செவ்வாய், 9 டிசம்பர், 2014

உறவுகள் - என்றும் தொடர்கதையே!

குடும்ப உறவுகள் பற்றி நிறைய பேசி இருந்தார்  உறவுகள் என்ற தன் பதிவில் திரு. ஜி.எம் .பாலசுப்பிரமணியம் சார். குடும்ப உறவுகளைப் பற்றி பெண்கள் பேசினால் நன்றாக இருக்கும் என்று வேறு சொல்லி எங்களை அழைத்து இருக்கிறார்.

பேணுவது பெண். உறவுகளைக் காலம் காலமாய்ப் பேணி வருவது பெண் தான்.அனுபவங்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கும்.  நடைமுறை வேறு,  அறிவுரை சொல்வது வேறு  என்று இல்லாமல்  குடும்பத்தில் பெரியோர் நடந்து காட்டிய பாதையில் நடந்து வருகிறோம்.
என் அப்பா குடும்பம் பெரிய குடும்பம்.  அண்ணன் தம்பிகள் எட்டு பேர், அக்காள், தங்கை மூன்று பேர்.  என் பெற்றோர்கள் அவர்களுடன் நல்லுறவுடன் இருந்து வந்தார்கள். இன்றும் என் தாய் தந்தையர் மறைந்த பின்னும் அப்பாவழி சொந்தங்கள் வந்து போய்க் கொண்டுதான் இருக்கிறார்கள். நல்லது கெட்டதில் கலந்து கொண்டு இருக்கிறார்கள். நாங்களும்  கலந்து கொள்கிறோம்.

என் அம்மா குடும்பம்   நான்கு பேர் அதில் , பெரியம்மா, பெரியமாமா எல்லாம் சிறு வயதில் நாங்கள் பிறக்கும் முன்பே இறந்து விட்டார்கள்.  பெரியமாமாவின் குழந்தைகளை என் அம்மாவும், சின்ன மாமாவும் பார்த்துக் கொண்டார்கள். சின்ன மாமா   இன்றும் எங்கள் குடும்பத்திற்கு உறவாய்  இருக்கிறார்கள். அவர்கள்  தன் அக்காளின் பேரக்குழந்தைகளின் கல்யாணத்திற்கும் திருவனந்தபுரத்திலிருந்து வந்து மகிழ்ச்சியாக கலந்து கொள்கிறார்கள். மாமாவின் மகள், மகள் வயிற்றுப் பிள்ளைகள் எல்லோரும் நட்புறவாய் இருக்கிறோம்.

முன்பு கடிதப் போக்குவரத்து , தொலைபேசி,  இப்போது விஞ்ஞானம் தந்த அருட் கொடையால், ஸ்கைப், வாட்ஸப்பில் உறவுகள் இன்னும் பலப்படுகிறது.   அப்பாவழி சொந்தங்களுக்கு ஒரு குரூப், அம்மாவழி சொந்தங்களுக்கு ஒரு குரூப் அமைத்துக் கொண்டு அவர்களிடம் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்கிறோம்.

எங்கள் பிள்ளைகளும் வெளி மாநிலத்திலும், வெளிநாட்டில் இருந்தாலும் அவர்களும் தங்கள் பெரியப்பா, சித்தப்பா, மாமா, சித்திகளுடனும், அவர்கள் குழந்தைகளுடனும் உறவாடி வருகிறார்கள். அவர்கள் வீட்டுத் திருமணங்களுக்கு வந்து செல்கிறார்கள். அவர்களும் வாட்ஸப்பில் குரூப் அமைத்துப் பேசிவருகிறார்கள். அவர்கள் ஊர்களுக்கு வரும் போது முடிந்தவரை அனைவரது வீட்டுக்கும் சென்று நலம் விசாரிக்கிறார்கள். அவர்கள் வரும் போது நடக்கும் விழாக்களில் கலந்து கொள்கிறர்கள். இதற்கு மேல் அவர்களிடம் நாம் எதிர்பார்க்கக் கூடாது.

என் கணவரின் கூடப்பிறந்தவர்கள் எல்லோரும் ஆண்கள் தான், ஆனால் சின்னமாமனார் வீட்டுப் பெண்குழந்தைகள் (நாத்தனார்)  அவர்களுடன் நல் உறவுடன் இருக்கிறோம்.  என் பிள்ளைகளும் சின்னதாத்தா வீட்டு பிள்ளைகள் சித்தப்பாக்கள், அத்தைகளுடன்  அவர்கள் பிள்ளைகளுடன் உறவாடி மகிழ்கிறார்கள்.

என் உடன்பிறந்தவர்கள் அக்கா, அண்ணன், தம்பி, தங்கைகள் என்று பெரிய குடும்பம். அவர்களுடன் நல் உறவுடன்  இருக்கிறோம்.

என் அம்மா சொல்வார்கள், முன் ஏர் போகும் பாதையில் பின் ஏர் போகும் என்று. நாம் எப்படியோ அப்படித்தான் நம் பிள்ளைகள் இருப்பார்கள்.
ஏர் பத்தி தெரியாதவர்களுக்கு இப்போது அடிக்கடி சொல்லும் வார்த்தை பெற்றோர்கள் ரோல்மாடலாக இருக்க வேண்டும் என்று.

