செவ்வாய், 25 அக்டோபர், 2022

முருகனைச் சிந்திப்போம்

 

திருவேடகம் செல்லும் பாதையில்  இருந்த கோவில்


முருகனுக்கு உகந்த விரதங்கள் மூன்று. வாரத்தில் கடைப்பிடிக்க
வேண்டிய விரதம் செவ்வாய்க் கிழமை விரதம்,  நட்சத்திரத்தை வைத்து
கடைப்பிடிக்க வேண்டிய விரதம் கார்த்திகை விரதம், திதியை வைத்து கடைப்பிடிக்கப்படுவது சஷ்டி விரதம்.

முருகனுக்கு உகந்த விழா கந்தசஷ்டி விழாவாகும்.  சூரபன்மனைச்  
சம்ஹாரம் செய்த வைபவத்தைக் கொண்டாடுவது கந்தசஷ்டி விழா.

இன்று கந்த சஷ்டி தொடக்க நாள்.  கந்தன் பெருமைகளை, பாடல்களைப்
பாடி விரதம் இருப்பார்கள். தீபாவளி பலகாரங்கள் சாப்பிட்டு முடிக்கும்
முன்னே சஷ்டி விழா வந்து விடும். 

தீபாவளி பலகாரங்களை மறந்து மன வைராக்கியத்தோடு  கந்தனை
நினைத்து வேண்டும் வரங்களைத் தரச்சொல்லி விரதம் இருப்பார்கள்.
ஆறு நாளும் மூன்று வேளையும் சாப்பிடாமல் விரதம் இருப்பவர்கள் சிலர். 
ஒரு வேளை உணவு எடுத்துக் கொள்பவர்கள்  உண்டு, அவர்கள் காலையும்,
மாலையும் பால் பழம் எடுத்துக் கொள்வார்கள். ஒரு வேளை மட்டும் 
சாப்பிட்டு. சூரசம்காரம் அன்று முழுவது உணவு அருந்தாமல், மறுநாள் 
விரதத்தைப் பூர்த்தி செய்வார்கள். ஆறு நாளும் சாப்பிடாமல் முருகன்
கோவிலில் தங்கி விரதம் இருப்போரும் உண்டு.

கோயில் வாசலில் கோலம்
தீபாவளி அன்று  திருவேடகம் போகும் போது பாதையில் கண்ட
 ஆறுமுகர் 
பின் பகுதியில் தெரியும் முகம்
முருகன் சன்னதியில்  கவலையின்றித் தூங்கும் செல்லக்குட்டி
ஆறுமுகர்   முன்பு இந்த இடத்தில் இருந்து இருப்பார் போல  
இப்போது ஆடு, செல்லங்களின் அடைக்கல இடமாய் இருக்கிறது.

               இப்போது இந்த ஓட்டுக்கூரைக்கு அடியில் இருக்கிறார் ஆறுமுகர்.

கந்த சஷ்டி விரதத்தின் போது, தினமும் கந்த சஷ்டி கவசம், கந்தர் 
அலங்காரம், கந்தர் அனுபூதி, திருப்புகழ், கச்சியப்ப சுவாமிகளின் 
கந்த புராணம் ஆகியவற்றைப்  படிப்பார்கள். முருகன் கோவிலுக்குப் போய் அவரைத் தரிசனம் செய்வார்கள்.

முடியவில்லை என்றால் கந்தா சரணம், முருகா சரணம், கார்த்திகை பாலா
 சரணம் என்று  சரணங்களைச்சொல்லலாம் என்கிறார்கள்.

நான்  கச்சியப்ப சுவாமிகளின் கந்த புராணம் படித்து வருகிறேன் முருகன் 
அருளால் பல காலமாய். 

முருகப்பெருமானைச் சிந்திப்பதில் இன்று தீபாவளி அன்று பார்த்த ஆறுமுகர் கோவில், மற்றும் கச்சியப்பர் வரலாறும்.

சமஸ்க்ருத மொழியில்  வியாசபகவான் எழுதிய கந்தபுராணம், கச்சியப்ப சிவாச்சாரியாரால் தமிழில் எழுதபட்டது. 


கச்சியப்பர் வரலாறு :-

கந்தபுராணத்தைத் தமிழில் நமக்குத் தந்தவர் கச்சியப்பசிவாச்சாரியார். 
இவர் குமரக்கோட்ட முருகனை  பரம்பரை அர்ச்சகராகப்  பூஜை செய்து வந்த
காளத்தியப்ப சிவாச்சாரியாருக்கு மகனாகத் தோன்றியவர்.

