பொன்திரண் டன்ன புரிசடை புரளப்
பொருகடல் பவளமொ டழல்நிறம் புரையக்
குன்றிரண் டன்ன தோளுடை ய்கலம்
குலாயவெண் ணூலொடு கொழும்பொடி யணிவர்
மின்திரண் டன்ன நுண்ணிடை யரிவை
மெல்லிய லாளையோர் பாகமாப் பேணி
அன்றிரண் டுருவ மாய்வெம் மடிகள்
அச்சிறு பாக்கம தாட்சி கொண்டாரே
-திருஞானசம்பந்தர் தேவாரம்
அச்சரப்பாக்கம் கோவிலுக்குப் போன மாதம் 10 தேதி சென்றோம். சென்னைக்கு உறவினர் வீட்டுத் திருமணத்திற்குச் சென்று இருந்தோம். .தேவாரத்தில் இது அச்சிறுபாக்கம் என்று கூறப்படுகிறது.
நாங்கள் போன அன்று சங்கடஹரசதுர்த்தி. இந்தக் கோவிலில் விநாயகர் மிக முக்கியமானவர். அன்று எதிர்பாராமல் சங்கடஹர சதுர்த்தி அமைந்து விட்டது. கோபுர வாயிலுக்குள் நுழையும் போதே வெல்லக் கொழுக்கட்டை
பிரசாதம் தந்தார்கள். விநாயகரின் அருள் கிடைத்த மகிழ்ச்சி.
இக் கோவில் மதுராந்தகத்திலிருந்து தெற்கே 16 கி.மீ . தொலைவில் உள்ளது.
இராஜகோபுரத்துடன் இரண்டு பிரகாரங்கள் கொண்ட கோவில். இரண்டு சிவலிங்கங்கள், இரண்டு அம்பாள்கள் இருக்கிறார்கள்.
ஸ்வாமி பேர் எமையாட்சீசர், அம்மன் சுந்தரநாயகி. (பாலசுகாம்பிகை எனும் இளங்கிளியம்மை என்பன வேறு பெயர்கள்.)
பாண்டிய மன்னன் பிரதிஷ்டை செய்த ஸ்வாமிக்கு உமையாட்சீசர், அம்மன் மெல்லியலாள்.
எமையாட்சீசர் பழமையானவர் ,சுயம்பு மூர்த்தி. பாண்டிய மன்னரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட உமையாட்சீசர் பின்னர் வந்தவர்.
கண்ணுவமுனிவர், கெளதமமுனிவர்,பூஜித்த தலம்.
கொடிமரமும் நந்தியும் கோபுரவாயிலுக்கு நேரே இல்லாமல் சற்றுத் தள்ளி உள்ளன.
ஊரின் பெயர்க் காரணம்:-
1. சிவபெருமான் திரிபுர தகனத்தின் போது பிள்ளையாரை வணங்காமல் போனதால் அவர் ஏறிச் சென்ற தேரின் அச்சு முறிந்தாகவும், பின்
சிவபெருமான் விநாயகரை நினைத்தபின் அச்சு சரியானதாகவும் சொல்லப்படுகிறது. சிவபெருமான் ஏறி வந்த தேரின் அச்சு முறிந்த இடம் என்பதால் இத்தலம் அச்சிறுபாக்கம் என்று அழைக்கப்படுகிறது.
2.சிவபெருமான் திரிபுரதகனம் செய்யும் பொருட்டுத் தேரில் ஏறிச்சென்ற போது தேர்வடிவாக தேவர்கள் இருந்தார்கள். அவர்கள் இறைவனுக்கு துணைசெய்வதை எண்ணி அகந்தை கொண்டதால் இறைவன் அச்சுமுறியச் செய்தார். அதனால் இத்தலம் அச்சிறுபாக்கம் என்றும் கூறப்படுகிறது.
3. பாண்டிய மன்னன் தனது நாட்டில் திருக்கோவில் பிரதிஷ்டைக்கு வேண்டிய பொருட்கள், கங்கை மணல் ஆகியவற்றை ஏற்றி வரும் போது இத்தலத்தின் இடத்தில் அச்சுகள் முறிந்தன. மன்னன் இறைவனது அசரீரி வாக்கினைக் கேட்டு, இத்தலத்தில் திருப்பணிகள் செய்து தன் நாடு திரும்பினார் என்ற வரலாறும் உண்டு. வண்டிகள் அச்சுமுறிந்த இடம் இவ்வூருக்கு அருகில் உள்ள வண்டிக்குப்பம்.
கருவறையில் சுவாமியும் அம்பாளும் சிலைவடிவில் இருக்கிறார்கள்
முன் இருப்பது - எமையாட்சீசர் பழமையான மூர்த்தி
வெளிப் பிரகாரம்
அரசும் வேம்பும் இணைந்து இருக்கும் இடத்தில் பிள்ளையார், நாகங்கள்
அம்மன் சன்னதியில் ஓரத்தில் உள்ள சாஸ்தா
திருஞானசம்பந்தர் பாடல்கள்
உள் கோபுர வாயில்
தீர்த்தம்:-தேவ,பானு சங்கு தீர்த்தங்கள். பானுதீர்த்தம் கோவிலுக்கு எதிரில் உள்ளது.
கோவில் அருகில் ஒரு தேரும், கோவில் எதிரில் ஒரு தேரும் உள்ளது
அச்சு முறிந்த சக்கரங்கள்( இவை பிற்காலத்தில் முறிந்த சக்கரங்கள்)
தலமரம் - கொன்றை. தலவிருட்சத்தின் அடியில் சுவாமி, அம்மன், திருஞானசம்பந்தர், நந்தி
கோபுர வாசல் அருகில் உள்ள இளங்கிளிஅம்மன்
நான்கு காலபூஜை, 10நாட்கள் சித்திரை மாதத்தில் திருவிழா நடக்கிறது.
உள்ளே இருக்கும் ஸ்வாமி சன்னதிக்கு, வெளியே பெருமாளும் இருக்கிறார்
அலுமேலுத் தாயார்
மூன்று தேவியர்- நவராத்திரி மிகச் சிறப்பாக நடைபெறுமாம்.
சித்திரைத் திருவிழா நடைபெறும்போது சுவாமி எழுந்தருளும் வாகனங்கள்.
ஓதுவார் ஞானப்பிரகாசம் அவர்கள் தேவாரங்கள் பாடி, கோவில் வரலாற்றைச் சொன்னார். அவர், ”தினமும் நமச்சிவாயமந்திரம் சொல்லுங்க நலம் அடைவீர்கள் ”என்றார் .
மனநிறைவுடன் அவரிடம் விடைபெற்றுப் பின் சென்னை வரும் வழியில் மேல்மருவத்தூர் அம்மனை நன்றாகத் தரிசனம் செய்து சென்னை வந்து சேர்ந்தோம்.
=====================
வாழ்க வளமுடன்.
