சனி, 15 அக்டோபர், 2022

விழாக்கள் தரும் மகிழ்ச்சி




மகன் வீட்டுக் கொலு பார்க்க வாருங்கள். நவராத்திரி முடிந்து கொலு பார்க்க அழைக்கிறேன் என்று நினைக்காதீர்கள். அய்யனார் கோயில் நவராத்திரிவிழாவை காட்டிக் கொண்டு இருந்தேன்.நவராத்திரி ஆரம்பித்த நாளிலிருந்து  மகனும் பொறுமையாக தினம்  படங்கள் அனுப்பிகொண்டு இருந்தான்.




நானும் நேரலையில் தினம் பார்த்து கொண்டு இருந்தேன்.  வந்தவர்களை வரவேற்று அவர்களுடன் உரையாடி அவர்கள் பாடும் பாடல்களை கேட்டு ரசித்து கொண்டு இருந்தேன். 

குட்டி பையன் மித்ரன் பட்டு வேட்டி , பட்டு சட்டை போட்டு வந்து இருந்தார். மகனின் நண்பர் , மதுரை சொந்தஊர்.



நலம் தரும் நவராத்திரி -4 ம் பதிவு நிறைவு பதிவில் 

//இன்னும் வரும் நவராத்திரி கொலு படங்கள். மகன் வீட்டு கொலு, அவர்கள் போய் வந்த நண்பர்கள் வீட்டுக் கொலுஎல்லாம் என்று சொல்லி இருந்தேன். இந்த பதிவில் மகன் வீட்டுக் கொலு.

பதிவு போட  இப்போதுதான் நேரம் கிடைத்தது. 

பேரன் சிறு வயதில் மாயவரம் கொலுவில் மரச்செப்பு விளையாட்டு சாமான்களில் உள்ள பன்னீர் செம்பை வைத்து வந்தவர்களை வரவேற்பான். அந்த நினைவாய் இப்போதும் மருமகள்  வைத்து இருக்கிறாள். எல்லோரும் சந்தனம், குங்குமம், கல்கண்டு எடுத்து கொள்ளுங்கள் பேரன் பன்னீர் தெளிப்பான்.

நவராத்திரிக்கு வருக !  வருக  !  மருமகள் தயார் செய்த அழைப்பிதழ்

நவராத்திரிக்கு அழைப்பு திருவிளக்கை ஏற்றி வைத்தோம் திருமகளே வருக! என்ற பாடலுடன் எங்கள் வீட்டுக் கொலு படம் என் கணவர் அம்மன் செய்யும்   படங்கள், மற்றும் மகன் வீட்டுக் கொலு  எல்லாம் வரும். நேரம் இருக்கும் போது காணொளிகளை பாருங்கள்.

வந்தவர்களுடன் பேரனும் பாடுகிறான்

அம்மா, இரண்டு பெண் குழந்தைகளும் பாடினார்கள் . பெரிய பெண் சகலகலாவல்லி, பாடல், ஆடல்  மற்றும் நிறைய திறமைகள் உண்டு.

கிறித்துவ பாதிரியார்  வந்து இருந்தார் கொலுவை பார்க்க . கிறித்துவ நண்பர்  இறைவனுக்கு நன்றி பாடல் பாடினார். மற்றும்  நிறைய குழந்தைகள், பெரியவர்கள்  பாடினார்கள் அதை எல்லாம் தனி பதிவே போடலாம்.
பேரன் கொலு பொம்மையை அடுக்க எடுத்து வருகிறான். திரைச்சிலை புல்லாங்குழல், மயில் இறகு  அலங்காரம்  மகன் செய்தான்.

பண்டிகை என்றால் மருதாணி  வைத்துக் கொள்வார்கள் அல்லவா ? அதனால் குஜராத்தி பெண் ஒருவர் மகன் வீட்டுக்கு வந்து  நட்புகள் எல்லோருக்கும்   வைத்து  விட்டார்கள். மருதாணி வைப்பதை அவர்கள் தொழிலாக  செய்கிறார்கள். கல்யாணம், மற்றும் பண்டிகை போன்ற விழாக்களில் இவர்களை அழைப்பார்களாம் மருதாணி  வைக்க.

இந்த முறை கண்ணன் தான்  கொலுவில் கதாநாயகன்


கொலு பார்க்க வருபவர்கள் வாங்கி வந்த மலர் கொத்துக்கள்  

குத்துவிளக்கில் மருமகள் செய்த அம்மன் அலங்காரம் 
கீழே இருப்பது வீட்டில் பூத்த செம்பருத்தி 

முதல் நாள்.

சரஸ்வதி பூஜை அன்று மூன்று தேவியரும்  



தேவியர் முன் வைத்து இருக்கும் பூ கிண்ணம் சுழலும். அப்படி மகன் செய்து இருந்தான். சின்ன காணொளிதான்.


யமுனை கரை பேரன் வரைந்தது. யமுனை நதியில் நடந்த  கிருஷ்ணனின் லீலை.


பேரன் பார்க்கும் ஸ்ரீ கிருஷ்ணாவிலிருந்து  சில காட்சிகளை  தொகுத்து அதற்கு அவனே வசனங்கள் எழுதி அவனே எல்லா கதாபாத்திரங்களுக்கும் பேசி இருக்கிறான்.

