வெள்ளி, 20 மார்ச், 2026

எங்கு இருந்தாலும் வாழ்க !

 

 நியூஜெர்சியில் மகன் வீட்டு தோட்டத்துக்கு வந்த சிட்டுக்குருவிகள்


மார்ச் 20  இன்று உலக சிட்டுக்குருவி தினம். ஒவ்வொரு ஆண்டும் பதிவு போடுவேன்.

இந்த ஆண்டு புதிதாக போட குருவிகள் எங்கள் வளாகத்திற்கு வரவில்லை.

வீட்டு இருபக்கமும் முன்பு காலி மனைகள் அதில் ஏராளமான மரங்கள், செடி, கொடிகள்  இருந்தன. குருவிகளுக்கு கூடு கட்ட இலை தளைகளும்,   உணவாக புழு பூச்சிகளும்  கிடைத்தன, அவை வந்து எங்கள் குடியிருப்புகளில் கூடு கட்டி மகிழ்வாய் இருந்தது.


இப்போது புறாக்களை வர விடாமல் தடுத்து வலை தடுப்புகள் போட்டதால் குருவிகளுக்கு வீடு கட்ட இடம் இல்லை. அதற்கு உணவும் வீடு கட்ட பொருடகள் கொடுத்த காலி மனைகளில் வளர்ந்து இருந்த செடி, கொடி மரங்களும் இல்லை வீடாகி வருகிறது அதனால் குருவிகள் வரத்து இல்லை.

அதற்கு வசதியான இடம் பார்த்து போய் விட்டது.அதனால் பழைய பதிவுகளிலிருந்து படங்கள் போட்டு இருக்கிறேன்.


அவற்றின் சுட்டிகளும் அந்த பதிவில் உள்ள படங்களும்.:-

உலக சிட்டுக் குருவிகள் தினம்  2012   ஆம் ஆண்டு போட்ட பதிவு

அதிலிருந்து சில :-

குருவிகளிடம் நான் பேசுவது போல போட்ட பதிவு.

சிட்டுக் குருவி சிட்டுக் குருவி எங்கே போனாய் ? நீ வாழ உனக்கு கூடு கட்ட வசதியாக வீடு இல்லை. உன் பசியாற தன் குடும்பத்திற்கு சமைக்க வைத்து இருந்த அரிசி இறைத்து நீ உண்பதை கண்டு களிக்க முண்டாசு கவிஞ்ன் இல்லை. பரசுராமர் தன் தந்தையின் கட்டளைக்கு அடி பணிந்து தன் அன்னையை கொன்றதால் நீ திருவனந்தபுரத்தில் அடைக்கலக்குருவி என்று அழைக்கப்படும் நீ இல்லை என்று என் தாத்தா சொல்வார்கள். உனக்கு ஏன் "அடைக்கலக் குருவி"  என்று பெயர் வந்த்தது என்றால் நீ அடைக்கலமாய் மனிதர் வாழும் வீடுகளில் கூடு கட்டி வசிப்பதால் அந்த பெயர் உனக்கு.

 ஊர்க்குருவி என்ற பெயரும் உண்டு உனக்கு.


மூடர்களிடம், முட்டாள்களிடம் மல்லுக்கட்டக் கூடாது என்று உன் கதையை சிறுவர்களுக்குப்

பாடாமாக்கினார்கள். அந்தக் கதை உனக்குத் தெரியுமே, இருந்தாலும் கேள்! ஒருநாள் சோவென்று பெருமழை பெய்தது. காற்று சுழற்றி அடித்தது. அப்போது நீகூடு கட்டி வாழும் மரத்தின் அடியில் ஒரு குரங்கு வந்து மழைக்கு ஒதுங்கியது. அப்போது நீ சும்மா இருக்காமல் அந்த குரங்கைப் பார்த்து "உனக்கு வசிக்க வீடு இல்லையா நீ வீடு கட்டிக் கொள்ளலாமே எங்களை போல்," என்று கேட்டாய் உடனே கோபப்பட்ட" குரங்கார், ஊசிமூஞ்சி மூடா! எனக்கு கூடு கட்டத் தெரியாது ஆனால் கூட்டைப் பிய்த்து எறியத் தெரியும்" என்று உன் கூட்டை பிய்த்து எறிந்து விட்டது.