கச்சியப்பர் குமரக்கோட்டத்துப் பெருமானின் மேல் அதிகபக்தி கொண்டவர்.
முருகப்பெருமான் கந்தபுராணத்தைத் தமிழில் கொணர விருப்பம் கொண்டு கச்சியப்பர் கனவில் மயில் மேல் கையில் வேலுடன் தோன்றி
 'சங்கர சம்ஹிதையில் 'முதற்காண்டமான  சிவ ரகசியத்துள்ளே நமது சரிதை கூறப்பட்டுள்ளது. அதனை  நற்றமிழில் பாடுவாயாக! என்றார்.  
புராணத்தை எழுதத் தொடங்க"திகடசக்கர' என அடி எடுத்து கொடுத்தார். 

காலை எழுந்து நீராடி திருவெண்ணீறு அணிந்து ருத்ராக்ஷமாலை அணிந்து குமரக்கோட்டம் சென்று கோவிலை வலம் வந்து குமரக்கோட்டத்து முருகன்
சந்நதி வந்து விநாயகரை வணங்கிப் பிள்ளையார் சுழி போட்டு  எழுதத் தொடங்கினார்.

திகடசக்கரச் செம்முகம் ஐந்துளான்
சகட சக்கரத் தாமரை  நாயகன்
அகட சக்கர விண்மணி யாவுறை
விகட சங்கரன் மெய்ப் பதம் போற்றுவோம்.

என்று விநாயகர் காப்புப் பாயிரம் எழுதி முடித்தார்.

ஒரு நாளுக்கு 100 பாடல் என்று எழுதினார். இரவு முருகப்பெருமான் பாதத்தில் வைத்து வந்து விடுவார்.

மறு நாள் காலை வந்து எடுத்து மீண்டும் படிக்கும் போது  அவர் எழுதிய 
பாடல்களில்  ஆங்காங்கே  பிழைதிருத்தம் செய்யப்பட்டிருந்தது.இப்படியாக 
கச்சியப்பர் பாடல்கள் எழுதுவதும், முருகப்பெருமான் திருத்துவதுமாய் 10345 பாடல்களைப் பாடி முருகன் திருமேனிக்குப் பாமாலை சாற்றினார்.

நல்ல நாளில்  மன்னர்கள், புலவர்கள், புரவலர்கள் முன் அரகேற்றம் செய்ய
 முதல் பாடலை திகட  சக்கரச் செம்முகம் ஐந்துளான்' என்ற .பாடலை 
படித்தவுடன்  அதில் குற்றம் உள்ளது என்றதும், கச்சியப்பர் காப்பின் முதலடி முருகப்பெருமான் எடுத்துக் கொடுத்தது என்றதும், அப்படியானால் முருகப்பெருமானே அவை முன் வந்து  சொல்லட்டும் .தான் தான் அடி எடுத்து கொடுத்ததைச் சொல்லட்டும் என்றதும் கச்சியப்பர் நாளை உங்கள் 
கேள்விக்குப் பதில் தரப்படும் என்று சொல்லிவிட்டுப் போய் விட்டார்.

கச்சியப்பர் முருகனிடம் கண்ணீர் மல்கத் தியானம் செய்தார், நீங்கள் 
எடுத்துக் கொடுத்த அடிக்கு இலக்கண விளக்கம் சொல்ல வர வேண்டும்
 என்று பிரார்த்தனை செய்தார்.

அன்று இரவு கச்சியப்பர் கனவில் வந்து  "சுந்தரத் தமிழால் எமது புராணம்
 பாடிய  புலவா! வருந்த வேண்டாம்  விடிகின்ற பொழுது உமக்கு 
வெற்றியைத் தரும்  நிம்மதி கொள்வாய் என்று சொல்லி மறைந்தார்."

மறுநாள் அழகான தோற்றத்தில் ஏட்டுச்சுவடி ஏந்திச் சோழ நாட்டுப் புலவன்
 என்று சொல்லி முருகப்பெருமான்    வந்தார் . நேற்று நீங்கள் எழுப்பிய
 வினாவிற்கு விளக்கம் சொல்ல வந்து இருப்பதாய்ச் சொல்லி விளக்கம்
 சொல்லி அவர்கள் சந்தேகத்தைத் தீர்த்து மறைந்து விட்டார்.
அவையினர் பக்தனுக்காக இறைவனே முதலடி எடுத்துக் கொடுத்து அதற்கு விளக்கமும் சொல்லி மறைந்ததை வியந்து போற்றினர். 
கச்சியப்பருக்காக இறைவன் நடத்திய திருவிளையாடலை  எண்ணி வியந்து கச்சியப்பரைப் பாராட்டினர்.

