காலை 4,30 எழுந்தவுடன் காலைகடன்கள் முடித்து , உடற்பயிற்சி, தியானம் நிறைவு செய்து தோட்டத்திற்கு போய் சூரியன் உதயம் ஆவதை பார்ப்பது மகிழ்ச்சியான விஷயம். அப்படியே சிறிது நடைபயிற்சியும். மகன் ஊரில் அவன் வீட்டுத்தோட்டத்தில் அதிகாலையில் சூரியோதயம் மற்றும் அதிகாலை பறவைகளின் ஒலியை கேட்பது மிகவும் பிடித்த விஷயம். ஒவ்வொரு நாளும் சூரியன் உதயம் ஆவதைப்பார்த்து வணங்கி அதை படம் எடுத்து வைத்து இருந்தேன். அவற்றில் சில படங்கள் இங்கு இடம் பெறுகிறது.
மகன் வீட்டுத் தோட்டத்திலிருந்து காலைக் கதிரவனை எடுத்த படங்கள். மற்றும் வீட்டு முன்புறம் தெரியும் மாலை கதிரவனையும் , தோட்டத்தில் இரவு நிலாவையும் எடுத்த படங்கள் இந்த பதிவில்.
காலைக் கதிரவன் தன் பொன் கிரணங்களை வான் முழுவதும் பரப்பி அழகு படுத்தினான்.
//கடவுள் வாழ்த்து பாடும் இளங்காலை நேரக்காற்று
என் கைகள் வணக்கம் சொல்லும் செங்கதிரவனைப்பார்த்து//
-கவிஞர் வாலி
வேதம் பாடிய சோதியைக் கண்டு
வேள்விப் பாடல்கள் பாடுதற் குற்றேன்;
நாதவார் கடல் இன்னொலியோடு
நற்றமிழ்ச் சொல் இசையையும் சேர்ப்பேன்;
காதம் ஆயிரம் ஓர் கணத்துள்ளே
கடுகி ஓடும் கதிரினம் பாடி
ஆதவா, நினை வாழ்த்திட வந்தேன்
அணிகொள் வாண்முகம் காட்டுதி சற்றே.
- மகாகவி பாரதியார்
சுருதியின்கண் முனிவரும் பின்னே
தூமொழிப் புலவோர் பலர் தாமும்
பெரிது நின்றன் பெருமை யென்றேத்தும்
பெற்றி கண்டு உனை வாழ்த்திட வந்தேன்;
பரிதியே பொருள் யாவிற்கும் முதலே,
பானுவே, பொன்செய் பேரொளித்திரளே,
கருதி நின்னை வணங்கிட வந்தேன்;
கதிர் கொள் வான்முகம் காட்டுதிசற்றே!
-- மகாகவி பாரதியார்
கதிரவன் தன் ஒளி முகம் காட்டி நின்றான்
கடற்கரையில் சூரிய உதயம் பார்க்க போன பாரதி மேகம் மறைத்து இருப்பதை கண்டு சூரியனை முகம் காட்ட வேண்டிப் பாடிய பாடல்.
மாலைச்சூரியன் மகன் வீட்டுக்கு எதிர் வீட்டுக்கு மேல் புறம் மாலைச்சூரியன்
சூரிய அஸ்தமனம்
மழை பெய்து ஓய்ந்த பின் வானம் மிக அழகாய் இருந்தது இரவு 7 மணி இருக்கும்
காலைமுதல் வானம் மேக மூட்டத்துடன் மழை வர பார்த்தது சூரியன் மறைந்து மறைந்து காட்சி தந்தார். தீடிரென்று மழை கொட்ட ஆரம்பித்து விட்டது. மழை, சூரியன் காட்சிகளை பாருங்களேன். மழை பார்க்க அலுக்காத ஒன்றுதான் ஆனால் விடாது பெய்யும் பெருமழை அனைவருக்கும் கஷ்டம் தான்.
ஏரி குளம் கிணறு ஆறு எல்லாம் நிரம்பி வழிய!
மாரி அளவாய் பொழிய மக்கள் வளமாய் வாழ!