வெள்ளி, 5 டிசம்பர், 2014

கலைமகளும் சில நினைவலைகளும்


இன்று கி.வா.ஜ என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்டவர் கி.வா.ஜகந்தாதன்  அவர்கள்.  போனமாதம் 4ம் தேதி அவரின் நினைவு நாள்.
முன்பு நாங்கள் கலைமகள் பத்திரிக்கை  வாங்குவோம். அவற்றில் சிலவற்றை மட்டும் வைத்துக் கொண்டு மற்றவற்றைப் போட்டு விட்டோம்.
கி.வா ஜ  அவர்கள் எழுதிய  ’ஆலமரத்துச் சாமியார்’ கதை நன்றாக இருக்கும். படித்திருப்பீர்கள், மறுபடியும் படித்துப் பாருங்களேன்.



                   

         
                 
கதையை மட்டும் கிழித்து வைத்து இருந்து இருக்கிறேன். 1983 ஆம் வருடம்     கலைமகளில் வந்த கி.வா.ஜ அவர்களின் ஆலமரத்துச் சாமியார்  கதை, அவர் நல்ல நகைச்சுவை உணர்வு உடையவர் என்பதைக் காட்டும்.

கலைமகளில் வந்த  அமரர் ராமரத்னம் நினைவுப் பரிசு பெற்ற   குறுநாவல்   புத்தகங்கள் சில வைத்து இருக்கிறேன்.







என் மாமியாரின் தகப்பனார்  திரு. நாறும்பூநாததேசிகர் அவர்கள் தென்காசி போர்டு உயர்நிலைபள்ளியில் தமிழாசிரியராக இருந்தார்கள். அவர்கள் 1932 ல் கலைமகள் பத்திரிக்கையின் முதல் இதழ் வெளிவந்தபோது,அப்போது தன்னிடம் படித்த மாணவர்களைக் கலைமகள் புத்தகம் படிக்கச்சொல்லி கூறியதாகப் பிரபல எழுத்தாளர் மாயாவி அவர்கள்  1983 ல் வந்த கலைமகளில் சொல்லி இருந்தார். அப்போது நாங்கள் சர்க்குலேசன் புத்தகம் வாங்கிப் படிப்போம். அனைத்து புத்தகங்களும் கொண்டு வந்து கொடுப்பார், சிலவற்றை புதிதாகக் கொடுப்பார், சிலபுத்தகம் கொஞ்சம் பழசாய் வரும். அப்படி இரண்டு வாரம் கழித்து கொடுத்த கலைமகளில் தாத்தாவைப் பற்றி மாயாவி குறிப்பட்டது இருந்தது.  என் கணவர் கடையில் போய் கேட்டுப் பார்த்தார்கள் கிடைக்கவில்லை. அப்போது அந்த சர்க்குலேசன் புத்தகம் தருபவரிடம்  எல்லோரும் படித்தவுடன் என்னிடம் கொடுங்கள் என்று கேட்டு இருக்கலாம், அப்படி கேட்க அப்போது தெரியவில்லை, அவசர அவசரமாக அதை என் டைரியில் எழுதிக் கொண்டு கொடுத்து விட்டேன் அவரிடம். அவசரம் இல்லாமல் மெதுவாக எழுதினால் கொஞ்சம் எழுத்து பார்க்கும்படி இருக்கும் அவசரமாய் எழுதினால் எழுத்து கோழிக்கால்தான் !

அந்த டைரியில் பத்திரிக்கைகளில் வந்த  கோலம், சமையல் குறிப்புகள் எல்லாம்   இருக்கும். என் எழுத்து சரியாக புரியவில்லை என்றாலும். அதை இங்கு பகிர்ந்து இருக்கிறேன்.





                                                          
                                                            திரு.  நாறும்பூநாத தேசிகர்

மாயாவி அவர்கள் சொன்னது:-
//எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அப்பொழுது நான் தென்காசியில் போர்டு உயர்நிலைப்பள்ளியில் நான்காவது பாரம் படித்துக் கொண்டிருந்தேன், என் விருப்பப் பாடம் தமிழ். எங்களுக்குத்தமிழ்ப்பண்டிதராக இருந்தவர் திரு. நாறும்பூநாததேசிகர் என்பவர்.   மாணவர்கள் நாவல்களையும் பத்திரிக்கைகளையும் படித்துக்கெட்டுப் போகின்றனர் என்ற கருத்துடையவர்
அவர். இவ்வளவுக்கும் அன்று பத்திரிக்கைகள் என்று சொல்லும் ஒரு சிலவே வெளிவந்தன.

