திங்கள், 27 ஜனவரி, 2014

வைகுண்ட ஏகாதசியும் ஆலயதரிசனமும் - பகுதி - 2

வைகுண்ட ஏகாதசியும் ஆலயதரிசனமும் என்று ஜனவரி 19ஆம் தேதி நான் இட்ட பதிவின் தொடர்ச்சி.

வைகுண்ட ஏகாதசி அன்று நாங்கள் அடுத்ததாய்ச் சென்ற தலம் திருத்தெற்றியம்பலம் (பள்ளிகொண்ட பெருமாள் திருக்கோயில்)






                             
                                திருத்தெற்றியம்பலம் (திருநாங்கூர்)

மூலவர் செங்கண்மால் ரங்கநாதன், ஸ்ரீலக்ஷ்மீரங்கர் என்றதிருநாமங்கள், 
4 புஜங்கள், புஜங்கசயனத் திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்.
தாயார்: செங்கமலவல்லி
தீர்த்தம்: சீரிய புஷ்கரிணி
விமானம்: வேத விமானம்
ப்ரத்யக்ஷ்ம்: நாச்சியார், அநந்தாழ்வார்.
மங்களாசாஸனம்: திருமங்கையாழ்வார் _ 10பாசுரங்கள்.

ஸ்ரீரங்கத்தில் உள்ளது போல் இங்கு பெருமாள் பள்ளிகொண்டு உள்ளார். பட்டர்,பெருமாளுக்கு  அழகாய் அலங்காரம் செய்து இருந்தார் . உற்சவர் பூப் பந்தல் அலங்காரத்தில் இருந்தார்.

                                                                 *     *     *

                                         
                                           திரு அரிமேய விண்ணகரம்
இதனை குடமாடும் கூத்தர் கோயில் என்றே அழைக்கின்றனர்.
மூலவர்                    : குடமாடும் கூத்தர்(தைலக்காப்பு திருமேனி)
                                    வீற்றிருக்கும் திருக்கோலம்(கிழக்கே திருமுக மண்டலம்)
உதஸவர்                 : சதுர்புஜகோபாலன்
தாயார்                      : அம்ருதவல்லி
தீர்த்தம்                     :கோடி தீர்த்தம், அம்ருத தீர்த்தம்
விமானம்                 : உச்சச்ருங்க விமானம்
 ப்ரத்யக்ஷம்             : உதங்க முனிவர்
மங்களாசாஸனம் : திருமங்கை ஆழ்வார்:  10 பாசுரம்.

நல்ல கம்பீரமான தோற்றத்தில் இடது காலை  குடத்தின் மேல் வைத்த தோற்றத்தில் மிக அழகாய் இருக்கிறார். பட்டர் கீழே பாத தரிசனம் செய்து வைக்கிறார். குடத்திற்கும் பாதங்களுக்கும் வெள்ளிக் கவசம் சார்த்தப்பட்டு இருக்கிறது. கோவில் சமீபத்தில் கும்பாபிஷேகம் ஆனதால் பளிச் என்று அழகாய் இருக்கிறது.

தாயார்  சன்னதி
உச்சச்ருங்க விமானம்

அமிர்தகடவல்லி





ஸ்வாமி விமானம்

***    ****
அடுத்தது - திருமணிக்கூடம்:-

திருமணிக்கூட வாசல்
திருமணிக்கூடம்
மூலவர்                      : வரதராஜப்பெருமாள்  (மணிக்கூடநாயகன்)
                                       நின்ற திருக்கோலம் , கிழக்கே திருமுக மண்டலம்.
தாயார்                        : திருமாமகள் நாச்சியார்(ஸ்ரீதேவி), பூதேவி 
                                       தாயாருக்குத் தனிச்சந்நதி கிடையாது.
தீர்த்தம்                       :சந்திர புஷ்கரணி.
விமானம்                   : கனக விமானம்
 ப்ரத்யக்ஷ்ம்               : பெரிய திருவடி, சந்திரன்.
மங்களாசாஸனம்    :  திருமங்கை ஆழ்வார் : 10 பாசுரங்கள் 

