திங்கள், 11 ஜனவரி, 2016

ஸ்ரீவில்லிபுத்தூர்க் கோவில்

பெரியாழ்வார் கட்டிய 11 நிலைக் கோபுரம்
  ஸ்ரீவில்லிபுத்தூர்  கோபுரம்  நம் அரசின் அடையாள சின்னம்.

மார்கழி என்றாலே பாவை நோன்பும், திருப்பாவையும் சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாளும் எல்லோருக்கும் நினைவில் வரும் இல்லையா?


கோதை பிறந்த ஊர் கோவிந்தன்  வாழும் ஊர் என்று சொல்லப்படுகிற ஸ்ரீவில்லிப்புத்தூருக்கு போய் இருந்தோம் போன மாதம்.  சிவகாசியில் அப்பா பணி புரிந்த போது அடிக்கடி வீட்டுக்கு வரும் உறவினர்களுடன் ஆண்டாள் தரிசனம் செய்யப்  போவோம். பல வருடங்கள் கழித்து மீண்டும் தரிசனம். மலரும் நினைவுகள்  வந்து சென்றது. 

கோவிலில் பல மாற்றங்கள். வழி எல்லாம் பால்கோவா கடைகள்,(அம்மனுக்குத் திரட்டுப்பால்தான் பிரசாதம்) துளசி மாலை வாங்கச் சொல்லி துரத்திக் கொண்டே வரும் பெண்கள், ஆண்கள்.  முதலில் எங்கு போகவேண்டும் எப்படித் தரிசனம் செய்ய வேண்டும் என்பதையும் அவர்களே சொல்கிறார்கள். 

         
                     



                                                       ஆடிப்பூரக் கொட்டகை  
 நன்றி - பக்தி ஸ்பெஷல் அட்டைப் படம்

 முதலில் ஆண்டாள் சன்னதி. ”நாச்சியார் திருமாளிகை” என்று அழைக்கப்படுகிறது. அவள் சிறுவயதில் ஆடி, ஓடிக்களித்த இடமே இப்போது ஆண்டாள் சன்னதி. துளசி மாலைகள் வாங்கிக் கொண்டு உள் நுழைகிறோம். உள்ளே நுழைந்தவுடன் பிரகாரத்தில்  லட்சுமிஹயக்கீரவர் . அங்குள்ள பட்டர் வாங்க பெரியாழ்வார் கும்பிட்ட ஸ்வாமி முதலில் இவரை வணங்கி விட்டு போங்கள் என்கிறார்.

அப்புறம் ஆண்டாள் தரிசனம். 

ஆண்டாள் சன்னதிக்குள் செல்ல சிறப்பு கட்டணம் டிக்கட் வாங்கி உள்ளே சென்றோம்.   ஆண்டாள், ரங்கமன்னார், கருடாழ்வார் ஒரே வரிசையில் நிற்கிறார்கள்.  மூலவர்கள் போலவே  மூன்று உற்சவ மூர்த்திகளும்  முன்புறம் உள்ளனர், இவர்கள்  இருக்கும்  இடம்   முத்துப் பந்தல் என்று அழைக்கப்படுகிறது. பட்டர் ஆரத்திக் காட்டிவிட்டு   சுருக்கமாய்த் தலவரலாறு  சொல்கிறார்.

  உற்சவர்கள்  பின்புறம் இருக்கும்   மூலவர்களை மறைக்கிறார்கள். உற்று உற்றுத் தான் பார்க்கவேண்டும் மூலவர்களை. முதலில் ஆண்டாளைப் பார்த்தேன்,  ஆண்டாள் கையில் கிளி இருக்கிறதா என்று? ஏன் என்றால்    தினம் தினம் புதிதாக இலைகளால் செய்யப்பட்ட கிளி , மாலையில் சார்த்தப்பட்டுக் காலை வரைதான் இருக்குமாம் ஆண்டாள் கைகளில் , அப்புறம் பக்தர்களுக்குக்  கொடுத்து விடுவார்களாம். 
                              
               முன்பு ஆனந்தவிகடனில் வந்த படத்தைக் கிழித்து வைத்து இருந்தேன்.