பாங்க் விளம்பரத்தில் குருவியைப்போல் சேமிங்க என்று சொல்வார்கள். "சிட்டுப் போல் சுறு சுறுப்பாய் இருக்கா பெண்" என்று சுறு சுறுப்பான பெண்ணைப் பார்த்துச் சொல்வார்கள்.


சின்ன அழகான பெண்ணைப்பார்த்து "சின்னச் சிறிய சிட்டாட்டம் இருக்கா பெண்" என்று வர்ணிப்பார்கள்.

எங்கள் வீட்டு அலமாரியில் உள்ள கண்ணாடியில் உன் முகத்தைப்பார்த்து, அது வேறு குருவி என்று நினைத்துக் கொத்தி கொத்திப் பார்ப்பாய். என்
அம்மா உன் அலகு வலிக்குமே என்று நீ அடுத்தமுறை வருவதற்குள் அலமாரி கண்ணாடிக்குத் திரைச்சீலை தைத்து மாட்டி விட்டார்கள்.

தூத்துக்குடியில் நாங்கள் இருந்த போது முன் அறையில் மாட்டி இருக்கும் படத்துக்குப் பின் வந்து வைக்கோலால் கூடு கட்டினாய். மின் விசிறி ஓடும் போது குறுக்கே குறுக்கே போகிறது, மின் விசிறியில் அடிபட்டு செத்து விடும் என்று என் அப்பா கவலைப்பட்டு நீ வரும் போது மின் விசிறியை அணைப்பார்கள்.

சிட்டுக்குருவிக்கு என்ன கட்டுப்பாடு என்று பாடிய கவிஞன் இன்று சிட்டுக்குருவிக்கு என்ன தட்டுப்பாடு என்றுதான் பாட வேண்டும் .

பூலோகம் எங்கும் பறந்து பறந்து ஊர்வலம் வந்து விளையாடும் நாளை எதிர்பார்க்கும் மனது இறைவனிடம் மன்றாடிக் கேட்கிறது, ஊர்க் குருவியைக் காப்பாற்று என்று.


சின்னஞ் சிறு குருவி   2019  ஆம் ஆண்டு போட்ட பதிவிலிருந்து சில பகுதி:-



குருவிகள் நம்மை அடைக்கலாமாக நம்பி வாழும் பறவை  அதனால் நம் வீடுகளில் தன் கூட்டை அமைக்க விரும்புகிறது.

சின்னஞ் சிறு குருவி போலே- நீ
திரிந்து பறந்துவா பாப்பா,
வண்ணப்பறவைகளை கண்டு- நீ
மனதில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா
- பாரதியார்

குருவிகள் என்னை மகிழ்ச்சி படுத்திக் கொண்டு இருக்கிறது. வயதானால்  சின்னக்குழந்தை தானே! நானும் பறவைகளை கண்டு மகிழ்ச்சி அடைந்து கொண்டு இருக்கிறேன்.

கோடை காலம் வந்து விட்டது, நாம் மொட்டை  மாடியில்,  தோட்டத்தில், பால்கனியில் சிறிது தணணீர் , மற்றும் உணவு வைப்போம். தானியம் வைக்க சொல்கிறார்கள், ஆனால் சமைத்த உணவை சாப்பிட்டு பழகி விட்டது, அதனால், கம்பு, கேழ்வரகு , சோளம் போட்டால் சாப்பிட மாட்டேன் என்கிறது. அதனால் கைபிடி சாதம் வைத்தால் கூட போதும்.