அதன் பின் கச்சியப்பர் கந்தபுராணம் முழுவதும் பாடி அரங்கேற்றம்
செய்தார். மன்னர் விருதுகளும் , பொன்னும், பொருளும், கொடுத்து சில கிராமங்களையும்  தானமாகக்  கொடுத்தார். தங்கப் பல்லக்கில் அமர 
வைத்து  வீதி உலா வரவைத்து சிறப்பு செய்தார். கச்சியப்பர்  பல்லாண்டு
வாழ்ந்து முருகப்பெருமானைப்பாடிப் புகழந்து போற்றி அவர் திருவடி
அடைந்தார்.

கந்தபுராணம்  சம்பவகாணடம், அசுரகாண்டம், வீரமகேந்திரகாண்டம், யுத்தகாண்டம், தேவ காண்டம், தக்ஷகாண்டம் என்று ஆறு  காண்டங்களைக்  கொண்டது. 
ஆறு நாளும்  இவற்றைப் படித்துப் பலன் அடையலாம்.

                                            


கந்தன் வந்தான் கவிதை தந்தான் என்ற பாடல் இந்த பதிவுக்குப் 
பொருத்தமாய் இருக்கிறது என்று  போட்டு இருக்கிறேன்.
இது குமரகுருபர் சிறு குழந்தையாக இருக்கும்போது பேச முடியாமல்
திருச்செந்தூர் முருகப்பெருமான் அருளால் கவிதை பாடும் அருள் பெற்ற
 படத்தின் பாடல் என்று நினைக்கிறேன்.

வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!

17 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கு நன்றி.
      முருகா சரணம்

      நீக்கு
  2. கச்சியப்பர் எழுதிய கந்தபுராணத்தைப் பற்றித் தெரிந்துகொண்டேன். சமஸ்கிருதத்திலிருந்து தமிழில் எழுதிய அவரின் மேன்மை, முருகப்பெருமானின் கருணை.... சிலிர்க்கவைக்கும் சரிதம்.

    பதிவுக்கு ஏற்றபடி ஆறுமுகனின் திருவுருவம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்

      //சமஸ்கிருதத்திலிருந்து தமிழில் எழுதிய அவரின் மேன்மை, முருகப்பெருமானின் கருணை.... சிலிர்க்கவைக்கும் சரிதம்.//

      ஆமாம்.இறைவனின் கருணை.

      அந்த ஆறுமுகர் தான் ஆறு நாளும் பதிவு போட காரணம் ஆனவர்.

      நீக்கு
  3. 10,000 பாசுரங்களா? ஏ...அப்பா... ஒரு நாள் இவற்றில் சிலவற்றைப் படித்துப் பார்க்கவேண்டும். தெய்வ அனுக்ரஹம் இல்லாமல் இப்படி எழுதுதல் சாத்தியமே இல்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 10,000 பாசுரங்களா? ஏ...அப்பா... ஒரு நாள் இவற்றில் சிலவற்றைப் படித்துப் பார்க்கவேண்டும்.//

      அடுத்த பதிவில் பாடலை சேர்க்கிறேன்.

      தெய்வ அனுக்ரஹம் இல்லாமல் இப்படி எழுதுதல் சாத்தியமே இல்லை//

      ஆமாம், அவன் அருள் தான் கச்சியப்பரை எழுத வைத்து இருக்கிறது.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  4. கந்த சஷ்டி விழா இனிதே தொடக்கம்.  கந்தன் தமிழ்க்கடவுள் என்பார்கள்.  கந்தநாத் துதிக்கும் தமிழ்ப்பாக்கள் பல உச்சரிக்கவே சிரமமாக இருக்கும் வண்ணம் உள்ளவை.  கந்த புராணமும் அப்படிதான் இருக்கிறது.  முருகன் சன்னதியில் ஓய்வெடுக்கும் செல்லக்குட்டிகள் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம். இது எளிதாக இருக்கிறது.

      நீக்கு
    2. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

      //கந்த சஷ்டி விழா இனிதே தொடக்கம்.//

      ஆமாம். இன்று முருகன் கோயில்களில் விரதம் இருக்க காப்பு கட்டிக் கொள்வார்கள். .

      மூவிரு முகங்கள் போற்றி முகபொழி கருணை போற்றி
      ஏவரும் துதிக்க நின்ற ஈராறு தோள் போற்றி காஞ்சி
      மாவடி வைகும் செவ்வேள் மலரடி போற்றி அன்னான்
      சேவலும் மயிலும் போற்றி திருக்கை வேல் போற்றி.

      இந்த பாடல் எளிதாக இருக்கும் ஸ்ரீராம்.