                      நமது வேண்டுதலைக் கண்ணனிடம் சேர்க்கும் கிளி

 நாம் கொடுக்கும் துளசி மாலையை ஸ்வாமிக்குப் போட்டு விட்டு  ஆரத்தி காட்டி விட்டுத் துளசி மாலையை எடுத்து  கொடுத்தவர் கழுத்தில் போட்டு விடுகிறார்கள்.  அதைப் போட்டுக் கொண்டே கண்ணாடிக் கிணறுக்கு போகிறார்கள். பெண்கள் மாலையைப் போட்டுக் கொண்டு சுற்றி வந்தால் கல்யாணம் ஆகுமாம். 

அடுத்த தரிசனம்  ஆண்டாள் ஸ்வாமிக்கு பெரியாழ்வார் தொடுத்த மாலையை தன் கழுத்தில் போட்டு அழகு பார்த்த கண்ணாடிக் கிணறு. இப்போது கண்ணாடிமூடியால் மூடி ஒரு உண்டியல் பெட்டியாக மாறி விட்டது . நான்கு பக்கம் வாசல் வைத்து அதன் வழியாகப் பணம் போடப்படுகிறது , டாலர் எல்லாம் அதில் இருந்தது. (பணம் தண்ணீரில் விழாது.  அது போன்று அமைத்து இருக்கிறார்கள்). கிணற்றைப் பார்க்க முடியவில்லை. சின்ன சதுரமாய்த் தெரிகிறது கிணறு  மிக கவனமாய்ப் பார்த்தாலும் தண்ணீர் தெரியவில்லை. அடுத்து கண்ணாடி அறை நடுவில்  ஆண்டாள் படம்  வைத்து இருந்தார்கள்.சுற்றி வர கண்ணாடி  வைத்து இருந்தார்கள். கண்ணாடி வழியாக பார்த்துக் கொண்டு சுற்றி வந்து வணங்கி வெளியில் வந்தோம். இங்கும் கட்டணம் உண்டு.

பின் ஆண்டாள் சன்னதி சுற்றி வரும் போது உள்ளே உள்ள உற்சவர்கள் போலவே சுவற்றில் திருவுருவங்கள் இருக்கிறது- ஆண்டாள், ரங்கமன்னார், கருடாழ்வார். அதன் பக்கத்தில் உள்ள வயதான பட்டர் நமக்குக் கதை சொல்கிறார்,  கோதை பிறந்த கதை, விஷ்ணு சித்தர் கருடாழ்வாராக அவதாரம் எடுத்தகதை , மற்ற கோவில்களில் எதிரில் இருக்கும் கருடன்  இங்குமட்டும் தான் உடன் இருக்கிறார்.  அதற்குக் காரணம் ரங்கமன்னாருக்கு அவர் மாமனார் என்பதாலாம்.  மூவரும் பிரணவ மந்திரத்தின் உட்பொருளாம். ஆண்டாள் சன்னதி பிரணவ மந்திர  அமைப்பில் கட்டப்பட்டு இருக்கிறதாம். ஆண்டாள் சன்னதியில் 108 திவ்ய தேசங்களின் படம் வரையப் பட்டு இருக்கிறது -அழகாய். இருக்கிறது.
                     
                                         ஆண்டாள் அவதரித்த துளசி வனம்.

அடுத்து ஆண்டாள் பிறந்த துளசிவனம். பெரியாழ்வாரின் துளசி தோட்டத்தில்  செவ்வாய்க்கிழமை திருவாடிப்பூரத்தில்  பூமி தேவியின் அவதாரமாக கோதை அவதரித்தாள். கோதை தோன்றிய இடம் அழகாய் இருக்கிறது. ஒரு தொட்டியில் துளசிச்செடி முன்புறம்  வைத்து இருந்தார்கள். பின் புறம் ஆண்டாள் அழகாய் அலங்காரம் செய்து இருந்தார்கள்,  பட்டர் ஆரத்தி காட்டினார்.

 சன்னதியைச் சுற்றி அழகிய துளசிச் செடிகளும் மரங்களுமாகிய அழகிய தோட்டம்.


                                           
அழகிய துளசி வனம்
ஆண்டாள் கோவில் யானை -பெயர் தெரியவில்லை

 வடபத்திரசாயி ரங்கமன்னாருக்குத் தான் கோபுரம் பெரிதாக இருக்கிறது.   மூலவரைப் பார்க்கப் போக ஒரு பத்துபடி ஏறிப்போக வேண்டும்., பிடித்துக் கொண்டு ஏற  வசதியாக  கைப்பிடி இருக்கிறது.  பெருமாள் சயனகோலத்தில்  ஸ்ரீதேவி, பூதேவியுடன் அழகாய்க்  காட்சி அளிக்கிறார்.  பின்புறம் உள்ளே இருக்கும் மற்ற தெய்வங்கள் அழகிய வர்ணத்தில் இருக்கிறார்கள்.  பட்டர் பெரிய மூங்கில் தட்டில் துளசியை வைத்துக் கொண்டு வரும் பக்தர்களுக்கு  கொடுத்தார்.  ஆரத்தி காட்டவில்லை.