சிங்கார சிட்டுக்கள் 2020  ஆம் ஆண்டு அதிராவின்  கேள்வியால்  பதிவாக்கியது.

மகன் வீட்டுத்தோட்டத்தில் படிகட்டுகளில் வரிசையாக அமர்ந்து இருக்கும் குருவிகள்.





//இன்றைய சிட்டுக்குருவிகளைக் கொண்டாட மறந்திட்டீங்களே கோமதி அக்கா:)//


அதிராவிற்கு  நான் அளித்த பதில் :- சிட்டுக்குருவி தினத்தை மறக்கவில்லை. முகநூலில் பகிர்ந்து இருக்கிறேன்.

நான் மறந்தாலும் மார்க் மறக்காமல் போன வருடம் போட்டதைக் காட்டியது அதைப் போட்டு விட்டேன்.



  அதிரா கேட்டதால் அதிரா படிக்காத  2014ல் பதிவு செய்த  "சிட்டுக்குருவியைத் தேடித் தேடி "என்ற பழைய பதிவை இங்கு மீள் பதிவாக்கி விட்டேன்.


எல்லோரையும் நினைத்து கொள்கிறேன். எங்கள் வீட்டுக்கு போன ஆண்டு வரை வந்த குருவிகள் இந்த ஆண்டு இல்லை.






எங்கு இருந்தாலும் வாழ்க  !என்று குருவிகளை வாழ்த்துக்கிறேன், வாழ்க வளமுடன்.

சிட்டுக்கள் சின்ன சிட்டுக்கள்  எனற பதிவிலிருந்து சில :-




குஞ்சுகள் வளர்ந்து பறந்து போகும் வரை இந்த ஒலி காலை முதல் இரவு வரை கேட்டுக் கொண்டே இருக்கும்

குஞ்சுகள் கூட்டை விட்டுப் பறந்து போன பின்  இந்த ஒலி இல்லாமல் வெறிச் என்று இருக்கும்.  உங்களுக்குக்  குஞ்சுகள் சத்தம் எப்படி கேட்கிறது என்று சொல்லுங்கள். மிகச் சிறிய காணொளிதான்.

 மேலே கொடுத்து இருக்கும் சுட்டியில் போய்  பார்த்து கேட்கலாம் குருவிகள் ஒலியை

குருவிகள் இருந்த வரை எங்களுக்கு மகிழ்ச்சியை அள்ளித் தந்தது.இனி காத்து இருக்க வேண்டும் மீண்டும் வரும் வரை.



மீண்டும் ஜன்னலில் புறா முட்டையிட்டு இருக்கிறது இந்த தடவை இரண்டு முட்டைகள் வைத்து இருக்கிறது.

புறா குஞ்சு பறந்து போனதும் வலை அடிக்க வேண்டும் என்று நினைத்தேன் அதற்குள் அடுத்த முட்டையிட்டு விட்டது. இனி கவனமாக இருக்க வேண்டும் அது பறந்து போவதை கவனிக்க வேண்டும்.

குருவிகளை மனம் விரும்புகிறது அவை நம்மை தொந்திரவு செய்வது இல்லை அதன் கீச் கீச் ஒலி இனிமையாக இருக்கும். அதன் சுறு சுறுப்பு நம்மை தொற்றிக் கொள்ளும். . புறாக்கள் மிகவும் தொந்திரவு, அதன் சத்தம் கேட்க பிடிக்க மாட்டேன் என்கிறது. சுற்றுப்புரத்தை மாசு ஏற்படுத்துகிறது.
ஆனாலும் வெறுக்க முடியவில்லை.

வாழ்க வையகம் ! வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன்!

