சனி, 24 மார்ச், 2018

அம்பா! நீ இரங்காய் எனில் !

Image may contain: outdoor
சீர்காழி புற்றடி மாரியம்மன் கோவில்

போன மாதம்  சீர்காழிக்கு போய் இருந்தோம். சீர்காழியில் மேலவீதியில் உள்ள புற்றடி மாரியம்மன்  கோவிலுக்குப் போனோம்.  பல வருடங்கள் ஆகி விட்டது அம்மனைப் பார்த்து. மாயவரத்தில் இருக்கும்போது அம்மனைப் பார்த்தது. கோவில் பூசாரி வெகு அழகாய் அலங்காரம் செய்து இருந்தார். போட்டோ எடுக்க அனுமதி இல்லை.  

அம்மன் முன் புறத்தில் சிறிய புற்று இருக்கிறது. அதற்கு அருகில் உற்சவ அம்மன் கொலுவீற்று இருக்கிறார்.

சீர்காழி பெரிய கோவில் அருகில் இருக்கிறது. அங்கு வரும் கூட்டத்தை விட இந்த அம்மனுக்கு கூட்டம்  அதிகம்.  அதிகமாய் வருபவர்கள் கிராமத்து மக்கள்.

                                       
                                அம்மன் திருவீதி உலா போக காளை வாகனம்
                                          
அம்மன் சன்னதிக்கு பின்புறம் தேர் வடிவ 
அழகான படிகளுடன்  சன்னதியில்  ஐயப்பன் 


அம்மனுக்குச்சார்த்தும் புடவைகள் அலங்கார திரைசீலைகளாகாய்  மேல் விதானத்தை அலங்கரிக்கிறது.

அம்மன் சன்னதி சுற்றுச் சுவரில் அழகிய ஓவியங்கள்

பூஜை செய்து பிரசாதம் கொடுத்தார் பூசாரி. சுற்றி வந்து மாரியம்மனை வணங்கிய பின் பிரகாரத்தில் அமர்ந்து அம்மனைத் தியானித்து எழும் போது ஒரு பக்தர், சிறிய வயது தான் அம்மன் கோயில் வாசலில் நின்று கொண்டே அம்மனிடம் பேசிக் கொண்டு இருந்தார் உடனே சிறிது நேரம் அவரை கவனித்தேன். வாய் மட்டும் அசையுது, சத்தம் வெளிவரவில்லை. கண்கள் பேசுது  அவர் வெகு நேரம் கேள்விகள் கேட்டுக் கொண்டு இருந்தார். அவர் கேள்விகளுக்கு பதில் கொடுத்து இருப்பார் அம்மன்.

என் மனதில்  தோன்றிய அவர் கேட்ட கேள்விகள்:-


சிலரை உயர்த்தியும், சிலரை தாழ்த்தியும் வைப்பது நியாயமா அம்மா?

.நீ என்னை இப்படி வைத்து இருப்பது உனக்கு நல்லா இருக்கா?
நான் ஏன் பிறந்தேன்? என் பிறப்புக்கு அர்த்தம் என்ன ?

என்று கண்ணைத் திறந்து நேருக்கு நேர் பார்த்து கேள்வி கேட்கும் பக்தர்., 


கண்ணை கையால் மூடி மனதுக்குள் புலம்பும் பக்தர்.

தாய் இரங்காயெனில்  சேய் உயிர் வாழுமோ! 
 சகல உயிர்களுக்கும் தாய்  , மாரி போல் கருணை மழை பொழிவாள்.
அம்மா அருள் புரிவாய்  என்று  நானும் வேண்டிக் கொண்டேன்.

                                  Image result for சீர்காழி புற்றடி மாரியம்மன் கோயில்
அம்மன் சன்னதியில் படம் எடுக்க அனுமதி இல்லை அதனால் இணையத்தில் இருந்து படம்.
                                     Image result for சீர்காழி புற்றடி மாரியம்மன் கோயில்
                                               தை மாதம் நடக்கும் தேர்திருவிழா

                                      Image result for சீர்காழி புற்றடி மாரியம்மன் கோயில்
                                                    தீமிதி உத்ஸவம் - அம்மன் அலங்காரம்.