 எங்கள் அப்பாவின்  வீட்டில் எல்லோரும் அரசாங்க உத்தியோகம், காவல்துறை, சுங்கதுறை, வக்கீல்கள்,என்று.  தாத்தாவும் காவல்துறையில்
உயர்பதவியிலிருந்து ஓய்வு பெற்று இறைவனடி சேர்ந்தார்கள்.  எல்லோரும் வேறு வேறு ஊர்களில் தான். சின்னப்பெரியப்பா மட்டும் சொந்தத் தொழில் என்பதால்  பாட்டியுடன் இருந்தார்கள். பாட்டி சாகும் வரை மகிழ்ச்சியாக எல்லா மகன் வீட்டுக்கும் வந்து போய்க்கொண்டு இருந்தார்கள். என் சித்தப்பாவீட்டில் இருந்தபோது  பாட்டி இறந்து போனார்கள்.

என்  மாமனார் .மாமியாருக்கு ஐந்து மகன்கள் . எல்லோரும் வெவ்வேறு ஊரில் வேலை பார்க்கிறார்கள். நாள் கிழமைகளில் எல்லோரும் மாமியார் வீட்டில் கூடிப் பண்டிகைகளையும்  கொண்டாடி மகிழ்வோம். இப்போது மாமனார் தன் 105 ஆவது வயதில் இறந்து போனார்கள் அத்தையைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பை அனைவரும் மாற்றி  மாற்றிச் செய்து வருகிறோம்.

உறவுகள் பலப்பட முன்னோர் செய்த ஏற்பாடுகள்:-

ஒரு திருமணம் என்றால் மணப்பெண்ணின் சகோதரனுக்கு, மணமகனின் சகோதரிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. எங்கள் பக்க வழக்கத்தின்படி  பெண்ணின் நாத்தனார்க்குச் சடங்குகளில் முக்கிய பங்கு அளிக்கப்படுகிறது, கல்யாணத்திற்கு முன் செய்யும் சடங்கிலும், திருமணத்திற்கு பெண்ணுக்கு முகூர்த்தப்புடவை கட்டி விடுவது , மூன்று முடிச்சில் ஒரு முடிச்சு போடுவது, அதன் பின் வரும் அனைத்து சடங்கிலும் அவள் பங்கு பெரிது.
சொந்தநாத்தனார் இல்லையென்றாலும், சின்னமாமனார் அல்லது பெரியமாமனாரின் பெண் அந்த சடங்குகளுக்கு வருவாள். மறுநாள் அவளுக்கு ’நாத்தனார் பலகாரம்’ என்று  தனியாகக் கொடுக்கப்படும். ஒவ்வொரு சடங்கையும் அவள் செய்யும் போது அவளுக்கு ’நாத்தனார் சுருள்’ என்று பெண்வீட்டாரால் பணம்  கொடுக்கப்படும்.

அது போல்  பெண்ணின் சகோதரனுக்கு மாப்பிள்ளை அழைத்து வருவது, கல்யாணப் பந்தலில் பொரி இடுவது, மற்றும் இரவு  நலுங்கு வைப்பது,மாப்பிள்ளைக்கு  மோதிரம் போடுவது என்ற சடங்குகள் உண்டு, அதற்கு மாப்பிள்ளை வீட்டில் துணிமணிகொடுத்து  மோதிரம் போடுவார்கள்.  பெண்ணிற்கு  உடன்பிறந்தவன் இல்லையென்றால், பெண்ணின் சித்தப்பா, பெரியப்பா  பிள்ளைகள் உதவுவார்கள். இதற்கு குடும்பம் ஒற்றுமையாக இருந்தால் தான் முடியும்.

அடுத்து,  குழந்தைப் பேறு.  இதில் முதல் உரிமை கணவனின்  சகோதரிக்கு. குழந்தைக்கு அத்தை காப்பிடவேண்டும். அப்புறம் தான் மற்ற உறவுகள் நகை அணிவிப்பார்கள்.

அதற்கு அடுத்து மொட்டையடித்து காது குத்துதல் . அதற்குப் பெண்ணின் சகோதரனுக்கு முதல் உரிமை.  அவனுடைய  மடியில் அமர்த்தித்தான் மொட்டையடித்தல், காது குத்துதல்.  அவனுக்குத்தான் முதல்மரியாதை. அப்புறம் தான் மற்றவர்கள்.

பின்.  பெண்குழந்தை பூப்பு அடையும் போது, கணவனின் சகோதரி முதல் தண்ணீர் விடுவாள், சடங்கின் போது மாமன் தரும் புடவை, அல்லது சிற்றாடையைத்  தான் முதலில் கட்டுவாள் . மாமன் சீர் முக்கியம். அத்தைமகள், அல்லது அத்தையை மாப்பிள்ளை மாதிரி பக்கத்தில் உட்கார்த்தி வைத்து  சடங்குகள் செய்வார்கள்.

பெண் பிறப்பு முதல் இறப்பு வரை இரு வீட்டு உறவுகளும் வேண்டும். அதன் படி தான் சடங்குகளை அமைத்து ஒற்றுமையாக இருக்க வைத்திருக்கிறார்கள். தன் அக்காள், தங்கைகளுக்கு பொங்கல், தீபாவளி , கார்த்திகை என்றும் செய்ய வேண்டும்.  அவளின் மாமனார், மாமியார் தவறிப் போனால் அவர்களுக்குச் சாவு வீட்டிலும் சடங்குகள் இருக்கிறது.  அவள் இறந்து போனாலும் பிறந்தவீட்டுக் கோடி போட்டபின் தான் மற்றவர்கள் போடலாம்.
இப்படிப் பிறப்பு முதல், இறப்பு வரை உறவுகளைப் பின்னிப் பிணைத்து வைத்தி ருக்கிறார்கள்.

