சனி, 15 மார்ச், 2025

சிவப்பு நிலா

ஹோலி பண்டிகை அன்று சந்திர கிரகணம் நிகழும் என்று பேரன் சொன்னான் இரவு 10.30 க்கு எடுக்க ஆரம்பித்து காட்டிக் கொண்டு இருந்தான். பின்  இரவு 12.30 வரை  குளிரை பொருட்படுத்தாமல் படி படியாக நிலா நிறம் மாறுவதை எடுத்து எனக்கு அனுப்பி விட்டான்.


இங்கே பார்க்க முடியாது ஆச்சிக்கு அனுப்பி வை என்றேன் , அனுப்பி வைத்தான். 24 படங்கள் அனுப்பி வைத்தான். அதில் சில படங்களை தேர்வு செய்து இங்கு பகிர்ந்து இருக்கிறேன்.

திங்கள், 10 மார்ச், 2025

ஹர்ஷவர்த்தனர்


ஹர்ஷவர்த்தனர் .கி.பி 606-647 வரை ஆட்சி செய்தார்

மாளவ மன்னன் தேவகுப்தன் ஹர்சரின் சகோதரியான ராஜ்யஸ்ரீயின் கணவரை கொன்றுவிட்டு ராஜ்யஸ்ரீயை தன்னோடு அழைத்துச் சென்று சிறை வைத்தான்.அதை அறிந்த ஹர்ஷவர்த்தனர் மற்றும் ராஜ்ஜியஸ்ரீயின் அண்ணனான ராஜ்யவர்த்தனர் தேவகுப்தன் மீது போர் தொடுத்து வெற்றியும் பெற்றான். அதன் பின் சூழ்ச்சியால் ராஜ்யவர்தனர் பேரரசர் கெளடப் பேரரசர் சசாங்கனால்    கொல்லப்பட்டான்.

அப்போது ஹர்சருக்கு வயது பதினாரே நிரம்பிய நிலையில் ஹர்சவர்த்தனராக முடிசூட்டிக் கொண்டார்; ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் சசாங்கனை   பழிதீர்த்து, தன் சகோதரி ராஜ்யஸ்ரீயைமீட்க  தீர்மானித்தார். ராஜ்யஸ்ரீ சிறையிலிருந்து தப்பி விந்திய மலைச்சாரலுக்கு ஓடி விட்டார். அவரை தேடி அழைத்து வந்தார் ஹர்ஷவர்த்தனர். அதன்பின்  நாட்டின் நலத்தில் கவனம் செலுத்தினார்.




இந்தியாவிற்கு வந்த சீன யாத்திரிரிகர் யுவான்  சுவாங் குறிப்புகளிலிருந்து  ஹர்ஷர்  ஆட்சி சிறப்பை அறியலாம்.
நாலந்தா பல்கலைகழகம் குமார குப்தரால்  தோற்றுவிக்கப்பட்டது. ஹர்ஷர் காலத்தில் உலக புகழ் பெற்றது.

இவர் நாகானந்தம், ரத்னாவளீ, ப்ரியதர்சிகா என்ற மூன்று சமஸ்கிருத நாடகங்களை இயற்றியுள்ளார். இவை மன்னரின் அவைப் புலவர்களான பாணபட்டர் முதலியோரால் எழுதப்பட்டவை என்றும் ஒரு கருத்து உண்டு. இந்த நாடகங்களுக்கு சமஸ்கிருத இலக்கியத்தில் முக்கியப்பங்கு உண்டு.


பிராகையில்  நடைபெற்ற  திருவிழாவில் மக்களுக்கு வெகுமதிகளை அள்ளி அள்ளி கொடுத்து விட்டு அவை தீர்ந்து போன பின் , தன் பட்டாடைகளையும் தானம் அளித்து விட்டு தன் சகோதரியிடம் ஒரு ஆடையை வாங்கி அதை அணிந்து வந்ததாக என் சரித்திர ஆசிரியர் சொல்வார்.


ஹர்ஷர் முதலில் சிவன், சூரியன், புத்தர் ஆகிய கடவுளர்களை வணங்கினார். பிறகு மகாயான  புத்த மததிற்குப் பேராதரவு அளித்தார். "பிராகையில் நடைபெறும் திருவிழாவிற்கு ஐந்து கண்டங்களிலுள்ள ஏரளமான  வெகுமதிகளை  அளித்தார் .

புத்தர், சிவன், சூரியன் ஆகிய திருவுருவங்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன.


ஹர்ஷர் எவ்வளவு நல்ல குணங்கள் உடையவராக இருந்தார்  என்பதை  ஹர்ஷர்  சாதனைப்படைத்த பேரரசரின்  சரித்திரம் என்ற நூலில் இருந்து  கொஞ்சம்  கீழே:-   

விகடன் பிரசுரம் ஆசிரியர்  அ. கணேசன் அவர்கள் நூலில் உள்ள சிறிய முன்னுரை.  பகுதி  133  ரூபாய் என்று போட்டு இருக்கிறது.


//இந்தியாவை ஆட்சி செய்த முற்கால அரசர்களில் சிறந்தவர்கள் தங்களின் திறமையான நிர்வாகத்தை மக்கள் பயன்படுத்திக்கொண்டு அதை அனுபவித்து மகிழ வேண்டும் என்ற எண்ணமுடையவர்களாக இருந்தனர். அவ்வாறு மக்கள் நலனில் அக்கறை கொண்டு மக்களின், தேசத்தின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு ஆட்சி நடத்தியவர் பேரரசர் ஹர்ஷர். ஹர்ஷரின் சாதனைகளை மட்டுமல்ல பண்டைய இந்தியர்களின் திறமைகளையும், கலைகளையும் இந்த நூலில் விவரித்திருக்கிறார் நூல் ஆசிரியர் அ.கணேசன். ஹர்ஷர் போரில், நிர்வாகத்தில் மட்டும் சிறந்தவர் அல்ல கலைகளிலும் சிறந்தவர்.

