காலைப் பொழுது --- நான் எடுத்த புகைப்படங்கள்
-
காலைப் பொழுது மிகவும் ரம்மியமாய் இருக்கும். அதிகாலையில் எழுந்துகொள்வது கஷ்டம். ஆனால் எழுந்துகொண்டால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம்.அதிகாலை நான்கு மணியிலிருந்து ஆறு மணிவரை பிரம்ம முகூர்த்த நேரம் என்பார்கள். அந்த நேரம் செய்யும் பிரார்த்தனைகள் , ஜப, தவங்கள், உடலுக்கு சக்தி அளிக்கும் உடற்பயிற்சிகள் என்று எல்லாமே நன்மை பயக்கும்.
ஆனால் காலையில் எழுந்து கொள்ள வேண்டுமே!
காலை எழுந்துகொள்ள வேண்டும் என்றுஅலாரம் வைத்துக் கொண்டு படுப்பவர்கள் கூட அது அடிக்கும் போது அதன் தலையில் தட்டிவிட்டு மறுபடியும் போர்வையை முகம் முழுதும் மூடிக் கொண்டு தூங்குவது உண்டு.
இப்போது செல்போனில் அலாரம் வைத்துக் கொண்டு படுப்பவர்கள், அது அடிக்கும் போது கை அனிச்சையாக அணைத்துவிட்டு சுகமாய் தூங்குவது உண்டு.
என் மகன் காலையில் எழுப்பிவிடு அம்மா என்று சொல்லிப் படுப்பான்,
காலையில் எழுப்பினால், ’ அம்மா! கொஞ்சம் நேரம் கழித்து ,
கொஞ்சநேரம் கழித்து ” என்பான். “ நீ தானே எழுப்ப சொன்னாய்!” என்றால் ,
நீங்கள் எழுப்பும் போது இன்னும் கொஞ்சம் தூங்க ஆசையாக இருக்கிறது,
அப்போதுதான் சுகமாய் தூக்கம் வருகிறது ” என்பான். அவன் எழுந்து
கொள்ளவேண்டிய நேரத்திற்கு முன்பே அவனை எழுப்ப
ஆரம்பித்துவிடுவேன். அவன் எந்த நேரம் எழுந்து கொள்ள நினைத்தானோ
அந்த நேரம் சரியாக இருக்கும். அவனுக்கும் அது தெரிந்துவிட்டதால்
சிறிது நேரம் படுத்துக்கொண்டுவிட்டுதான் எழுந்துகொள்வான்.
முன்பு குழந்தைகள், கணவர் எல்லோரும் எழுந்துகொள்வதற்கு முன், நான்
எழுந்து தியானம், உடற்பயிற்சி, மற்றவேலைகள் என்று பம்பரமாய் சுற்றிய உடம்பு கொஞ்சம் மக்கர் செய்கிறது. செல்லில் நாலுமணிக்கு அலாரம் வைத்தால், அதைக் கேட்டு எழுந்து கொள் என்கிறது மனம், கொஞ்சம் படுத்துக் கொள் என்கிறது உடல். சில நேரம் மனம் சொல்வதை கேட்டு சுறுசுறுப்பாய் எழுந்துகொள்வேன். சில நேரம் உடல் சொல்வதை கேட்டுப் படுத்துக் கொள்வேன். எப்படி என்றாலும் ஐந்து மணிக்கு மேல் படுத்திருக்க முடியாது. தொட்டில் பழக்கம் என்பார்களே அப்படி .என் அம்மா காலை எழுந்து கொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்தி விட்டார்கள்.
காலையில் மொட்டை மாடியில் என் வரவுக்குக் புள்ளினங்கள் காத்திருக்கும்., காக்கா, புறா, தவிட்டுக்குருவி, புல்புல், மைனாவுடன் மற்ற ஜீவராசிகள் அணில், எறும்பு எல்லாம் காத்து இருக்கும். முதல்நாள் உணவை ஒரு கிண்ணத்தில் போட்டு வைத்து இருப்பேன். அதை விடியற் காலையில் பறவைகளுக்கு வைப்பேன். விடியற்காலையில் பறவைகள் கூட்டில் தன் குஞ்சுகளை விட்டுவிட்டு, அதற்கு இரை தேடிப் பறந்து வரும்- அந்தநேரம் உணவு அதற்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கும் .
ஒரு மண் பாத்திரத்தில் தண்ணீரும் வைத்து இருக்கிறேன். காலையில் கொஞ்சம் நடந்து கொண்டே பறவைகள் உண்ணும் அழகைப் பார்ப்பேன். அண்டங் காக்கா வந்தால், மற்ற பறவைகள் அது சாப்பிட்டுப் போகும் வரை பக்கத்தில் வராது, காக்கா சாப்பிட்டு முடித்தால் புறா வரும்.
அதுவும் எந்த பறவையையும் பக்கத்தில் விடாது. கீழே சிந்துவதை சாப்பிடலாம் என்றால் அதையும் விடாது .கீழேயும் வந்து துரத்தும். இக்காட்சியை என் கணவர் வீடியோ எடுத்துத் தந்தார்கள்.