                                                          ***     ***

திருச்செம்பொன்செய் கோயில்

மூலவர்                    :பேரருளாளன் , நின்ற திருக்கோலம், 
                                    கிழக்கே திருமுக மண்டலம் 
உத்ஸவர்                 : ஹேமரங்கர் , செம்பொன்னரங்கர்
தாயார்                      : அல்லிமாமலர் நாச்சியார்.
தீர்த்தம்                     : நித்யபுஷ்கரணி, கனகதீர்த்தம்
விமானம்                 : கனக விமானம்
ப்ரத்யக்ஷம்              : ருத்ரன்

மங்களாசாஸனம் : திருமங்கை ஆழ்வார் : 10 பாசுரங்கள்.



                      வைகுண்ட ஏகாதசிக்கு நான் போட்ட கோலம்.

இப்படி நாங்கள் தாமரை கண்ணனின் தாமரைப் பாதங்களை தரிசனம் செய்து வந்தோம்.
                                         
திருமணிமாடக் கோயிலில் வரும் ஜனவரி 31ஆம் தேதி கருடசேவை நடைபெறவிருக்கிறது .தை அமாவாசைக்கு மறுநாள்  11 திவ்யதேசத்துப் பெருமாள்களும் கருடவாஹனங்களில் எழுந்தருளுவார்கள். திருநகரியிலிருந்து திருமங்கையாழ்வார் தன் மனைவி குமுதவல்லியுடன் வந்து மங்களாசாஸனம் செய்துஅருளுவார்.

பார்க்க வாய்ப்பு இருப்பவர்கள் பார்க்கத்தான் மறுபடியும் இந்த தகவல்.

                                               வாழ்க வளமுடன்!

                                            _______________________

புதன், 22 ஜனவரி, 2014

திருவையாறு ஸ்ரீ தியாகப்பிரும்ம ஆராதனைவிழா


              


                             தியாகப்பிரம்மத்தின் 167 வது ஆராதனை விழா.

20.01.2014 திங்கள் அன்று நாங்கள் திருவையாறு  சென்று இருந்தோம். வெகு காலமாய் என் ஆசை திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று. அது  இப்போது தான் நிறைவேறியது.  ஒவ்வொன்றுக்கும் நேரம் காலம் வரவேண்டும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். அது உண்மைதான். நான் பதிவு எழுத வருவதற்கு முன்பு அங்கு போயிருந்தால்  நான் மட்டும் மகிழ்ந்து கொள்ள முடியும். இப்போது  அங்கு போய்வந்ததைப்பற்றி உங்களுடன்  பகிர்ந்து கொண்டு  மகிழ முடிகிறது.

தியாகப்பிரம்மத்தின் சிறப்பு

தியாகராஜர் 1767 ஆம் ஆண்டு மே மாதம்  நான்காம் தேதி திருவாரூரில் பிறந்தார்.   ராமபிரம்மம், சீத்தம்மா ஆகியோர் இவருடைய பெற்றோர். இவருடைய தாத்தா வீணாகாளஹஸ்தி ஐயர் தஞ்சாவூர் சமஸ்தான வித்வானாயிருந்தார்.தியாகராஜரின்  தாயார் சிறந்த பாடகர்.தந்தையார் சிறந்த கல்விமான். அவர் , ராமநவமி உற்சவ காலங்களில் தஞ்சாவூர் அரண்மனையில்  ராமாயண உபன்யாசம் செய்து வந்தார்.  இதன் காரணமாக மகாராஜா இவருக்கு பசுபதி கோவில் என்ற இடத்தில் கொஞ்சம் நிலமும் திருவையாற்றில் ஒரு வீடும் தந்தார். 

தியாகராஜருக்கும் பாரம்பரியமாய் வந்த கந்தர்வ சாரீரம் இருந்தது. அவர் தம் குரு சொண்டி வீணா வெங்கட்ரமணா அவர்களிடம் இசை கற்றார்.

