புதன், 26 அக்டோபர், 2022

மண்ணானாலும் திருச்செந்தூரில் மண் ஆவேன்.


முருகனைச் சிந்திப்போம் - 2

மண்ணானாலும் திருச்செந்தூரில் மண் ஆவேன் - டி,எம் .எஸ் 
அவர்கள்
பாடல்.

இன்று கந்த சஷ்டி இரண்டாவது நாள். என்ன எழுதலாம் என்று சிந்தித்துக்
 கொண்டு இருக்கும்போது காலை ரேடியோ சிட்டியில்  இந்தப் 
பாடலையும் வைத்து சஷ்டி கவசம் இயற்றப்பட்ட வரலாறு 
சொன்னார்கள். இந்தப் பாடல் எனக்குப் பிடித்த பாடல். உங்களுக்கும்
பிடிக்கும்.

கந்த சஷ்டி பாடலை எழுதியவர்  பாலன் தேவராய சுவாமிகள்.
இவர் சிறந்த முருக பக்தர்.  அவர் பிறப்பு, எங்கு பிறந்தார் என்பது
எல்லாம் சரியாகத்  தெரியவில்லை.  ஒவ்வொருவரும் 
ஒவ்வொரு மாதிரி சொல்கிறார்கள்.

இந்தப் பாடல் எழுதியது பல  ஆண்டுகளுக்கு முன் என்கிறார்கள்.
இப்பாடல் எழுதப்பட்ட இடம் பற்றிக்கூறும்போது சிலர் பழனி 
என்றும் சிலர் திருச்செந்தூர் என்றும் சொல்கிறார்கள்.

வரலாறுகள் எப்படி இருந்தாலும் நமக்கு நல்லதொரு கவசம் அவரால் கிடைத்து இருக்கிறது. மக்களை உடல் துன்பம், மனத்துன்பத்திலிருந்து ஆறுதல் படுத்த.

ஆறுபடை வீடுகளுக்கும்  கவசம் பாடல் எழுதி இருக்கிறார். அவற்றில்
திருச்செந்தூர் கவசம் தான் மிக புகழ் பெற்றது. அதற்கு முக்கிய காரணமும்
உண்டு.

பாலன் தேவராய சுவாமிகள் வயிற்று வலியால் மிகவும் 
கஷ்டப்பட்டார், எந்த வைத்தியத்தாலும் அவர் வயிற்றுவலி
குணமாகவில்லை. திருச்செந்தூர் வந்தார் செந்திலாண்டவரை தரிசனம்
செய்ய.

                                  திருச்செந்தூர்  ( நான் எடுத்த படங்கள்.)
அப்போது கந்தசஷ்டி விழா நடந்து கொண்டு இருந்தது, அதைப்பார்த்தவுடன் , சஷ்டி விரதம் இருக்க ஆரம்பித்து விட்டார். 

                                     


தெய்வம் படத்தில் சீர்காழி, கோவிந்தராஜன் அவர்களும் டி.எம் 
செளந்திராஜன் அவர்களும் பாடிய பாடல். இதில் சூரசம்ஹார நிகழ்ச்சி
நடக்கிறது. இந்தப் பதிவுக்கு பொருத்தம் என்று போட்டு இருக்கிறேன்
நட்புகளே! பாருங்கள்.)

                       
                                                    திருச்செந்தூர் கடல்.




கடலில் நீராடி மண்டபத்தில் அமர்ந்து தியானம் செய்தார் அப்போது
முருகப்பெருமான் அவருக்குக் காட்சி தந்து  சஷ்டி கவசம் பாடும் படியும்
 சொன்னார். இதற்குத்தான் இறைவன் தேவராயரை திருச்செந்தூர்
வரவழைத்து   இருப்பார் போலும்  வயிற்றுவலியை கொடுத்து .

பாலன் தேவராயரும் உடனே திருச்செந்தூர் சஷ்டி கவசம் பாடி விட்டார்.
அடுத்த 5 நாட்களில் மற்ற படைவீடுகளுக்கும் கவசம் பாடி விட்டார். 
இப்படி தனக்குக் கவசம் பாட வைத்து தேவராயர் வயிற்றுவலியைப் 
போக்கினார்.

பாடலை எங்கு அரங்கேற்றுவது என்று சுவாமிகள் நினைத்தபோது
சென்னிமலையில் அரங்கேற்றம் செய்யச் சொன்னார் கனவில் வந்த முருகன்.
சஷ்டி கவசம் சென்னிமலையில் அரங்கேற்றப் பட்டது என்பதும் 
செவி வழி செய்திதான்.