நா. பார்த்தசாரதி அவர்கள்  ”வலம்புரிச்சங்கு” என்ற கதையை எழுதியிருக்கிறார், அந்தக் கதையில் கடலில் மூழ்கி  வலம்புரிச் சங்கு எடுப்பவர் ஆழமாக போகவேண்டும் .அதை எடுக்கப் போகும்
 ஆளின் வயிற்றில் கயிறைக் கட்டி கயிறின் மறுமுனையை மேல் இருக்கும்
 ஆளிடம் கொடுப்பார்களாம். அது யார் என்றால் சங்கு எடுக்கப்போயிருக்கும் ஆளின் மச்சினன் தான். தன் சகோதரியின் வாழ்வு அவன் கையில் தான் இருக்கிறது. சகோதரியின் வாழ்வை எண்ணி அவன் அதைப் பத்திரமாய் பிடித்துக்கொள்வான் என்று காலம் காலமாக நம்பப்படுகிறது.

விதிவிலக்குகள் இருக்கலாம், குடும்பத்தில் பகைமை பாராட்டிக் கொண்டு அண்ணன், தம்பி வரப்பு தகராறு, மாமன், மச்சான் சொத்து பிரச்சினை என்று
சகோதர சகோதரிகளுக்கு இடையில் உறவு சுமுகம் இல்லாமல்.  அதை ஏன் நாம் பேச வேண்டும்? அது மாதிரியான செய்திகள் மகாபாரத, இராமாயண காலத்திலும் உண்டு. ஒருநாள் இல்லையென்றால் ஒருநாள் உறவுகளின் மேன்மையை புரிந்து கொள்வார்கள்.

இந்தக் காலத்தில் கூட்டுக் குடும்ப முறை சாத்தியம் இல்லை.  ஏனென்றால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஊரில் , ஒவ்வொரு நாட்டில் பணி நிமித்தமாய்
செல்லவேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகிவிட்டது.   நாள் கிழமைகளில் கூடிக் கொண்டு, நல்லது, கெட்டதுகளில் கலந்து கொண்டு அன்பாய் உறவாடி இருந்தாலே போதும்.

முதியோர்கள் தனியாகத்தான் இருக்க வேண்டி உள்ளது. அதை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் வேண்டும்.  கூடவே தாய், தந்தையரை  வைத்துக் கொள்பவர்களாக  இருந்தாலும் இப்போது பெரும்பாலும் கணவன், மனைவி வேலைக்குப் போகிறார்கள். அவர்கள் தனியாக வீடுகளில் வயதான பெற்றோர்களை விட்டுப் போவதும் பாதுகாப்பற்றதாகும்.  அதற்கு அக்கம் பக்கத்தில் நல் உறவுடன் இருந்தால் பயமில்லை.இல்லையென்றால் அதுவும் பயம் தான்.

 எனக்குத் தெரிந்தவர் ஒருவர்  வசதியானவர், குழந்தைகள் உண்டு. ஆனால் மகளும், மருமகனும் வேலைக்குப் போகிறார்கள், பெரிய வீட்டில் தனியாக  இருக்க முடியாது என்று முதியோர் இல்லத்தில் சகல வசதிகளுடன் இருக்கிறார்கள். அவர்களை ஏன் இப்படி தனியாக இருக்க வேண்டும் ? என்று கேட்டால், ”தனியாக இல்லையே! நிறைய பேருடன் பயமில்லாமல் இருக்கிறேன், விடுமுறை நாளில் மகள் வந்து அழைத்து போவாள், அங்கு
 குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக் இருந்து விட்டு பிறகு இங்கு வந்து விடுவேன் என்கிறார்கள்.  சில நேரங்களில் இது போன்ற புரிதலும் அவசியம்.

                                 

 கதம்பசரத்தில் கட்டப்படும்     ஒவ்வொரு மலருக்கும் ஒவ்வொரு வாசனை உண்டு , தனித் தன்மை உண்டு.   அது போல் குடும்பம் ஒரு கதம்பம், ஒவ்வொரு மனிதர்களும் குணநலனில் வித்தியாசப்படுவார்கள். அவரவர்களுக்கு என்று ஒரு தனித்தன்மை உண்டு. அப்படி எல்லோரையும் அன்பு என்ற நாரால் கட்டிவைக்க முயலவேண்டும். எல்லோரையும் அனுசரித்துக் கொண்டு , விட்டுக் கொடுத்தல், சகிப்புத் தன்மை  இருந்தால் குடும்ப உறவுகள் நலமாக இருக்கும்.

                                                         வாழ்க வளமுடன்.
                                                                    --------------

56 கருத்துகள்:

  1. வாழ்க வளமுடன்.

    உறவுகள் பற்றி சிறப்பாக
    நிறைவுடன் பகிர்ந்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  2. குடும்பம் ஒரு கதம்பம், ஒவ்வொரு மனிதர்களும் குணநலனில் வித்தியாசப்படுவார்கள்.
    unmai..
    Vetha.Langathilakam.