அவர் வாழ்ந்த காலத்தில் மேற்கத்திய நாடுகளில் பீத்தாவன், சோப்பின் , ஸ்கூபர்ட் ,வெபர், போன்ற இசைக்கலைஞர்கள்  புகழ்பெற்று இருந்தார்கள்.
தென்னிந்தியாவில் மும்மூர்த்திகளான தியாகராஜர், சியாமாசாஸ்திரிகள், முத்துசாமி தீட்சிதர், ஆகியோர் சிறப்புடன் விளங்கினர். 

தியாகராஜர் எளிய குடும்பத்தில் பிறந்தவராகையால் உஞ்சவிருத்தி மூலம் தன் குடும்பத்தையும்  தன் சீடர்களையும் பாதுகாத்து வந்தார். இவர் வீணை இசைப்பதிலும் வல்லவர். 

காஞ்சிபுரத்தை சேர்ந்த ஹரிதாஸ் என்பவருடைய வேண்டுகோளுக்கு இணங்க ராமநாமத்தை 96 கோடி முறை சொல்லி வந்தார்.  21 ஆண்டுகள்  விடாமல் சொல்லி வந்தார். அதனால்தான் அவருக்கு ராமருடைய அருள் கிடைத்தது  என்பார்கள்.

72 மேளகர்த்தா ராகத்திலும் பாடல்களை புனைந்துள்ளார். ’சங்கீதரத்னாகரம்’ முதலிய இசை நூல்களில் காணப்படாத  பகுதாரி, கருடத்வனி, ஜனரஞ்சனி, நவரசகன்னடா ஆகிய அபூர்வ ராகங்களில் பாடி உள்ளார்.

இவர்தன் இசையில்  சிறப்பான புதிய சங்கதிகளை புகுத்தி உள்ளார். 

1847ஆம் ஆண்டு ஜனவரி ஆறாம் நாள் முக்தி அடைந்தார்.

இவருடைய பஞ்சரத்ன கீர்த்தனைகள் மிக சிறப்புடையது. இந்த பாடலை தான் அவர் நினைவு நாளில் பாடுகிறார்கள், இசைக்கலைஞர்கள். 

ஆராதனை விழாக்காட்சிகள்




                               
நாங்கள் திருவையாற்றிற்குப்போன போது காலை 10 மணி. தியாகராஜருக்கு அபிஷேகம் ஆகிக்கொண்டிருந்தது. நாதஸ்வர கலைஞர்கள் வாசித்துக் கொண்டு இருந்தார்கள். தியாக பிரம்மத்திற்கு முன் இருந்தவர்கள் ராமநாமத்தைச்சொல்லிக் கொண்டு இருந்தார்கள் பால் அபிஷேகம் ஆகிக் கொண்டு இருந்தது.  நான் படம் எடுக்கக் கூடாது என்று நினைத்துக் கொண்டு எடுக்கவில்லை அப்புறம் எல்லோரும் எடுத்துக் கொண்டு இருந்ததைப் பார்த்தேன். அப்புறம் நான் எடுக்கும் போது பன்னீர் அபிஷேகம்  ஆகிக் கொண்டு இருந்தது.


                        

                        

                        

                        


                         

அவர் நினைவிடத்தில் ராமர் பட்டாபிஷேக சிலையின் முன் ராம நாம பாடல்களை பாடுவது போல் உள்ள தோற்றம்.

                        
 விழா மேடை அழகாய்ப் போட்டு இருந்தார்கள் ரசிகர்கள் அமர தரையில் புதுமணல் பரப்பியிருந்தார்கள். கீழே அமரும் இடத்தில் வயதான பெரியவர்கள், நடுவில் பிரித்து இருக்கும் மூங்கில் கம்பில் சாய்ந்து அமர்ந்து கொண்டு பாடல்களை ரசித்துக் கொண்டு இருந்தார்கள்.
இந்த இடத்தில்தான் இசைக் கலைஞர்கள் பஞ்சரத்தின கீர்த்தனைகள் பாடுவார்கள்.அதே இடத்தில் அமர்ந்து பாடலை கேட்டு ரசித்து விட்டு தியாகபிரம்மத்திடம் என் பேரன் , பேத்திகள்  இசையில் நன்கு தேர்ச்சிபெற வேண்டும் என்று வேண்டி வந்தேன். என் பேரன் மிருதங்கம் கற்றுக் கொள்கிறான், பேத்தி வாய்ப்பாட்டு சில வருடங்களாய் கற்று வருகிறாள். சின்ன பேரனை (என் மகனின் மகன்) பாட்டுக் கற்றுக் கொடுக்க ஆசை ப்படுகிறார்கள் மகனும், மருமகளும். ஆனால் நான்கு வயது தான் ஆகிறது 7வயது ஆக வேண்டும் என்று கற்றுக்கொடுக்கும் ஆசிரியர் சொல்கிறார். 