 கிருஷ்ணன் ராதை சூரிய பூஜைக்கு வெண்ணை எடுத்து போவதை திருட பின் தொடர்வது, அப்போது "ராதை வெண்ணை சூரியனுக்கு உனக்கு கிடையாது நீ திருடக் கூடாது" என்று சொல்வது. அந்த இடத்திற்கு பலராமன் யமுனை நதியில்  காளிங்கன் செய்யும் பிரச்சினைகளை  அதனால் மாடுகளுக்கு தீங்கு நேர்வதை கிருஷ்ணனிடம் சொல்ல வருவது போல காட்சி அமைத்து   இருக்கிறான்.  மற்றவைகளை காணொளி பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.


பேரன்  செய்த "காளிங்க நர்த்தனம்" பொம்மலாட்டத்தில் இடம் பேற்ற    கிருஷ்ணாவும், ராதாவும் இஷ்கான் கோயிலில் நடந்த ஆனந்த மேளாவில்   சக்கரம் சுழற்றும் போட்டியில் கிடைத்த பரிசு. கவின் கிருஷ்ணா பொம்மையை வென்றான். மகனின் நண்பர் பெண் ராதையை வென்றாள். அவர்கள் ராதையை கிருஷ்ணனுடன் இருக்கட்டும் என்று  கவினுக்கு கொடுத்து விட்டார்கள்.   மற்றகதாபாத்திரங்கள் படம்  கவின் வரைந்தது.  அவன்  நடத்திய பொம்மலாட்டத்தை பார்த்து கருத்து சொன்னால் மகிழ்வான் பேரன்.

குழந்தைகள் எல்லாம் மிக ஆர்வமாக பார்த்து மகிழ்ந்தனர்
 காட்சிகள் மாற்றும் போது அடுத்து என்ன என்று ஆவலுடன் பார்க்கிறார்கள்
எப்படி பார்க்கிறார்கள் பாருங்கள்
பெரியவர்களும் ரசித்துப்பார்க்கிறார்கள். நண்பர்களின் பெற்றோர்களும் வந்து பார்த்து பேரனை வாழ்த்தி சென்றார்கள்

பாபா வசித்த துவாரகாமயி

மகனின் நட்புகளில் சாய் பக்தர்கள் அதிகம். அவர்களுக்கு இந்த ஒலி- ஒளி காட்சி மிகவும் பிடித்து இருந்ததாம். மகனே செய்து இருக்கிறான். எரிந்து கொண்டே இருக்கும், நெருப்பு, அவர் படுக்க உயரத்தில்  கட்டப்பட்ட ஊஞ்சல் எல்லாம்  அப்படியே செய்து இருக்கிறான்.  துவாரகாமயி கட்டிடம் மகன் மரத்தில் செய்து இருக்கிறான். பொம்மைகள்  முன்பு டெல்லியில் வாங்கியது.
  
பக்தி,  தானம், சேவை அதில் உங்களால் 

எது முடியுமோ அதை கொடுங்கள் அன்பால் செய்யும் சேவையே சேவை.  சுயநலம் இல்லாமல் செய்யுங்கள்  என்று  சொல்லும்  அவர் பேச்சு இருக்கிறது.


மகன் செய்த ஒலி- ஒளி காட்சி  சோனி தொலைக்காட்சி தயார் செய்த "மேரே சாய் " நாடகத்திலிருந்து எடுக்கபட்ட வசனங்கள். இந்தி பேசுபவர்களுக்கு இந்திநாடக வசனம், தமிழ் தெரிந்தவர்களுக்கு தமிழ் நாடக வசனம் செய்து இருந்தான் மகன். 

மகனின் ஒலி- ஒளி காட்சியை விட  எல்லோருக்கும் கவின் செய்த பொம்மலாட்டத்தில்  கிருஷ்ணன் காளிங்கனுடன் சண்டை யிட்டு கிருஷ்ணன்  அதன் தலை மேல் நர்த்தனம் செய்த காட்சிதான்   பிடித்து இருக்கிறது. கைதட்டல் அதிகம்.
நிகழ்ச்சி நிறைவு பெற்றதும் கவினிடம் பேட்டி


 "எப்படி வரைந்தாய்,? எப்படி இப்படி பல குரலில் பேசினாய்? "என்று அவனை  கேட்டு கொண்டு இருந்தார்கள்.


பேரன் கவினோடும் கவின் வரைந்த கதாபாத்திரங்களுடன் மகிழ்ச்சியாக படம் எடுத்து கொள்கிறார்கள். 
தினம் பிரசாதங்கள் செய்ய மருமகளுக்கு  உதவியாக அவள் அம்மாவும் இருந்தார்கள்  .

பத்து நாட்களும் மகனும், மருமகளும்  வேலைக்கும் போய் கொண்டு விழாவையும் சிறப்பாக நடத்தி விட்டார்கள். இங்கு போல அங்கு விடுமுறை கிடையாது வேலைக்கும் போய் விட்டு மாலையில் பிரசாதங்கள் தயார் செய்து வந்தவர்கள்  அனைவருக்கும் கொடுத்தது மகிழ்ச்சி.

விடுமுறை நாளில் கொலுவிற்கு அழைத்த  அனைவர் வீட்டுக்கும் போய் வந்து இருக்கிறார்கள்.

நட்புகளை, உறவுகளை பார்த்து மகிழ பண்டிகைகள் உதவுகிறது. அதிலும் அவர் அவர்களுக்கு உள்ள திறமைகளை, கலைத் திறமைகளை   காட்ட நவராத்திரி விழா  உதவுகிறது.

இரண்டு வருடமாய் தொற்று பயத்தால் நவராத்திரி விழாவிற்கு யாரும் யாரையும் அழைக்கவில்லை, வீட்டுக்கு மட்டும் நவராத்திரி கொலுவை வைத்து கொண்டார்கள். இந்த ஆண்டு மீண்டும் அழைப்பு  . இறைவனுக்கு நன்றி.

எல்லோருக்கும் எல்லா நலங்களையும் தேவியர்கள் வழங்க வேண்டும்.

நண்பர்கள் வீட்டுக் கொலு அடுத்த பதிவில் பார்க்கலாம்.

வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!

----------------------------------------------------------------------------------------------------

32 கருத்துகள்:

  1. மனம் நிறைந்த நிகழ்வுகள்..
    இப்படியெல்லாம் செய்வதற்கும் கான்பதற்கும் கொடுத்து வைத்திருக்க வேண்டும்..
    இறைவனின் ஆசிகள் என்றென்றும் உண்டு..

    மகிழ்ச்சி... நன்றி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்
      தொலை தூரத்தில் உள்ள பிள்ளைகளுடன் முன்பு பேச மட்டுமே முடியும் தொலைபேசியில். இப்போது நேரில் பார்ப்பது போல பார்க்க முடிவது மகிழ்ச்சிதான்.
      உங்கள் ஆசிகளுக்கும், கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  2. வணக்கம் சகோதரி

    கொலு பதிவு அருமையாக உள்ளது. படங்கள் காணொளி என அனைத்தும் மிக நன்றாக வந்துள்ளது. பாராட்டுக்கள்.

    வரவேற்புரை படங்கள் நன்றாக உள்ளது எடுத்தவுடனே முதல் படமாக நல்வரவு படம் பதிவுக்கு பொருத்தமாக இருக்கிறது. அதன் பின் கொலுவுக்கு அழைப்பிதழ் பொருத்தமான பாடலுடன், தங்கள் கணவர் மஞ்சளை வைத்து முன்பு செய்த சரஸ்வதி அம்மன், மகன் வீட்டு கொலுவென எல்லாவற்றையும் இணைத்தது அமர்க்களமாக இருக்கிறது.

    மகன் வீட்டு கொலு பொம்மைகள் ஒவ்வொன்றும் பார்க்க மிகவும் நன்றாக உள்ளது. அதில் சிறப்பாம்சம் தங்கள் பேரன் கவினின் கலையரங்கம். பொம்மலாட்ட படங்களை அழகாக வடிவமைத்து, நடித்தசைத்து காண்பித்து, பேசி அசத்தியிருக்கிறார். அவரின் திறமைக்கு வெகுவான பாராட்டுக்களை அவருக்கு தெரிவித்து விடுங்கள். நல்ல கலையார்வம் மிக்கவர்.

    தங்கள் மகன் கொலுவுக்கென செய்த அலங்காரங்களும், சாய்பாபாவின் ஒலி ஒளி காட்சிகளும் கண்களை கவர்கின்றன. தங்கள் மருமகள் செய்த குத்து விளக்கு அம்மன் அலங்காரமும், நவராத்திரி பூஜைக்குரிய பிரசாதங்களும் இப்படி எல்லாவற்றையும் பார்க்கப் பார்க்க எனக்கே மகிழ்ச்சியாக இருக்கிறதென்றால் உங்களுக்கு எப்படி பெருமையாக இருந்திருக்கும் என்பதை புரிந்து கொண்டேன். அங்கும் கொலுவுக்கு வந்து, நிகழ்ச்சிகளை கண்டு ரசித்து, பாடி அனைவரையும் மகிழ்வித்திருக்கும் உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    உங்கள் குடும்பம் நல்ல கலையார்வம் உள்ள குடும்பம். மகன், மருமகள், பேரன் அனைவரும் அன்னை சரஸ்வதியின் அருள் பெற்றவர்கள். அனைவரும் வளமுடன் பல்லாண்டு காலம் சிறப்பாக வாழ நானும் சரஸ்வதி அன்னையிடம் மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன். நல்லதொரு கொலு நிகழ்ச்சிகளை எங்களுக்கும் காணத்தந்த உங்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். மிக்க நன்றி சகோதரி. .🙏.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்

      //கொலு பதிவு அருமையாக உள்ளது. படங்கள் காணொளி என அனைத்தும் மிக நன்றாக வந்துள்ளது. பாராட்டுக்கள்.//

      உங்கள் பாராட்டுக்கு நன்றி.