நான் திருச்செந்தூர் சஷ்டிகவசம் மட்டுமே  படித்து 
இருக்கிறேன், மற்ற படைவீடுகளின் சஷ்டி கவசங்களைத் தேடி
 இந்த கந்த சஷ்டி நாளில் படிக்க வேண்டும் என்று நினைத்து இருக்கிறேன்.

மற்ற ஐந்து படை வீடுகளுக்கான கவச நூல்கள் பின்வருமாறு,
திருப்பரங்குன்றுறை திருமகன் கவசம்; பழனிப்பதி வாழ் அப்பன் கவசம்;
திருவேரகம் வாழ் தேவன் கவசம்; குன்றுதோறாடும் முருகன் கவசம்;
பழமுதிர்ச் சோலை பண்டிதன் கவசம் என்பன.

இவற்றைத் தேட வேண்டும் தேடிப் படிக்க வேண்டும்.

(முன்பு  போட்டேன்
 இப்படி படிக்க வேண்டும் என்று. )
பழனிப்பதி வாழ் அப்பன் கவசம் தேடி படித்து இருக்கிறேன்.
 சஷ்டி முதல் நாள் தேடி படித்தேன். நாள் இன்னொரு கவசம் தேடி 
படிக்க முருகன் அருள வேண்டும்.
மற்றவைகளை யும் படிக்க வேண்டும்.






எங்கள் மாமனார் அல்சர் வந்து வயிற்றுவலியால் துன்ப பட்டார்கள்
அப்போது அவர்கள் திருச்செந்தூருக்கு கந்த சஷ்டி சமயம் போய்
 ஆறு நாள் அங்கு தங்கி ஒருவேளை உணவு எடுத்து விரதம்
இருந்தார்கள் . வயிற்று வலி சரியாகி விட்டது.என் கணவரின்  இரு 
அண்ணன்களும் திருச்செந்தூரில் நிறைய வருடங்கள்
விரதம் இருந்து இருக்கிறார்கள்.

நானும் என் கணவரும் சஷ்டி விரதம் இருப்போம். மாத சஷ்டி விரதமும்
இருப்போம். கந்த சஷ்டி விரதம் சமயம்  ஒறு நாளில் 36 முறை
சஷ்டிகவசம் வாசிப்பார்கள் என் கணவர்.


இறைவன் சோதிப்பான் ஆனால் கைவிடமாட்டான் என்று 
சொல்வார்கள்.
அப்படியே சோதனைகளைத் தந்தாலும் அதைத் தாங்கும்
 மனவலிமையைத்
 தரவேண்டும். 
நன்றி- கூகுள். இந்த படம் மட்டும் கூகுள்.

பன்னிரு கரத்தாய் போற்றி பசும்பொன் மாமயிலாய்போற்றி
முன்னியகருணையாறு முகப்பரம் பொருளே போற்றி
கன்னியர் இருவர் நீங்கா கருணை வாரிதியே போற்றி
என்னிரு கண்ணே  கண்ணுள் இருக்கும் மாமணியே போற்றி
-திருச்செந்தூர்ப்புராணம்.


வாழ்க வையகம்! வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன்.
-------------------------------------------------------------------------------------------------------

செவ்வாய், 25 அக்டோபர், 2022

முருகனைச் சிந்திப்போம்

 

திருவேடகம் செல்லும் பாதையில்  இருந்த கோவில்


முருகனுக்கு உகந்த விரதங்கள் மூன்று. வாரத்தில் கடைப்பிடிக்க
வேண்டிய விரதம் செவ்வாய்க் கிழமை விரதம்,  நட்சத்திரத்தை வைத்து
கடைப்பிடிக்க வேண்டிய விரதம் கார்த்திகை விரதம், திதியை வைத்து கடைப்பிடிக்கப்படுவது சஷ்டி விரதம்.

முருகனுக்கு உகந்த விழா கந்தசஷ்டி விழாவாகும்.  சூரபன்மனைச்  
சம்ஹாரம் செய்த வைபவத்தைக் கொண்டாடுவது கந்தசஷ்டி விழா.

இன்று கந்த சஷ்டி தொடக்க நாள்.  கந்தன் பெருமைகளை, பாடல்களைப்
பாடி விரதம் இருப்பார்கள். தீபாவளி பலகாரங்கள் சாப்பிட்டு முடிக்கும்
முன்னே சஷ்டி விழா வந்து விடும். 

