புதன், 12 ஜூன், 2024

மலரும் நினைவுகளை தந்த வாழைக்காய் அப்பளம்


வாழைக்காய் அப்பளம்


எங்கள் ப்ளாக் ஸ்ரீராம்  

திங்கள் பதிவுக்கு சமையல் குறிப்பு கேட்டார்கள்


கீதா அக்கா சொல்லி இருப்பது போல உங்களிடமிருந்து கட்டாயம் ஒரு சமையல் குறிப்பு உடனேஎதிர்பார்க்கலாமா? பேராசை எனக்கு!


//உற்சாக மன நிலையில் உணவு சமைத்தபோது படம் எடுத்து குழந்தைகளுக்கு அனுப்புவேன்.//

என்ற என் பின்னூட்டத்தில் போட்டதை வைத்தே என்னை எழுத வைத்து விட்டார் ஸ்ரீராம்.


//இங்கிருக்கும் குழந்தைகளுக்கும் அனுப்பலாமே....! தயிர் சாதம் கூட வித்தியாசமாக செய்திருந்தால் அதைக்கூட அனுப்பலாம். நீங்களோ புகைப்படங்கள் எடுப்பதிலும் மன்னி!//

இப்படி வேறு   கூடை நிறைய ஐஸ் வைத்தால் எழுதாமல் இருக்க முடியுமா?

//திங்கட்கிழமை. "திங்க"ற கிழமை! //  


 திங்கட்கிழமை வெளியாகும் சமையல் பதிவை  பாராட்டி கீதா சாம்பசிவம் அவர்கள்  அழகாய் சொல்லி இருக்கிறார்கள். நீங்கள் எல்லோரும்  படித்து இருப்பீர்கள். அந்த புகழ் பெற்ற திங்கட்கிழமையில் நானும்  இணைவதில் பெருமை கொள்கிறேன்..

இப்படி எழுதி வைத்து பல வருடம் ஆச்சு. எழுதி வைத்ததை மறந்தே விட்டேன்.

நேற்று கொஞ்சம் வாழைக்காய் அப்பளம் மகன் கேட்டான் என்று செய்தேன். அப்போது நான் மாயவரத்தில் இருந்த போது போட்ட பதிவு நினைவுக்கு வந்தது. போட்ட பதிவை தேடி    படித்த போதுதான்  டிராப்பிட்டில் இருந்த இந்த பதிவு கிடைத்தது. அதை இங்கே பகிர்கிறேன் இன்று.

கப்பல் பயண தொடர் அடுத்து வரும்.


 மாயவரத்தில் இருக்கும் போது போட்ட பதிவு இது   வாழைக்காய் அப்பளம்  வியாழன், 21 ம் தேதி (2013 ல்) 
இந்த பதிவின் பின்னூட்டங்களை படித்து பாருங்கள் நிறைய விஷயங்கள், நிறைய பழைய நட்புகள் இருக்கிறார்கள்.
வலைச்சரத்தில் இந்த வாழைக்காய் அப்பளத்தை பகிர்ந்து கொண்டவர்களை   படித்து விட்டு வந்து சொன்னவர்கள் இருக்கிறார்கள்.

திண்டுக்கல் தனபாலன் அவர்கள் வலைச்சரத்தில் என் பதிவை யாராவது பகிர்ந்து கொண்டால் முதலில் வந்து சொல்வார்.
மீண்டும் எழுத வர வேண்டும் அவர்.


இன்று போட்ட பதிவு ஸ்ரீராம் திங்கள் பதிவுக்கு வாழைக்காய் அப்பளம் சமையல் குறிப்பு  அனுப்பிய பின்  எழுதி வைத்து இருந்த  பதிவு . மதுரை வீட்டில் போட்ட வாழைக்காய் அப்பளம் பதிவு.

இரண்டு பதிவுகளுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது படித்து விட்டு சொல்லுங்கள். 6 வித்தியாசம் கண்டு பிடிக்கலாம்.

இன்னும் ஸ்ரீராம் தளத்தில் திங்கள் கிழமை பகிர்ந்த பகிர்வு படித்தால்   இன்னும் நிறைய வித்தியாசங்கள் கண்டு பிடிக்கலாம்.

எங்கள் ப்ளாகில் போட்ட பதிவை கண்டு பிடித்து போட்டு விட்டேன் 

பழைய நினைவுகளை பகிர்ந்து கைபட  எழுதி வைத்த  குறிப்புகளையும் போட்டோ  எடுத்து போட்ட நீண்ட பதிவாக இருக்கும். நிறுத்தி நிதானமாக எழுதினால் நன்றாக இருக்கும். வேக வேகமாய் சின்ன வயதில் எழுதிய கிறுக்கல் எழுத்து அது.

பானுமதி அவர்களின் பின்னூட்டம் கூட நினைவு இருக்கிறது.
அவர் சுருங்க சொல்வார்.  குடும்ப பதிவு என்று சொன்னார். மார்க் எல்லாம் கொடுத்தார்.

இப்போது மீண்டும் படித்தேன் அதிரா, ஏஞ்சல்  இருவரும்  மகிழ்ச்சியாக உரையாடியதும்,   எல்லோரும் பாராட்டியதை படிக்கும் போது மகிழ்ச்சியாக இருந்தது.



இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் சமையல் குறிப்பு வாழைக்காய் அப்பளம்


இனி வாழைக்காய் அப்பள குறிப்பை பார்க்கலாம்:-


உங்களுக்கு எல்லாம் தெரிந்த சமையல் குறிப்பாக இருக்கலாம். 

சர்க்குலேசன் புத்தகங்கள் வாங்கிக் கொண்டு இருந்த காலம் .
நான் மாத இதழ், வார இதழ் ஆகியவற்றில் வரும் சமையல் குறிப்புகளை அவசர அவசரமாய் எழுதி வைத்துக் கொண்டு  மறுநாள் கொடுத்து விடுவேன் புத்தகத்தை.  

இப்படி பதிவு எழுதுவேன் என்று தெரிந்து இருந்தால் எந்த பத்திரிக்கையில் வந்தது, எழுதியவர் பெயர் எல்லாம் எழுதி வைத்து இருப்பேன்.  மஞ்சரி புத்தகத்தில் வந்தது என்று நினைக்கிறேன்.