      //வரவேற்புரை படங்கள் நன்றாக உள்ளது எடுத்தவுடனே முதல் படமாக நல்வரவு படம் பதிவுக்கு பொருத்தமாக இருக்கிறது. அதன் பின் கொலுவுக்கு அழைப்பிதழ் பொருத்தமான பாடலுடன், தங்கள் கணவர் மஞ்சளை வைத்து முன்பு செய்த சரஸ்வதி அம்மன், மகன் வீட்டு கொலுவென எல்லாவற்றையும் இணைத்தது அமர்க்களமாக இருக்கிறது.//

      ஒவ்வொன்றையும் ரசித்து கருத்து சொன்னது மகிழ்ச்சி.

      //தங்கள் பேரன் கவினின் கலையரங்கம். பொம்மலாட்ட படங்களை அழகாக வடிவமைத்து, நடித்தசைத்து காண்பித்து, பேசி அசத்தியிருக்கிறார். அவரின் திறமைக்கு வெகுவான பாராட்டுக்களை அவருக்கு தெரிவித்து விடுங்கள். நல்ல கலையார்வம் மிக்கவர்.//

      பேரனை பாராட்டி வாழ்த்துக்களை பாராட்டுக்களை வழங்கியதை அவனுக்கு சொல்லி விடுகிறேன். அவன் தமிழ் படிப்பான் அவனிடம் காட்டுகிறேன். உங்கள் வாழ்த்துக்கள், பாராட்டுக்கள் அவனுக்கு ஊக்கம் அளிக்கும்.

      //தங்கள் மகன் கொலுவுக்கென செய்த அலங்காரங்களும், சாய்பாபாவின் ஒலி ஒளி காட்சிகளும் கண்களை கவர்கின்றன. தங்கள் மருமகள் செய்த குத்து விளக்கு அம்மன் அலங்காரமும், நவராத்திரி பூஜைக்குரிய பிரசாதங்களும் இப்படி எல்லாவற்றையும் பார்க்கப் பார்க்க எனக்கே மகிழ்ச்சியாக இருக்கிறதென்றால் உங்களுக்கு எப்படி பெருமையாக இருந்திருக்கும் என்பதை புரிந்து கொண்டேன். அங்கும் கொலுவுக்கு வந்து, நிகழ்ச்சிகளை கண்டு ரசித்து, பாடி அனைவரையும் மகிழ்வித்திருக்கும் உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்.//

      மகன், மருமகள், வந்த உறவுகள், நட்புகளுக்கும் வாழ்த்துக்கள் சொன்னது மகிழ்ச்சி.
      வந்த அனைவரும் மிகவும் திறமையானவர்கள். அவர்கள் வீட்டிலும் கொலுவை கலைநயத்தோடு வைத்து இருக்கிறார்கள்.
      ஒரு சிலர் கொலு வைப்பது இல்லை அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் கவின், காசி என்ன செய்ய போகிறீர்கள் இந்த ஆண்டு என்று உற்சாகபடுத்துபவர்கள். விரும்பி பார்ப்பவர்கள் இருந்தால்தான் இது போல செய்வதற்கு பிடிக்கும். எவ்வளவு வேலைகள் இருந்தாலும் கஷ்டமாக தெரியாது.

      //மகன், மருமகள், பேரன் அனைவரும் அன்னை சரஸ்வதியின் அருள் பெற்றவர்கள். அனைவரும் வளமுடன் பல்லாண்டு காலம் சிறப்பாக வாழ நானும் சரஸ்வதி அன்னையிடம் மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்//

      உங்கள் வாழ்த்துக்களுக்கும், பிரார்த்தனைகளுக்கும் நன்றி நன்றி.

      நீங்கள் மகன் கொலுவை பார்க்க ஆவலாக இருப்பதாக சொன்னதால் இந்த பதிவு. தினம் கொஞ்சமாக பதிவில் படங்களை காணொளிகளை ஏற்றி எழுதி பதிவிட தாமதமாகி விட்டது.
      உறவினர் வருகை வேறு வீட்டில்.
      உங்கள் விரிவான கருத்துக்கு மிகவும் நன்றி.










      நீக்கு
  3. படங்கள் காணொளிகள் அனைத்தும் சிறப்பு.
    உங்கள் பெயரன் கவினுக்கு எமது வாழ்த்துகளை தெரிவிக்கவும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

      //படங்கள் காணொளிகள் அனைத்தும் சிறப்பு.//

      நன்றி.


      //உங்கள் பெயரன் கவினுக்கு எமது வாழ்த்துகளை தெரிவிக்கவும்.//

      கண்டிப்பாய் சொல்கிறேன்.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  4. இந்தியாவில் போலும் இத்தனை சிறப்பாக கொலு வைத்து நவராத்திரி கொண்டாடுபவர்கள் குறைவு. இவ்வளவு பொம்மைகளையும் மற்றும் பூஜை விளக்குகள், சாமான்கள் எல்லாவற்றையும் எப்படித்தான் இங்கிருந்து அமெரிக்கா வரை கட்டி காத்து கொண்டு வந்தார்களோ என்று வியக்க வைக்கிறது. நவராத்திரி கொலு மற்றும் பூஜை மிக சிறப்பு. 


    கவின் படங்கள்  அழகாக  வரைந்திருக்கிறான். பொம்மலாட்டம் மிகவும் நன்றாக இருந்தது. நான் 50 வருடங்களுக்கு முன் பார்த்த sound of music திரைப்படம் நினைவில் வந்தது. கவினுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.  

