வியாழன், 28 ஜனவரி, 2010

நலம் ,நலம் அறிய ஆவல்

நான் இங்கு சுகமே நீஅங்கு சுகமா?கடிதத்தை,’மடல்,திருமுகம்,முடங்கல்,ஓலை’எனறெல்லாம் அக்காலத்தில் குறிப்பிட்டார்கள் .
இலை என்ற பத்திரத்திலும்,பனைஓலையிலும் கடிதங்கள் வரைவார்கள்.ந.மு வேங்கடசாமி நாட்டார் முடங்கல் பற்றி எழுதியது:// பல்லாயிர ஆண்டுகளாகப் பனுவல்களும்,ஆவண்ங்களும்,பிறவும்,இந்நாட்டிலே பனையோலையிற்
றீட்டப் பெற்றுவந்தன. ஓரிடத்திலிருந்து பிறிதோரிடத்திற்குச் செய்தி தெரிவிக்க வேண்டின் அதனைப் பனையோலையில் எழுதிச் சுருள் செய்து, காப்பிட்டு ஏவலாளர் முதலாயினார் கைகொடுத்துச் செல்லவிடுவது வழக்கம். அதனை ஓலையென்றும்,முடங்கலென்றும் கூறுவர். ஓலையில் எழுதப்படுதலின் ஓலையென்பது பெயராயிற்று;இலை என்னும் பொருளுடைய பத்திரத்தில் வரையப்படுதலின் பத்திரமென்பது பெயராயினாற்போல,பிற்காலத்தே ஓலையென்பது மங்கலமல்லாத செய்தி வரைந்ததாகப் பொருள் படுவதாயிற்று. செய்தி வரைந்த ஓலையை வளைத்துச் சுருள் செய்தலின்,அது முடங்கல் எனவும் பெயர் பெறும். முடங்கல்-வளைதல். முடங்கல் வரைதலைப்பற்றிய வேறு சில செய்திகளும் பின் காட்டுவனவற்றால் அறியலாகும்.

சிலப்பதிகாரம்,புறஞ்சேரியிறுத்த காதையில்,மாதவி தீட்டிய முடங்கலொன்றைக் கோவலன் பெற்ற வரலாறு காணப்படுகிறது. மாதவி திருமுகமெழுதக் கொண்ட கருவிகள் :சண்பகம் மாதவி,பச்சிலை,பித்திகை,மல்லிகை,செங்கழுநீர் என்பவற்றால் நெருக்கத தொடுதத மாலையின் இடையே கட்டிய, முதிர்ந்த தாழம்பூவின வெள்ளியதோடும் ,அதற்கு அயலதாகிய
பித்திகையின் முகையும்,செம்பஞ்சிக் குழம்பும் ஆகும்.பித்திகை அரும்பை எழுது கோலாகக் கொண்டு ,செம்பஞ்சிக் குழம்பிலே தோய்த்துத் தாழையின் வெண்டோட்டில் எழுதினளென்க.//


சைவசமயத்தில் சிவபெருமான் பாணபத்திரரின் வறுமை தீர்க்க சேர அரசனுக்குக் கடிதம் எழுதியதாகக் கூறப்படுகிறது.அப்பாடல் சைவத்திருமுறைகளில் காணப்படுகிறது.
சுவாமி சிவானந்தா எழுதிய கடிதங்கள் தத்துவங்களை விளக்குகின்றன. அக்கடிதங்களின்
தொகுப்பு,epistles of sivananda என்ற தலைப்பில் நூலாக வெளிவந்திருக்கிறது.
சிறந்த கருத்துக்களைக்கூற டாக்டர் மு.வ. அவர்கள் கடிதவடிவத்தை எடுத்துக் கொண்டு
தம்பிக்கு, தங்கைக்கு என்று புத்தகங்களை எழுதியிருக்கிறார்.

நேரு,காந்தி போன்ற தலைவர்களின் கடிதங்கள் இலக்கியமாகவும்,வரலாறாகவும் அமைந்தன என்பார்கள்.மெக்காலே எழுதிய கடிதங்கள் ஆங்கில இலக்கியமாகக் கருதப்படுகின்றன.
சிலப்பதிகார காலத்திலிருந்து கொஞ்சகால முன்பு வரை கடிதம் எழுதும் பழக்கம் நன்றாக
இருந்து வந்தது.தொலைபேசி வந்தபிறகு கொஞ்சம் குறைந்தது.கைபேசி வந்தபின் மிக,மிக குறைந்து விட்டது.