   
மாசி மாதம் வத்தல் வடகம் போட ஆரம்பித்து சித்திரைக்குள் முடித்து விடுவார்கள் . சித்திரை வத்தல் சிவந்து விடும் என்பார்கள். இந்த வாழைக்காய் அப்பளம், இலைவடாம் எல்லாம் எப்போதும் போடலாம்.

அதுவும் கிராமத்தில்( திருவெண்காடு) இருக்கும் போது  எங்கள் வீட்டுக்கார அம்மா அவர்கள் வாழைக்காய் காய்த்த போதெல்லாம் தருவார்கள். அக்கம் பக்கத்து    வீடுகளிலிருந்து வேறு  கொடுப்பார்கள். மாயவரத்தில் இருந்த போதும் வாழைக்காய் பஞ்சமில்லாமல் கிடைக்கும். 

நான் எழுதி வைத்து இருந்த 'வாழைக்காய் அப்பளம்' குறிப்பை இங்கு  கொடுத்து இருக்கிறேன். 

என் அனுபவத்தில்  வாழைக்காய் மிகவும் முற்றலாக இருக்கக் கூடாது, பிஞ்சாகவும் இருக்கக் கூடாது. நடுத்தரமாய் இருக்க வேண்டும். அப்போதுதான் நன்றாக இருக்கும் அப்பளம்.


எல்லாக் காலங்களிலும் வாழைக்காய் கிடைக்கும்.   அக்னி நட்சத்திரம் ஆரம்பித்து விட்டது, வத்தல் வடகம் போட மாட்டார்கள், ஆனால் வாழைக்காய் அப்பளம் போடலாம். 


ஜன்னல் வழியே பறவைகளை  பார்த்தீர்கள் !  வாழைக்காய் அப்பளம்  காய்வதைப் பாருங்கள்.எங்கள் வீட்டுப் பால்கனிக்கு வெயில் 12 மணிக்கு மேல் தான் வரும், மாலை 3.30 வரை இருக்கும் அதில் காய வைத்து எடுத்தேன். கொடிக் கம்பியில்  துணியைக் கட்டி காய வைத்து எடுத்தேன்.


வீட்டுக்குள்  3.30 மணி வரை வெயில் இருக்கும்

என் மகனிடம் ,"கூழ் வத்தல் சித்தி, அத்தை எல்லாம் போட்டு கொடுத்து இருக்கிறார்கள் அனுப்பி வைக்கிறேன்" என்றேன். அதற்கு," அம்மா! உங்களுக்கு  முடிந்தால்  வாழைக்காய் அப்பளம் செய்து அனுப்புங்கள்" என்றான். இப்படிக் கேட்கும்போது செய்யாமல் இருக்க முடியுமா? கொஞ்சம் கொஞ்சமாக மூன்று நாள் போட்டு எடுத்து வைத்து விட்டேன். அனுப்ப வேண்டும்.


சோம்பிக் கிடக்கும் உடல். குழந்தைகள் ஆசைப்பட்டால் சுறுசுறுப்பாய் செயல் படுகிறது. என் கணவருக்கும்  வாழைக்காய் அப்பளம் பிடிக்கும்.







கொஞ்சம் காரம் - கொஞ்சம் காரம் குறைச்சலாக -என்று போட்டு செய்து இருக்கிறேன்.




தேவையான பொருட்கள் 6 என்று சொல்லி விட்டு இரண்டு வாழைக்காய் படம் போட்டு இருக்கிறீர்கள் என்று கேட்க வேண்டாம்  வீட்டில் இருந்த காயைப் படம் எடுத்துப் போட்டு இருக்கிறேன் .

வாழைக்காய் அப்பளத்திற்குத்  தேவையான பொருட்கள்:-
வாழைக்காய் பெரியது  6

பச்சைமிளகாய் -6  காரம் வேண்டுமென்பவர்கள் அப்படியே 6 போட்டுக் கொள்ளலாம். காரம் குறைச்சலாகப் போதும் என்பவர்கள் 4 போட்டால் போதும்.


உப்பு, பெருங்காயம் தேவையான அளவு  போட்டுக் கொள்ளலாம்.

உப்பு வாழைக்காயில் இயற்கையாக இருக்கும், அதனால் கொஞ்சம் குறைத்தே போட்டுக் கொள்ளலாம். பெருங்காயம் சிலருக்குப் பிடிக்காது, அதனால்.   அது மட்டும் அல்ல நிறைய போட்டாலும் நன்றாக இருக்காது. நான் சின்ன ஸ்பூனால் ஒரு ஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்த்தேன்.

வாழைக்காய் குக்கரில் வேக வைத்தால் கலர் வெள்ளையாக இருக்காது அதனால் ஒரு வாயகன்ற பாத்திரத்தில் வாழைக்காயைத் தோலுடன் வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். தோலை உரித்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

 உப்பு, பெருங்காயம், பச்சைமிளகாய் இவற்றை மிக்ஸியில் அரைத்து எடுத்து க்கொள்ளலாம்.

இளஞ்சூட்டில் இருக்கும் போதே வாழைக்காயை பச்சைமிளகாய் , உப்பு, பெருங்காயம் அரைத்த விழுதைச் சேர்த்து மிக்ஸியில் ஒரு ஓட்டு ஓட்டினால் மசிந்து விடும். கையால் பிசைந்தால் கூட போதும்.

காரட் சீவும் கட்டையில் துறுவி கொண்டு கையால் நொறுங்க பிசைந்து விடலாம்.

(மிக்சியில் அரைக்கும் போது   கவனம் தேவை நன்றாக மையாக அரைத்து விட கூடாது. ). வாழைக்காய்  கலவையை  உருண்டையாக   உருட்டிக் கொண்டு அப்பள பலகையில்  இரண்டு ஷீட்டுகளுக்கு நடுவில் வைத்து  அப்பளக் குழவியால்  தேய்த்துக் கொள்ளலாம். நான் பெரிதாக ஷீட்டுகள் வைத்து பெரிதாக அப்பளம் தேய்த்துக்  கொண்டு பின் காப்பி  பில்டர் மூடியால் வட்டமாக வெட்டி எடுத்துக் கொண்டேன். அப்புறம் காய வைக்க வேண்டியது தான். மூன்று நாள் காய்ந்தால் போதும்.

மொட்டை மாடி என்றால் இரண்டு நாள் போதும். எங்கள் வீடு   பால்கனி போல  என்றால் மூன்று நாள் வேண்டும்.

சிறு சமையல் குறிப்பு:-

வாழைக்காய்த்  தோலை வீணாக்காமல் அதைச் சிறு சிறு துண்டாக வெட்டிக் கொண்டு கொஞ்சம் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் போட்டுப் பிசறிக் கொண்டு அதை கடுகு உளுத்தம்பருப்பு போட்டுத் தாளித்து கீழே  இறக்கும் போது தேங்காய் துருவல் கலந்து இறக்கினால் சத்து மிகுந்த  வாழைக்காய் தோல் பொரியல் (துவரம் ) கிடைக்கும். 

//நெல்லைச் சிறப்புச் சமையல்கள் நிறையத் தெரிந்து வைத்திருப்பீர்கள். 
அவற்றைப் பகிரலாம். //

இப்படி பின்னூட்டத்தில் கீதா சாம்பசிவம் நெல்லை சமையல் குறிப்பு கேட்டார்கள் இந்த துவரம் நெல்லை சமையல் குறிப்புதான்.

இப்படி கீதா சாம்பசிவம் அவர்கள் முன் போல கல கலப்பாக பதிவு உலகம் வர வேண்டும்.


முன்னாள் பாரதபிரதமர் இந்திராகாந்தி அவர்களுக்கு எழுத்தாளர் சிவசங்கரி அவர்கள் சத்து மிகுந்த வாழைக்காய் தோல் சமையலைப் பற்றி சொன்னார்கள் என்று படித்த நினைவு இருக்கிறது. (சிவசங்கரி பாரதபிரதமரை நேர்காணல் நிகழச்சி பற்றி விகடனில் வந்த போது படித்தது.)




இந்த படம்  எங்கள் ப்ளாக்  பதிவுக்கு வரைந்து தந்தது


அப்பளம் செய்து அதை வட்டமாக  மூடி வைத்து வெட்டும் வேலையை மகன் செய்கிறேன் என்பான்.


சிறு வயதில் என் மகன் என்னுடன் சேர்ந்து "நான் வெட்டித் தருகிறேன் அம்மா" என்று உற்சாகமாய்ச் செய்வான், அவன் செய்ததைப் பெருமையாக "நான் வெட்டினேன் எப்படி இருக்கு?" என்று அவன் அப்பாவிடம் கேட்பான்.

அதை என் கணவரிடம் சொல்லி வரைந்து தரச் சொன்னேன். ஒரு மணி நேரத்தில் இந்தப் படத்தை வரைந்து தந்தார்கள்.

எழுத்து வேலைகளுக்கு இடையில் எனக்கு வரைந்து தந்தார்கள். ஸ்ரீராம் "சார் படம் வந்து மிகவும் நாளாச்சு" என்று கேட்டார் என்றதும் மகிழ்ச்சியாக படம் உருவானது.

ஏதோ எனக்குத் தெரிந்த முறையில் சமையல் குறிப்பு எழுதி இருக்கிறேன்.உடனே செய்வது போல் இல்லையே என்று கேட்காதீர்கள்.  ஸ்ரீராம் உடனே அனுப்பச் சொன்னார். கைவசம் படங்கள் உள்ள சமையல் குறிப்பு  இதுதான்.


ஏதோ நினைவுகள் மனதிலே மலருதே பதிவில் கணவர் வரைந்த படங்கள் இடம்பெற்றது அதில் இந்த படம் பார்த்து இருப்பீர்கள். 


இந்த பதிவை போட காரணம் மகன் வீட்டில் நேற்று போட்ட வாழைக்காய் அப்பளம்.

வாழைக்காயை  காரட் சீவியில் ("புட்டு சீவி" திருநெல்வேலி பக்கம்   அப்படித்தான் சொல்வோம் ) சீவி எடுத்து கொண்டு  கையால் பிசைந்து செய்தேன்.





வெயில் நன்றாக அடிக்கிறது. ஊரிலிருந்து நிறைய கூழ் வற்றல் வாங்கி வந்து விட்டேன்.  இல்லையென்றால் போடலாம். சம்பந்தி அவர்கள் கொத்தவரங்காய் வற்றல் போடலாம் என்றார்கள் வாங்கி போட வேண்டும்.


திங்கள், 16 ஜூலை, 2012

குண்டுக் காக்கா கதை கொத்தவரக்காய் வற்றல் என்றதும் என் கணவர் குழந்தைகளுக்கு சொல்லும் கதை நினைவுக்கு வந்து விட்டது அந்த பதிவு. "படித்த நினைவு இருக்கா என்று படித்து பாருங்கள்." கொத்தவரக்காய் வற்றல் பெருமை தெரியும். 



வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!

-----------------------------------------------------------------------------------------=======

41 கருத்துகள்:

  1. இதை எங்கள் பிளாக்கில் வெளியிட்ட தேதி என்ன என்று பார்க்க வேண்டும்! இங்கு சுட்டி தரவில்லை போல... நான்தான் கவனிக்கவில்லையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

      //இதை எங்கள் பிளாக்கில் வெளியிட்ட தேதி என்ன என்று பார்க்க வேண்டும்! இங்கு சுட்டி தரவில்லை போல... நான்தான் கவனிக்கவில்லையா?//

      உடனே பதிவு போட எழுதி வைத்து இருக்கிறேன், ஆனால் போட முடியாமல் போய் இருக்கிறது. போட்டு இருந்தால் சுட்டி கொடுத்து இருப்பேன்.

      //இன்னும் ஸ்ரீராம் தளத்தில் திங்கள் கிழமை பகிர்ந்த பகிர்வு படித்தால் இன்னும் நிறைய வித்தியாசங்கள் கண்டு பிடிக்கலாம்.//

      கிடைத்து இருந்தால் இப்படி போட்டு இருக்க மாட்டேன் ஸ்ரீராம். சுட்டி கொடுத்து இருப்பேன். ஜனவரி மாதம் 11 ம்தேதி என்று டிராப்ட் சொல்கிறது வருஷம் காணோம்.

      நீக்கு
    2. ஸ்ரீராம் உங்கள் தளத்தில் என் பதிவை கண்டு பிடித்து போட்டு விட்டேன்
      இப்போதுதான் பார்த்தேன் 183 பின்னூட்டங்கள் வந்து இருக்கிறது.
      மகிழ்ச்சியாக இருக்கிறது. நன்றி.

      நீக்கு
  2. பழைய பதிவுகளுக்கு சென்று நானும் பழைய நினைவுகளில் ஆழ்ந்தேன். எவ்வளவு பதிவர்கள் இந்நாளில் எழுதவில்லை? ஆளையே காணோம்? முகநூலில் பிசியாகி விட்டார்கள் சிலர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பழைய பதிவுகளுக்கு சென்று நானும் பழைய நினைவுகளில் ஆழ்ந்தேன். எவ்வளவு பதிவர்கள் இந்நாளில் எழுதவில்லை? ஆளையே காணோம்? முகநூலில் பிசியாகி விட்டார்கள் சிலர்//

      ஆமாம். பாட்டிக்கு எப்போதும் பழைய நினைப்பு தான் என்பது போல பழைய பதிவுகளை படித்து பார்ப்பேன். அப்போது எப்படி இருந்தது பதிவுலகம் என்று மனதில் நினைத்து கொள்வேன்.
      என் பதிவையும் இவ்வளவு பேர் விரும்பி படித்து இருக்கிறார்களே என்று மகிழ்ச்சியாகும் மனது.

      நீக்கு
  3. ஸார் வரைந்த ஓவியம் எவ்வளவு பொருத்தமாய், அழகாய் இருக்கிறது...   இன்றும் வியந்து போகிறேன்.  பழைய நினைவுகளால் இப்போது மகன் வீட்டில் வாழைக்காய் வத்தலா?  அங்கு வாழைக்காய் வத்தல் போட்டதால் பழைய நினைவுகளா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஸார் வரைந்த ஓவியம் எவ்வளவு பொருத்தமாய், அழகாய் இருக்கிறது... இன்றும் வியந்து போகிறேன்.//

      நீங்கள் ஸாரின் படத்துக்கு ரசிகர் ஆச்சே!
      எல்லா பதிவுகளுக்கும் படம் வரைந்து தர சொல்லி கேட்டு இருந்தால் வரைந்து தந்து இருப்பார்கள். அவர்கள் வேறு சிந்தனையில் இருக்கும் போது(புத்தகம் எழுதி கொண்டு இருந்தார்கள்) இடையூறு செய்ய வேண்டாம் என்று உங்களை போல யாராவது "சார் படம் வந்து நாள் ஆச்சே ! "என்று கேட்டால் கேட்பேன் வரைந்து தருவார்கள்

      வை. கோபால கிருஷ்ணன்ஸார், ராமலக்ஷ்மி, தருமி சார் எல்லாம் கேட்பார்கள்.

      தருமி சார் "தலையை ஓவியத்திற்கு தனி தளம் அமைத்து வரைய சொல்லுங்கள் என்றார்."

      //பழைய நினைவுகளால் இப்போது மகன் வீட்டில் வாழைக்காய் வத்தலா? அங்கு வாழைக்காய் வத்தல் போட்டதால் பழைய நினைவுகளா?//

      மதியம் சாப்பிடும் போது வத்தல் வறுத்து இருந்தோம் அப்போது வத்தல் போட்ட காலங்களை பற்றி பேச்சு வந்தது மகன் வாழைக்கய் வத்தல் போடலாம் இல்லையா இப்போது என்று கேட்டான். உடனே மருமகள் மூன்று வாழைக்காய் இருக்கிறது அத்தை போடுங்கள் என்றாள் போட்டு விட்டேன்.
      அதனால் உங்கள் தளத்திற்கு வாழைக்காய் அப்பளம் சமையல் குறிப்புகள் கொடுத்தது மற்றும் பழைய நினைவுகளை மகனிடம் பகிர்ந்து கொண்டேன். அதனால் பழைய பதிவை படிக்க போய்
      இந்த வெளியிடாத பதிவு கிடைத்தது. அதனால் இந்த பகிர்வு.

      நீக்கு
    2. // தருமி சார் "தலையை ஓவியத்திற்கு தனி தளம் அமைத்து வரைய சொல்லுங்கள் என்றார்." //

      தனி கவனம் எடுத்திருக்கிறார் என்று நினைக்கிறேன். அவர் வரைந்திருக்கும் நீங்களும், மகனும் சாயல் ஒத்துப் போகிறது. இப்படி தோன்றுவது எனக்கு மட்டும்தானா, தெரியவில்லை.

      நீக்கு
    3. //தனி கவனம் எடுத்திருக்கிறார் என்று நினைக்கிறேன். அவர் வரைந்திருக்கும் நீங்களும், மகனும் சாயல் ஒத்துப் போகிறது. இப்படி தோன்றுவது எனக்கு மட்டும்தானா, தெரியவில்லை.//

      கமலா ஹரிஹரன் சொல்லி இருக்கிறார். "ஏதோ நினைவுகள் மனதிலே மலருதே!" என்ற பதிவில்.

      //உங்கள் கணவர் வரைந்த படமொன்றை நீங்கள் முன்பே ஒரு பதிவில் பகிர்ந்திருந்தீர்கள். அச்சு அசல் உங்களைப்போலவே வரைந்துள்ளார். அப்பளத்தை காத்திருந்து கொத்த வரும் காகத்துடன் நல்ல கற்பனை கலந்த படம் அது. எல்லா படங்களும் அருமையாக உள்ளது.//

      மீண்டும் வந்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  4. DD வீட்டு விசேஷங்களில் மும்முரம்.  பதிவுலகுக்கு ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு மேல் இடைவெளி விட்டவர்கள் அப்படியே விட்டு விடுகிறார்கள்.  சுவாரஸ்யம் போய்விடுகிறது போலும்.  வல்லிம்மா, கீதாக்கா (ஆம், அக்கா பழைய உற்சாகத்துடன் மீண்டும் வரவேண்டும்) வைகோ ஸார், ஹுஸைனம்மா, ஜலீலா கமால், ஸாதிகா, லட்சுமி அம்மா....  DD அப்படி விட மாட்டார் என்றே நம்புகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. DD வீட்டு விசேஷங்களில் மும்முரம்.//
      10 தேதி சிறப்பாக நடந்து இருக்கும் புதுமனை புகு விழா
      இனி வருவார் என்று நம்புவோம்.

      பதிவுலகுக்கு ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு மேல் இடைவெளி விட்டவர்கள் அப்படியே விட்டு விடுகிறார்கள் வை.கோ சார் வர விருப்பம் இல்லை என்றே சொல்லி விட்டார்கள் .
      ஹூஸைனம்மா ஜலீலா, ஆசியா, அமைதிசாரல், ஸாதிகா எல்லாம் முகநூலில் எழுதுகிறார்கள் . இப்போது வல்லி அக்காவும் அங்கு பார்க்க முடிகிறது. கீதா சாம்பசிவம் ஸார் நலம் பெற்றவுடன் வருவார்கள் என்று நம்புவோம்.
      லட்சுமி அம்மா எப்படி இருக்கிறார்கள் என்று தெரியவில்லை, முன்பு அமைதி சாரலிடம் கேட்டபோது மகனோ, மகளோ வீட்டில் இருக்கிறார்கள் என்றார்கள்.

      நீக்கு
  5. குண்டு காக்கா கதையும் சென்று வந்தேன். கதை சொல்லி 7 வருடங்களுக்குப் பிறகு நான் கேட்டிருக்கிறேன் / படித்திருக்கிறேன் என்று தெரிந்தது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //குண்டு காக்கா கதையும் சென்று வந்தேன். கதை சொல்லி 7 வருடங்களுக்குப் பிறகு நான் கேட்டிருக்கிறேன் / படித்திருக்கிறேன் என்று தெரிந்தது!//

      பழைய பதிவுகளையும் போய் பார்த்து படித்து கருத்துக்கள் சொன்னதற்கு மிகவும் நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  6. வாழைக்காய் வற்றல் பற்றி தற்போதுதான் வாசிக்கிறேன். புதிதாக இருக்கிறது. இம்முறையில் சேனை வற்றலும் செய்யலாம் என்று தோன்றுகிறது.
    படம் தத்ரூபமாக இருக்கிறது. இம்முறையில் பத்திரிக்கைகளுக்கு கார்ட்டூன் வரைந்திருக்கலாம்.
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஜெயக்குமார் சந்திர சேகரன் சார், வாழ்க வளமுடன்

      //வாழைக்காய் வற்றல் பற்றி தற்போதுதான் வாசிக்கிறேன். புதிதாக இருக்கிறது. இம்முறையில் சேனை வற்றலும் செய்யலாம் என்று தோன்றுகிறது.//

      சேனையிலும் செய்து இருக்கிறேன் இரண்டு மூன்று தடவை அதை படம் எடுக்கவில்லை.

      //படம் தத்ரூபமாக இருக்கிறது. இம்முறையில் பத்திரிக்கைகளுக்கு கார்ட்டூன் வரைந்திருக்கலாம்.//

      ஆமாம் , வரைந்து இருக்கலாம். அவர்கள் படிப்பது, எழுதுவது என்று மட்டும் தன் பொழுதுகளை கழித்தார்கள் .
      உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  7. படங்கள் சிறப்பாக வந்து இருக்கிறது.

    பழைய சுட்டிக்கு சென்று வந்தேன்.

    வடகம் காயப்போடும் ஓவியம் அருமையாக உள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

      //படங்கள் சிறப்பாக வந்து இருக்கிறது.

      பழைய சுட்டிக்கு சென்று வந்தேன்.//

      பழைய பதிவை படித்து அங்கு பின்னூட்டம் அளித்தமைக்கு நன்றி.நன்றி ஜி

      //வடகம் காயப்போடும் ஓவியம் அருமையாக உள்ளது.//

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  8. வாழைக்காய் அப்பளம்... ஆஹா

    நானும் செய்துபார்த்துவிட வேண்டியதுதான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்
      கப்பல் தொடர் பதிவுக்கு வரவில்லையே !

      //வாழைக்காய் அப்பளம்... ஆஹா

      நானும் செய்துபார்த்துவிட வேண்டியதுதான்//

      மிகவும் எளிது செய்து விடுவீர்கள் நீங்கள்.

      நீக்கு
  9. சார் வரைந்த படம் அழகு. நினைவை எங்கோ இழுத்துக்கொண்டு செல்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //சார் வரைந்த படம் அழகு.//
      நன்றி.

      //நினைவை எங்கோ இழுத்துக்கொண்டு செல்கிறது//

      ஆமாம், படத்தை பார்த்ததும் பழைய நினைவுகள் வந்து கொண்டே இருக்கிறது.
      எங்கள் ப்ளாக் , மற்றும் பழைய பதிவு மாயவரம் பதிவு, குண்டு காக்கா கதை பதிவு ப்டித்தீர்களா?

      நீக்கு
  10. அப்பளம் பொரித்தபின் மரச்சீனி அப்பளம், உருளைக்கிழங்கு அப்பளம் போல இருக்கும் என நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அப்பளம் பொரித்தபின் மரச்சீனி அப்பளம், உருளைக்கிழங்கு அப்பளம் போல இருக்கும் என நினைக்கிறேன்.//

      இல்லை வாழைக்காய் சுவை மாறாது கொஞ்சம் தட்டை மாதிரி கனமாக இருக்கும் மரச்சீனி அப்பளம், உருளை கிழங்கு அப்பளம் எல்லாம் லேசாக இருக்கும்.

      உங்கள் கருத்துக்களூக்கு நன்றி.

      நீக்கு
  11. அருமை..
    வாழைக்காய் அப்பளம்... புதுமையான குறிப்பு..

    வீட்டில் செய்து பார்க்கச் சொல்கிறேன்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்

      //அருமை..
      வாழைக்காய் அப்பளம்... புதுமையான குறிப்பு..

      வீட்டில் செய்து பார்க்கச் சொல்கிறேன்..//
      அவர்களுக்கு தெரிந்த குறிப்பாக இருக்கலாம்.

      //நலம் வாழ்க..//

      உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

      நீக்கு
  12. கோமதிக்க நல்ல நினைவலைகள். உங் கள் குறிப்பை எபியிலும் பார்த்து கருத்து சொல்லியிருந தேன். என் அம்மாவும் செய்தது குறித்து சொன்ன நினைவு. அம்மா சிவப்பு மிளகாய் அரைத்துப் போட்டும் செய்வார்.

    மாமா வரைந த இ ந் தப்படமும் பார்த்திருக்கிறேன் எனக்கும் நினைவுகள் வருகிறது!!!!!

    மகனுக்கு ரொம்பப் பிடிக்கும். நான், மகனுக்கும் உங்கள் குறிப்பைப் பார்த்து செய்து அனுப்பினேன். ப மி போட்டு. என் அம்மா செய்வது போன்று சி மி போட்டும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதாரெங்கன், வாழ்க வளமுடன்

      //கோமதிக்க நல்ல நினைவலைகள். உங் கள் குறிப்பை எபியிலும் பார்த்து கருத்து சொல்லியிருந தேன். என் அம்மாவும் செய்தது குறித்து சொன்ன நினைவு. அம்மா சிவப்பு மிளகாய் அரைத்துப் போட்டும் செய்வார்.//

      ஆமாம். கீதா நீங்கள் உங்கள் அம்மாசெய்வது பற்றி சொல்லி இருந்தீர்கள்.

      //மாமா வரைந த இ ந் தப்படமும் பார்த்திருக்கிறேன் எனக்கும் நினைவுகள் வருகிறது!!!!!//

      ஆமாம், அதுதான் பழைய சுட்டி கொடுத்து இருக்கிறேன். மாயவரத்தில் இருக்கும் போது செய்த அப்பள சுட்டியும் கொடுத்து இருக்கிறேன். அந்த வீட்டு மொட்டை மாடிதான் மாமா வரைந்த படம்.

      //மகனுக்கு ரொம்பப் பிடிக்கும். நான், மகனுக்கும் உங்கள் குறிப்பைப் பார்த்து செய்து அனுப்பினேன். ப மி போட்டு. என் அம்மா செய்வது போன்று சி மி போட்டும்.//

      நல்லது கீதா. மகனுக்கு நீங்கள் என்ன செய்தாலும் பிடிக்கும்.

      நீக்கு
  13. அம்மா கூழ் அப்பளம் மரச்சீனிக் கிழங்கு அப்பளம் செய்வது போன்றும் செய்ததை நானும் தெரி ந் து கொண்டு செய்திருக்கிறேன்.

    ஆமாம் அக்கா, பிள்ளைகள் கேட்டால் நாம் சுறு சுறுப்பாகிடுவோம். அதைப் போன்ற ஒரு மகிழ்ச்சி வேறு என்ன உண்டு!! மகனிடம் கேட்டுக் கொண்டே இருக்கிறேன். என்ன வேணும் சொல்லுடா என்று. அவன் நீ இங்கு வரப் பாரு. வரப்ப செய்து கொடு என்கிறான்.

    இங்கும் வெயில் உங்கள் பால்கனி போலதான்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அம்மா கூழ் அப்பளம் மரச்சீனிக் கிழங்கு அப்பளம் செய்வது போன்றும் செய்ததை நானும் தெரி ந் து கொண்டு செய்திருக்கிறேன்.//

      நீங்கள் எல்லாம் செய்து இருப்பீர்கள் கீதா. அதுதான் உங்களுக்கு எல்லாம் தெரிந்த சமையல் குறிப்பு என்றேன்.

      //ஆமாம் அக்கா, பிள்ளைகள் கேட்டால் நாம் சுறு சுறுப்பாகிடுவோம். அதைப் போன்ற ஒரு மகிழ்ச்சி வேறு என்ன உண்டு!! மகனிடம் கேட்டுக் கொண்டே இருக்கிறேன். என்ன வேணும் சொல்லுடா என்று. அவன் நீ இங்கு வரப் பாரு. வரப்ப செய்து கொடு என்கிறான்.//

      ஆமாம், நீங்கள் அங்கு போய் வாங்க. மகன் விருப்பமானதை செய்து கொடுங்கள்

      //இங்கும் வெயில் உங்கள் பால்கனி போலதான்.//

      ஆமாம், வெயில் இல்லையென்றால் வத்தல் போடுவது கஷ்டம் தான்.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி கீதா.

      நீக்கு
  14. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. வாழைக்காய் அப்பளம் செய்முறை நன்றாக உள்ளது. நீங்கள் எ. பியில் திங்கள் பதிவாக இதை பகிர்ந்ததும் நினைவில் உள்ளது. அதற்கு நாங்கள் அனைவரும் அருமையென பாராட்டி, இந்த வாழைக்காய் அப்பளம் செய்முறையையும் கற்று கொண்டோம்.

    தங்கள் மலரும் நினைவாக இன்று தங்கள் பதிவில் வந்த அப்பளம் செய்முறை படங்களும், நீங்கள் மாடியில் வத்தல் வடாம் காய வைப்பது, அருகில் உங்கள் மகன் உதவிக்கென இருப்பது போல தங்களின் கணவர் வரைந்த ஓவியமும் மிக நன்றாக உள்ளது. உங்கள் கணவர் வரைந்த இந்த ஓவியம் மிக தத்ரூபமாக அமைந்துள்ளது. எபியிலும் இந்தப் பதிவுக்கு இந்தப் படத்தை பகிர்ந்திருந்தீர்களோ?

    குண்டு காக்கா சுட்டிக்கும் சென்று கதை படித்து வந்தேன். மிக அருமையாக எழுதியிருக்கிறீர்கள். அருமையான கதைகளும் எழுதுவதில் உங்களுக்கு நல்ல தேர்ச்சி உள்ளது. நீங்களும் உங்கள கற்பனைக்கேற்றவாறு கதைகளை எழுதலாம். படிக்க நாங்கள் அனைவரும் காத்திருக்கிறோம். வாழ்த்துகள் சகோதரி.

    எனக்கு ஒரு வாரமாக மகன் வந்திருப்பதால், ஏதேதோ வேலைகள் பகல் முழுவதும் சரியாக உள்ளது. முன்பு போல பதிவுகளுக்கு வர இயலவில்லை. இரவு படுக்கும் முன் வரலாம் என நினைப்பேன். ஆனால் உடல் அசதியில் உறக்கம் வந்து விடுகிறது. உங்களின் சென்ற பதிவுக்கும் பிறகு வருகிறேன். எபியிலும் உங்கள் கருத்துக்கு பதிலாக என் தாமதத்திற்கு காரணத்தை சொல்லியுள்ளேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்

      //பதிவு அருமை. வாழைக்காய் அப்பளம் செய்முறை நன்றாக உள்ளது. நீங்கள் எ. பியில் திங்கள் பதிவாக இதை பகிர்ந்ததும் நினைவில் உள்ளது. அதற்கு நாங்கள் அனைவரும் அருமையென பாராட்டி, இந்த வாழைக்காய் அப்பளம் செய்முறையையும் கற்று கொண்டோம்.//

      ஆமாம். அங்கு போட்டதுதான். மாயவரத்தில் போட்டது வேறு மாதிரி இருக்கும். எங்கள் ப்ளாக்கில் போட்டதை சொல்ல என் தளத்தில் எழுதி வைத்தது. இந்த பதிவு . இங்கு மகன் வீட்டில் போட்டதும் பழைய பதிவை படிக்க தேடிய போது இந்த பதிவு பப்ளிஸ் செய்யாமல் இருந்தது பார்த்தேன். இப்போது மகன் வீட்டில் போட்ட வத்தல் படங்களை போட்டு போட்டு விட்டேன்.

      //தங்கள் மலரும் நினைவாக இன்று தங்கள் பதிவில் வந்த அப்பளம் செய்முறை படங்களும், நீங்கள் மாடியில் வத்தல் வடாம் காய வைப்பது, அருகில் உங்கள் மகன் உதவிக்கென இருப்பது போல தங்களின் கணவர் வரைந்த ஓவியமும் மிக நன்றாக உள்ளது. உங்கள் கணவர் வரைந்த இந்த ஓவியம் மிக தத்ரூபமாக அமைந்துள்ளது. எபியிலும் இந்தப் பதிவுக்கு இந்தப் படத்தை பகிர்ந்திருந்தீர்களோ?//

      கணவரின் படத்தைப்பார்த்து தாங்கள் அளித்த பின்னூட்டத்தை ஸ்ரீராமுக்கு சொல்லி இருக்கிறேன் பாருங்கள் மேலே.
      ஸ்ரீராம் கேட்ட கேல்விக்கு உங்களை சொல்லி இருக்கிறேன்.

      //குண்டு காக்கா சுட்டிக்கும் சென்று கதை படித்து வந்தேன். மிக அருமையாக எழுதியிருக்கிறீர்கள். அருமையான கதைகளும் எழுதுவதில் உங்களுக்கு நல்ல தேர்ச்சி உள்ளது. நீங்களும் உங்கள கற்பனைக்கேற்றவாறு கதைகளை எழுதலாம். படிக்க நாங்கள் அனைவரும் காத்திருக்கிறோம். வாழ்த்துகள் சகோதரி.//

      என் கணவர் குழந்தைகளுக்கு சொல்லும் கதை அதை நான் என் பேரன், பேத்திக்கு சொன்ன கதை. உங்கள் பாராட்டுக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

      //எனக்கு ஒரு வாரமாக மகன் வந்திருப்பதால், ஏதேதோ வேலைகள் பகல் முழுவதும் சரியாக உள்ளது. முன்பு போல பதிவுகளுக்கு வர இயலவில்லை. இரவு படுக்கும் முன் வரலாம் என நினைப்பேன். ஆனால் உடல் அசதியில் உறக்கம் வந்து விடுகிறது. உங்களின் சென்ற பதிவுக்கும் பிறகு வருகிறேன். எபியிலும் உங்கள் கருத்துக்கு பதிலாக என் தாமதத்திற்கு காரணத்தை சொல்லியுள்ளேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.//

      இரண்டு பதிவுகளுக்கு நீங்கள் வரவில்லை என்றதும் நினைத்தேன், மகன் வருகை, மற்றும் தண்ணீர் பிரச்சனை என்று.

      இத்தனை பணிசுமைகளுக்கு இடையில் வந்து கருத்து சொன்னது மகிழ்ச்சி. பதிவு ஓய்வு நேரத்தில் படிக்கலாம். இரவு தூக்கத்தை கெடுத்து கொண்டு வர வேண்டாம், மெதுவாக படிக்கலாம்.
      உடம்பை பார்த்து கொள்ளுங்கள். ஓய்வு , உறக்கம் தேவை.
      மகன் இருக்கும் போது அருடன் மகிழ்ச்சியாக இருங்கள். பொழுதுகள் போதாது.

      உங்கள் விரிவான கருத்துக்கு நன்றி.




      நீக்கு
    2. வணக்கம் சகோதரி

      இப்போதுதான் பதில் விபரம் படித்து நீங்கள் என்னைப்பற்றியும், நான் எபியில் குறிப்பிட்டுள்ள கருத்துரையை பற்றியும் பகிர்ந்துள்ளதை பார்த்தேன். மிக்க நன்றி சகோதரி.

      ஆம் உண்மையிலேயே நல்ல கற்பனை தங்கள் கணவருக்கு. நாம் எப்போதும் வடாம் இடும் போது அருகிலேயே காகங்கள் வட்டமிடும். அதை தத்ரூபமாக கவனம் கொண்டு வரைநதிருக்கும் படத்தை ரசித்தேன்.

      நான் எங்கள் அம்மா வீட்டில் இருக்கும் போது வடாம் இட்டதுதான். எனக்கு திருமணமான பிறகு எந்த வீடும் அதற்கேற்ற வசதியை தரவில்லை. இப்போது முடிவதில்லை. தங்களின் வாழைக்காய் அப்பளம் செய்முறையை கண்ட பின் அது போல் செய்ய ஆசை வருகிறது. பார்க்கலாம். வரும் அடுத்த மாதங்களில் மருமகளின் பிறந்த வீட்டு உறவுகள் (அக்கா, அண்ணா குடும்பங்கள்) நிறைய பேர் மருமகளுடன் தங்கிச் செல்ல வெளி நாட்டிலிருந்து இங்கு வரவிருக்கிறார்கள். எனக்கு இன்னமும் நிறைய வேலைகள் வந்து விடும். பதிவுலகிற்கு அவ்வப்போதுதான் வர முடியுமோ என்னவோ.. பார்க்கலாம். என்னவோ உங்களிடம் சொல்ல வேண்டும் போல் இருந்தது. சொல்லி விட்டேன். நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    3. மீண்டும் வந்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      //ஆம் உண்மையிலேயே நல்ல கற்பனை தங்கள் கணவருக்கு. நாம் எப்போதும் வடாம் இடும் போது அருகிலேயே காகங்கள் வட்டமிடும். அதை தத்ரூபமாக கவனம் கொண்டு வரைநதிருக்கும் படத்தை ரசித்தேன்.//
      ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      //நான் எங்கள் அம்மா வீட்டில் இருக்கும் போது வடாம் இட்டதுதான். எனக்கு திருமணமான பிறகு எந்த வீடும் அதற்கேற்ற வசதியை தரவில்லை. இப்போது முடிவதில்லை. தங்களின் வாழைக்காய் அப்பளம் செய்முறையை கண்ட பின் அது போல் செய்ய ஆசை வருகிறது. பார்க்கலாம். //

      அப்பளம் போட வசதி இல்லையென்றால் இப்படி வாழைக்காயை தட்டி தோசை கல்லில் போட்டு எடுக்கலாம். ஓவனில் வைத்து எடுக்கலாம்.
      வடை போல எண்ணெயில் பொரித்து சாப்பிடலாம்.

      //மருமகளின் பிறந்த வீட்டு உறவுகள் (அக்கா, அண்ணா குடும்பங்கள்) நிறைய பேர் மருமகளுடன் தங்கிச் செல்ல வெளி நாட்டிலிருந்து இங்கு வரவிருக்கிறார்கள். எனக்கு இன்னமும் நிறைய வேலைகள் வந்து விடும். பதிவுலகிற்கு அவ்வப்போதுதான் வர முடியுமோ என்னவோ.. பார்க்கலாம். என்னவோ உங்களிடம் சொல்ல வேண்டும் போல் இருந்தது. சொல்லி விட்டேன். நன்றி சகோதரி.//

      என்னிடம் பகிர்ந்து கொண்டதற்கு மிகவும் நன்றி.
      உறவுகளுடன் மகிழ்ச்சியாக இருங்கள். அவர்களுடன் ஊரை சுற்றிப்பார்க்க போய் வாருங்கள். அப்புறம் மெதுவாக என் பதிவுகளை படித்து பார்க்கலாம். கப்பல் பயண பதிவில் மகன் மருமகளுக்கு திருமணநாள் வாழ்த்து கேட்டு இருந்தேன் நம் நட்புகளிடம் அப்போது உங்கள் வாழ்த்தை , வரவை எதிர்ப்பார்த்தேன்.
      பரவாயில்லை எப்போதும் முடியுமோ அப்போது வாங்க கமலா.
      உங்கள் மறு வரவுக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றி.

      நீக்கு
  15. வாழைக்காயில் அப்பளம் - ஆஹா... திருச்சியில் நிறைய கிடைக்கும் என்பதால் போட்டுப் பார்க்கலாம். சொல்கிறேன். :) சுவையான குறிப்புகள்.

    எத்தனை பதிவர்கள் இப்போது பதிவுலகிலிருந்து விலகியே இருக்கிறார்கள் :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்

      //வாழைக்காயில் அப்பளம் - ஆஹா... திருச்சியில் நிறைய கிடைக்கும் என்பதால் போட்டுப் பார்க்கலாம். சொல்கிறேன். :) சுவையான குறிப்புகள்.//

      ஆதிக்கு தெரிந்து இருக்கும். மாலை நேர டீயுடன் சாப்பிடலாம். மழை காலத்தில் நன்றாக இருக்கும்.

      //எத்தனை பதிவர்கள் இப்போது பதிவுலகிலிருந்து விலகியே இருக்கிறார்கள் :(//

      இப்போது வேறு நிறைய வந்து விட்டது. சின்ன சின்ன தாக அதில் தினம் எழுதி விடுகிறார்கள். வலைச்சரம் , தமிழ்மணம், பெண்கள் உலகம் என்று எழுதி கொண்டு இருந்தது ஒரு காலம்.

      உங்களிடமிருந்தும் விரைவில் பதிவை எதிர்பார்க்கிறேன் வெங்கட்.
      உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  16. வாழக்காயில் செய்யப்படும் வற்றலின் செய்முறைக் குறிப்பும் அருமை, அதை ஒட்டிய உங்கள் நினைவுகளும் இனிமை. உங்கள் கணவர் வரைந்த படம் மிக அருமை.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துளசிதரன், வாழ்க வளமுடன்

      //வாழக்காயில் செய்யப்படும் வற்றலின் செய்முறைக் குறிப்பும் அருமை, அதை ஒட்டிய உங்கள் நினைவுகளும் இனிமை. உங்கள் கணவர் வரைந்த படம் மிக அருமை.//

      உங்கள் கருத்துக்கு நன்றி சகோ.

      நீக்கு
  17. நல்ல நினைவலைகள். உங்கள் கணவர் வரைந்த படத்தை பார்த்த நினைவு இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பானுமதி வெங்கடேஷ்வரன், வாழ்க வளமுடன்

      //நல்ல நினைவலைகள். உங்கள் கணவர் வரைந்த படத்தை பார்த்த நினைவு இருக்கிறது.//

      உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  18. மகன் வீட்டில் செய்த வாழைக்காய் அப்பளம் மலரச் செய்திருக்கிறது நினைவலைகளை. அவற்றின் தொகுப்பு அருமை.

    கப்பல் பயணத் தொடரைப் பிறகு வாசிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
      //மகன் வீட்டில் செய்த வாழைக்காய் அப்பளம் மலரச் செய்திருக்கிறது நினைவலைகளை. அவற்றின் தொகுப்பு அருமை.//

      நன்றி ராமலக்ஷ்மி.

      //கப்பல் பயணத் தொடரைப் பிறகு வாசிக்கிறேன்.//

      நல்லது. எப்போது நேரம் கிடைக்குமோ அப்போது வாசிக்கலாம் ராமல்க்ஷ்மி.


      நீக்கு