திங்கள், 24 ஜூன், 2024

இயற்கை வரைந்த ஓவியம்


உலகமே உடலாய் அதற்குள்ளே உயிரது ஆகி விளங்கிடும் தெய்வம்
இலகும் வான் ஒளி போல் அறிவு ஆகி எங்கணும் பரந்திடும் தெய்வம்.

- பாரதி


பெளர்ணமி அன்று நிலவைபார்க்க தோட்டம் பக்கம் போனேன், அன்று நிலவு வரவில்லை ஆனால் வானம் மிக அழகாய் பொன்னிறமாக இருந்தது.   அந்த  வானில் தெரிந்த அழகிய  காட்சிகளை  காமிராவில்  எடுத்து கொண்டு இருந்தேன், "அம்மா  முன் பக்கமும் வானம் அழகாய் இருக்கு போய் பாருங்க" என்றான் மகன்   பொன்னிற வானம் முன் பக்கம் தான் கிடைத்தது.

மாலை நேரம் எடுத்த  வானின் படங்களும், கவிதைகளும் இடம்பெறுகிறது இந்த பதிவில்.



நான் முழுநிலவை காண தோட்டத்திற்கு போனது போல பாரதிதாசன் அவர்களும் பெளர்ணமி அன்று  "வட்டக் குளிர்மதி எங்கே என்று வரவு  நோக்கியிருந்தோம்" என்று பாடி இருக்கிறார்.

//எட்டியமட்டும்  கிழக்குத் திசை 
ஏற்றிய  எங்கள் விழிக்குப் 
பட்டது கொஞ்சம் வெளிச்சம் -அன்று
பெளர்ணமி என்பதும் கண்டோம்
வட்டக் குளிர்மதி எங்கே - என்று 
வரவு நோக்கி யிருந்தோம்.//

- பாரதி தாசன்.

இரண்டு நாளாக வானம் மேக மூட்டத்தில் இருந்தது அதனால் பெளர்ணமி அன்று  நிலவை பார்க்க முடியவில்லை.


வானகம் நோக்கினேன் மற்று அதன் மாண்பினை 
ஊனமா நாவினில் உரைத்தலும் படுமோ
-பாரதியார்

இயற்கையை பாரதி  எவ்வளவு அழகாய் பாடி இருக்கிறார் அவரே இப்படி சொல்கிறார். எனக்கு கவிதை எழுதி பழக்கமில்லை.

அதனால் பாரதியாரின் வரிகளை தேர்ந்து எடுத்து போட்டு இருக்கிறேன்.






காற்றும் ஒளியும் மிகு ஆகாயமே எங்களுக்கு 
ஏற்றதொரு வீடு இதற்கு எல்லை ஒன்று இல்லையடா
- பாரதியார்


நரைத்த முடி  கறுப்பு தாடி வைத்த முதியவரும் , வெண்கொண்டை முதியவளும் தெரிகிறது எனக்கு, உங்களுக்கு என்ன தோன்றுகிறது சொல்லுங்கள்.

வெண்மேகத்தை துரிகையால்  கலைத்து விடுகிறார்கள்



கருமேகம் கண்டு தோகை விரித்து ஆடும் மயிலின் தோகை மட்டும் தெரிகிறதா?


ஓவியத்தில் தீட்டப்படாத
வர்ணங்களை  தன்னகத்தே
ஒளித்து வைத்துள்ளதோ
இந்த அந்தி வானம்
--ஹேமஷாலினி ச

இன்று இணையத்தில் படித்தேன் நன்றாக இருந்தது.



ஜெட் விமானம் வெண்மேகத்திலிருந்து விருட்டென்று பாய்ந்து வந்தது

வானகத்தோடு ஆடல் செய்வாய்

-பாரதி

மேகங்களும் , மரங்களும் ஆடல் செய்கிறது வானகத்தோடு


ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ
- கவிஞர் கண்ணதாசன்



"எத்தனை கோடி இன்பம் வைத்தாய்
எங்கள்  இறைவா  இறைவா இறைவா"
  என்று  பாடி இருக்கிறார்.

