செவ்வாய், 1 நவம்பர், 2016

திருவிலஞ்சிக் குமாரர் கோயில்

சூரனுக்குக் காட்சி கொடுத்த விசுவரூப தரிசனமோ!


குற்றாலத்திலிருந்து இரண்டு கிலோ தொலைவில் உள்ளது. இந்த இலஞ்சி கோயில்.


இக் கோவிலின் தல வரலாறு 1943 - ம் வருடம்  கடையநல்லூர் உயர்நிலைப்பள்ளித் தமிழாசிரியர் திருவாளர். A நாறும்பூநாததேசிகர்   அவர்களால் எழுதப்பட்டது.  என் கணவரின் தாத்தா தான் இவர்கள். என் மாமியாரின்  அப்பா. 

                     

                                                                                    

தாத்தாவை வணங்கி அவர்கள் தொகுத்த தலவரலாற்றை சுருக்கமாய் இங்கு சொல்கிறேன்,

இலஞ்சி என்ற சொல் ஏரி, குளம், மடு, பொய்கை மதில் மகிழமரம் எனப்பல பொருள்படும்.இலக்கியங்களில் கவிகள் எத்தணையோ இடங்களில் இச்சொல்லை ஆண்டிருக்கிறார்கள். இப்போது  பேச்சு வழக்கில்  இப்பொருள்கள் காணப்படவில்லை, ஊரைக் குறிக்கும் ஆகுபெயராகவே  வழங்குன்றது.

 திரிகூட மலையின் வடகீழ்த் திசையிலே சந்தித்த காசிப  முனிவர், கபில முனிவர், துருவாசமுனிவர்   ஆகிய மூவரும் தத்துவ ஆராயச்சி செய்து கொண்டு இருந்தனர், அப்போது  அவர்களுக்கு ஏற்பட்ட வினாவிற்கு (இவ்வுலகம் உள் பொருளா  இல் பொருளா ?  )

முருகக் கடவுள், தன் என்றும் மாறா இளமை அழகுடன் தோன்றி   ”தானே மும்மூர்த்தியாகி மூவினையும் செய்வோம் ”என்று கூறி அவர்களது ஐயத்தை தீர்த்தார். மூன்று முனிவர்களும் இங்கேயே எழுந்தருளியிருந்து வழிபடுவோர் யாவருக்கும்  ஞானம் அளித்து விரும்பும் வரத்தைக் கொடுக்க வேண்டும் என்று கேட்கிறார்கள்.அதன்படி குமாரக் கடவுள் இத்தலத்தில்   எழுந்தருளினார்.  வரதராஜக்குமாரரென பெயர் இத்தல முருகனுக்கு. இன்றும் வேண்டுவார் வேண்டும் வரங்கொடுத்து அருள்கிறார். என்கிறது  ஒரு புராணக் கதை,   சிவபெருமான்  உமா தேவியார் ஆகியோரது திருமணத்தைப் பார்க்க யாவரும் இமயத்தில் கூடியதால் வடதிசை தாழ்ந்து தென் திசை உயர்ந்து விட்டதை  சரிசெய்ய அகத்தியரை  தென்னாடு செல்லப்பணித்தார்.

 அகத்தியரை, குற்றால நன்னகரியில் மாயவனாகிய  நம்மைச் சிவனாக்கி  பூசனை செய்,  அங்கே உனக்கு மணக்கோலமும், நடனமும் காட்டுகிறோம் என்று சொல்லி அனுப்புகிறார். அகத்தியர் தன்னால் முடியாத போது முருகனின்  உதவியை வேண்டுகிறார்.   அவர் சொன்னபடி   விஷ்ணுவை சிவனாக்கி வழிபட்டார்,   சிவார்ச்சனை செய்ய  28 ஆகமங்களை ஓதி வைத்தார் அகத்தியருக்கு.  

இப்படி இலஞ்சிக் குமரனின் பெருமைகள் நிறைய  சொல்லப்பட்டு இருக்கிறது தலவரலாற்றில். கொஞ்சம் மட்டும் கொடுத்து இருக்கிறேன்.

மூலவர் திரு . இலஞ்சி குமாரர்
(வரதராசப் பெருமான்)
சிவன்_  ஸ்ரீ இருவாலுக நாயகர்
அம்பாள் - ஸ்ரீ இருவாலுக  ஈசர்க்கினியாள்
ஸ்தல விருட்சம் - மகிழமரம்
விசேசமாய் சாற்றப்படும் பூ  செண்பகப்பூ
தீர்த்தம் - சித்திரா நதி.