 பின்பு நாங்கள் பாடகர்கள் பாடிய பாடல்களைக் கேட்க ஆரம்பித்தோம். அருகருகே இரண்டு மேடைகள் ஏற்பாடு செய்து இருந்தார்கள். ஒரு மேடையில் பாடகர் பாடிக் கொண்டு இருக்கும்போது,  அடுத்தமேடையில் பாடகர் , பக்கவாத்தியக்காரர்கள் அமர்ந்து தங்களை தயார்படுத்திக் கொள்கிறார்கள்.

அடுத்த மேடையில் வந்து அமர்பவர்கள் வரத் தாமதம் ஆனால் பாடிக் கொண்டு இருப்பவர்களுக்கு அதிர்ஷ்டம்! இன்னொரு பாடல் பாடுகிறார்கள். அவர்கள் சீக்கிரம் வந்து அமர்ந்துவிட்டால் இவர்களுக்கு ஒரு பாடல்தான். பாடிய குழந்தைகள் எல்லாம் மிகவும் அனுபவித்து பயபக்தியுடன் பாடினார்கள். அடுத்துப் பாட இருக்கும் குழந்தைகள் மிக ஆர்வமாய் கேட்டுக் கொண்டிருந்தார்கள். உழைப்பும், கவனமும் வேண்டியது அல்லவா பாடுவதற்கு !

பக்க வாத்தியங்கள் வாசித்தவர்களும் நன்கு வாசித்தார்கள். வாழ்நாளில் ஒருமுறையாவது  இங்கு வந்து பாடவேண்டும் என்று நினைத்தவர்கள் கனவு நனவானது . பாடிய குழந்தைகள், மற்றும் பெரியவர்கள், சிறியவர்கள் எல்லோருக்கும் இந்த பேறு கிடைத்த மகிழ்ச்சி அவர்கள் நடையில் தெரிந்தது. 

வாய்ப்பாட்டு, மாண்டலின், வீணை, நாதஸ்வரம் என்று பல இசைக் கலைஞர்களின் கச்சேரிகளைக் கேட்டோம். 
                              
                               

                               

                              

                               
நாங்களும் எங்கள் காமிராவில் பாடல்களை பதிவு செய்தோம் , அபிஷேக காணொளி மட்டும் பகிர்ந்து இருக்கிறேன். 

டெல்லியில் பேத்தி தியாக பிரம்ம ஆராதனை விழாவில் கலந்துகொண்டு பஞ்சரத்ன கீர்த்தனை பாடியதைக்  கேட்டிருக்கிறேன்.   என் மகள் மாயவரத்தில் தியாக பிரம்ம ஆராதனைவிழாவில் வயலின் தனியாக வாசித்து இருக்கிறாள்.( இப்போது அவள் வாசிப்பது இல்லை . அவள் மீண்டும் வாசிக்க வேண்டும் என்று வேண்டி வந்தேன்)

                                       

           ஆல் இந்தியா ரேடியோவின் தற்காலிக ஒலிபரப்பு நிலையம்.

தொலைக்காட்சிகள் வருவதற்கு முன் சென்னை அகில இந்திய வானொலியில் கேட்டோம், இசைக் கச்சேரிகளை. இப்போதும் அது தன் சேவையை சிறப்பாய் செய்துகொண்டிருக்கிறது. சென்னை அகில இந்திய வானொலி நிலையத்திலிருந்து  வந்து கச்சேரிகளை நேரடி ஒலிபரப்பு செய்து கொண்டு இருந்தார்கள். 

