மா கோவில் பார்த்தபின்  கர்னூலில் உள்ள கொண்டாரெட்டி கோட்டை பார்த்ததை இந்த பதிவில் பகிர்ந்து இருக்கிறேன்.  அந்தக்கால கட்டடக் கலைக்குச் சான்றாகக் காலங்கள் கடந்தும் உயர்ந்து நிற்கிறது, தன்னுள் நிறைய கதைகளைப் பொதிந்து வைத்துக் கொண்டு.

இந்தக் கோட்டை, கர்னூல்  நகரத்தின் நடுவில்  உள்ளது. விஜய நகரப் பேரராசு வம்சத்தை  சேர்ந்த அச்சுததேவராயுலு என்ற மன்னர் காலத்தில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. இங்கிருந்து கிருஷ்ணாநதியை தாண்டிஉள்ள ஆலம்பூர் வரை சுரங்கப் பாதை உள்ளதாகக்  கூறுகிறார்கள்.  சுரங்கபாதையைப் பூட்டி வைத்து இருக்கிறார்கள்.


ஆலம்பூர் அரசராக  இருந்தவர்  கொண்டா ரெட்டி  (1597 - 1643 ) , இவர் கோல்கொண்டா அரசர்களின் கீழ் ஆண்ட கர்நூல் நவாபினால் சிறைபிடிக்கப்பட்டார்.இவரைக்  கர்னூல் கோட்டையில் வைத்து இருந்தார்கள்.

கொண்டா ரெட்டி,  சிறைச்சாலையிலிருந்து  இங்குள்ள சுரங்கப்பாதை வழியாகத் தப்பித்து ஆலம்பூர் அரண்மனை சென்றார் என்றும் , அவர் ஆட்சி செய்த பகுதிகள் கோல்கொண்டா அரசர்களின் கீழ் வந்ததும்  என்றும் சொல்கிறார்கள். கொண்டாரெட்டி  இந்த   கோட்டையில்  சிறைவைக்கப் பட்டதால் அவர் நினைவாகக்  கோட்டைக்கு  அவரது பெயரை வைத்து,      நினைவுக்கோபுரமும் அமைக்கப்பட்ட தாகச்  சொல்லப்படுகிறது.

இந்தக் கோட்டை ’எர்ரா புருஜூ’ என்று அழைக்கப்படுகிறது.
’எர்ரா புருஜு’ என்பதற்கு ,’ சிவப்புத்  தண்ணீர்த் தொட்டி’ என்று அர்த்தமாம்.

நகரின் மையப் பகுதியில் இருப்பதால்  மக்களுக்கு மாலை நேரக் காற்று வாங்க நல்ல பொழுது போக்கும் இடமாய் இருக்கிறது.
கோட்டை மேல் இருந்து பார்த்தால் ஆட்டோக்கள் தான் அதிகம் தெரிகிறது.

பக்கத்தில் காவலர்களின் பயிற்சித்  திடல் உள்ளது. குடியரசுதினத்திற்காகக் காவலர் அணிவகுப்பு ஒத்திகை பார்க்கப்பட்டுக் கொண்டு இருந்தது வெகு அழகாய் இருந்தது.
போட்டோவும் காணொளியும் எடுத்தேன். இங்கு போட்டோ மட்டும் பகிர்ந்து இருக்கிறேன்.


வாசலில் இருந்த கோட்டை வரலாறு

கர்னூல் கொண்டா ரெட்டி கோட்டையைத் தொல்லியல்துறை பராமரித்து வருகிறது


உள் நுழையும்  வாசல் அழகான பசுஞ் செடிகளுடன் காணப்படுகிறது

மேலே ஏறிப் போகும் படிக்கட்டுகள்.


செங்கல்லாலும், கருங்கற்களாலும்  கட்டப்பட்ட கோட்டை.
குடியரசு தினநிகழ்ச்சிக்கு  ஒத்திகை பார்க்கப்படுகிறது
கோட்டையிலிருந்து  ஊர்க்காட்சி,  ஆட்டோக்கள் தான் அதிகம் ஊரில்.
ஸ்தூபியின் அழகிய காட்சி
கீழ் இறங்கும் படிக்கட்டுகள்
படிகள்  கொஞ்சம் தான்.கோட்டையைச் சுற்றி வரும் பாதை
கோட்டை மேல் இருந்து மாலைச் சூரியனது  காட்சி
கோட்டையிலிருந்து சூரியன்    
மாலைச்சூரியன்  ஜக ஜோதியாய்

                             கோட்டையில் சுரங்கப் பாதையின் வாசல்

                                                             வாழ்க வளமுடன்.