அகத்திய முனிவரால் பிரதிட்டை செய்யப்பட்ட இருவாலுகநாயக்ரெனும் சிவலிங்கப் பெருமான் இத்தலத்தில் எழுந்தருளியிருக்கிறார். 

 அகத்திய முனிவர் பூஜை செய்ததும்  அருணகிரிநாதரால் பாடப்பெற்றுதுமான  வரலாற்று சிறப்பு வாய்ந்தது
இத்திருக்கோவில் .

 இங்கு நடக்கும் கந்த சஷ்டி விழாவைப்பற்றி மேலகரம் திரிகூட ராசப்பக் கவிராயர் தமது திருக்குற்றாலக் குறவஞ்சியில்  பாடி இருக்கிறார்.

திருக்குற்றாலத் தலபுராணத்தில்  வெற்றிவேற் குமரன் விரும்பி அமர்ந்த தலம் என்றும் , பிரம்மா, இந்திரன் குமரனை அர்ச்சித்து வாழ்ந்த இடம் என்று  குறிப்பிடுகிறது.

”திரு இலஞ்சி முருகனுலா”வில் இக்  கோவிலை சுற்றி இயற்கை அழகு சூழ்ந்து இருப்பதை  பாடுகிறது. இயற்கை எழில் சூழ்ந்து இருக்கும் அமைதியான இந்தத் தலத்திற்கு பலதுறையை சார்ந்தவர்களும் வந்து கண்டு களித்து செல்கிறார்கள்.

1951ல் இக்கோவிலில் ஓர் நூல்நிலையம் அமைக்கப்பட்டது. சமய நூல்கள், அறிவு நூல்கள் , புராண நூல்கள்  என்று பல உள்ளன.
சிந்தனை செய்வதற்கும், படிப்பதற்கும் ஏற்ற அமைதியான  இடமாய் இருப்பதால் இந்த கோவில் நூலகம் அமைக்கப்பட்டது.

சாண்டோ  திரு. M.M.A. சின்னப்பாத் தேவர் அவர்கள்  சுதை வேலைப்பாடு கொண்ட சண்முக பிரகாரம் கட்டி கொடுத்து இருக்கிறார்.

இக் கோவிலுக்கு தென்காசியிலிருந்தும்,, செங்கோட்டையிலிருந்தும் சிற்றுந்து  வசதி உள்ளது.

அருணகிரிநாதர் திருப்புகழ் நான்கு உள்ளது. 

”கரும்பணி கொண்டல் நெடுங்குழல் கண்டு 
                           துரந்தெரிகின்ற  விழிவேலால்”
என்ற பாடல்,

”கொந்தள ஓலை  குலுங்கிடவாளி”
என்று ஆரம்பிக்கும் பாடல்,

”கரங்கமலின் தரம்பவளம்வளை”
என்று ஆரம்பிக்கும் பாடல்

”மாலையில் வந்து மாலை வழங்கு”
என்று ஆரம்பிக்கும் பாடல்  ஆகியவற்றின் மூலம் 
இலஞ்சிக் குமரனின் பெருமைகளை அறியலாம்.

கோயில் வரலாற்றைப் பற்றி சரித்திர குறிப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் திருக்குற்றாலத் தல்புராணம், சுப்பிரமணிய பராக்கிரமம் , இலஞ்சி முருகன் உலா, இன்னுஞ் சில தனிப்பாடல்கள் மூலம் கோயிலைப் பற்றி செய்திகள் தெரிகிறது .


முகப்பு தோற்றம்
உள் கோபுர மாடத்தில் வள்ளி தெய்வானையோடு

வேலுண்டு வினை தீர்க்க, மயிலுண்டு பயம்  போக்க  
கணவர் தன்  தாத்தாபெயர் சொல்லி, தலவரலாறு அவர்கள்  எழுதியது  என்று குருக்களிடம் சொன்ன உடன் மாலை மரியாதை செய்தார் குருக்கள். மாலையுடன் பிரகாரம் வந்தார்கள் 

சுத்தமாகப் பராமரிக்கபட்ட வெளிச்சுற்றுப் பிரகாரம்
மணல் போல் பரவிக்கிடக்கும் நெற்குவியல், மழை காலம் என்பதால் பரப்பி வைத்து இருந்தார்கள்

பசுக்களை பராமரிக்க அதற்கு கொட்டகை அமைக்க மரத்தை வெட்டாமல்  அதனோடு அமைத்து இருப்பது மகிழ்ச்சி.
கன்று கீழே கிடக்கும் விளக்குமாற்றைப் பார்த்து மிரள்கிறதா?
என் கோவில் நீ எங்கே வந்தே என்று  கேட்பது தோன்றுகிறது பூனையின் பார்வை.