-----------------------------------------------------------------------------------------------------------------------------

14 கருத்துகள்:

  1. அக்கா முதல் படமே பயங்கரமா ஈர்க்குது அத்தனை அழகு. படம் ரொம்பத் தெளிவாக இருக்கு. ஓ மகன் வீட்டிற்கு வந்ததா? நியூஜெர்சில முன்ன இருந்தப்ப எடுத்ததோ? இப்ப மேற்கில் இல்லையா இருக்காங்க...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்

      //அக்கா முதல் படமே பயங்கரமா ஈர்க்குது அத்தனை அழகு. படம் ரொம்பத் தெளிவாக இருக்கு. ஓ மகன் வீட்டிற்கு வந்ததா? நியூஜெர்சில முன்ன இருந்தப்ப எடுத்ததோ? இப்ப மேற்கில் இல்லையா இருக்காங்க...//

      ஆமாம், மகன் முன்பு இருந்த ஊர் அங்கு எடுத்த படங்கள் அங்கு தினம் குருவிகள் பார்ப்பது நல்ல பொழுது போக்காய் இருந்தது.
      இப்போது இருக்கும் ஊரிலும் குருவிகளை பார்த்து ரசித்து கொண்டு இருப்பேன்.

      போன வருடம் வரை பல வித குருவிகள் வந்தன . இந்த வருடம் ஒரு குருவி கூட வரவில்லை. மைனா, புறா , குயில் , சில நேரம் காகம் வருகிறது

      நீக்கு
  2. ஓ இன்று சிட்டுக்குருவிகள் தினம் இல்லையா மறந்தே போச்சு அக்கா.

    குருவிகள் வராமல் வரவிடாமல் மனிதர்கள் நாம் என்னவெல்லாம் செய்கிறோம் இல்லையா?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஓ இன்று சிட்டுக்குருவிகள் தினம் இல்லையா மறந்தே போச்சு அக்கா.

      குருவிகள் வராமல் வரவிடாமல் மனிதர்கள் நாம் என்னவெல்லாம் செய்கிறோம் இல்லையா?//

      அதற்கு உணவு மற்றும் கூடு கட்ட வேண்டிய பொருட்கள் கிடைக்கும் இடத்தில் வசிக்கப்போய் விட்டது போல.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  3. அக்கா, சிட்டுக்குருவியோட உங்க பேச்சு அருமை அக்கா. ரொம்ப ரசித்து வாசித்தேன். பாருங்க அம்மாவும் அப்பாவும் கூட அதுக்கு உதவி செய்திருக்காங்க. இப்படியான குடும்பங்களில் வளரும் குழந்தைகள் ரொம்ப நல்ல சிந்தனைகளோடு ஆரோக்கியமான குடும்பம் என்பேன் நான். பணமா காசா? குடும்பத்தின் மன ஆரோக்கியம் ரொம்ப முக்கியம்.

    //சிட்டுக்குருவிக்கு என்ன கட்டுப்பாடு என்று பாடிய கவிஞன் இன்று சிட்டுக்குருவிக்கு என்ன தட்டுப்பாடு என்றுதான் பாட வேண்டும் .//

    உண்மை அக்கா. குருவி பார்க்கறதே அரிதாக இருக்கு.

    //பூலோகம் எங்கும் பறந்து பறந்து ஊர்வலம் வந்து விளையாடும் நாளை எதிர்பார்க்கும் மனது இறைவனிடம் மன்றாடிக் கேட்கிறது, ஊர்க் குருவியைக் காப்பாற்று என்று.//

    +1 சேர்ந்துக்கறேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அக்கா, சிட்டுக்குருவியோட உங்க பேச்சு அருமை அக்கா. ரொம்ப ரசித்து வாசித்தேன். பாருங்க அம்மாவும் அப்பாவும் கூட அதுக்கு உதவி செய்திருக்காங்க. இப்படியான குடும்பங்களில் வளரும் குழந்தைகள் ரொம்ப நல்ல சிந்தனைகளோடு ஆரோக்கியமான குடும்பம் என்பேன் நான். பணமா காசா? குடும்பத்தின் மன ஆரோக்கியம் ரொம்ப முக்கியம்.//

      நீங்கள் சொல்வது சரிதான். குடும்பத்தின் மன ஆரோக்கியம் முக்கியம் தான்.