அப்படிப் பட்டவர்  ஒருநாள் தமிழ் வகுப்பில் “நான் இதுவரை உங்களிடம் பத்திரிக்கைகளைப் படிக்காதீர்கள் என்று சொல்லிவந்தேன், ஆனால்  அதே நான் இப்போது இந்த பத்திரிக்கையைத் தவறாமல் வாங்கிப் படியுங்கள் என்று சிபாரிசு செய்கிறேன்.” என்று தம்மிடமிருந்த மஞ்சள் அட்டையிட்ட கலைமகளின் முதலாவது இதழைக் காட்டினார். பிறகு விளக்கமும் தந்தார்.
ஏனென்றால் மற்ற பத்திரிக்கைகளிலிருந்து மாறுபட்டு இருக்கிறது. இலக்கணப் பிழையற்ற நல்ல தமிழில் இதில் விஷயதானம் செய்யப்பட்டிருக்கிறது. தமிழ்ச்சான்றோர் பலர் இதில் தொடர்ந்து எழுதுவார்கள் என்று முதல் இதழ் கூறுகிறது. இலக்கியம் விஞ்ஞானம் பொழுதுபோக்கு கட்டுரைகள் கதைகள், முதலிய யாவரும் படிக்கும் முறையில் வெளியாகும்.
“ஆம், யாவரும் படிக்கும் முறையில்” என்று திரு. நாறும்பூநாத தேசிகர் அன்று கூறியது இன்றளவும் கலைமளின் குறிக்கோளாக இருந்து வருவதை யார்தான் மறுக்க முடியும்? . //

என் எழுத்தைப் படிக்க முடியாதவர்கள் டைப் செய்த  இந்த அழகான எழுத்தில் படிக்கலாம்.
                             
இப்படி எல்லாம்  குறித்து வைத்துக் கொண்டு புத்தகங்களை வாங்கிப் படித்து இருக்கிறேன். தொடர்கதைகள் விட்டுப்போகாமல் இருக்க.

அமெரிக்கா போய் இருந்த போது கி.வா,ஜவின் பேத்தியை (மூத்த மகன் அவர்களின் மகள்) வித்யாசுவாமிநாதன் அவர்களை  சந்தித்தேன்.(குடும்ப நண்பர்)அவர்கள் வீட்டுக்கு உணவு உண்ண அழைத்து இருந்தார்கள், அவர்களிடம் கி.வா.ஜவின் நினைவுகளைப்பற்றி சொல்லுங்கள் என்றேன் அவர்கள், கி.வா.ஜ அவர்களை சந்திக்க,  பெரிய தமிழ் அறிஞர்கள் வருவார்கள் என்றும், சிரிக்க சிரிக்க இலக்கியம் சார்ந்த கலந்துரையாடலாக அது இருக்கும். நான் அப்போது சிறுமி இதன் பெருமைகளை உணர்ந்து இருக்கவில்லை. இப்போது தான் என் தாத்தா எவ்வளவு பெரிய மனிதர் என்று தெரிகிறது என்று கூறினார்கள்.
நானும் என் கணவரின் தாத்தா தன் மாணவர்களைக் கலைமகள் படிக்கச் சொன்ன நிகழ்ச்சியை அவரிடம் பகிர்ந்துகொண்டேன்
கி.வா.ஜ அவர்களும்  துணைவியாரும் சேர்ந்த படம், தனியாக அவர் படம் எல்லாம் காட்டினார்கள். உடல் நிலை சரியில்லாமல் இருக்கும் போதும் தன் புத்தக அலமாரி அருகில் தான்  படுக்கை.அவரது  புத்தக அலமாரியில் எவ்வளவு புத்தகங்கள் ! அத்தனையும் படித்து முடித்தவுடன் திரும்பவும் அழகாய் புத்தக அலமாரியில் அடுக்கி வைப்பராம்.
 தன் பாட்டி அவரை நன்கு கவனித்துக் கொண்டதாகச் சொன்னார். கி.வா.ஜ முருக பக்தர் என்பதால்,  அவரது நினைவு நாளில் அஞ்சலி செலுத்தியபோது அவர்விரும்பிய  முருகனும் அவர் அண்ணனும்  கி.வா.ஜ  அருகில் இருக்கிறார்கள்.



                                               

கலைமகளில்” தலையில் சூடிய மலர்” என்று நவம்பர் 2014 கலைமகளில் கி.வா.ஜ பற்றி கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன் அவர்கள் சொன்னது.:-

ஒருமுறை தீபாவளி மலரை எடுத்துக் கொண்டு கலைமகள் அதிபர் ஆர். நாராயணஸ்வாமி கலைமகள் ஆசிரியர் கி.வா.ஜ. இருவரும் வட இந்தியா பக்கம் போனார்கள். காஞ்சிப் பெரியவர் முகாம் இட்டிருந்த அந்த ஊரை அடைந்து அவரிடம் சமர்ப்பணம் செய்தார்கள்.

