செவ்வாய், 21 டிசம்பர், 2021

 

ஸ்ரீவில்லிபுத்தூர்க் கோவில்


பெரியாழ்வார் கட்டிய 11 நிலைக் கோபுரம்
  ஸ்ரீவில்லிபுத்தூர்  கோபுரம்  நம் அரசின் அடையாள சின்னம்.

மார்கழி என்றாலே பாவை நோன்பும், திருப்பாவையும் சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாளும் எல்லோருக்கும் நினைவில் வரும் இல்லையா?


கோதை பிறந்த ஊர் கோவிந்தன்  வாழும் ஊர் என்று சொல்லப்படுகிற ஸ்ரீவில்லிப்புத்தூருக்கு போய் இருந்தோம் போன மாதம்.  சிவகாசியில் அப்பா பணி புரிந்த போது அடிக்கடி வீட்டுக்கு வரும் உறவினர்களுடன் ஆண்டாள் தரிசனம் செய்யப்  போவோம். பல வருடங்கள் கழித்து மீண்டும் தரிசனம். மலரும் நினைவுகள்  வந்து சென்றது. 

கோவிலில் பல மாற்றங்கள். வழி எல்லாம் பால்கோவா கடைகள்,(அம்மனுக்குத் திரட்டுப்பால்தான் பிரசாதம்) துளசி மாலை வாங்கச் சொல்லி துரத்திக் கொண்டே வரும் பெண்கள், ஆண்கள்.  முதலில் எங்கு போகவேண்டும் எப்படித் தரிசனம் செய்ய வேண்டும் என்பதையும் அவர்களே சொல்கிறார்கள். 

         
                                                                            ஆடிப்பூரக் கொட்டகை  
 நன்றி - பக்தி ஸ்பெஷல் அட்டைப் படம்

 முதலில் ஆண்டாள் சன்னதி. ”நாச்சியார் திருமாளிகை” என்று அழைக்கப்படுகிறது. அவள் சிறுவயதில் ஆடி, ஓடிக்களித்த இடமே இப்போது ஆண்டாள் சன்னதி. துளசி மாலைகள் வாங்கிக் கொண்டு உள் நுழைகிறோம். உள்ளே நுழைந்தவுடன் பிரகாரத்தில்  லட்சுமிஹயக்கீரவர் . அங்குள்ள பட்டர் வாங்க பெரியாழ்வார் கும்பிட்ட ஸ்வாமி முதலில் இவரை வணங்கி விட்டு போங்கள் என்கிறார்.

அப்புறம் ஆண்டாள் தரிசனம். 

ஆண்டாள் சன்னதிக்குள் செல்ல சிறப்பு கட்டணம் டிக்கட் வாங்கி உள்ளே சென்றோம்.   ஆண்டாள், ரங்கமன்னார், கருடாழ்வார் ஒரே வரிசையில் நிற்கிறார்கள்.  மூலவர்கள் போலவே  மூன்று உற்சவ மூர்த்திகளும்  முன்புறம் உள்ளனர், இவர்கள்  இருக்கும்  இடம்   முத்துப் பந்தல் என்று அழைக்கப்படுகிறது. பட்டர் ஆரத்திக் காட்டிவிட்டு   சுருக்கமாய்த் தலவரலாறு  சொல்கிறார்.

  உற்சவர்கள்  பின்புறம் இருக்கும்   மூலவர்களை மறைக்கிறார்கள். உற்று உற்றுத் தான் பார்க்கவேண்டும் மூலவர்களை. முதலில் ஆண்டாளைப் பார்த்தேன்,  ஆண்டாள் கையில் கிளி இருக்கிறதா என்று? ஏன் என்றால்    தினம் தினம் புதிதாக இலைகளால் செய்யப்பட்ட கிளி , மாலையில் சார்த்தப்பட்டுக் காலை வரைதான் இருக்குமாம் ஆண்டாள் கைகளில் , அப்புறம் பக்தர்களுக்குக்  கொடுத்து விடுவார்களாம். 
                              