      //உண்மை அக்கா. குருவி பார்க்கறதே அரிதாக இருக்கு.//

      தவிட்டுக்குருவி, பிள்ளி சில்லை, திணைக்குருவி என்று எத்தனை வரும் எங்கள் வாளத்திற்கு இப்போது ஒன்று வரவில்லை.

      //+1 சேர்ந்துக்கறேன்..//

      உங்கள் கருத்துக்கும் பிராத்தனைக்கும் நன்றி கீதா.

      நீக்கு
  4. வணக்கம் சகோதரி

    இன்று சிட்டுக்குருவிகள் தினம் என்று சென்ற வாரமே காலண்டரில் பார்த்ததும் உங்கள் நினைவுதான் வந்தது. இன்று காலையில் சகோதரர் துரை செல்வராஜ் அவர்களின் சிட்டுக்குருவி பதிவை சென்று படித்ததும், காலையிலேயே நீங்களும் பதிவு போடுவீர்கள் என எதிர்பார்த்தேன். அதன் பின்பு வலைப்பக்கம் வர இயலாமல் வேலைகள். ஆனால், இப்போது உங்கள் பதிவை கண்டதும், மனதுக்கு ஆனந்தமாக உள்ளது. பதிவை போட்டு விட்டீர்கள்.சிட்டுக்குருவியின் படங்கள் அபாரமாக உள்ளது. . பாதி வரை படித்துள்ளேன். இதோ, முழுவதையும் படித்து விட்டு மீண்டும் வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //வணக்கம் சகோதரி//

      வணக்கம், வாழ்க வளமுடன் கமலா ஹரிஹரன்

      //இன்று சிட்டுக்குருவிகள் தினம் என்று சென்ற வாரமே காலண்டரில் பார்த்ததும் உங்கள் நினைவுதான் வந்தது. //

      என் நினைவு வந்தது மகிழ்ச்சி.

      //இன்று காலையில் சகோதரர் துரை செல்வராஜ் அவர்களின் சிட்டுக்குருவி பதிவை சென்று படித்ததும், காலையிலேயே நீங்களும் பதிவு போடுவீர்கள் என எதிர்பார்த்தேன். //

      காலையில் எழுதி வைத்து விட்டேன், படங்களை சேர்க்க நேரம் ஆகி விட்டது.
      சகோ துரை செல்வராஜூ அவர்கள் பதிவை நானும் படித்தேன்.


      //அதன் பின்பு வலைப்பக்கம் வர இயலாமல் வேலைகள். ஆனால், இப்போது உங்கள் பதிவை கண்டதும், மனதுக்கு ஆனந்தமாக உள்ளது.//

      உங்கள் மகிழ்ச்சி எனக்கும் வந்து விட்டது.

      // பதிவை போட்டு விட்டீர்கள்.சிட்டுக்குருவியின் படங்கள் அபாரமாக உள்ளது. .//

      நன்றி.

      //பாதி வரை படித்துள்ளேன். இதோ, முழுவதையும் படித்து விட்டு மீண்டும் வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.//

      பொறுமையாக வாங்க கமலா.
      நன்றி.

      நீக்கு
  5. நானும் பறவைகளை கண்டு மகிழ்ச்சி அடைந்து கொண்டு இருக்கிறேன்.//

    அதேதான் நானும்.

    அக்கா நானும். இன்று நான் உங்களிடம் சொல்லி முடித்தேன் இல்லையா...பறவைகளை ரொம்பக் காணலைன்னு....சொல்லி முடித்ததும்... பாம்புத்தாரா பறந்து வந்து தண்ணீரில் வந்து முங்கி மீன் பிடிக்கத் தொடங்கியது. அப்புறம் பெலிக்கன் வந்து நீந்தத் தொடங்கியது. என்றாலும் வழக்கம் போல் ஆகாயத்தாமரையில் இருக்கும் கூட்டத்தைக் காணலை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதேதான் நானும்.