பொதுவாக எந்த ஒரு நூலை வாங்கிக் கொண்டாலும் காஞ்சிப் பெரியவர் அதனைப் புரட்டுவது வழக்கம். படிப்பதும் வழக்கம். மங்கலப் பிரசாதங்களை அந்த நூல் மேல் வைத்து எழுதியவருக்கும் வந்தவர்களுக்கும் கொடுப்பதும் வழக்கம். கலைமகள் தீபாவளி மலரைக் கையில் எடுத்து அதனைத் தலையில் வைத்துக் கொண்டார்கள். உடனே அதனை எடுத்து உதவியாளரிடம் கொடுத்துவிட்டார். கலைமகள் அதிபரிடமோ ஆசிரியரிடமோ எதுவும் பேசவில்லை!

கி.வா.ஜ. அவர்களுக்கு மனவருத்தம். என்னடா பெரியவர் தலையில் வைத்துப் பாரத்தை இறக்குவதைப் போல இறக்கி வைத்துவிட்டாரே என்று எண்ணினார். கூட்டம் கலைந்த பின்பு அதிபர் நாராயணஸ்வாமி சொன்னார்.
"இப்போ பெரியவாளை போய்ப் பார்ப்போம். உத்தரவு மற்றும் பிரசாதம் பெற்றுக் கொண்டு கிளம்புவோம்' என்று.

தங்கியிருந்த வீட்டின் பின்புறம் சாக்குகளின் மேல் அமர்ந்து கொண்டு கலைமகள் தீபாவளி மலரைப் படித்துக் கொண்டிருந்தார் பெரியவர்.
அப்பாடா' என்று பெருமூச்சு விட்டனர் அதிபர் நாராயணஸ்வாமியும், கி.வா.ஜ.வும். அருகில் அழைத்தார்! "என்ன விஷயம்? மலர் நன்றாக வந்திருக்கிறது. இந்தாங்கோ பிரசாதம் எடுத்துக்குங்கோ' - பெரியவர் சொன்ன பிறகு மனதுக்குள் ஆனந்தம் பிறந்தது என்கிறார் இப்போது எங்களுக்குப் பதிப்பாளராகவும் கலைமகள் இலக்கியக் குடும்பத் தலைவராகவும் இருக்கும் ஆர். நாராயணஸ்வாமி.

"பெரியவா நமஸ்காரம். நாங்கள் தீபாவளி மலரைச் சமர்ப்பித்ததும் தலையில் வைத்துக் கொண்டீர்களே? - ஏன்?' இது கி.வா.ஜ. கேள்வி.

"மலர்கள் சூடவேண்டிய இடம் எது' இது பெரியவாளின் பதில்.
"தலையில்தான் மலரைச் சூட வேண்டும்' - இது கி.வா.ஜ. குரல்.

"ஒப்பற்ற மலரைத் தந்துள்ளீர்கள். தலையில் சூடினேன். இது ஓர் அறிவுப் பெட்டகம். அறிவார்ந்த விஷயங்களும் தலைக்கு உள்ளே போக வேண்டியது தானே வாஸ்துவம்' இது பெரியவா!

ஆஹா எப்பேர்ப்பட்ட மரியாதையை எப்பேர்ப்பட்ட அபிப்பிராயத்தை கலைமகள் மீது பெரியவர் கொண்டு உள்ளார்கள் என்று உணர்ந்து கி.வா.ஜ.வும், ஆர். நாராயணஸ்வாமியும் நமஸ்கரித்துப் பிரசாதங்கள் பெற்று விடைபெற்றார்களாம்.

இன்று கி,வா.ஜ  அவர்கள் பற்றிய நினைவுகளையும், என் மலரும் நினைவுகளையும் பகிர்ந்து கொண்டேன்.
                                                               வாழ்க வளமுடன்!

----------------------


55 கருத்துகள்:

  1. மரியாதைக்குரிய கி.வா.ஜ. அவர்களைப் பற்றி நினைவு கூர்ந்ததில் மிகவும் மகிழ்ச்சி..

    கல்கி மட்டுமே வாங்குவோம். ஆயினும் கலைமகள் இதழ் நூலகத்திற்கு வரும். தாங்கள் குறிப்பிட்டுள்ள இந்தக் கதையை நான் படித்திருக்கின்றேன்.

    எங்கள் தமிழாசிரியர் திருமிகு. கி.பாலசுந்தரம் ஐயா அவர்களும் - தமிழறிவு வளர்வதற்கு கலைமகள் படியுங்கள்.. - என்று கூறியதை இப்போது எண்ணி வியக்கின்றேன்..

    நல்ல விஷயங்களுடன் இன்றைய பதிவு அருமை.. வாழ்க நலம்!..

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்
    அம்மா

    அறியாத விடயங்கள் தங்களின் பதிவு வழி அறிந்தேன்... பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  3. கி,வா.ஜ அவர்கள் பற்றிய நினைவுகளையும்,தங்கள் மலரும் நினைவுகளையும் பகிர்ந்து கொண்டது இனிமை..