               முன்பு ஆனந்தவிகடனில் வந்த படத்தைக் கிழித்து வைத்து இருந்தேன்.

                      நமது வேண்டுதலைக் கண்ணனிடம் சேர்க்கும் கிளி

 நாம் கொடுக்கும் துளசி மாலையை ஸ்வாமிக்குப் போட்டு விட்டு  ஆரத்தி காட்டி விட்டுத் துளசி மாலையை எடுத்து  கொடுத்தவர் கழுத்தில் போட்டு விடுகிறார்கள்.  அதைப் போட்டுக் கொண்டே கண்ணாடிக் கிணறுக்கு போகிறார்கள். பெண்கள் மாலையைப் போட்டுக் கொண்டு சுற்றி வந்தால் கல்யாணம் ஆகுமாம். 

அடுத்த தரிசனம்  ஆண்டாள் ஸ்வாமிக்கு பெரியாழ்வார் தொடுத்த மாலையை தன் கழுத்தில் போட்டு அழகு பார்த்த கண்ணாடிக் கிணறு. இப்போது கண்ணாடிமூடியால் மூடி ஒரு உண்டியல் பெட்டியாக மாறி விட்டது . நான்கு பக்கம் வாசல் வைத்து அதன் வழியாகப் பணம் போடப்படுகிறது , டாலர் எல்லாம் அதில் இருந்தது. (பணம் தண்ணீரில் விழாது.  அது போன்று அமைத்து இருக்கிறார்கள்). கிணற்றைப் பார்க்க முடியவில்லை. சின்ன சதுரமாய்த் தெரிகிறது கிணறு  மிக கவனமாய்ப் பார்த்தாலும் தண்ணீர் தெரியவில்லை. அடுத்து கண்ணாடி அறை நடுவில்  ஆண்டாள் படம்  வைத்து இருந்தார்கள்.சுற்றி வர கண்ணாடி  வைத்து இருந்தார்கள். கண்ணாடி வழியாக பார்த்துக் கொண்டு சுற்றி வந்து வணங்கி வெளியில் வந்தோம். இங்கும் கட்டணம் உண்டு.

பின் ஆண்டாள் சன்னதி சுற்றி வரும் போது உள்ளே உள்ள உற்சவர்கள் போலவே சுவற்றில் திருவுருவங்கள் இருக்கிறது- ஆண்டாள், ரங்கமன்னார், கருடாழ்வார். அதன் பக்கத்தில் உள்ள வயதான பட்டர் நமக்குக் கதை சொல்கிறார்,  கோதை பிறந்த கதை, விஷ்ணு சித்தர் கருடாழ்வாராக அவதாரம் எடுத்தகதை , மற்ற கோவில்களில் எதிரில் இருக்கும் கருடன்  இங்குமட்டும் தான் உடன் இருக்கிறார்.  அதற்குக் காரணம் ரங்கமன்னாருக்கு அவர் மாமனார் என்பதாலாம்.  மூவரும் பிரணவ மந்திரத்தின் உட்பொருளாம். ஆண்டாள் சன்னதி பிரணவ மந்திர  அமைப்பில் கட்டப்பட்டு இருக்கிறதாம். ஆண்டாள் சன்னதியில் 108 திவ்ய தேசங்களின் படம் வரையப் பட்டு இருக்கிறது -அழகாய். இருக்கிறது.
                     
                                         ஆண்டாள் அவதரித்த துளசி வனம்.

அடுத்து ஆண்டாள் பிறந்த துளசிவனம். பெரியாழ்வாரின் துளசி தோட்டத்தில்  செவ்வாய்க்கிழமை திருவாடிப்பூரத்தில்  பூமி தேவியின் அவதாரமாக கோதை அவதரித்தாள். கோதை தோன்றிய இடம் அழகாய் இருக்கிறது. ஒரு தொட்டியில் துளசிச்செடி முன்புறம்  வைத்து இருந்தார்கள். பின் புறம் ஆண்டாள் அழகாய் அலங்காரம் செய்து இருந்தார்கள்,  பட்டர் ஆரத்தி காட்டினார்.