    மொத்தத்தில் சிறப்பான நவராத்திரி.
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஜெயக்குமார் சந்திர சேகரன் சார், வாழ்க வளமுடன்

      //இந்தியாவில் போலும் இத்தனை சிறப்பாக கொலு வைத்து நவராத்திரி கொண்டாடுபவர்கள் குறைவு. //

      தொலைக்காட்சியில் வைக்கிறார்கள் ஒவ்வொரு வீட்டு கொலுவை பார்க்க பிரமிப்பாக இருக்கிறது. இங்கு ஆட்கள் வேலைக்கு கிடைப்பார்கள் அவர்களை வைத்து கொண்டு , உறவு, நட்புகளின் உதவியுடன் செய்து விடலாம்.
      ஆனால் அங்கு அவர்களே எல்லாம் செய்ய வேண்டும். அத்தனை சிரமமும் கொலுவுக்கு வந்து பாராட்டி செல்லும் போது பட்ட கஷ்டங்கள் தெரியாது மனது உற்சாகமாக இருக்கும்.

      //கவின் படங்கள் அழகாக வரைந்திருக்கிறான். பொம்மலாட்டம் மிகவும் நன்றாக இருந்தது.//

      பேரனும் பள்ளி பாடங்களை முடித்து தினம் வருபவர்களுக்கு பொம்மலாட்டம் செய்து காட்டி களைப்பு அடைந்தாலும் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் அவனை இயங்க வைத்தது.
      உங்கள் மனமார்ந்த பாராட்டுக்களை கவினுக்கு சொல்லி விடுகிறேன்.

      //சாமான்கள் எல்லாவற்றையும் எப்படித்தான் இங்கிருந்து அமெரிக்கா வரை கட்டி காத்து கொண்டு வந்தார்களோ என்று வியக்க வைக்கிறது. //

      நாங்கள் அமெரிக்காவில் எடிசன் என்ற ஊரில் முதல் முதலில் பொம்மைகள் வாங்கினோம், அப்புறம் மருமகளின் அம்மா, நாங்கல் பொம்மைகள் வாங்கி அனுப்பினோம். அலங்கார தொம்பைகள் எல்லாம் மதுரை புது மண்டபத்தில் வாங்கினோம்.பிள்ளைகள் இந்தியாவரும் போது கொஞ்சம் கொண்டு போவார்கள். சேகரிப்புகள் ஆண்டுதோறும் நடப்பது.

      //மொத்தத்தில் சிறப்பான நவராத்திரி.//

      நவராத்திரி விழாவை ரசித்து பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  5. படங்கள் அனைத்துமே மிகவும் சிறப்பாக இருக்கின்றன! நுணுக்கமான அலங்காரங்கள்! பேரனின் கை வண்ணங்கள்! வீட்டிலுள்ள அனைவரும் உற்சாகமாக பங்கு கொண்டதால்தான் இந்த நவராத்திரி விழா மிகவும் சிறப்பாக நடந்தேறியிருக்கிறது. பேரனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மனோ சாமிநாதன், வாழ்க வளமுடன்

      /படங்கள் அனைத்துமே மிகவும் சிறப்பாக இருக்கின்றன!//

      நன்றி.

      //நுணுக்கமான அலங்காரங்கள்! பேரனின் கை வண்ணங்கள்! //

      ஆமாம்.

      வீட்டிலுள்ள அனைவரும் உற்சாகமாக பங்கு கொண்டதால்தான் இந்த நவராத்திரி விழா மிகவும் சிறப்பாக நடந்தேறியிருக்கிறது. //

      நீங்கள் சொல்வது உண்மை.
      பண்டிகை சமயம் அனைவரும் ஒத்துழைத்தால்தான் சிறப்பாக இருக்கும். பெண்களுக்கு நவராத்திரி பண்டிகை என்றாலும் ஆண்களின் ஒத்துழைப்பு இல்லையென்றால் சிறப்பாக செய்யமுடியாது.

      பேரனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!!//
      உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.
      உங்கள் கருத்துக்கு நன்றி.


      நீக்கு
  6. பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்

      //படங்கள் அழகு... நிகழ்வுகள் அற்புதம்...//

      படங்களை நிகழ்வுகளை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  7. படங்கள் அழகு.
    விழாக்கள் என்றாலே மகிழ்ச்சிதான்
    நன்றி சகோதரி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார்,
      //விழாக்கள் என்றாலே மகிழ்ச்சிதான்.//
      ஆமாம்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  8. கோமதிக்கா ரசித்து முடியலை. உங்கள் மகன் செய்திருக்கும் அலங்காரம் அட்டகாசம்...புல்லாங்குழல் பின்னில் அருமை....மருமகள் செய்திருக்கும் அழைப்பிதழ் காணொளி கண்டேன். மாமா செய்யும் அம்மன் முகம் சொல்ல வார்த்தைகள் இல்லை அக்கா. அருமை....குழந்தை கவின் ஆர்வத்தோடு எல்லாம் செய்வது மனதிற்கு மிக்க மகிழ்ச்சி.