    பதிலளிநீக்கு
  4. அக்கா!..
    மலரும் நினைவாக அருமையான பொகிஷப் பெட்டகம் திறந்து காட்டியுள்ளீர்கள்!
    அத்தனையும் இரத்தினங்கள்!

    மிகச் சிறப்பு! அதிலும் ஆச்சரியப்பட்டுப் போன விடயம் என்னவென்றால் எப்ப எந்தப் புத்தகம் படித்தேன் என லிஸ்ட்டுப் போட்டு மார்க் பண்ணியது!..:)
    உங்கள் வாசிப்பு எத்தகையது என ஆச்சரியப்பட்டேன் அக்கா!..

    தீபத்திருநாள் நல் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு

  5. நல்ல விசயங்களை பகிந்தமைக்கு நன்றி
    தீபத்திருநாள் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  6. அந்தக் காலத்தில் நானும் வாசிக்கும் புத்தகங்கள்
    பெயர் எழுதி வைப்பதுண்டு. அது மட்டுமல்ல
    அதில் வரும் பொன் மொழிகளையுமு; எழுதி
    வைப்பதுண்டு. நன்று சகோதரி நல்ல பதிவு.
    நிறைய விடயங்கள் அறிந்தேன். நன்றி.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  7. கி,வ.ஜ உ,வே சாமிநாதைய்யரின் மாணாக்கர் என்று எங்கோ படித்தது நினைவு. 1966-67 என்று நினைக்கிறேன். நாராயணஸ்வாமி ஐயர் நினைவுப் போட்டிக்கு நாவல் ஒன்று எழுதி அனுப்பி அது போகாமலேயே நான் ஏமாந்தது நினைவுக்கு வருகிறது

    பதிலளிநீக்கு
  8. சுவாரஸ்யமான தகவல்களுடனான பகிர்வு. டைப் செய்ததில் வாசித்தபின் உங்கள் எழுத்தில் வேகமாக வாசிக்க முடிகிறது. சேமிப்பிலிருந்து கதையைப் பகிர்ந்திருப்பதற்கு நன்றி. வாசிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  9. தங்களது இந்தப் பதிவு என் பழைய நினைவுகள் பலவற்றைக் கிளறி கடந்த கால நினைவுகளில் மூழ்கச் செய்தது. அதற்காக ஸ்பெஷல் நன்றி.

    பழைய 'கலைமகள்' இதழ்களின் தொகுப்புகளை ஆசை ஆசையாகச் சேர்த்து வைத்திருக்கிற உங்கள் ஈடுபாடு உங்கள் வாசிப்பு ஆர்வத்தைச் சொல்கிறது. அந்த இதழ்களின் அட்டைப்படங்களை காட்சிக்குள்ளாக்கிய ஆர்வத்திற்கு நன்றி.

    தி.ஜானகிராமன், அகிலன் போன்ற பழம்பெரும் எழுத்தாளர்கள் 'கலைமகளி'ல் நிறைய எழுதி வாசகர் உலகிற்கு அறிமுகமானவர் கள். அந்தக் காலத்தில் 'கலைமகளு'ம், 'அமுத சுரபி'யும் தமிழ் எழுத்துகிலகிற்கு பங்காற்றிய பாங்கை இப்பொழுது நினைத்துப் பார்த்தாலும் பெருமூச்சு தான் வெளிப்படுகிறது.

    திரு கி.வா.ஜ.வுடன் எனக்குப் பழக்கமுண்டு. இயல்பாக அவர் பேசும் பொழுதே சிலேடையாக வார்த்தைகள் வந்து விழும். உவேசாவின் தலை மாணாக்கர்.
    சிறந்த ரசிகர். தமிழின் மரியாதைக்குரிய பண்பாளர். மயக்கும் சொல்லாட்சி கொண்டவர்.

    தங்கள் மாமியாரின் தகப்பனார் திரு. நாறும்பூநாத தேசிகர் பற்றிய அரிய தகவல்கள் இப்பொழுது தான் அறிந்தேன். சந்தோஷம்.

    அவரின் மாணாக்கராய் இருந்து தன் ஆசிரியரைப் பற்றிக் குறிப்பிட்ட
    எழுத்தாளர் மாயாவி எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர். என் பதிவு தள எழுத்தாளர் பகுதியில் மாயாவி அவர்களைப் பற்றி எழுத வேண்டுமென்று எனக்கு நிரம்பவும் ஆசை. அதற்கான தகவல்களைத் திரட்டிக் கொண்டிருக்கிறேன். 1950-1960 கால கட்டத்தில் கலைமகளில் நிறைய எழுதியவர் மாயாவி. பம்பாய் வாசி. 'குமுத'த்தில் பம்பாய் கடற்கரையில் ஆரம்பிக்க மாதிரி ஆரம்ப அத்தியாயம் கொண்டு ஒரு நாவல் எழுதினார். நிழல் போல நினைவிருக்கிறது. அவரைப் பற்றி நினைக்கும் பொழுதெல்லாம் அந்த நாவல் நினைவுக்கு வரும். மனசில் ஆழப் பதிந்து உள்வாங்க வைக்கும் என்ன எழுத்து என்கிறீர்கள்?.. இப்பொழுதும் எழுதுகிறார்களே! என்னதான் கால மாற்றம் என்றாலும் மனம் பொங்கத் தான் செய்கிறது.
    'மாயாவி' படைப்புகள் ஏதாவது உங்கள் வசம் இருந்தால் தெரிவிக்க வேண்டுகிறேன்.

