முன்பு நாங்கள் கலைமகள் பத்திரிக்கை வாங்குவோம். அவற்றில் சிலவற்றை மட்டும் வைத்துக் கொண்டு மற்றவற்றைப் போட்டு விட்டோம்.
கி.வா ஜ அவர்கள் எழுதிய ’ஆலமரத்துச் சாமியார்’ கதை நன்றாக இருக்கும். படித்திருப்பீர்கள், மறுபடியும் படித்துப் பாருங்களேன்.
கதையை மட்டும் கிழித்து வைத்து இருந்து இருக்கிறேன். 1983 ஆம் வருடம் கலைமகளில் வந்த கி.வா.ஜ அவர்களின் ஆலமரத்துச் சாமியார் கதை, அவர் நல்ல நகைச்சுவை உணர்வு உடையவர் என்பதைக் காட்டும்.
கலைமகளில் வந்த அமரர் ராமரத்னம் நினைவுப் பரிசு பெற்ற குறுநாவல் புத்தகங்கள் சில வைத்து இருக்கிறேன்.
என் மாமியாரின் தகப்பனார் திரு. நாறும்பூநாததேசிகர் அவர்கள் தென்காசி போர்டு உயர்நிலைபள்ளியில் தமிழாசிரியராக இருந்தார்கள். அவர்கள் 1932 ல் கலைமகள் பத்திரிக்கையின் முதல் இதழ் வெளிவந்தபோது,அப்போது தன்னிடம் படித்த மாணவர்களைக் கலைமகள் புத்தகம் படிக்கச்சொல்லி கூறியதாகப் பிரபல எழுத்தாளர் மாயாவி அவர்கள் 1983 ல் வந்த கலைமகளில் சொல்லி இருந்தார். அப்போது நாங்கள் சர்க்குலேசன் புத்தகம் வாங்கிப் படிப்போம். அனைத்து புத்தகங்களும் கொண்டு வந்து கொடுப்பார், சிலவற்றை புதிதாகக் கொடுப்பார், சிலபுத்தகம் கொஞ்சம் பழசாய் வரும். அப்படி இரண்டு வாரம் கழித்து கொடுத்த கலைமகளில் தாத்தாவைப் பற்றி மாயாவி குறிப்பட்டது இருந்தது. என் கணவர் கடையில் போய் கேட்டுப் பார்த்தார்கள் கிடைக்கவில்லை. அப்போது அந்த சர்க்குலேசன் புத்தகம் தருபவரிடம் எல்லோரும் படித்தவுடன் என்னிடம் கொடுங்கள் என்று கேட்டு இருக்கலாம், அப்படி கேட்க அப்போது தெரியவில்லை, அவசர அவசரமாக அதை என் டைரியில் எழுதிக் கொண்டு கொடுத்து விட்டேன் அவரிடம். அவசரம் இல்லாமல் மெதுவாக எழுதினால் கொஞ்சம் எழுத்து பார்க்கும்படி இருக்கும் அவசரமாய் எழுதினால் எழுத்து கோழிக்கால்தான் !
அந்த டைரியில் பத்திரிக்கைகளில் வந்த கோலம், சமையல் குறிப்புகள் எல்லாம் இருக்கும். என் எழுத்து சரியாக புரியவில்லை என்றாலும். அதை இங்கு பகிர்ந்து இருக்கிறேன்.

திரு. நாறும்பூநாத தேசிகர்
மாயாவி அவர்கள் சொன்னது:-
//எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அப்பொழுது நான் தென்காசியில் போர்டு உயர்நிலைப்பள்ளியில் நான்காவது பாரம் படித்துக் கொண்டிருந்தேன், என் விருப்பப் பாடம் தமிழ். எங்களுக்குத்தமிழ்ப்பண்டிதராக இருந்தவர் திரு. நாறும்பூநாததேசிகர் என்பவர். மாணவர்கள் நாவல்களையும் பத்திரிக்கைகளையும் படித்துக்கெட்டுப் போகின்றனர் என்ற கருத்துடையவர்
அவர். இவ்வளவுக்கும் அன்று பத்திரிக்கைகள் என்று சொல்லும் ஒரு சிலவே வெளிவந்தன.
அப்படிப் பட்டவர் ஒருநாள் தமிழ் வகுப்பில் “நான் இதுவரை உங்களிடம் பத்திரிக்கைகளைப் படிக்காதீர்கள் என்று சொல்லிவந்தேன், ஆனால் அதே நான் இப்போது இந்த பத்திரிக்கையைத் தவறாமல் வாங்கிப் படியுங்கள் என்று சிபாரிசு செய்கிறேன்.” என்று தம்மிடமிருந்த மஞ்சள் அட்டையிட்ட கலைமகளின் முதலாவது இதழைக் காட்டினார். பிறகு விளக்கமும் தந்தார்.
ஏனென்றால் மற்ற பத்திரிக்கைகளிலிருந்து மாறுபட்டு இருக்கிறது. இலக்கணப் பிழையற்ற நல்ல தமிழில் இதில் விஷயதானம் செய்யப்பட்டிருக்கிறது. தமிழ்ச்சான்றோர் பலர் இதில் தொடர்ந்து எழுதுவார்கள் என்று முதல் இதழ் கூறுகிறது. இலக்கியம் விஞ்ஞானம் பொழுதுபோக்கு கட்டுரைகள் கதைகள், முதலிய யாவரும் படிக்கும் முறையில் வெளியாகும்.
“ஆம், யாவரும் படிக்கும் முறையில்” என்று திரு. நாறும்பூநாத தேசிகர் அன்று கூறியது இன்றளவும் கலைமளின் குறிக்கோளாக இருந்து வருவதை யார்தான் மறுக்க முடியும்? . //
என் எழுத்தைப் படிக்க முடியாதவர்கள் டைப் செய்த இந்த அழகான எழுத்தில் படிக்கலாம்.
இப்படி எல்லாம் குறித்து வைத்துக் கொண்டு புத்தகங்களை வாங்கிப் படித்து இருக்கிறேன். தொடர்கதைகள் விட்டுப்போகாமல் இருக்க.
அமெரிக்கா போய் இருந்த போது கி.வா,ஜவின் பேத்தியை (மூத்த மகன் அவர்களின் மகள்) வித்யாசுவாமிநாதன் அவர்களை சந்தித்தேன்.(குடும்ப நண்பர்)அவர்கள் வீட்டுக்கு உணவு உண்ண அழைத்து இருந்தார்கள், அவர்களிடம் கி.வா.ஜவின் நினைவுகளைப்பற்றி சொல்லுங்கள் என்றேன் அவர்கள், கி.வா.ஜ அவர்களை சந்திக்க, பெரிய தமிழ் அறிஞர்கள் வருவார்கள் என்றும், சிரிக்க சிரிக்க இலக்கியம் சார்ந்த கலந்துரையாடலாக அது இருக்கும். நான் அப்போது சிறுமி இதன் பெருமைகளை உணர்ந்து இருக்கவில்லை. இப்போது தான் என் தாத்தா எவ்வளவு பெரிய மனிதர் என்று தெரிகிறது என்று கூறினார்கள்.
நானும் என் கணவரின் தாத்தா தன் மாணவர்களைக் கலைமகள் படிக்கச் சொன்ன நிகழ்ச்சியை அவரிடம் பகிர்ந்துகொண்டேன்
கி.வா.ஜ அவர்களும் துணைவியாரும் சேர்ந்த படம், தனியாக அவர் படம் எல்லாம் காட்டினார்கள். உடல் நிலை சரியில்லாமல் இருக்கும் போதும் தன் புத்தக அலமாரி அருகில் தான் படுக்கை.அவரது புத்தக அலமாரியில் எவ்வளவு புத்தகங்கள் ! அத்தனையும் படித்து முடித்தவுடன் திரும்பவும் அழகாய் புத்தக அலமாரியில் அடுக்கி வைப்பராம்.
தன் பாட்டி அவரை நன்கு கவனித்துக் கொண்டதாகச் சொன்னார். கி.வா.ஜ முருக பக்தர் என்பதால், அவரது நினைவு நாளில் அஞ்சலி செலுத்தியபோது அவர்விரும்பிய முருகனும் அவர் அண்ணனும் கி.வா.ஜ அருகில் இருக்கிறார்கள்.
கலைமகளில்” தலையில் சூடிய மலர்” என்று நவம்பர் 2014 கலைமகளில் கி.வா.ஜ பற்றி கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன் அவர்கள் சொன்னது.:-
ஒருமுறை தீபாவளி மலரை எடுத்துக் கொண்டு கலைமகள் அதிபர் ஆர். நாராயணஸ்வாமி கலைமகள் ஆசிரியர் கி.வா.ஜ. இருவரும் வட இந்தியா பக்கம் போனார்கள். காஞ்சிப் பெரியவர் முகாம் இட்டிருந்த அந்த ஊரை அடைந்து அவரிடம் சமர்ப்பணம் செய்தார்கள்.
பொதுவாக எந்த ஒரு நூலை வாங்கிக் கொண்டாலும் காஞ்சிப் பெரியவர் அதனைப் புரட்டுவது வழக்கம். படிப்பதும் வழக்கம். மங்கலப் பிரசாதங்களை அந்த நூல் மேல் வைத்து எழுதியவருக்கும் வந்தவர்களுக்கும் கொடுப்பதும் வழக்கம். கலைமகள் தீபாவளி மலரைக் கையில் எடுத்து அதனைத் தலையில் வைத்துக் கொண்டார்கள். உடனே அதனை எடுத்து உதவியாளரிடம் கொடுத்துவிட்டார். கலைமகள் அதிபரிடமோ ஆசிரியரிடமோ எதுவும் பேசவில்லை!
கி.வா.ஜ. அவர்களுக்கு மனவருத்தம். என்னடா பெரியவர் தலையில் வைத்துப் பாரத்தை இறக்குவதைப் போல இறக்கி வைத்துவிட்டாரே என்று எண்ணினார். கூட்டம் கலைந்த பின்பு அதிபர் நாராயணஸ்வாமி சொன்னார்.
"இப்போ பெரியவாளை போய்ப் பார்ப்போம். உத்தரவு மற்றும் பிரசாதம் பெற்றுக் கொண்டு கிளம்புவோம்' என்று.
தங்கியிருந்த வீட்டின் பின்புறம் சாக்குகளின் மேல் அமர்ந்து கொண்டு கலைமகள் தீபாவளி மலரைப் படித்துக் கொண்டிருந்தார் பெரியவர்.
அப்பாடா' என்று பெருமூச்சு விட்டனர் அதிபர் நாராயணஸ்வாமியும், கி.வா.ஜ.வும். அருகில் அழைத்தார்! "என்ன விஷயம்? மலர் நன்றாக வந்திருக்கிறது. இந்தாங்கோ பிரசாதம் எடுத்துக்குங்கோ' - பெரியவர் சொன்ன பிறகு மனதுக்குள் ஆனந்தம் பிறந்தது என்கிறார் இப்போது எங்களுக்குப் பதிப்பாளராகவும் கலைமகள் இலக்கியக் குடும்பத் தலைவராகவும் இருக்கும் ஆர். நாராயணஸ்வாமி.
"பெரியவா நமஸ்காரம். நாங்கள் தீபாவளி மலரைச் சமர்ப்பித்ததும் தலையில் வைத்துக் கொண்டீர்களே? - ஏன்?' இது கி.வா.ஜ. கேள்வி.
"மலர்கள் சூடவேண்டிய இடம் எது' இது பெரியவாளின் பதில்.
"தலையில்தான் மலரைச் சூட வேண்டும்' - இது கி.வா.ஜ. குரல்.
"ஒப்பற்ற மலரைத் தந்துள்ளீர்கள். தலையில் சூடினேன். இது ஓர் அறிவுப் பெட்டகம். அறிவார்ந்த விஷயங்களும் தலைக்கு உள்ளே போக வேண்டியது தானே வாஸ்துவம்' இது பெரியவா!
ஆஹா எப்பேர்ப்பட்ட மரியாதையை எப்பேர்ப்பட்ட அபிப்பிராயத்தை கலைமகள் மீது பெரியவர் கொண்டு உள்ளார்கள் என்று உணர்ந்து கி.வா.ஜ.வும், ஆர். நாராயணஸ்வாமியும் நமஸ்கரித்துப் பிரசாதங்கள் பெற்று விடைபெற்றார்களாம்.
இன்று கி,வா.ஜ அவர்கள் பற்றிய நினைவுகளையும், என் மலரும் நினைவுகளையும் பகிர்ந்து கொண்டேன்.
வாழ்க வளமுடன்!
----------------------