வியாழன், 27 அக்டோபர், 2022

மருதமலை மாமணியே!


முருகனைச் சிந்திப்போம் -3


மருதமலை

கந்த சஷ்டி நாட்களில் முருகனைச் சிந்தித்து வருகிறோம். 
 இன்று மருதமலை முருகையா பாடலை ரேடியோ சிட்டியில் 
வைத்தார்கள். மதுரை சோமு அவர்களின் குரலும், பாடல்
 வரிகளும், குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களின் இசையும் எல்லாம் சேர்ந்து கேட்கும் போது கண்ணில் நீர்துளிர்க்க வைக்கும் பாடல்.


இந்தப் பாடலைத்தான் இன்று  பகிர எண்ணி இருந்தேன். கீதா 
அவர்களின் பதிவு அதைக் கண்டிப்பாய் போட வேண்டும் 
எண்ணத்தை வளர்த்து விட்டது. ஸ்ரீராமுக்கு நன்றி சொல்ல வேண்டும். 
 அவர் வியாழன் எழுதிய பதிவு நிறைய பேரை எழுத 
ஊக்கப்படுத்துகிறது. நன்றி ஸ்ரீராம், நன்றி கீதா.

இந்தப் பாடலில் 'கோடிகள் கிடைத்தாலும் கோமகனை மறவேன்' என்று
வரிகள் வரும். இன்பம் வந்தால் இறைவனை மறப்பதும், துன்பம் வந்தால்
இறைவனை நினைப்பது இல்லாமல்  எப்போதும் அவரை நினைக்க
 வேண்டும். இன்பத்திற்கு நன்றி சொல்லி வணங்க வேண்டும், துன்பத்தில்
 என்னைவிட அதிகமாய் அடியார்கள் துன்பங்களை அனுபவித்து 
இருக்கிறார்கள்  என் துன்பம் குறைவே என்று அவரை சரண்
 அடைந்து விட வேண்டும். 


கோவையில் சிறு வயதில் இருந்த போது  66லிருந்து
 70 வரை கோவையில் சிறு வயதில் இருந்தேன். அப்போது
 அடிக்கடி மருதமலை முருகனை தரிசனம் 
செய்வோம். அதன் பின்   கணவர் ஊர் கோவை
 என்பதால் கோவைக்கு செல்லும் பொழுது எல்லாம்
 மருதமலை முருகன் தரிசனம் உண்டு.

காலை சீக்கீரம் போனால் பாம்பாட்டி சித்தரை கீழே போய்
 தரிசனம் செய்வோம்.மாலை போனால் மருதாசல மூர்த்தியை மட்டும் தரிசனம் செய்து வந்து விடுவோம்.



2012 ம் வருடம் மருதமலை போன போது எடுத்த படங்கள்.
2012 ம் வருடத்திற்கு பின் போகவே இல்லை. கோபுரம் கட்ட 
மலையை நிறைய வெட்டி இருக்கிறார்கள். மலை தொடரில்
 அமர்ந்து நானும் என் கணவரும் படங்கள் எடுத்துக் 
கொண்டோம்.(அவை நினைவுகளில்)

இராஜ கோபுரம் கட்டி கொண்டு இருக்கும் போது 
எடுத்த படங்கள் நான் போட்டு இருப்பது

என் தம்பி சில நாட்கள் முன் மகளை கல்லூரியில் 
சேர்க்க போய் இருந்தான்.அப்போது மருதமலை போய் வந்த
 படங்கள் அனுப்பி இருந்தான்.அவன் போனபோது 
தங்கத்தேர் பவனி வந்ததை காணொளி எடுத்து
அனுப்பி இருந்தான்.




பழைய கல்வெட்டு 



//சிறந்த முருக பக்தராக விளங்கிய தேவர் ஒவ்வொரு படத்திலும்
கிடைக்கும் லாபத்தை நான்காகப் பிரிப்பார். இதில் ஒரு பங்கு
முருகனுக்கு வழங்குவார். 