      //அக்கா நானும். இன்று நான் உங்களிடம் சொல்லி முடித்தேன் இல்லையா...பறவைகளை ரொம்பக் காணலைன்னு....சொல்லி முடித்ததும்... பாம்புத்தாரா பறந்து வந்து தண்ணீரில் வந்து முங்கி மீன் பிடிக்கத் தொடங்கியது. அப்புறம் பெலிக்கன் வந்து நீந்தத் தொடங்கியது. என்றாலும் வழக்கம் போல் ஆகாயத்தாமரையில் இருக்கும் கூட்டத்தைக் காணலை.//

      ஆஹா ! "ஏரிக்கரை மேலிருந்து எட்டு திசை பார்த்திருந்து ஏந்திழைக்கு காத்து இருந்தேன் காணலை" என்ற பாட்டு நினைவுக்கு வந்தது. பறவைகளை காணலை என்றதும் உங்களை ஏங்க விடாமல் வந்து விட்டதே ! பறவைகள்.

      வரும் சில பறவைகள் விரைவில் கூடு திரும்பி விடும் .
      அடுத்த நாள் வரும் நிறைய.

      நீக்கு
  6. இப்ப எல்லாம் சமைத்த உணவுதான் போலும்...சிட்டுக்குருவி அரிசி பொறுக்கிக் கொண்டு சென்று பாயசம் வைக்கும் கதை கூட உண்டே!

    என் கணவரின் தாத்தா வீட்டில் உத்தரத்தில் ஆங்காங்கே ஓட்டைகள் அழகாகப் போட்டு வைத்திருந்தார். அதில் குருவிகள் வந்து கூடு கட்டடும் என்று கோடைகாலம்தானே அவங்க காலம்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இப்ப எல்லாம் சமைத்த உணவுதான் போலும்...சிட்டுக்குருவி அரிசி பொறுக்கிக் கொண்டு சென்று பாயசம் வைக்கும் கதை கூட உண்டே!//

      ஆமாம். அருமையான கதை குழந்தைகளுக்கு சொல்லும் கதை.
      சுவையான பாய்சம் தயாரித்து எல்லோருக்கும் கொடுத்து தாங்களும் சாப்பிடும் கதை.

      //என் கணவரின் தாத்தா வீட்டில் உத்தரத்தில் ஆங்காங்கே ஓட்டைகள் அழகாகப் போட்டு வைத்திருந்தார். அதில் குருவிகள் வந்து கூடு கட்டடும் என்று கோடைகாலம்தானே அவங்க காலம்!//

      ஓ ! குருவி கூடு கட்டி நன்றாக வாழ்ந்து இருக்கும் தாத்தா வீட்டில் இல்லையா?

      நீக்கு
  7. மகன் வீட்டுக் குருவிகள் படம் சூப்பர்.

    அந்த வயர்/பைப்பில் அமர்ந்திருக்கும் குருவி படம் பார்த்ததும் நினைவு வந்தது.

    குருவி குஞ்சுக்கு ஊட்டுவது அழகு.

    அக்கா காணொளியைக் காணவில்லையே குஞ்சுகள் சத்தம்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மகன் வீட்டுக் குருவிகள் படம் சூப்பர்.

      அந்த வயர்/பைப்பில் அமர்ந்திருக்கும் குருவி படம் பார்த்ததும் நினைவு வந்தது.

      குருவி குஞ்சுக்கு ஊட்டுவது அழகு.

      அக்கா காணொளியைக் காணவில்லையே குஞ்சுகள் சத்தம்.//

      அந்த பதிவுக்கு சுட்டி கொடுத்து இருக்கிறேன் அல்லவா அதில் இருக்கிறது காணொளி அதை சரியாக குறிப்பிடவில்லை போலும் இப்போது போய் திருத்துகிறேன்.
      உங்கள் கருத்துகளுக்கு நன்றி கீதா.

      நீக்கு