    அங்கும் இங்கு போன்று இத்தனை சிரத்தையாகக் கொண்டாடுகிறார்கள் பாருங்க....குஜராத்தி பெண்கள், பஞ்சாபி பெண்கள் அங்கு இப்படி மெஹந்தி இடுவது சப்பாத்தி சப்ஜி செய்து கொடுப்பது என்று பலவும் செய்கிறார்கள். அருமை

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா ரெங்கன்,வாழ்க வளமுடன்

      //கோமதிக்கா ரசித்து முடியலை. உங்கள் மகன் செய்திருக்கும் அலங்காரம் அட்டகாசம்...புல்லாங்குழல் பின்னில் அருமை....மருமகள் செய்திருக்கும் அழைப்பிதழ் காணொளி கண்டேன். மாமா செய்யும் அம்மன் முகம் சொல்ல வார்த்தைகள் இல்லை அக்கா. அருமை//

      நன்றி கீதா.

      //குழந்தை கவின் ஆர்வத்தோடு எல்லாம் செய்வது மனதிற்கு மிக்க மகிழ்ச்சி.//

      ஆமாம் கீதா, அவனுக்கு ஆர்வம் இருப்பதால்தான் இதெல்லாம் செய்கிறான்.

      நீக்கு
  9. மித்ரன் க்யூட்!!!!

    குத்துவிளக்கில் மருமகள் செய்த அம்மன் அலங்காரம் வாவ்!!! செமையா செஞ்சுருக்காங்க...வீட்டில் பூத்த செம்பருத்தி எம்மாம் பெருசா இருக்கு அமெரிக்கா என்றாலே எல்லாமே ரொம்பப் பெரிதாகத்தான் இருக்கும் போல...அங்கு பலவும் பெரிதாக இருப்பதைக் கண்டிருக்கிறேன்....ஜம்போ ஜூஸ் என்று அந்தக் கப் ரொம்ப பெரிசா இருக்கும்...ஒரு நேர சாப்பாட்டுக்குப் போதும் போல ஜூஸ்...

    மூன்று தேவியர் அலங்காரம்...கிண்ணம் சுழலுவது போல வடிவமைத்திருப்பது அருமை,

    பேரன் வரைந்திருக்கும் யமுனை ஆஹா!!!! அதோடு தொடர்ச்சியாக இன்னும் பெரிய ஆஹா வியப்புடன்!! காணொளி..பொம்மலாட்டம்...அவரே வசனம் எழுதி....கவினின் குரல் எல்லாம் அசத்தல்....பார்த்து வியந்தேன்...செமையா செய்திருக்கிறார் கவின்.....குடும்பமே கலைக்குடும்பம்!

    இஸ்கான் கோயிலில் கிடைத்த பரிசிற்கும் வாழ்த்துகள்!! கவினுக்கு சொல்லுங்கள் அக்கா...மிக மிகத்திறமை....மிக அழகாகச் செய்திருக்கிறார் என்று எங்கள் வாழ்த்துகள் பாராட்டுகளைச் சொல்லிவிடுங்கள். இந்த வயதில் இப்படி ஒரு திறமை!! தாத்தாவுக்குத் தப்பாத பல அடிகள் பாயும் பேரன்!!! இறைவன் எப்போதும் துணை இருக்கட்டும்!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மித்ரன் க்யூட்!!!!//

      மித்ரன் எப்போதும் வந்தாலும் என்னுடன் விளையாடுவான். கவினை மிகவும் பிடிக்கும் கவின் கவின் என்று அழைத்து கொண்டு அவன் பின்னாலே சுற்றுவான்.

      //குத்துவிளக்கில் மருமகள் செய்த அம்மன் அலங்காரம் வாவ்!!! செமையா செஞ்சுருக்காங்க//

      ஆமாம், நன்றாக செய்வாள் எந்த வேலை செய்தாலும் அதில் ஈடுபாட்டுடன் செய்வது அவள் பழக்கம்.

      //வீட்டில் பூத்த செம்பருத்தி எம்மாம் பெருசா இருக்கு அமெரிக்கா என்றாலே எல்லாமே ரொம்பப் பெரிதாகத்தான் இருக்கும் போல//
      நானும் மாயவரத்தில் வைத்து இருந்தேன் , இந்த மாதிரி பெரிதாக பூக்கும் செம்பருத்தி எல்லா கலரிலும் இருக்கிறது கீதா இங்கும்.

      //அங்கு பலவும் பெரிதாக இருப்பதைக் கண்டிருக்கிறேன்....ஜம்போ ஜூஸ் என்று அந்தக் கப் ரொம்ப பெரிசா இருக்கும்...ஒரு நேர சாப்பாட்டுக்குப் போதும் போல ஜூஸ்...//
      ஆமாம், காப்பி, ஜூஸ் எல்லாம் பெரிதாக வைத்து இருப்பார்கள்.

      //மூன்று தேவியர் அலங்காரம்...கிண்ணம் சுழலுவது போல வடிவமைத்திருப்பது அருமை,//

      இரண்டு வருடத்திற்கு முன்பு பிள்ளையார் சுழலுவது போல வைத்து இருந்தான்.