அன்புள்ள என்று ஆரம்பித்து ,பேரோ அல்லது கண்ணே மணியே என்றோ ஏதோ எழுதி, இங்கு நாங்கள் எல்லோரும் நலம் அங்கு எல்லோரும் நலமா?நலம் நலம் அறிய ஆவல் என்று
அந்த காலத்தில் கடிதம் இப்படித்தான் நலம் விசாரித்து எழுதிக் கொள்வார்கள். இங்கு மழை பெய்கிறது,அங்கு மழை உண்டா? மாடு கண்ணு போட்டுதா,வெள்ளாமை எப்படி இருக்கு? என்று ஊர் நடப்பு,நாட்டு நடப்பு எல்லாம் கேட்டுக் கொள்வார்கள்.
பழைய கடிதத்தை எடுத்துப்பார்த்தால் அந்த அந்த காலக்கட்டங்களின் நிலை புரியும்.


ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டாலும் நலமா என்றும் செளக்கியமா என்றும் நல்லா இருக்கிறீர்களா? என்றும் கேட்டுக் கொள்வார்கள். விஞ்ஞானம் வளர்ச்சி பெற்றதில் நாம் இழந்தவை ஏராளம்,அதில் கடிதப்போக்குவரத்தும் ஒன்று. திருவள்ளுவர்:

//அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லைபொருள் இல்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு.//

என்று சொன்னார் ,ஆனால் இப்போதைய குறள்:

’செல் இல்லாருக்கு இவ்வுலகம் இல்லை
மடிக்கணிணி இல்லாருக்கு எவ்வுலகும் இல்லை.” என்றாகிவிட்டது

யாருக்கும் கடிதம் எழுதவோ ,அதை ஆசை ஆசையாய் படிக்கவோ நேரம் இல்லை.
போகிற போக்கில் செல்லில் பேசிக்கொள்வதுதான்! வண்டி ஓட்டிக் கொண்டு ,அப்படிப் பேசுவதால் நடக்கும் விபரீதங்கள் எத்தனை எத்தனை?

வாழ்க்கையில் நிறைய நல்ல விஷயங்களை இழந்தோம்.


திருமணம் ஆன பின் அப்பா அம்மாவிடமிருந்து எனக்குக் கடிதம் வந்தால் குதுகலம்.
அம்மா சமையல் குறிப்பு,கோலம், பூஜை முறைகள் எல்லாம் எழுதி அனுப்புவார்கள்.
குழந்தைப் பேறுக்கு அம்மாவின் வீட்டுக்குப்போன போது, கணவர் என் நலம்,குழந்தை நலம்
கேட்டு எழுதும் போது பெருமிதமான குதுகலம்.குழந்தை வளர்ப்பு எல்லாம் அக்கா அம்மாவிடம் கடிதத்தில்கேட்டுத் தான் .அண்ணன் அக்கா எல்லாம் கடிதம் எழுதும் போது
புதிதாக என்ன சினிமா பார்த்தாய்? புதிதாக என்ன கோவில் போனாய் என்று கேட்பார்கள்

தங்கை ,தம்பி அம்மாவிடம் பள்ளி டூர் போக சிபாரிசு செய்யச் சொல்லி எழுதுவார்கள்.
தோழிகள் எப்போது இனி சந்தித்து கொள்வது எப்போது என்றெல்லாம் கேட்டு எழுதுவார்கள்.எனது மாமனார் வாராவாரம் கடிதம் எழுதுவார்கள்.அவர்கள் எங்களை ஒவ்வொரு பண்டிகைக்கும் வந்து சேருங்கள் என்று எழுதுவார்கள். வாராவாரம் கடிதம் எழுதவில்லையென்றால் உன்னிடமிருந்து கடிதம் இல்லையே அம்மா கவலைப்படுகிறாள்
என்று என் கணவருக்குக் கடிதம் வரும்.என் அப்பாவிடமிருந்தும் நாலுநாளைக்கு ஒருதடவை கடிதம் எழுது என்று கடிதம் வரும்.சின்மையானந்த்ர் நடத்திய தொடர் சொற்பொழிவு விபரம் எல்லாம் அதில் இருக்கும்.

