தேவகோட்டை கில்லர்ஜி அவர்கள் கனவில் தேசபிதா வந்து இருக்கிறார் . வந்து 10 கேள்விகளை கேட்டு இருக்கிறார். அவர் அதற்கு அழகான பதில்களை சொல்லி விட்டு மேலும் ஒரு பத்து பேர்களிடம் அதே கேள்விகளை கேட்டு பதில் சொல்ல சொல்லி இருக்கிறார். அப்படி அவர் அழைத்தவர்களில் ஒருவர் தஞ்சையம்பதி என்ற வலைத்தளம் வைத்து ஆன்மீக பதிவுகளை அளித்து வரும் திரு .துரைசெல்வாராஜூ அவர்கள். என்னையும் இந்த தொடர் பதிவுக்கு அழைத்து இருந்தார்கள். அவர் அழைப்பை ஏற்று கேள்விகளுக்கு எனக்கு தெரிந்தவரை பதில் அளிக்கிறேன்.
இப்படி அழைப்பார்கள் என்று தெரிந்தோ என்னவோ, நான் ஒரு முறை காந்திஅடிகளோடு சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டேன் போலும்!அது தான் இந்த படம்.(இது அமெரிக்காவில் வாக்ஸ் மியூசியத்தில் எடுத்தபடம்)
1. நீ மறுபிறவியில் எங்கு பிறக்க வேண்டும் என்று நினைக்கிறாய்?
வணக்கம் காந்திஜி , வாழ்க வளமுடன்.
நான் இருக்கும் வீட்டை சுற்றி கணபதி இருக்கிறார். அவரை வணங்கினால் துன்பம், கர்மவினைகள், மீண்டும், மீண்டும் பிறந்து துன்புறுவது எல்லாம் கிடையாது என்று விவேக சிந்தாமணி நூல் கூறுகிறது.அதனால் அவரை தினம் வணங்குவதால் காந்திஜி! எனக்கு மறுபிறவி கிடையாது.
அல்லல்போம் வல்வினைபோ மன்னைவயிற்றிற் பிறந்த
தொல்லைபோம் போகாத் துயரம்போம்- நல்ல
குணமதிக மாமருணைக் கோபுரத்துச் செல்வக்
கணபதியைக் கைதொழுதக் கால்.
2.ஒருவேளை நீ இந்தியாவின் ஆட்சியாளனாக வந்து விட்டால் ? சிறப்பாக ஆட்சி செய்யும் திட்டம் உன்னிடம் இருக்கிறதா?
முதலில் கொடுத்துப் பாருங்கள், என்ன திட்டம் என்பதைப் பிறகு சொல்கிறேன்.
3.இதற்கு வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் எதிர்ப்பு தெரிவித்தால் ? என்ன செய்வாய்?
நம் நாட்டுக்கு நலம்பயக்கும் அந்த திட்டத்தை அவர்கள் எதற்கு எதிர்க்கிறார்கள். நல்ல திட்டத்தால் அவர்களே இங்கு வந்து விடுவார்கள்.
4.முதியோர்களுக்கென்று ஏதாவது திட்டம் வைத்திருக்கின்றாயா?
முதியோர்கள் எல்லாம் ஏதாவது, பேஸ்புக் மற்றும் வலைத்தளத்தை ஆரம்பித்து அதில் ஏதாவது எழுதிக் கொண்டு படித்துக் கொண்டு இருந்தால் நல்ல ஆரோக்கியமாக இருப்பார்கள். அவர்களில் ஏழை முதியோர்கள்,
ஆதரவற்ற முதியோர்கள் தனியாக இருக்க கூடாது என்று அரசாங்கமே அவர்களை கவனிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும். அவர்கள் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருக்க உணவு, உடை, மருத்துவ வசதி, அன்பாக பேசி உரையாட ஆட்கள் என்று அளித்து மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளும். அவர்களின் திறமைகளை அறிந்து நாட்டின் நன்மைக்கு அவர்களது ஆலோசனைகளை பயன்படுத்திக் கொள்ளும்.
5.அரசியல்வாதிகளுக்கென்று புதிய திட்டம் ஏதாவது?