தீபாவளி பலகாரங்களை மறந்து மன வைராக்கியத்தோடு  கந்தனை
நினைத்து வேண்டும் வரங்களைத் தரச்சொல்லி விரதம் இருப்பார்கள்.
ஆறு நாளும் மூன்று வேளையும் சாப்பிடாமல் விரதம் இருப்பவர்கள் சிலர். 
ஒரு வேளை உணவு எடுத்துக் கொள்பவர்கள்  உண்டு, அவர்கள் காலையும்,
மாலையும் பால் பழம் எடுத்துக் கொள்வார்கள். ஒரு வேளை மட்டும் 
சாப்பிட்டு. சூரசம்காரம் அன்று முழுவது உணவு அருந்தாமல், மறுநாள் 
விரதத்தைப் பூர்த்தி செய்வார்கள். ஆறு நாளும் சாப்பிடாமல் முருகன்
கோவிலில் தங்கி விரதம் இருப்போரும் உண்டு.

கோயில் வாசலில் கோலம்
தீபாவளி அன்று  திருவேடகம் போகும் போது பாதையில் கண்ட
 ஆறுமுகர் 
பின் பகுதியில் தெரியும் முகம்
முருகன் சன்னதியில்  கவலையின்றித் தூங்கும் செல்லக்குட்டி
ஆறுமுகர்   முன்பு இந்த இடத்தில் இருந்து இருப்பார் போல  
இப்போது ஆடு, செல்லங்களின் அடைக்கல இடமாய் இருக்கிறது.

               இப்போது இந்த ஓட்டுக்கூரைக்கு அடியில் இருக்கிறார் ஆறுமுகர்.

கந்த சஷ்டி விரதத்தின் போது, தினமும் கந்த சஷ்டி கவசம், கந்தர் 
அலங்காரம், கந்தர் அனுபூதி, திருப்புகழ், கச்சியப்ப சுவாமிகளின் 
கந்த புராணம் ஆகியவற்றைப்  படிப்பார்கள். முருகன் கோவிலுக்குப் போய் அவரைத் தரிசனம் செய்வார்கள்.

முடியவில்லை என்றால் கந்தா சரணம், முருகா சரணம், கார்த்திகை பாலா
 சரணம் என்று  சரணங்களைச்சொல்லலாம் என்கிறார்கள்.

நான்  கச்சியப்ப சுவாமிகளின் கந்த புராணம் படித்து வருகிறேன் முருகன் 
அருளால் பல காலமாய். 

முருகப்பெருமானைச் சிந்திப்பதில் இன்று தீபாவளி அன்று பார்த்த ஆறுமுகர் கோவில், மற்றும் கச்சியப்பர் வரலாறும்.

சமஸ்க்ருத மொழியில்  வியாசபகவான் எழுதிய கந்தபுராணம், கச்சியப்ப சிவாச்சாரியாரால் தமிழில் எழுதபட்டது. 


கச்சியப்பர் வரலாறு :-

கந்தபுராணத்தைத் தமிழில் நமக்குத் தந்தவர் கச்சியப்பசிவாச்சாரியார். 
இவர் குமரக்கோட்ட முருகனை  பரம்பரை அர்ச்சகராகப்  பூஜை செய்து வந்த
காளத்தியப்ப சிவாச்சாரியாருக்கு மகனாகத் தோன்றியவர்.

கச்சியப்பர் குமரக்கோட்டத்துப் பெருமானின் மேல் அதிகபக்தி கொண்டவர்.
முருகப்பெருமான் கந்தபுராணத்தைத் தமிழில் கொணர விருப்பம் கொண்டு கச்சியப்பர் கனவில் மயில் மேல் கையில் வேலுடன் தோன்றி
 'சங்கர சம்ஹிதையில் 'முதற்காண்டமான  சிவ ரகசியத்துள்ளே நமது சரிதை கூறப்பட்டுள்ளது. அதனை  நற்றமிழில் பாடுவாயாக! என்றார்.  
புராணத்தை எழுதத் தொடங்க"திகடசக்கர' என அடி எடுத்து கொடுத்தார். 

காலை எழுந்து நீராடி திருவெண்ணீறு அணிந்து ருத்ராக்ஷமாலை அணிந்து குமரக்கோட்டம் சென்று கோவிலை வலம் வந்து குமரக்கோட்டத்து முருகன்
சந்நதி வந்து விநாயகரை வணங்கிப் பிள்ளையார் சுழி போட்டு  எழுதத் தொடங்கினார்.