    பதிலளிநீக்கு
  3. விரிவான அற்புதமான ஆழமான அலசலுடன்
    கூடிய பதிவு
    முடித்தவிதம் மிக மிக அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. [[[என் அம்மா சொல்வார்கள், முன் ஏர் போகும் பாதையில் பின் ஏர் போகும் என்று. நாம் எப்படியோ அப்படித்தான் நம் பிள்ளைகள் இருப்பார்கள். ஏர் பத்தி தெரியாதவர்களுக்கு இப்போது அடிக்கடி சொல்லும் வார்த்தை பெற்றோர்கள் ரோல்மாடலாக இருக்க வேண்டும் என்று.]]

    அப்பா சாமி! ஒரு பெரிய குடும்பக்கதையையே சொல்லியிருக்கிறீர்கள். .

    எப்பவுமே நம் குழந்தைகளை எவ்வளவு மட்டாமாக படித்தாலும்---பரிட்சையில் "முழு" வாந்தி எடுத்து நல்ல மார்க் வாங்கா விட்டாலும் வேறு யாருடனும் ஒப்பீடு செய்யக்கூடாது!

    தமிழ்மணம் ஒட்டு +1

    பதிலளிநீக்கு
  5. காலத்திற்கேற்றபடி குடும்ப அமைப்புகளும் மாறுகின்றன.எது நல்லது என்பதைவிட அந்த சூழ்நிலைக்கு எது பொருத்தமானது என்பதற்கே முக்கியத்தும் தரப்படுகிறது. மிக சிறப்பாக எடுத்துக் கூறி இருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  6. குடும்ப உறவுகள் பற்றிய சிறப்பான பதிவு. எது நல்லது என்பதை விட சூழ்நிலைக்கு எது பொருத்தமானது என்பதற்கே முக்கியத்துவம் தரப்படுகிறது
    அருமை

    பதிலளிநீக்கு
  7. // அன்பு என்ற நாரால் கட்டி வைக்க வேண்டும்... //

    இதைவிட என்ன வேண்டும்...?

    பதிலளிநீக்கு
  8. அருமை சகோதரியாரே
    விட்டுக் கொடுத்து வாழப் பழகுவோம்
    அருமை
    Word verification நீக்கினால் நலமாக இருக்கும் சகோதரியாரே

    பதிலளிநீக்கு
  9. நா. பார்த்தசாரதி அவர்கள் எழுதிய ”வலம்புரிச் சங்கு” என்ற கதையை நினைவுபடுத்தி உறவுகளின் மகத்துவத்தை அறியத் தந்திருக்கின்றீர்கள்..

    இந்தக் கதை புகுமுக வகுப்பில் துணைப்பாடத்தில் இடம் பெற்றிருந்தது.

    இனிய பதிவு.. வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  10. குடும்பம் ஒரு கதம்பம் என்பதனை அழகாகச் சொன்னீர்கள். பெண்ணிற்கு தாய் வீட்டு உறவு எப்படி இருக்க வேண்டும் என்பதனை பிறப்பு முதல் கோடிவரை, மற்றும் சங்கெடுத்தல் என்று விவரமாகச் சொன்னதற்கு நன்றி.
    த.ம.5

    பதிலளிநீக்கு
  11. எல்லாவற்றையும் அழகா சொல்லி கதம்பம் எப்படி இருக்கும் என புரிய சொல்லி விட்டீர்கள் சகோ

    பதிலளிநீக்கு
  12. வணக்கம்
    அம்மா.
    தொடக்கம் முதல் முடிவு வரை மிக அருமையாக உள்ளது கதை இறுதியில் சொல்லி முடித்த விதம் சிறப்பு..
    கவிதையாக என்பக்கம் வாருங்கள் அன்போடு

    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: எப்போது மலரும்…………….:

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  13. அருமையான கருத்துகள். இன்றைய மாற்றங்கள் அவசியமானது என ஒரு பக்கம் இருந்தாலும் அதன் மறுபக்கமும் உள்ளது. ஆனால் எதுவுமே நாம் எப்படி எடுத்துக் கொள்கிறோம் என்பதில் தான் உள்ளது. நல்லதொரு அலசல்.

    பதிலளிநீக்கு
  14. வேர்ட் வெரிஃபிகேஷன் உங்க வலைப்பக்கத்தையும் விடலை. ஆனால் நான் வேர்ட் வெரிஃபிகேஷன் இல்லாமலே பின்னூட்டத்தை வெளியிடுகிறேன். போகிறது. ஒண்ணும் பிரச்னை இல்லை. :))))

    பதிலளிநீக்கு
  15. வணக்கம் இராஜராஜேஸ்வரி, வாழ்க வளமுடன்.

    உங்கள் கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  16. வணக்கம் வேதா.இலங்காதிலகம், வாழ்க வளமுடன்.

    உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  17. வணக்கம் ரமணிசார், வாழ்க வளமுடன்.