பசு, கன்று கண்கள் பளிச்சிடுகிறது கவிமணி தேசியவிநாயகம் பிள்ளை பாடல் நினைவுக்கு வருகிறதா? (தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு )

வெள்ளைப் பசு இல்லையே! சிவலைப் பசு அல்லவா? என்று கேட்காதீர்கள். நாவால் நக்குது  சிவலைப் பசு பாலை நன்றாக குடிக்குது கன்னுக்குட்டி.

கோவிலுக்கு முன் அழகான மண்டபம்
தேர் தார்ப்பாய் போட்டு கவனமாய் பாதுகாக்கப் படுகிறது
                            யானைப் பாகன் அலங்காரம் செய்கிறார் யானைக்கு

அலங்காரம் நன்றாக இருக்கிறதா?

இலஞ்சிக் குமரன் கோவிலிலிருந்து பார்த்தால் தெரியும் தென்காசி கோவில் கோபுரம் ,  வயல்கள் கண்களுக்கு குளுமையாகக் காட்சி அளிக்கிறது.

இயற்கை எழில் கொண்ட இலஞ்சிக் குமரனை வழி படலாம், பொதிகைத்

தென்றலை அனுபவிக்கலாம், குற்றால சீஸன் சமயம் குற்றாலம் சென்றால் அவசியம் சென்று பாருங்கள் .
----------------------------
வாழ்க வளமுடன். 



29 கருத்துகள்:

  1. 2007 ஆம் ஆண்டு சென்றிருந்தோம். அழகான சுற்றுச் சூழலோடு அமைதியும் கூடிய கோயில். மிகவும் ரசித்தோம். பக்கத்திலேயே உள்ள திருமலைக் கோயிலுக்குத் தான் நேரம் ஆகிவிட்டதென்பதால் காரோட்டி மேலே ஏற மறுத்து விட்டார். :(

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்.

    போன வருடம் தம்பி மகள் திருமணத்திற்கு தென்காசி சென்ற போது ஈண்டும் பல ஆண்டுகளுக்கு பின் இலஞ்சி குமரனை தரிசனம் செய்தோம்(திருமணம் ஆன புதிதில் போனது)
    மழை பெய்து கொண்டே இருக்கும் ஐப்பசி மாதம் என்பதால் வயல்கள் பச்சை பசேல் என்று பார்க்கவே அழகு, வாட்க்கால்களில் சல சல என தண்ணீர் போய் கொண்டு இருந்தது. நீர்டோடைகளில் நீர் பாய்ந்து சென்று கொண்டு இருந்தது பார்க்கவே அழகு.


    நானும் இன்னும் திருமலைக் கோயிலுக்கு போகவில்லை போக வேண்டும் .

    உடனே வந்து கருத்து சொன்னதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  3. அறியாத ஒரு அருமையான கோயிலை அறிமுகம் செய்தமைக்கு நன்றி! படங்கள் அழகு!

    பதிலளிநீக்கு
  4. புகைப்படங்களும் அதிகமான விபரங்களும் பதிவை அழகு படுத்துகிறது. ஆனால் இந்த இலஞ்சி குமரன் கோவில் எங்கேயுள்ளது என்று எழுதவில்லையே? நான்கு நாட்களுக்கு முன் தான் அகத்தியர் நீர்வீழ்ச்சிக்கும் தென்காசி காசி விஸ்வநாதர் கோவிக்கும் சென்று வந்தேன்!

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் தளிர் சுரேஷ், வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் மனோ சாமிநாதன், வாழ்க வளமுடன்.
    கடைசியில் தென்காசியிலிருந்தும், செங்கோட்டையிலிருந்தும் சிற்றுந்து வசதி உள்ளது இந்த கோயிலுக்கு செல்ல என்று குறிப்பிட்டு இருக்கிறேன்.
    இப்போது மேலே குற்றாலத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர்தொலைவில் உள்ளது என்று போட்டு விட்டேன்.

    நன்றி உங்கள் வரவுக்கும் கருத்துக்கும்.