    உங்கள் நினைவலைகளை வாசிப்புக்கு உள்ளாக்கியதற்கு மிகவும் நன்றி, கோமதியம்மா.

    பதிலளிநீக்கு
  10. சுவாரஸ்யமான பதிவு. கொஞ்சம் வேகமாகப் படித்துவிட்டு ஓடுகிறேன்! வெளியூர் செல்வதால் அவசரம்! :)))

    பதிலளிநீக்கு
  11. கி.வா.ஜா அவர்களின் நினைவினைப் போற்றுவோம்

    பதிலளிநீக்கு
  12. நானும் கலைமகள் படிப்பதுண்டு.உங்களுடைய கலெக்ஷன் மலைக்க வைக்கிறது. புத்தகம் படிப்பதில் உங்களுக்கு இருக்கும் ஆர்வம் வெளிப்படுகிறது கோமதி. தொடருங்கள் உங்கள் புத்தக வாசிப்பை......

    பதிலளிநீக்கு
  13. சுவாரஸ்யமான பதிவு.கலைமகள் முன்பு படித்து இருக்கிறேன். கி.வா.ஜ அவர்களை நினைவு கூர்ந்ததில் மகிழச்சி.தீபத்திரு நாள் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  14. வணக்கம் துரைசெல்வராஜூ சார், வாழ்க வளமுடன்.

    எங்கள் தமிழாசிரியர் திருமிகு. கி.பாலசுந்தரம் ஐயா அவர்களும் - தமிழறிவு வளர்வதற்கு கலைமகள் படியுங்கள்.//

    அந்தக் கால ஆசிரியர்களுக்கு மணவர்கள் மேல் இருந்த அக்கரையும், தமிழின் மேல் உள்ள பற்றும் வியக்க வைக்கிறது.
    நல்லவைகளை குழந்தைகள் பின் பற்றவேண்டும் என்ற எண்ணமும் அதில் தெரிகிறது.
    உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  15. வணக்கம் ரூபன், வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  16. வணக்கம் இராஜராஜேஸ்வரி, வாழ்க வளமுடன்.

    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  17. வணக்கம் இளமதி, வாழ்க வளமுடன்.
    அப்போது எல்லாம், தொலைக்காட்சிபெட்டி, இணையம் எல்லாம் இல்லை, எங்கள் பொழுதுபோக்கு, ரேடியோ, புத்தகங்கள்.நூலகம் அது ஒரு பொற்காலம் தான்.
    படித்தில்பிடித்தவைகளை, கோலம், சமையல் குறிப்புகள், கைவைத்தியம் முதலியவற்றை எழுதி வைத்துக் கொள்வேன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  18. கலைமகளின் சிறப்பை அறிந்தேன் அம்மா... நன்றி...

    பதிலளிநீக்கு
  19. வணக்கம் கில்லர்ஜி, வாழ்க வளமுடன், உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  20. வணக்கம் வேதா. இலங்காதிலகம், வாழ்க வளமுடன்.
    நீங்களும் படித்தவைகளில் பிடித்தவற்றை எழுதி வைப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

    அப்போது புத்தகங்களில் வந்தவற்றை குறித்து வைத்துக் கொள்வது போல் , இப்போது இணையத்தில் படிப்பதையும் படித்ததில் பிடித்தவற்றை குறித்து வைத்துக் கொள்கிறேன் அப்போது டையிரியில் இப்போது நோட்பேடில் சேமிப்பு தொடர்கிறது.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி

    பதிலளிநீக்கு
  21. வணக்கம் பாலசுப்பிரமணியன் சார், வாழ்க வளமுடன்.

    நீங்கள் சொல்வது உண்மைதான். கி.வா.ஜ உ,வே சாமிநாதைய்யரின் முதல் மாணாக்கர் என்று நானும் படித்து இருக்கிறேன், ஜீவி சார் அவர்களும் அவரைப்பற்றி குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
    உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  22. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
    முன்பு, விகடன், கல்கி, கலைமகள் மாலைமதி, முத்துகாமிக்ஸ், எங்களுக்கும், குழந்தைகளுக்கு அம்புலிமாமா, பூந்தளிர் என்று வாங்கி வந்தோம். புத்தகங்கள் நிறைய சேர்கிறது என்று இனி குழந்தைகளுக்கு மட்டும் புத்தகம் வாங்குவோம் நமக்கு சர்க்லேஸசன் புக் போதும் என்று முடிவெடுத்தகாலம்.80களில்

    புத்தகங்கள் எல்லாவற்றையும் படிக்கும் ஆசையிலும் தான்.
    நம் வீட்டு புத்தகம் என்றால் மெதுவாக படிக்க தோன்றும் கொடுக்க வேண்டும் நாளை என்றால் பரீட்சைக்கு படிப்பது போல் உடனே படித்து விடுவேன்.