முருகன் அருளால்தான் தனக்கு வெற்றி மேல் வெற்றி
 கிட்டுவதாக தேவர் எண்ணினார். அதனால், லாபத்தில் கால்
 பகுதியை, முருகன் கோவில் திருப்பணிகளுக்கு வழங்கினார். பழனி கோவில், மருதமலை முருகன் கோவில் உள்பட பல
 கோவில்கள் இதனால் பலன் அடைந்தன.
 ஒரு பங்கை தனக்கு வைத்துக் கொண்டு, மற்றொரு பங்கை, 
தனக்கு ஆயிரம்,இரண்டாயிரம் என்று பணம் கொடுத்து, 
திரைப் படம் எடுக்க 10 ஆயிரம் ரூபாயுடன்சென்னைக்கு அனுப்பி வைத்த பழைய நண்பர்களுக்குப் பிரித்துக் கொடுத்தார். 
மற்றொரு பங்கை நன்கொடைகளாக வழங்கினார். தேவர்,
காலையில் அலுவலகம் வந்ததும் முருகனை வணங்கிவிட்டு வேலை தொடங்குவார். உதவி கேட்டு வருகிறவர்களுக்கு
 'இல்லை' என்று கூறாமல் உதவி செய்வார்.//

நன்றி- விக்கிப் பீடியா.



சீர்காழி கோவிந்த ராஜன் அவர்கள் பாடிய 'வரம் தருவாய் 
முருகா' என்ற பாடலும் மிகவும் பிடித்த பாடல். அவரை
 வாழ்நாள் எல்லாம் மறக்காமல் இருக்க அவர் தானே அருள
 வேண்டும். மாணிக்க வாசகர் சொன்னது போல்,
'//அவனருளாலே  அவன் தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவபுராணந் தன்னை
முந்தை வினை முழுதும் ஓயவுரைப் பன்யான்'//

முருகன் அருள் இருந்தால் வாழ்நாள் எல்லாம் அவரை 
வணங்கும் பேறு கிடைக்கும்.

அருணகிரிநாதர் அருளிய மருதமலை முருகன் திருப்புகழ்:-

திரிபுரம் அதனை ஒரு நொடியதனில்
எரிசெய் தருளிய சிவன் வாழ்வே!
சினமுடைஅசுரர் மனமது வெருவ
மயிலது முடுகி விடுவோனே!
பருவரை யதனை உருவிட எறியும்
அறுமுகமுடைய வடிவேலா!
பசலையொ டணையும் இளமுலை மகளை
மதன்விடு பகழி தொடலாமோ!
கரிதிரு முகமும் இடமுடை வயிறும்
உடையவர் பிறகு வருவானே!
கனதனமுடைய குறவர்தம் மகளை
கருணையொ டணையும் மணிமார்பா!
அரவணை துயிலும் அரிதிரு மருக
அணிசெயு மருத மலையோனே!
அடியவர்வினையும் அமரர்கள் துயரும்
அற அருள் உதவு பெருமாளே!

மருதமலை ஆண்டவனே போற்றி போற்றி!
மருதாசலமூர்த்தீ அனைவருக்கும்  எல்லோருக்கும் எல்லா
 நலங்களும் அருள்வாய்.



புதியதாக கட்டிய இராஜ கோபுர படம் - கூகுள் நன்றி
.

//நான் திருச்செந்தூர் சஷ்டிகவசம் மட்டுமே  படித்து 
இருக்கிறேன், மற்ற படைவீடுகளின் சஷ்டி கவசங்களைத் தேடி
 இந்த கந்த சஷ்டி நாளில் படிக்க வேண்டும் என்று நினைத்து
இருக்கிறேன்.

மற்ற ஐந்து படை வீடுகளுக்கான கவச நூல்கள் பின்வருமாறு,
திருப்பரங்குன்றுறை திருமகன் கவசம்; பழனிப்பதி வாழ் 
அப்பன் கவசம்;திருவேரகம் வாழ் தேவன் கவசம்; 
குன்றுதோறாடும் முருகன் கவசம்;பழமுதிர்ச் சோலை
 பண்டிதன் கவசம் என்பன.//

திருப்பரங்குன்றுறை திருமகன் கவசம்  இன்று இந்த கவசம் 

படித்தேன். போனபதிவில் பழனிப்பதிவாழ் அப்பன் கவசம் 

படித்தேன் அதன் சுட்டி கொடுத்து இருந்தேன்.