    பதிலளிநீக்கு

  7. பூனை முதல் யானை வரை, மாடு கன்றுக்குட்டி உள்பட அனைத்துப்படங்களும், கோயில் பற்றிய செய்திகளும் அருமையோ அருமை. பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  8. வணக்கம் கோபால்கிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.

    //பூனை, முதல் யானை வரை //
    ரசித்தேன்.

    உங்கள் கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  9. பழமையான கோவில் மட்டுமில்லை, அழகிய கோவிலும் கூட என்று உங்கள் படங்களிலிருந்து தெரிகிறது. பின்னே முருகன் என்றாலே அழகு அல்லவோ! நான் ஸ்ரீவில்லிப்புத்தூர் தாண்டிச் சென்றதில்லை. தென்காசி, குற்றாலம், ராஜபாளையம் பார்த்ததில்லை.

    முருகா என்றழைக்கவா.. முத்துக்குமரா என்றழைக்கவா.. கந்தா என்றழைக்கவா.. கதிர்வேலா என்றழைக்கவா..

    எப்படி அழைத்தாலும் முருகன் வருவான்!

    பதிலளிநீக்கு
  10. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
    நீங்கள் சொல்வது போலு முருகனும் அழகுதான் முருகன் இருக்கும் இடமும் அழகு தான். கிளிகள், வண்ணத்து பூச்சி, என்று அழகாய் பறந்து கொண்டே இருந்தது. மலை அழகு, வயல் அழகு என் கண்களுக்கு கிடைத்த அழகை என் சின்ன காமிராவில் இவ்வளவு தான் பிடிக்க முடிந்தது.
    நேரம் கிடைக்கும் போது குடும்பத்தினருடன் ஒரு முறை தென்காசி, குற்றாலம், இலஞ்சி குமரன் கோவில் திருமலை கோவில் எல்லாம் சென்று வாருங்கள்.

    //முருகா என்றழைக்கவா.. முத்துக்குமரா என்றழைக்கவா.. கந்தா என்றழைக்கவா.. கதிர்வேலா என்றழைக்கவா..//

    பாடல் பகிர்வுக்கு நன்றி.
    எப்படி அழைத்தாலும் வருவான் என்பது உண்மை தான்.

    பதிலளிநீக்கு
  11. திருக்குற்றாலத்திற்கு பல வருடங்களுக்கு முன் சென்ற பொழுது குடும்பத்துடன் இந்தக் குமரன் கோயிலுக்குச் சென்று தரிசித்திருக்கிறோம். உணவருந்திய விடுதியில் 'போய்ப் பார்த்து விட்டு வாருங்கள்..' என்று சொன்னதால் தெரிந்தது.

    மாலை திருக்குற்றாலத்திலிருந்து கிளம்பினோம். ஆட்டோ பயணம். அடர்ந்த மரங்கள் அடர்ந்த பாதை. தென்னைகளையும் தலை சாய்க்க வைக்கும் காற்று. லேசாகத் தூற ஆரம்பிக்க இருட்டு வேறு கவியத் தொடங்கியிருந்தது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை நாங்கள் பயணித்த அந்த ஆட்டோ ஒன்று தான் அந்தப் பாதையில் வீசும் காற்றை சமாளித்துப் போய்க் கொண்டிருந்தது.

    திருமுருகன் அருள்ளால் 7 மணி வாக்கில் கோயில்லுக்குப் போய்ச் சேர்ந்து விட்டோம். சுற்று வட்டாரம் பூரா நல்ல இருட்டு. நல்லவேளை நடை திறந்திருந்தது. ஒரு விஐபி வந்திருந்ததினால் அவர்களைச் சார்ந்திருந்தவர்கள் உள்ளே சந்நிதியில் குழுமியிருந்தார்கள். "சீக்கிரம் போங்கள்.." என்று ஆட்டோக்காரர் அறிவுறூத்த ஓட்டமும் நடையுமாய் போய் தரிசனத்தில் கலந்து கொண்டோம். அழகன் முருகனின் அற்புதமான தரிசனம். மனசுக்கு நிறைவாக இருந்தது.

    திரும்பும் பொழுது அந்த சுழற்காற்று எங்கே போயிற்று என்று தெரியவில்லை. இருட்டி விட்டாலும் வானம் நிர்மலமாக இருந்தது. தூறலும் இல்லை. குற்றாலம் நெருங்க நெருங்க திரும்பி வந்த நேரம் வெகு குறைவாகத் தெரிந்தது.