பாரதியை போல கவிதை வடிக்க தெரியவில்லை என்றாலும் இயற்கையை ரசிப்போம்.   வானத்தை ,  மேகங்களை ரசிக்க ஆரம்பித்தால்   வேறு சிந்தனைகள் வந்து நம்மை தொந்திரவு செய்யாது.

//அந்தி வேளை மேற்குப்புறம்
ஆகாயத்தைப் பார்த்திடுவோம்!
விந்தையாக மேகங்கள்
விதவிதமாகத் தோன்றிடுமே!
இரவு வேளை வானத்தில்
எங்கும் நட்சத்திர மயமே
பரவி மினுக்கு மினுக்கென்று
பார்க்க அழகாய்க் காட்சிதரும்.//

- வேதாத்திரி மகரிஷி அவர்கள் குழந்தைகளுக்கு எழுதிய பாடல்.

முன்பு 

சீக்கிரம் காலையில் எழுந்திருங்கள்! என்ற தலைப்பில்  

 காலை சூரியன்  உதிக்கும் வேளையில் வானின் அழகை பதிவு  போட்ட போது மகரிஷியின் முழு கவிதையும் பகிர்ந்து இருக்கிறேன். இப்போது அந்திவானம் கவிதை மட்டும்.


அந்தி வானமும் ஏரியும் என்று முன்பு போட்ட பதிவு.

நிறைய வானம் படங்கள் போட்டு பதிவு எழுதி வைத்து இருக்கிறேன். ஆனால் வலை ஏற்ற வில்லை இந்த படங்களை உடனே போட்டு விட நினைத்து போட்டு விட்டேன்.


வாழ்க வையகம்! வாழ்க வையகம் ! வளமுடன்!

---------------------------------------------------------------------------------------------------

30 கருத்துகள்:

  1. மேகம், வானம், நிலா, கடல், சூரியன், மலை, புல்வெளி போன்ற இயற்கைக் காட்சிகள் மனதுக்கு உவகை தருபவை. நீங்கள் எடுத்த, இங்கே பகிர்ந்த படங்களும் கவிதை வரிகளும் சிறப்பு. தொடரட்டும் பதிவுகளும் படங்களும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்

      //மேகம், வானம், நிலா, கடல், சூரியன், மலை, புல்வெளி போன்ற இயற்கைக் காட்சிகள் மனதுக்கு உவகை தருபவை.//

      ஆமாம், ரசித்து கொண்டே இருக்கலாம், அலுப்பு தட்டாது

      //நீங்கள் எடுத்த, இங்கே பகிர்ந்த படங்களும் கவிதை வரிகளும் சிறப்பு. தொடரட்டும் பதிவுகளும் படங்களும்.//

      உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

      நீக்கு
  2. மேகங்களின் படங்கள் அத்தனையும் அழகு. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வடிவம் காட்டும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியும் காட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
      //மேகங்களின் படங்கள் அத்தனையும் அழகு.//

      நன்றி.

      //ஒவ்வொன்றும் ஒவ்வொரு வடிவம் காட்டும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியும் காட்டும்.//

      ஆமாம், நீங்கள் சொல்வது உண்மை. ஒவ்வொருவர் பார்வைக்கும் வேறு வேறு மாதிரி தோற்றங்கள் தெரியும்.

      நீக்கு
  3. கருந்தாடி பெரியவர் தெரியவில்லை என் கண்களுக்கு. பதிலாக வினோத மிருகம் தெரிகிறது! ஆனால் வென்கொண்டை முதியவள் சூனியக்காரி போல தோற்றம் தெரிகிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கருந்தாடி பெரியவர் தெரியவில்லை என் கண்களுக்கு. பதிலாக வினோத மிருகம் தெரிகிறது! ஆனால் வென்கொண்டை முதியவள் சூனியக்காரி போல தோற்றம் தெரிகிறது!//

      முதியவளை மறைத்து கொண்டு பாருங்கள் முதியவர் தெரிவார். முதியவள் நாடி கிட்ட முதியவரின் கருந்தாடி தெரியும்.
      நீங்கள் சொல்வது போல மூக்கும், நாடியும் சூனியக்காரி போல தோற்றம் தருகிறார்