      //பேரன் வரைந்திருக்கும் யமுனை ஆஹா!!!! அதோடு தொடர்ச்சியாக இன்னும் பெரிய ஆஹா வியப்புடன்!! காணொளி..பொம்மலாட்டம்...அவரே வசனம் எழுதி....கவினின் குரல் எல்லாம் அசத்தல்....பார்த்து வியந்தேன்...செமையா செய்திருக்கிறார் கவின்...//

      ஒரு மாதம் முன்பே படங்கள் வரைந்தான் , எல்லாம் செய்ய அதிகம் உழைத்து இருக்கிறான்.

      //இஸ்கான் கோயிலில் கிடைத்த பரிசிற்கும் வாழ்த்துகள்!! கவினுக்கு சொல்லுங்கள் அக்கா...மிக மிகத்திறமை....மிக அழகாகச் செய்திருக்கிறார் என்று எங்கள் வாழ்த்துகள் பாராட்டுகளைச் சொல்லிவிடுங்கள். இந்த வயதில் இப்படி ஒரு திறமை!! தாத்தாவுக்குத் தப்பாத பல அடிகள் பாயும் பேரன்!!! இறைவன் எப்போதும் துணை இருக்கட்டும்!!//

      கண்டிப்பாய் சொல்கிறேன் உங்கள் பாராட்டை, வாழ்த்துக்களை.
      நீங்கள் சொல்வது போல மாமாவும், இறைவனும் எப்போதும் துணையாக இருக்க வேண்டும் கீதா.










      நீக்கு
  10. துவாரகாமயி செம..தத்ரூபமாகச்செய்திருக்கிறார் உங்கள் மகன். அதுவும் அந்த கட்டிடம்மரத்தில் அட்டகாசமாகச் செய்திருக்கிறார். மாமாவை அப்படியே பார்ப்பது போன்று இருக்கு. பாபாவின் திரூருவம் பெரிதாகி வருவது போன்று அமைத்திருப்பது அருமை மெதுவாக நகர்ந்து வருவது...அருமையோ அருமை ரசித்துப் பார்த்தேன் கோமதிக்கா...

    நிறைய உழைத்திருக்கிறார்கள் மகன் மருமகள், பேரன் எல்லோரும்.

    //பத்து நாட்களும் மகனும், மருமகளும் வேலைக்கும் போய் கொண்டு விழாவையும் சிறப்பாக நடத்தி விட்டார்கள். இங்கு போல அங்கு விடுமுறை கிடையாது வேலைக்கும் போய் விட்டு மாலையில் பிரசாதங்கள் தயார் செய்து வந்தவர்கள் அனைவருக்கும் கொடுத்தது மகிழ்ச்சி.//

    ஆமாம் அக்கா அதைத்தான் சொல்ல வந்தேன் நீங்க சொல்லிட்டீங்க

    எல்லாருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள் பாராட்டுகள்...சொல்லிடுங்க அக்கா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //துவாரகாமயி செம..தத்ரூபமாகச்செய்திருக்கிறார் உங்கள் மகன். அதுவும் அந்த கட்டிடம்மரத்தில் அட்டகாசமாகச் செய்திருக்கிறார். மாமாவை அப்படியே பார்ப்பது போன்று இருக்கு. பாபாவின் திரூருவம் பெரிதாகி வருவது போன்று அமைத்திருப்பது அருமை மெதுவாக நகர்ந்து வருவது...அருமையோ அருமை ரசித்துப் பார்த்தேன் கோமதிக்கா...//

      கொலுவிற்கு அப்புறம் வீட்டில் இருக்கும் பாபா அதில் கொலு இருக்க போகிறார் என்று சொன்னான் மகன். மருமகள் பாபா பக்தை.

      மகனிடம் சொல்கிறேன் உங்கள் பாராட்டுக்களை, வாழ்த்துக்களை.

      //நிறைய உழைத்திருக்கிறார்கள் மகன் மருமகள், பேரன் எல்லோரும்.//

      ஆமாம், மருமகளின் அம்மா இந்த சமயம் அங்கு இருப்பதால் அவர்களும் அவர்களுடன் வேலைகளை பகிர்ந்து கொண்டு இருக்கிறார்கள்.
      ஒவ்வொன்றையும் ரசித்து விரிவான பின்னூட்டம் கொடுத்தது மகிழ்ச்சி கீதா. உங்கள் அனைத்து கருத்துக்களுக்கும் நன்றி நன்றி.
      ரசித்து பார்ப்பீர்கள் என்றுதான் தினம் கொஞ்சமாக பதிவு ஏற்றினேன்.
      இன்னொரு காணொளி இருக்கிறது கவினின் கண்ணன் , சரஸ்வதி பாட்டுடன் .

      நீக்கு
  11. சிறப்பான விவரங்கள், படங்கள்.  சுசீலாம்மா குரலுடனும் சுவாரஸ்யமாகவும் காணொளிகள்,  நீங்கள் நேரலையில் அந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்டதும் சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
      இன்னும் கணினி சரியாகவில்லையா?
      காணொளிகளை பார்த்தீர்களா மகிழ்ச்சி.
      நேரலையில் தினம் தினம் அங்கு இருந்தேன். விஞ்ஞான வளர்ச்சிக்கு இறைவனுக்கு நன்றி சொல்லி கொண்டு கண்டு களித்தேன்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  12. மகன் வீட்டுக் கொலுவும் நவராத்திரியும் சூப்பராக இருக்குது, கோமதி அக்காவை ரிவியில் பார்க்கும்போது, நியூஸ் ரீடர் போல இருக்கிறீங்க ஹா ஹா ஹா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்

      //மகன் வீட்டுக் கொலுவும் நவராத்திரியும் சூப்பராக இருக்குது, //

      நன்றி.