    சார், அழைத்தார் என்று எழுதி விட்டேன். இன்னும் இருவர் இருக்கிறார்கள். அவர்கள் எழுதுவார்கள்.
    உங்கள் கருத்துக்கும் நல்வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  18. வணக்கம் நம்ளக்கி, வாழ்க வளமுடன்.
    நீங்கள் சொல்வது சரிதான். குழந்தைகளை அடுத்த குழந்தைகளுடன் ஒப்பீடு செய்யக்கூடாது தான்.
    முடிந்தவரை பாராட்டிக் கொண்டே இருக்க வேண்டும். சின்ன செயலாக இருந்தாலும் பாராட்டி உச்சி மோந்தால் போதும் குழந்தைகளை.
    உங்கள் கருத்துக்கு, தமிழ்மண வாக்கிற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  19. வணக்கம் மூங்கில் காற்று முரளிதரன், வாழ்க வளமுடன்.

    குடும்ப உறவுகள் என்றால் சொந்தங்கள், கணவன்,மனைவி உறவு, குழந்தைகள் பெற்றோர் உறவு
    இன்னும் எவ்வளவோ சொல்லிக் கொண்டு போகலாம். ஒவ்வொரு
    உறவுகளும் அதன் அதன் மதிப்பை உணர்ந்து நடந்து கொண்டாலே போதும் என்று நினைக்கிறேன்.

    நீங்கள் சொல்வது போல் சூழநிலைக்கு ஏற்ற மாதிரியும் மாறுகிறது. என்பது உண்மைதான்
    எழுத்தாளர் திருமதி ராஜம்கிருஷ்ணன் அவர்கள் நட்சத்திர எழுத்தளாராக, ஒரு என்ஜினீயரின் மனைவியாக குறையில்லாத வாழ்க்கை வாழ்ந்து சொத்து,சுகம் இருந்தும் அவரது கடைசி காலம் குழந்தைகளும் இல்லாமல் உறவினர்களால் வஞ்சிக்கப்பட்டது படிக்கும் போது வருத்தம் ஏற்படுகிறது. இவர்கள் இருக்கும் பணத்தை வைத்து நன்கு பார்த்துக் கொள்ளும் முதியோர் இல்லத்தில் தங்கி இருந்தால் கடைசிகாலம் இப்படி ஆகி இருக்காது. யாரும் இல்லாத போது அது போன்ற இடங்கள் பாதுகாப்பு என்று நினைக்கிறேன்.

    உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  20. வணக்கம், திண்டுக்கல்தனபாலன், வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  21. வணக்கம் கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.
    Word verification நான் வைக்கவில்லை அதுவாய் வந்து இருக்கிறது. உங்கள் பதிவுக்கு பின்னூட்டம் போடும் போது இப்படி காட்டியது. ஆனால் அதை அடிக்காமல் பின்னூட்டம் போட்டேன் உங்களுக்கு போய் விட்டது.

    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  22. மிக விரிவான அலசல். கூட்டுக்குடும்பம் இன்றைய நிலைக்கு ஏன் ஒத்து வராது என்பதை நீங்கள் சொல்லியிருக்கும் விதத்தையும் ஆமோதிக்கிறேன்.

    திருமணங்கள் பற்றியும், அவற்றில் உறவுகளுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவங்கள், காரணங்கள் பற்றியும் சிறப்பாகச் சொல்லி இருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  23. வணக்கம், துரைசெல்வராஜூ சார், வாழ்க வளமுடன்.

    ஆம, இந்தக் கதை புகுமுக வகுப்பில் துணைப்பாடத்தில் இடம் பெற்ற கதைதான்..

    என் கணவர் கல்லூரியில் பாடம் நடத்திய புத்தகம் தான் அது.

    உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  24. வணக்கம் தி.தமிழ் இளங்கோ சார், வாழ்க வளமுடன்.
    உங்கள்கருத்துக்கும், தமிழ்மணவாக்கிறகும் நன்றி.

    பதிலளிநீக்கு
  25. வணக்கம் உமையாள் காயத்திரி, வாழ்க வளமுடன்.

    உங்கள் வரவுக்கும்,கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  26. வணக்கம் ரூபன், வாழ்க வளமுடன்.

    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி. உங்கள் தளத்தில் கவிதை படித்து விட்டேன்.

    பதிலளிநீக்கு
  27. வணக்கம் கீதாசாம்பசிவம், வாழ்கவளமுடன்.
    //எதுவுமே நாம் எப்படி எடுத்துக் கொள்கிறோம் என்பதில் தான் உள்ளது.//

    உண்மைதான்.
    உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

    //நான் வேர்ட் வெரிஃபிகேஷன் இல்லாமலே பின்னூட்டத்தை வெளியிடுகிறேன். போகிறது. ஒண்ணும் பிரச்னை இல்லை. :))))//

    நானும் அப்படித்தான் கீதா வெளியிடுகிறேன் ஒண்ணும் பிரச்னை இல்லை.



    பதிலளிநீக்கு
  28. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
    ஊரிலிருந்து வந்து விட்டீர்களா?
    போன பதிவில் சாரின் ஓவியம் இடம்பெற்றது.

    ஸ்ரீராம் என் ஓவியத்தைப்பற்றி என்ன சொன்னார் என்று கேட்டார்கள். ஸ்ரீராம் ஊருக்கு போய் இருக்கிறார் அதனால் பதிவுக்கு வரவில்லை என்றேன்
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி..