மாரி மனது வைத்தால் மழை பொழியும் என்பார்கள். தண்ணீர் கஷ்டம் தீர நல்ல போதுமான மழையைக் கொடுக்க வேண்டும் மாரியம்மன்.

                                                                               வாழ்க வளமுடன்.

செவ்வாய், 20 மார்ச், 2018

சிட்டுக்குருவிகள்

Image may contain: bird and sky
உச்சிக்கிளையில் குருவி

Image may contain: sky, bird and outdoor
(அரிசோனா)  நீலவானமும் குருவியும்
மகன் ஊரில்  பார்த்தக் குருவிகள்
எங்கே பார்வை? 

நீண்ட சிந்தனை
தொலை நோக்கு பார்வை

உலக சிட்டுக்குருவிகள் தினம் மார்ச் 20.
நான் போன இடங்களில் ,எங்கள் குடியிருப்பில்  என்று எடுத்த படங்கள்  பகிர்வு.
மகன் வீட்டு கூறை
பூவில் உள்ள புழு , பூச்சிகள் என் உணவு.  (மகன் வீடு)

பூவுக்குள் பூச்சியை தேடும் குருவி
இந்த பூவின் மொட்டுகளையும் சாப்பிடும் குருவி.
Image may contain: bird and outdoor
கிராண்ட் கேன்யானில் தண்ணீர் தேடித் தவிக்கும் சிட்டுக்குருவிகள்.
குடி தண்ணீர் இருக்கும் குழாய்க்குக் கீழ் சிந்திக்
கிடக்கும் நீர்த் துளி தேடிப் பருகும் குருவிகள்.

அவைகளுக்கு தண்ணீர் தொட்டிகள் அமைத்து இருக்கலாம்.
Image may contain: bird and outdoor



எங்கள் வீட்டில்  எடுத்த காணொளி
குருவிகள் பேச்சை கேட்க விடாமல் பக்கத்து வீட்டு தொலைக்காட்சி பெட்டியிலிருந்து சத்தம் தொல்லை தருகிறது.
ஜன்னலில் உட்கார்ந்து  இரண்டும் பேசிக் கொள்கிறது

குஞ்சுக்கு கொடுக்க சாதம்


மீண்டும் கூடு கட்டி விட்டது இனி கொஞ்ச  நாட்கள் குஞ்சுகளின் சத்தம் மனதை நிறைத்து விடும்.
வாழ்க வளமுடன்.
----------------------------------

ஞாயிறு, 18 மார்ச், 2018

புட்டுத் தோப்பு



"புட்டுத்தோப்பு" பெயர் போட்ட வாயிலைத் தாண்டி உள்ளே வந்தால்  அழகான மண்டபம்.

சென்ற இராமாயணச்சாவடி பதிவில் புட்டுத்தோப்பில்  பார்க்கலாம் என்றேன்.
வந்து விட்டீர்கள் தானே ! புட்டுத்தோப்பு. புட்டுத்தோப்பு மண்டபம் மதுரை ஆரப்பாளையம் பகுதியில் உள்ளது.

அங்கு சென்றவுடன் பசுமைநடையின் கையேடு கொடுக்கப்பட்டது அனைவருக்கும். முன்பு பார்த்த இராமாயணசாவடி பற்றியும், புட்டுத்தோப்பு பற்றியும் குறிப்புகள் அடங்கிய கையேடு.


படிக்கமுடிகிறது தானே படித்துப் பாருங்கள் இந்த மண்டபத்தின் வரலாறை


இப்போது புதிதாக  பசுமை நடை அலுவலகத்தில் வாரம் தோறும்  புதன்கிழமை புத்தகங்கள் சார்ந்த உரையாடல் நிகழ்கிறது என்று சொன்னார்கள்.