    கதையை மெதுவாக படியுங்கள் நன்றாக இருக்கும்.

    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.



    பதிலளிநீக்கு
  23. வணக்கம் ஜீவி சார், வாழ்க வளமுடன்.
    உங்களுக்கு கி.வா.ஜவுடன் பழக்கம் உண்டு என்பது அறிந்து மகிழ்ச்சி.

    அவர் பேச்சுக்களை புத்தகங்களில் படித்து இருக்கிறேன். நகைச்சுவை உணர்வுடன் அழகாய் பேசுவார்கள் என்பார்கள்.

    திருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்பு கழகத்தோடு தொடர்பு உடையவர்கள் என் மாமியாரின் அப்பா.
    தேவாரம் அச்சிடும் போது பிழை நீக்கி சரிபார்த்து தருவார்களாம்.
    கழக நூற்றாண்டு விழாவை ஒட்டிவெளியிடப்பட்ட சிறப்பு இதழில் அவர்களைப்பற்றிய குறிப்புகள் உள்ளனவாம்.

    1950-1960 களில் என்றால் எனக்கு மாயாவியின் கதைகளை பற்றி தெரியாது. நான் 70 களில் தான் கதை கட்டுரைகள் படிக்க ஆரம்பித்தேன். வீட்டில் விகடன் , கல்கி , பேசும்படம் வாங்குவார்கள்.
    திருமணம் ஆனபின் தான் நிறைய படிக்க ஆரம்பித்தேன்.

    மாயாவி அவர்களைப் பற்றிய செய்திகளை தொகுப்பது அறிந்து மகிழ்ச்சி படிக்க காத்து இருக்கிறேன்.
    என்னிடம் பழைய புத்தகங்களில் அவர் கதை இருக்கா? என்று பார்க்கிறேன்.
    உங்கள் அழகான நினைவலைகளை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.


    பதிலளிநீக்கு
  24. வணக்கம் ஸ்ரீராம் வாழ்கவளமுடன்.
    ஊருக்கு போகும் அவசரத்திலும் படித்து விட்டு கிளம்பியது மகிழ்ச்சி அளிக்கிறது.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  25. வணக்கம் கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கும், தமிழ்மண வாக்கிற்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  26. வணக்கம் ராஜலக்ஷ்மி பரமசிவம், வாழ்க வளமுடன்.

    இந்த பதிவு என் கணவரின் தாத்தா, கி.வா.ஜ இருவரையும் பற்றியது தான். இடையில் என் வாசிப்பு வருகிறது.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  27. வணக்கம் உமையாள் காயத்திரி, வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
    உங்கள் ”பருப்பு முனுக்கி சாம்பார் ”வைத்தேன். நன்றாக இருந்தது நன்றி.

    பதிலளிநீக்கு
  28. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.

    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  29. தங்கள் பதிலுக்கு நன்றி.

    நான் குறிப்பிட்டது 'குமுத'த்தில் வெளிவந்த மாயாவியின் தொடர்கதை பற்றி. அது 1960-க்கு பிற்பட்ட காலத்தில் தான் வெளிவந்தது.

    பார்க்கலாம். உங்களின் இந்தப் பதிவுக்கு வரும் என் காலத்தினர் யாராவது இது குறித்து ஏதாவது குறிப்பு கொடுக்கிறார்களா என்று பார்க்கலாம்.

    பதிலளிநீக்கு
  30. ஜீவி சார் சொல்வது போல நானும் மாயாவி பற்றிச் செய்திகளைத் தேடி வருகிறேன்.முன்பே இந்தக் கடற்கறைக் காட்சி பற்றிப் பேசி இருக்கிறோம் ஜீவி சார்.60களில் எங்கள் வீட்டில் கலைமகள் குமுதம் கண்டிப்பாக உண்டு. பிறகு எல்லாம் மாறி விட்டது. விடியலை நோக்கி என்று ஒரு கதை வந்தது. அது யார் எழுதியது என்று இது வரை தெரியாது.கதை மட்டும் மனசில் பதிந்திருக்கிறது.

    பதிலளிநீக்கு
  31. அன்பு கோமதி, பூவோடு நாரும் மணம் பெறும் என்பதற்கு உங்கள் நட்பு சாத்தியம் ஆக்கிக் காட்டுகிறது. மிக மிக நன்றி மா.