    என்றும் நினைவிலிருக்கும் தரிசனம், திருவிலஞ்சி குமரர் கோயில் தரிசனம்.

    இதே குற்றால பயணத்தில் தரிசித்த தெங்காசி விஸ்வநாதர் பெருமானின் தரிசனமும் அந்தக் கோயில் அழகும் மனசில் அப்படியே படிந்திருக்கிறது.

    பதிலளிநீக்கு
  12. இலஞ்சிக்குமரன் திருக்கோவில்.. பெயரே அவ்வளவு அழகாக ரம்யமாக இருக்கிறது. அந்தக் காலத்திலேயே மிக அழகாக தலபுராணம் எழுதி வெளியிட்டிருக்கும் தாத்தாவின் ஆன்மீகப்பற்றுக்கும் தமிழுக்கும் தலைவணங்குகிறேன். நீங்கள் செல்லும் கோவில்களுள் பலவும் சுத்தமும் சுகாதாரமுமாகப் பேணப்படுவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. படங்களுடனான பதிவுக்கு மிகவும் நன்றி மேடம்.

    பதிலளிநீக்கு
  13. சிறு வயதில் கண்டு இருக்கிறேன். தலபுராணம் இப்போது தான் அறிகிறேன் நன்றி
    படங்களும் விளக்கமும் அருமை அம்மா தம 2

    பதிலளிநீக்கு
  14. வணக்கம் ஜீவி சார், வாழ்க வளமுடன்.
    நாங்கள் போனபோதும் மழைக்காலம் என்பதால் மழை தூறிக் கொண்டே இருந்தது.

    கதை ஆசிரியர் இல்லையா நீங்கள் ! அற்புதமாய் உங்கள் அனுபவத்தை விவரித்து இருக்கிறீர்கள்.

    குற்றால சாரல், பொதிகை மலை தென்றல் காற்று இரண்டும் சேர்ந்து மரங்களை தலை சாய்த்தும் தலை அசைத்தும் பாடவும், ஆடவும் வைக்கும்.

    நீங்கள் சிலப்பதிகாரம் எழுதுகிறீர்கள்,

    இலஞ்சி என்ற சொல் ஏரி, குளம், மடு, பொய்கை மதில் மகிழமரம் எனப்பல பொருள்படும். இலக்கியங்களில் கவிகள் எத்தனையே இடங்களில் சொல்லி இருக்கிறார்கள்.

    மணிமேகலை 11-ம் காதையில் மதுரை கூலவாணிக சாத்தனார், சிறப்பிக்கின்றார். இன்னும் இந்நூலில் “மாசறத் தெளிந்த மணி நீரிலஞ்சி “ “வண்டுண மலர்ந்த குண்டு நீரிலஞ்சி” யென்றும் வருகின்றன.


    ஒரு விஐபி வந்திருந்ததினால் அவர்களைச் சார்ந்திருந்தவர்கள் உள்ளே சந்நிதியில் குழுமியிருந்தார்கள். //"

    தலவரலாறில் அடிக்கடி விஐபிகள் வருவார்கள் என்றும் இங்கு வந்து தரிசிக்காத விஜபிகளே குறைச்சல் என்று சொல்கிறது.
    குற்றாலம் வந்து அறிஞ்ர் கவிஞ்ர் எல்லாம் இங்கு வந்து தமிழ் குமரனை சந்தித்து செல்வார்களாம்.

    உங்கள் வரவுக்கும் அனுபவ கருத்துக்கும் நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  15. வணக்கம் கீதமஞ்சரி, வாழ்க வளமுடன்.
    நீங்கள் சொல்வது போல் அழகான ரம்யமான இடம் தான்.
    நீங்கள் இந்த கோயிலுக்கு போனால் இன்னும் அழகான படங்களை தருவீர்கள்.
    சுத்தமும், சுகாதாரமும் இருந்தால் கோயில் பார்க்க பரவசமாய் இருக்கிறது.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  16. வணக்கம் உமையாள், வாழ்க வளமுடன், நலமா?
    உங்களை நீண்ட நாட்களுக்கு பின் பார்ப்பது மகிழ்ச்சி.
    நீங்கள் சிறுவயதில் பார்த்த போது இன்னும் அழகாய் இருந்து இருக்கும் கோயில்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும், தமிழ்மண வாக்கிற்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  17. சில ஆண்டுகளுக்கு முன் சபரிமலைக்குச் செல்லும்போது - வழியில் இலஞ்சிக்குச் சென்றோம்..

