Sunday, December 7, 2014

சிக்கு புக்கு ரயிலே ரயிலே !

ரயில் விளையாட்டு விளையாடாத குழந்தை உண்டா? (நாமும் அந்த விளையாட்டு விளையாடி இருக்கிறோம் இல்லையா?) ரயில் எல்லோருக்கும் பிடித்த ஒன்று. பூங்காவில் குழந்தைகள் ரயிலில் பெரியவர்களும் சந்தோஷமாக பயணம் செய்வர். ரயிலில் ஜன்னல் ஓரத்தில் உட்கார்ந்து கொண்டு இயற்கையை ரசிப்பது மிகவும் பிடித்தமான ஒன்று.

என் கணவருக்கு  அவர்கள் பள்ளி விடுமுறையில் தென்காசியில் இருக்கும் தங்கள் அத்தையின் வீட்டுக்கு செல்வார்களாம். ரயில் நிலையம் அருகில் தான் அத்தை வீடு. அவர்கள் அத்தைக்கு அந்த ஊர்மக்கள் கொடுத்த பட்ட பெயர் ரயிலடி அத்தை,  ரயிலடிஆச்சி என்பது.  (அடையாளப் பெயர்)

 அவர்களின் அன்பைப் பற்றி தனிப் பதிவு போட வேண்டும்.

ரயிலைப் பார்ப்பது மிகவும் பிடித்த பொழுதுபோக்காம், அத்தையின் உறவினர் வீடு, சினிமா, குற்றாலம் என்று அழைத்து சென்று வந்த நேரம் போக ரயிலை ரசிப்பார்களாம்.

அமெரிக்கா போய் இருந்த சமயம்  என் மகன் பொழுதுபோக வேண்டுமே அப்பாவிற்கு என்று ஏதாவது வரையுங்கள் அப்பா என்றான்.  கான்வாஸில்
ஆயில் பெயிண்ட். செய்ய எல்லாம் வாங்கி தந்தான். இவர்கள் வரைந்த ஓவியம் என்ன தெரியுமா? அத்தைவீட்டிலிருந்து ரயில் நிலையத்தைப் பார்த்தகாட்சி தான். தன் மனதில் பசுமையாகப் பதிந்த காட்சியை வரைந்தார்கள்.

         
அத்தை வீட்டிலிருந்து ரயில் நிலையத்தின் காட்சி(1962 ல் இருந்தபடி)
                                                  கான்வாஸ் ஓவியம்     (21"x17")
                                   

நாங்கள் அமெரிக்காவில் பயணம் செய்த பழைய காலத்து ரயிலைப் பற்றி (விண்டேஜ் ரயில்!)இந்த பதிவு.
பழமைக் காலம் போலவே இந்த ரயில் நீராவி எஞ்சினால் இயக்கப்படுகிறது.
ரயில் நிலையம் பென்சில்வேனியாவில் வில்மிங்டன் என்ற இடத்தில் இருக்கிறது.

ரயில் நிலையம் மிகப் பழமையானது. 1915 இலிருந்து இந்த ரயில் நிலையம் இருக்கிறது. நடைபாதை, டிக்கட் கொடுக்கும் இடம் எல்லாம், அப்படியே இருக்கிறது பழமை மாறாமல்.  ரயில் டிக்கட் நாங்கள் இணையம் மூலம் முன் பதிவு செய்து கொண்டோம்., இங்கு போட்டோ ஸ்டியோ, ரயில் பொம்மை கடைகள் உள்ளன.

ரயிலில் தனித் தனியாக டிக்கட் எடுத்துக் கொள்ளலாம். ஒரு குடும்பம் முழுவதற்கும் எடுத்துக் கொள்ளலாம். முன்பே முன் பதிவு செய்து கொள்ளலாம்.

நாங்கள் சென்று இருந்த போது ஒரு குடும்பம் தங்கள் மகனின் பிறந்தநாளை கொண்டாடினார்கள். இரண்டு பெட்டிகளை அதற்கு எடுத்துக் கொண்டார்கள்.
தாத்தா, பாட்டி, மற்றும் உறவினர்கள், நண்பர்கள் என்று அந்த பையனின் பிறந்தநாளை கொண்டாடியதை பார்க்கும் போது மகிழ்ச்சி ஏற்படுத்தியது.
நம் நாட்டைப் போல் அங்கும் குடும்ப உறவினர்களுடன் இன்பமாய் நேரத்தை
செலவிடுகிறார்கள்.

செம்டம்பர்  7, 8 தேதிகளில் இந்த ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு போர் காட்சி நடத்திக் காட்டப்படுகிறது.

மூன்று நாட்கள் விஷேசமாக சொல்லப்படுகிறது. ”ஈஸ்டர் பன்னி”  ஏப்ரல் மாதம் இயக்கப்படுகிறது.
இன்னொன்று ”டே அவுட் வித் தாமஸ்” என்று சொல்லப்படுகிறது. சில குறிப்பிட்ட நாட்களில்  மட்டும் இந்த ரயில் இயக்கப்படுகிறது.
                                      
                         ரயில் மியூசியத்தில் தாமஸ் ரயில் மாதிரி அலமாரி

எல்லா சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களினாலும், குறிப்பிட்ட வெள்ளிக் கிழமைகளிலும் ரயில் இயக்கப்படுகிறது.

இதில் பணிபுரிபவர்கள் எல்லாம் தன்னார்வத் தொண்டர்கள். பொதுமக்களும் இதில் கலந்து கொள்ளலாம். இதில் வயதானவர்கள் நிறைய பேர் பணிபுரிந்தார்கள். மகிழ்ச்சியாக நம்மை வரவேற்று மகிழ்ச்சி அலையை நம்மைச் சுற்றிப் பரவவிடுகிறார்கள்.

                                                   
                                                      

இந்த ரயிலில் போகும் போது மிக அழகான பண்ணை வீடுகள், வயல்கள், ஆகியவற்றை ரசிக்கலாம்.
இங்குள்ள 1000 க்கும் மேலே உள்ள விவசாய நிலங்களை குதிரைகளைக் கொண்டு உழுவார்களாம். நாங்கள் போகும் போது அறுவடை முடிந்து வைக்கோல்கள் அழகாய் கட்டம் கட்டமாய் அடுக்கி வைத்து இருந்த காட்சியைக் கண்டோம்.

                                             
இயற்கைக் காட்சிகள், மற்றும்  நீரைத் தேக்கி வைத்து திறந்துவிடும்  மதகு எல்லாம் மிக அழகாய் இருக்கும். அங்கு சிறிது நேரம் அமர்ந்து இயற்கை காட்சிகளை ரசிக்கலாம். பிறகு ரயிலில் ஏறி மறுபடியும் நாம்  பழைய இடத்திற்கு வந்துவிடலாம்.
                                
45 நிமிசம் பயணம் . ஈஸ்ட் ஸ்டிராபர்க் ஸ்டேஷனிலிருந்து பாரடைஸ் என்ற இடம் வரை அழைத்துப் போகிறார்கள்.மீண்டும் திரும்பிக் கொண்டுவந்து புறப்பட்ட இடத்திலேயே விட்டுவிடுகிறார்கள்.

                                                    
ரயில் மியூசியத்தில்--நம்முடைய முகத்தை இந்த ஓவியத்தில் பொருத்திப்பார்க்கலாம்.
ரயிலில் போகும் போது கீழே  இருப்பவர்கள் மகிழ்ச்சியாக கை ஆட்டுகிறார்கள். 
டிக்கட் சரி பார்க்கிறார்
ரயிலில் தண்ணீர், சாக்லேட் விற்பனையும் உண்டு

வாழ்க வளமுடன்!
--------------

48 comments:

KILLERGEE Devakottai said...


ரயில் பயணம் எல்லா வயதினருக்கும் பிடித்த விசயமே,,,, சிறு வயதில் பள்ளி விடுமுறைக்கு சின்னம்மா வீட்டிற்க்கு போய் விடுவேன் பாம்பன் ரயில் பாலத்திலேயே நடந்து கொண்டு இருப்பேன் புகைப்படங்கள் அனைத்தும் அருமை எனது புதிய பதிவு தில்லை அகத்திலிருந்து,,,,,, காண்க...

வை.கோபாலகிருஷ்ணன் said...

அனைத்தும் அழகு. அருமை. பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள்.

வெங்கட் நாகராஜ் said...

ஓவியம் மிக அழகாய் இருக்கிறது. இனிமையான அனுப்வங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.....

Anonymous said...

அருமையான பதிவு. கணவர் ஓவியம் வரையும் காட்சி அருமை.
எல்லாமே பழைய காலத்தை நினைவு படுத்தியது போலவே இருந்தது. சகோதரி.
நன்றி.
வேதா. இலங்காதிலகம்.

Vimalan Perali said...

நல்ல ஓவியம்,நல்ல படப்பிடிப்பு,,,,

நம்பள்கி said...

எல்லாமே அருமை! படங்கள், ரயில் எல்லாம். நம்ம ஊரில் ஓடும் ஊட்டி ரயிலை ஒவ்வொரு வருடமும் நிறுத்தப் போவதாக பயமுறுதிக் கொண்டு இருக்கிறார்கள்.

கவியாழி கண்ணதாசன் said...

படங்களும் பதிவும் அருமை

athira said...

ஆஹா அழகிய படங்களோடு அருமையான ஒரு ஓட்டோகிராப் போன்ற பதிவு.

அந்த வைக்கோல் புற்கள், பனி காலத்தில் கொடுக்க- கால் நடைகளுக்காக சேமித்து வைப்பினம்.

துரை செல்வராஜூ said...

அழகான ஓவியமும் படங்களும்!..

மகிழ்ச்சியான பொழுதுகள்!..

ஹூம்!..

நமக்கு பழைமையைப் பாழடிப்பதே அன்றி பாதுகாக்கும் பழக்கம் தான் இல்லையே!..

R.Umayal Gayathri said...

தென்காசி ரயில்நிலையமா...ஆஹா..அழகான நிலையம். தென்காசியே அழகு தான். குற்றாலம் கேட்கவே வேண்டாம் ...சூப்பரான இடம். ஓவியம் அழகு...ரயிலும்,படமும்,பகிர்ந்த விதமும் அருமைங்க. பசுமையாக இருக்கு நாங்களும் உங்க கூட பயணம் செய்து களித்தோம்.

இராஜராஜேஸ்வரி said...

மகிழ்ச்சியாக நம்மை வரவேற்று மகிழ்ச்சி அலையை நம்மைச் சுற்றிப் பரவவிடுகிறார்கள்.


வாழ்க வளமுடன்..

மகிழ்ச்சியான ரயில் பயணப்பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்.

அம்பாளடியாள் said...

சிக்குப் புக்கு சிக்குப் புக்கு ரயிலே கலக்குது பார் இவ ஸ்ரையிலே !
அப்படியே குழந்தை போன்று அமைதியாய் தன் கவனம் சிதையாமல்
படம் வரையும் பெரியவர் உட்பட அனைத்துப் படங்களும் பகிர்வும்
அருமை தோழி! பழைய ஞாபகத்தை மீண்டும் ஒரு முறை எங்கள்
கண்களில் தவள விட்ட பகிர்வுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் .

கரந்தை ஜெயக்குமார் said...

ஓவியம் அருமை
இனிமையான தருணங்களின் மகிழ்ச்சி பகிர்வு, மனதிற்கு மகிழ்ச்சியினை அளிக்கின்றது சகோதரியாரே
நன்றி

திண்டுக்கல் தனபாலன் said...

சுவாரஸ்யமான தகவல்கள்...

என்னவொரு அழகான இடம்... ரசித்தேன் அனைத்தையும்...

கோமதி அரசு said...

வ்ணக்கம் கில்லர்ஜி, வாழ்க வளமுடன்.
உங்கள் சிறு வயது அனுபவத்தை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.
நலமா சார்?

உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் , பாராட்டுக்களுக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் வெங்கட், வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் வேதா இலங்கா திலகம், வாழ்க வளமுடன்.
கணவர் வரைந்த ஓவியத்தை ரசித்தமைக்கு நன்றி.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் விமலன், வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் நம்ளக்கி, வாழ்க வளமுடன்.
ஊட்டி ரயிலில் பயணம் செய்து இருக்கிறேன். மிக அழகான ரயில் பயணம் அது தொடர்வதே நல்லது.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் கவியாழி கண்ணதாசன், வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.
இங்கும் அறுவடை முடிந்தவுடன் வைக்கோலை அழகாய் குவித்து வைப்பார்கள். அடுத்த அறுவடை வரை காலநடைகளுக்கு உணவு.
அங்கு மிஷனில் கொடுத்து அதை கட்டங்கள் போல் கட் செய்துஅடுக்கி வைத்து இருப்பது பார்க்க அழகாய் இருக்கிறது.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வண்க்கம் துரைசெல்வராஜூ சார், வாழ்க வளமுடன்.

உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் உமையாள் காயத்திரி, வாழ்க வளமுடன்.

தென்காசி தெரியுமா? அழகான ஊர் தான்.
ஓவியம் மற்றும் பதிவை ரசித்தமைக்கு நன்றி உமையாள்.

கோமதி அரசு said...

வணக்கம் இராஜராஜேஸ்வரி, வாழ்க வளமுடன். உங்கள் கருத்துக்கும், பாராட்டுக்களுக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் அம்பாளாடியாள், வாழ்க வளமுடன்.
பாட்டே படித்து விட்டீர்களா? உங்கள் வரவுக்கும், ஓவியம், படங்கள் அனைத்தையும் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

Sasi Kala said...

ஓவியம் மிகவும் அழகு. பயணம் சென்று வந்த உணர்வை தந்தது படங்கள். பகிர்வுக்கு நன்றிங்க.

கோமதி அரசு said...

வணக்கம் கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கும், பதிவை ரசித்தமைக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் சசிகலா, வாழ்க வளமுடன்.
நலமா?

உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி சசிகலா.

Ranjani Narayanan said...

சிறுவயதில் ஸ்ரீரங்கத்திற்குப் போகும்போது ரயிலில் வெளியே பார்த்துக்கொண்டே போவோம். கண்ணில் கரி விழும். கண்ணைக் கசக்கிக்கொண்டே விடாமல் பார்ப்போம். பழைய நினைவுகளுக்குக் கூட்டிக்கொண்டு போய்விட்டீர்கள்.
உங்கள் கணவரின் கைவண்ணத்தில் ரயிலடி அருமை.

கோமதி அரசு said...

வணக்கம் ரஞ்சனி, வாழ்க வளமுடன்.
ரஞ்சனி உங்கள் பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டதற்கும்,
கணவரின் ஓவியத்தை ரசித்தமைக்கு நன்றி.

ADHI VENKAT said...

சாரின் ரயிலடி காட்சி ஓவியம் மிகவும் அழகாய் உள்ளது.

நீராவி இஞ்சினில் பயணம் செய்த நினைவுகளை படங்களுடன் அழகாய் சொல்லியுள்ளீர்கள் அம்மா.

கீத மஞ்சரி said...

ரயில் நினைவுகளும் அனுபவங்களும் பிரமாதம். சார் வரைந்த ஓவியத்தில் அந்த கிணறு, வைக்கோற்போர், அதன் மேல் சேவல் மற்றும் கோழிகள், மாடு, கொல்லைக்கதவு என்று ஒவ்வொன்றும் நேரில் பார்க்கும் அனுபவத்தைத் தந்தன. எந்த அளவுக்கு பசுமையாய் நினைவில் இருந்திருந்தால் இவ்வளவு நேர்த்தியாக வரைந்திருக்க முடியும். சாருக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். விண்டேஜ் ரயில் பயண அனுபவமும் தகவல்களும் சுவாரசியம். நன்றி மேடம்.

ராமலக்ஷ்மி said...

52 வருடங்களுக்கு முன்பு இருந்த அமைப்பில் வரையப்பட்ட ரயில் நிலையக் காட்சி அழகு, அற்புதம். சாருக்கு என் பாராட்டுகள்.

பயணப் பகிர்வும் படங்களும் அருமை.

கோமதி அரசு said...

வணக்கம் ஆதிவெங்கட், வாழ்க வளமுடன்.
சாரின் ஓவியத்தையும், ரயில் பயண அனுபவத்தையும் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி ஆதி.

கோமதி அரசு said...

வணக்கம் கீதமஞ்சரி, வாழ்க வளமுடன்.

அவர்கள் அத்தையை நினைக்காத நாள் இல்லை. அவர்களுக்கு குழந்தை கிடையாது , தன் தம்பி பிள்ளைகளை மிகவும் பாசமாய் நேசித்தார்கள் அது போல் தம்பி குழந்தைகளும் விடுமுறை விட்டால் அத்தைவீட்டுக்கு போய் விடுவார்கள், அல்லது அத்தை இவர்கள் வீட்டுக்கு வந்து விடுவார்கள்.

அத்தை வீடும் அங்கிருந்து பார்த்த காட்சிகளும் பசுமரத்து ஆணி போல் மனதில் பதிந்து இருக்கிறது.

சாரிடம் உங்கள் பாராட்டை சொன்னேன் மனம் மகிழ்ந்தார்கள்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி கீதமஞ்சரி.

கோமதி அரசு said...

வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.

அத்தையும், அத்தைவீட்டு நினைவுகளும் என்றும் பசுமையாக தங்கி விட்டதால் அதை வரைந்து விட்டார்கள் அத்தை வீட்டுக்கு அருகில் ஒருவீட்டில் ரயில் நிலையத்தில் உள்ள ஓட்டலுக்கு உணவு சமைத்து கொண்டு போவார்கள், அப்படி கொண்டு போகிறவரையும் நினைவாய் வரைந்து இருப்பார்கள்.

உங்கள் பாராட்டை தெரிவித்து விட்டேன்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி ராமலக்ஷ்மி.

G.M Balasubramaniam said...


கோமதி மேடம் ஒரு அருமையான பதிவு. புதியபல விஷயங்களைச் சொல்லிப்போவதுமில்லாமல் ரயில் பற்றிய நினைவுகளையும் கிளறி விட்டது.சென்னை ஜவஹர் நகரில் என் இளைய மகன் வீட்டுக்குப் போனால் என் பேத்தியை (அப்போது வயது மூன்று)அருகில் இருக்கும் ரயில் நிலையத்துக்கு அழைத்துப் போய் ரயிலைக் காட்டுவேன் அவளும் சுவாரசியமாகப் பார்ப்பாள். சின்ன வயதில் வாணியம்பாடி என்று நினைக்கிறேன் ரயில் நிலையத்தில் ரயில் பெட்டிகளையும் எஞ்சினையும்ஷண்டிங் செய்யும் போது என் சித்தப்பாவின் பெண் “ஐயோ ரயில் புட்டுக்கிச்சு “என்று கத்தினது இப்போதும் நினைவில். உங்கள் பதிவில் திரு. அரசு ரயில்பெட்டியில் அமர்ந்திருக்கும் படத்தில் இருக்கை அமைப்பே ஒரு புறம் நோக்கியே ஒரு லைனில் மட்டும் இருப்பது போல் தெரிகிறது. சிறிய பெட்டிகளா.?ஊடே உங்களை நினைவு படுத்துகிறேன். உறவுகள் பதிவை எதிர் நோக்குகிறேன். நன்றி. அருமையான அந்த ஓவியம் வரைந்த அரசுவுக்குப் பாராட்டுக்கள்.

கோமதி அரசு said...

வணக்கம் பாலசுப்பிரமணியம் சார் , வாழ்க வளமுடன். உங்கள் மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டதற்கு மகிழ்ச்சி.

ரயில் பெட்டி பெரிதுதான். இரண்டு பக்கமும் இருக்கை இருக்கிறது, இரண்டு பக்கமும் இயற்கை அழகுகளை ரசித்துக் கொண்டே போகலாம்.

உறவுகள் பதிவை எழுத முயற்சிக்கிறேன்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி சார்.


ஸ்ரீராம். said...

புகைப்படங்கள் அருமை.

ரசித்து ரசித்து எடுத்திருக்கிறீர்கள். இதிலிருந்து இந்தப் பயணத்தை எந்த அளவு ரசித்திருப்பீர்கள் என்றும் புரிகிறது.

ஸார் ஓவியம் அருமை. 62ம் வருடம் எப்படி இருந்தது என்பதை மனக் கண்ணில் பார்த்தபடியே வரைந்திருப்பது சிறப்பு. சில நினைவுகள் பசுமையாக என்றும் நினைவில் இருந்து கொண்டே இருக்கும். இந்த ஊரும், இந்தக் காட்சியும் அவர் மனதில் எந்த அளவு தங்கி இருக்கிறது என்பதற்கு ஓவியம் சாட்சி! பிரமிக்கத்தக்க கலை.

கோமதி அரசு said...

வணக்கம், ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
ரயில் பயணம் அருமையானது தான்.
ஸார் ஓவியத்தை ரசித்து கருத்து சொன்னதற்கு மிகவும் நன்றி.
சார் படித்தார்கள், ஸ்ரீராம் நன்றாக கருத்து சொல்லி இருக்கிறார்கள் என்று மகிழ்ந்தார்கள்.
நன்றி ஸ்ரீராம்.

Jaleela Kamal said...

ஓவியம் மிக அருமை கோமதி அக்கா
ரயில் பயணத்தை அப்படியே கண் முன் கொண்டு வந்து உஙக்ளுடன் நாங்களும் பயணித்த்தாச்சு

Jaleela Kamal said...

சுவாரஸியமான பதிவு

கோமதி அரசு said...

வணக்கம் ஜலீலா, வாழ்கவளமுடன்.

பதிவை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

yathavan nambi said...

அன்புமிகு வலைப் பூ அன்பருக்கு,
நல்வணக்கம்!

திருமதி R.உமையாள் காயத்ரி அவர்களின்
"உள்ளம் சொல்லுமே அம்மா…. அம்மா…அம்மா…!!!"

இன்றைய வலைச் சரத்தின்
சிறப்புமிகு பதிவாளராக தாங்கள் தேர்வாகி,
வலம் வந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி!


வாழ்த்துகளுடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com

(எனது இன்றைய பதிவு "அவன் ஒரு குடையைத் தேடி" (சிறு கதை)
படித்திட வேண்டுகிறேன்.)

கோமதி அரசு said...

நன்றி யாதவன் நம்பி