திருவேரகம் வாழ் தேவன் கவசம்;  சுவாமி மலை கவசம் 

படித்தேன்.

இன்று என் மாமனார் அவர்களுக்கு பிறந்த நாள். தீபாவளி

முடிந்து இரண்டு நாளில் அவர்கள் பிறந்த நாள் வரும்.

ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் ஏதாவது ஒரு கோவிலுக்கு

குடும்பத்தினர் அனைவரும் சென்று வருவோம்.

மாமாவின் 100வது பிறந்த நாளுக்கு திரு சுகி.சிவம் அவர்கள் 

மாமா அவர்களை பற்றி பேசியது இருக்கிறது இந்த

 காணொளியில் .

மாமா கந்தசஷ்டிக்கு கோவை ஆர்.எஸ். புரம் இரத்தினவிநாயகர்

 கோயிலில் கந்த புராணம் தொடர் சொற்பொழிவு செய்வார்கள்.

//கந்தர்சஷ்டி விழா-
-------------------------
தொடர்சொற்பொழிவு-1951-ல்
----------------------------------------
எமது தந்தையார் திரு. எஸ் அருணாசலம் பிள்ளையவர்கள்
ஏறக்குறைய 70 ஆண்டுகளுக்கு முன் கோவை ஆர்.எஸ்.புரம்
அருள்மிகு இரத்தினவிநாயகர் திருக்கோயிலில் கந்தசஷ்டித்
திருவிழாவை முன்னிட்டுக் கந்தபுராணத் தொடர்சொற்பொழிவு ஆற்றினார்கள். அவ்விழா அழைப்பிதழை இங்குக் காணலாம்.
இன்று கந்தசஷ்டி விழா தொடங்குகிறது. எமது தந்தையாருக்கு
இன்று 111ஆவது பிறந்தநாளுங்கூட.

அதனை முன்னிட்டு அவர்களை வணங்கி நினைவுகூருகிறோம்.//

இப்படி என் கணவர் நவம்பர் 15ம் தேதி 2020 முகநூலில் போட்ட

கடைசி பதிவு.

மருதமலை ஆண்டவர் அனைவருக்கும் உடல் நலம், மனநலத்தை

அருள வேண்டும்.


         வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்  !
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------          

30 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  2. அறுபத்தோரு ஆண்டுகளுக்கு முந்தைய சஷ்டி விழா அழைப்பிதழைக் காண்பதுவே மகிழ்ச்சி..

    உண்மையில் மகத்தான பொக்கிஷம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அறுபத்தோரு ஆண்டுகளுக்கு முந்தைய சஷ்டி விழா அழைப்பிதழைக் காண்பதுவே மகிழ்ச்சி..//

      ஆமாம், பொக்கிஷமாக என் கணவர் அதை பாதுகாத்து வைத்து இருந்தார்கள்.

      நீக்கு
  3. இன்று காலையில் தான் மருதமலை என்று தொடங்கும் ஒரு பாடலை சஷ்டிக்கு அப்புறம் வெளியிடுவதற்கு என ஒழுங்கு செய்து வைத்தேன்.. இப்போது இங்கே மருதமலை தரிசனம்.. திருப்புகழ்..

    மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /இன்று காலையில் தான் மருதமலை என்று தொடங்கும் ஒரு பாடலை சஷ்டிக்கு அப்புறம் வெளியிடுவதற்கு என ஒழுங்கு செய்து வைத்தேன்.. இப்போது இங்கே மருதமலை தரிசனம்.. திருப்புகழ்..//

      உங்கள் தளத்திலும் கேட்டு மகிழலாம். மருதமலைக்கு நீங்கள் கொஞ்சநாள் முன்பு போய் வந்து பதிவு போட்டீர்கள்.

      இந்த பதிவு மீள்பதிவுதான், மாமா பிறந்தநாள் காணொளி, என் கணவர் பகிர்வு மட்டுமே புதிது.