      நீக்கு
  4. பாரதியாரின் வரிகள் அழகுக்கு அழகு சேர்க்கின்றன.  எவ்வளவு எழுதி இருக்கிறார் இல்லை?  நான் ஆங்காங்கே கண்ணில் படும் கவிதை வரிகள் மனதில் நிற்கின்றனவே தவிர பாரதியாரை நான் முழுமையாக படித்ததில்லை.  அதில் ஒன்று, "மெல்லிய மேகத்திரைக்குள் மறைந்திடும் வெண்ணிலாவே நின் மேனியழகு மிகைபட காணுது வெண்ணிலாவே" எனும் வரி சுஜாதா கதையில் வஸந்த் சொல்வதாக வரும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பாரதியாரின் வரிகள் அழகுக்கு அழகு சேர்க்கின்றன. எவ்வளவு எழுதி இருக்கிறார் இல்லை? நான் ஆங்காங்கே கண்ணில் படும் கவிதை வரிகள் மனதில் நிற்கின்றனவே தவிர பாரதியாரை நான் முழுமையாக படித்ததில்லை. //


      முன்பு பாரதியாரின் கவிதை வரிகள் இல்லாமல் பதிவு இல்லை என்பது போல நிறைய பதிவுகளில் பாரதியாரின் கவிதையை பகிர்வேன்.

      வீட்டில் இருந்த பாரதியார் கவிதை புத்தகம் கிழிந்து விட்டது என்று என் பிறந்த நாளுக்கு புதிதாக பாரதியார் கவிதை புத்தகம் வாங்கி கொடுத்தார்கள் சார். நினைவுகள் தந்து கொண்டு இருக்கிறது.
      இங்கு கொண்டு வரவில்லை, ஆனால் இணையத்தில் தேடி எடுத்து போட்டு இருக்கிறேன்.

      //, "மெல்லிய மேகத்திரைக்குள் மறைந்திடும் வெண்ணிலாவே நின் மேனியழகு மிகைபட காணுது வெண்ணிலாவே" எனும் வரி சுஜாதா கதையில் வஸந்த் சொல்வதாக வரும்.//

      உங்களுக்கு வஸந்த மூலம் பாரதியார் கவிதையை சுஜாதா மனதில் பதிய வைத்து விட்டார்.

      நீக்கு
  5. இப்போது மேகங்கள் என்று தொடங்கும் சில சினிமா பாடல்களை சொல்வது என் கடமை!!!  

    "மேகங்கள் விண்ணைத் தொட்டு போவதுண்டு, மேகங்களே பாருங்களேன்....அந்தியிலே சூரியனாம், 
    ஓடும் மேகங்களே, 
    மேகம் ரெண்டு சேரும்போது, 
    மேகம் கறுக்குது மின்னல் அடிக்குது 
    மேகம் கறுக்குது மழை வரப்பார்க்குது  
    மரகத மேகம் சிந்தும் 
    மேகமே தூதாக வா 
    மேகத்தை தூது விட்டா 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இப்போது மேகங்கள் என்று தொடங்கும் சில சினிமா பாடல்களை சொல்வது என் கடமை!!!

      "மேகங்கள் விண்ணைத் தொட்டு போவதுண்டு, மேகங்களே பாருங்களேன்....அந்தியிலே சூரியனாம்,
      ஓடும் மேகங்களே,
      மேகம் ரெண்டு சேரும்போது,
      மேகம் கறுக்குது மின்னல் அடிக்குது
      மேகம் கறுக்குது மழை வரப்பார்க்குது
      மரகத மேகம் சிந்தும்
      மேகமே தூதாக வா
      மேகத்தை தூது விட்டா //

      மேகமே ! மேகமே! பால் நிலா மேகமே பாடல் நினைவுக்கு வரவில்லையா?
      பகிர்ந்த பாடல்கள் அனைத்தும் அருமை.
      ஓடும் மேகங்களே நான் பகிர்ந்து இருக்கிறேன் இங்கு.

