ஞாயிறு, 31 அக்டோபர், 2021

ஹாலோவீன் வாழ்த்துக்கள்



"பரிசு தருகிறீர்களா அல்லது தந்திரம் செய்யட்டுமா ?" மிட்டாய் வாங்க வீட்டுக்கு வரும் குழந்தைகள் சொல்லும் வாக்கியம்

மகள் ஊரில் கடைகளுக்கு போன போது ஹலோவின்  விற்பனைக்கு இருந்த பொம்மைகள் . மற்றும் காரில் பயணம் செய்யும் போது பார்த்த காட்சிகளும் இந்த பதிவில்.

அக்டோபர் 31 ஹாலோவீன்  தினம். இறந்தவர்களுக்கு மரியாதை செய்யும் விதமாக இந்த விழா கொண்டாடபடுகிறது.


செப்டம்பர் மாதம் முதல் இந்தவிழாவிற்கு வீடுகளில், கடைகளில் ஏற்பாடுகள், விற்பனைகள் ஆரம்பித்து விட்டது.




கடைக்கு காரில் போகும் போது ஒரு வீட்டில் வைத்து இருந்ததை எடுத்தேன்

வீட்டின்  கூரை மேல் எல்லாம்  எலும்புகூடுகளும் சிலந்திகளும், இறந்த மனித தலையை சிலந்தி தனியாக இழுத்து போகிறது, இரத்தகளறியாக வைத்து இருந்தார்கள். கீழே பெரிய எலும்புகூடு, எலும்புகூடு கையிலும் ஒரு மண்டை ஓடு இருக்கிறது. கல்லரையில் வைக்கும் பலகைகள், செடி மீது சிலந்தி வலை,  கறுப்பு உடை அணிந்த பேய்கள் . வலை பின்னும் கருப்பு சிலந்தி.

              கடைகளில்  விற்பனைக்கு இருக்கும் பொம்மைகள்.

                                         தவம் செய்யும் எலும்புகூடுகள்
                          செல்லங்களும் கொண்டாடுகிறது.





திருடன் தோளில் காகம்
ஓவியப் பள்ளி வாசலில்
புன்னகை அரசி மோனாலிஸா  மீசை வரைந்து இருக்கிறார் ஹலோவீன் விழாவிற்கு

பழைய கால தபால்பெட்டி


பீங்கான் சிலைகள்

ஹாலோவீன் அலங்காரம்




இந்த பெரிய அண்டம் காக்கைக்கு ஒரு கண் வாட்ச் ரிப்பேர் செய்பவர் அணிந்து கொள்ளும் லென்ஸ், மற்று ஒரு கண்ணுக்கு கறுப்பு  திரை போல  வைத்து இருக்கிறார்கள்.

வீட்டு வாசலில் பயமுறுத்த வைக்க மண்டை ஓடுகள்

வாசலில் வைப்பதற்கு உள்ள உருவங்கள். இவை கைகளை அசைக்கும். மரம் கைகளை அசைத்து அசைத்து கூப்பிடுகிறது. 

விற்பனைக்கு வைத்து இருக்கும் காய்ந்த பரங்கிகாய்கள்

அறுவடை திருவிழாவாக விவசாயிகள் கொண்டாடுகிறார்கள், அவர்கள் வாசலில் கதிர்களுடன் இந்த பொம்மைகளை வைக்கிறார்கள்.

கேளிக்கை திருவிழாவாக விவசாயிகள் வயல்களில், தீய ஆவிகளை விரட்ட  சொக்கபனை கொளுத்துவார்களாம்.

மாறுவேட திருவிழாவாக வித வித உடை அணிந்து வீடு வீடாக செல்வார்கள்.
முகமூடி அணிவார்கள்.  கடையில் விற்பனைக்கு இருக்கும் முகமூடிகள்

மகன் முன்பு  நியுஜெர்சியில் இருக்கும் போது  போய் இருந்தோம் , அப்போது    கடையில் எடுத்த படங்கள்   இந்த இரண்டும் 

பேரனுக்கு வருடா வருடம் ஹலோவீன் சமயம் மாறுவேடம் அணிய உடை எடுப்பான் மகன்.

2013ல் மகன் வீட்டுக்கு போன போது எடுத்த படம்
இந்த வருடம் மகன் வீட்டில் வைத்து இருக்கும்  அலங்காரம் எனக்கு அனுப்பி வைத்த படங்கள் இந்த இரண்டும்.
பேரன்

மகன் இந்த படத்தை அனுப்பினான், அவன் காரில் போகும் போது பார்த்தக்காட்சி.





இயற்கையான ஹாலோவின் சிலந்தி வலை மகள் வீட்டு
தோட்டத்து செடியில்.
ஹாலோவின் அலங்காரத்திற்கு செயற்கை சிலந்தி வலை வாங்கி தொங்கவிடுவார்கள் . இங்கு அவசியம் இல்லை.

ஹலோவீனுக்கு வருபவர்களுக்கு மிட்டாய், பிஸ்கட் கொடுப்பார்கள்.

மகள் எனக்கு வாங்கி தந்த பிஸ்கட். நீங்களும் எடுத்து கொள்ளுங்கள்.

வாழ்க வையகம்! வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன் !

--------------------------------------------------------------------------------------------------
 

42 கருத்துகள்:

  1. பயங்கரமும் இருக்கிறது, சுவாரஸ்யமும் இருக்கிறது.  எல்லாப் படங்களும் ஒண்டாய் ஒன்று மிஞ்சுகின்றன.  மான் வீட்டு அலங்காரமும், பேரனும் டாப்.  காரில் தொற்றிக்கொண்டு ஆகும் எலும்புக்கூடு, கூரையில் சிலந்திகள் இழுத்துச் செல்லும் எலும்புக்கூடு...  எல்லாமே அருமை.  எத்தனை வகையான கற்பனைகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
      எல்லா படங்களையும் ரசித்து பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      //காரில் தொற்றிக்கொண்டு ஆகும் எலும்புக்கூடு, கூரையில் சிலந்திகள் இழுத்துச் செல்லும் எலும்புக்கூடு... எல்லாமே அருமை. எத்தனை வகையான கற்பனைகள்!//

      கற்பனைகள் மற்றவர்களை மகிழ்ச்சி படுத்துகிறது.
      முன்னோர்களையும் மகிழ்ச்சி படுத்துகிறது என்று நினைத்து செய்கிறார்கள்.
      முன்னோர்கள் வாழ்த்த எல்லோரும் நன்றாக இருக்கட்டும். அதுதானே நமக்கு வேண்டும்!

      நீக்கு
  2. எல்லா பிஸ்கட்டுகளும் நன்றாக இருக்கின்றன. அமர்க்களமான ஹாலோவீன் படங்கள். நன்றாக எடுத்திருக்கிறீர்கள். மகன் அனுப்பியவையும் அருமை! எலும்புக்கூட்டைப் பார்த்தால் முன்னெல்லாம் பயமாக இருக்கும். இப்போ அதிகம் பார்த்துப் பழகி இருக்கும். ஹாலோவீன் கொண்டாட்டம் களை கட்டி இருக்கும்னு நினைக்கிறேன். அடுத்த மாசம் (நவம்பரில்) நன்றி தெரிவிக்கும் நாள் வருதே! அதுக்குக் கடைகளில் பொருட்களுக்கு அதன் விலையில் இருந்து கழிவெல்லாம் இருக்கும். அப்போவும் கடைகளில் கூட்டம் அலை மோதும் என்பார்கள். அதற்கடுத்து டிசம்பரில் கிறிஸ்துமஸ் பின்னர் புத்தாண்டு என வரிசையாகக் கொண்டாட்டம் தான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா சாமபசிவம், வாழ்க வளமுடன்

      //எல்லா பிஸ்கட்டுகளும் நன்றாக இருக்கின்றன. அமர்க்களமான ஹாலோவீன் படங்கள். நன்றாக எடுத்திருக்கிறீர்கள்.//

      முன்பு கடைக்கு போனால் உனக்கு என்ன வேண்டும் என்றும், கேட்காமலும் வாங்கி கொடுப்போம் குழந்தைகளுக்கு. இப்போது அவர்கள் நம்மிடம் கேட்டும் கேட்காமலும் நமக்கு தேவையானதை வாங்கி தருகிறார்கள்.

      படம் நன்றாக இருக்கிறது என்று சொன்னதற்கு நன்றி.


      //எலும்புக்கூட்டைப் பார்த்தால் முன்னெல்லாம் பயமாக இருக்கும். இப்போ அதிகம் பார்த்துப் பழகி இருக்கும். //

      பயத்தை போக்கத்தான் இந்த திருவிழா. அதனால் இப்போது பயம் போய் விட்டது.

      அடுத்து அடுத்து விறபனைகள் களை கட்டுகிறது. சொந்த பந்தங்கள், உறவுகள், நட்புகள் என்று எல்லோருக்கும் பரிசு கொடுத்து நன்றி சொல்லி மகிழ ஒரு விழா இருப்பது மகிழ்ச்சிதான். பொங்கலுக்கு சூரியனுக்கு நன்றி தெரிவிப்பதுபோல! உடன் வாழும் மனிதர்களுக்கு நன்றி சொல்கிறார்கள்.

      குளிரை போக்க இப்படி பண்டிகைகள் இருந்தால்தான் நல்லது.

      நீக்கு
  3. படங்கள் மிக அழகு. விழாவைக் கண்முன் கொண்டுவந்துவிட்டீர்கள்.

    சாரின் படம் நெகிழ்ச்சி. பேரனுன் மகிழ்ச்சி மனதைக் கொள்ளை கொள்கிறது.

    பறங்கிக்காய்கள் சமையலுக்கு உபயோகப்படுமா இல்லை அலங்காரத்துக்கு மட்டும்தானா?

    கபாலம், எலும்புக் கூடுகள்... தோண்டிக் கொண்டுவந்து விற்பனைக்கு வைத்துவிடுவார்களோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்

      //படங்கள் மிக அழகு. விழாவைக் கண்முன் கொண்டுவந்துவிட்டீர்கள்.//

      நன்றி.

      //சாரின் படம் நெகிழ்ச்சி. பேரனுன் மகிழ்ச்சி மனதைக் கொள்ளை கொள்கிறது.//

      நன்றி.


      //பறங்கிக்காய்கள் சமையலுக்கு உபயோகப்படுமா இல்லை அலங்காரத்துக்கு மட்டும்தானா?//

      விவசாயிகளுக்கு மிகவும் வளத்தை கொடுக்க கூடியது இந்த காய். செம்டம்பர் , அக்டோபரில் மிக அதிகமாய் விளையும் இவற்றை அறுவடை செய்து வைத்து விடுவார்கள். இவை காய்ந்து அது பாட்டுக்கு கிடக்கும், கெட்டு போகாது. அதை வைத்து இனிப்புக்கள், ஜாம்கள் மற்றும் நிறைய செய்து அடுத்து பயிர் செய்யும் வரை அவர்களுக்கு கை கொடுக்கிறது.

      இப்போது உண்மையான பறங்கி காய்கள் சில வீடுகளில் வைக்கிறார்கள், சில வீடுகளில் செயற்கையாக வைக்கிறார்கள்.

      //கபாலம், எலும்புக் கூடுகள்... தோண்டிக் கொண்டுவந்து விற்பனைக்கு வைத்துவிடுவார்களோ?//

      நல்ல வேடிக்கை!

      ஒரு மனிதனைபோலவே இன்னொரு மனிதனை உருவாக்கும் விஞ்ஞானம் வளர்ந்து விட்ட நாளில் செயற்கை மண்டைஓடு, எலும்பு கூடு செய்ய முடியாதா என்ன?

      உங்கள் கருத்துக்கு நன்றி.








      நீக்கு
  4. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. ஹாலோவீன் கொண்டாட்டங்கள் அனைத்தும் நன்றாக இருக்கின்றன. படங்கள் வழக்கம் போல் அழகாக உள்ளது. விதவிதமான பொம்மைகளை பார்த்து ரசித்தேன். காரின் பின்னாடி எலும்பு கூடு ஏறியபடி செல்லும் படமும் அண்டங்காக்காய் படமும் நன்றாக உள்ளது.

    நிறைய கற்பனைகளுடன் பொம்மைகளை வடிவமைத்து இந்த விழாவை கொண்டாடி வருகிறார்கள் போலும். அவரவர் நம்பிக்கைகளை இப்படி விழாவாக வருடாவருடம் கொண்டாடும் போது தலைமுறை தலைமுறையாக அது போலவே பழக்க வழக்கங்களும், அதன் விளைவாய் மகிழ்ச்சியும், அனைவருக்கும் வருவது பார்க்கவே நன்றாக இருக்கிறது. அந்த உற்சாகம் நம்மையும் தொற்றிக் கொள்கிறது. அனைவருக்கும் வாழ்த்துகள்.

    தங்கள் பேரன் இருக்கும் படமும், கணவர் இருக்கும் படமும் அழகாக உள்ளது. பேரனுக்கும், மகன், மகள் வீட்டில் அனைவருக்கும் என்னுடைய ஹாலோவீன் வாழ்த்துகளை சொல்லுங்கள். உங்களுக்கும் வாழ்த்துகள். பிஸ்கெட்கள் டப்பாவுடன் பார்க்கவே அழகாக உள்ளன. உங்கள் சொல்படி நானும் எடுத்துக் கொண்டேன். அருமையான பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்

      பதிவு அருமை. ஹாலோவீன் கொண்டாட்டங்கள் அனைத்தும் நன்றாக இருக்கின்றன. படங்கள் வழக்கம் போல் அழகாக உள்ளது விதவிதமான பொம்மைகளை பார்த்து ரசித்தேன்.//

      நன்றி நன்றி.

      //காரின் பின்னாடி எலும்பு கூடு ஏறியபடி செல்லும் படமும் அண்டங்காக்காய் படமும் நன்றாக உள்ளது.//

      மகன் வழியில் பார்த்த காட்சி , நான் மகிழ்வேன் பார்த்து என்று அனுப்பினான்.


      //நிறைய கற்பனைகளுடன் பொம்மைகளை வடிவமைத்து இந்த விழாவை கொண்டாடி வருகிறார்கள் போலும்.//

      ஆமாம். நாம் கொலு பார்க்க வீட்டு வீடாய் போவது போல எல்லோரும் குடும்பத்துடன் வீடு வீடாக வாசலில் வைத்து இருக்கும் காட்சிகளை பார்க்க வருவார்கள். வாசலில் ஒரு பறங்கிகாய் பாத்திரத்தில் மிட்டாய், பிஸ்கட் வைக்க வேண்டும் வருபவர்கள் எடுத்து செல்வார்கள். நாம் நின்றும் கொடுக்கலாம். உற்சாகத்தை, மகிழ்வை கொடுக்க கூடிய பண்டிகைதான் இது.

      எல்லா படங்களையும் ரசித்து கருத்து சொல்லி வாழ்த்துக்களை சொன்னதற்கு நன்றி.
      பிஸ்கட் எடுத்துக் கொண்டது மகிழ்ச்சி.

      நீக்கு
  5. பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல்தனபாலன், வாழ்க வளமுடன்


      அனைத்தையும் ரசித்துப்பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  6. பதில்கள்
    1. இயற்கை சிலந்தி வலை இந்த கால கட்டத்தில் நிறைய இருக்கும் போல அதை வைத்துதான் அவர்கள் செயற்கையாக செய்து விற்கிறார்கள்.

      சிலந்தியின் விடா முயற்சி நம்மை நிறைய சிந்திக்க வைக்கிறது. ஒரு இலை அதன் மேல் விழுந்தாலும் அதன் இழை அறுந்து விடுகிறது, மீண்டும் சில நொடியில் கட்டி விடுகிறது. உணவுக்காக ஒவ்வொரு உயிரும் பாடுபடுவதை நமக்கு விளக்கும் சிலந்தி.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  7. பதில்கள்
    1. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  8. இதற்கு நான் எழுதிய கருத்துரை எங்கே போச்சோ தெரியலை! ஹிஹிஹி! என்ன எழுதி இருந்தேன்னு நினைவில் வரலை. ஆனால் பிஸ்கட்டுகளைப் பத்தி எழுதி இருந்தேன். எலும்புக்கூடுகள் பற்றியும் சொல்லி இருந்தேன். உங்கள் மகள் வீட்டு இயற்கையான சிலந்தி வலை மிக அழகாக உள்ளது. உறுதியாகவும் இருக்கும் போல! எல்லாப் படங்களையும் மறுபடி ஒரு தரம் பார்த்தேன். மகன் அனுப்பிய படத்தையும் உங்கள் சார் இருக்கும் படத்தையும் பார்த்து ரசித்தேன். பழைய நினைவுகள் உங்களைத் துரத்தும் இல்லையா? :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இதற்கு நான் எழுதிய கருத்துரை எங்கே போச்சோ தெரியலை! ஹிஹிஹி! என்ன எழுதி இருந்தேன்னு நினைவில் வரலை///

      வந்து விட்டது உங்கள் கருத்துரை.
      இயற்கையான சிலந்தி வலை உறுதி இல்லை. ஒரு இலை அதன் மேல் விழுந்தாலும் அதன் இழை அறுந்து விடுகிறது, மீண்டும் சில நொடியில் கட்டி விடுகிறது. உணவுக்காக ஒவ்வொரு உயிரும் பாடுபடுவதை நமக்கு விளக்கும் சிலந்தி.
      மரங்கள், சிறு செடிகள் மேல் எல்லாம் கட்டுகிறது. மகள் வீட்டு மரம், செடியில் எடுத்த படம் தான். வெள்ளை துணி கிழித்து இருப்பது போல ஒரு சிலந்தி வலை இருக்கிறது அதை பார்த்துதான் மனிதன் செயற்கை சிலந்தி வலை செய்து செடியின் மேல் போடுகிறான்.

      அந்த மாதிரி சிலந்தி வலையும் ஒரு செடியில் இருந்ததை முகநூலில் போட்டு இருந்தேன். நாம கவனிக்காமல் மரத்தை செடிகளுக்கு இடையே போய் விட முடியாது மரத்திலிருந்து வீடு வரை சிலந்தி வலை பின்னி இருக்கும். சிறிய வண்டு வடிவில் இருக்கிறது.அது கட்டும் வலை வியப்பை தரும். ஓட்டு தையல் போல தன் வலையை சுற்றி போட்டு முடிக்கும் அது அதன் கையெழுத்தாம். நீங்கள் நான் எடுத்த படத்தை மறுபடி பார்த்தால் தெரியும்.

      //மகன் அனுப்பிய படத்தையும் உங்கள் சார் இருக்கும் படத்தையும் பார்த்து ரசித்தேன். பழைய நினைவுகள் உங்களைத் துரத்தும் இல்லையா? :(//

      நினைவுகள்தான் என்னை வாழவைத்து கொண்டு இருக்கிறது. நினைக்காத நேரம் ஏது?

      நினைவிலும், கனவிலும் தொடரும் நினைவுகள். பண்டிகைகள் வந்து விட்டால் மேலும் அதிகமாகி விடும்.

      மீண்டும் படங்களைப் பார்த்து கருத்துகளை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி நன்றி.


      நீக்கு
  9. படங்கள் எல்லாமே வித்தியாசமாக இருக்கின்றன. அழகாகவும் இருக்கின்றன. உங்கள் பேரன் மிகவும் ஸ்மார்ட்டாக இருக்கிறார்.

    எல்லாப்படங்களையும் ரசித்தேன்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துளசிதரன், வாழ்க வளமுடன்


      //படங்கள் எல்லாமே வித்தியாசமாக இருக்கின்றன. அழகாகவும் இருக்கின்றன. உங்கள் பேரன் மிகவும் ஸ்மார்ட்டாக இருக்கிறார்.//

      நன்றி.

      எல்லா படங்களையும் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  10. அன்பின் கோமதி மா,
    வாழ்க வளமுடன்.

    ஹாலோவீன் படங்கள் அத்தனையும் பிரமாதம். ஒவ்வொன்றையும் பொறுமையாக விளக்கத்துடன்
    பதிந்திருக்கிறீர்கள்.
    ட்ரிக் ஆர் ட்ரீட் காண்டீஸ் வாயில் வைத்திருக்கிறது. மற்றபடி
    வேறு அலங்காரங்கள் வைக்க வில்லை.

    பசங்களுக்கு வயதாகி இதில் சுவையும் இல்லை.:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அக்கா, வாழ்க வளமுடன்

      //ஹாலோவீன் படங்கள் அத்தனையும் பிரமாதம். ஒவ்வொன்றையும் பொறுமையாக விளக்கத்துடன்
      பதிந்திருக்கிறீர்கள்.//

      நன்றி அக்கா.

      வரும் குழந்தைகள் ஏமாந்து போகாமல் இருக்க மிட்டாய் வைத்து விட்டீர்கள் அது போதும்.

      நீக்கு
  11. ஆமாம் கோமதிக்கா ஹலோவீன் இறந்தவர்களுக்கு மரியாதை செய்யும் விதமாக...கிட்டத்தட்ட எல்லா ஊர்களிலும் அடிப்படை ஒன்றுதான் கொண்டாட்டங்கள் நிகழ்வுகள் நாட்கள் தான் வித்தியாசப்படுவது போலத் தோன்றும் எனக்கு.

    ஹலோவீன் குழந்தைகள் எல்லாம் பல வித்தியாசமான மாறுவேஷங்களில் வருவார்கள். ரொம்பவும் சுவாரசியமான கொண்டாட்டம்.

    படங்கள் எல்லாம் செம

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்

      //எல்லா ஊர்களிலும் அடிப்படை ஒன்றுதான் கொண்டாட்டங்கள் நிகழ்வுகள் நாட்கள் தான் வித்தியாசப்படுவது போலத் தோன்றும் எனக்கு.//

      ஆமாம் கீதா.


      //ஹலோவீன் குழந்தைகள் எல்லாம் பல வித்தியாசமான மாறுவேஷங்களில் வருவார்கள். ரொம்பவும் சுவாரசியமான கொண்டாட்டம்.//

      ஆமாம், பார்க்கவே நன்றாக இருக்கும். நாங்களும் மகன் வீட்டில் இருக்கும் போது போட்டுக் கொண்டோம் மாறு வேடம்.

      படங்களை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.


      நீக்கு
  12. இயல்பாக கட்டப்பட்டிருக்கும் சிலந்திவலை,
    அற்புதம். வீட்டளவு உயரம் இருக்கும் எலும்புக்கூடு

    ஆச்சரியம்.

    மகள் தருவித்த பிஸ்கட்,குக்கீஸ் அருமையாக இருக்கிறது. நானும் ஒன்று எடுத்துக்
    கொண்டேன்.
    பெரியவன் பள்ளி நாட்களில் பம்ப்கின் பை செய்யச் சொல்லி அவனும் செய்வான்.

    சின்னவனுக்கு இவைகளில் விருப்பம் இல்லை.
    இனி தாங்க்ஸ்கிவிங்க் விற்பனையில்
    நாட்கள் செல்லும்.

    முன்பொரு தடவை ஒரு தோழி 10 டாலருக்கு
    உயந்த டிவி செட் வாங்கினாள்.

    அதிசயங்கள் நிறைந்த நாடு,.
    உங்களுக்கும் ஹாலோவீன் தின வாழ்த்துகள் அம்மா.
    சாரும் , பேரனும் இருக்கும் படங்கள் மிக அருமை.
    நம்மையே பார்ப்பது போல இருக்கிறது.
    பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இயற்கை அமைத்த சிலந்திவலை அழகு.
      வீட்டளவு உயர்ந்த எலும்பு கூடு வியப்பை தந்தது.


      //மகள் தருவித்த பிஸ்கட்,குக்கீஸ் அருமையாக இருக்கிறது. நானும் ஒன்று எடுத்துக்
      கொண்டேன்.//

      நன்றி அக்கா.


      //பெரியவன் பள்ளி நாட்களில் பம்ப்கின் பை செய்யச் சொல்லி அவனும் செய்வான்.//

      ஓ! பரிசு அளிக்க பம்ப்கின் பையா?

      //சின்னவனுக்கு இவைகளில் விருப்பம் இல்லை.//

      ஒவ்வொருவருக்கு ஒவ்வொன்றில் விருப்பம் இருக்கும்.


      //இனி தாங்க்ஸ்கிவிங்க் விற்பனையில்
      நாட்கள் செல்லும்.

      முன்பொரு தடவை ஒரு தோழி 10 டாலருக்கு
      உயந்த டிவி செட் வாங்கினாள்.//


      ஆமாம், முன்பே போய் வரிசையில் நிண்ரு வாங்குவார்கள் என்று மகன் சொல்வான், இப்போது எல்லாம் முன் பதிவு செய்து கொண்டு போய் வாங்கலாம்.
      சார் பார்த்து கொண்டு இருக்கிறார், உடன் இருக்கிறார் என்ற தைரியத்தில் நடமாடுகிறேன்.

      எல்லா படங்களையும் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  13. பாருங்க எலும்புக் கூடானாலும் கூட கை கோர்த்து டான்ஸ்!!!! அவர்களின் கற்பனை செம!!..

    அட! நம்மூர் போல யோகா எல்லாம் செய்வது போல எலும்புக் கூடுகள்!! இதுக்குப் பின்ன ஒரு மெசேஜ் இருப்பது போல் இருக்கிறது நம்மூர் சிந்தனைப்படி...இறந்தபின்பும் முன்வினை.... இறைவனை அடைய முடியலை செய்த பாவங்கள் போக உன்னை நினைத்து தியானிக்கிறேன் அப்படியாச்சும் உங்கிட்ட இடம் கொடுப்பியான்னு கடவுளைக் கேட்கிறார்களோ!!!!! அந்த மூன்றும்..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பாருங்க எலும்புக் கூடானாலும் கூட கை கோர்த்து டான்ஸ்!!!! அவர்களின் கற்பனை செம!!..//


      //நம்மூர் சிந்தனைப்படி...இறந்தபின்பும் முன்வினை.... இறைவனை அடைய முடியலை செய்த பாவங்கள் போக உன்னை நினைத்து தியானிக்கிறேன் அப்படியாச்சும் உங்கிட்ட இடம் கொடுப்பியான்னு கடவுளைக் கேட்கிறார்களோ!!!!! அந்த மூன்றும்..//

      இருக்கலாம். நமக்கும் தியானம் செய்து இறைவனின் காலை பிடித்துக் கொள் மனிதா வாழும் காலத்தில் அப்புறம் இறந்தபின் புலப்பாதே! என்றும் சொல்லுகிறது போல.



      நீக்கு
  14. அவங்களும் ஈவில் நா கறுப்புதான் பார்த்தீங்களாக்கா?!!!
    அந்தக் காக்கா பொம்மை நம்மூர் சனீஸ்வரனோ!! அமெரிக்கா போயிருக்கார் போல. ஹலொவீன் கொண்டாட!!!!

    காத்து கறுப்பு அண்டக் கூடாதுன்னு வாசல்ல பொம்மை போலும்!!! //கேளிக்கை திருவிழாவாக விவசாயிகள் வயல்களில், தீய ஆவிகளை விரட்ட சொக்கபனை கொளுத்துவார்களாம்.//

    ஹாஹாஹா எந்த ஊரும் சளைச்சதில்லை! போட்டி போட்டுக் கொண்டு கார்த்திகை மாதத்தில் நம்மூரிலும் சொக்கப்பானை கொளுத்துவதுண்டு இல்லையா?!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அவங்களும் ஈவில் நா கறுப்புதான் பார்த்தீங்களாக்கா?!!!
      அந்தக் காக்கா பொம்மை நம்மூர் சனீஸ்வரனோ!! அமெரிக்கா போயிருக்கார் போல. ஹலொவீன் கொண்டாட!!!!//

      நல்ல கற்பனை! சனீஸ்வரன் வாகன் அல்லவா காக்கா . சனீஸ்வரனாக மாறி அங்கு போய் இருக்கிறது என்று சொன்னீர்கள் போல!

      //காத்து கறுப்பு அண்டக் கூடாதுன்னு வாசல்ல பொம்மை போலும்!!!//

      அது நாம் வயல்களில் கண்திருஷிக்கு வைக்கும் சோளகொல்லை பொம்மை.

      தீய ஆவிகளை விரட்ட சொக்கபனை.

      கார்த்திகை மாதம் நம் ஊரில் சொக்கபனை உண்டுதான்.
      காரண காரியம் மட்டும் வேறுபடுகிறது.


      நீக்கு
  15. சமத்து மகன்!!! ஹாஹாஹா படம் எடுத்து அனுப்புகிறார் உங்களுக்கு.

    மாமா இருக்கும் ஃபோட்டோ சூப்பர். பாருங்க உங்க கூடத்தான் இருக்காங்க. அக்கா பேரன் உங்கள் ஜாடை போலவே டக்கென்று பார்த்ததும் எனக்கு அப்படித்தான் தோன்றியது கோமதிக்கா..

    மகன் வீட்டு அலங்காரம் அழகு..மகள் வீட்டு மரத்தில் சிலந்தி வலை செம..இயற்கையாகவே அமைந்துவிட்டது.

    பிஸ்கட் நாவில் நீர்!!! அந்த ஊர் பிஸ்கட் ரொம்ப நல்லா இருக்கும். சுவையே வித்தியாசமாக நன்றாக இருக்கும்.

    எல்லாப்படங்களையும் ரசித்தேன் கோமதிக்கா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //சமத்து மகன்!!! ஹாஹாஹா படம் எடுத்து அனுப்புகிறார் உங்களுக்கு.//
      அவன் ரசித்த காட்சியை நானும் ரசிப்பேன் என்று அனுப்பி வைப்பான்.


      //மாமா இருக்கும் ஃபோட்டோ சூப்பர். பாருங்க உங்க கூடத்தான் இருக்காங்க.//

      அது போதும் கீதா , உடன் இருந்து பார்த்து கொள்ளட்டும்.




      // அக்கா பேரன் உங்கள் ஜாடை போலவே டக்கென்று பார்த்ததும் எனக்கு அப்படித்தான் தோன்றியது கோமதிக்கா..//

      ஆமாம் எல்லோரும் அப்படித்தான் சொல்வார்கள். சின்ன வயதில் மகன் இப்படியேதான் இருப்பான்.

      எல்லா படங்களையும் ரசித்தது மகிழ்ச்சி.


      நீக்கு
  16. கோமதிக்கா..

    சென்ற வருடம் இந்த வருடம் எல்லாம் நம்மூரில் கொலுவில் கொரோனா கான்செப்ட் கொலு அமைப்பு இருந்தது போல் கொரோனா பேயும், மாஸ்க் சானிட்டைசர் பயன்படுத்தும் பேய்கள் கூட எதிர்பார்த்தேன் அந்த உருவம் விற்பனைகளில் அல்லது உருவாக்கங்களில் இல்லை போலும்! ஹாஹாஹா!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கொரோனா பேயும், மாஸ்க் சானிட்டைசர் பயன்படுத்தும் பேய்கள் கூட எதிர்பார்த்தேன் அந்த உருவம் விற்பனைகளில் அல்லது உருவாக்கங்களில் இல்லை போலும்! ஹாஹாஹா!!!!//

      நிறை காணொளிகள் வந்து இருக்கிறது. பேரன் கூட ஒரு காணொளி செய்தான் கொரோனா வைரஸை அழிப்பது போல!

      அடுத்த வருடம் கொலுவில் இடபெற்றாலும் இடம் பெறும்.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  17. அழகான படங்கள். அனைத்தையும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்
      அனைத்தையும் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  18. படங்கள் பல கதைகள் பேசுகின்றன. காணத்தந்ததுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  19. படங்கள் பயங்கரமாக இருந்தாலும் ரசிக்கும்படி இருக்கிறது சகோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கு நன்றி

      நீக்கு
  20. இனிய தீப ஒளித்திருநாள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
      வாழ்த்துக்களுக்கு நன்றி

      நீக்கு
  21. உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
      உங்களுக்கு இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.
      எனக்கு அடுத்த வருடம் தீபாவளி. உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

      நீக்கு