                      
பொதிகைத் தொலைக்காட்சியில் சிட்டியூனியன் பேங்க்  நேரடி ஒளிபரப்பை வழங்குகிறது.(ஸ்பான்ஸர்).  

 ’சென்னையில் திருவையாறு’ என்ற நிகழ்ச்சியை  விஜய் தொலைக்காட்சிவழங்குகிறது,  பொதிகையில் திருவையாறு நிகழ்ச்சிகள் நேரடி ஒளிபரப்பு எல்லாம் கேட்டு மகிழ்ந்திருக்கிறோம். இப்போது நேரடியாக கேட்கும் போது எங்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. 

பாடவந்த ஆண் குழந்தைகள், கலர் கலர் குர்த்தா, வேஷ்டி, வெள்ளைசட்டை, துண்டு எல்லாம் போட்டுக்கொண்டு அமர்க்களப்படுத்தினார்கள்.
                                   
                                           வளரும் இசைக் கலைஞர்

பெண் குழந்தைகள் பட்டுப்பாவாடை, நெற்றிச்சுட்டி,  பாவாடை, தாவணி என்று பாரம்பரிய உடையில் வந்து பாடி அசத்தினார்கள்.  அவர்கள் பாடப்போகும் முன் அவர்களின் குருமார்கள்  அறிவுரை சொல்லிக் கொண்டு இருந்தார்கள். சேர்ந்து பாடும் குழுவினர்களிடம்,’ ஓடாது, எல்லோரும் ஒற்றுமையாக சேர்ந்து பாட வேண்டும் ’என்று.  ’நான் தான் நல்லா பாடுவேன் என்று  ஓங்கி சத்தமாய் பாடக் கூடாது எல்லோரும் சமமாய் பாட வேண்டும் ’என்று அறிவுரை சொல்லிக் கொண்டு இருந்தார் .
                       

நான் என் கணவரை அலங்கார மண்டபத்தின்முன் போட்டோ எடுத்த போது, செருப்புகளைப் பாதுகாத்துக் கொண்டு  இருந்த ஒருபையன் ஆவலுடன் வந்து நின்றான். அந்த சிறுவனை நீ நில் உன்னை போட்டோ எடுக்கிறேன் என்றவுடன் வந்து போஸ் கொடுத்தான். அவனது அம்மாவிடம் எடுத்த போட்டோவைக் காட்டியதும் அந்த அம்மாவுக்கும் அவனுக்கும் மகிழ்ச்சி. 

                       

விழாவை முன்னிட்டு அங்கே கடைகள் போட்டு இருந்தார்கள் . வோடபோன் கடை, ராமராஜ் காட்டன் கடை, வேஷ்டி, ஜிப்பா, நேரியல்  கன ஜோராய் விற்பனை ஆகிக் கொண்டு இருந்தது. 


                          
இசைக்கருவிகளை விற்கும் கடைகள் இருந்தன. இசைக்கருவிகளுக்கான பிரத்யேக உறைகள்,   மிருதங்கத்திற்கு   தேவையான  தோல், அதைக்கட்டும் வார் முதலிய உதிரிபாகங்கள்,  சுதிப் பெட்டிகள் என்று சகலமும் அங்கே ஒரேஇடத்தில் கிடைக்கிறது. இசைக்கலைஞர்களின் குறுந்தகடுகள், புத்தகங்கள் விற்கப்பட்டன.நாங்கள் சிலவற்றை வாங்கினோம்.

கும்பகோண டிகிரி காப்பி கடைகள் இருந்தன . இதில் பித்தளை டபராடம்ளாரில் காப்பி கொடுக்கிறார்கள். லியோ காப்பி கடையில் இலவச காப்பி தந்து 200 கிராம் காப்பித்தூள் வாங்கினால் 50கிராம் காப்பித்தூள் இனாமாய் தருகிறார்கள்.  கூல்டிரிங் விற்கும் கடையில் தங்கும் வசதி கொண்ட ஓட்டல்களின் விளம்பர நோட்டிஸ்களும்,  போன் செய்து அறைகளைப் பதிவுசெய்ய விபர அட்டைகளும் எல்லோருக்கும் தந்து கொண்டு இருந்தார்கள்.