      நீக்கு
  4. இருபது வருடங்களாக கேட்டுக் கொண்டிருந்த சுசியின் பேச்சு இப்போது வெறுத்து விட்டது.. எப்போது பட்டினத்தடிகளாரை வேறொருவருடன் ஒப்பிட்டுப் பேசினாரோ அப்போதே அவரை மனதில் இருந்து இறக்கி விட்டேன்..

    நமது சமயக் கருத்துகளை அவர் ஏளனம் செய்து பேசுகின்ற சிறிய காணொளி கூட ஒன்று பதிவில் இடுவதற்காக என்னிடம் உள்ளது..

    ஆனாலும்,
    என் மனம் விருப்பப்படவில்லை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுகி சிவம் அவர்கள் எங்கள் குடும்ப நண்பர், என் கணவரின் அணணாவுடன் படித்தவர். எங்கள் குடும்பவிழாவில் எல்லாம் இருப்பார்.
      என் மாமானார் 80, 90, 100 எல்லா விழாக்களில் சாரின் அண்ணா,60, 75, க்கு எல்லாம் பேசி இருக்கிறார்.

      இந்த காணொளியில் என் மாமாவை பற்றி மட்டுமே பேசுகிறார்.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
    2. அவர் தங்களது குடும்ப நண்பர் என்பது எனக்குத் தெரியாது.. இருப்பினும் நமது சமயத்தின் மீது குறை கூறினார் என்பதாலேயே எனது நிலையைச் சொன்னேன்...

      நீக்கு
    3. அதனால் பரவாயில்லை. உங்கள் கருத்தை பகிர்ந்து இருக்கிறீகள்.

      நீக்கு
  5. நல்ல பதிவு. மருதமலை முருகனைப் பற்றி நிறையத் தெரிந்துகொண்டேன்.

    இதற்கு முன்பு, தேவர் அவர்கள் இந்தக் கோயிலுக்குச் செல்லும் பாதையைக் கட்டி, டியூப் லைட்டுகள்லாம் போட்டு, எம்ஜிஆரைத் திறந்துவைக்கச் சொன்னார் என்று படித்திருக்கிறேன். (முருகனால்தான் கொடும் பசியைத் தன்னால் தீர்த்துக்கொள்ள முடிந்தது-ஒரு சிகரெட் பாக்கெட்டில் கிடைத்த 10 ரூபாய் மூலம் என்று எழுதியிருக்கிறார்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்
      //நல்ல பதிவு. மருதமலை முருகனைப் பற்றி நிறையத் தெரிந்துகொண்டேன்.//

      நன்றி.

      //இதற்கு முன்பு, தேவர் அவர்கள் இந்தக் கோயிலுக்குச் செல்லும் பாதையைக் கட்டி, டியூப் லைட்டுகள்லாம் போட்டு, எம்ஜிஆரைத் திறந்துவைக்கச் சொன்னார் என்று படித்திருக்கிறேன். (முருகனால்தான் கொடும் பசியைத் தன்னால் தீர்த்துக்கொள்ள முடிந்தது-ஒரு சிகரெட் பாக்கெட்டில் கிடைத்த 10 ரூபாய் மூலம் என்று எழுதியிருக்கிறார்)//
      நானும் படித்து இருக்கிறேன், ஒரு சிகரெட் பெட்டியில் 10 ரூபாய் இருந்ததை கடவுள் இல்லை என்று சொல்லும் நண்பரிடம் கடவுள் நம்பிக்கைக்கு இன்னொரு நண்பர் சொல்வதாய் தெய்வம் படத்தில் சொல்லி இருப்பார். அதை நம்பும் அந்த நண்பருக்கு பெட்டி நிறைய பணம் கிடைக்க செய்வார் மருதமலை முருகன்.








      நீக்கு
  6. பழைய சஷ்டி பத்திரிகை...அருமையான பகிர்வு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாமாவின் சஷ்டி பத்திரிக்கையை பத்திரமாக வைத்து பகிர்ந்தார்கள்.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. மாமா காணொளி சின்னதுதான் நேரம் இருக்கும் போது பாருங்கள்.