அப்புறம் அணில் , தவிட்டுக்குருவி, மைனா வந்து சாப்பிட்டது போக மீதி இருக்கும் பருக்கைகளை எறும்பு இழுத்துப் போகும். சிறிது நேரத்தில் அந்த இடம் சுத்தமாகி விடும் !
மெல்ல மெல்ல சூரியன் வெளிக் கிளம்பும் அழகைப் பார்ப்பது மிகவும்
மகிழ்ச்சியாக இருக்கும். வானம் விடியல்காலையில் பார்க்க மிக ரம்மியமாய் இருக்கும்.
”வானம் எனக்கு ஒரு போதி மரம் !
நாளும்எனக்கு ஒரு செய்தி சொல்லும்”
”காலை இளம் கதிரில் உந்தன் காட்சி தெரியுது -நீலக்
கடல் அலையில் மயில் எழுந்து நடனம்புரியுது”
என்ற பாடல்கள் என் மனதில் ஓடும். கிளிக்கூட்டம் பறக்கும் ’கீச் கீச்’ என்ற சத்தத்துடன், கொக்கு வரிசையாய் பறக்கும். கிருஷ்ணபருந்து பறக்கும், மீன் கொத்தி, மரக்கொத்தி, வாலாட்டும் குருவி, கறுப்புக்குருவி., தேன்சிட்டு எல்லாம் பறக்கும். காலைப் பொழுது அருமையானது. அதை எல்லாம் பார்த்து மகிழ கொடுத்த இறைவனுக்கு நன்றி சொல்லவேண்டும் நாளும்.
மாணிக்கவாசகரும், ஆண்டாளும் பாடிய காலைப் பொழுதுப் புள்ளினப் பாடல்கள் எல்லோருக்கும் தெரியும், மாறுதலாய் காலை அழகைப்பற்றிய வாணிதாசன் கவிதை ஒன்றை இங்கு பகிர்கிறேன்.
காலை அழகு
வெள்ளி முளைப்பினிலே - அழகு
துள்ளுது வான்பரப்பில்!-சிறு
புள்ளின ஓசையிலே - அழகு
பொங்கி வழியுதடி!
காலைப் பிறப்பினிலே - அழகு
கண்ணைக் கவருதடி! - சிறு
சோலைக் கலகலப்பில் - அழகு
சொரியுது உள்ளத்திலே!
சேவல் அழைப்பினிலே - அழகு
சிந்தையை அள்ளுதடி! - மன
ஆவல் அழித்துவிட்டால் - அழ
கானது நம்முடைமை!
தாமரை மொட்டுக்குள்ளே - அழகு
தங்கிக் கிடக்குதடி! - கதிர்
சாமரை வீச்சினிலே - விரிந்து
சஞ்சலம் போக்குதடி!
வீடு துலக்கும்பெண்கள் - குளிர்முகம்
வீசும் ஒளியழகில் - வான்
நாடு விட்டு நகரும் - முழுமதி
நாணி முகம் வெளுத்தே!
பாரதியார் ’காலைப் பொழுது’என்று பாடியுள்ளார்.
பாரதிதாசன் அதிகாலை பற்றிப்பாடி இருக்கிறார்.
பாரதியார் அக்கவிதையில் ஒற்றுமையைக் காண்கிறார் . பாரதிதாசன் தன் பாடலில் உழைப்பைப் பற்றி பாடுகிறார்.
இப்போது பரீட்சைக்கு படிக்கும் குழந்தைகள் காலை எழுந்து படித்தால் நல்லது , இரவு சீக்கீரம் தூங்கப்போய் அதிகாலை எழுந்து படித்தால், படித்தவை நினைவில் நிற்கும். ”நான் நன்கு படிப்பேன், நான் படிப்பது என் நினைவில் நிற்கும் ,நான் சிறப்பாய்த் தேர்வு எழுதுவேன், நல்ல மதிப்பெண்கள் பெறுவேன் ” என்று நாளும் மனதுக்குள் சொல்லிவிட்டுக் காலையில் படித்தால் படித்தவை நினைவில் நின்று நன்கு தேர்வு எழுதமுடியும். எல்லா குழந்தைகளும் நன்கு படித்து நல்ல குழந்தைகளாய் வளர வாழ்த்துக்கள். குழந்தைகள் எல்லாம் அன்பும் கருணையும் நிறைந்து வாழ வேண்டும்.
நல்ல எண்ணத்தைக் காலையில் நினைத்தால் அது அப்படியே பலிக்கட்டும் என்று வானத்தில் உள்ள தேவதைகள் வாழ்த்துவார்களாம்! நாமும் நாளும் வாழ்க வையகம்! வாழ்க வளமுடன் ! என்று நினைக்கலாம். வையகம் அமைதியாய் அன்பாய் இருந்தால் நாமும் அப்படியே இருக்கலாம் இல்லையா!.
வாழ்கவளமுடன்.
---------------------