      கோமதி அக்காவை ரிவியில் பார்க்கும்போது, நியூஸ் ரீடர் போல இருக்கிறீங்க ஹா ஹா ஹா//

      ஓ! இப்போதும் செய்திகள் வாசிக்கிறேன் தானே! நீங்கள் கேட்டு கொண்டு வந்து இருக்கிறீர்கள்.

      நீக்கு
  13. எந்தாப் பெரிய செம்பரத்தம் பூ, நான் அமெரிக்கா போயிருந்த போது வியந்த விசயங்களில் இதுவும் ஒன்று, அங்கு செம்பரத்தம் பூக்கள் எல்லாம் விதம் விதமாக, கலரிலும் வடிவத்திலும், முக்கியமாக பென்னாம் பெரிசாகவும் இருந்தது, அப்படி சைஸில் வேறு எங்கும் இந்தப் பூவைக் காணவில்லை நான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாயவரத்தில் வைத்து இருந்தேன் இதே கலரிலும், சிவப்பு கலரிலும்.
      பெரிதாக இருக்கும். நிறைய பூக்காது இரண்டு மூன்று என்று தினம் பூக்கும்.

      இது ஒரு புது வகை. இல்லையும் கொஞ்சம் தடிமனாக இளம் பச்சை கலரில் இருக்கும்.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி அதிரா.

      நீக்கு
  14. மனதிற்கு நிறைவைக் கொடுக்கும் பதிவு.

    வேர்களை விட்டுவிடாத முயற்சி. மகன், பேரன் திறமைகள் வியக்கவைக்கின்றன.

    பொம்மலாட்டம் போன்றவற்றைக் காணொளிநில் பார்க்கிறேன். என்னை மிகவும் கவர்ந்தது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத் தழிழன், வாழ்க வளமுடன்

      //மனதிற்கு நிறைவைக் கொடுக்கும் பதிவு.//

      நன்றி.

      வேர்களை விட்டுவிடாத முயற்சி. மகன், பேரன் திறமைகள் வியக்கவைக்கின்றன.//

      மகனுக்கும், பேரனுக்கும் இவை சிறு வயதிலிருந்து பிடித்த விஷ்யம்
      அதனால் ஈடுபாட்டுடன் செய்தார்கள்.


      //பொம்மலாட்டம் போன்றவற்றைக் காணொளிநில் பார்க்கிறேன். என்னை மிகவும் கவர்ந்தது//

      பொம்மலாட்டம் சிறு வயதில் பேரன் செய்து எங்களை மகிழ்ச்சி படுத்துவான். கதைகள் சொல்வான் அதை வைத்து.
      பார்த்து விட்டு சொல்லுங்கள்.

      நீக்கு
  15. அடுத்த தலைமுறை நம் கலாச்சாரத்தில் அறிமுகம் பெறுவது, ஆர்வத்துடன் இருப்பதைக் காண மகிழ்ச்சி.

    செம்பருத்தி என்னைக் கவர்ந்தது. திரைச்சீலை அலங்காரம் அருமை.

    பேரனுக்குப் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அடுத்த தலைமுறை நம் கலாச்சாரத்தில் அறிமுகம் பெறுவது, ஆர்வத்துடன் இருப்பதைக் காண மகிழ்ச்சி.//

      ஆமாம். நம் வீட்டில் செய்யும் பண்டிகைகளை அவர்களும் கடைபிடித்து வருவது மகிழ்ச்சி தரும் விஷயம் தான்.

      திரைச்சீலை அலங்காரம் அருமை.//

      நன்றி.

      //பேரனுக்குப் பாராட்டுகள்.//

      நன்றி உங்கள் கருத்துக்க்களுக்கும், பாராட்டுகளுக்கும்.
      கோயில் நவராத்திரியின் நிறைவு பதிவுக்கு வரவில்லையே நீங்கள்.





      நீக்கு
  16. திறமை மிகுந்த உங்கள் பேரனின் கலை அரங்கம் பரிசு பெற்றதில் வியப்பு இல்லை எல்லாப் படங்களையும் மிக நன்றாக எடுத்திருக்கிறீர்கள். கொலுவும் நன்றாக அலங்காரங்கள் செய்து வைத்திருக்கிறார்கள். வேலை/பள்ளி என இருந்தாலும் இதையும் திறம்படச் சமாளித்து இருக்கின்றனர். பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்
      பேரனின் பொம்மலாட்டம் பார்த்தீர்களா? படங்கள் எல்லாம் மகன் அனுப்பியது. நான் இங்கு இருக்கிறேன்.

      //வேலை/பள்ளி என இருந்தாலும் இதையும் திறம்படச் சமாளித்து இருக்கின்றனர். பாராட்டுகள்.//

      ஆமாம், வேலை / பள்ளி இருந்தாலும் நவராத்திரி விழாவை சிறப்பாக செய்து விட்டார்கள்.
      உங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி.

      நீக்கு