      நீக்கு
  7. என் பதிவினால் உங்களுக்கும் ஒரு பதிவா?  இறைவா...    முருகனருள்.  நன்றி.  மருதமலை மிக அழகாக இருக்கிறது.  நான் இதுவரை தரிசிக்காத கோவில்.  தேவர் பற்றிய தகவல்கள் கேள்விபப்ட்டிருக்கிறேன் எனினும் மறுபடி படிக்கும்போது மனம் நெகிழ்கிறது.  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

      //என் பதிவினால் உங்களுக்கும் ஒரு பதிவா? இறைவா... முருகனருள். //
      இந்த பதிவு மீள் பதிவு எந்த வெள்ளிக்கிழமையில் பதிவு என்று நினைக்கிறேன், அந்த பதிவை குறிப்பிட மறந்து இருக்கிறேன்.
      மருதமலை பழைய கோவில்தான் எனக்கு பிடிக்கும். மிகவும் ரம்மியமாக இருக்கும், இப்போது வாகனம் அதிகமாகி விட்டது அதனால் நிறுத்த நிறைய மரம், மலையை வெட்டி விட்டார்கள்.
      தேவர் பற்றிய பகுதியும் முன்பு பகிர்ந்ததுதான்.நீங்களும் பழைய புத்தகங்களில் படித்து இருப்பீர்கள்.

      நீக்கு
  8. மருதமலை மாமணியே பாடல் எவ்வளவு ஹிட் (நிறைய 'ட்' போடவேண்டும்) என்பதை இப்போது நினைத்துப் பார்த்தாலும் ஆச்சர்யம் வருகிறது.  அதைப் பாடாத வாயே இருக்காது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மருதமலை மாமணியே பாடல் எவ்வளவு ஹிட் (நிறைய 'ட்' போடவேண்டும்) என்பதை இப்போது நினைத்துப் பார்த்தாலும் ஆச்சர்யம் வருகிறது. அதைப் பாடாத வாயே இருக்காது.//
      ஆமாம், இரண்டு பேரன்களும் சிறு குழந்தையாக இருக்கும் போது இந்த பாட்டை மதுரை சோமு போல கையை அசைத்து பாடுவார்கள்.
      அனைவரும் சிரித்து மகிழ்வோம்.

      நீக்கு
  9. உங்கள் மாமனாருக்கு இன்று பிறந்தநாளா?  சுகிசிவம் உரை கேட்டேன்.  ஓ...   அவர் உங்கள் குடும்ப நண்பரா?  என் அப்பாவின் அப்பாவுக்கு தீபாவளிக்கு முதல்நாள் திதி வரும்.  ஒவ்வொரு தீபாவளி அன்றைக்கும் முதல் நாள் திதிக்குதான் முதலிடம்.  பின்னர் இருக்கும் நேரத்தை வைத்து தீபாவளி பட்சணங்கள்.  அம்மா தனியாய் செய்ய ஆரம்பிக்கும்போது உடனிருந்து உதவிய நாட்கள் நினைவுக்கு வருகின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், என் மாமனாருக்கு இன்று பிறந்த நாள். உரை கேட்டது மகிழ்ச்சி. எங்கள் குடும்ப நண்பர். சாரின் அண்ணா 75 வயது, 50 வது திருமண நாள் , என்று விழா கொண்டாடிய போது சார் சுகி சிவம் அவர்களை பற்றி சொல்லி பேச அழைக்கும் காணொளி இருக்கிறது.

      அண்ணாவுடன் படித்தவர். அண்ணா வேலை பார்த்த கோவில்களில் எல்லாம் விழாக்களில் சுகி சிவம் பேசுவார்கள். எப்போது அழைத்தாலும் தட்டாமல் வந்து விடுவார்.
      உங்கள் அப்பாவிற்கு தீபாவளிக்கு முன் தினம் திதி வருவதை சொல்லி இருக்கிறீகள்.
      உங்கள் அம்மாவுக்கும் நீங்கள் உதவியதை படிக்கும் போதெல்லாம் மகிழ்ச்சி ஏற்படும்.நல்லபிள்ளை நீங்கள்.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.



      நீக்கு
  10. படங்கள் மிகவும் அழகாக இருக்கிறது.