பெருமாள் சன்னதி எதிரில்  உள்ள (கோபாலவிலாசம்)  மண்டபத்தில் அழகிய மரவேலைப்பாட்டுக் கூரை,  
வடபத்திரசாயி சன்னதி செல்லும் வழி
உடமைகளைப் பாதுகாத்துக் கொள்ளும் வசதிக்காக புதிய இடம் கட்டி வருகிறார்கள் 
வாசல் முகப்பு
உள் பிரகாரம், நல்ல வெளிச்சம் வருவது போல் கட்டிட அமைப்பு
ஆண்டாளின்  வரலாறு சித்தரிக்கப்பட்டு உள்ளது விமானத்தில்

பெருமாள் சன்னதியிலிருந்து கோபுர தரிசனம்.
மரவேலைப்பாடு போல் கல்லில் அழகாய்ச் செய்த வேலைப்பாடு.   இருபுறமும் கடைகள் உள்ளன.


ஜனவரி 20 (2016) ஆம் தேதி  இக் கோவிலுக்கு கும்பாபிஷேகம்  நடைபெறப்போகிறது.  16ம் தேதி யாகசாலை பூஜைகள் துவக்கம். அம்மன் சன்னதி விமானத்திற்கு தங்கத்தகடுகள் பொருத்தி உள்ளனர். வாய்ப்பு இருப்பவர்கள் கண்டு களிக்கலாம்.
                                                         -----------------------------------------

பொங்கலுக்கு ஊருக்குப் போவதால்  முன்பே  பொங்கல் வாழ்த்து சொல்லிக் கொள்கிறேன் எல்லோருக்கும். 


நான் வரைந்த கோலங்கள்.

காணும்பொங்கல் அன்று நாங்கள் செய்யும் சிறுவீட்டுப்பொங்கல் 


அனைவருக்கும்   பொங்கல் திருநாள், மாட்டுப்பொங்கல், திருவள்ளுவர் தினம், உழவர் திருநாள்  வாழ்த்துக்கள்.

வாழ்க வளமுடன்.
----------------------------


திங்கள், 4 ஜனவரி, 2016

கங்கை கொண்ட சோழபுரம்- பகுதி -2

கங்கை கொண்ட சோழபுரத்தில்  படங்கள் நிறைய  எடுத்தேன்  .  நீங்களும் கண்டு மகிழ இங்கு  மேலும் சில படங்களை பகிர்ந்து கொண்டு இருக்கிறேன். 
கங்கை கொண்டசோழபுரம் முதல் பகுதி பார்க்காதவர்கள் பார்க்கலாம்.


சுவாமி விமானம்
புன்சிரிப்பாய் நடராஜர்
திருமால்
தட்சிணாமூர்த்தி
சிவபெருமான் சண்டீசப்பதம் தந்த காட்சி.(கொன்றை மாலை சூட்டிய காட்சி)

//அண்டர் பிரானும் தொண்டர் தமக்கு அதிபன் ஆக்கி அனைத்து நாம்
உண்டகலமும்  உடுப்பனவும்  சூடுவனவும்  உனக்காகச்
சண்டீசனும் ஆம் பதம் தந்தோம் என்று அங்கு அவர் பொன் தட முடிக்குத்
துண்ட மதிசேர் சடைக் கொன்றை மாலை வாங்கிச் சூட்டினார்.//

சேக்கிழார்  அருளிய திருத் தொண்டர்புராணத்தில்  சண்டேஸ்வர
புராணப்பாடல்.
திருமகள்
சுவாமியும், அம்மனும்



காலை நேர பூஜை மணி ஒலிக்கிறது

ஸ்ரீதேவி பூதேவியுடன் பெருமாள்.
பிச்சாடனர் (கைகள் தனியாக செய்து பொருத்திய வேலைப்பாடு, இப்போது கைகள் இல்லாமல் பொருத்திய துவாரம் தெரிகிறது)