    பதிலளிநீக்கு
  29. என் வேண்டுகோளுக்கு இணங்கி பதிவு வெளி இட்டதற்கு நன்றி. நீங்கள் ஆல் போன்ற குடும்ப அமைப்பு பறியும் அதன் சிறப்பு பற்றியும் எழுதி இருக்கிறீர்கள் /இந்த குடும்ப மரத்தின்
    அங்கத்தினர்கள் ஆலின் விழுதுகளுக்கு ஒப்பாவார்கள். ஒவ்வொரு
    வரும் ஒரு தனி மரமாக இல்லாமல் தோப்பாக மாறி கிளைவிட்டு ,
    விழுதூன்றி, உறவுகளை பலப் படுத்த வேண்டும்./ என்று நான் எழுதி இருந்தேன். ஆனால் நடைமுறை வாழ்க்கை முறைகள் எல்லாம் அவ்வளவு பசுமையாக இல்லை என்பதே நிஜம். நேர் செய்யும் பொறுப்பு பெண்களிடம்தான் இருக்கிறது என்பது என் கட்சி. ஆனால் அவர்களே இது நடைபெறாமல் செய்கிறார்களோ என்பது என் யூகம். என்வேண்டுகோளுக்கு இணங்கி பதிவு எழுதியவர்கள் அவர்களின் பின்புலத்தையே காட்டி உறவுகளின் உன்னதங்களை மட்டுமே எழுதி இருக்கிறார்கள். உறவு முறைகள் முன்போல் இல்லை என்பது அநேகமாக அனைவரும் உடன்படும் கருத்தே. யாரையும் சுட்டிக் காட்ட விரும்பாத பதிவுகளே வருகின்றன. பதிவு எழுதியவர்கள் சென்ற தலை முறையைச் சார்ந்தவர்கள் என்பதும் ஒரு காரணமாயிருக்கலாம் மீண்டும் நன்றி.

    பதிலளிநீக்கு
  30. வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.

    உங்கள் குடும்ப பெண்களிடம் (உறவினர் குடும்பத்தில் உள்ள பெண்களிடம்) ஒரு வினா பட்டியல் தயார் செய்து விவரங்களை தொகுத்து தர வேண்டுகிறேன் உங்கள் பதிவில்.

    //பதிவு எழுதியவர்கள் சென்ற தலை முறையைச் சார்ந்தவர்கள் என்பதும்
    ஒரு காரணமாயிருக்கலாம்//

    நீங்கள் சொல்வது போல் சென்ற தலைமுறையிடம் கேட்காமல் இளைய தலைமுறையிடம் கேட்டுப்பாருங்கள்.
    நன்றி .


    பதிலளிநீக்கு
  31. //விட்டுக் கொடுத்தல், சகிப்புத் தன்மை இருந்தால் குடும்ப உறவுகள் நலமாக இருக்கும்.//
    அருமையா சொன்னீங்கக்கா .எங்க குடும்பத்தை விட்டு வெளிநாட்டில் மணமாகிபோன ஒரே பெண் நான் மட்டுமே புகுந்த வீட்டில் அனைவரும் இங்கே இருப்பது அனுசரணை ஒரு சப்போர்ட் .அழகான பதிவை சந்தோஷமா வாசிச்சேன்

    பதிலளிநீக்கு

  32. உறவுகள் பற்றி அழகாக நிறைவுடன் சொல்லி இருக்கிறீர்கள் பாராட்டுக்கள்.
    அன்புடன்
    கில்லர்ஜி

    பதிலளிநீக்கு
  33. வெகு அருமையாகப் பதிவு செய்திருக்கிறீர்கள் கோமதி. குடும்ப உறவுகள் நாற்பது வருடங்களுக்கு முன்பு போல இல்லை என்றாலும் ஓரளவு தாக்குப் பிடித்துதான் வருகிறோம். வீட்டுப் பெண்ணை மதித்தால் நாட்டுப் பெண் நன்றாக இருப்பாள் என்பதெ நல்கருத்து. உங்கள் குடும்பம் இதே போல என்றும் அருமையாக இருக்கவேண்டும்.

    பதிலளிநீக்கு
  34. உறவுகளின் மேன்மையையும் அதைப் பலப்படுத்திக் கொள்ள பின்பற்றப்படும் முறைகளையும் அனுசரித்துச் செல்ல வேண்டிய அவசியத்தையும் அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். நல்ல பதிவு.

    பதிலளிநீக்கு
  35. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்.

    காலம் முன்பு போல் இல்லையே !

    நாமும் காலத்துக்கு ஏற்றமாதிரி மாறிக் கொண்டோம். அதனால் தாக்குபிடிப்போம்.
    முன்பு போல் இல்லையென்றாலும், இப்போது உள்ள குழந்தைகள் வேறு மாதிரி தங்கள் அன்பை செலுத்தி வருகிறார்கள்.

    நீங்கள் சொல்வது உண்மை, //ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்// என்பதற்கு அர்த்தம் நம் வீட்டுக்கு வந்த மருமகளை நன்கு பார்த்துக் கொண்டால் நம் மகள் நன்கு வாழ்வாள் என்பார்கள்.
    வீட்டுப்பெண்ணை மதித்தால் நாட்டுபெண்ணும் நன்றாக இருப்பாள் என்பதால் தான் வீடு நலம் பெற்றால் நாடு நலம் பெறும் என்றார்கள் போலும்.
    உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி அக்கா.

    பதிலளிநீக்கு
  36. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.