என் மகள் திருமணமாகி இரண்டு கடிதங்கள் எழுதியிருப்பாள்,அப்புறம் எல்லாம் போன் தான்.
மகன் வேலைக்குப் போன புதிதில் ஒரு கடிதம் எழுதினான் அப்புறம் போன்.இப்போது
இண்டர் நெட் சாட் தான்.

மின்னஞ்சலில் கடிதங்களை எழுதித் தாள்களை மிச்சப்படுத்தி மரங்களைப் பாதுகாத்து மழைவளம் பெறுவோம் என்பது இப்போதைய சுலோகம் .

கடிதம் எழுதச் சோம்பல் படும் நமக்கு இது ஒரு நல்ல கருத்தாகவே படுகிறது.

எப்படி இருந்தாலும் ஏதாவதொரு வடிவில் கடிதங்கள் இருந்துகொண்டுதான் இருக்கும்
இல்லையா?

வாழ்க வளமுடன்!

திங்கள், 25 ஜனவரி, 2010

உடல் நலம்

உடல் நலம்
-----------
“வரும் முன் காப்பதே அறிவுடைமை!”
-----------------------------------

இப்போது சமுதாய மக்களிடையே உடல் நலத்தைப் பற்றி நல்ல விழிப்புணர்வு உள்ளது.
உடல் நலத்தைப் பற்றி திருவள்ளுவர்,திருமூலர், எண்ணிறந்த சித்தர்கள் வள்ளலார் மற்றும் பல மெய்ஞ்ஞானிகள் சொல்லி உள்ளார்கள்.அரவிந்தர்,அன்னை,ராம்கிருஷ்ணர், வேதாத்திரி
மகரிஷி ஆகியோர் சொல்லியிருக்கிறார்கள்.தினம் ஒருவராய்ப் பார்க்கலாம் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று. என்னுடன் நீங்களும் வருவீர்கள் என்று நம்புகிறேன்.


வேதாத்திரி மகரிஷி
----------------
மனிதன் துன்பங்கலவாத இன்பத்தை தான் பெரிதும் விரும்புகிறான். இன்பத்தை உடலால் தான் அனுபவிக்கிறோம். உடலானது முழுநலத்துடனும்,ஆரோக்கியத்துடனும் திகழ்ந்தால் தான் இன்பம் நிலவும்,மேலும் தொடரும். உடல் நலம் குன்றின் நாம் அனுபவித்து வரும் இன்பம் கெட்டு துன்பம் வந்து விடுகிற்து. துன்பத்தின் உக்கரம் சில நேரங்களில் பொறுக்க முடியாத நிலையிலும் நோயால் ஏற்படும் பாதிப்புச் சில நேரங்களில் எதிர்கால இன்பத்தையும், வாழ்வையும் கூட கொள்ளை கொண்டு விடுகிறது. ஆகவே நோயற்ற வாழ்வான குறைவற்ற செல்வதைத்தான் எல்லோரும் விரும்புகிறார்கள்.

உடலில் ஏற்கனவே இருக்ககூடிய நோய்களைப் போக்கிக் கொள்வது என்பது ஒரு முறை அதை சிகிட்சை என்று சொல்வார்கள்.நோயைத் தீர்த்துக் கொள்வதற்கும் மேலான சிறந்த ஒரு முறை என்ன வென்றால் நோய் வராமலே தடுத்துக் கொளவது என்பதாகும். அவ்வாறு தடுத்துக் கொள்ளக் கூடிய ஒரு விழிப்பு, அதற்குரிய செயல் ஒழுங்கு முறைகள் இவற்றைக் கைக் கொண்டால் நோய் வந்த பிறகு தீர்த்துக் கொள்வதை விடத தடுத்து கொள்வது சுலபமானது, தெரியவரும்.