கலைகளையும், இலக்கியத்தையும் மக்களுக்காகவே அவர் படைத்தார். தான் இயற்றிய நாகானந்தா நாடகத்தில் ஹர்ஷர் கீழ்க்காணும் வரத்தைத் தேவதையிடம் தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறார். ‘மேகங்கள், குறித்த காலத்தே மழைபொழியட்டும். மக்கள் நிலத்தில் தொடர்ந்து சாகுபடி செய்து பச்சை ஆடையை நிலத்துக்கு அணிவிக்கட்டும். எல்லா மக்களும் நற்செயல்களைச் செய்து குவிக்கட்டும். எல்லா அழிவிலிருந்தும் நாடு விடுபடட்டும். மக்கள் பொறாமையற்ற உள்ளங்களுடன் களிக்கட்டும். உறவினர், நண்பர்களால் இடையூறு அற்ற இன்பதைச் சுவைக்கட்டும்’. அதனால்தான் அவர் அரசர்களில் சிறந்தவராக இருந்தார்! கங்கை நதியைப் போக்குவரத்துக்குப் பயன்படுத்தினார். அரசாங்கப் படகுகளும், தனியார்ப் படகுகளும் அதிகமாகக் கங்கையில் காணப்பட்டதற்குப் பல சான்றுகள் உள்ளன.

 ஹர்ஷரின் ஆட்சி வலபி, ஒடிசாவின் சில பகுதிகள் வரை நீடித்தது. அரசாங்க, வணிக, போர்த் துறைகள், அரபிக்கடலிலும் வங்கக்கடலிலும் கப்பல் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தி வந்தன. ஹர்ஷப் பேரரசில் யானைப் படை முக்கிய நிலையில் இருந்தது. ஹர்ஷரின் விருப்பமான யானைகள் போர்க்களத்தில் பல பணிகளுக்கு உதவின என்பதை பாணர் விவரிக்கிறார். எதிரிகளின் கூடாரங்களை முட்டிக் குழப்பம் விளைவிக்கவும், தந்தத்தால் பகைவர்களை நசுக்கவும், வெறி பிடித்து ஓடிப் பகைவர்களைக் கொல்லவும் யானைகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. இப்படி எண்ணற்றத் தகவல்களை விறுவிறுப்பான நடையில் ஆதாரங்களுடன் விளக்கிச் சரித்திரத்தை நம் கண்முன்னே கொண்டு நிறுத்துகிறார் நூல் ஆசிரியர்!//

இவ்வளவு நல்ல உள்ளம் படைத்தவராக இருந்ததால் இறைவன் 41 வது வயதிலேயே  கூட்டி சென்று விட்டார் போலும்.



இதற்கு முன்பு போட்ட பதிவுகள்.

சரித்திரம் தொடரும்.

வாழ்க வையகம் ! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
----------------------------------------------------------------------------------------------------

செவ்வாய், 4 மார்ச், 2025

அன்புடைய மாமனும், மாமியும் நீ

அப்பன்நீ அம்மைநீ ஐய னும்நீ
அன்புடைய மாமனும் மாமி யும்நீ
ஒப்புடைய மாதரும் ஒண்பொரு ளும்நீ
ஒருகுலமும் சுற்றமும் ஓரூ ரும்நீ
துய்ப்பனவும் உய்ப்பனவுந் தோற்று வாய்நீ
துணையாயென் நெஞ்சந் துறப்பிப் பாய்நீ
இப்பொன்நீ இம்மணிநீ இம்முத் து(ம்)நீ
இறைவன்நீ ஏறூர்ந்த செல்வன் நீயே.

-திருநாவுக்கரசர் தேவாரம்.

எல்லா உறவுகளமாய் இறைவன் இருக்கிறான். மாமன் , மாமி உறவு மிகவும் முக்கியமானது.

குடும்ப உறவுகள் பற்றி நிறைய பேசி இருந்தார்  உறவுகள் என்ற தன் பதிவில் திரு. ஜி.எம் .பாலசுப்பிரமணியம் சார்.

//இரண்டு பதிவுகள் பெண்களை மையமாக வைத்து எழுதினேன் நகைச் சுவையே முக்கிய நோக்கம். ஆனால் நகைச் சுவையானாலும் பெண்கள் விரும்பவில்லை என்று தெரிகிறது இந்தப் பதிவு உறவுகளை நான் காணும் விதத்தில் முடிந்த அளவு விருப்பு வெறுப்பில்லாமல் யதார்த்த உலகில் காண்பவற்றை வைத்து எழுதி இருக்கிறேன். கருத்துரைகளைப் பகிர்ந்து கொள்வதுடன் இந்தப் பதிவைத் தொடராக்க விரும்புகிறேன். பதிவுலகில் கோலோச்சும் என் மதிப்பிற்குரிய பெண்பதிவர்கள்

திருமதி.கீதா சாம்பசிவம்
திருமதி கோமதி அரசு,
திருமதி இராஜராஜேஸ்வரி
திருமதிகீத மஞ்சரி
திருமதிராஜலக்ஷ்மி பரமசிவம்//