    உங்கள் கருத்தை அழகாய் சொல்லியது மகிழ்ச்சி அளிக்கிறது.
    நன்றி ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  37. ஒவ்வொரு உறவின் ம்கஹ்த்டுவமும் உங்கள் பதிவில் தெளிவாகத் தெரிகிறது. உரிமை, கடமை இரண்டையும் அன்பு என்னும் கண்ணிற்குத் தெரியாத நூலிழைக் கொண்டு தொடுத்தால் , விளைவது மகிழ்ச்சியே !
    வாழ்த்துக்கள் கோமதி

    பதிலளிநீக்கு
  38. வணக்கம் ராஜலக்ஷ்மி பரமசிவம், வாழ்க வளமுடன்.

    நீங்கள் சொல்வது போல் அன்பு எனும் நூலிழை அறுபடாமல் பாதுகாத்தால் போதும் உறவுகள் மேம்படும்.

    பதிலளிநீக்கு
  39. உறவுகளைப் பற்றிய தொடர் பதிவு. தங்கள் கருத்துக்கள் ஆழமானதாக இருந்தன.

    பதிலளிநீக்கு
  40. வணக்கம் டாகடர் ஜம்புலிங்கம் சார், வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  41. உறவுகளை பற்றி மிக அருமையான பகிர்வு
    ஊரில் என் அம்மா வீட்டில் எங்க சித்தி அத்தை எல்லாம் , எங்க அப்பா போன பிறகும் அவரக்ளை வரவழைத்து எல்லாரும் ஒன்றாக மாதம் ஒரு முறையேனும் கூடி மகிழ்வாரக்ள் என் அம்மா, அதே போல் பிள்ளைகள, பேரன் பேத்திகளை அனைவரையும் வாரம் ஒரு முறை வரவழைத்து எல்லோரும் ஒன்று கூடி கொள்வாரக்ள்.அதே போல் என் மாமியார் வீட்டிலும், வாரம் ஒருமுறை அனைவரும் ஒன்று கூடுவாரக்ள் வீடு ஜே ஜேன்னு இருக்கும் பிள்ளைகளுக்கும் கொண்டாட்டமாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  42. எல்லா உறவுகளையும் பேணும் நோக்கோடு உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து முன்னோர்கள் விழாக்களை சிறப்பித்து வந்த அழகை மிகவும் அற்புதமாக எழுதியுள்ளீர்கள்.

    ஒருநாள் நாம் குழம்பு வைக்கும் பக்குவம் மாறிப்போனாலே வீட்டில் விமர்சனம் செய்வார்கள். ஆனால் வேறு ஊரில் பிறந்து மாறுபட்ட வாழ்க்கைச்சூழலில் வளர்ந்த பெண்களாகிய நாமோ திருமணத்துக்குப் பின்னரான வாழ்க்கை சூழலை அனுசரித்து வாழ்வதோடு புதிய உறவுகளையும் பேணி அனுமசரிக்கும் மனப்பக்குவத்தையும் பெற்றிருக்கிறோம்.

    ஒரு சில இடங்களில் புரிதலின்மை காரணமாக பிரச்சனைகள் எழலாம். ஆனால் அதையே ஒட்டுமொத்த பெண்களின் இயல்பாக கொள்வது சரியன்று.

    மிக அழகாக ஆணித்தரமாக குடும்ப உறவின் மேன்மைகளை எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள். பாராட்டுகள் மேடம்.

    பதிலளிநீக்கு
  43. எல்லா உறவுகளையும் பேணும் நோக்கோடு உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து முன்னோர்கள் விழாக்களை சிறப்பித்து வந்த அழகை மிகவும் அற்புதமாக எழுதியுள்ளீர்கள்.

    ஒருநாள் நாம் குழம்பு வைக்கும் பக்குவம் மாறிப்போனாலே வீட்டில் விமர்சனம் செய்வார்கள். ஆனால் வேறு ஊரில் பிறந்து மாறுபட்ட வாழ்க்கைச்சூழலில் வளர்ந்த பெண்களாகிய நாமோ திருமணத்துக்குப் பின்னரான வாழ்க்கை சூழலை அனுசரித்து வாழ்வதோடு புதிய உறவுகளையும் பேணி அனுமசரிக்கும் மனப்பக்குவத்தையும் பெற்றிருக்கிறோம்.

    ஒரு சில இடங்களில் புரிதலின்மை காரணமாக பிரச்சனைகள் எழலாம். ஆனால் அதையே ஒட்டுமொத்த பெண்களின் இயல்பாக கொள்வது சரியன்று.

    மிக அழகாக ஆணித்தரமாக குடும்ப உறவின் மேன்மைகளை எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள். பாராட்டுகள் மேடம்.

    பதிலளிநீக்கு
  44. வனக்கம் வெங்கட், வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  45. வணக்கம் ஜலீலா , வாழ்க வளமுடன்.
    நீங்கள் சொல்வது கேட்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது ஜலீலா.
    பார்க்கத, பேசாத உறவு பாழ் என்பார்கள். இப்படி அடிக்கடி சந்தித்து உறவாடுவது உறவை பலபடுத்தும்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  46. வணக்கம் கீதமஞ்சரி, வாழ்க வளமுடன்.

    நன்றாக சொன்னீர்கள். புதிதாக திருமணம் ஆகி வந்தபெண்ணிடம் எங்கள் வீட்டுப் பழக்க வழக்கம் இப்படி என்றும், சமையல் இப்படி இருக்க வேண்டும் அப்பதான் எல்லோருக்கும் பிடிக்கும் என்று முன்பே சொல்லி விடுகிறார்கள்.