    பதிலளிநீக்கு
  32. வணக்கம் ஜீவி சார், வாழ்க வளமுடன்.

    1960க்கு பிற்பட்ட காலத்தில் மாயாவி கதைகளா ? யாரிடமாவது கேட்டு பார்க்கிறேன் சார்.

    மின்னல், மழை, மோகினி ஜாவர் சீதாராமன் அவர்கள் எழுதிய குமுதம் கதை எல்லாம் நூலகத்தில் படித்து இருக்கிறேன்.

    நீங்கள் சொன்ன மாயாவி அவர்கள் கதை படிக்க ஆவல்.

    பதிலளிநீக்கு
  33. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வாழ்கவளமுடன்.
    நீங்களும் மாயாவி கதைகளை தேடி வருகிறீர்களா?
    கிடைத்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்.

    பதிலளிநீக்கு
  34. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்.
    உங்களுடை நட்புதான் வலைஉலகத்தில் மலர்ந்து மணம் பரப்புகிறது.
    உங்கள் மறு வரவுக்கு நன்றி அக்கா.

    பதிலளிநீக்கு
  35. இனிமையான நினைவுகள்.

    அப்பா அலுவலகத்தில் Magazine Club-லிருந்து கொண்டு வந்த புத்தகங்களில் கலைமகளும் கண்டிப்பாக உண்டு. ரசித்துப் படித்திருக்கிறேன்.

    இங்கே தில்லி நூலகத்தில் சில தீபாவளி மலர்களும் உண்டு. நாளை போகும்போது பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  36. வணக்கம் வெங்கட், வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    மாயாவி கதைகளை பார்க்கிறேன் என்கிறீர்களா?

    பதிலளிநீக்கு
  37. அப்பப்பா... எவ்வளவு அபூர்வ தகவல்கள்... தங்கள் மாமியாரின் தகப்பனார் பற்றி அறிந்து வியந்தேன். பத்திரிகைக விவரங்களை தாங்கள் சேமித்து வைத்திருப்பது குறித்தும் வியப்புதான். நாற்பதாண்டுகளுக்கு முன்பு உங்கள் திருமண நாளில் வந்த செய்தித்தாளைக் கூட சமீபத்தில் படமெடுத்து வெளியிட்டிருந்தீர்களே... அற்புத பொக்கிஷங்களை மிக அழகாகப் பெருமையுணர்ந்து பாதுகாக்கிறீர்கள். பாராட்டுகள் மேடம்.

    பதிலளிநீக்கு
  38. வணக்கம் கீதமஞ்சரி, வாழ்க வளமுடன்.
    என் கல்யாண நாளில் போட்ட பதிவை நினைவு வைத்துக் கொண்டு பேசியது மகிழ்ச்சி அளிக்கிறது கீதமஞ்சரி.
    என் அப்பா தன் கைபட எழுதி கொடுத்த பஜனை பாடல்கள் டைரி ஜன்னல் பக்கம் வைத்து இருந்தேன். கடுமையாக தொடர்ந்து பெய்த மழையில் ஜன்னல் வழியாக தண்ணீர் வந்து டையிரி நனைந்து பாடல்கள் அழிந்து போனது . நான் அப்போது அழுத அழுகை இப்போது நினைத்தாலும் மனதை சங்கடப்படுத்தும்.
    நான் முதலில் பதிவு எழுத வந்த போது தீபா என்பவர்கள் ”அம்மா வாங்க” நீங்கள் சின்ன வயதில் படித்த நோட்டில் குறித்து வைய்த்தவைகளை பகிர்ந்து கொள்ளுங்கள் என்றார்.

    நீங்கள் சொன்னதை படிக்கும் போது அவர்களையும் நினைத்துக் கொள்கிறேன்.

    நீங்கள் உங்கள் மகளின் மீது இயற்றிய கவிதைகளை பத்திரபடுத்தி அவளிடம் கொடுக்க வேண்டும்.
    மகிழ்ச்சியாக இருக்கிறது உங்கள் கவிதைகளை படிக்கும் போது

    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  39. அறியாத விஷயங்களை அறியத் தந்தீர்கள் அம்மா...

    பதிலளிநீக்கு
  40. நானும் கி.வா,ஜா அய்யா அவர்களின் பாராட்டுக்கடிதம் கல்லூரியில் படிக்கும்போதே கவிதைக்காக பாராட்டுக் கடிதம் பெற்றிருந்தேன்

    பதிலளிநீக்கு
  41. கலைமகள் குறுநாவல் போட்டி குறுநாவல்கள் ஒரு ஆய்வு பணிககு (பாரதிதாசன் பல்கலை)கின்றது.நகல் தந்து உதவ முடியுமா.மிக்க நன்றி.
    rgopikrishnaa@gmail.co.

    பதிலளிநீக்கு
  42. வணக்கம்
    r.gopikrishnaa வாழ்க வளமுடன்

    நீங்கள் இந்த பதிவில் உங்களுக்கு எது வேண்டுமோ எடுத்துக் கொள்ளுங்கள்.
    உங்கள் ஆய்வு பணிக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாங்கள் குறிப்பிட்டுள்ள் பரிசு பெற்ற குறுநாவல்கள் சில ஆய்வு.பணிக்கு தேவை.அவற்றின் நகல் கிடைக்குமா ?வாய்ப்பிருந்தால் எனக்கு அனுப்பி வைக்கவும் .ஆகும் செலவுக்கான பணத்தை அனுப்பி வைக்கிறேன்.நன்றி.

      நீக்கு
    2. இரண்டு மூன்று மாறி விட்டோம். புத்தகங்கள் நிறைய இடம் மாறி இருக்கிறது பார்க்க வேண்டும் அந்த புத்தகங்களில் குறு நாவல்கள் இருக்கிறதா என்று பார்த்து விட்டு சொல்கிறேன். இருந்தால் போட்டோ எடுத்து அனுப்புகிறேன் மெயிலில். உங்கள் மெயில் முகவரி சரியில்லை சரியானதை அனுப்புங்கள்.

      நீக்கு
  43. rgopikrishnaa@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரி மேடம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொஞ்ச நாள் பொறுத்துக் கொள்ளுங்கள் தேடி அனுப்புகிறேன்.

      நீக்கு
  44. வணக்கம் அம்மா
    நான் கேட்ட கலைமகள் பத்திரிக்கைகள் கிடைத்ததா?

    தங்களை சிரமமப்படுத்துவதற்கு மன்னிக்க வேண்டுகிறேன்.

    கிடைத்தால் எனக்கு அனுப்பி வைக்கவும்.

    ஆகும் செலவை தங்கள் account ல் transfer செய்து விடுகின்றேன்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  45. ஒரு புத்தகம் கிடைத்தது அதில் உள்ள குறு நாவலை அனுப்பி இருக்கிறேன் பாருங்கள்.
    மெயிலில் வந்து விட்டதா? என்பதை பார்த்து பதில் அனுப்புங்கள்.

    பதிலளிநீக்கு
  46. மாயாவி எழுதிய மூடுபனி தொடர்நாவல் கலைமகளில் 1967 -1972ற்கிடைப்பட்ட காலத்தில் வெளிவந்திருக்கவேண்டும். அது பற்றி உங்கள் கலைமகள் தொகுப்புகளில் தகவல்களிருந்தால் பகிர்ந்துகொள்ளுங்கள். அக்காலகட்டத்தில் கல்பனாவின் யுகசந்தி நாவலும் தொடராக வெளிவந்தது. அதன் பின்னரே கமலா சடகோபனின் 'கதவு', பாவைபார்வதியின் 'கடலும் மலையும்', ர.சு.நல்லபெருமாளின் 'எண்ணங்கள்' போன்ற தொடர்கள் வெளியாகின.

    பதிலளிநீக்கு
  47. வணக்கம் வ.ந. கிரிதரன், வாழ்க வளமுடன்

    //மாயாவி எழுதிய மூடுபனி தொடர்நாவல் கலைமகளில் 1967 -1972ற்கிடைப்பட்ட காலத்தில் வெளிவந்திருக்கவேண்டும். அது பற்றி உங்கள் கலைமகள் தொகுப்புகளில் தகவல்களிருந்தால் பகிர்ந்துகொள்ளுங்கள்.//

    என்னிடம் இல்லை. என் சேமிப்புகள் 1973க்கு அப்புறம் தான்.
    உங்கள் தகவலுக்கு நன்றி.



    பதிலளிநீக்கு
  48. நான் என்னுடைய சிறுவயது முதல் கலைமகள்(1959)படித்துவருகிறேன்.மாயாவி அவர்கள் எழுதிய எத்தனை கோடி இன்பம்,துள்ளும் உள்ளம்,மூடுபனி போன்ற கதைகள் தொடராக வந்தன.அவ்வப்போது அவரது சிறுகதைகளையும் படித்து வந்துள்ளேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் Ramki, வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
    2. கலைமகளில் யுகசந்தி என்றொரு நாவல் தொடராக வெளியானது. கல்பனா எழுதியது. அதே காலகட்டத்தில் நாராயணசாமி ஐயர் பரிசு பெற்ற நாவலான கடலும் மலையும் வெளியானது. இவை பற்றிய விபரங்கள் உண்டா? கல்பனா யார்? புனைபெயரா? கடலும் மலையும் எழுதியவர் பாவை பார்வதியா?

      நீக்கு
    3. வணக்கம் கிரிதரன், வாழ்க வளமுடன்
      எனக்கு தெரியாது நீங்கள் கேட்கும் விவரங்கள்.

      நீக்கு