 சன்னதியைச் சுற்றி அழகிய துளசிச் செடிகளும் மரங்களுமாகிய அழகிய தோட்டம்.


                                           
அழகிய துளசி வனம்

ஆண்டாள் கோவில் யானை -பெயர் தெரியவில்லை

 வடபத்திரசாயி ரங்கமன்னாருக்குத் தான் கோபுரம் பெரிதாக இருக்கிறது.   மூலவரைப் பார்க்கப் போக ஒரு பத்துபடி ஏறிப்போக வேண்டும்., பிடித்துக் கொண்டு ஏற  வசதியாக  கைப்பிடி இருக்கிறது.  பெருமாள் சயனகோலத்தில்  ஸ்ரீதேவி, பூதேவியுடன் அழகாய்க்  காட்சி அளிக்கிறார்.  பின்புறம் உள்ளே இருக்கும் மற்ற தெய்வங்கள் அழகிய வர்ணத்தில் இருக்கிறார்கள்.  பட்டர் பெரிய மூங்கில் தட்டில் துளசியை வைத்துக் கொண்டு வரும் பக்தர்களுக்கு  கொடுத்தார்.  ஆரத்தி காட்டவில்லை.

பெருமாள் சன்னதி எதிரில்  உள்ள (கோபாலவிலாசம்)  மண்டபத்தில் அழகிய மரவேலைப்பாட்டுக் கூரை,  
வடபத்திரசாயி சன்னதி செல்லும் வழி
உடமைகளைப் பாதுகாத்துக் கொள்ளும் வசதிக்காக புதிய இடம் கட்டி வருகிறார்கள் 
வாசல் முகப்பு
உள் பிரகாரம், நல்ல வெளிச்சம் வருவது போல் கட்டிட அமைப்பு
ஆண்டாளின்  வரலாறு சித்தரிக்கப்பட்டு உள்ளது விமானத்தில்

பெருமாள் சன்னதியிலிருந்து கோபுர தரிசனம்.
மரவேலைப்பாடு போல் கல்லில் அழகாய்ச் செய்த வேலைப்பாடு.   இருபுறமும் கடைகள் உள்ளன.


 வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
                                                         ----------------------------------------

33 கருத்துகள்:

 1. கோயிலுக்குள் கூட்டிச் சென்று விட்டீர்கள். படங்களுடன் தகவல்களும் விவரிப்பும் மிக நன்று. செல்ல விரும்பும் கோயில்களில் இதுவும் ஒன்று.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
   பார்க்க வேண்டிய கோயில் ராமலக்ஷ்மி.
   ஆண்டாள் வாழ்ந்த ஊர் , அவர் மார்கழி மாதம் தோழிகளை அழைத்து கொண்டு பாடிய ஊர் என்று நினைக்கும் போது மனம் மிகவும் மகிழும்.

   உங்கள் காமிரா கண்களுக்கு நல்ல விருந்தாக இருக்கும். (காமிராவுக்கும்தான்)

   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 2. வணக்கம் சகோதரி

  பதிவு அருமை. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் தரிசன பகிர்வு அருமையாக இருந்தது. மார்கழி மாதத்திற்கு ஏற்ற பதிவாக தந்துள்ளீர்கள். அழகான படங்களும், கோவில் விபரங்களும் அருமை. இந்த கோவிலுக்கு திருமங்கலத்தில் இருக்கும் போது ஒரு தடவை சென்றுள்ளேன். ராஜ கோபுரம் மிக அழகானது. இப்போதும் தரிசித்து கொண்டேன். ஆண்டாள் கையிலிருக்கும் கிளியைப்பற்றி சொன்ன விபரங்கள்,அந்த ஆனந்த விகடன் புத்தகத்திலிருக்கும் விபரங்கள் நானும் படித்த நினைவுள்ளது. நமக்கு அங்கு சென்றவுடன் அந்த கிளி கிடைக்குமா? வாங்கி கொள்ளலாமா? இல்லை முன் கூட்டியே முன்பதிவு மாதிரி ஏதாவது செய்து கொள்ள வேண்டுமா? உங்கள் பதிவை படித்ததில் உங்களுடன் கோவிலுக்கு சென்று ஆண்டாளை தரிசித்து வந்த உணர்வை தந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
   இதற்கு முன் மகன் வீட்டுத்தோட்டத்துப்பறவைகள் போட்டேன்.
   அதற்கு பின்னூட்டங்கள் வந்து கொண்டு இருக்கிறது.

   இன்று காலை மார்கழி பதிவுகள் படித்து கொண்டு இருந்தேன்

   மார்கழி பதிவுகளை படித்து கொண்டு இருந்தேன்.
   அதுவாக மார்கழி மாதம் ஆண்டாளை நினைக்க வேண்டும் என்று பதிவாகி விட்டது.
   எல்லாம் இறையருள்.

   //ஆனந்த விகடன் புத்தகத்திலிருக்கும் விபரங்கள் நானும் படித்த நினைவுள்ளது. நமக்கு அங்கு சென்றவுடன் அந்த கிளி கிடைக்குமா? வாங்கி கொள்ளலாமா? இல்லை முன் கூட்டியே முன்பதிவு மாதிரி ஏதாவது செய்து கொள்ள வேண்டுமா?//

   கிளி பற்றிய விவரங்கள் விகடனில் படித்து தெரிந்து கொண்டது. நாங்கள் போன போது ஆண்டாள் கையில் இருக்கிறதா என்று மட்டும் பார்த்தேன்.
   மேலும் விவரங்கள் எனக்கு தெரியாது.

   இப்போது எல்லா கோயிலுக்கும் இணைய தளம் இருக்கிறது. நீங்கள் கோயில் அலுவலகத்தை தொடர்பு கொண்டு கேட்டால் பதில் கிடைக்கும்.

   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 3. இந்தக் கோவிலுக்கு 1989 ல் சென்றிருக்கிறேன்.  இதன் பெருமைகளை ஓரளவு மட்டுமே அறிந்திருந்த நேரம்.. கேமிரா சாதனங்களும் கைவசம் இல்லாத நேரம்!  ஏதோ இந்தக் கோவிலுக்கு நானும் சென்றுவந்திருக்கிறேன் என்கிற சிறு திருப்தி!  மறுபடி சென்று வரவேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
   பழைய பதிவிலும் 89 ல் வேலை பார்த்த விவரம் சொல்லி இருக்கிறீர்கள்.
   மறுபடி ஒரு முறை சென்று வாருங்கள்.

   நீக்கு
 4. கோவில் பற்றி ஏகப்பட்ட விவரங்கள்.  ஆனந்த விகடன் பக்கத்தைக் கிழித்து வைத்து அதைப் பத்திரமாக வைத்திருப்பது சிறப்பு.  இப்போதைய விகடனில் இப்படிப்பட்ட கட்டுரைகளை எதிர்பார்க்க முடியாது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விவரங்கள் குறைவு இன்னும் நிறைய இருக்கிறது கோவிலின் சிறப்புக்கள்.

   ஆனந்த விகடனில் இது போன்ற செய்திகள் இப்போது வருவது இல்லையா?

   நிறைய விகடன் சேகரிப்புகள் இருந்தன என்னிடம் .

   நீக்கு
 5. இந்தக் கோவிலின் கோபுரம்தான் தமிழக அரசுச் சின்னத்தில் இடம் பெற்றிருக்கும் கோபுரம்.  

  இப்போதைய யானையின் பெயர் ஜெயமால்யதா என்கிறது கூகுள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆடி பூரத்திற்கு ஒறு பதிவு போட்டு இருக்கிறேன். அதில் தமிழக அரசுச் சின்னம் என்று குறிப்பிட்டு இருக்கிறேன் நானும்.
   இப்போதைய யானையின் பெயர் சொன்னதற்கு நன்றி.
   உங்கள் கருத்துக்களுக்கு நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 6. அன்பின் கோமதி மா,
  வாழ்க வளமுடன்.

  ஸ்ரீவில்லிபுத்தூருக்குச் சென்ற அனுபவமே மறக்கவில்லை.

  உங்கள் பதிவு வழியே மீண்டும் சென்ற உணர்வு கிடைக்கிறது.

  அந்த ஊரின் பக்தி அளவிட முடியாதது.
  அதை சிறு வயதிலேயே அனுபவித்ததுதான் இன்றும் மனதில்.
  மிக அழகாக ஆண்டாள், ரங்கமன்னார் ,கருடன்
  என்று அருமையாக விளக்கிச் சொல்லி இருக்கிறீர்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்

   //ஸ்ரீவில்லிபுத்தூருக்குச் சென்ற அனுபவமே மறக்கவில்லை.

   உங்கள் பதிவு வழியே மீண்டும் சென்ற உணர்வு கிடைக்கிறது.//

   மகிழ்ச்சி அக்கா. நினைவுகளை மறக்க முடியுமா? உங்கள் பேரும் ஆண்டாள் என்று முன்னர் சொன்னது நினைவு இருக்கிறது.

   சிறு வயதில் ஏற்பட்ட பக்தி, கேட்ட கதைகள் எல்லாம் பசுமையாக இருக்கும் தானே!
   பட்டர் மிக சுருக்கமாக அழகாய் சொன்னார் அதை மட்டும் குறிப்பிட்டு இருக்கிறேன்.

   நீக்கு
 7. படங்கள் அனைத்துமே அழகான கவிதையாக
  இருக்கின்றன.

  ஆண்டாள் சன்னிதி, துளசி வனம்,
  வடபத்ர சாயி கோயில் எல்லாமே மீண்டும் அனுபவிக்க முடிந்தது.

  கோயில் யானை பெயர் கோதை என்று சொன்னார்கள்.
  நமது முன்னாள் முதல்வர் செல்வி ஜயலலிதா நினைவாக
  ஜயா என்ற பெயரில் இன்னோரு யானையும்
  இருப்பதாக நினைவு.

  பால்கோவா, கிளி,மற்றும் மாலை ஆண்டாள் நாச்சியார் நினைவாக
  சென்னைக்குக் கொண்டு வந்தோம்.


  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படங்களை ரசித்து கவிதை என்று சொன்னதற்கு மகிழ்ச்சி.

   இப்போது உள்ள யானைக்கு பேர் ஜெயமால்யதா என்று சொல்லி இருக்கிறார் ஸ்ரீராம்.

   //பால்கோவா, கிளி,மற்றும் மாலை ஆண்டாள் நாச்சியார் நினைவாக
   சென்னைக்குக் கொண்டு வந்தோம்.//

   கிளி நீங்கள் வாங்கினீர்களா? கமலா அவர்கள் எப்படி வாங்குவது என்று விவரம் கேட்டு இருக்கிறார்கள் அவர்களுக்கு சொல்லுங்கள்.


   நீக்கு
  2. அன்பின் கோமதிமா,
   பால் கோவா மட்டுமே வாங்கினோம். திரட்டுப்பால்
   பிரசாதமாக அர்ச்சகர் கொடுத்தார்,. ஆண்டாள் மாலையும் கிளிகளும்
   அவர் கொடுத்ததே.ஜகார்த்தாவில் மகன் வீட்டில் நெடு நாட்கள் வைத்திருந்தோம்.

   நீக்கு
  3. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்
   பட்டர் பிரசாதமாக கொடுத்தாரா சரி சரி, நல்லது அக்கா.
   மீண்டும் வந்து கருத்து சொன்னதற்கு நன்றி அக்கா.

   நீக்கு
 8. "ஆண்டாள் சன்னதிக்குள் செல்ல சிறப்பு கட்டணம் டிக்கட் வாங்கி உள்ளே சென்றோம். ஆண்டாள், ரங்கமன்னார், கருடாழ்வார் ஒரே வரிசையில் நிற்கிறார்கள். மூலவர்கள் போலவே மூன்று உற்சவ மூர்த்திகளும் முன்புறம் உள்ளனர், இவர்கள் இருக்கும் இடம் முத்துப் பந்தல் என்று அழைக்கப்படுகிறது. பட்டர் ஆரத்திக் காட்டிவிட்டு சுருக்கமாய்த் தலவரலாறு சொல்கிறார்."

  இந்த ஏமாற்றம் எனக்கும் இருக்கிறது. இத்தனைக்கும் பின்னால் பாருங்கள் என்று
  விளக்கு கொண்டு காட்டினார்.
  நல்ல உருவம். தெளிவாகக் காண்பிக்க வில்லை.:(

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //இந்த ஏமாற்றம் எனக்கும் இருக்கிறது. இத்தனைக்கும் பின்னால் பாருங்கள் என்று
   விளக்கு கொண்டு காட்டினார்.
   நல்ல உருவம். தெளிவாகக் காண்பிக்க வில்லை.:(//


   மின்சார விளக்கு போட வில்லை என்றாலும் தூண்டா மணிவிளக்கை நிறைய தொங்கவிடலாம் மூலவர் அருகில். நன்றாக பார்க்க முடிந்தால் அடுத்தவருக்கு வழி விட்டு வெளியே போய் விடலாம். நன்றாக தெரியவில்லை என்றால் அதிக நேரம் நிறக தோன்றும், நிற்க விட மாட்டார்கள்.

   ஆண்டாள், ரங்கமன்னார், கருடாழ்வார் எல்லோருக்கும் நன்றாக காட்சி கொடுக்க வேண்டும்.

   நீக்கு
 9. சார் இருக்கும் புகைப்படம் நன்றாக இருக்கிறது.
  கோபால விலாசம் புகைப்படமும்,கோபுர தரிசனமும் மிக மிக அற்புதம். பதிவுக்கு வாழ்த்துகளும் நன்றியும் அன்பு தங்கச்சி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சாரை நிற்க வைத்து எல்லாம் எடுக்கவில்லை , வழக்கம் போல அவர்கள் முன்னால் போய் கொண்டு இருக்கும் படம் துளசி மாலை வாங்க போன போது மண்டப வாசலையும் அவர்களையும் எடுத்தது.

   உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

   நீக்கு
 10. படங்களும் விவரணமும் தகவல்களும் மிகச் சிறப்பு.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோ துளசிதரன், வாழ்க வளமுடன்
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 11. கோமதிக்கா மிகவும் பிடித்த ஊர் கோயில்!! நாங்கள் சென்றது 30வருடம் முன்பு! எனவே அப்போது கோயிலில் அவ்வளவாகக் காசு கேட்கவில்லை. ஆனால் பிராகாரங்களில் சில மாமாக்கள் ஒட்டிய வயிறுடன் இருப்பவர்கள் கையை நீட்டுவார்கள். அதே போன்றுதான் நாங்குநேரி கோயிலிலும். பரிதாபமாக இருக்கும். நான் சொல்வது 30 வருடங்களுக்கு முன் அதன் பின் சென்றதே இல்லை.

  ௳ர வேலைப்பாடு போன்று கல்லில் செய்த// படம்..பிராகாரப் படம் ரொம்ப அழகாக இருக்கு கூடவே மாமா இருக்கும் படமும்!

  கோபாலவிலாசம் அங்கிருக்கும் மர வேலைப்பாடுகள் செம அழகு!!

  கீதா  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்

   கோமதிக்கா மிகவும் பிடித்த ஊர் கோயில்!!//

   ஓ அப்படியா மகிழ்ச்சி.

   //நாங்கள் சென்றது 30வருடம் முன்பு! எனவே அப்போது கோயிலில் அவ்வளவாகக் காசு கேட்கவில்லை.//

   நானும் (அப்பா சிவகாசியில் பணிபுரிந்த போது ) சிறு வயதில் நிறைய முறை சென்று இருக்கிறேன். இப்போதுதான் சிறப்பு கட்டணம் எல்லாம்.

   கூட்டத்தை கட்டுப்படுத்தவும், பராபரிப்புக்கும் வாங்கலாம் என்று நினைக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

   நாங்குநேரி கோயிலும் இப்போது நன்றாக இருக்கிறது போய் வந்தோம்,நாங்கள் போய் வந்த படங்கள் கிடைத்தால் பதிவு போடுகிறேன்.

   படங்களை ரசித்து பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி.

   நீக்கு
 12. வாசல் முகப்புப் படமும் உள்பிராகாரப் படமும் ரொம்ப அழகா எடுத்திருக்கீங்க கோமதிக்கா

  கீதா

  பதிலளிநீக்கு
 13. யானைக்குட்டி அழகோ அழகு!!

  பெயர் தெரியும் அக்கா சட்டென மனதில் வர மாட்டென் என்கிறது.

  ஆண்டாள் சரிதம் உள்ள விமானம் படமும் ரொம்ப நன்றாக இருக்கிறது

  கோயிலில் காசு வாங்குவது ரொம்ப மனதை உறுத்துகிறது

  அட! ஆனந்தவிகடன் பக்கம் எல்லாம் சேகரித்து வைத்திருக்கிறீர்கல் பத்திரமாக.

  நானும் சேகரிக்கும் பழக்கம் உண்டு. நம் வீட்டில் வாங்கமாட்டாங்க யாராவதுகொடுத்தால் அதன் பக்கங்களை எடுத்து வைத்துவிடுவேன் பிடித்த கட்டுரைகளை படங்களை, என்று ஆனால் அதை எல்லாம் ஒவ்வொரு வீடாக மாறிய போது தூக்கிப் போட வேண்டியதானது.

  அனைத்தும் ரசித்தேன் கோமதிக்கா

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. யானையின் பெயரை, ஸ்ரீராம், வல்லி அக்கா சொல்லி விட்டார்கள்.
   மக்கள் போடுகிறார்கள்.அட்லாண்டாவில் உள்ள சுவாமிநாராயணர் கோவிலில் உள்ள குளத்தில் பக்தர்கள் காசுகளை போடுகிறார்கள். நீர் நிலைகளில் காசு போடுவது எல்லாருக்கும் பழக்கம் போல! சிதம்பர நடராஜர் சன்னதியில் இருக்கும் கிணற்றிலும் காசு போட்டார்கள். இப்போது அதற்கு வலை போட்டு விட்டார்கள்.

   சேகரிப்புகள் நமக்கு பின் அர்த்தமற்றதாக ஆகிவிடும். ஏன் இத்தனை சேகரிப்புகள் என்று ஒரு காலகட்டத்தில் நினைவுக்கு வந்து விடும்.

   என் அம்மா ஊர் ஊராக போனாலும் அவர்கள் சேமிப்புகளை மிகவும் பத்திரமாக பாதுகாத்தார்கள்.

   அனைத்தையும் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

   நீக்கு
 14. பக்கத்து ஊர் இராஜபாளையத்தில் படிக்கும் போது சென்றது ஞாபகம் வந்தது அம்மா... எவ்வளவு வருடமாச்சி...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
   இராஜபாளையத்தில் படிக்கும் போது சென்ற மலரும் நினைவை பதிவு கொடுத்து இருக்கிறது மகிழ்ச்சி.

   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 15. ஆஹா ..மிக அருமை மா...

  நேரில் சென்று பார்க்க ஆசைப்படும் திருக்கோவில் ...இன்னும் நேரில் தான் செல்லவில்லை ..

  ஆனால் இங்கு உள்ள கோதை நாச்சியார் படங்கள் தான் என் தளத்தில் அதிகம் , அத்துணை ஆசை ..


  உங்களின் விவரிப்பும் , படங்களும் மிக அருமை மா ...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் அனு பிரேம், வாழ்க வளமுடன்

   //நேரில் சென்று பார்க்க ஆசைப்படும் திருக்கோவில் ...இன்னும் நேரில் தான் செல்லவில்லை ..//
   ரங்கமன்னாரும் , கோதையும் உங்கள் ஆசையை பூர்த்தி செய்வார்கள் விரைவில்.

   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 16. கோதை பிறந்த ஊர் தரிசனம் அருமை.

  ஆண்டாள் திருவடிகளே சரணம்.

  பதிலளிநீக்கு