    காணொளி கண்டேன்..
    சுகி.சிவம் காணொளி கேட்டேன் பழைய 1951-ஆம் ஆண்டின் பத்திரிகையின் பழைய எழுத்துகளை காண்பது மகிழ்ச்சியாய் உள்ளது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ தேவகோட்டை ஜீ, வாழ்க வளமுடன்

      காணொளி கேட்டது மகிழ்ச்சி.

      //பழைய 1951-ஆம் ஆண்டின் பத்திரிகையின் பழைய எழுத்துகளை காண்பது மகிழ்ச்சியாய் உள்ளது//
      பழைய எழுத்து படிக்க விரும்புவீர்கள் என்றுதான் இந்த பகிர்வு.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  11. சிறப்பான பகிர்வு அம்மா...

    முருகன் பாடல்களில் மிகவும் பிடித்த பாடல்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
      உங்களுக்கு பிடித்த பாடல் என்று முன்பு சொல்லி இருக்கிறீர்கள்,நினைவு இருக்கிறது.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  12. பதில்கள்
    1. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  13. வணக்கம் சகோதரி

    இன்றைய மூன்றாம் திருநாள் சஷ்டி பதிவும் அருமை.படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது.

    மருதமலை முருகனை பக்தியுடன் வணங்கி தொழுது கொண்டேன்." மருதமலை மாமணியே" பாடல் எவ்வளவு தடவை கேட்டாலும் திகட்டாத பாடல். அடிக்கடி கேட்டு பக்தி பரவசத்தில் திளைத்திருக்கிறேன். திரைப்படத் தயாரிப்பாளர் திரு தேவர் அவர்கள் நல்ல முருக பக்தர். அவரைப்பற்றி சிறப்பாக பத்திரிக்கைகளில் நானும் கேள்விபட்டுள்ளேன். இன்று நீங்கள் சொன்னதும் சிறப்பான தகவல். எவ்வளவு நல்ல மனமிருந்தால் இவ்வாறு செயல்பட முடியும். அவரின் குடும்பத்தை முருகன் வாழையடிவாழையாக காத்தருளுவான்.

    தாங்கள் தங்கள் மாமனாரின் உபன்யாசம் (சொற்பொழிவு) நடக்கும் பத்திரிக்கைகளை பத்திரமாக வைத்திருப்பது மிகச்சிறப்பு. பழைய கால
    எழுத்துக்களை படித்து மகிழ்ந்தேன். நாம் பள்ளியில் படிக்கும் போது எனக்கும் இப்படித்தான் எழுதி பழக்கம். அதன் பின்தான் எழுத்துக்கள் மாறி விட்டன. திரு சுகிசிவம் அவர்கள் உங்கள் குடும்ப நண்பர் என உங்கள் பழைய பதிவுகளிலேயே அறிந்திருக்கிறேன். ரொம்ப நல்ல விஷயம்.

    /இன்பம் வந்தால் இறைவனை மறப்பதும், துன்பம் வந்தால்
    இறைவனை நினைப்பது இல்லாமல் எப்போதும் அவரை நினைக்க
    வேண்டும். இன்பத்திற்கு நன்றி சொல்லி வணங்க வேண்டும், துன்பத்தில்
    என்னைவிட அதிகமாய் அடியார்கள் துன்பங்களை அனுபவித்து
    இருக்கிறார்கள் என் துன்பம் குறைவே என்று அவரை சரண்
    அடைந்து விட வேண்டும். /