மண்டபத்தின் நடுவில் பேசுவதைக் கேட்க அமர்ந்து விட்டோம். நடுவில் பிள்ளையார் கோவில்

முத்துக்கிருஷ்ணன் அவர்கள்  தலமைஉரையாற்றி  பேச்சாளர்களைப் பேச அழைத்தார்.
பக்கத்து விழாநடக்கும் வீட்டில் ஒலி பெருக்கியைச் சற்று நேரம் பேச்சாளர்கள் பேசி நிறைவு செய்யும் வரை  நிறுத்தி வைக்க சம்மதம் பெற்று வந்தார்.


இந்த நிகழ்ச்சிக்கு உறுதுணையாக இருந்த திரு. வரதராஜன் அவர்களுக்குப் பசுமைநடை இயக்க வெளியீடு புத்தகம்  எழுத்தாளர் எஸ்.ரா அவர்களால் பரிசளிக்கப்பட்டது.

                           திரு. சுந்தர் காளி அவர்கள் கட்டிடக்கலையைப் பற்றிப் பேசினார்

ஆறு நன்றாக ஓடிக் கொண்டு இருந்த காலத்தில் நடைபெற்றது புட்டுக்கு மண் சுமந்த கதை. அது எல்லோருக்கும் தெரியும்.

 "வைகை  ஆற்றின் பெருமை சிலப்பதிகாரத்தில், திருவிளையாடல் புராணத்தில், பரிபாடலிலும் சொல்லப்பட்டதைப்படித்தபின் இப்போது இப்படி வறண்டு கிடப்பதைப்பார்த்தால் மனது சங்கடப் படுகிறது" என்றார்.


"முதல் முதலில் வந்த  தலபுராணம் பெரும்பற்றப்புலியூர் நம்பி எழுதிய திருஆலவாய் உடையார் திருவிளையாடல் புராணம் .

 அடுத்து பரஞ்சோதி முனிவர் எழுதிய திருவிளையாடல் புராணம்.

நாம் நிற்கும் கட்டிடத்தைத் தள்ளி நின்று பாருங்கள்  இஸ்லாமிய
கட்டிடக் கலையும் நம் திராவிடக் கலையும் சேர்ந்தது என்றும் , இஸ்லாமிய கலை என்று  திராவிடக் கலை என்று பிரித்துப் பார்ப்பதை விட  அப்போது அந்தக் காலகட்டத்தில் எது உயிர்ப்போடு இருந்ததோ அந்த கட்டிடக் கலையை உள் வாங்கிக் கொண்டு அது படி கட்டி இருக்கிறார்கள் என்று தான் சொல்லவேண்டும்" என்றார்.

சேர ,சோழ  பாண்டியர்களும் அவ்வாறே கலை அம்சமுள்ள கட்டிடங்கள், கோயில்களை க்கட்டினார்கள் என்றார்.சோழ, பல்லவர்கள் சாளுக்கிய தேசத்திலிருந்து எல்லாம் சிற்பிகளை அழைத்து  கலையம்சம் உள்ள கோயில்களைக் கட்டியதாகச்  சொன்னார்.
சித்திரைத் திருவிழாவில் திருவிளையாடல் புராணக்கதைகள் அந்த அந்த இடத்தில் நடித்துக் காட்டப்படும் .

இந்த புட்டுத் தோப்பில்   புட்டுக்கு மண் சுமந்த கதை நடித்துக் காட்டப்படும். இங்கு முன் கோயிலைச்சுற்றி புட்டு விற்பார்கள்.

மண் வெட்டி  ஆற்று வெள்ளத்தைத் தடுக்கும் காட்சிக்குக்   குளம் போல் வெட்டி அதற்கு  வேலி போடுபவர்கள் இஸ்லாமியர்கள், பரம்பரை பரம்பரையாகச் செய்து வருகிறார்கள். இன்றும் மத ஓற்றுமைக்குச் சான்று என்றார்.



இவர் பெயர் உதயகுமார். இவர் புட்டுக்கு மண் சுமந்த கதை, மதுரையில் வெள்ளம் வரக் காரணம் எல்லாம்  சொன்னார். இவர் சிறு வயதாக இருக்கும்போது அவர் ஐயா சொன்ன கதையை அழகாய்ச் சொன்னார். கதை சொல்லிகள் குறைந்து விட்டார்கள்.
கதை சொல்லிகளை இழந்து வருகிறோம் என்று சொன்னார்.

மாடு கட்டிப் போர் அடித்து மாளாது என்று  யானை கட்டிப் போர் அடித்த காரணத்தை சொன்னார். அப்படி இருந்த நாட்டில் மழை இல்லாமல் செல்வ செழிப்பாய் இருந்த ஊர்  வரண்டு போனதால் வருணபகவானிடம்  சேர சோழ, பாண்டிய மன்னர்கள் போகிறார்கள்,அவரை வணங்கிப் பணிவுடன் கேட்கிறார்கள், சேர, சோழராஜாக்கள், ஆனால் பாண்டியர் பணிவு இல்லாமல் அகந்தையால் கேட்கவில்லை. அதனால் வருணபகவான் மேகங்களைச்சேர சோழ நாட்டுக்கு அனுப்பி விட்டதாகவும்   அப்படிப் போகும்  குட்டி மேகம் மட்டும் மனம் இறங்கி மழை பொழிந்தது என்றும்
இறைவன் பாடம் கற்பிக்க வைகையில் வெள்ளப் பெருக்கை உண்டாக்கி விட்டார் என்றும் கூறினார்.

திருவிளையாடல் புராணத்தில் உள்ள கதையை  அவர் ஐயா  மாற்றி,கதையில் கடைசியில்  பணிவு வேண்டும் பணிவு இல்லாமல் அகந்தையால்  நாட்டில் மழை இல்லாமல் போனதாகச் சொன்னார்.

அரசனின் ஆணை வீட்டுக்கு ஒருவர் வெள்ளத்தைத் தடுக்க மண் கொட்ட வேண்டும். புட்டு விற்கும் வந்திப் பாட்டிக்கு  முடியாது. மண் அள்ளிப் போட முடியாத காரணத்தால்
 இறைவன் வந்து புட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட கதையை அழகாய்ச் சொன்னார்.


அடுத்து எழுத்தாளர் எஸ் . ராமகிருஷ்ணன் அவர்கள் பேசினார்கள்.

"மதுரையின் சிறப்பை ஆயிரம் பகுதிகளாக எழுதலாம்.

'1001 அரேபிய இரவுகள்' கதையை எத்தனை பேர் படித்திருப்பீர்கள் என்று தெரியவில்லை, பாக்தாத் என்ற ஊரை மையமாகக் கொண்டு நடக்கும் கதை.
 கதை நாயகன் அலிபாபா.  உலகத்தில் தொன்மையான புத்தகம் -அதிகமாய் வாசிக்கப்பட்ட புத்தகம்.
அதில் உள்ள கதைதான் 'அலிபாபாவும் 40 திருடர்களும்'  எம்.ஜி.ஆர் நடித்தபடம். அப்போது 1001 அரேபிய இரவு கதை என்பது எல்லாம் தெரியாது.


 மதுரை பக்கத்தில் மல்லாகிணறு என்ற  சிறு கிராமத்தில் வாழ்ந்த நான் மல்லிகைப்பூவை மதுரைக்கு விற்கும் நண்பர்களுடன் 10 வயதில்
 மாட்டு வண்டியில் பயணம் செய்து  வந்து மாட்டி வண்டியை வண்டிபேட்டையில் விட்டு விட்டு  மதுரை ஊர் முழுவதும் போய் இருக்கிறேன், இங்குதான் படித்தேன். இந்த நகரம் என் வாழ்வில்மிக முக்கியமான அங்கம். தமிழ் இலக்கியத்தில் அதிகம் பேசபட்ட ஊர்.

இந்த நகரத்தை சேர, சோழர்கள் , பாண்டியர்கள் ஆண்டு இருந்தாலும்  பாண்டியர்கள் மட்டும தான் தமிழ்ச் சங்கம் அமைத்துத் தமிழை வளர்த்தார்கள்.கவிஞர்களை ஆதரித்து அருகில் வைத்துக் கொண்டார்கள்.

தமிழ்ப் படைப்பிலக்கியங்களைப்  படைக்கப் பெரும் உதவி செய்தார்கள்.. தென் மாவட்டம்  தமிழ் இலக்கியத்திற்குக் கொடுத்த கொடை  என்று சொல்லலாம்.  பாரதி உட்படப் பல்வேறு இலக்கியவாதிகள் தென்பகுதிதான்.

 இறைவனே தான் கவிஞன் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். கடவுளே தன்னை அங்கீரிக்க வந்த  ஊர்.

பாக்தாத் ஆயிரம் இரவுகளிய எழுதியது போல மதுரையின் ஆயிரம் பகுதிகளை எழுத விரும்புகிறேன். அவ்வளவு சிறப்பு வாய்ந்தது. இங்கு உள்ள மக்களின் மனிதநேயம், அவர்கள்பேசும் தமிழின் இனிமை,மதுரை மக்களின் வரவேற்பு, உபசரிப்பு, மதுரையின் சிறப்பு. அரசியல், கலை, சினிமா, வரலாறு படைத்தது மதுரை என்றார்.
தற்போது அரசியல் தலைவர் யார் என்று தீர்மானிக்கும் ஊராகவும் இருக்கிறது

இது தூங்காநகரம். ஒரு பாதி தூங்கினாலும் இன்னொரு பகுதி விழித்துக் கொண்டு இருக்கும். பகலும், இரவும் இயங்கிக் கொண்டே இருக்கிறது இந்த நகரம்.

இப்படித் தொன்மை வாய்ந்த ஊர் தன் பெருமையைத் தூக்கிப் பிடிக்காமல் தன் ஊரின் பெருமையைச்  சிறப்பு வாய்ந்த வரலாறை தெரிந்து கொள்ளாமல் இருப்பது வருத்தம் தருகிறது"என்றார்.

வெளிநாட்டவர், வெளியூரை சேர்ந்தவர்களை அழைத்து வந்து

"இந்த இராமாயணச்சாவடியைக் காட்டினால் சரி , இங்குள்ளவர்களையே அழைத்து காட்டுவது என்பது நகைப்புக்குரியது.

வெளி நாட்டவருக்குத் தெரியவில்லை என்றால் பரவாயில்லை, நம் ஊரிலுள்ளவர்களுக்குத் தெரியவில்லை என்று இருக்கக் கூடாது. நகரத்தின் தொன்மை தெரிந்து கொள்வது  நம் கடமை என்றார். தொலைக்காட்சியில் இந்த இராமாயண சாவடி பார்த்து விட்டால் இங்கு வரமாட்டார்கள். தொலைக்காட்சியை விட்டு வெளியே வாருங்கள்"என்றார்.
 இந்த நகரத்தை தெரிந்து கொள்ள வேண்டும். நம் ஊரைப் பற்றி 1000 தகவல்கள் தெரிய வேண்டும்.

"மதுரையைப்பற்றித் தவறான முறையில் சித்தரிக்கப்படுகிறது சினிமாவில்.

பரிசோதனை மய்யமாய் இருந்து இருக்கிறது. உதாரணம்  சினிமாவில் படம் எடுத்து விட்டால் படம் ஓடுமா ஓடாதா என்பதை  மதுரையில் ஓடுவதை வைத்துக் கணிப்பார்கள்.
மதுரையில் ஓடி விட்டால் எல்லா இடங்களிலும் ஒடும் என்ற நம்பிக்கை. இப்போதும் அப்படித்தான்.

தனி மனிதனின் இந்த ஊர் மக்கள் வைத்து இருக்கும் அன்பு அதை அவர்கள் வெளிகாட்டும் மாண்பு எல்லாம் வியக்க வைக்கும்.

நடிகர்களுக்கு மன்றங்கள் இங்குதான் முதன் முதலில் ஆரம்பிக்கபட்டது.
நான் படிக்கும் காலத்தில் புரூஸ்லிக்கு கூட இங்கு மன்றம் இருந்தது.
ஜாக்கி சானுக்கு, பப்பிலகரிக்கு எல்லாம் மன்றம் இருந்தது."


"அந்தக் காலத்தில் ஆறில் பூவாய் ஓடுமாம்.  ஆற்றில் படகில் போகும் மக்கள், கரையில் நிற்கும் மக்கள், ஆண், பெண்களின் உடைகள், அவர்களின் உற்சாகம், கொண்டாட்டத்தின் ஊராகப்  பொலிவுடன் காட்சி அளித்தது என்று மதுரை காஞ்சி கூறுகிறது"  என்றார்.

"இந்த நகரத்தின் இரவு, பகலை எழுத வேண்டும்  . டீக்கடையில் பகலில் குடிக்கும் டீக்கும், இரவு குடிக்கும் டீக்கும் வித்தியாசம் இருக்கும்" என்றார்.

"இந்த நகரம் இந்து, இஸ்லாமியர், கிறித்தவர்கள் நிறைந்த பண்பாட்டு மையமாக இருக்கிறது.

கிறித்துவ தேவாலயங்கள், கிறித்துவ பள்ளிகள் ,மிஷனரி ஆஸ்பத்திரிகள் எல்லாம்  சிறப்பு வாய்ந்தவை. அதையும் போய்ப் பாருங்கள் . இடைக்காட்டூர் தேவாலயம் நன்றாக இருக்கும் என்றார்.

நகரத்தின் தொன்மையைத் தெரிந்து கொள்ளுங்கள் பதிவு செய்யுங்கள்

வீதிகளை நினைவு கொள்ளுங்கள் ' தாத்தா பேரனைப் பார்த்து நீயாவது என்னை நினைவு வைத்துக் கொள்' என்று கேட்பது போல் இந்த நகரம் நான் எப்படி இருந்தேன்  முன்பு சீரும், சிறப்புமாய்  என்று கேட்பது போல்  தோன்றுகிறது.

ஒவ்வொரு தெருவின்  பெயர்க்கும்  பெயர் காரணம் உண்டு.

ஒரு மனிதன் இறக்கும் போது அவன் நினைவுகளும் அவனுடன் இறந்து போவது எவ்வளவு கொடுமை ?  இந்த ஊர் பற்றிய நினைவுகளை உங்கள் குழந்தைகளிடம், உங்கள் நண்பர்களிடம் பதிவு செய்யுங்கள்.

என் நினைவுகள் என் வருத்தங்க்கள், என் மகிழ்ச்சிகளை உங்களுக்கு சொன்னால் பகிர்ந்து கொண்டால்தான் தெரியும் என் நினைவுகள் அப்படியே கடத்துவது என்பது முடியாது.

இந்த ஊரில் பெற்ற அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள் என்றார்.

இந்த ஊரின் தொன்மையை இப்போது உள்ள நிலையை நாவலாக எழுத ஆசை. கண்டிப்பாய் செய்வேன் என்றார்.

மிக நன்றாக பேசினார்.  என்னால் முடிந்தவரை அவர் பேச்சை பதிவு செய்து இருக்கிறேன்.

 நான் குறிப்புகள் எடுத்து இருந்தேன் என்றாலும் திரு. சுந்தர்காளி அவர்கள் பேசிய பேச்சையும்,  எழுத்தாளர் திரு . ராமகிருஷ்ணன் அவர்கள் பேசிய உரையை எம்,பி.3 ஒலிவடிவாய் அன்பர் ரகுநாத் அவர்கள் கொடுத்தார்  . அதில் கேட்டு கொஞ்சம் குறிப்பு எடுத்துக் கொண்டேன். ரகுநாத் அவர்களுக்கு நன்றி.

பேச்சு முடிந்து உணவு இடைவேளையில் ராமகிருஷ்ணர் அவர்களிடம் பேசினேன் மகன் வீட்டுக்குப் போய் இருந்தபோது அவரின் சிறுகதைத் தொகுப்பை "100 சிறந்த சிறுகதைகள்" இரண்டு பாகம் (பழைய எழுத்தாளர்கள் 200 பேர் கதைகள்)  படித்ததைச் சொன்னேன். விகடனில் தேசாந்திரி என்று அவர் எழுதியதை படித்ததையும் சொன்னேன். மகிழ்வுடன் கேட்டுக்  கொண்டார்.

செவிக்கு உணவு அளித்தபின் வயிற்றுக்கும் உணவு அளித்தார்கள். வழக்கமாய் உள்ளூர் என்றால் உணவு கிடையாது, ஆனால் காரியாபட்டியிலிருந்து 'இன்பம்' உணவகத்தின் சார்பாகப் பழையகஞ்சி 150 பேருக்குத் தயார் செய்யப்பட்டு அதன் பாரம்பரியம் மாறாமல் தரப்பட்டது.

முகநூலில் அன்பர் விஜயகுமார் அவர்கள் பகிர்ந்தவை கீழே:-

//காரியாபட்டியிலிருந்து இன்பம் உணவகத்தின் சார்பாக பழையகஞ்சி 150 பேருக்கு தயார் செய்யப்பட்டு அதன் பாராம்பரியம் மாறாமல் தரப்பட்டது,
பசுமைநடையை நடத்திவரும் தோழர் முத்துகிருஷ்ணனுக்கும் எனக்கும் சிறு ஐயம் இருந்தாலும் அவர் எங்களுக்கு அனுமதி அளித்தது பெருமகிழ்ச்சி,,,,
நேற்று இரவே பழைய பொன்னி அரிசி நம்மஊர்ல அவித்ததை வாங்கிப் பக்குவமா ஆக்கிப் பதமா தண்ணிஊத்தி தொட்டுக்கிற கத்தரிக்காய்,முருங்கைக்காய் புளிக்கூட்டு.மோர் வத்தல்.மிதுக்கவத்தல்.சுண்ட வத்தல் தயார் செய்து அதிகாலை எழுந்து பழையகஞ்சி காரியாபட்டியிலிருந்து மதுரைக்கு பறந்தது,,,
நிகழ்ச்சியின் முடிவில் சஸ்பென்ஸாக இன்று வித்தியாசமாக பழைய கஞ்சி வழங்கப்படும் என்று அறிவித்தவுடன் கைதட்டல்,,,அகைவருக்கும் பாக்குமட்டை தட்டில் கஞ்சியும்.தொன்னையில் கத்தரிக்காய் கூட்டும்,,ஓரத்தில்வத்தலும் - வைகைக்கரையில் புட்டுத்தோப்பில்,,,
ஏறக்குறைய 150 பேர் கலாச்சாரம் காக்க மதுரையில் ஒரே இடத்தில் பழையகஞ்சி குடித்த சரித்திர சாதனை நிகழ்வு,,குறிப்பாக எஸ்,ரா,,கஞ்சி குடித்துவிட்டு பாராட்டியது மகிழ்ச்சி அளித்தது,அனைவரும் வந்து வந்து பாராட்டியது,,ஒரு நண்பர் இன்று தான் வாழ்க்கையிலேயே பழைய கஞ்சி குடிக்கிறேன் என்றதும்,,,,,,அருமையான
நிகழ்ச்சியாக அமைந்தது,,
கடைசியில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களுக்கு கஞ்சியும் காயும் காலியாகிவிட்டது,,,,
அனைவர் முகத்திலும் ஒரு திருப்தி,,
,,,,,எங்களுக்கு இந்த வாய்ப்பினையும் சந்தோஷத்தையும் அளித்த தோழர் முத்துகிருஷ்ணன் அவர்களுக்கு எங்களது நன்றிகள்,,
கலாச்சாரம் காக்க கைகோர்ப்போம்,,
நன்றியுடன்
பசித்தோருக்கு உணவளிக்கும் இன்பம் உணவகம்
காரியாபட்டி
9443467379 //

போன பதிவில் உணவு கொடுக்கப்பட்டது நாம் மறந்து விட்ட பழைய உணவு என்று குறிப்பிட்டு இருந்தேன்.

  //புட்டுத் தோப்பில் 'புட்டு ' என்று நினைப்பீர்கள் ஆனல் அது இல்லை , வேறு பழைய உணவு நாம் மறந்த உணவு கொடுக்கப்பட்டது .
அடுத்த பதிவில் பார்ப்போம்.//

நம் அதிரா :- //புட்டுத்தோப்பில் பழையசாதம்:).. வரகுக்கஞ்சி:).. குழைசாதம்:)..... சும்மா எதுக்கும் சொல்லி வைப்போம்:))//

என்று முதலில் பழைய சாதம் என்று சரியான பதிலைச் சொல்லிவிட்டார். அவருக்குப் பாராட்டுக்கள்.

நம் ஏஞ்சல் :- //அநேகமா கைக்குத்தரிசி கவுனி அரிசி நீர் மோர் சாதம் கம்பங்களி ராகி இவற்றில் உணவு அளித்திருப்பாங்க//

நானும் என் கணவரும் ஞாபிறு விரதம் என்பதால் இந்த  கஞ்சி குடிக்கும் வாய்ப்பை இழந்தோம்.

Image may contain: one or more people and food

மண்டபத்தைச் சுற்றி இருந்த கஷ்டபடும் மக்களும் மன மகிழ்ச்சியுடன் கஞ்சியை வாங்கி வாழ்த்திச் சென்றார்கள்.
வேப்பமரமும் நாகரும்.

புட்டுத்தோப்பில் உள்ள இந்த  வேப்பமரத்தில்  மாடு போன்ற தோற்றம் ஒரு பகுதியில் இருந்தது.  மாடு முகம் கண் எல்லாம் இருந்ததால் கொம்புக்கு மேல் இரண்டு கிளைகளை வெட்டி இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

Image may contain: tree and outdoor

Image may contain: 1 person, standing and outdoor
நேரு ஆலாலசுந்தரர் கோவிலில் கொடுத்த அறுகம்புல்லை மாட்டுக்குக் கொடுப்பது போல் கணவரைக் கொடுக்கச் சொல்லிப் படம் எடுத்தேன்.
இந்த இடத்தில் தான் சிவன் ஆற்றின் கரைக்கு மண் வெட்டிப் போடும் லீலை நடித்துக் காட்டப்படும்.

நடு மண்டபத்தில் நடு மையத்தில்
 பிள்ளையாருக்குச் சின்ன கோவில் உள்ளே இருக்கிறது.
நடு மண்டபத்தில் உள்ள தூணில் உள்ள சிற்பங்கள்.

அழகர் திருவிழாவில் நிறைய பேர் இந்த மாதிரி உடை அணிந்து கொண்டை வைத்து விழாவில் வருவார்கள்.

மதுரைக் காஞ்சியில் சொன்ன வைகை ஆறு இல்லை இப்போது.  ஆனால் அதில் சொன்னது போல் பூக்கள் மிதந்து கொண்டு இருந்தது, கரைகளில் பூத்துக் குலுங்கி கொட்டிய பூக்கள் இல்லை, யாரோ மனிதர் இறைவனிடம் போன போது அவர் இறுதி அஞ்சலி பூக்கள் .  காசு போடுவார்கள் போல இருவர் ஆற்றுக்குள் காசை தேடிக் கொண்டு இருக்கிறார்கள். (புதிதாகக் கட்டப்பட்ட பாலம்)

கொஞ்சம் தண்ணீரில் துணியை நல்ல வெண்மையாக துவைத்துக் கொண்டு இருக்கும் சலவைத் தொழிலாளி


மேல்தளம் பார்க்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை இந்த முறை.
Image may contain: 7 people, people standing
நிறைவுப் பகுதியில் எல்லோரும் மண்டபப் படிகளில் படம் எடுத்துக் கொண்டோம்.

கார்த்திகேயன் பிச்சுமணி அவர்களுக்கு நன்றி ( இந்த படங்கள் உதவி)
Image may contain: one or more people and outdoor
புட்டுதோப்பு முன்புறம் உள்ள  புட்டு சொக்கநாதர் கோவிலைத் தரிசனம் செய்து  பயணத்தை நிறைவு செய்தோம். அனைவரிடமும் விடைபெற்று வீடு வந்து சேர்ந்தோம்.


                                                                   வாழ்க வளமுடன்.