      நீக்கு
  6. முதல் படம் அவுட் ஆப் போகஸில் ஒரு தேவனின் இடது பக்க முகம் மட்டும் தீ தெரிய, அவன் கழுத்தில் இருக்கும் சில மாலைகள் காற்றில் பறக்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //முதல் படம் அவுட் ஆப் போகஸில் ஒரு தேவனின் இடது பக்க முகம் மட்டும் தீ தெரிய, அவன் கழுத்தில் இருக்கும் சில மாலைகள் காற்றில் பறக்கின்றன.//

      நல்ல கற்பனை, அருமை.

      அனைத்து கருத்துக்களுக்கும் நன்றி.

      நீக்கு
  7. கவிதையும், புகைப்படங்களும் நல்ல பொருத்தமாக உள்ளது.

    ரசனையான பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
      //கவிதையும், புகைப்படங்களும் நல்ல பொருத்தமாக உள்ளது.

      ரசனையான பதிவு.//

      பதைவை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  8. மேகத்திற்கும் வானிற்கும் வர்ணம் போட்டு பெயின்ட் பண்ணியிருக்கும் இயற்கையின் ஓவியங்கள் அனைத்தும் அட்டகாசம். நீங்க எடுத்திருப்பவையும் நன்றாக வந்திருக்கின்றன கோமதிக்கா.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்

      //மேகத்திற்கும் வானிற்கும் வர்ணம் போட்டு பெயின்ட் பண்ணியிருக்கும் இயற்கையின் ஓவியங்கள் அனைத்தும் அட்டகாசம். நீங்க எடுத்திருப்பவையும் நன்றாக வந்திருக்கின்றன கோமதிக்கா.//

      வானம் தீட்டி இருக்கும் இயற்கை ஓவியத்தையும் நான் எடுத்த படங்களையும் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி கீதா.

      நீக்கு
  9. பாரதியின் பாடல்கள், பாரதிதாசன் பாடல்கள், மற்றும் இணையத்தில் எடுத்த கவிதைகளோடு பொருத்தமாகப் பகிர்ந்திருக்கீங்க கோமதிக்கா. எனக்கும் கவிதை எழுத வருவதில்லை இப்ப எல்லாம். அதெல்லாம் ஒரு காலம் கல்லூரி பள்ளிக் காலம் அதன் பின் சில வருடங்கள்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பாரதியின் பாடல்கள், பாரதிதாசன் பாடல்கள், மற்றும் இணையத்தில் எடுத்த கவிதைகளோடு பொருத்தமாகப் பகிர்ந்திருக்கீங்க கோமதிக்கா. எனக்கும் கவிதை எழுத வருவதில்லை இப்ப எல்லாம். அதெல்லாம் ஒரு காலம் கல்லூரி பள்ளிக் காலம் அதன் பின் சில வருடங்கள்.//

      ஆமாம், நானும் முன்பு மகள் பிறந்த போது அவளுக்கு தாலாட்டு பாட கவிதை வடித்தேன், அதை என் முதல் கவிதை என்று பதிவு செய்து இருக்கிறேன். அதன் பின் கவிதை எழுதவே இல்லை. மேற்கோளுக்கு பாரதி கவிதைதான் கையாள்வேன்.

      இப்போது நீங்கள் நினைத்தால் கவிதை எழுதலாம்.

      நீக்கு
  10. நரைத்த முடி கறுப்பு தாடி வைத்த முதியவரும் , வெண்கொண்டை முதியவளும் தெரிகிறது எனக்கு, உங்களுக்கு என்ன தோன்றுகிறது சொல்லுங்கள்.//

    எனக்கு இடப்பக்கம் உள்ள மேகக் கூட்டம் டக்கென்று பார்க்க பிள்ளையார் பீடத்தின் மேல் இருப்பது போன்றும் வலப்பக்கம் உள்ள மேகக் கூட்டம் இரு கைகளை விரித்துக் கொண்டு ஏதோ ஒரு உருவம் பாய்ந்து வருவது போன்றும் தெரிகிறது கோமதிக்கா'

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு இடப்பக்கம் உள்ள மேகக் கூட்டம் டக்கென்று பார்க்க பிள்ளையார் பீடத்தின் மேல் இருப்பது போன்றும் வலப்பக்கம் உள்ள மேகக் கூட்டம் இரு கைகளை விரித்துக் கொண்டு ஏதோ ஒரு உருவம் பாய்ந்து வருவது போன்றும் தெரிகிறது கோமதிக்கா'//

      நீங்கள் சொன்னது போல நானும் கற்பனை செய்து மேக கூட்டத்தைப்பார்த்தேன்.

      நீக்கு
  11. வெண்மேகத்தை துரிகையால் கலைத்து விடுகிறார்கள்//

    ஆமாம் தூரிகைத் தீற்றல்கள்!!!

    ஹேமஷாலினியின் கவிதையும் ரசித்தேன்.

    ஜெட்விமானம் செல்லும் கோடு கண்ணதாசன் அவர்களின் கவிதை, வேதாத்ரி மகரிஷியின் அற்புதமான கவிதை எல்லாமே ரசித்தேன் கோமதிக்கா. ஆமாம் காலையில் எழுவது மனதிற்கு இதம் தரும் விஷயம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. //ஆமாம் தூரிகைத் தீற்றல்கள்!!!

      ஹேமஷாலினியின் கவிதையும் ரசித்தேன்.

      ஜெட்விமானம் செல்லும் கோடு கண்ணதாசன் அவர்களின் கவிதை, வேதாத்ரி மகரிஷியின் அற்புதமான கவிதை எல்லாமே ரசித்தேன் கோமதிக்கா. ஆமாம் காலையில் எழுவது மனதிற்கு இதம் தரும் விஷயம்.//

      பதிவில் உள்ள அனைத்து பகுதிகளையும் ரசித்து கருத்துக்கள் தந்து உற்சாகபடுத்துவதற்கு நன்றி கீதா.

      நீக்கு
  12. வானத்தின் மாயாஜாலத்தை ஒவ்வொரு ஃப்ரேமிலும் காட்டியிருக்கிறீர்கள். அனைத்தும் மிக அருமை.

    பாரதி, பாரதிதாசன், வேதாத்ரி மகரிஷி எல்லோரது கவிதைகளோடு ஹேமஷாலினி என்பவரின் கவிதையையும் சேர்த்துச் சொல்லியிருப்பதும் மிகவும் பொருத்தமாக இருக்கிறது.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துளசிதரன், வாழ்க வளமுடன்

      //வானத்தின் மாயாஜாலத்தை ஒவ்வொரு ஃப்ரேமிலும் காட்டியிருக்கிறீர்கள். அனைத்தும் மிக அருமை.//

      நன்றி .

      //பாரதி, பாரதிதாசன், வேதாத்ரி மகரிஷி எல்லோரது கவிதைகளோடு ஹேமஷாலினி என்பவரின் கவிதையையும் சேர்த்துச் சொல்லியிருப்பதும் மிகவும் பொருத்தமாக இருக்கிறது.//

      கவிதைகளை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  13. மேகங்களின் படங்கள் மிக அழகாக இருக்கின்றன. வானம் எவ்வளவு வர்ணஜாலங்களுடன் கூடியது.

    பாராதி தாசன் என்று தட்டச்சுத் தவறு வந்துள்ளது. சரி செய்துவிடுங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைதமிழன், வாழ்க வளமுடன்
      //மேகங்களின் படங்கள் மிக அழகாக இருக்கின்றன. வானம் எவ்வளவு வர்ணஜாலங்களுடன் கூடியது.//

      ஆமாம். காலை சூரியன் உதிக்கும் போதும், அந்தி மாலை வானமும் வர்ண்ஜாலங்களை அள்ளி தெளிக்கும்.

      //பாராதி தாசன் என்று தட்டச்சுத் தவறு வந்துள்ளது. சரி செய்துவிடுங்கள்//

      தட்டச்சுத்தவறை சுட்டி காட்டியதற்கு நன்றி, சரி செய்து விட்டேன்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  14. இயற்கை எழில் கொஞ்சுகிறது. குறிப்பாக மூன்றாவது படத்தில் மேகங்கள் ஜொலிக்கின்றன. மனதுக்கு இதமான படங்கள். கூடவே தங்கள் வர்ணனைகளும் எடுத்தாண்ட வரிகளும் சிறப்பு சேர்க்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்

      //இயற்கை எழில் கொஞ்சுகிறது. குறிப்பாக மூன்றாவது படத்தில் மேகங்கள் ஜொலிக்கின்றன. மனதுக்கு இதமான படங்கள். கூடவே தங்கள் வர்ணனைகளும் எடுத்தாண்ட வரிகளும் சிறப்பு சேர்க்கின்றன.//

      படங்களை, கவிதைகளை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  15. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. வழக்கம் போல தாங்கள் எடுத்த புகைப்படங்கள் அனைத்தும் மிக அழகாக இருக்கிறது. மாலை வானத்தின் வண்ண நிறங்கள் எப்போதுமே மனதை கவருபவை. நானும் இது போன்ற எண்ணற்ற புகைப்படங்களை எடுத்து வைத்துள்ளேன். இது போன்ற ரசனையில் நீங்களும், நானும் ஒன்று போல இருக்கிறோம்.

    பஞ்சு பொதிகளுக்கு தங்களது கற்பனை உருவங்கள் பொருத்தமாக உள்ளது. கறுப்பு தாடி வைத்த முதியவர் வெண் கொண்டை முதிய பெண்மணி.. மிகவும் ரசித்தேன்.

    ஒவ்வொரு படங்களும் மிக அழகாக இருக்கிறது. பொருத்தமான கவிதைகளும் அருமை.படித்து ரசித்தேன்.

    இந்தப் பதிவுக்கும் உடனடியாக வர இயலவில்லை. தாமதமாக வந்துள்ளேன். தங்களின் சென்ற பதிவுக்கும் பிறகு வருகிறேன். ஏதேதோ வேலைகள். இப்போது இவ்வளவு பிஸியென்றால் அடுத்த மாதம் உறவுகளின் வருகையில் எப்படியிருக்கப் போகிறதோ ? தெரியவில்லை.. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்

      //பதிவு அருமை. வழக்கம் போல தாங்கள் எடுத்த புகைப்படங்கள் அனைத்தும் மிக அழகாக இருக்கிறது. மாலை வானத்தின் வண்ண நிறங்கள் எப்போதுமே மனதை கவருபவை. நானும் இது போன்ற எண்ணற்ற புகைப்படங்களை எடுத்து வைத்துள்ளேன். இது போன்ற ரசனையில் நீங்களும், நானும் ஒன்று போல இருக்கிறோம்.//

      ஒத்த மனம் உடையவர்கள் தானே இணைந்து இருக்கிறோம் நட்பால்.
      நேரம் கிடைக்கும் போது படங்களை , உங்கள் கவிதைகளுடன் பதிவு செய்யுங்கள்.

      //பஞ்சு பொதிகளுக்கு தங்களது கற்பனை உருவங்கள் பொருத்தமாக உள்ளது. கறுப்பு தாடி வைத்த முதியவர் வெண் கொண்டை முதிய பெண்மணி.. மிகவும் ரசித்தேன்.

      ஒவ்வொரு படங்களும் மிக அழகாக இருக்கிறது. பொருத்தமான கவிதைகளும் அருமை.படித்து ரசித்தேன்.//

      படங்களை , கவிதைகளை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      //இந்தப் பதிவுக்கும் உடனடியாக வர இயலவில்லை. தாமதமாக வந்துள்ளேன். தங்களின் சென்ற பதிவுக்கும் பிறகு வருகிறேன். ஏதேதோ வேலைகள். இப்போது இவ்வளவு பிஸியென்றால் அடுத்த மாதம் உறவுகளின் வருகையில் எப்படியிருக்கப் போகிறதோ ? தெரியவில்லை.. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.//

      கமலா கவலை படாதீர்கள். முடிந்த போது வாருங்கள்.
      உறவுகளுடன் மகிழ்ந்து இருங்கள். ஊரிலிருந்து வந்து இருக்கும் மகனுடன் மகிழ்வாய் இருங்கள்.



      நீக்கு