 மருத்துவ உதவிக்கு டாக்டர், நர்ஸ் கொண்ட குட்டி மருத்துவமனை, தீயணைப்புப் படை. கண்காணிப்புக்கு  காவல் துறைஅதிகாரிகள் இருந்தார்கள். 
                       

 சுகாதாரமாய் ஆண், பெண் இருபாலர்களுக்கும் தனித்தனியாய் தகரகொட்டகை  போட்ட  நவீனகழிப்பிடங்கள் என்று வசதிகள் செய்து இருந்தார்கள். 


                                   பழைய கைவினைப்பொருட்கள் கடை

 இதில்  தஞ்சை ஓவியம், மரத்தாலான மண்டபங்கள், அலங்கார வெற்றிலைப் பெட்டி, அந்தக்காலத்து கேரளா உருளி , அழகிய காமாட்சி விளக்குகள்  மரப்பெட்டிகள் என்று ஏராளமாய் வைத்து இருந்தார்கள்.





  கடைகளுக்கு அருகில் உள்ள ஒரு வீட்டில் ஒரு பெரியவர் அப்போதுதான் உஞ்சவிருத்திக்கு போய்வந்த கோலத்தில் கையில் அரிசிச் செம்புடன் அமர்ந்து இருந்தார். அவரைச் சுற்றி வேதியர்கள் அமர்ந்து பாடிக் கொண்டு இருந்தார்கள்.

கச்சேரிகளைக்கேட்ட மகிழ்ச்சியுடன் ஊர் திரும்பினோம். திரும்பி வரும்போது திங்களூர், சுவாமிமலை சென்றுவந்தோம். அது பற்றிப் பிறகு பகிர்கிறேன்.
                                                           வாழ்க வளமுடன் !
                                                          _____________________

ஞாயிறு, 19 ஜனவரி, 2014

வைகுண்ட ஏகாதசியும் ஆலயதரிசனமும்

சென்ற வைகுண்ட ஏகாதசி அன்று (11.01.2014) கார்த்திகையும் இருந்ததால் முதலில் வைத்தீஸ்வரன் கோவில் சென்று வைத்தியநாதன், தையல் நாயகி, செல்வமுத்துகுமாரசாமியை தரிசனம் செய்தோம்.

பின் ஏகாதசி தரிசனம் ஆரம்பித்து விட்டது. முதலில் திருவெள்ளக்குளம் (அண்ணன் கோவில்) போனோம். திருநாங்கூரில் 11 கோவில்கள் உள்ளன. திருப்பதி பெருமாளுக்கு அண்ணன்  என்று இந்த திவ்யதேசத்தில் உள்ள  அண்ணன் பெருமாளைச் சொல்கிறார்கள்.அண்ணன் கோவிலில்  .  அலங்காரமாய் முத்தங்கி சேவையில் காட்சிக் கொடுத்தார் மூலவர்.  உற்சவரும் அலங்காரமாய் காட்சிக் கொடுத்தார். தரிசனம் முடிந்து வெளியில் வந்ததும்,  லட்டு பிரசாதம் தந்தார்கள்.  தாயாரை சேவித்து விட்டு  கோவிலை வலம் வந்தால்  108திவ்ய தேசங்களின் பெரிய  படங்கள் இருக்கும். அதைச் சேவித்தால் 108 திவ்ய தேசம் வணங்கிய புண்ணியம் கிடைக்கும்.

திருவெள்ளக்குளம்  


இங்கு மூலவர் - ஸ்ரீநிவாஸன், கண்ணன், நாராயணன், அண்ணன் பெருமாள்

தாயார் - அலமேல்மங்கை, (உற்சவர் பத்மாவதி, பூவார் திருமகள்.)

அண்ணன் கோவில்   தீர்த்தம்  - ஸ்வேத புஷ்கரிணி.