      முருகன் சன்னதியில் ஓய்வு எடுக்கும் செல்லக்குட்டிகள் அழகுதான்.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  5. முருகனின் பதிவு அருமை காணொளி சிறப்பானது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  6. வணக்கம் சகோதரி

    பதிவு அருமையாக உள்ளது. சஷ்டியின் ஆரம்ப நாளான இன்று முருகன் படங்களும், முருகனை கந்த சஷ்டியில் வழிபடும் முறைகளை பற்றிய பதிவுமாக தொகுத்திருப்பது. அருமையாக உள்ளது. படங்கள் அனைத்தும் அழகாக இருக்கிறது. செல்லம் முருகனின் திருவருளால் கோவிலில் கவலையின்றி அமைதியாக நித்திரை கொள்கிறது. எந்த உயிருக்கும் அவன் துணை கிடைத்தால் போதும்.

    கச்சியப்பரின் வாழ்க்கை வரலாறும், அவருக்கு முருகனருள் கிடைத்த வரலாறும் அறிந்து கொண்டேன். ஒரு நாளைக்கு நூறு பாடல் வீதம் 10345 பாசுரங்களைப முருகனின் பரிபூரண அருள் பெற்றதால்தான் அவரால் நமக்கு கிடைத்தது. அவர் மேல்தான் முருகனுக்கு எவ்வளவு அன்பு என படிக்கும் போது மெய் சிலிர்க்கிறது. அவர் பாடியவற்றை படிக்க வேண்டும். இதுவரை படித்ததில்லை. தாங்கள் தினந்தோறும் பாடி பாராயணம் செய்து வருவது கண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். .

    ஆதிபராசக்தி படத்தில் வரும் இந்தப்பாடல் நிறைய தடவை கேட்டு ரசித்துள்ளேன். இப்போதும் கேட்டு மகிழ்ந்தேன். இறைவனின் திருவருள் பெற்றவர்களை இன்றைய பதிவில் அறிமுகப்படுத்தி பதிவை சிறப்பாக தொகுத்து தந்தமைக்கு மிக்க நன்றி சகோதரி. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்

      //பதிவு அருமையாக உள்ளது. சஷ்டியின் ஆரம்ப நாளான இன்று முருகன் படங்களும், முருகனை கந்த சஷ்டியில் வழிபடும் முறைகளை பற்றிய பதிவுமாக தொகுத்திருப்பது. அருமையாக உள்ளது. படங்கள் அனைத்தும் அழகாக இருக்கிறது.//

      நன்றி, பழைய பதிவு தான்.

      செல்லம் முருகனின் திருவருளால் கோவிலில் கவலையின்றி அமைதியாக நித்திரை கொள்கிறது. எந்த உயிருக்கும் அவன் துணை கிடைத்தால் போதும்.//

      நீங்கள் சொல்வது சரிதான். எல்லா உயிருக்கும் அவன் துணை இருந்தால் போதும்.

      //தாங்கள் தினந்தோறும் பாடி பாராயணம் செய்து வருவது கண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். //

      இந்த சஷ்டியிலிருந்து பாடல்களியயும் படிக்க எண்ணம் ஒரு சில பாடல்களே அடிக்கடி பாடுவேன். கந்த புராணம் மட்டும் படிக்கிறேன். 100 பக்கம் தினம் படித்தால்தான் 6 நாளில் முடிக்க முடியும்.
      நேற்று 68 பக்கம் தான் படித்தேன்.

      ஆதிபராசக்தி பட பாடலை கேட்டு மகிழ்ந்தது மகிழ்ச்சி.

      உங்கள் விரிவான கருத்துக்கு நன்றி சகோதரி.

      நீக்கு
  7. கந்த புராணம் நமது சொந்த புராணம் என்பார் வாரியார் ஸ்வாமிகள்..

    யாமோதிய கல்வியும் எம் அறிவும் தாமே பெற வேலவர் தந்ததனால் - என்பார் அருணகிரி நாதர்..

    அறநூல்களையும் அவற்றை ஆக்கித் தந்த மகான்களையும் மனதார வணங்குதலே அறம்..

    நாமும் அவ்வண்ணம் வணங்கி நிற்போம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்

      //கந்த புராணம் நமது சொந்த புராணம் என்பார் வாரியார் ஸ்வாமிகள்..//
      ஆமாம்.

      //யாமோதிய கல்வியும் எம் அறிவும் தாமே பெற வேலவர் தந்ததனால் - என்பார் அருணகிரி நாதர்..//

      ஆமாம், உண்மை., வேலவர் தந்ததுதான் .

      அறநூல்களையும் அவற்றை ஆக்கித் தந்த மகான்களையும் மனதார வணங்குதலே அறம்..//

      ஆமாம், மனதார வணங்கி நிற்போம்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  8. பதில்கள்
    1. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு