திங்கள், 5 பிப்ரவரி, 2024

ஏதோ நினைவுகள் மனதிலே மலருதே!

ஆலப்புழா தொடர் கட்டுரை அடுத்து வரும். பிப்ரவரி 7ம் தேதி  திருமண நாள் எங்களுக்கு அதனால் கணவரின் நினைவுகளை பகிர்ந்து கொள்கிறேன்.


நல்ல வாழ்க்கை துணைவனாக 






அன்பான மகனுக்கு அன்பு தந்தையாக

தன் தந்தையின் தோளின் மேல் ஏறி இந்த உலகத்தை பார்க்கும் மகன்.
அன்பான தந்தையாக , நண்பனாக இருந்தார்கள்




அன்பான மகளுக்கு அன்பு தந்தையாக



யானையாக, குதிரையாக மகளை தன் முதுகில் ஏற்றி மகிழ்ச்சியுடன் வலம் வரும் அப்பா.தன் தந்தையின்   மேல்  கம்பீரமாக ஏறி சவாரி செய்யும் மகள்

மகளுடன் என்றும் அன்பாக நல்ல தோழனாக  இருந்தார்கள்




தன் குழந்தைகளுக்கு இரைதேடி தருவது தந்தையின் கடமை.

குடும்பத்து மேல் அன்பும், பாசமும் நிறைந்தவர்கள்.


நான் ஊரில் இல்லையென்றால் தன் குழந்தைகளுக்கு ருசியான உணவை சமைத்து தருவார்கள்.எனக்கு சமைத்து தந்தது இல்லை, எனக்கும் ஒரு நாள் சமைத்து தாருங்கள் என்றால் உனக்கு பிடிக்காது என் சமையல்  என்று சிரித்து மழுப்பி விடுவார்கள்.



குழந்தைகளுக்கு நல்ல கல்வி அறிவை கொடுத்தார்கள், எனக்கும் தான் . என்னையும் திருமணம் ஆனபின் படிக்க வைத்தார்கள். ( நான் சரியாக முடிக்கவில்லை )




நான் மொட்டை மாடியில் வாழைக்காய் அப்பளம்  போட்டதை பார்த்து வரைந்த ஓவியம். அந்த அப்பளம் மிகவும் பிடிக்கும் மகனுக்கும் கணவருக்கும்.

ஆதி, வெங்கட் பெண் ரோஷ்ணி கணினியில் அமர்ந்து  ஓவியம் வரைவதாக    வரைந்து தந்த படம். நட்பை போற்றும் மனம். நான் வலைச்சர ஆசிரியராக இருந்த போது இளம் பதிவர் ரோஷணியை அறிமுகபடுத்தியதற்கு வரைந்து தந்த ஓவியம்.



பேரனுடன்  விசில் செய்து பாடி கொண்டு ஊஞ்சல் விளையாட்டு.

நன்றாக விசிலில் பாடல்கள் பாடுவார்கள் கர்நாடக சங்கீதம், சினிமாபாடல்,பக்தி பாடல் எல்லாம் அதை  பதிவு செய்யாமல் விட்டு விட்டு இப்போது வருந்துகிறேன்.

தியாகராஜ உற்சவத்தில் பேத்தி பாடியதை  கேட்க போய் இருந்த போது எடுத்த படம்.

பேரன் அவன் மிருதங்க வாத்தியாரை பார்த்து பணிவுடன் நிற்கிறான். பேரனின் குருவை பார்த்து கீழே அமர்ந்து இருக்கிறார்களே என்று நினைக்காதீர்கள், அவர் தூரத்தில் வருகிறார் பக்கத்தில் வந்தவுடன் எழுந்து வணக்கம் சொன்னேன்.


தன் அத்தை வீட்டை மன கண்ணில் நினைத்து ஓவியம் தீட்டும் மருமகனாய். 

உறவுகளை நேசிக்கும் மனம் அதுவும் தென்காசி அத்தை மேல் மிகவும் பாசம். பள்ளி விடுமுறைவிட்டால் அத்தை வீட்டுக்கு பயணம் கிளம்பி விடுவார்களாம், விடுமுறைக்கு அங்கு சென்று வருவதை அத்தையுடன் குற்றாலம் , மற்றும் சினிமாக்கள், உறவினர் வீடுகளுக்கு போய் வந்ததை அலுக்காமல் சொல்லி சொல்லி மகிழும் உள்ளம்.

மகன் வீட்டில் இருந்த போது இந்த ஓவியத்தை வரைந்து அவனுக்கு கொடுத்தார்கள்.






திடியன் மலையை கஷ்டப்பட்டு ஏறிய போது இனி இப்படி கஷ்டமான பயணம் வேண்டாம் இருவருக்கு வயதாகி விட்டது என்றேனே!

அப்போது எல்லாம் அவர்களிடம் தான் காமிரா இருக்கும் போகும் இடமெல்லாம் படங்கள் எடுத்தார்கள என்னை. எந்த இடத்தில் எடுத்தது என்று எழுதி வைப்பார்கள்


நிறைய இடங்களுக்கு என்னை அழைத்து சென்று இருக்கிறார்கள் . கோவில்கள், மற்றும் சுற்றுலா தலங்களுக்கு.




வாழ்க்கை பயணத்தில்   ஒன்றாக மகிழ்வாய் பயணம் செய்த  என்னை  விட்டு விட்டு வழியில் முன்னால் இறங்கி சென்று விட்டார்களே! "நீ பின்னால் வா என்று." நான் இறங்கும் வழி எப்போது வரும் என்று இறைவன் தான் அறிவான். அது வரை  அவர்களின் நினைவுகள் வழிநடத்தும். 




மயிலாடுதுறையில் இருந்த போது  மாதா மாதம் வெளிவரும் சிவச்சுடர் பத்திரிக்கைக்கு என் கணவர்  எழுதி அனுப்புவார்கள் கட்டுரைகள். மதுரை வந்த பின்னும் கட்டுரைகள் அனுப்பி கொண்டு இருந்தர்கள் இறைவனடி செல்லும் வரை.

அந்த கட்டுரைகளை   அவ்வப்போது பதிவாக என் தளத்தில்  இடம்பெற செய்யலாம் என்று நினைத்து இருக்கிறேன் இறையருள் துணை நிற்க வேண்டும்.




படிக்க முடிகிறதா? இல்லையென்றால் டைப் செய்து அனுப்ப வேண்டும். நீங்கள் சொல்லுங்கள்.

நிறைய கற்றுக் கொண்டு இருக்கலாம் என் கணவரிடம். அவர்களின் சிந்தனைகளுக்கு எழுத்து பணிக்கும் தொந்திரவு தரக்கூடாது என்று இருந்தேன்.  அவர்கள் இருக்கும் போதே பகிர்ந்து இருந்தால் நீங்கள் ஏதாவது கேள்விகள் கேட்டால் பதில் சொல்லி இருப்பார்கள். 

எல்லாம் இறைவன் திருவுள்ளம். 



வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
-------------------------------------------------------------------------------------------------

44 கருத்துகள்:

  1. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. தங்கள் கணவரின் நினைவுகளை போற்றும் விதத்தில் அருமையான பதிவாக தந்துள்ளீர்கள். முதலில் தங்களுக்கு இனிய திருமணநாள் வாழ்த்துகள்.

    பதிவை படிக்கையில் மனதுக்கு நெகிழ்ச்சியாக உள்ளது. தங்கள் கணவர் வரைந்த ஓவியங்கள் அனைத்துமே நன்றாக உள்ளது. நீங்கள் மாடியில் அப்பளம், வடாம் இடுவதாக உங்கள் கணவர் வரைந்த படமொன்றை நீங்கள் முன்பே ஒரு பதிவில் பகிர்ந்திருந்தீர்கள். அச்சு அசல் உங்களைப்போலவே வரைந்துள்ளார். அப்பளத்தை காத்திருந்து கொத்த வரும் காகத்துடன் நல்ல கற்பனை கலந்த படம் அது. எல்லா படங்களும் அருமையாக உள்ளது.

    உங்களுக்கு நல்ல கணவராக, உங்கள் குழந்தைகளுக்கு நல்ல தந்தையாக, உங்கள் குழந்தைகளின் குழந்தைகளுக்கு நல்ல தாத்தாவாக, இறைவன் மேல் எப்போதும் பற்றுடையவராக இருந்திருக்கிறார்.

    /வாழ்க்கை பயணத்தில் ஒன்றாக மகிழ்வாய் பயணம் செய்த என்னை விட்டு விட்டு வழியில் முன்னால் இறங்கி சென்று விட்டார்களே! "நீ பின்னால் வா என்று." நான் இறங்கும் வழி எப்போது வரும் என்று இறைவன் தான் அறிவான். அது வரை நினைவுகளுடன் காத்து இருப்பேன். /

    உங்கள் மனதின் வேதனையால் எழுந்த வரிகளும், அதற்கு முன்பாக சார் மட்டும் ஒரு தனிப்பாதையில் நடந்து போகும் படமாகவும் நீங்கள் பகிர்ந்துள்ளது என் மனதை கனக்க வைத்து விழிகளில் நீரை வரவழைத்து விட்டது. என்ன செய்வது? இறைவனின் விருப்பத்தை யார் கண்டது? மனச் சோர்வு அடையாமல் தைரியமாக இருங்கள்.

    சிவச்சுடர் பத்திரிக்கையில் தங்கள் கணவர் எழுதிய பகுதிகளை படித்தேன். நன்றாக படிக்க முடிகிறது. இறைவனைப் பற்றி நன்றாக விளக்கம் தந்துள்ளார். தொடர்ந்து அவர் அந்தப் பத்திரிகையில் எழுதிய கட்டுரைகளையும் வெளியிடுங்கள். படிக்கிறோம். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்

      பதிவு அருமை. தங்கள் கணவரின் நினைவுகளை போற்றும் விதத்தில் அருமையான பதிவாக தந்துள்ளீர்கள்.முதலில் தங்களுக்கு இனிய திருமணநாள் வாழ்த்துகள்.//

      நன்றி கமலா.


      //அப்பளத்தை காத்திருந்து கொத்த வரும் காகத்துடன் நல்ல கற்பனை கலந்த படம் அது.//

      நன்றி


      //உங்களுக்கு நல்ல கணவராக, உங்கள் குழந்தைகளுக்கு நல்ல தந்தையாக, உங்கள் குழந்தைகளின் குழந்தைகளுக்கு நல்ல தாத்தாவாக, இறைவன் மேல் எப்போதும் பற்றுடையவராக இருந்திருக்கிறார்.//

      அருமையாக சொன்னீர்கள்.


      //உங்கள் மனதின் வேதனையால் எழுந்த வரிகளும், அதற்கு முன்பாக சார் மட்டும் ஒரு தனிப்பாதையில் நடந்து போகும் படமாகவும் நீங்கள் பகிர்ந்துள்ளது என் மனதை கனக்க வைத்து விழிகளில் நீரை வரவழைத்து விட்டது.என்ன செய்வது? இறைவனின் விருப்பத்தை யார் கண்டது? மனச் சோர்வு அடையாமல் தைரியமாக இருங்கள்.

      உங்கள் அன்பு நெகிழ வைக்கிறது என்னை. இறைவனின் விருப்பத்தை யார் கண்டது. தைரியமாக இருக்கிறேன் நன்றி.

      //சிவச்சுடர் பத்திரிக்கையில் தங்கள் கணவர் எழுதிய பகுதிகளை படித்தேன். நன்றாக படிக்க முடிகிறது.//

      படிக்க முடிவது அறிந்து மகிழ்ச்சி.
      உங்கள் அன்பான விரிவான கருத்துக்கு நன்றி கமலா.


      நீக்கு
  2. அவர் ஓவியங்களை வைத்தே பதிவை எழுதிக் கொண்டு சென்றிருப்பபது சிறப்பு.  ஓவியங்கள் ஒவ்வொன்றும் பாசத்தையும், கடமையையும் அழகாய்ச் சொல்கின்றன.  ரசனையான, பாசமான, ரசனை மிகுந்த பக்தியான, அறிவார்ந்த மனிதர் என்று தெரிகிறது.  பிப்ரவரி 7 திருமண நாள் வாழ்த்துகள்.  அவர் உங்களுடன், உங்களுக்குள்தான் இருக்கிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

      //அவர் ஓவியங்களை வைத்தே பதிவை எழுதிக் கொண்டு சென்றிருப்பபது சிறப்பு. ஓவியங்கள் ஒவ்வொன்றும் பாசத்தையும், கடமையையும் அழகாய்ச் சொல்கின்றன. //

      நன்றி ஸ்ரீராம்.

      //ரசனையான, பாசமான, ரசனை மிகுந்த பக்தியான, அறிவார்ந்த மனிதர் என்று தெரிகிறது. பிப்ரவரி 7 திருமண நாள் வாழ்த்துகள். அவர் உங்களுடன், உங்களுக்குள்தான் இருக்கிறார்.//

      நன்றி ஸ்ரீராம் சாரைபற்றி அருமையாக சொன்னீர்கள்.

      நீக்கு
  3. அவர் படைப்புகளை அவ்வப்போது வெளியிடுங்கள். ஆனால் புத்தகமாகும் எண்ணம் இருக்கிறது என்று சொன்னீர்களே,,,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அவர் படைப்புகளை அவ்வப்போது வெளியிடுங்கள். ஆனால் புத்தகமாகும் எண்ணம் இருக்கிறது என்று சொன்னீர்களே,,,//

      சார் கடைசியாக எழுதிய "சாந்தாநாயகி பிள்ளைத்தமிழை புத்தகம் போட வேண்டும் என்றேன். இவை சிவச்சுடரில் வெளி வந்தது. இதை கூட தொகுத்து புத்தகம் செய்யலாம் நல்ல யோசனைதான்.
      பார்ப்போம் இறைவன் திருவுள்ளம் இருந்தால் அனைத்தும் நடக்கும்.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  4. திருமண நாளுக்கு, சார் வரைந்த ஓவியங்கள் கொண்டே ஒரு பதிவு. ஒவ்வொரு ஓவியமும் அழகு. எங்கள் மகளுக்காகவும் ஒரு ஓவியம் - மிக்க மகிழ்ச்சி அம்மா. மணநாள் வாழ்த்துகள் அம்மா.

    விரைவில் அவரின் எழுத்துக்கள் புத்தகமாக வெளிவர மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்

      //திருமண நாளுக்கு, சார் வரைந்த ஓவியங்கள் கொண்டே ஒரு பதிவு. ஒவ்வொரு ஓவியமும் அழகு. எங்கள் மகளுக்காகவும் ஒரு ஓவியம் - மிக்க மகிழ்ச்சி அம்மா. மணநாள் வாழ்த்துகள் அம்மா.//

      நன்றி வெங்கட்.

      //விரைவில் அவரின் எழுத்துக்கள் புத்தகமாக வெளிவர மனம் நிறைந்த வாழ்த்துகள்//

      உங்கள் வாழ்த்துகளுக்கும் , கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  5. பதிவு படித்து முடித்ததும் மனம் கனத்து விட்டது.

    தங்களது பெயரன், பெயர்த்திகளை கண்டு மனதை மடைமாற்றுங்கள்..
    நினைவுகள் சங்கீதமாகட்டும்.

    ஓவியங்கள் சிறப்பு.
    வாழ்க வளத்துடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

      //பதிவு படித்து முடித்ததும் மனம் கனத்து விட்டது.//

      வருத்தபட வைத்து விட்டேனே மன்னித்து கொள்ளுங்கள்.


      //தங்களது பெயரன், பெயர்த்திகளை கண்டு மனதை மடைமாற்றுங்கள்..
      நினைவுகள் சங்கீதமாகட்டும்.//

      ஆமாம், பெயரன், பெயர்த்திகள் தான் இப்போது மனதை மடைமாற்றுகிறார்கள்.
      நினைவுகள் சங்கீதமாக தாலாட்டும்.
      ஓவியங்கள் சிறப்பு.
      வாழ்க வளத்துடன்

      உங்கள் அன்பான கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

      நீக்கு
  6. மனதை நெகிழ வைக்கும் பதிவு. திருமண நாள் வாழ்த்துகள்.

    முன்னர் பார்த்த ஓவியங்கள் ஆயினும் தொகுப்பாக மீண்டும் பார்க்க ஒரு வாய்ப்பு. அவற்றிற்கு தங்கள் வரிகள் கூடுதல் சிறப்பு.

    நினைவுகளே ஆறுதல். சாரின் ஆசிகள் என்றும் தங்களையும் குடும்பத்தினரையும் வழி நடத்தும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்

      //மனதை நெகிழ வைக்கும் பதிவு. திருமண நாள் வாழ்த்துகள்.//

      நன்றி ராமலக்ஷ்மி

      //முன்னர் பார்த்த ஓவியங்கள் ஆயினும் தொகுப்பாக மீண்டும் பார்க்க ஒரு வாய்ப்பு. அவற்றிற்கு தங்கள் வரிகள் கூடுதல் சிறப்பு.

      நினைவுகளே ஆறுதல். சாரின் ஆசிகள் என்றும் தங்களையும் குடும்பத்தினரையும் வழி நடத்தும்.//

      ஆமாம், நினைவுகளே ஆறுதல். அவர்களின் ஆசிகள் எங்களை வாழவைத்து கொண்டு இருக்கிறது.
      நன்றாக சொன்னீர்கள். உங்கள் கருத்துக்கு நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  7. கோமதிக்கா என்ன சொல்ல? பதிவை பார்த்து மனம் கொஞ்சம் வருத்தமாகிவிட்டது. மாமாவின் அன்பும், பண்பும் குழந்தைகளிடம் காட்டிய அன்பும் பரிவும் பேரக் குழந்தைகள் வரை....

    இருங்க ஒவ்வொன்றாக வரேன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்

      கோமதிக்கா என்ன சொல்ல? பதிவை பார்த்து மனம் கொஞ்சம் வருத்தமாகிவிட்டது. மாமாவின் அன்பும், பண்பும் குழந்தைகளிடம் காட்டிய அன்பும் பரிவும் பேரக் குழந்தைகள் வரை....
      இருங்க ஒவ்வொன்றாக வரேன்//

      வாங்க வாங்க பொறுமையாக


      நீக்கு
  8. உங்கள் மகனோடு நல்ல தோழனாக இருந்தது நீங்கள் உங்கள் பதிவுகள் பலவற்றில் சொல்லியிருக்கீங்க கோமதிக்கா. நிறைய நேரம் பலவும் பேசுவாங்க நிறைய கலந்துரையாடல் செய்வாங்கன்னு...நான் ரசித்ததுண்டு.

    குழந்தைகளுக்கு நல்ல நண்பராக இருந்திருக்காங்க...தந்தை என்பதற்கும் மேல் நல்ல நண்பராக இருப்பதுதான் குழந்தைகளை நல்வழிப்படுத்தும். அம்மாவும் சரி அப்பாவும் சரி தோழியாக தோழனாக இருக்க வேண்டும். அது நீங்க ரெண்டு பேருமே அப்படி என்பதால் குழந்தைகள் நல்ல முறையில் வந்திருக்காங்க கூடவே பேரக் குழந்தைகள் வரை. மாமா அவங்களோடும் தோழமையோடு இருந்ததும் உங்க பதிவுகள் மூலம் பார்க்கிறோமே கோமதிக்கா.

    நல்லதொரு ஆத்மா. பிரார்த்தனைகள் கோமதிக்கா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //உங்கள் மகனோடு நல்ல தோழனாக இருந்தது நீங்கள் உங்கள் பதிவுகள் பலவற்றில் சொல்லியிருக்கீங்க கோமதிக்கா. நிறைய நேரம் பலவும் பேசுவாங்க நிறைய கலந்துரையாடல் செய்வாங்கன்னு...நான் ரசித்ததுண்டு.//

      இருவரும் நிறைய விஷயங்களை பேசிக் கொள்வார்கள். நான் கூட இடையில் போய் பேச முடியாது அப்படி பேசுவார்கள். கடைக்கு போனால் இருவரும் தெருவில் பேசிக் கொண்டு போவதை பக்கத்து வீட்டு பையன் வந்து சொல்வார், ''அப்படி என்னதான் சாரும், உங்கள் மகனும் உலகை மறந்து பேசிக் கொண்டு போகிறார்கள் நான் வருவதை கூட பார்க்கவில்லை என்பார்"

      //நல்லதொரு ஆத்மா. பிரார்த்தனைகள் கோமதிக்கா//

      நன்றி கீதா.




      நீக்கு
  9. புகைப்படங்களையும் அவர் வரைந்த ஓவியங்களையும் பகிர்ந்து அவை தாங்கி வரும் உங்கள் நினைவுகளையும் பகிர்ந்து இப்படி அவர் எப்போதும் உங்களுடனும் எங்களுடனும் இருக்கிறாரே. அண்ணன் அவர்கள் எழுதியதையும் பகிருங்கள். மிக்கப் பயனுள்ளதாயிருக்கும் நிச்சயமாக.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ, வாழ்க வளமுடன்

      //புகைப்படங்களையும் அவர் வரைந்த ஓவியங்களையும் பகிர்ந்து அவை தாங்கி வரும் உங்கள் நினைவுகளையும் பகிர்ந்து இப்படி அவர் எப்போதும் உங்களுடனும் எங்களுடனும் இருக்கிறாரே. //

      நன்றி சகோ உங்கள் அன்பான ஆறுதல் பேச்சுக்கு நன்றி. நீங்கள் சொல்வது போல எப்போதும் இருப்பதாக தான் நினைத்துக் கொள்கிறேன்.

      //அண்ணன் அவர்கள் எழுதியதையும் பகிருங்கள். மிக்கப் பயனுள்ளதாயிருக்கும் நிச்சயமாக.//

      கண்டிப்பாய் பகிர்கிறேன்.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  10. அக்கா கடைசியில் நீங்கள் எழுதியிருப்பது ரொம்ப மனதைக் கஷ்டப்படுத்திவிட்டது ...."காத்திருக்கிறேன்னு எழுதியது.

    அக்கா உங்கள் மன நிலை புரிகிறது. என்றாலும் இப்படி நினைக்க வேண்டாமே என்று தோன்றுகிறது. மகன், மகள் , பேரக் குழந்தைகளுக்கு உங்கள் அன்பும் அவர்கள் உங்களுக்கு அளிக்கும் சந்தோஷமும் இருக்கே....எல்லாத்துக்கும் ஒரு கணக்கு உண்டே.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அக்கா கடைசியில் நீங்கள் எழுதியிருப்பது ரொம்ப மனதைக் கஷ்டப்படுத்திவிட்டது ...."காத்திருக்கிறேன்னு எழுதியது.//

      இனி கஷ்டபடுத்த மாட்டேன் கீதா.



      //அக்கா உங்கள் மன நிலை புரிகிறது. என்றாலும் இப்படி நினைக்க வேண்டாமே என்று தோன்றுகிறது. மகன், மகள் , பேரக் குழந்தைகளுக்கு உங்கள் அன்பும் அவர்கள் உங்களுக்கு அளிக்கும் சந்தோஷமும் இருக்கே....எல்லாத்துக்கும் ஒரு கணக்கு உண்டே.//

      அவர்கள் தரும் சந்தோஷ்ம் தான் என்னை வாழ வைத்துக் கொண்டு இருக்கிறது. அது போதும் எனக்கு, வேறு என்ன வேண்டும்.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி கீதா.

      நீக்கு
  11. அவர் வரைந்த படங்கள், அவர் எழுதிய எழுத்து, அவர் சொன்ன வார்த்தைகள் எனத் தோரணத் தொங்கல்களாக உங்களது ‘அவர்’ பற்றிய நினைவுகளைத் திரையில் நெகிழ்வுடன் கொண்டுவந்திருக்கிறீர்கள்.

    நேற்று, ஸ்ரீ கிருஷ்ண ப்ரேமி ஸ்வாமிகளின் ப்ரவச்சன ஆடியோ ஒன்றைக் கேட்க நேர்கையில், ’சௌமனஸ்யம்’ என்கிற வடமொழி வார்த்தையை தரிசிக்க நேர்ந்தது. அத்தகைய அந்யோன்யம், அன்பின் நெருக்கத்தை அவர் தன் குடும்பத்தில் நிகழச்செய்திருந்தார் என்பது பதிவில் காணக் கிடைக்கிறது.

    மணநாள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஏகாந்தன், வாழ்க வளமுடன்

      //அவர் வரைந்த படங்கள், அவர் எழுதிய எழுத்து, அவர் சொன்ன வார்த்தைகள் எனத் தோரணத் தொங்கல்களாக உங்களது ‘அவர்’ பற்றிய நினைவுகளைத் திரையில் நெகிழ்வுடன் கொண்டுவந்திருக்கிறீர்கள்.//

      அவர் நினைவுகள் தான் என்னை வழி நடத்துகிறது.

      குடும்பத்தில் மட்டும் அல்ல கல்லூரியிலும் மாணவ மாணவிகள், சக ஆசிரியர்கள் எல்லோராலும் மிகவும் விரும்பபட்டவர்.

      //நேற்று, ஸ்ரீ கிருஷ்ண ப்ரேமி ஸ்வாமிகளின் ப்ரவச்சன ஆடியோ ஒன்றைக் கேட்க நேர்கையில், ’சௌமனஸ்யம்’ என்கிற வடமொழி வார்த்தையை தரிசிக்க நேர்ந்தது. அத்தகைய அந்யோன்யம், அன்பின் நெருக்கத்தை அவர் தன் குடும்பத்தில் நிகழச்செய்திருந்தார் என்பது பதிவில் காணக் கிடைக்கிறது.//

      நீங்கள் கேட்ட ஸ்ரீ கிருஷ்ண ப்ரேமி ஸ்வாமிகளின் நல்ல சொற்பொழிவை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி மகிழ்ச்சி.

      மணநாள் வாழ்த்துகள்.//

      உங்கள் அன்பான கருத்துக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி.

      நீக்கு
  12. அப்போது எல்லாம் அவர்களிடம் காமிரா இருக்கும் போகும் இடமெல்லாம் படங்கள் எடுத்தார்கள என்னை. எந்த இடத்தில் எடுத்தது என்று எழுதி வைப்பார்கள்//

    இது மிக நல்ல விஷயம். அது இப்போது உங்களுக்கு நல்ல நினைவுகள். எவ்வளவு அழகாக ஒவ்வொன்றையும் செய்திருக்கிறார் மாமா. நேர்த்தி இல்லையா! மகனிடமும் அது நிறைய இருக்கு என்பது தெரிகிறது. கவினிடமும் இப்போது...எல்லோரும் மகிழ்வாக இருக்க வேண்டும்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இது மிக நல்ல விஷயம். அது இப்போது உங்களுக்கு நல்ல நினைவுகள். எவ்வளவு அழகாக ஒவ்வொன்றையும் செய்திருக்கிறார் மாமா. நேர்த்தி இல்லையா! மகனிடமும் அது நிறைய இருக்கு என்பது தெரிகிறது. கவினிடமும் இப்போது...எல்லோரும் மகிழ்வாக இருக்க வேண்டும்!//

      ஆமாம், எல்லாவற்றையும் நேர்த்தியாக செய்வார்கள். ஒன்றை எடுத்து கொண்டால் ஒரு வேலையை எடுத்து கொண்டால் நல்லபடியாக முடிக்கும் வரை ஓயமாட்டார்கள்.
      நீங்கள் சொல்வது போல மகன், பெரனிடம் அந்த குணம் வந்து இருக்கிறது கீதா.

      நீக்கு
  13. நிறைய இடங்களுக்கு என்னை அழைத்து சென்று இருக்கிறார்கள் . கோவில்கள், மற்றும் சுற்றுலா தலங்களுக்கு.//

    ஆமாம் அக்கா...

    கடைசி வரிகளை மாற்றியதற்கு மிக்க நன்றி கோமதிக்கா..

    பேரன் பேத்திகளை வழி நடத்துங்கள் அவர்களோடு சந்தோஷமான நாட்களாக இருக்கட்டும். அவர்களுக்கு நீங்கள் வேண்டும்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கடைசி வரிகளை மாற்றியதற்கு மிக்க நன்றி கோமதிக்கா..

      பேரன் பேத்திகளை வழி நடத்துங்கள் அவர்களோடு சந்தோஷமான நாட்களாக இருக்கட்டும். அவர்களுக்கு நீங்கள் வேண்டும்//

      கடைசி வரிகள் எல்லோருக்கும் வருத்தம் ஏர்படுத்தியதால் மாற்றி விட்டேன்.
      நான் அவர்களை வழி நடத்தவில்லை, அவர்கள்தான் என்னை வழி நடத்துகிறார்கள். என் கணவர் இறைவனிடம் சென்ற பின் கண்ணை கட்டி காட்டில் விட்டது போல எங்கும் இருள் மயமாக இருந்தது. ஆனால் இப்போது வெளிச்சம் தெரிகிறது, அதற்கு காரணம் குழந்தைகள், பேரக்குழந்தைகள், அன்பு சுற்றம், மற்றும் உங்களை போன்ற அன்பு நட்புகள் ஆதரவாக என்னை வழி நடத்துகிறார்கள்.

      உங்கள் மீள் வருகைக்கும் அன்பான கருத்துக்கும் நன்றி நன்றி.


      நீக்கு
  14. சாரின் ஓவியங்களை மிகவும் ரசித்தேன். மிகுந்த திறமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்

      //சாரின் ஓவியங்களை மிகவும் ரசித்தேன். மிகுந்த திறமை//

      நன்றி நெல்லை.

      நீக்கு
  15. பதிவின் ஒவ்வொரு தகவலும் நெகிழ்ச்சி

    அவர் தூரிகையால் வரைவதை எடுத்த படம் சூப்பர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்

      //பதிவின் ஒவ்வொரு தகவலும் நெகிழ்ச்சி

      அவர் தூரிகையால் வரைவதை எடுத்த படம் சூப்பர்//

      நன்றி நெல்லை.

      நீக்கு
  16. அவர் உங்களை வழிநடத்துவார்.

    மகன் பெயரன் மூலமாக அவரை நீங்கள் காணலாம்

    அவருடைய செய்நேர்த்தியையும் இருவரும் கொண்டிருப்பது சிறப்பு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அவர் உங்களை வழிநடத்துவார்.


      மகன் பெயரன் மூலமாக அவரை நீங்கள் காணலாம்

      அவருடைய செய்நேர்த்தியையும் இருவரும் கொண்டிருப்பது சிறப்பு//

      உங்கள் பயணத்திற்கு இடையில் பதிவை படித்து கருத்துக்கள் சொன்னதற்கு நன்றி.

      உங்கள் அன்பான கருத்துக்களுக்கு நன்றி, நன்றி.

      நீக்கு
  17. சில நாட்களாக மனதில் சோர்வு.. விரல்களில் வலி அவ்வப்போது..

    எனவே பதிவில் வருவதற்கு தாமதம்.. மன்னிக்கவும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்

      //சில நாட்களாக மனதில் சோர்வு.. விரல்களில் வலி அவ்வப்போது..

      எனவே பதிவில் வருவதற்கு தாமதம்.. மன்னிக்கவும்..//

      உடல் நலத்தை பார்த்து கொள்ளுங்கள்.
      விரல் வலி விரைவில் குணமாக பிரார்த்திக்கிறேன்.

      நானும் மருத்துவரிடம் போய் வந்து கொண்டு இருக்கிறேன். உடல் நலக்குறைவு.

      நீக்கு
  18. இன்று இங்கே மின் தடை..

    கைத்தலபேசியில் சக்தி இல்லை..

    பிறகு வருகின்றேன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்று இங்கே மின் தடை.//

      ஓ சரி..

      கைத்தலபேசியில் சக்தி இல்லை..

      பிறகு வருகின்றேன்..//

      வாங்க மெதுவா.

      நீக்கு
  19. திருவெண்காட்டிலோ
    மயிலாடுதுறையிலோ
    குடந்தையிலோ - எங்கோ நாம் நேருக்கு நேர் கடந்திருக்கின்றோம்..

    ஊருக்குத் திரும்பியதும்
    தேவாரத் திருத்தலங்கள் அனைத்தையும் தரிசித்த
    தங்கள் இருவரையும் வந்து வணங்க வேண்டும் என்றிருந்தேன்..

    அது நிறைவேறாது போயிற்று..

    ஐயா அனைவருக்கும் ஆசியளித்து நலம் செய்வார்..

    நாம் மீண்டும் ஒருமுறை சந்திப்பதற்கு இறைவன் அருள் புரிய பிரார்த்தித்துக் கொள்கின்றேன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருவெண்காட்டிலோ
      மயிலாடுதுறையிலோ
      குடந்தையிலோ - எங்கோ நாம் நேருக்கு நேர் கடந்திருக்கின்றோம்..//

      கடந்து இருக்கலாம்.

      //ஊருக்குத் திரும்பியதும்
      தேவாரத் திருத்தலங்கள் அனைத்தையும் தரிசித்த
      தங்கள் இருவரையும் வந்து வணங்க வேண்டும் என்றிருந்தேன்..
      அது நிறைவேறாது போயிற்று.//

      என் கணவர்தான் பாடல் பெற்ற திருத்தலங்கள் அனைத்தும் பார்த்து இருக்கிறார்கள். எனக்கு சிலது பார்க்க முடியாமல் போய் இருக்கிறது.


      //ஐயா அனைவருக்கும் ஆசியளித்து நலம் செய்வார்..//

      ஆமாம்.

      //நாம் மீண்டும் ஒருமுறை சந்திப்பதற்கு இறைவன் அருள் புரிய பிரார்த்தித்துக் கொள்கின்றேன்..//

      உங்கள் கருத்துக்கும், பிரார்த்தனைக்கும் நன்றி.

      நீக்கு
  20. உங்கள் கணவரின் திறமைகளை எடுத்துக்காட்டும் அவர் ஓவியநிகழ்கிறது. படிக்கும் போதே நெஞ்சம் நெகிழ்கிறது.

    பிள்ளைகளுக்கு நல்ல பாசமிகு அப்பாவாக, சிறந்த கணவராக,வாழ்ந்த அந்த நாட்களை நினைத்து ஆறுதல் அடையுங்கள்.

    உங்கள் கணவரின் ஆசியையும் நாங்கள் வேண்டுகிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்

      //உங்கள் கணவரின் திறமைகளை எடுத்துக்காட்டும் அவர் ஓவியநிகழ்கிறது. படிக்கும் போதே நெஞ்சம் நெகிழ்கிறது.//

      பன்முக திறமைகள் கொண்டவர். அத்தனையும் வெளி காட்டாமல் அமைதியாக வாழ்ந்து விட்டு போய் விட்டார்கள்.

      //பிள்ளைகளுக்கு நல்ல பாசமிகு அப்பாவாக, சிறந்த கணவராக,வாழ்ந்த அந்த நாட்களை நினைத்து ஆறுதல் அடையுங்கள்.//

      அந்த நாட்களை நினைத்தும், பிள்ளைகளின் ஆதரவால் ஆறுதல் அடைந்து கொண்டு இருக்கிறேன்.

      //உங்கள் கணவரின் ஆசியையும் நாங்கள் வேண்டுகிறோம்.//

      கண்டிப்பாய் ஆசி வழங்குவார்கள்.
      உங்கள் அன்பான ஆறுதலான கருத்துக்கு நன்றி மாதேவி.



      நீக்கு
  21. தங்கள் கணவரின் நினைவலைகளை அவர்தம் ஓவியங்களோடும் எழுத்தோடும் பகிர்ந்துகொண்டமை சிறப்பு.
    இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
    இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்
    என்னும் வரிகளுக்கேற்ப சார் வாழ்ந்திருக்கிறார்கள். இப்போதும் அழகிய நினைவுகளால் உங்களோடு வாழ்கிறார்கள். அதை எண்ணி மகிழ்ச்சியும் ஆறுதலும் அடையுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதமஞ்சரி, வாழ்க வளமுடன்

      தங்கள் கணவரின் நினைவலைகளை அவர்தம் ஓவியங்களோடும் எழுத்தோடும் பகிர்ந்துகொண்டமை சிறப்பு.
      இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
      இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்
      என்னும் வரிகளுக்கேற்ப சார் வாழ்ந்திருக்கிறார்கள். இப்போதும் அழகிய நினைவுகளால் உங்களோடு வாழ்கிறார்கள். அதை எண்ணி மகிழ்ச்சியும் ஆறுதலும் அடையுங்கள்.//

      நினைவுகளை மீட்டிப்பார்த்து ஆறுதல் அடைகிறேன்.

      உங்கள் வரவுக்கும் ஆறுதலான அன்பான கருத்துக்கு நன்றி கீதமஞ்சரி. அடிக்கடி பதிவுகள் போடுங்கள்.

      நீக்கு
  22. ஓவியங்கள் அனைத்தும் சிறப்பு. நினைவலைகள் என்றும் நிற்கும்.

    இறுதியில் மனம் கனமாகியது. எல்லாம் இறைவன் செயல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஓவியங்கள் அனைத்தும் சிறப்பு. நினைவலைகள் என்றும் நிற்கும்.//

      ஓவியங்கள் மூலம் அவர்கள் நினைவை போற்றுகிறேன்.
      நினைவலைகள் என்றும் நிற்க வேண்டும் என் இறுதி மூச்சு வரை அதுதான் இப்போதைய வேண்டுதல் இறைவனிடம்.

      //இறுதியில் மனம் கனமாகியது. எல்லாம் இறைவன் செயல்.//

      பழைய பதிவை படித்து கருத்து சொன்னதற்கு நன்றி. இதில் உங்கள் கருத்து இருக்கிறது. நீங்கள் சொன்னது போல எல்லாம் இறைவன் செயல்தான்.

      நீக்கு