அல்லி மலர்கள் நிறைய பூத்து இருக்கிறது. நடுவில் உள்ள மண்டபத்தில் மடையான் காத்து இருக்கிறது  மீனுக்காக


திருத்தேவனார்தொகை

அடுத்து  திருத்தேவனார் தொகை (கீழச்சாலை)மாதவப்பெருமாள் கோவிலுக்குப் போனோம். அங்கு நாங்கள் போகும் போது மணி 11 . அப்போது தான் அங்கு பரமபத  வாசல் திறக்கும் வைபவம் நடைபெற்றுக்கொண்டிருந்தது.

சார்த்திய கதவுக்கு அருகில் காத்து இருந்தோம்.

வந்தார் மாதவன்


கருடாழ்வாரை சுற்றிவிட்டு எங்களை அழைத்துக்கொண்டு  பரமபத வாசலில் நுழைந்தார்.
எல்லோரும் நலமாய் இருக்க ஆசி வழங்கினார்.

கடல்மகள் நாச்சியார் -மாதவநாயகி அலங்காரமாய்.


மாதவப்பெருமாள் கோவிலில்  பிரசாதபாத்திரங்களை பளிச் என்று சுத்தமாய் துலக்கி வெயிலில் காய வைத்து இருக்கிறார்கள்.

அடுத்து வைகுந்தநாதபெருமாளை காணச்சென்றோம் . அந்தக் கோவிலில் திருப்பணி நடப்பதால்  வைகுந்தநாதர் அருகில் உள்ள வண் புருஷோத்தமர் கோவிலில் எழுந்தருளி இருக்கிறார் என்று சொல்லும்  அறிவிப்பு :- அது போல் புருஷோத்தமர் கோயிலில் அழகிய வேலைப்பாடு மிகுந்த கண்ணாடி மண்டபத்தில் வெகு அலங்காரத்துடன் இருந்தார். வண் புருஷோத்தமரும் முன் பக்க மண்டபத்தில் அழகாய் காட்சி கொடுத்தார் அவரது திருவடிகளில் திருமங்கை ஆழ்வார் சிறிய வடிவில் அழகிய தோற்றத்தில் இருந்தார்.  



வைகுந்தநாதர் கோவில் வாசல். 
இங்கு மூலவர் : வைகுந்த நாதன், 
தாயார் : வைகுந்தவல்லி  

வெளித்தோற்றம்.


தீர்த்தம் : லக்ஷ்மி புஷ்கரிணி, உதங்கபுஷ்கரிணி, விரஜாதீர்த்தம்.
நாங்கூரில்  வைகுண்டஏகாதசி திருவிழா  அதிகாலை மூன்று மணிக்கு நடைபெறும் கோவில்கள் பற்றிய விபரம்  அடங்கிய அறிவிப்புச் சுவரொட்டி. 
திருவண்புருடோத்தமம்  
இங்கு மூலவர் -ஸ்ரீவண்புருஷோத்தமப்பெருமாள், 
தாயார்-புருஷோத்தம நாயகி.


தீர்த்தம் - திருப்பாற்கடல்

 திருமணிமாடக் கோயில் 
மூலவர் :ஸ்ரீநாராயண பெருமாள்  
தாயார்: புண்டரீகவல்லித்தாயார்.



தீர்த்தம்: இந்திரபுஷ்கரணி, ருத்ர புஷ்கரணி.

திருமணிமாடக் கோயிலில் வரும் 31ம் தேதி கருடசேவை நடைபெறவிருக்கிறது .தை அமாவாசைக்கு மறுநாள்  11 திவ்யதேசத்துப் பெருமாள்களும் கருடவாஹனங்களில் எழுந்தருளுவார்கள். திருநகரியிலிருந்து திருமங்கையாழ்வார் தன் மனைவி குமுதவல்லியுடன் வந்து மங்களாசாஸனம் செய்துஅருளுவார்.

2012 ல்  திருமங்கையாழ்வார் மங்களாசாஸன  வைபவம் என்று பதிவு இட்டு  இருக்கிறேன். 

தரிசனம் தொடரும், அடுத்தபதிவில்.

வாழ்க வளமுடன்!
                                                      ----------------