அட்லாண்டாவில் உள்ள "இந்து கோயில்"என்று அழைக்கப்படும் கோயில்.முகப்பு வாயில், படிகளில் ஏறி போனால் முதலில் பெருமாள் கோயில் வரும்.
ஜார்ஜியா மாகாணத்தில் அட்லாண்டா அருகில் உள்ள "ரிவர்டேல்" எனும் நகரத்தில் உள்ளது இந்த கோயில்.
இந்த இடத்தில் ஸ்ரீ வேங்கடேஸ்வர் ,திருக்கோயிலும், அருள்மிகு ராமலிங்கேஸ்வரர் திருக்கோயிலும் ஒரே வளாகத்தில் அமைந்து இருக்கிறது.
ஸ்ரீ வேங்கடேஸ்வர் ,திருக்கோயிலும், அருள்மிகு ராமலிங்கேஸ்வரர் திருக்கோயிலும்
இந்த கோயிலுக்கு போன வாரம் ஞாயிற்றுக்கிழமை அழைத்து போனாள் மகள். புரட்டாசி மாதம் சனிக்கிழமை கூட்டம் இருக்கும் என்பதால் ஞாயிறு காலை போனோம். மகள் இருக்கும் இடத்திலிருந்து 50 நிமிட பயணம் செய்து போனால் இந்த ஆலயத்தை தரிசிக்கலாம்.
இரவு வண்ண விளக்கில் ஜொலிக்கும் . சங்கு, சக்கரம் , நாமம். மூன்றும் வட்டத்தில் இருக்கிறது, வட்டத்தைச் சுற்றி விளக்குகள் இருக்கிறது.
கொடி மரம் தரிசனம்
கொடிமரம், விளக்கு கம்பம் கோபுர தரிசனம்
கருடாழ்வார் தரிசனம்
தேர் போன்ற அமைப்பு கருடன் சன்னதி
பெருமாள் சன்னதி கலசம் (காமிராவில் எடுத்த படம்)
கோபுரத்தின் மேலே இரண்டு கழுகுகள்(காமிராவில் எடுத்த படம்)
உள்ளே போனதும் முதலில் அனுமன் சன்னதி. அனுமனை அவ்வளவு அழகாய் அலங்காரம் செய்து இருந்தார்கள். அவரை தரிசனம் செய்து கொண்டு இருக்கும் போது ஒரு பெண் வடை பிரசாதம் தந்தார். ஒவ்வொருவருக்கும் மூன்று மூன்று வடை கொடுத்தார். அவருக்கு நன்றி சொல்லி வாழ்த்தி பெற்று கொண்டேன். பிரசாதம் கிடைத்தது மகிழ்ச்சியாக இருந்தது. அடுத்து இன்னொரு அன்பர் "அனுமன் பிரசாதம் கிடைத்ததா?" என்று கேட்டார் கிடைத்தது என்றோம்., அவர் திராட்சை பழம் கொடுத்தார்.
மிளகு வடை
பெருமாள் கோயிலை சிவன் கோயில் வாசலிருந்து எடுத்த படம்.
அனுமனை தரிசனம் செய்து உள்ளே போனால் இடது பக்கத்தில் சிறிய மண்டபத்தில் விநாயகர் இருந்தார், தும்பிக்கை ஆழவார் என்று பெயர் இல்லை. மகாகணபதி என்று பேர் இருந்தது. அடுத்து துர்கை என்று பேர் போட்டு இருக்கிறது, ஆனால் வெள்ளை நிறத்தில் சந்தோஷி மாதா போல் இருக்கிறார். வட மாநிலத்தில் துர்கை இப்படித்தான் இருப்பார்.
நன்றி- கூகுள்
நன்றி- கூகுள்
வலது பக்கத்தில் நவகிரகங்கள் உள்ளது. அனைவரும் மஞ்சள் உடைதரித்துக் கொண்டு இருந்தார்கள்.
நடுவில் வேங்கடேஸ்வர் அவரின் வலபக்கம் பத்மாவதி தாயார் அழகான அலங்காரம்
பாலாஜியின் இடபக்கம் ஆண்டாள் ( உருவம் கீழேயும் தெரிகிறது.)
உற்சவர் முன்பு, ஒரு கணவன், மனைவி, குழந்தை மூவரும் அமர்ந்து இருந்தார்கள். ஏதோ சங்கல்பம் தெலுங்கில் செய்து கொண்டு இருந்தார் பட்டர். அவர்களை ஒருவர் கைபேசியில் வீடியோ எடுத்து கொண்டு இருந்தார் , அதனால் படம் எடுக்கலாம் என்று நினைத்து அம்மன் இருவரையும் எடுத்தேன்.
படம் எடுக்க கூடாது என்று போடவில்லை என்று எடுத்தேன் அம்மன் இருவரையும். பாலாஜியை எடுக்க நினைத்த போதுதான் அறிவிப்பைப்பார்த்தேன் போட்டோ வீடியோ எடுக்க கூடாது என்பதை. உற்சவரை முன்புறம் வைத்து இருந்தார்கள் அவருக்கு பின்புறம் அறிவுப்பு இருந்தது, அதனால் எனக்கு தெரியவில்லை.
குழந்தை மனதை கவர்ந்தாள்(அழகான ஆரஞ்சு வர்ண பட்டு பாவாடை, பச்சை வண்ண சட்டை சரிகையால் பின்னல் வேலைபாடுகள் செய்த சட்டை அணிந்து இருந்தாள், அம்மா, அப்பா மகள் மூவரும் ஒரே நிறத்தில் உடை) நல்ல சுறு சுறுப்பாய், அங்கும் இங்கும் ஓடி கொண்டு இருந்தாள் . அவர்களை மனதில் வாழ்த்தினேன் வாழ்க வளமுடன் என்று.
பெருமாளுக்கு பட்டர் தீபாராதனை செய்தார், பிரசாதமாக அனைவருக்கும் பாதாம் பருப்பு கொடுத்தார்.
பாலாஜியை தரிசனம் செய்து விட்டு வெளியே வரும் வழியில் ஒரு தொட்டியில் அரசமரமும், இன்னொரு தொட்டியில் எருக்கம் செடியும் இருந்தது. அரச மரத்தை நல்ல இடம் பார்த்து கீழே நடுவார்கள் என்று நினைக்கிறேன். இந்த வாசலின் எதிர்புர வாசல் வழியாக சிவன் கோயில் செல்கிறார்கள்.
சிவன் கோயில் செல்லும் வழியில் நிறைய மலர் செடிகள் இருந்தன, அதில் வித்தியாசமாக மஞ்சள் செடியின் இலை போல் இருந்த செடியில் உள்ள பூ வண்ணத்துப்பூச்சி போல் இருந்தது.
நவராத்திரி நடக்க போவதால் சிவன் கோயிலில் ஸ்ரீ பர்வதவர்த்தினி அம்மனுக்கு "ஸ்ரீ லலிதாஸஹஸ்ர நாமாவளி" சொல்லி சொர்ணபுஷ்பம் அர்ச்சனை செய்து கொண்டு இருந்தார்கள்.நிறைய பெண்கள் அமர்ந்து பாடி கொண்டு இருந்தார்கள். இங்கும் தெலுங்கு பேசும் குருக்கள்தான்.
பாலாஜி கோயில்
சிவன் ஆலயத்து கோபுரத்தின் மேல் நிறைய புறாக்கள் அமர்ந்து இருக்கிறது
வண்டிக்கு பின்புறம் தெரியும் வாசல் வழியாக சிவனை தரிசிக்க சென்றோம்
வண்டியில் பிரதோஷம் அன்று சுவாமி கோயிலை வலம் வருவார் போலும்
நந்திக்கு நேர் வாசல் அடைத்து இருக்கிறது அது வெளியே வரும் போது திறந்து கொண்டு வரும் வாசலாக இருக்கிறது.
ஸ்ரீ ராமலிங்கேஸ்வரருக்கு அபிஷேகம் முடிந்து அலங்காரம் நடந்து கொண்டு இருந்தது, திரை விலகவில்லை. அர்ச்சனைக்கு திரையை விலக்கிய போது தரிசனம் செய்தோம். சிவனை அழகாய் அலங்காரம் செய்து இருந்தார்கள். திரையை விலக்கியவுடன் மின்சார விளக்கை அணைத்து விட்டு ஒரு தீபாராதனை காட்டினார் குருக்கள், அப்புறம் விளக்கை போட்டார் ஜெகஜோதியாக மின்னினார் ராமலிங்கேஸ்வரர். காத்து இருந்தற்கு அருமையான தரிசனம் .
பூஜை முடிந்த பின் பிரசாதம் உண்டு. நாங்கள் பூஜைக்கு இருக்கவில்லை.
சிவன் சன்னதிக்கு வலபக்கம் ஸ்ரீ கணேசர், இடபக்கம் வள்ளி, தெய்வானையோடு முருகன் இருந்தார். மற்றும்
ஸ்ரீ ஜனன சரஸ்வதி , ஸ்ரீ கன்யாபரமேஸ்வரி, ஸ்ரீ காலபைரவர் இருந்தார்கள். எல்லோருக்கும் மிக அழகாய் அலங்காரம் செய்து இருந்தார்கள்.
சிவனின் 108 தாண்டவங்களை கற்சிற்பங்களாக வடித்து மிக அழகாய் கோவிலுக்குள்ளே வைத்து இருந்தார்கள். ஒவ்வொன்றுக்கும் கீழ் என்ன தாண்டவம் என்று பெயர் கொடுத்து இருந்தார்கள்.
பெருமாள் கோயில் வழியாக சிவன் சன்னதிக்கு வந்து விட்டதால் நந்தி தரிசனம் பின்னால் செய்தோம்.
நந்தி சிற்பம் வெகு அழகான வேலைப்பாடு
ஸ்ரீ நாகேந்திரா கோபுர வாசல் பக்கம் இருந்தார்
வாழை மரம்
இரு கோயில் நடுவிலும் அழகான வாழை மரம் . அழகான பச்சைபுல்விஜயதசமி நடக்கும் விவரம்
நவராத்திரி விழாவிற்கு ஏற்பாடு ஆகி கொண்டு இருக்கிறது.
கலையரங்கம் அழகாய் இருக்கிறது
நவராத்திரி விழாவிற்கு ஏற்பாடு ஆகி கொண்டு இருக்கிறது.
பொம்மைகள் அடுக்க கொலுப்படி தயார் ஆகிறது.
விழாக்கள் சிறப்பாக செய்ய வசதியான இடம்
கோயிலை சுற்றி அழகிய நந்தவனம் அதில் மான்கள் சிலை, அமர்ந்து செல்ல மர ஆசனங்கள்.
கோயிலுக்கு உள்ளே வரும் வாசல் எதிரே தேவாலயம் இருக்கிறது.
கார் நிறுத்த வசதியான இடம் கோயில் வளாகத்தில் பெரிதாக இருக்கிறது.
ஒவ்வொரு சனிக்கிழமையும், ஞாயிற்றுக்கிழமையும் பிரசாதங்கள் கிடைக்குமாம், அங்கே வாங்கலாம் என்பது பிறகு தெரிந்தது. கொரோனா காலத்தில் விற்பனை இல்லை போலும் . இப்போது மீண்டும் பிரசாத ஸ்டால் திறக்கப்பட்டு உள்ளது. சமூக இடைவெளி விட்டு முககவசம் அணிந்து வர வேண்டும் என்று கோயில் நிர்வாகம் கேட்டுக் கொள்கிறது.
குருக்கள், பட்டர்கள், மற்றும் கோயில் ஊழியர்கள் அனைவரும் தடுப்பு ஊசி போட்டுக் கொண்டு பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்றும் கோயில் வளாகத்தில் நடைபயிற்சி செய்ய அனுமதி உண்டு என்றும் சொல்கிறார்கள்
கோயில் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்து இருக்குமாம்.
மகன் நியூஜெரிசியில் இருக்கும் போது "ப்ரிட்ஜ்வாட்டர்" என்ற இடத்தில் இதே போன்று வெள்ளை நிறத்தில் பாலாஜி கோயில் அழைத்து போனான். அங்கு ஒரே கோயிலுக்குள் ஹரியும், சிவனும் இருப்பார்கள், இங்கு ஒரே வளாகத்தில் தனி தனியாக கோவிலில் இருக்கிறார்கள்.
புரட்டாசி மாதம் பெருமாள் தரிசனம் செய்ததை பதிவாக்கி விட்டேன், புரட்டாசி சனிக்கிழமைக்காக. அதனால் "டோம்ப்ஸ்டோன்" தொடர் பதிவு அடுத்த பதிவில் வரும்.
பி.கு - மூன்று படங்கள் மட்டும் காமிரா, மற்ற படங்கள் எல்லாம் அலைபேசியில் எடுத்த படங்கள். மழை மேகம் இருந்தது அதனால் வெளிச்சம் குறைவு.
கோயில் தரிசனம் முடித்து வீடு வரும் வரை மழை கொட்டி தீர்த்து விட்டது. ஒரு வாரமாக மழை விடாது பெய்து கொண்டு இருக்கிறது.
வாழ்க வையகம் ! வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன் !
--------------------------------------------------------------------------------------------------
அயல் நாட்டுக் கோவில்களில் ஒரு அந்நியம் தெரிகிறதோ! கோபுரத்தின் நிறம் வெண்மையாக இருப்பதே வித்தியாசமாக இருக்கிறது! வெளிநாடுகளில் இருக்கும் கோவில்களை பற்றிச் சொல்பவர்கள் பெரும்பாலும் பெருமாள் கோவில் பற்றிச் சொல்லியே கேள்விப்பட்டிருக்கிறேன். முதல் முறையாக சிவன் கோவில் பற்றி படிக்கிறேன். அங்கெல்லாம் கிடையாது என்று சொல்லவில்லை. நான் படிப்பது முதல் முறை! படங்கள் யாவும் அழகு, துல்லியம். கோவில் வளாகமும் சுத்தமாக பராமரிக்கப்படுவது தெரிகிறது. அங்கெல்லாம் யானை வைத்துக் கொள்ள அனுமதி இருக்காது இல்லையா?!! படம் எடுக்கக் கோடானது என்கிற அறிவிப்பைப் பார்க்காமல் படம் எடுத்தீர்கள். பட்டர் ஒன்றும் ஆட்சேபிக்கவில்லையா?!
பதிலளிநீக்குவணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
நீக்கு//அயல் நாட்டுக் கோவில்களில் ஒரு அந்நியம் தெரிகிறதோ! கோபுரத்தின் நிறம் வெண்மையாக இருப்பதே வித்தியாசமாக இருக்கிறது! //
கீழ் திருப்பதியில் கோவிந்த ராஜபெருமாள் கோயில் வெண்மையாக பார்த்த நினைவு இருக்கிறது .நியூஜெரிசியில் பார்த்தா பாலாஜி கோயிலும் வெண்மைதான்.
நான் அரிசோனாவில் பார்த்த ஒரு கோயிலை முன்பு போட்டு இருந்தேன் அதிலும், சிவனும், பெருமாளும் உண்டு அவர்கள் படம் எடுக்க அனுமதி கொடுத்தார்கள்.
முன்பு பதிவு போட்டு இருக்கிறேன் ஸ்ரீராம்.
//முதல் முறையாக சிவன் கோவில் பற்றி படிக்கிறேன். அங்கெல்லாம் கிடையாது என்று சொல்லவில்லை. நான் படிப்பது முதல் முறை! //
நான் சிவனும், பெருமாளும் உள்ள கோவில்கள் போட்டு இருந்த பதிவுகளுக்கு பின்னூட்டம் போட்டு இருக்கிறீர்கள் .
//படங்கள் யாவும் அழகு, துல்லியம்.//
நன்றி.
//கோவில் வளாகமும் சுத்தமாக பராமரிக்கப்படுவது தெரிகிறது. அங்கெல்லாம் யானை வைத்துக் கொள்ள அனுமதி இருக்காது இல்லையா?!!//
கோவில் வளாகம் சுத்தமாக இருக்கிறது. நம் மக்கள் அங்கு அதை சேவையாக செய்கிறார்கள். யானை வைக்க அனுமதி இல்லை தான் போலும் எனக்கு தெரியவில்லை.
பட்டர் பார்த்து இருந்தால் தடுத்து இருப்பார், அவர் வேறு ஒருவருக்கு அர்ச்சனை செய்வதற்கு சங்கல்பம் செய்து கொண்டு இருந்தார் என்று போட்டு இருக்கிறேன் பாருங்கள்.
கோயில் நிர்வாகம் நடத்தும் வலை பக்கத்தில் கூட ஸ்வாமி படங்கள் இல்லை.
என் படத்தைப் பார்த்து எடுக்க சொன்னால் எடுத்து விட வேண்டியதுதான்.
வெளி பக்கம் எல்லோரும் எடுத்தார்கள் அதனால் எடுத்தேன்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
ஹூஸ்டனில் மீனாக்ஷி கோயிலில் சொக்கநாதர் உண்டு ஶ்ரீராம். அதைத் தவிரவும் சிவனுக்கென அங்கே தனிக் கோயில் உண்டு. அதைக் கர்நாடகத்தைச் சேர்ந்த வைதிகர் ஒருத்தர் நிர்வகித்து வருகிறார். தமிழ் கொஞ்சம் கொஞ்சம் பேசுவார். சிவராத்திரி அன்று கூட்டமாக இருக்கும். என்றாலும் விரைவில் தரிசனம் செய்ய முடியும். இதைத் தவிர்த்து நியூயார்க்கில் அஷ்டவித்யா குருகுலம் (தயானந்த சரஸ்வதியினுடையது) வளாகத்தில் உள்ள தக்ஷிணாமூர்த்தி கோயில் ரொம்பப் பிரபலம்.
நீக்கு//நியூயார்க்கில் அஷ்டவித்யா குருகுலம் (தயானந்த சரஸ்வதியினுடையது) வளாகத்தில் உள்ள தக்ஷிணாமூர்த்தி கோயில் ரொம்பப் பிரபலம்.//
நீக்குஇந்த கோயில் போய் வந்த பதிவு போட்டு இருக்கிறேன்.
படங்களும் பகிர்வும் வியப்பை அளிக்கின்றன
பதிலளிநீக்குவணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்
நீக்குஉங்கள் கருத்துக்கு நன்றி.
அருமையான படங்கள்... கோவில் பராமரிப்பில் அதிக கவனம் செலுத்துகிறார்கள்...
பதிலளிநீக்குவணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
நீக்குஉங்கள் கருத்துக்கு நன்றி.
கோமதிக்கா என்ன வெண்மை என்ன ஒரு வெண்மை!! இறைவன்/சக்தி சத்தியசீலன், சற்குணன்! என்பதன் குறியீடாக இருக்குமோ?
பதிலளிநீக்குபடங்கள் எல்லாம் அட்டகாசம் கோமதிக்கா. மிக மிக ரசித்தேன்.
சுத்தமோ சுத்தம்.
கீதா
தும்பிக்கை ஆழவார் //
பதிலளிநீக்குஹாஹாஹாஹா...
வீர வைணவர்கள் கணபதியை தும்பிக்கை ஆழ்வார் என்று சொல்வது வழக்கம்! வைணவக் கோயில்களில் அப்படித்தான் போட்டிருப்பார்கள்.
இங்கு அரியும் சிவனும் ஒரே வளாகத்தில் இருப்பது மிகவும் பிடித்திருக்கிறது. அங்கு பெரும்பாலும் இருவரும் ஒரே வளாகத்தில் இருப்பார்கள்.
ஆமா, வடமாநிலத்து துர்கை போலத்தான் இருக்கிறார்!
வடை நன்றாக இருக்கிறதே!
கீதா
வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்
நீக்கு//வீர வைணவர்கள் கணபதியை தும்பிக்கை ஆழ்வார் என்று சொல்வது வழக்கம்! வைணவக் கோயில்களில் அப்படித்தான் போட்டிருப்பார்கள்.//
முதன் முதலில் கண்பதியை வைத்து வணங்கி ஆரம்பித்து இருக்கிறார்கள் கோயிலை.
அதனால் அந்த பேர் அப்படியே இருக்கிறது.
ஆமாம், துர்க்கை மட்டும் பளிங்கு சிலை.
வடை நன்றாக இருந்தது.
ஆண்டாள் கீழேயும் தெரியும் அளவு தரை பள பள. சுத்தம்
பதிலளிநீக்குஅக்குழந்தை பெற்றோரை வாழ்த்தியது நல்ல விஷயம் கோமதிக்கா.
பிரசாதமாக அனைவருக்கும் பாதாம் பருப்பு கொடுத்தார்.//
ம்ம்ம் பாலாஜி சாமி பணக்கார சாமிதானே! ஹாஹாஹாஹா
அக்கா விவேகானந்தர் அங்கு சென்று உரையாற்றிய பிறகு வேதாந்த சொசைட்டி அங்கு சான்ஃபிரான்சிஸ்கோவில் முதல் முதலாக ஹிந்துகோயில் கட்டினார்கள் வருடம் 1905 என்று நினைக்கிறேன். ஒருவேளை சான்ஃப்ரான்சிஸ்கோ போகும் வாய்ப்பு கிடைத்தால் இந்தக் கோயிலுக்குச் சென்று வாருங்கள்.
நவராத்திரி நடக்க போவதால் சிவன் கோயிலில் ஸ்ரீ பர்வதவர்த்தினி அம்மனுக்கு "ஸ்ரீ லலிதாஸஹஸ்ர நாமாவளி" சொல்லி சொர்ணபுஷ்பம் அர்ச்சனை செய்து கொண்டு இருந்தார்கள்.நிறைய பெண்கள் அமர்ந்து பாடி கொண்டு இருந்தார்கள். //
நல்ல விஷயம். அங்கும் நம் மக்கள் இங்கு போல் செய்கின்றார்கள். அங்கு வட இந்தியர்கள் கட்டும் கோயிலில் ஹிந்தி பேசுபவர் பூஜை செய்கிறார் பண்டிட்ஜி என்று சொல்லப்படுவார். கோயில் கட்டும் குழுவைப் பொறுத்து. அர்ச்சகர்களுக்கு நல்ல திறமை இருந்தால் மட்டுமே பெரிய பூஜைகள் மந்திரங்கள் எல்லாம் நன்றாகத் தெரிந்தவர்களைத்தான் அங்கு கோயிலுக்கு எடுத்துக் கொள்கிறார்கள். நீங்கள் சென்ற கோயிலில் கிட்டத்தட்ட 11 பேர் இருக்கிறார்கள். எல்லோருமே திருப்பதி தேவஸ்தான வேதபாடசாலையில் படித்து தேர்ச்சி பெற்றவர்கள். ஆங்கிலம், தெலுங்கு, தமிழ் கன்னடம் ஹிந்தி என்று பல மொழி அறிந்தவர்கள். அவர்களின் பயோடேட்டா எல்லாம் பார்த்துதான் கோயிலில் அமர்த்துவார்கள் அந்த்க கோயில் கமிட்டி. ஏனென்றால் விசா வாங்க வேண்டுமே! நல்ல சமஸ்கிருத வேத அறிவு இருந்தால்தான் எடுத்துக் கொள்ளப்படுவார்கள்.
இது பற்றி உறவினர்களும் சொல்லிக் கேட்டிருக்கிறேன்.
எனக்குத் தெரிந்து ஒரு தமிழ் அர்ச்சகரும் சென்றிருக்கிறார். எந்தக் கோயில் என்பது மறந்துவிட்டது.
இந்தக் கோயிலின் ஒரு லிங்க் தருகிறேன். அதில் உள்ள அர்ச்சகர்களை நீங்க பார்த்தீங்களான்னு பாருங்க... https://hindutempleofatlanta.org/pages/about-us-priests
கீதா
கிரெனேட் கல் அது அதனால் அந்த பள பளப்பு சுத்தமாக துடைத்து வைத்து இருப்பதும் காரணம் கோயிலில் ஏதாவது விஷேசம் நடந்தால் அவர்களை மந்தில் வாழ்த்தி விடுவேன். ஆம்புலன்ஸ் வாகன்ம் வீதியில் போனால் வாழ்த்துவேன். நம்மால் முடிந்த வாழ்த்து அதை செய்வோம்.
நீக்கு//ம்ம்ம் பாலாஜி சாமி பணக்கார சாமிதானே! ஹாஹாஹாஹா//
பாலாஜி பணக்கார சாமிதான். அவர் வசதியாக வைத்து இருக்கும்
மக்கள் கொண்டு வந்து பாலாஜிக்கு குவிக்கிறார்கள், பழங்கள், மற்றும் பாதாம்பருப்பு எல்லாம்.
குழந்தைகள் அழைத்து செல்லும் இடங்களுக்கு போய் வருகிறேன்.
// நீங்கள் சென்ற கோயிலில் கிட்டத்தட்ட 11 பேர் இருக்கிறார்கள். எல்லோருமே திருப்பதி தேவஸ்தான வேதபாடசாலையில் படித்து தேர்ச்சி பெற்றவர்கள். ஆங்கிலம், தெலுங்கு, தமிழ் கன்னடம் ஹிந்தி என்று பல மொழி அறிந்தவர்கள். அவர்களின் பயோடேட்டா எல்லாம் பார்த்துதான் கோயிலில் அமர்த்துவார்கள் அந்த்க கோயில் கமிட்டி. ஏனென்றால் விசா வாங்க வேண்டுமே! நல்ல சமஸ்கிருத வேத அறிவு இருந்தால்தான் எடுத்துக் கொள்ளப்படுவார்கள்.//
வெளி நாட்டில் கோவிலில் வேலை செய்பவருக்கு நிறைய மொழிகள் தெரிந்து இருப்பது நல்லதுதான். மகன் நியூஜெர் சியில் இருந்த போது ஒரு கோயில் அழைத்து சென்றான் அங்கு திருமணஞ்சேரி ஊரை சேர்ந்த குருக்கள் இருந்தார்.
நீங்கள் கொடுத்த சுட்டிக்கு சென்று பார்த்தேன். முரளிகிருஷ்ணா பட்டர் இருந்தார் இவர் திருப்பதி வேதபாடசாலையில் படித்தவர்.
சிவன் கோயிலில் சுப்பிரமணிய குருக்கள் இருந்தார்.
இரண்டு பேர் பார்த்து இருக்கிறேன் நீங்கள் அனுப்பிய சுட்டியிலிருந்து.
நன்றி.
ஹூஸ்டன் மீனாக்ஷி கோயிலுக்கு மதுரையைச் சேர்ந்த மீனாக்ஷி கோயில் பட்டரின் உறவினர்களே தொடர்ந்து மாற்றி மாற்றி இருந்து வருகின்றனர். 2011 ஆம் ஆண்டில் கும்பகோணத்தில் இருந்து ஒரு சிவாசாரியாரும் அங்கே வந்தார். 2019 இல் கூடப் பார்த்தோம். அதே போல் இன்னும் சில கோயில்களிலும் தமிழர்களான சிவாசாரியார்கள் இருக்கின்றனர் எனச் சொல்கின்றனர்.
நீக்குகோயிலைச் சுற்றி அழகான பச்சை பசேல் நந்தவனம், கலையரங்கம், நடுவே வாழை புல்வெளி எல்லாமே அழகாக இருக்கின்றன. அங்கும் நம்மூர் போல மாக்கோலம் கலர் போட்டு போட்டிருக்கிறார்கள் போலும் நம் மக்கள்.
பதிலளிநீக்குநந்தவனத்தில் மான்கள் சிலைகள் எல்லாம் அழகோ அழகும..
குருக்கள், பட்டர்கள், மற்றும் கோயில் ஊழியர்கள் அனைவரும் தடுப்பு ஊசி போட்டுக் கொண்டு பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்றும் கோயில் வளாகத்தில் நடைபயிற்சி செய்ய அனுமதி உண்டு என்றும் சொல்கிறார்கள் //
அட!! நடைப்பயிற்சியும் என்ன நல்ல விஷயம் கோயிலுக்கு கோயில் உடற்பயிற்சிக்கு உடற்பயிற்சி...
இங்கும் மழைதான் கோமதிக்கா. படங்கள் எல்லாம் ரொம்ப ரொம்ப தெளிவாக இருக்கின்றன அக்கா.
ரசித்தேன்
கீதா
//கோயிலைச் சுற்றி அழகான பச்சை பசேல் நந்தவனம், கலையரங்கம், நடுவே வாழை புல்வெளி எல்லாமே அழகாக இருக்கின்றன.//
நீக்குஆமாம்.
//அங்கும் நம்மூர் போல மாக்கோலம் கலர் போட்டு போட்டிருக்கிறார்கள் போலும் நம் மக்கள்.//
நம் நாட்டு மக்கள்தானே அங்கே கோயில் கட்டி இருக்கிறார்கள், அவர்கள்தான் நாம் இருக்கும் இடத்தில் கோயில் வேண்டும் என்று பணம் செலவு செய்து கட்டி இருக்கிறார்கள். கோலம் பொங்கல் அப்போது போடுவது போல் பெயிண்ட் கோலம் போட்டு இருக்கிறார்கள்.
நந்தவனம் மானகளை தூரத்திலிருந்து எடுத்த படம் பக்கத்தில் போக வில்லை.
//அட!! நடைப்பயிற்சியும் என்ன நல்ல விஷயம் கோயிலுக்கு கோயில் உடற்பயிற்சிக்கு உடற்பயிற்சி...//
கொரோனா காலத்தில் அதற்கு தடை இருந்து இருக்கும் போல இப்போது நடக்கலாம் அனுமதி வேண்டாம் என்கிறார்கள்.
//படங்கள் எல்லாம் ரொம்ப ரொம்ப தெளிவாக இருக்கின்றன அக்கா.//
நன்றி.
அங்கும் மழைதான் என்று படித்தேன்.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
இனிய தரிசனம்..
பதிலளிநீக்குசிவா விஷ்ணு ஆலயங்களின் அற்புதக் காட்சிகள்..
ஐயனின் அருள் அனைவருக்கும் ஆகட்டும்..
வாழ்க வையகம்..
வாழ்க வளமுடன்..
வணக்கம் துரை, செல்வராஜூ, வாழ்க வளமுடன்
நீக்குநேற்று நவராத்திரி அலங்காரம் இரு கோயில்களில் மிக அழகாய் இருந்தது.
அனைவருக்கும் அருள்வார்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
அன்பின் கோமதி மா,
பதிலளிநீக்குவாழ்க வளமுடன்.
அழகான படங்கள் கண்ணைக் கவர்கின்றன.
இங்கும் மூன்று கோவில்கள் நல்ல நிலைமையில் பராமரிக்கப் படுகின்றன.
பாலாஜி கோவிலில் ராமலிங்கேஸ்வரர் ,பர்வதவர்த்தினி அம்பாள்,
சுப்ரமணியர், வினாயகர், நவக்ரஹம் என்று எல்லா சன்னிதிகளும்
இருக்கின்றன,
ராமர் கோவில் தனியாக இருக்கிறது. அங்கும்
சிவபெருமானுக்குத் தனி வாசல்
வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்
நீக்கு//அழகான படங்கள் கண்ணைக் கவர்கின்றன//.
நன்றி அக்கா.
ஆலயம் தொழுவது சாலவும் நன்று. என்று நம் மக்கள் அவர்கள் இருக்கும் இடத்தில்
ஆலயம் அமைத்து வணங்கி மகிழ்கிறார்கள்.
நவராத்திரி விழாவை கண்டு களிக்க அழைத்து சென்றாள் மகள் மிகவும் அழகாய் அலங்காரம் செய்து , கொலு வைத்து இருந்தார்கள்.
ஒவ்வொரு சனிக்கிழமையும், ஞாயிற்றுக்கிழமையும் பிரசாதங்கள் கிடைக்குமாம், அங்கே வாங்கலாம் என்பது பிறகு தெரிந்தது. கொரோனா காலத்தில் விற்பனை இல்லை போலும் . இப்போது மீண்டும் பிரசாத ஸ்டால் திறக்கப்பட்டு உள்ளது. சமூக இடைவெளி விட்டு முககவசம் அணிந்து வர வேண்டும் என்று கோயில் நிர்வாகம் கேட்டுக் கொள்கிறது.///
பதிலளிநீக்குஇங்கும் இதே நடைமுறைதான். சனி ஞாயிறுகளில்
வடையும் உண்டு. சில சமயம் சர்க்கரைப்
பொங்கலும் கிடைக்கும்.
முகக் கவசம் அணிந்தே சென்றோம்.
இந்தக் கோவில் பட்டர் ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து வந்திருக்கிறார்.
ஆண்டாள் தாயாருக்குத் தனி கவனிப்பு:)
அந்த அலங்காரம் சொல்லி முடியாது.
நின்ற இடத்திலிருந்திலிருந்து நம்மை
வசீகரிக்கும் அருமை.
அதே போல் அம்பாளுக்கு ஒன்பது கஜத்தில்
புடவை அணிவித்து சிந்தையைக் கவர்வாள்.
//இங்கும் இதே நடைமுறைதான். சனி ஞாயிறுகளில்
நீக்குவடையும் உண்டு. சில சமயம் சர்க்கரைப்
பொங்கலும் கிடைக்கும்.
முகக் கவசம் அணிந்தே சென்றோம்.//
நல்லது அக்கா. முககவசம் அவசியம்தான்.
நேற்று அம்மனுக்கு சந்தன காப்பு , ஏகபட்ட புடவை அலங்காரம்.
"அஷ்டலக்ஷ்மி ஸ்தோத்திரம் "செய்து கொண்டு இருந்தார்கள்.
ஸ்ரீ ராமலிங்கேஸ்வரருக்கு அபிஷேகம் முடிந்து அலங்காரம் நடந்து கொண்டு இருந்தது, திரை விலகவில்லை. அர்ச்சனைக்கு திரையை விலக்கிய போது தரிசனம் செய்தோம். சிவனை அழகாய் அலங்காரம் செய்து இருந்தார்கள். திரையை விலக்கியவுடன் மின்சார விளக்கை அணைத்து விட்டு ஒரு தீபாராதனை காட்டினார் குருக்கள், அப்புறம் விளக்கை போட்டார் ஜெகஜோதியாக மின்னினார் ராமலிங்கேஸ்வரர். காத்து இருந்தற்கு அருமையான தரிசனம் .
பதிலளிநீக்குபூஜை முடிந்த பின் பிரசாதம் உண்டு. நாங்கள் பூஜைக்கு இருக்கவில்லை.
சிவன் சன்னதிக்கு வலபக்கம் ஸ்ரீ கணேசர், இடபக்கம் வள்ளி, தெய்வானையோடு முருகன் இருந்தார். மற்றும்
ஸ்ரீ ஜனன சரஸ்வதி , ஸ்ரீ கன்யாபரமேஸ்வரி, ஸ்ரீ காலபைரவர் இருந்தார்கள். எல்லோருக்கும் மிக அழகாய் அலங்காரம் செய்து இருந்தார்கள். ....///////////////////////////////
இதே போலத்தான் இங்கேயும்.
வேறு பாடு ஒன்றுமே கிடையாது.
அந்தந்த சன்னிதி வாசலில் குங்குமம் , சந்தனம், விபூதி என்று அருமையாக
வைத்திருப்பார்கள்.
இங்கே கோயில் புதிதாகக் கட்டிடங்கள் எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். கோயில் இன்னும் விஸ்தாரமாக இருக்கப் போகிறது.
இந்தியாவிலிருந்து வந்து இங்கு குடியேறி இருக்கும்
தெலுங்கர்கள் நிறையவே செலவழித்து
சேவை செய்கிறார்கள்.
நல்ல தொரு பதிவுக்கு மிக நன்றி மா.
வாழ்க வளமுடன்.
இதே போலத்தான் இங்கேயும்.
நீக்கு//வேறு பாடு ஒன்றுமே கிடையாது.
அந்தந்த சன்னிதி வாசலில் குங்குமம் , சந்தனம், விபூதி என்று அருமையாக
வைத்திருப்பார்கள்.//
ஆமாம், கை அனிச்சையாக குங்குமம், சந்தனம், மஞ்சளை எடுக்க போகிறது.
மனம் கொஞ்சம் சஞ்சல பட்டது உண்மை.
//இங்கே கோயில் புதிதாகக் கட்டிடங்கள் எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். கோயில் இன்னும் விஸ்தாரமாக இருக்கப் போகிறது.//
கேட்கவே மகிழ்ச்சி.
நம் மக்கள் சேவை தொடரட்டும் எல்லோரும் நலமாக இருக்கட்டும், இறைவன் அவர்களை நலமாக வைத்து இருக்கட்டும்.
அட்லாண்டாவில் இவ்வளவு அழகான இந்துக் கோவிலா? பார்க்க பிரமிப்பாகவும், சந்தோஷமாகவும் இருக்கிறது. படங்கள் தெளிவு.
பதிலளிநீக்குவணக்கம் பானுமதி வெங்கடேஷ்வரன், வாழ்க வளமுடன்
நீக்குஅட்லாண்டாவில் இன்னும் இரண்டு மூன்று கோயில் பெரிதாக இருக்கிறது.
நேற்று வட இந்தியர்கள் கட்டிய சகதி மந்திர் போனோம்.
அதுவும் நல்ல பெரிதாக வட இந்திய பாணியில் வெகு அழகாய் இருக்கிறது.
//பார்க்க பிரமிப்பாகவும், சந்தோஷமாகவும் இருக்கிறது. படங்கள் தெளிவு.//
ஆமாம், நமக்கு பார்க்கும் போது மகிழ்ச்சி, மனநிறைவு.
படங்களை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.
பொதுவாக அங்கே ஒரே கோயிலுக்குள்ளேயே ஈசன், அம்பிகை ஒரு பக்கம், பெருமாள், ஶ்ரீதேவி, பூதேவி சமேதராக, ஆண்டாள், அனுமன், கருடாழ்வார், ராதா கிருஷ்ணர், கோதண்டராமர் பரிவாரங்களுடன், துர்கை, நவகிரஹங்கள், பைரவர், ஐயப்பன், பிள்ளையார், சுப்ரமணியர் என அனைவருக்கும் தனித்தனி சந்நிதிகள் இருக்கும்/இருக்கின்றன. சமீபத்தில் ஹூஸ்டன் மீனாக்ஷி கோயிலில் ஐயப்பன் சந்நிதியில் பதினெட்டுப் படி கட்டிக் கீழே இருந்து மேலே வருவது போல் கட்டி இருக்கின்றனர். சபரிமலைக்குப் போக முடியாதவங்க இங்கே பிரார்த்தனை நிறைவேற்றிக் கொள்வார்கள் எனப் பையர் சொன்னார். அதைத் தவிரவும் கேரளத்தினரின் குருவாயூர்க் கிருஷ்ணன் கோயில், அங்கே ஐயப்பன் சந்நிதி தனியாக என உண்டு. குருவாயூர்க்கிருஷ்ணன் கோயிலில் வெளியே வரும் வாயிலுக்கு அருகே ஒரு சின்னப் பேப்பர்க்கிண்ணத்தில் பால் பாயசம் வைத்திருப்பார்கள். நாமாக எடுத்துக் கொள்ளலாம்.
பதிலளிநீக்குவணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்
நீக்குபொதுவாக அங்கே ஒரே கோயிலுக்குள்ளேயே ஈசன், அம்பிகை ஒரு பக்கம், பெருமாள், //ஶ்ரீதேவி, பூதேவி சமேதராக, ஆண்டாள், அனுமன், கருடாழ்வார், ராதா கிருஷ்ணர், கோதண்டராமர் பரிவாரங்களுடன், துர்கை, நவகிரஹங்கள், பைரவர், ஐயப்பன், பிள்ளையார், சுப்ரமணியர் என அனைவருக்கும் தனித்தனி சந்நிதிகள் இருக்கும்/இருக்கின்றன.//
ஆமாம். நம் வணங்கும் தெய்வங்கள் எல்லாம் ஒரே இடத்தில் இருந்தால் மக்களுக்கு வசதி. அந்த அந்த கடவுளின் விழாக்கள் நடக்கும் போது போய் வர வசதி.
//சமீபத்தில் ஹூஸ்டன் மீனாக்ஷி கோயிலில் ஐயப்பன் சந்நிதியில் பதினெட்டுப் படி கட்டிக் கீழே இருந்து மேலே வருவது போல் கட்டி இருக்கின்றனர். சபரிமலைக்குப் போக முடியாதவங்க இங்கே பிரார்த்தனை நிறைவேற்றிக் கொள்வார்கள் எனப் பையர் சொன்னார்.//
நானும் படித்தேன், வீடியோ பார்த்தேன்.
//அதைத் தவிரவும் கேரளத்தினரின் குருவாயூர்க் கிருஷ்ணன் கோயில், அங்கே ஐயப்பன் சந்நிதி தனியாக என உண்டு. குருவாயூர்க்கிருஷ்ணன் கோயிலில் வெளியே வரும் வாயிலுக்கு அருகே ஒரு சின்னப் பேப்பர்க்கிண்ணத்தில் பால் பாயசம் வைத்திருப்பார்கள். நாமாக எடுத்துக் கொள்ளலாம்.//
அவர் அவர் பாரம்பரிய முறைப்படி இறைவனை வணங்க வழி அமைத்து கொண்டு இருக்கிறார்கள். இளம் தலைமுறைகளுக்கு இறைபக்தி வளரவும் உதவியாக இருக்கிறது.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.