“கருவமைப்பு,ஆகாரம்,எண்ணம்,செய்கை
ககனத்தில் கோள்கள் நிலை சந்தர்ப்பத்தால்
வரும் இயற்கை நிகழ்ச்சிகளின் மோதல் எல்லாம்
வாழும் உயிர்கட்குப் பல ரசாயனங்கள்
தரும் மாற்றம் தரமொக்க இன்ப துன்பம்
தகுந்த அளவாம் இதிலோர் சக்தி மீறிப்
பெருகி ரத்தச் சுழல் தடுக்க நோயாய் மாறிப்
பின்னும் அதிகரித்து விட மரணம் ஆகும்”

உணவு, எண்ணம்,செய்கை ஆகிய வற்றால் ஏற்படும் மாற்றங்களைத் தக்கவாறு கணித்து என்னென்ன உணவு அல்லது எண்ணம் அல்லது செய்கை என்ன விதமான மாற்றத்தைத் தருகிறது. என்வே எந்த உணவை அல்லது எண்ணத்தை அல்லது செயலைத் தொடர்வது அல்லது விடுவது என்பது போன்று ஆராய்ந்து தக்க நடவடிக்கை மூலம் உடல் நலத்தைப் பேணிக் கொள்ள வேண்டும்.

சந்தர்ப்ப மோதுதலால் வரும் மாற்றங்களைப் பொதுவாக ஏற்றுக் கொள்ள வேண்டியதைத் தவிர வேறு வழியில்லை. ஆனால் கருவமைப்பாலும் கோள் நிலையாலும் ஏற்படும் மாற்றங்களை நமது மனவளக்கலை மூலம் பெரும்பாலும் மாற்றி நற்பயன் துய்க்கலாம். கூடவே முறையான ஒழுக்கப் பழக்கங்களும் நல்லெண்ணம்,நற்செய்கைகளும் வேண்டும்.உடற்பயிற்சி கூட அதில் அடக்கமே.

நோயற்ற உடலில் தான் அறிவும் திறம்பட இயங்கும். இன்பங்களைத் துய்க்க இயலும் .
எனவே ஒவ்வொருவரும் நோயற்ற வாழ வழி கண்டாக வேண்டும். மனத்தூய்மை, ஒழுங்கான உணவு,அளவான உழைப்பு, இவற்றுடன் கூடிய வாழ்க்கை உடல் இருக்க உதவும். பொறாமை,சினம்,வஞ்சம்,கவலை,காம எண்ணங்கள் இவை உடல் காந்த சகதியினைஅழித்து விடும். தவத்தாலும்,ஆராய்ச்சியாலும் இந்த உணர்ச்சி நிலைகளை மாற்றிவிடலாம். வெற்றி நிச்சியம் என்கிறார். உடற்பயிற்சி,உளப்பயிற்சி செய்து நாளுக்கு நாள் மகிழ்ச்சியும்,இனிமையும் பெற்று வாழலாம்.

தினந்தோறும் நாம் காலையிலிருந்து மாலை வரை குடும்பத்தில் பலவகைப் பொருட்களையும், பண்டங்களையும் கையாளுகின்றோம். சமையல் பாத்திரங்களையே எடுத்துக் கொள்ளுங்களேன் ;சுத்தப்படுத்தி வைத்தால் தானே அவை மறுநாளைக்கு உதவும்? அதே போல தினந்தோறும் மனத்தையும் உடலையும் உபயோகிக்கிறோம்; அவற்றில் அவ்வப்போது ஏற்படக்கூடிய களங்களைப் போக்கி, மீண்டும் புதிதாக நாளைய உபயோகத்திற்கு தயாராக வைத்துக் கொண்டால் தானே நன்றாக இருக்கும்?


உடலுக்குக் கொடுக்கக்கூடிய ‘உடற்பயிற்சி’ மனதிற்குக் கொடுக்கக் கூடிய ‘தியானப்பயிற்சி’ உயிருக்குறுதி அளிக்கும் ‘காயகல்பப் பயிற்சி’ இம் மூன்றும் உடலையும்,உள்ளத்தையும்,உயிரையும் மேன்மைப் படுத்தி,தூய்மைப் படுத்தி மனிதன் வாழ்வாங்கு வாழ்வதற்கு வழி வகுப்பவையாகும். என்கிறார்.


ஆறுகுணங்களை சீர் செய்ய வேண்டும் என்கிறார்.

பேராசையை- - -------- நிறைமனமாகவும்
சினத்தை - - ---------- சகிப்புத்தன்மையாகவும்
கடும்பற்றினை ----------- ஈகையாகவும்
முறையற்றபால்கவர்ச்சியை---------------- கற்பாகவும்
உயர்வு தாழ்வு மனப்பான்மையை---------- சமநோக்காகவும்
வஞ்சத்தை ---------- மன்னிப்பு ஆகவும்

மாற்றி அமைத்தாலன்றி மனிதன் மனிதாக இருக்க முடியாது.