    என் அம்மா வைக்கும் குழம்பு போல் இல்லையென்றவுடன் மாமியாரிடம் கேட்டு சமைத்து தருகிறோம்.

    கணவர் உறவுகளுடன் இருக்க மனைவி உறவுகளை விட்டு பிரிந்து வந்து கணவன் குடும்பம் தான் தன் குடும்பம் என்று சொல்கிறாள்.
    கணவன் வீட்டை தன் வீடு என்றும் இவ்வளவு நாள் பிறந்து வந்த வீட்டை தன் வீடு என்று சொல்லாமல் அம்மா வீடு என்கிறாள்.

    சார் தலையணை மந்திரம்செய்யும் பெண்களைப் பற்றி குறிப்பிட வில்லை என்கிறார், அப்படிபட்ட பெண்களின் பேச்சை ஏன் கேட்க வேண்டும் இந்த ஆண்கள். நடுநிலை வகிப்பவராக இருபக்க உற்வுகளையும் பேணுபவராக ஆணும் இருக்கட்டுமே!
    பெண்கள் இருபக்க உறவுகளையும் பேணுவது போல். உறவுகளை சுமுகமாய் வைத்துக் கொள்வதில் இருவருக்கும் பங்கும் உண்டு என்பதை உணர வேண்டும்.

    //ஒரு சில இடங்களில் புரிதலின்மை காரணமாக பிரச்சனைகள் எழலாம். ஆனால் அதையே ஒட்டுமொத்த பெண்களின் இயல்பாக கொள்வது சரியன்று//

    நீங்கள் சொல்வது போல் புரிதல் இல்லையென்றால் குடும்ப ஓற்றுமை கடினம் தான்.

    மாமியார் மருமகள், மருமகள், மாமியார் இருவரிடமும் புரிதல், விட்டுக் கொடுத்தல் ஒருத்தரை ஒருத்தர் மதித்தல், இருந்தால் நன்றாக இருக்கும் உறவு.



    மாமானார், மருமகன், மருமகன் மாமானரிடமும் புரிதல், விட்டுக் கொடுத்தல், ஒருத்தரை ஒருத்தர் மதித்தல் இருந்தால் நன்றாக இருக்கும் உறவு.
    உங்கள் வரவுக்கும், அருமையான கருத்துக்கும் நன்றி கீதமஞ்சரி.









    பதிலளிநீக்கு


  47. உறவுகள் தொடர்கதை தான் என்றாலும் இப்போது எல்லாமே மாறிவிட்டதே!
    குடும்பங்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டுமென்றே அந்த காலத்தில் உறவுக்குள் திருமணம், அத்தைக்கு, மாமாவிற்கு முக்கியத்துவம் என்றெல்லாம் வைத்திருந்தார்கள். இப்போது குழந்தைகளுக்கு மாமா அல்லது அத்தை என்று ஒரு உறவு தான். தங்கை தம்பி, அக்கா அண்ணா என்ற உறவுகளே இல்லாமல் போய்விட்டதே!
    ஒரே குழந்தையைப் பெற்றுவிட்டு அவனும் வெளிநாட்டில் வேலை என்றால் அம்மா அப்பா முதியோர் இல்லத்தைதான் நாடவேண்டும். எத்தனை மாற்றங்கள்!

    பதிலளிநீக்கு
  48. வணக்கம் ரஞ்சனி, வாழ்க வளமுடன்
    உறவுகள் சுருங்கி விட்டது தான். என்ன செய்வது ?

    இருக்கும் உறவுகளை பலபடுத்திக் கொள்ள வேண்டியது தான்.

    மாற்றம் ஒன்றுதான் மாறாதது.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  49. வணக்கம்
    இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் பார்வையிட முகவரி இதோhttp://blogintamil.blogspot.com/2014/12/2009.html?showComment=1418843328533#c6833658329650163781

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு

  50. சகோதரி தங்களை வலைச்சரத்தில் கோர்த்திருக்கிறேன் வருகை வந்து காண அழைக்கிறேன்
    அன்புடன்
    கில்லர்ஜி

    பதிலளிநீக்கு
  51. வாழ்க வளமுடன் ரூபன்.
    வலைச்சர அறிமுகத்தகவலுக்கு நன்றி ரூபன்.

    பதிலளிநீக்கு
  52. வாழ்க வளமுடன் ரூபன்.
    வலைச்சர அறிமுகத்தகவலுக்கு நன்றி ரூபன்.

    பதிலளிநீக்கு
  53. வாழ்க வளமுடன் கில்லர்ஜி.
    வலைச்சரத்தில் அறிமுகபடுத்தியதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  54. //என் அம்மா சொல்வார்கள், முன் ஏர் போகும் பாதையில் பின் ஏர் போகும் என்று. நாம் எப்படியோ அப்படித்தான் நம் பிள்ளைகள் இருப்பார்கள்.// :)

    உறவுகள் பற்றிய கட்டுரை அருமை.

    பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  55. வணக்கம், வை.கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.

    ஓய்வு எடுத்து விட்டீர்களா?

    உங்கள் கருத்துக்கு நன்றி. பாராட்டுக்கள், வாழ்த்துக்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு