மீள்பதிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மீள்பதிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 3 ஆகஸ்ட், 2023

ஆற்றுக்கு போலாம் வாங்க!



முதலில் நிற்பது எங்கள் கார்

கொள்ளிடக்கரையில்(வல்லம்படுகை) ஆடிப்பெருக்கு விழா 

முன்பு எழுதிய பதிவு இனிய நினைவுகளை திரும்பி பார்த்தேன். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
இயற்கையைப் போற்றி வணங்குதல் நன்மைதரும். இதை
 உணர்ந்த மக்கள் காலம் காலமாய்ப் போற்றி 
வந்திருக்கிறார்கள். இயற்கையைக் கடவுளாக நினைத்த நம் முன்னோர்கள் ஆறு, குளம், ஏரி, கிணறு ஆகிய 
நீர்நிலைகளையும்  வணங்கினர். இப்போது நீர்வளங்களைத்
 தரும் ஆறு, குளம், ஏரி, கிணறு எல்லாம் வற்றி வருகின்றன.  
அதனால்  ஆடிப்பெருக்குப் பண்டிகை கொண்டாடுவதில் 
பழைய உற்சாகம் இல்லை என்றாலும் ஆடிப்பெருவிழா  
ஆங்காங்கு நடைபெற்று வருகிறது.    ஆடிப்பெருக்கு 
விழாவைக் கொள்ளிடக்கரையில் கொண்டாடியதைப் 
பார்த்து வந்து  எழுதிய பதிவு இது.

ஞாயிறு, 26 மார்ச், 2023

விரதங்களும் உடல் நலமும்


நம் முன்னோர்கள் மிகவும் விழிப்புணர்வு உள்ளவர்கள்.உடல் நலமாக 
இருந்தால் தான் நாம் இந்த பூமியில் மகிழ்ச்சியாய் வாழமுடியும் என்பதை 
உணர்ந்து அதற்கேற்றவாறு வாழ்க்கை முறைகளை அமைத்துக் 
கொண்டார்கள்.

உடலையும் அதன் இயக்கத்தையும் காக்க ஆகாரம். ரத்தஓட்டத்தையும்,ஜீரணத்தையும் சரியானபடி வைத்திருக்க மிதமான 
உழைப்பு.

புதன், 13 ஏப்ரல், 2022

சித்திரைத் திருநாள்

 தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்


சித்திரை விஷுக்கனி காணும் நாளில்,  மா, பலா, வாழை  என்ற
 முக்கனிகளும்மற்றும் எல்லாப் பழங்களும் இறைவனுக்குச்
 சமர்ப்பிக்கப்படும்.



தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள் என்ற பதிவில் சென்ற ஆண்டு
 விஷுக்கனி கொண்டாடுவதைப் பற்றி  சொல்லிவிட்டேன்.

இந்த ஆண்டு,  விஷுக்கனியில் முக்கியமாக  இடம் பெறும் மா, பலா,
 வாழையும் அதன் நன்மைகளையும் பற்றிப் படித்ததைப் பகிர்ந்து 
கொள்கிறேன்.

பழங்களைப்பற்றி இயற்கை சங்கத்தில் சொல்வதையும்
 பகிர்ந்து கொள்கிறேன்.
என் கணவர் வரைந்த ஓவியம்


சூரியன் தனது ஒளியால் காய்களைக்  கனியச்செய்கிறது.
சூரியசக்தியால் சுவை ஊட்டப்பட்ட கனிகளைச் சாப்பிடுவதால் எல்லா
உயிரினங்களும், மனிதர்களும், உடலுக்குத் தேவையான சக்திகளைப்
பெறுகிறார்கள்.

காலையில் பழ உணவு எடுத்துக் கொள்வதைப் பழ ஆகாரம் என்று 
சொன்னார்கள். அது  தான் மருவி இப்போது பலகாரம் என்று ஆனதாய் சொல்கிறார்கள்,இயற்கைச் சங்கம் என்ற அமைப்பை வைத்து இருப்பவர்கள். காலையில் சாப்பிடும் பழ  உணவு, பொன் போன்றது. மத்தியானம் 
வெள்ளி போன்றது. இரவில் ஈயம் போன்றது என்கிறார்கள். 
தினசரி உணவில் ஒரு பகுதி பழங்களாக அமைந்தால் 
அதன் மூலம் இயற்கை சத்துக்கள் கிடைக்கும் .அந்த 
அந்த பருவகாலங்களில் கிடைக்கும் பழங்களை உண்பதால் 
இயற்கை சக்திகள் குறைவில்லாமல் கிடைக்கிறது. 
நோய் வராமல் பாதுகாக்க நோய் எதிர்ப்பு சக்தியும் கிடைக்கிறது.

பழம் சாப்பிடுவதால் அது உணவாகவும் இருக்கிறது, மருந்தாகவும்
இருக்கிறது. குடலுறிஞ்சிகளால் எளிதில் உறிஞ்சப்படக்கூடியதாகவும்,
நார்ப்பொருள்கொண்டதாகவும்,  குடலின் புளிப்புத் தன்மையை
அகற்றுவதாகவும் இருக்கிறது.

 முக்கனிகள்

 மாம்பழம்:

மாம்பழத்தில் வைட்டமின் A உயிர்ச்சத்து நிறைந்து உள்ளது.  இரத்தம்
சுத்திகரிக்கப்பட்டு உடலுக்கு நல்ல பலம் கிடைப்பதாக உள்ளது. உடலுக்கு
நோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கிறது.  மாம்பழம் கிடைக்கும் காலங்களில்
மாம்பழத்தை உண்டு பலம் பெறலாம்.

வாழைப்பழம்:

குறிப்பிட்ட காலம் என்று இல்லாமல் எல்லாக் காலங்களிலும் கிடைக்கும்
பழம், வாழைப்பழம். இதில் வைட்டமின் A ,  வைட்டமின் B,  B2,  C
உயிர்ச்சத்துக்கள் நிறைய இருக்கின்றன. சுண்ணாம்புச் சத்தும் நிறைய
இருக்கின்றது. இந்த சத்தின் அளவு வாழைப்பழத்தில் உள்ள வகைக்கு வகை
வித்தியாசப்படும்.

பலாப்பழம்

முக்கனிகளுள் ஒன்று. தலைநரம்புகளுக்கு  வலிமையக் கொடுக்கும். அதிக
அளவு சூட்டைத்தருவதால் அளவோடு உபயோகிக்க வேண்டும்.
வைட்டமின் A உயிர்ச்சத்து அதிகம் இருப்பதால் இதைச் சாப்பிட்டால் உடல்
வளர்ச்சி சீரடையும். தேகத்தில் தோலை வழுவழுப்பாக வைத்து இருக்க
உதவும். நரம்புகளுக்கு உறுதி தரும். இரத்தத்தை விருத்தி செய்யும். பல்
சம்பந்தமான கோளாறுகளைப் போக்கும் , பற்களைக் கெட்டிப்படுத்தும்.
வைட்டமின் A உயிர்ச்சத்துக்கு தொற்றுக் கிருமிகளை அழிக்கும் சக்தி
உண்டாகையால் உடலில் தொற்று நோய் தொற்றாது.

பொதுவாக பலாப்பழம் உடலுக்கு நன்மை தரக்கூடியதாகவே உள்ளது.
பழனி பஞ்சாமிர்தத்தில் கூடப் பலாப்பழம் சேர்க்கப்படுகிறது. ஐந்து வகை
பழத்தினையும் தேனையும் சேர்ந்து தயாரிக்கும் பஞ்சாமிர்தம் உடலுக்கு
மிகவும் நன்மை பயக்கக் கூடியதாகும். விருந்துகளில் 
முக்கனி பரிமாறப்படுகிறது.  அதற்குக் காரணம், விருந்தில் 
சுவையான உணவுகள் பரிமாறப்படும்போது  நாம் அதிகமாய்
 சாப்பிட்டு விடுவோம். அதனால் உணவு ஜீரணம் ஆகவும்  உடற் கோளாறுகள் ஏற்படாமல் இருக்கவும்  நம் முன்னோர்கள் முக்கனிகளை 
விருந்தில் பரிமாறினார்கள். விருந்துணவை முக்கனிகளுடன் 
சாப்பிடும் போது ஜீரணம் சீக்கிரமாக நடந்து, இரைப்பையை விட்டு உணவு வெளியேறிவிடும். வயிற்று உபாதை இருக்காது.


எங்கள் வீட்டில் காலையில்  செய்யும் தமிழ்ப்புத்தாண்டு இனிப்பு:

   1 டம்ளர் அவலுக்கு அரை டம்ளர் வெல்லம் வேண்டும். வெல்லத்தைப்
 பொடி செய்து  1 ட்ம்ளர் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து,  காய்ச்சி
கல், மண் போக வடிகட்டி பின் அதைக் கொதிக்க   வைத்து சுத்தம் செய்யப்பட்ட அவலில்   ஊற்றி மூடி வைக்க வேண்டும்,   அதனுடன் சிறிது
 பாசிப்பருப்பு, எள் வறுத்துப் போடலாம்.,வெல்ல நீரை  கொதி வந்தவுடன்
 அவலில் ஊற்றிவிடவேண்டும். (வெகு நேரம் கொதிக்கவைத்தால் பாகு
 மாதிரி ஆகிவிடும்).  ஊறினால் நன்றாக இருக்கும். நன்கு அவல் ஊறியவுடன் அதனுடன் தேங்காய்த் துருவலைப் போட்டு, கிளறி , ஏலக்காயைப் 
பொடி செய்து போட்டு, நெய்யில் வறுத்த முந்திரி பருப்பு  போட்டால்  
  இனிப்பு அவல் ரெடி.

மதியம் வடை, பாயசம், மங்காய் வெல்லம் போட்ட பச்சடி. கொஞ்சமாய் சாஸ்திரத்திற்கு வேப்பம்பூவை அதில்  கலந்து விடுவேன். 
(தனியாக வேப்பம் பூ ரசம் வைப்பது  இல்லை.) கசப்பு, இனிப்பு 
எல்லாம் புத்தாண்டில்  இருக்க வேண்டும் என்பதால்.

புத்தாண்டு செய்திகள்

விஜய ஆண்டு நல்ல பலன்களைக் கொடுக்கட்டும்!

//மண்ணில் விசய வருடம் மழை மிகுதி
எண்ணு சிறுதானியங்கள் எங்குமே-- நண்ணும்
பயம் பெருகி நொந்து பரிவாரமெல்லாம்
நயன்களின்றி வாடுமென நாட்டு//

என்று பஞ்சாங்கத்தில் உள்ள பாடல் கூறுகிறது.

இப்பாடலில் கூறப்பட்டுள்ள நன்மைகளே நடக்கட்டும்.மழை பெருகட்டும்!
தானியங்கள் விளையட்டும்.

இனிய புத்தாண்டு மலரட்டும்!
இனிய வாழ்வு அனைவருக்கும் மலரட்டும்!
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் அனைவருக்கும்!

இந்தப் புத்தாண்டில் நல்லதே நடக்க வேண்டுவோம்.

//இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நீவிர்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்று விளையாடியின்புற்றிருந்து  வாழ்வீர்
தீமையெலாம் அழிந்துபோம், திரும்பி வாரா.//

 ===== மகா கவி பாரதியார்.





சுபகிருது வருஷம் படித்தவுடன் இந்த பாடல் நினைவுக்கு வந்து விட்டது. ஆயுள்முழுவதும் சுபதினமாக இருக்கட்டும்.


2022 ம் ஆண்டு வந்த இந்த  சுபகிருது வருடம்  இறையருளால் 
அனைவருக்கும் நலமாக அமையட்டும்.
அனைவருக்கும் புத்தாண்டு நல வாழ்த்துகள்.

வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!

-----------------------------------------------------------------------------------------------------------------------------

செவ்வாய், 21 டிசம்பர், 2021

 

ஸ்ரீவில்லிபுத்தூர்க் கோவில்


பெரியாழ்வார் கட்டிய 11 நிலைக் கோபுரம்
  ஸ்ரீவில்லிபுத்தூர்  கோபுரம்  நம் அரசின் அடையாள சின்னம்.

மார்கழி என்றாலே பாவை நோன்பும், திருப்பாவையும் சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாளும் எல்லோருக்கும் நினைவில் வரும் இல்லையா?


கோதை பிறந்த ஊர் கோவிந்தன்  வாழும் ஊர் என்று சொல்லப்படுகிற ஸ்ரீவில்லிப்புத்தூருக்கு போய் இருந்தோம் போன மாதம்.  சிவகாசியில் அப்பா பணி புரிந்த போது அடிக்கடி வீட்டுக்கு வரும் உறவினர்களுடன் ஆண்டாள் தரிசனம் செய்யப்  போவோம். பல வருடங்கள் கழித்து மீண்டும் தரிசனம். மலரும் நினைவுகள்  வந்து சென்றது. 

கோவிலில் பல மாற்றங்கள். வழி எல்லாம் பால்கோவா கடைகள்,(அம்மனுக்குத் திரட்டுப்பால்தான் பிரசாதம்) துளசி மாலை வாங்கச் சொல்லி துரத்திக் கொண்டே வரும் பெண்கள், ஆண்கள்.  முதலில் எங்கு போகவேண்டும் எப்படித் தரிசனம் செய்ய வேண்டும் என்பதையும் அவர்களே சொல்கிறார்கள். 

         
                     



                                                       ஆடிப்பூரக் கொட்டகை  
 நன்றி - பக்தி ஸ்பெஷல் அட்டைப் படம்

 முதலில் ஆண்டாள் சன்னதி. ”நாச்சியார் திருமாளிகை” என்று அழைக்கப்படுகிறது. அவள் சிறுவயதில் ஆடி, ஓடிக்களித்த இடமே இப்போது ஆண்டாள் சன்னதி. துளசி மாலைகள் வாங்கிக் கொண்டு உள் நுழைகிறோம். உள்ளே நுழைந்தவுடன் பிரகாரத்தில்  லட்சுமிஹயக்கீரவர் . அங்குள்ள பட்டர் வாங்க பெரியாழ்வார் கும்பிட்ட ஸ்வாமி முதலில் இவரை வணங்கி விட்டு போங்கள் என்கிறார்.

அப்புறம் ஆண்டாள் தரிசனம். 

ஆண்டாள் சன்னதிக்குள் செல்ல சிறப்பு கட்டணம் டிக்கட் வாங்கி உள்ளே சென்றோம்.   ஆண்டாள், ரங்கமன்னார், கருடாழ்வார் ஒரே வரிசையில் நிற்கிறார்கள்.  மூலவர்கள் போலவே  மூன்று உற்சவ மூர்த்திகளும்  முன்புறம் உள்ளனர், இவர்கள்  இருக்கும்  இடம்   முத்துப் பந்தல் என்று அழைக்கப்படுகிறது. பட்டர் ஆரத்திக் காட்டிவிட்டு   சுருக்கமாய்த் தலவரலாறு  சொல்கிறார்.

  உற்சவர்கள்  பின்புறம் இருக்கும்   மூலவர்களை மறைக்கிறார்கள். உற்று உற்றுத் தான் பார்க்கவேண்டும் மூலவர்களை. முதலில் ஆண்டாளைப் பார்த்தேன்,  ஆண்டாள் கையில் கிளி இருக்கிறதா என்று? ஏன் என்றால்    தினம் தினம் புதிதாக இலைகளால் செய்யப்பட்ட கிளி , மாலையில் சார்த்தப்பட்டுக் காலை வரைதான் இருக்குமாம் ஆண்டாள் கைகளில் , அப்புறம் பக்தர்களுக்குக்  கொடுத்து விடுவார்களாம். 
                              
               முன்பு ஆனந்தவிகடனில் வந்த படத்தைக் கிழித்து வைத்து இருந்தேன்.

                      நமது வேண்டுதலைக் கண்ணனிடம் சேர்க்கும் கிளி

 நாம் கொடுக்கும் துளசி மாலையை ஸ்வாமிக்குப் போட்டு விட்டு  ஆரத்தி காட்டி விட்டுத் துளசி மாலையை எடுத்து  கொடுத்தவர் கழுத்தில் போட்டு விடுகிறார்கள்.  அதைப் போட்டுக் கொண்டே கண்ணாடிக் கிணறுக்கு போகிறார்கள். பெண்கள் மாலையைப் போட்டுக் கொண்டு சுற்றி வந்தால் கல்யாணம் ஆகுமாம். 

அடுத்த தரிசனம்  ஆண்டாள் ஸ்வாமிக்கு பெரியாழ்வார் தொடுத்த மாலையை தன் கழுத்தில் போட்டு அழகு பார்த்த கண்ணாடிக் கிணறு. இப்போது கண்ணாடிமூடியால் மூடி ஒரு உண்டியல் பெட்டியாக மாறி விட்டது . நான்கு பக்கம் வாசல் வைத்து அதன் வழியாகப் பணம் போடப்படுகிறது , டாலர் எல்லாம் அதில் இருந்தது. (பணம் தண்ணீரில் விழாது.  அது போன்று அமைத்து இருக்கிறார்கள்). கிணற்றைப் பார்க்க முடியவில்லை. சின்ன சதுரமாய்த் தெரிகிறது கிணறு  மிக கவனமாய்ப் பார்த்தாலும் தண்ணீர் தெரியவில்லை. அடுத்து கண்ணாடி அறை நடுவில்  ஆண்டாள் படம்  வைத்து இருந்தார்கள்.சுற்றி வர கண்ணாடி  வைத்து இருந்தார்கள். கண்ணாடி வழியாக பார்த்துக் கொண்டு சுற்றி வந்து வணங்கி வெளியில் வந்தோம். இங்கும் கட்டணம் உண்டு.

பின் ஆண்டாள் சன்னதி சுற்றி வரும் போது உள்ளே உள்ள உற்சவர்கள் போலவே சுவற்றில் திருவுருவங்கள் இருக்கிறது- ஆண்டாள், ரங்கமன்னார், கருடாழ்வார். அதன் பக்கத்தில் உள்ள வயதான பட்டர் நமக்குக் கதை சொல்கிறார்,  கோதை பிறந்த கதை, விஷ்ணு சித்தர் கருடாழ்வாராக அவதாரம் எடுத்தகதை , மற்ற கோவில்களில் எதிரில் இருக்கும் கருடன்  இங்குமட்டும் தான் உடன் இருக்கிறார்.  அதற்குக் காரணம் ரங்கமன்னாருக்கு அவர் மாமனார் என்பதாலாம்.  மூவரும் பிரணவ மந்திரத்தின் உட்பொருளாம். ஆண்டாள் சன்னதி பிரணவ மந்திர  அமைப்பில் கட்டப்பட்டு இருக்கிறதாம். ஆண்டாள் சன்னதியில் 108 திவ்ய தேசங்களின் படம் வரையப் பட்டு இருக்கிறது -அழகாய். இருக்கிறது.
                     
                                         ஆண்டாள் அவதரித்த துளசி வனம்.

அடுத்து ஆண்டாள் பிறந்த துளசிவனம். பெரியாழ்வாரின் துளசி தோட்டத்தில்  செவ்வாய்க்கிழமை திருவாடிப்பூரத்தில்  பூமி தேவியின் அவதாரமாக கோதை அவதரித்தாள். கோதை தோன்றிய இடம் அழகாய் இருக்கிறது. ஒரு தொட்டியில் துளசிச்செடி முன்புறம்  வைத்து இருந்தார்கள். பின் புறம் ஆண்டாள் அழகாய் அலங்காரம் செய்து இருந்தார்கள்,  பட்டர் ஆரத்தி காட்டினார்.

 சன்னதியைச் சுற்றி அழகிய துளசிச் செடிகளும் மரங்களுமாகிய அழகிய தோட்டம்.


                                           
அழகிய துளசி வனம்

ஆண்டாள் கோவில் யானை -பெயர் தெரியவில்லை

 வடபத்திரசாயி ரங்கமன்னாருக்குத் தான் கோபுரம் பெரிதாக இருக்கிறது.   மூலவரைப் பார்க்கப் போக ஒரு பத்துபடி ஏறிப்போக வேண்டும்., பிடித்துக் கொண்டு ஏற  வசதியாக  கைப்பிடி இருக்கிறது.  பெருமாள் சயனகோலத்தில்  ஸ்ரீதேவி, பூதேவியுடன் அழகாய்க்  காட்சி அளிக்கிறார்.  பின்புறம் உள்ளே இருக்கும் மற்ற தெய்வங்கள் அழகிய வர்ணத்தில் இருக்கிறார்கள்.  பட்டர் பெரிய மூங்கில் தட்டில் துளசியை வைத்துக் கொண்டு வரும் பக்தர்களுக்கு  கொடுத்தார்.  ஆரத்தி காட்டவில்லை.

பெருமாள் சன்னதி எதிரில்  உள்ள (கோபாலவிலாசம்)  மண்டபத்தில் அழகிய மரவேலைப்பாட்டுக் கூரை,  
வடபத்திரசாயி சன்னதி செல்லும் வழி
உடமைகளைப் பாதுகாத்துக் கொள்ளும் வசதிக்காக புதிய இடம் கட்டி வருகிறார்கள் 
வாசல் முகப்பு
உள் பிரகாரம், நல்ல வெளிச்சம் வருவது போல் கட்டிட அமைப்பு
ஆண்டாளின்  வரலாறு சித்தரிக்கப்பட்டு உள்ளது விமானத்தில்

பெருமாள் சன்னதியிலிருந்து கோபுர தரிசனம்.
மரவேலைப்பாடு போல் கல்லில் அழகாய்ச் செய்த வேலைப்பாடு.   இருபுறமும் கடைகள் உள்ளன.


 வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
                                                         ----------------------------------------

வியாழன், 4 நவம்பர், 2021

தீபாவளி நினைவுகள்!

 தீபாவளி என்றாலே மகிழ்ச்சி, ஆனந்தம் !   பொதுவாக, சிறுவயதில் தான் நிறைய தீபாவளி எதிர்பார்ப்புகள்   இருக்கும்.  அந்தக் கால நினைவுகளில் கொஞ்சம்  பார்ப்போம்.

எங்கள் ப்ளாகில் இன்று தீபாவளி நினைவுகளை பகிர்ந்து



கொண்டார்கள்.அதை படித்தவுடன்  என் தீபாவளி நினைவுகளை பகிர்ந்து கொண்டேன்.

எல்லோரும் தீபாவளி பண்டிகை விழாவை மகிழ்வாய் கொண்டாடி விட்டு ஓய்வு எடுத்துக் கொண்டு இருப்பீர்கள். மெதுவாக படிக்கலாம் என் பதிவை.

வெள்ளி, 4 நவம்பர், 2016

கதிர்காமக் கந்தன் கோயில்


                                                     கதிர்காம  முகப்பு வாசல்.

நாங்கள் போகும் போது இருட்ட ஆரம்பித்து விட்டது.



வள்ளி தெய்வானையோடு  மயில் மீது உள்ள கந்தன் படம் உள்ள  திரைக்கு பின்னால் தான்  கந்தன் இருக்கிறார்.

                             நிறைய பழங்கள் உள்ள அர்ச்சனை தட்டு

                                    மதிலில் யானை அணி வகுப்பு
                                                 கந்தனை சுற்றி வரும் வாசல்.


நாங்கள் 09.03 2011 முதல் 15.03.2011 வரை கயிலை புகழ் ’மனோகர் டிராவல்ஸ்’ மூலம் இலங்கைக்கு ஆன்மிகப்பயணம் மேற்கொண்டோம். பாடல் பெற்ற ஸ்தலங்களாகிய திருக்கேதீச்சுரம், திருகோணமலை ஆகிய கோயில்களுக்கும், அருணகிரிநாதரால் பாடப்பட்ட கதிர்காமத்திற்கும் சென்று வந்தோம்.

முருக பக்தர்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது கதிர்காமம் சென்றுவர விரும்புவார்கள். சிறு வயதில் முருகன் பக்திப் பாடல்களில்

’ கதிர்காம வேலவனே, வேலையா!,
கதிர்காம வேலவனே, கந்தையா!
வேலனுக்கு அரோகரா!
கந்தனுக்கு அரோகரா! ’

என்று பாடுவதுண்டு. அப்படிப் புகழ்பெற்ற கதிர்காமத்தை என் கணவரும் நானும் தரிசித்து வந்தோம். மட்டில்லாத மகிழ்ச்சி அடைந்தோம். அங்கு திரையைத்தான் தரிசிக்கமுடியும் என்பதை அனைவரும் அறிந்திருப்பார்கள். நம் மனதில் வீற்றிருக்கும் இறைவன் பிறர் கண்ணுக்கு எப்படி தெரியவில்லையோ அது போல் திரை என்பது மறைத்திருந்தாலும் நம் அகக் கண்ணால் முருகனை அங்குக் காணலாம். அந்தத்திரையில் முருகன் வள்ளி தெய்வானையுடன் மயிலில் அமர்ந்திருக்கும் கோலத்தைக் காணலாம்.

//செந்தில் கடல் அலை  ஓசை கேட்கும்  கதிர்காமத்தில்
கதிர்காம மணியோசை  கேட்கும்  செந்தூரில்
திரைமறைவில் இருந்தாலும், திருச்செந்தூரில் இருந்தாலும்
கதிர்வேலன், வடிவேலன்
செந்தூரில்  தென்றல் அடித்தால், கதிர்காமத்தில் கொடிஅசையும்//

சூலமங்கலம் சகோதரிகள்  பாடும் பாடல் வானொலியில் அடிக்கடி வைப்பார்கள்.

இலங்கைத் தீவின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது கதிர்காமம். கொழும்புவிலிருந்து 284 கி.மீ தூரத்தில் இவ்வூர்
இருக்கிறது. ஹம்பந்தோட்டா,பதுளை ஆகிய ஊர்களில் இருந்து இவ்வூருக்குச் செல்லலாம். இத்தலத்தைச் சிங்களத்தில் ’கதரகம’ என்று கூறுகிறார்கள். இது மாணிக்கக் கங்கை என்னும் ஆற்றின் கரையில் அமைந்திருக்கிறது. அங்கு வரும் பக்தர்கள் ஆற்றில் நீராடிப் பின் கோயிலுக்கு வருகிறார்கள்.

இக்கோயில் கால் ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளதாம். சுமார் 500 ஆண்டுகளுக்கு முன் ஓர் அரசனால் இது கட்டப்பட்டதாம்.. பூசை, பாதுகாப்பு ஆகியவற்றை முன்னிட்டு இக்கோயிலுக்கென 550 பணியாளர்களை நியமித்தாராம். ஆரத்திமாதர்கள் 18 பேரும்
இத்னுள் அடங்குவர். சனிக்கிழமைகளில் ஆரத்தி மாதர்கள் போதிமரத்துக்கு வாச நன்னீரைக் கொண்டுவருவார்களாம்.

பத்து அடி உயரமான மதில்களில் யானைகள், மயில்கள் ஆகியவற்றின் உருவங்கள் வரிசையாக இருக்கின்றன. கோயிலைச் சுற்றி வர ’வட்டாரம்’ எனப்படும் சிறு பிரகாரம் உள்ளது. பக்தர்கள் இதனுள் செல்ல அனுமதிக்கப் படுவது இல்லை. ஆரத்திமாதர் மட்டுமே செல்லலாம்.

                                   காய்ந்த இலைப் பந்தல் தெரிகிறதா?

 இக்கோயிலின் வாசலில் பரண் போல் ஒரு பந்தல் உள்ளது. அதன்மேல் காய்ந்த இலைகள் இருந்தன. ஆண்டுக்கொரு தடவை யானை பசுமையான இலை, கொம்புகளைக் கொடுக்க ,அதனை வாங்கிப் பந்தல் போடுவார்களாம். இதற்குப் ’பசுமைப்பந்தல்’ என்று பெயராம்.

கோயிலின் மேற்கூரை செப்புத்தகடுகளால் ஆனது. வாயிற்கதவுகள் பித்தளையால் செய்யப்பட்டு வேலைப்பாடுகளுடன் அரண்மனைக் கதவு போல் உள்ளன. அதனுள் நுழைய சந்திரவட்டக்கற்களால் ஆகிய இரண்டு படிகள் உள்ளன. உள்ளே மரவேலைப்பாடு கொண்ட அழகிய தூண்கள் உள்ளன. வெண்கல மணிகள் பல இரண்டு பக்கமும் உள்ளன. மேற்பகுதிகளில் திரைகள் உள்ளன. தாமரைப்பூவேலைப்பாட்டோடு அவை காணப்படுகின்றன. வெண்கலத்தால் ஆன பெரிய சேவல் விளக்குகள் இரண்டு புறமும் நிற்கின்றன. முருகனைப் பற்றிய புராணக் காட்சிகள் படங்களாகச் சுற்றிலும் காணப்படுகின்றன. ஒரு மேடையின் மீது சந்நிதியுள்ளது. பூசைசெய்யும் குருமார்கள் ஏறுவதற்குச் சில படிகள் உள்ளன. மேலே உள்ளது லதாமண்டபம் எனப்படும். .ஊர்வலத்தின் போது பயன்படுத்தப்படும் யானைத் தந்தங்கள் அங்குள்ளன .மேடையில் ஒரு பள்ளம் உள்ளது. அதில் பாதம் நனைத்த பின்னர் அவர்கள் பூசை செய்யத் திரைக்குள் போகிறார்கள். திரைக்குள் என்ன இருக்கிறது என்பது ரகசியமாகவே உள்ளது. விழாக்காலங்களில் யானைமீது முருகன்உலாவரும் போது கூட அலங்கரிக்கப்பட்டு, துணியால் மூடப்பட்டே இருப்பதால் முருகனின் உருவத்தை யாராலும் பார்க்க முடியாதாம். முருகனுக்கு நைவேத்தியம் துணியால் மூடப்பட்டுக் காவடிபோல் குருமார்களால் தோளில் கொண்டுவரப்படுகிறது. பக்தர்கள் இறைவனுக்குப் பலவிதமான பழங்கள், சிவப்பு செயற்கை மாலை, சிவப்புத்துணி இவற்றைத் தட்டில் வைத்துப் பட்டுத்துணியால் மூடிப் பயபக்தியுடன் கொண்டு வந்து இறைவனுக்குச் சமர்ப்பித்து மீண்டும் அதனைப் பெற்றுச் செல்கிறார்கள். மூடிய திரைக்குள் பூசை நடைபெறுகிறது. அந்த நேரத்தில் மணிகள் ஒலிக்கப்படுகின்றன.

பூசை முடிந்ததும் சர்க்கரைப் பொங்கல் பிரசாதமாக
வழங்கப்பட்டது. விபூதி, தீர்த்தம் வழங்கப்பட்டன. தேங்காயில் சூடம்  ஏற்றி அவருக்குக் காட்டிவிட்டு தங்கள் தலையையும் சுற்றித் தேங்காயை உடைக்கிறார்கள். அங்கிருக்கும் ஒரு பெரிய அரச்மரம், ஒரு சிறிய அரச மரம் (போதி மரங்கள்) ஆகியவற்றையும் வணங்குகிறார்கள். இங்குள்ள போதிமரம் சங்கமித்திரை கொண்டுவந்த கிளையிலிருந்து உருவானதாகக் கருதப்படுகிறது. புத்தர் கோயிலும் அங்கு உள்ளது. பெளத்தர்களுக்குரிய 16 முக்கிய இடங்களில் இதுவும் ஒன்றாம்.
                                                           தெய்வானை  சந்நிதி

கோயிலுக்கு அருகில் பைரவர் சந்நிதி, தேவானை சந்நிதி, ஆகியவை திரைகளுடன் உள்ளன. பைரவர் சந்நிதிக்கு எதிரில் சிறிய விஷ்ணு உருவம் உள்ள சந்நிதி உள்ளது. அது திறந்து உள்ளது. திரை இல்லை.

தண்டபாணிக்குச் சந்நிதி உள்ளது. இத்னைப் பழனிக்கோயில் என்கின்றனர். இங்கு திரைக்கு முதலில் பூசை நடை பெறுகிறது. திரையில் தண்டபாணிக் கடவுளின் ஓவியம் உள்ளது. பின்னர் திரையைத் திறந்த பின்னர் உள்ளே உள்ள பிள்ளையார்க்குரிய கற்சிலையும், முருகனுக்கு பஞ்சலோகத்தில் ஆன சிலையும் உள்ளன. அங்கு தண்டபாணிக்கு எதிரில் வேல் பீடம் உள்ளது. 1936-ல் மலையாள, தமிழ் மக்களால் கார்த்திகை தீபத்திற்கென திருவிளக்கு ஒன்று செய்து வைக்கப்பட்டுள்ளது.

குருக்கள் தன் வாயைத் துணியால் கட்டிக்கொண்டு முதுகில் ஒரு பட்டுத் துண்டைத் தொங்க விட்டுக்கொண்டு பூசை செய்கிறார். தூப தீபங்கள் காட்டுகிறார். பூசை நேரத்தில் சந்நிதியின் இரண்டு புறமும் இருக்கும் மணிவரிசைகளைப் பக்தர்கள் ஒலிக்கச் செய்கிறார்கள். வலது பக்கத்தில் ஒரு சிறிய சிவலிங்கமுள்ள சந்நிதி உள்ளது. அதற்கும் பூசை நடைபெறுகிறது. பூசை முடிந்ததும் சுண்டல் பிரசாதமாக வழ்ங்கப்பட்டது.


கதிர்காம முருகப்பெருமானுக்கு நேர் எதிரில் வள்ளி திருக்கோயில் அமைந்துள்ளது. அங்கு திரையில் தாமரைப்பூவைக் கையில் ஏந்தி ஒயிலான தோற்றத்தில் இருக்கிறாள் வள்ளி. அருகில் ஒரு அம்மன்கோயிலும் ஒரு மசூதியும் உள்ளன.

ஏப்ரல் மாதத்தில் புத்தரிசிப் பொங்கல் நிகழ்வு நடைபெறுமாம். மாணிக்கக் கங்கையிலிருந்து நீரைக் கொண்டு வந்து அடுப்புகளைக் கட்டிப் புதுப்பானைகளில் பொங்கலிடுவார்களாம். வள்ளியம்மை தேவாலயத்திலும் இது நடைபெறுமாம். ஆண்கள் தான் பொங்கலை இடுவார்களாம்.

விழாக்காலங்களில் பக்தர்கள் பாதயாத்திரையாக வருவார்களாம். கரகாட்டம், மயிலாட்டம், தீப்பந்த ஆட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், கோலாட்டம், தீமிதி, தீச்சட்டி ஏந்தல், உருள்வலம் ஆகியனவும் நடைபெறுமாம்.

கதிர்காமத்திற்குச் சற்று வடக்கில் செல்லக்கதிர்காமம் என்னும் ஊர் உள்ளது. இதனை முன்னர் ’வள்ளித்தீவு ’என்று அழைத்தார்களாம். இந்த இடத்தில் தான் முற்காலத்தில் வள்ளி பிறந்து வளர்ந்தாள் என்று கூறுகின்றனர்.


 இங்கு மாணிக்கக் கங்கையாற்றின் கரையில் மாணிக்கவிநாயகர் திருக்கோயில் உள்ளது. இங்குள்ள காட்டில்தான் முருகனுக்கு உதவியாக விநாயகர் யானைவடிவில் வந்து வள்ளியைத் துரத்தியதாகவும் பின்னர் இங்கு தான் வள்ளி திருமணம் நடந்ததாகவும்  கூறுகிறார்கள்.

                                                                                                                                                                   இந்த காட்சிகள் எல்லாம் மனத்திரையில் விரிகிறது. இயற்கை அள்ளி தந்த வளங்கள் எல்லாம் நிறைந்த இடம். //குறிஞ்சியிலே பூமலர்ந்து குலுங்குதடி-தேன் இருக்குது தினை இருக்குது ,// என்ற பாடல் நினைவுக்கு வரும். வள்ளி பரண்மேலிருந்து ஆலோலம் பாடி கிளிகளை ஓட்டிய காட்சி கண்ணில் நிறைகிறது.



நீர் வளம் நிலவளம் எல்லாம் நிறைந்த இடம். அன்று மழை பெய்து சிவப்பு கலராய் வெள்ள பெருக்காய் தண்ணீர் ஓடி வந்துகொண்டு இருந்தது. திருக் கோயிலில் பஞ்சமுக விநாயகர் உற்சவர் சிலையும் உள்ளது. ஐந்து தலை நாக உருவம் சிமெண்டினால் செய்யப்பட்டுள்ளது.


 கார் வாங்க வேண்டிக்கொண்டு வேண்டுதல் நிறைவேறிய பின் காரின் நம்பர் பிளேட் ஒன்றை இங்குள்ள ஒரு மரத்தின் மீது அடித்து வைக்கின்றனர். இப்படி அடிக்கப்பட்டுள்ள பல நம்பர் பிளேட்டுக்களை அங்கு காணலாம். அருகில் ஒரு புத்தர் கோயிலும் உள்ளது.



இக்கோயிலுக்கருகில் வள்ளி விளையாடிய குகை ஒன்று உள்ளது. வள்ளியின் சிலை ஒன்று இதனுள் உள்ளது. ஒரு துவாரத்தின் வாயிலாக இதனைப் பார்க்கலாம். வள்ளி இங்கு தயிர் கடைந்ததாகக் கூறுகிறார்கள். ஒரு பாறையின் மீது வள்ளியின் பாதச்சுவடுகள் காணப்படுகின்றன.



கதிர்காமத்திற்கு அருகில் 4 கி.மீ தூரத்தில் கதிரைமலை உள்ளது.படிகள் மேலேறிச் சென்றால் முருகனுக்கு சந்நிதி உள்ளதாம்.அங்கு வேலாயுதம் இருக்கிறதாம்.முருகனால் ஸ்தாபிக்கப்பட்டதாம்.இந்த இடத்திற்கு எங்களை அவர்கள் அழைத்துச்செல்லவில்லை இரவு நேரம் ஆனதால் அழைத்து
செல்லவில்லையோ என்னவோ தெரியவில்லை.

நவாலியூர் சோமசுந்தரப்புலவர்
//கதிரை மலைகாணாத கண் என்ன கண்ணே
கற்பூர ஒளி காணாக் கண் என்ன கண்ணே//
என்று பாடியுள்ளார்

அருணகிரிநாதர் கதிர்காம முருகனைத் தம் திருப்புகழில் 13 பாடல்களில் பாடியுள்ளார்.அவற்றுள் ஒன்று:

திருமக ளுலாவு மிருபுய முராரி
திருமருக நாமப் பெருமாள்காண்
ஜெகதலமும் வானு மிகுதிபெறு பாடல்
தெரிதரு குமாரப் பெருமாள்காண்
மருவுமடி யார்கள் மனதில்விளை யாடு
மரகதம யூரப் பெருமாள்காண்
மணிதரளம் வீசி யணியருவி சூழ
மருவுகதிர் காமப் பெருமாள்காண்
அருவரைகள் நீறு படஅசுரர் மாள
அமர்பொருத வீரப் பெருமாள்காண்
அரவுபிறைவாரி விரவுசடை வேணி
அமலர்குரு நாதப் பெருமாள்காண்
இருவினையிலாத தருவினைவி டாத
இமையவர்கு லேசப் பெருமாள்காண்
இலகுசிலை வேடர் கொடியினதி பார
இருதனவி னோதப் பெருமாளே.

திருக்கோணமாமலை வைத்தியர் திரு.சி.ஆறுமுகம் பிள்ளைஅவர்கள் கதிர்காம முருகன் மீது,கதிரைமலைப் பதிகம்,கதிர்காமமாலை ஆகியநூலகளை இயற்றியுள்ளார்கள்.1904ல் இவை வெளிவந்துள்ளன.

கதிரைமலைப்பதிகத்தில் ஒரு பாடல்:

அற்புதஞ் செய்கின்ற ஆறுமுகவேலவனே யடியனேன்
மீதிலன்பாய் அமரர் தன் இடர்தனை யகற்றியது
போலவே யைய வென்னிடர்களெல்லாம்
பொற்புடன் கரிமீது வந்தே தொலைத்து நற்
புனிதனாக்கிட வேண்டியே போற்றினேன்
பாதமலர் புண்ணியாசமயம் புறங்காட்டி யகலாமலே
சிற்சபையில் மாதர்கள் சிறந்த வாலாத்திகள்
சீராயெடுத்து நிற்கச் சிறியனேன் தீவினைகள்
சீக்கிர மகற்றிடச் சித்ர வடிவேலேந்தியே
கற்பகன் பூசைகள் கருத்தாய் நடத்திடக்
கதிரமலைதன்னில் வாழுங் கந்தனே வந்திதோ
காட்சியது தந்தெனைக் கடைத்தேற்றியருள் புரிவையே

கதிர்காமம் சென்று வந்தது எங்களுக்கு மிகுந்த மனமகிழ்வைத்
தந்தது.  கதிர்காம கந்தன் அனைவருக்கும் அருள்  வழங்கட்டும்.

                                                                  -------------------
                                                               வாழ்க வளமுடன்.