    உண்மையான வார்த்தை.. நாம் அவ்வாறே அவனை எப்போதும் வணங்க வேண்டும். இங்கு என் பேத்திக்கு (மகள் வயிற்றுப்பேத்தி) தீபாவளி முதல் நாளிலிருந்தே சளி ஜுரம் என அவஸ்தைப்படுகிறாள். மாதாமாதம் எப்படியோ சளி, இருமல் என வந்து விடுகிறது. அதனால் அவள் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. அதனால்தான் நேற்று நான் வர இயலவில்லை. இப்போது உங்கள் பதிவை பக்தியுடன் தினம் படித்தவுடன் முருகனிடம் வேண்டிக் கொண்டிருக்கிறேன்.எப்போதுமே, மற்றும் அவள் உடல்நல குறைவுகள் வரும் போதெல்லாம் அவனிடந்தான் என் மனக்குறைகளை கூறி வேண்டிக் கொள்வேன். இன்று அவளுக்கு கொஞ்சம் பரவாயில்லை. முருகன் அவள் அவஸ்தைகளை போக்கி அவளின் நல்ல வளர்ச்சிக்கு துணை புரிவான் என்ற நம்பிக்கை இருக்கிறது. நாளை முடிந்தால் முருகன் கோவிலுக்கு அவளை அழைத்துக் கொண்டுப் போகலாம் என நினைத்துள்ளோம். முருகனருள் கிடைக்க வேண்டும். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்

      //இன்றைய மூன்றாம் திருநாள் சஷ்டி பதிவும் அருமை.படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது.//
      நன்றி.




      //மருதமலை மாமணியே" பாடல் எவ்வளவு தடவை கேட்டாலும் திகட்டாத பாடல். அடிக்கடி கேட்டு பக்தி பரவசத்தில் திளைத்திருக்கிறேன்//

      ஆமாம், சிறியவர் முதல் பெரியவர்கள் வரை கவர்ந்த பாடல்.

      . //திரைப்படத் தயாரிப்பாளர் திரு தேவர் அவர்கள் நல்ல முருக பக்தர். அவரைப்பற்றி சிறப்பாக பத்திரிக்கைகளில் நானும் கேள்விபட்டுள்ளேன். இன்று நீங்கள் சொன்னதும் சிறப்பான தகவல். எவ்வளவு நல்ல மனமிருந்தால் இவ்வாறு செயல்பட முடியும். அவரின் குடும்பத்தை முருகன் வாழையடிவாழையாக காத்தருளுவான்.//

      ஆமாம், அவர் குடும்பத்தை முருகன் காப்பார்.

      //பழைய கால
      எழுத்துக்களை படித்து மகிழ்ந்தேன். நாம் பள்ளியில் படிக்கும் போது எனக்கும் இப்படித்தான் எழுதி பழக்கம். அதன் பின்தான் எழுத்துக்கள் மாறிவிட்டன்//
      ஆமாம்.நான் படிக்கும் போதும் இப்படித்தான் இருந்தது.

      முருகன் கோவிலுக்கு அவளை அழைத்துக் கொண்டுப் போகலாம் என நினைத்துள்ளோம். முருகனருள் கிடைக்க வேண்டும்.//
      முருகனருள் கிடைக்கும் அழைத்து போய் வாங்க பேத்தியை நலம் அடைவாள்..

      பேத்தி விரைவில் பூரண நலம் பெற வேண்டும். முருகனிடம் பிரார்த்திப்போம்.



      தவிர்க்க முடியாத காரணம் இருந்தால் தான் வாராமல் இருப்பீர்கள்.

      எனக்கு மன வேதனையான நாள் இன்று. மாலை 5.30க்கு என் நாத்தனார்(சின்ன மாமனார் பெண்) இறைவனிடம் சென்று விட்டார்.
      நாளை அவளை பார்க்க கோவை போகிறேன் தம்பியுடன்.

      உங்கள் கருத்துக்கு நன்றி.





      நீக்கு
    2. வணக்கம் சகோதரி

      அடாடா.. செய்தியறிந்து எனக்கும் வருத்தமாக உள்ளது. உங்கள் நாத்தனாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன். உங்கள் அனைவருக்கும் அவரது மறைவை தாங்கும் சக்தியையும் இறைவன் அருள பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

      அன்புடன்
      கமலா ஹரிஹரன்

      நீக்கு
  14. நன்றி கமலா ஹ்ரிஹரன்,
    இறைவன் அருள வேண்டும் மன அமைதியை.
    அவள் மிகவும் உடல் வேதனை அடைந்து விட்டாள் அதிலிருந்து இறைவன் விடுதலை அளித்து இருக்கிறார். அதுதான் இப்போது எல்லோருக்கும் ஆறுதல்.
    உங்கள் பிரார்த்தனைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு