கதைகள் சொல்லும் வீடு
பழைய வீட்டின் மீது நாலு மரம் வளர்த்து இருக்கிறது. முருங்கை மரம், ஆலமரம், அரசமரம், புங்கமரம் வளர்ந்து இருக்கிறது.காலத்தின் சுவடுகளை தாங்கி நிற்கும் இந்த வீட்டில் எத்தனை கதைகள் இருக்கும் !
கடை முழுக்கு சமயம் படித்துறைக்குப் போன போது அதன் அருகில் இருந்த இந்த பழைய வீடு கண்ணில் பட்டது. புகைப்படம் எடுத்து பேஸ்புக்கில் பகிர்ந்து இருந்தேன் நேற்று. அதற்கு அழகாய் இன்று கவிதை வடித்து விட்டார்கள் கீதமஞ்சரி.
கீதமஞ்சரியின் அருமையான கவிதையை நீங்களும் படிக்க இங்கு :-
சந்தடியற்று என்னை அநாதையாக்கிப் போனவர்களின்
எச்சங்கள் இப்போது எங்கோ வெகுதொலைவில்!எங்கிருந்தோ தொலைதூரத்திலிருந்து வந்த
பறவைகளின் எச்சங்கள் இதோ பத்திரமாய் என் தலையில்!
பழகிய உயிர்மூச்சுகளின் பிரிவெண்ணி
பாழ்நினைவுகளால் தடுமாறிடும் பொழுதுகளிலெல்லாம்
வருடிக்கொடுகின்றன இலைக்கரங்களால் கிளைகள்!
சுவர்பிளந்து உள்ளேகுகின்றன வேர்க்கால்கள்!
நானிருந்த இடத்தில் நாளையிருக்கலாம்
ஆலும் அரசும் புங்கையும் முருங்கையும்!
ஆனாலும் என்னை நீங்கள் அடையாளம் காணலாம்
வந்தமரும் பட்சிகளின் ஆரவார ஒத்திசைவில்!
நன்றி கீதமஞ்சரி.
கேட்டீர்களா? வீடு பாடும் கவிதையை.
வாழ்க வளமுடன்.
- ------------------