அடுத்து தற்சோதனை செய்ய சொல்கிறார்.

1.எண்ணம் ஆராய்தல்
2.ஆசைசீரமைத்தல்
3.சினம் தவிர்த்தல்
4.கவலை ஒழித்தல்
5.தன்னிலை விளக்கம்-நான் யார்?

1.எண்ணம் என்பது என்ன? அதன் ஆற்றல் எவ்வளவு? அது எப்படி தோன்றுகிறது?ஏன் அந்த
எண்ணம் வந்தது? அதற்குக் காரணம் என்ன?என்று கண்டு “அந்த எண்ணத்தைச் செயல் படுத்தினால் என்ன விளைவுஏற்படும்?அந்த விளைவு நமக்கும்,பிறர்க்கும் நன்மை தருமா?” என்பதைத் தெரிந்து கொண்டு அந்த விளைவு துன்பம் தரத்தக்கதாக இருந்தால் அப்போதே
பல தடவைகள் சங்கற்பம் செய்து அந்த எண்ணத்தை நல்ல எண்ணமாக மாற்றிக் கொள்ள ஏற்ற பயிற்சியே எண்ணம் ஆராய்தல்.

2.ஆசைசீரமைத்தல்;(ஆசை ஆசை இப்போழுது பேராசை . ஆசை கூடும் காலம் எப்போழுது) நமது மனதின் வேகம்,விரைவு மிக அதிகம். மனது ஒரு மணி நேரத்தில் பத்து நூறு ஆசைகளைக் கூட உண்டு பண்ணிவிடும்.ஆனால் அந்த ஆசைகளை உடலின் ஆற்றலுக்குத் தக்கவாறுதானே நிறைவு செய்ய முடியும்?அப்படி உண்டு பண்ணிய ஆசை நிறைவேறாமல் தேங்கி நிற்குமேயானால் மனம் சோர்வடையும். வாழ்க்கை நன்றாக இருக்காது.ஆகையால் நாம் ஆசைப்பட்டாலும் அது நம்மால் முடிக்க கூடியதாக இருக்க வேண்டும் .நலம் தரும் ஆசையை மட்டும் வைத்துக் கொண்டு திட்ட்மிட்டுச் செயலாற்றுவதே ஆசை சீரமைத்தல் .

3.சினம் தவிர்த்தல்:சினம் எழாமலேயே தடுப்பதற்கு, மனதை விழிப்பு நிலையிலேயே
வைத்துப் பயிற்சி செய்வது. அதிகமாக யாருடைய நன்மைக்காக நீங்கள் பாடுபடுகிறீர்களோ அதிகமாக அவர்கள் மீதுதான் சினம் வருவது இயல்பாக இருக்கிறது.அந்த மாதிரி
ரொம்ப நெருங்கியவர்கள் மீது சினம் வந்து வந்து அவர்கள் மனம் புண்படும்படி நடந்து கொண்டால் வாழ்க்கையில் நிறைவு பெறமுடியாது. அவர்களுடைய புண்பட்ட மன அலை உங்களுக்குச் சாபமாகி,பின் அவர்களுக்குக் சாபமாகி இரண்டு பேருமே நோய்வாய்ப்படும் நிலை உருவாகும்.அடுத்தவர்கள் செய்வது தவறாக இருந்தாலும்,பொறுத்துக்கொண்டு அன்பு காட்டி, வாழ்த்தி வாழ்த்தி அதனை சரிப்படுத்தி விடலாம்.


4.கவலை ஒழித்தல்: அதாவது,நாம் தவறாகப் புரிந்து கொண்டு எடுக்கும் தவறான முடிவுகளே கவலைகளுக்குக் காரணம்.அதாவது உங்கள் தேவைக்கும் இருப்புக்கும் இடையில் துண்டு விழுகிறபோது,நீங்கள் எதிர்பார்க்கிறதுக்கும்,நடப்பதற்கும் இடையில் வித்தியாசம் காணுகிறபோது,உங்கள் கற்பனைக்கும் இயற்கையாக நடப்பதற்கும் இடையில் வித்தியாசம் காணுகிறபோது தன்னுடைய எண்ணத்துக்கும் இன்னொருவர் எண்ணத்திற்கும் முரண்பாடு காணுகிறபோது கவலைப்படுகிறோம்.நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை திட்டமிட வேண்டும்.சிந்தனை செய்ய வேண்டும் .அறிவில் தெளிவு உண்டாகிறது.கவலை ஒழிகிறது.

5.நான் யார்? எனற வினாவை எழுப்பி,அந்த வினாவில் இந்த உடல் உயிர்,மனம்,அறிவு,மெய்ப்பொருள்,அதாவது பிரபஞ்சம் முழுமையும் இயங்குவதற்குக் காரணமாகவும், ஒவ்வொரு பொருளிலும் இயக்க நியதியாகவும் உள்ள ஒரு பொருளைப் பற்றி விளங்ககூறி,அந்தப் பொருளுக்கும் தனக்கும் உள்ள உறவு,இணைப்பு இதையும் எடுத்துக்காட்டி விளங்க வைப்பது.

ஒன்பது மையங்களில் எப்படி உயிர்ச் சக்தியை இயக்குவது ஒவ்வொரு சுரப்பிக்கும் மூளையில் ஒரு நேர் பகுதி தொடர்பு உள்ளது.அதனால் ஒவ்வொரு மையத்திலும் தவம் செய்யும் போது மூளையில் அதற்கு தொடர்புள்ள பகுதியின் இயக்கம் தூண்டி விடப்படும். இதனால் நோய் தடுப்பு சக்தி உடலுக்கும் ,மனதுக்கும் கூடுகிறது. அதனால் வாழ்வில் உடலுக்கோ மனதுக்கோ ஏற்படக் கூடிய அதிர்ச்சிகளை தாங்கி கொள்ளக் கூடிய சக்தியை
ஒன்பது மைய தவம் தருகிறது.ஆழ்ந்த அமைதியைப் பாதிக்காதவாறு இருக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்று முடிவு காணக்கூடிய சக்தியும் இந்த ஒன்பது மைய தவத்தால் ஏற்படுகினறன.

இன்னும் பஞ்ச இந்திரிய தவம்.பஞ்சபூத தவம், நித்தியானந்த தவம் முதலிய சிறப்பு தவங்கள் உடலுக்கும் மனதுக்கும் அமைதி ஆனந்தம் தரும்.
இது தவிர ஜீவகாந்த பெருக்க பயிற்சி ! இது ஜீவகாந்த சகதியை பெருக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து வாழ்வில் வெற்றியும், மகிழ்ச்சியும் பெற செய்யும்.

வாழ்க வளமுடன் என்று வாழ்த்தும் போது உடல் நன்றாக இருக்கும். மனம் நன்றாக இருக்கும். ந்ம்மிடம் தொடர்பு கொள்பவர்களும் நல்லவர்களாய் இருப்பார்கள். நம்மை சுற்றிலும் நல்ல அலை இயக்கம் இருக்கும். தனி மனிதன் நலமாக, அமைதியுடன் வாழ வேண்டுமானால், இந்த உலகம் முழுவதும் வளமாக இருந்ததால் தான் முடியும்.
காலை எழுந்தவுடன் “வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்!”என்று கூறி வையகத்தை
வாழ்த்த வேண்டும். வையகம் வாழ்ந்தால் நாமும் வாழ்வோம்.

வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!

புதன், 20 ஜனவரி, 2010

வேகம் விவேகம் அல்ல

வேகம் விவேகமல்ல
--------------------
முத்துலெட்சுமி சாலைப் பாதுகாப்பு தொடர்பதிவுக்கு அழைத்திருந்தாங்க,
முத்துலெட்சுமி நனறாக எழுதியிருந்தார்கள்.நானும் என்னால் முடிந்ததை
எழுதுகிறேன்.


என் குருநாதர்சொல்லுவார்: இந்த உலகம் எவ்வளவு வலுவுள்ளதாக இருக்கிறது?
தன்னைத் தானே வேகமாகச் சுற்றுகிறது என்றால் ,யார் சுற்றுவது? நமக்கு
அப்பாற்பட்டதாக,எல்லாவற்றையும் அழுத்தம் எனும் உந்து ஆற்றலால் தனக்குள்
அடக்கிக் கொண்டு இருக்கின்ற அந்த சுத்தவெளிதான் இறைநிலை.மெய்ப்பொருள்.
அந்த சுத்தவெளியில் இரண்டு தன்மைகள் அடக்கமாக உள்ளன.1)வேகம்2)விவேகம்
வேகம் என்பது விண்ணாக,சக்தியாக மலர்ந்தது.அதை மீண்டும் அதே சுத்தவெளியில்
சுழல வைத்து,அதுவும் சுழலவும்,அவை பல கூடியது சுழலவும்,இந்த பேரியக்க மண்டலம்
முழுவதும் முறையாக சுழல விட்டு,என்றுமே தவறாது இயங்கிக் கொண்டு இருப்பதனால்
அதற்கு ’அறிவு’ என்று பெயர். பரநிலையில் வேகம் விவேகம் இரண்டும் அடங்கியுள்ளன.
இவை அடங்கியிருப்பது மனித மனத்திற்குத் தெரியவில்லை.

வேகம் விவேக மில்லை.
----------------------
சாலை விபத்திற்கு காரணம் முதலில் வேகம் தான் .அதற்கு தான் வேகத்தடை வைத்தும்
அதிலும் சர்க்கஸில் ஜீப் ஓட்டுபவர் போல் அதி வேகமாய் சாகஸம் செய்கிறார்கள்.
தானத்தில் சிறந்தது நிதானம் தான். நிதானமாய் கவனித்து வண்டி ஓட்டி செல்பவர்களை
பின்னால் வருபவர்கள் தொடர்ந்து ஒலி எழுப்பி , அவர்களை முந்தி செல்வதில் மகிழ்ச்சி
அடைகிறார்கள்(என் கணவரை அப்படி அடிக்கடி முந்தி செல்வார்கள்)இகலோகத்தில்
எவ்வளவோ அனுபவிக்க இருக்கும் போது பரலோகத்திற்கு என்ன அவசரம் என்று சிறியவர்களைத் திட்டும் பெரியவர்களையும், ”என்ன பெரிசு ,வீட்டில் சொல்லிவிட்டு வந்துவிட்டாயா என்று கேட்கும் சிறியவர்களையும் சாலைகளில் நாம் பார்க்கலாம்.
மெதுவாய் ஓட்டினால் கட்டை வண்டி
ஓட்டுகிறாயா எனறு கேள்வி? வேகமாய் ஓட்டினால் காரில் போனால் கண்ணு மண்ணு
தெரியாதே எனற பேச்சு .இதிலிருந்து தெரிவது ரொம்ப மெதுவாகவும் போக கூடாது,
ரொம்ப வேகமாகவும் போக கூடாது, நிதானமாய் போக வேண்டும் என்பது.

எதிலும் வேகம் எங்கும் வேகம்
----------------------------
வேகம் வேகம் என்று தாங்களே முதலில் முந்திப் போக வேண்டும் என்று எல்லோருமே நினைக்கிறார்கள் .சீக்கிரம் போகவேண்டும் என்றும் நினைக்கிறார்கள் .
டிராபிக் ஜாம் ஏற்பட்டால் காத்திருத்தல் என்பது பெரிய குற்றமாய்
கருதப்படும் காலம். இரண்டு சக்கர வாகனங்களில் வருபவர்கள் கிடைக்கிற சந்து
பொந்துகளில் நுழைந்து போய்விடுவார்கள்,(திட்டுகளை வாங்கி கொண்டு).
போதிய இடைவெளி விட்டு வாகனங்களை ஓட்டாமல் பின் செல்லும் போது,
முன்னால் செல்லும் வாகனம் திடீர் எனறு பிரேக் போட்டால் என்ன செய்யமுடியும்?
முன்னாலோ,பின்னாலோ இடிக்க வேண்டி உள்ளது. பிறகு சண்டை,சச்சரவு ,வாக்கு
வாதங்கள்.

சாலை விதிகள்
--------------
இந்தியாவில் சக்கரங்களுள்ள அனைத்து வண்டிகளுக்குமான பாதை விதி
‘இடது பக்கம் செல்லவும்’ என்பதேயாகும். இவ்விதியை அனுசரிப்பதானது
வாழ்வுக்கும் சாவுக்கும் சம்பந்தப்பட்ட ஒரு விஷயமாகும்.
பாதையில் ஆடு ,மாடுகளை ஓட்டி செல்பவர்கள் தங்கள் கட்டுக்குள் வைத்து கொள்ளாமல்
விட்டு விட்டால் ஆடு ,மாடுகள் மேல் வண்டி ஏறாமல் இருப்பதற்காக
ஓட்டுநர் வண்டியை வேறு பக்கம் திருப்ப அதனால் விபத்து ஏற்படுகிறது.
ஆடு ,மாடுகளை ஓட்டி செல்பவர்களும் சாலை விதிகளை மதிக்க வேண்டும்.
குழந்தைகளுக்கும் சாலை விதிகளை சிறு வயதிலேயே சொல்லி தர வேண்டும்.
முன்பு நான் சிறுமியாய் இருக்கும் போது நீதி போதனை வகுப்பு உண்டு.
அதில் சாலை குறியீடுகள்,சாலை அடையாள குறிகள்,சாலை விளக்குகள்
பற்றி எல்லாம் பாடம் உண்டு .இப்போது இல்லை.

போக்குவரத்துச் சட்டங்கள்
------------------------
ஓட்டுநர் உரிமையை நேர்மையாக பெறவேண்டும். பள்ளி மாணவ மாணவியர்கள்
உரிமம் பெறாமலே வண்டிகளில் பறக்கிறார்கள்.சிறு வயதிலேயே
வண்டி ,கையில் செல்,செல்போனில் பேசி கொண்டே போகிறார்கள் .அதை தடை
செய்தால் விபத்துகள் தடுக்கலாம்.குடிபோதையில் ஓட்டுவது,அனுமதியில்லாத
சட்ட விரோதமான வேகப் போட்டியில் ஓட்டுவது எல்லாம் கடுமையாக தடை
செய்ய பட வேண்டும்.மக்கள் போக்குவரத்துச் ச்ட்டங்களை மதித்து நடந்தாலே
விபத்துகளை தடுக்கலாம்.மனித உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துபவர்களுக்கு
கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்.மற்றவர்கள் தண்டனைக்கு பயந்து
சரியாக நடக்கலாம்.

பொதுவிதி
---------
உலகத் தரம் வாய்ந்த சாலைகள் வேண்டும். மக்கள் நெரிசல் உள்ள பகுதிகளில்
போக்குவரத்து காவலர் அதிகம் கண்டிப்பாய் தேவை.விபத்துப் பகுதி என்று
அறிவித்த இடத்தில் ,நெடுஞ்சாலைப் பகுதிகளில் ஆம்புலன்ஸ் தயார் நிலையில்
இருக்க வேண்டும்.என் அண்ணனுக்கு விபத்து ஏற்பட்ட போது,அந்த ஊர் வயலில்
வேலை பார்த்துக்கொண்டு இருந்த நல்ல மக்கள் அந்த வழியில் செல்லும் வாகனங்களை
நிறுத்த சொல்லி கேட்டு இருக்கிறார்கள். யாரும் நிறுத்தாமல் போகவே,ஊர் ம்க்கள்
கல் விட்டு எறிந்து பாதை நடுவே நின்று வழிமறித்து பஸ்ஸில் ஏற்றி பக்கத்து
ஊர் ஆஸ்பத்திரியில் சேர்த்தும் பயனின்றி அண்ணன் உயிர் பிரிந்தது.அண்ணன்
இறந்த வருடம் 1989 .அப்போது செல் வசதி கிடையாது .ஆனால் இப்போது எல்லா
வசதியும் இருந்தும் ஆள்படைகள் இருந்தும் ஒரு காவல் துறை ஆய்வாளர் உயிர் போனது
வருந்த தக்க நிகழ்ச்சி .

மக்களிடம் விழிப்புணர்வு தேவை.மித வேகம் நன்று.
வேகம் தேவை இல்லை,விவேகம் தான் தேவை.

அருட்காப்பு
”அருட் பேராற்றல் இரவும் பகலும் எல்லா நேரங்களிலும்
எல்லா இடங்களிலும் எல்லாத் தொழில்களிலும்
பாதுகாப்பாகவும்,வழி நடத்துவதாகவும்
அமையுமாக!வாழ்க வளமுடன்!”