வாசல் இடதுபுறம்  தெரியும் காட்சி

சுவாமி  தரிசனம் செய்து விட்டு  வரும் வாசல் மேல் பகுதியில் அழகிய வேலைப்பாடு உள்ள கருங்கல் ஜன்னல்
 (மற்றொரு வாசல்  )துவாரபாலகர் சிரிப்பது போல் இருக்கிறது அல்லவா?
 இரண்டு கிளிகள் வருகிறவர்களை பார்வையிட்டுக் கொண்டு இருக்கிறது
கழுத்தைச் சாய்த்து ஒரு பார்வை

அர்த்தநாரீஸ்வரர்
கோவிலில் கோழியும், சேவலும் சுற்றி திரிந்து கொண்டு இருந்தது

நிறைய சிலைகளை  மண்டப வாசலில் நிறுத்தி வைத்து விட்டார்கள்.

வாழ்க வளமுடன்
=============

சனி, 2 ஜனவரி, 2016

கங்கை கொண்ட சோழபுரம்

முகப்பு வாசல் தோற்றம்
கோவிலுக்கு வெளியே 

சாமி சன்னதி படிகளிலிருந்து எடுத்த சாமி  சிலை இல்லா சன்னதி.
துர்க்கை அம்மன் சன்னதி அருகிலிருந்து எடுத்த படம்

அஷ்டபுஜ துர்க்கை
இது போன்ற மண்டபங்கள் நான்குபுறமும் இருந்து இருக்கிறது முன்பு -
அவை எல்லாம் அணைக்கரைப் பாலமாகி விட்டது.
பஸ் நிறுத்தம் அருகே இருந்து எடுத்த படம்.

நந்தியின் கழுத்தில் மணிகளும், சங்கிலிகளும், குட்டி குட்டி சிம்மங்களும், இலைகளும் எவ்வளவு கலை நுணுக்கம்?


நந்தி சிலையின் மேல்  இலை வேலைப்பாடு
அம்மன்சன்னதி வாசலிலிருந்து

சிம்மக் கிணறு

சிம்மகிணற்றில் ஒரு அம்மன் சிலைகளும் கற்களும் கிடக்கிறது.

சிம்மக்கிணறுக்கும் இந்த வட்ட கிணற்றிற்கும் இடையே வழி இருக்கிறதாம்.

கிணற்றில் மீனுக்கு பொரி போட்டு இருப்பது வானத்து நட்சத்திரங்கள் போல் இருக்கிறது அல்லவா?

சோழகங்கம் ஏரி- .   (கோவிலிலிருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது)கங்கையிலிருந்து நீரைக் கொண்டு வந்து இங்கே விடப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
ராஜேந்திசோழன் 11ம் நூற்றாண்டில்  இந்த சோழகங்க ஏரியை உருவாக்கினார் இன்று பொன்னேரி என்று அழைக்கப்படுகிறது.

எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காதது, கங்கை கொண்ட சோழபுரம் கோவில். இந்த ஆண்டும் வழக்கம் போல்  ஜனவரி முதல்தேதி போய் வந்தோம். எப்போதும் அந்த கோவிலுக்குப் போனாலும் மகிழ்ச்சியைத் தரும் மனதுக்கு.

சென்ற ஆண்டு இன்பமும், துன்பமும் நிறைந்த ஆண்டு.  இந்த ஆண்டு துன்பத்தைத் தாங்க வல்லமையும்,  துன்பத்தைப் போக்கும் வழியும் உன் அருளால்தான் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் குறையாமல் இருக்கவேண்டும் என்று வேண்டி வந்தோம். 

தொடர்ந்து பயணங்கள் செய்து கொண்டு இருப்பதால் பதிவிடவோ நண்பர்கள்  வலைத்தளங்களை படித்து கருத்திடவோ முடியவில்லை. 

ஒரே இடத்தில் நிலையாக நிம்மதியாக சிறிது காலம் இருந்தால் தான் பதிவிட  கருத்திட முடியும். அதற்கு சில மாதங்கள் ஆகலாம். மீண்டும் வருவேன்.

எல்லோருக்கும் இந்த ஆண்டு மனநிறைவையும், எல்லா நலங்களையும் தர வேண்டும்.

படங்கள் எல்லாம்  அலைபேசியில்(ஐ போனில்) எடுத்தேன், காமிராவில் எடுத்த படங்கள் வீட்டில் நிறைய இருப்பதால் .


மேலும் கங்கை கொண்ட சோழபுரத்தைப் பற்றிய விவரங்களும் படங்களும் இந்த பதிவில் இருக்கிறது.

                                                                    வாழ்க வளமுடன்.