அரசியல்வாதிகள் எல்லாம் மனிதநேயப்பண்பு, சேவை மனப்பான்மை எளிமை, இனிமை கொண்டிருக்கவேண்டும்.அவர்கள் மட்டுமே தேர்தலில் ஈடுபடப் புதிய திட்டம் போடப்படும்.
6.மதிப்பெண்கள் தவறென்று மேல்நீதிமன்றங்களுக்கு போனால்?
அவர் அவர் தகுதி அவரவர்களுக்கு தெரியும். சரியான மதிப்பெண்கள் வரவில்லை என்றால் மேல் நீதி மன்றம் போவதற்கு உரிமை தேவை.
7.விஞ்ஞானிகளுக்கென்று ஏதும் இருக்கிறதா?
மெய்ஞ்ஞானமும் விஞ்ஞானமும் இணைந்த வாழ்க்கை தான் வாழ்கிறோம், அதனால் விஞ்ஞானிகளிடம் வாழ்வின் முன்னேற்றத்திற்கும், வாழ்வின் சிறப்புக்கும், ஏற்றவற்றைக் கண்டுபிடிக்க வேண்டும், விளைநிலங்கள் முழுவதும் வீட்டுமனை ஆகி வருகிறது. அதனால் வருங்காலத்தில் விளைநிலங்கள் இல்லாமல் உணவு பயிர்களை விளைவிக்கும் வித்தை அல்லது உணவு இல்லாமல் உடலைப்பேணி வளர்க்கும் விஞ்ஞானத்தை உடனே கண்டுபிடிக்கும்படி கேட்டுக் கொள்வேன். கண்டுபிடிப்புக்கு வேண்டிய வசதிகளை விஞ்ஞானிகளுக்கு செய்து கொடுக்கும், அரசாங்கம்.
8. இதை உனக்குப் பிறகு வரும் ஆட்சியாளர்கள் செய்வார்களா?,
நலத்திட்டங்களை முந்திய அரசு செய்தவற்றைப், பிறகு வரும் எந்த அரசும் மறுக்க முடியாது . மறுத்தால் தோல்வி நிச்சயம். வேண்டும் என்றால் விஞ்ஞானிகளை இன்னும் அதிகப்படியாக இரண்டு புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்க உத்தரவு இடும்.
9.மற்ற நாடுகளில் இல்லாத ஏதாவது புதுமையாக?
எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும். இல்லாமை இல்லாத நிலை வேண்டும். பணக்கார நாடாக இருந்தாலும் வீடு இழந்தோர் இருக்கத்தான் செய்கிறார்கள்.
ஆட்சிக்கு வரும் அனைவரும், சொல்லி ஓட்டு கேட்பது ஏழ்மையை ஒழிப்போம், கல்லாதவர்களே இருக்க மாட்டார்கள் என்பது தான்.
அதை நடைமுறைக்கு கொண்டு வந்தாலே புதுமை செய்தமாதிரிதான்.
மற்ற நாடுகள் ஏற்கனவே நம் மக்களின் அறிவுத் திறமையைக் கண்டு வியக்கிறது, இல்லாமை, கல்லாமை இரண்டையும் ஒழித்த புதுமையைச் செய்து விட்டால் எல்லா நாடுகளும் நம் புதுமை கண்டு வியக்கும்.
10.எல்லாமே சரியாகச் சொல்வது போல் இருக்கு, ஆனால் நீ மானிடனாக பிறந்து நிறைய பாவங்களை செய்து விட்டாய் உனக்கு மீண்டும் மானிடப் பிறவி கொடுக்க முடியாது ஆகவே வேறு என்ன பிறவி வேண்டுமென
இறைவன் கேட்டால்?
காந்திஜி ! முதல்கேள்வியிலேயே சொல்லிவிட்டேன் , எனக்கு மறுபிறவி கிடையாது என்று . அப்படியும் இறைவன் கொடுத்தால் அவன் விருப்பம். என்னை எப்படி படைக்கவேண்டுமோ அப்படிப் படைத்துக் கொள்ளட்டும்.
இந்த தொடர் பதிவை அனைவரும் எழுதி இருப்பார்கள் நான் காலதாமதமாய் எழுதுவதால் எழுத அன்பர்கள் இருந்தால், விருப்பம் இருந்தால் எழுதலாம்.
---------------
வாழ்க வளமுடன்.