    ஆனாலும், தனுர் மாத பூஜைகளால் முன்னதாகவே திருக்கோயில் நடை சாத்தப்பட்டிருந்தது..

    தங்களின் பதிவினால் - இனிய தரிசனம்.. அழகிய படங்கள்..

    காலமெல்லாம் சிவத்தொண்டு புரியும் குடும்பம் தங்களுடையது.
    பதிவின் வழி சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி...

    வாழ்க நலம்!..

    பதிலளிநீக்கு
  18. இதுவரை சென்றதில்லை. அவசியம் ஒரு முறை செல்வேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  19. வணக்கம் ஜம்புலிங்கம் சார், வாழ்க வளமுடன்.
    நேரம் கிடைக்கும் போது சென்று வாருங்கள், பழமையான கோயில்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  20. இரண்டு மூன்று முறை குற்றாலம் சென்றிருக்கிறேன் ஆனால் அப்போது இக்கோவில் பற்றி அறிந்திருக்க வில்லை. அழகனின் கோவில் அழகாகவே இருக்கிறது போலும்

    பதிலளிநீக்கு
  21. வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு

  22. வணக்கம் துரை செல்வராஜூ சார், வாழ்க வளமுடன்.


    //சில ஆண்டுகளுக்கு முன் சபரிமலைக்குச் செல்லும்போது - வழியில் இலஞ்சிக்குச் சென்றோம்
    ஆனாலும், தனுர் மாத பூஜைகளால் முன்னதாகவே திருக்கோயில் நடை சாத்தப்பட்டிருந்தது..//

    அடுத்த முறை சபரிமலைக்குச் செல்லும்போது போய் வாருங்கள்.

    //காலமெல்லாம் சிவத்தொண்டு புரியும் குடும்பம் தங்களுடையது.
    பதிவின் வழி சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி...

    வாழ்க நலம்!//
    உங்களுடைய அன்பான கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி..

    பதிலளிநீக்கு
  23. அருமையான கோவிலும்...பசுமையான இடமும்....

    பதிலளிநீக்கு
  24. வணக்கம் அனுராதா பிரேம், வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  25. கோவில் தரிசனம் அருமை. 'நாறும்பூ'நாதர்' - அழகான தமிழ்ப்பெயர். நீங்கள் 'அகவும்' என்று உபயோகப்படுத்தும் தமிழ் வார்த்தையையும் ரசித்தேன். ஸ்ரீராம், 'பன்னிரு விழிகளிலே பரிவுடன் ஒரு விழியால் என்னை நீ பார்த்தாலும் போதும் முருகா' என்ற பாடலைத்தான் எழுதியிருப்பார் (முதல் படத்தைப் பார்த்ததும்) என்று எண்ணிப் பார்த்தால் வேறு பாடல் அவர் நினைவுக்கு வந்திருக்கிறது.

    பதிலளிநீக்கு
  26. வணக்கம் நெல்லை தமிழன், வாழ்க வளமுடன்.
    நாறும்பூநாதன் என்ற பெயரை முன்பே கேள்வி பட்டு இருப்பீர்களே
    உங்கள் முகநூல் நண்பர் நாறும்பூநாதன் என் சின்னமாமனார் திரு. ராமகிருஷ்ணன் அவர்களின் புதல்வர்.

    விராலிமலை பதிவில் மயில் அகவும் என்று எழுதியதை ரசித்தமைக்கு நன்றி.
    ஸ்ரீராமுக்கு ஆறுநாட்களும் பாடல் பகிர்ந்து கொண்டார்.
    உங்களுக்கு நினைவுக்கு வந்த பாடலும் எனக்கு பிடித்த பாடல்.

    விட்டு போன அத்தனை பதிவுகளுக்கும் வந்து கருத்து சொன்னதற்கு மிகவும் மகிழ்ச்சி, நன்றி.

    பதிலளிநீக்கு
  27. அருமை... நல்ல பதிவு...அழகான கோவில்...மனதுக்கு இதமான கோவில்... முருகன் என்றாலே இனிமை தான் 🪔🌿🪔

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கவின் குமார், வாழ்க வளமுடன்

      உங்கள் வரவுக்கும் கருத்துக்கு நன்றி.

      நீக்கு