திகடசக்கரச் செம்முகம் ஐந்துளான்
சகட சக்கரத் தாமரை  நாயகன்
அகட சக்கர விண்மணி யாவுறை
விகட சங்கரன் மெய்ப் பதம் போற்றுவோம்.

என்று விநாயகர் காப்புப் பாயிரம் எழுதி முடித்தார்.

ஒரு நாளுக்கு 100 பாடல் என்று எழுதினார். இரவு முருகப்பெருமான் பாதத்தில் வைத்து வந்து விடுவார்.

மறு நாள் காலை வந்து எடுத்து மீண்டும் படிக்கும் போது  அவர் எழுதிய 
பாடல்களில்  ஆங்காங்கே  பிழைதிருத்தம் செய்யப்பட்டிருந்தது.இப்படியாக 
கச்சியப்பர் பாடல்கள் எழுதுவதும், முருகப்பெருமான் திருத்துவதுமாய் 10345 பாடல்களைப் பாடி முருகன் திருமேனிக்குப் பாமாலை சாற்றினார்.

நல்ல நாளில்  மன்னர்கள், புலவர்கள், புரவலர்கள் முன் அரகேற்றம் செய்ய
 முதல் பாடலை திகட  சக்கரச் செம்முகம் ஐந்துளான்' என்ற .பாடலை 
படித்தவுடன்  அதில் குற்றம் உள்ளது என்றதும், கச்சியப்பர் காப்பின் முதலடி முருகப்பெருமான் எடுத்துக் கொடுத்தது என்றதும், அப்படியானால் முருகப்பெருமானே அவை முன் வந்து  சொல்லட்டும் .தான் தான் அடி எடுத்து கொடுத்ததைச் சொல்லட்டும் என்றதும் கச்சியப்பர் நாளை உங்கள் 
கேள்விக்குப் பதில் தரப்படும் என்று சொல்லிவிட்டுப் போய் விட்டார்.

கச்சியப்பர் முருகனிடம் கண்ணீர் மல்கத் தியானம் செய்தார், நீங்கள் 
எடுத்துக் கொடுத்த அடிக்கு இலக்கண விளக்கம் சொல்ல வர வேண்டும்
 என்று பிரார்த்தனை செய்தார்.

அன்று இரவு கச்சியப்பர் கனவில் வந்து  "சுந்தரத் தமிழால் எமது புராணம்
 பாடிய  புலவா! வருந்த வேண்டாம்  விடிகின்ற பொழுது உமக்கு 
வெற்றியைத் தரும்  நிம்மதி கொள்வாய் என்று சொல்லி மறைந்தார்."

மறுநாள் அழகான தோற்றத்தில் ஏட்டுச்சுவடி ஏந்திச் சோழ நாட்டுப் புலவன்
 என்று சொல்லி முருகப்பெருமான்    வந்தார் . நேற்று நீங்கள் எழுப்பிய
 வினாவிற்கு விளக்கம் சொல்ல வந்து இருப்பதாய்ச் சொல்லி விளக்கம்
 சொல்லி அவர்கள் சந்தேகத்தைத் தீர்த்து மறைந்து விட்டார்.
அவையினர் பக்தனுக்காக இறைவனே முதலடி எடுத்துக் கொடுத்து அதற்கு விளக்கமும் சொல்லி மறைந்ததை வியந்து போற்றினர். 
கச்சியப்பருக்காக இறைவன் நடத்திய திருவிளையாடலை  எண்ணி வியந்து கச்சியப்பரைப் பாராட்டினர்.

அதன் பின் கச்சியப்பர் கந்தபுராணம் முழுவதும் பாடி அரங்கேற்றம்
செய்தார். மன்னர் விருதுகளும் , பொன்னும், பொருளும், கொடுத்து சில கிராமங்களையும்  தானமாகக்  கொடுத்தார். தங்கப் பல்லக்கில் அமர 
வைத்து  வீதி உலா வரவைத்து சிறப்பு செய்தார். கச்சியப்பர்  பல்லாண்டு
வாழ்ந்து முருகப்பெருமானைப்பாடிப் புகழந்து போற்றி அவர் திருவடி
அடைந்தார்.

கந்தபுராணம்  சம்பவகாணடம், அசுரகாண்டம், வீரமகேந்திரகாண்டம், யுத்தகாண்டம், தேவ காண்டம், தக்ஷகாண்டம் என்று ஆறு  காண்டங்களைக்  கொண்டது. 
ஆறு நாளும்  இவற்றைப் படித்துப் பலன் அடையலாம்.

                                            


கந்தன் வந்தான் கவிதை தந்தான் என்ற பாடல் இந்த பதிவுக்குப் 
பொருத்தமாய் இருக்கிறது என்று  போட்டு இருக்கிறேன்.
இது குமரகுருபர் சிறு குழந்தையாக இருக்கும்போது பேச முடியாமல்
திருச்செந்தூர் முருகப்பெருமான் அருளால் கவிதை பாடும் அருள் பெற்ற
 படத்தின் பாடல் என்று நினைக்கிறேன்.

வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!

சனி, 22 அக்டோபர், 2022

தீபாவளி மலர்






பேரன் தயார் செய்த தீபாவளி வாழ்த்து 

அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துகள்! வாழ்க வளமுடன்!
தீபாவளி என்றால் முன்பு தீபாவளி ஆண்டு மலர் வாங்குவோம்.
எல்லா வாரப்பத்திரிக்கைகளும்  தீபாவளிக்கு சிறப்பாக இரண்டு புத்தகம் தருவார்கள். அதை தீபாவளிக்கு ஊருக்கு போகும்  ரயில் பயணத்தில் படிக்க வாங்குவோம், குமுதம், குங்குமம், மங்கையர் மலர் எல்லாம். ரயிலில் நம்மிடமிருந்து அந்த புத்தகங்களை வாங்கி படிபவர்களிடம்  நாம் இறங்கும் போது நினைவாக வாங்க வேண்டும். திருப்பி தராமலே போய் விடுவார்கள் சிலர்.

புதன், 19 அக்டோபர், 2022

எங்கள் குடியிருப்பு பறவைகள்!



நிஜமும், நிழலும் (புல் புல் பறவை)

பறவைகள்  பதிவுகள் போட்டு நாளாச்சு இல்லையா! அதனால் இன்று பறவைகள் பதிவு.

திங்கள், 17 அக்டோபர், 2022

கொலு பார்க்க வாங்க!

மயில்த்தோகை விரிந்தார் போல கொலு படிகள்

விழாக்கள் தரும் மகிழ்ச்சி  என்ற முந்தைய பதிவில் 
"நண்பர்கள் வீட்டுக் கொலு அடுத்த பதிவில் பார்க்கலாம்" என்று சொன்னேன். மகன் அனுப்பிய நண்பர்கள் வீட்டுக் கொலு படங்கள் இந்த பதிவில்.

சனி, 15 அக்டோபர், 2022

விழாக்கள் தரும் மகிழ்ச்சி




மகன் வீட்டுக் கொலு பார்க்க வாருங்கள். நவராத்திரி முடிந்து கொலு பார்க்க அழைக்கிறேன் என்று நினைக்காதீர்கள். அய்யனார் கோயில் நவராத்திரிவிழாவை காட்டிக் கொண்டு இருந்தேன்.நவராத்திரி ஆரம்பித்த நாளிலிருந்து  மகனும் பொறுமையாக தினம்  படங்கள் அனுப்பிகொண்டு இருந்தான்.




நானும் நேரலையில் தினம் பார்த்து கொண்டு இருந்தேன்.  வந்தவர்களை வரவேற்று அவர்களுடன் உரையாடி அவர்கள் பாடும் பாடல்களை கேட்டு ரசித்து கொண்டு இருந்தேன். 

குட்டி பையன் மித்ரன் பட்டு வேட்டி , பட்டு சட்டை போட்டு வந்து இருந்தார். மகனின் நண்பர் , மதுரை சொந்தஊர்.

வியாழன், 6 அக்டோபர், 2022

நலம் தரும் நவராத்திரி - 4


சரஸ்வதி பூஜை அன்று  மாலை சாற்றும் முன் எடுத்த படம்.

நலம் தரும் நவராத்திரி - 3 சென்ற பதிவு படிக்கவில்லை என்றால் படிக்கலாம்.

எங்கள் குடியிருப்புக்கு பக்கத்தில் இருக்கும் "அருள்மிகு பொய்சொல்லா மூர்த்தி அய்யனார்" கோவில் நவராத்திரி விழா   நிகழ்வுகளை பற்றி  தொடர் பதிவாக  எழுதி கொண்டு இருப்பதில் நிறைவு பகுதி , மற்றும் உறவினர் வீட்டு கொலு வேறு இரண்டு கோவில் கொலு படங்கள்  இந்த பதிவில் இடம் பெறுகிறது.