நியூஜெர்சியில் மகன் வீட்டு தோட்டத்துக்கு வந்த சிட்டுக்குருவிகள்
மார்ச் 20 இன்று உலக சிட்டுக்குருவி தினம். ஒவ்வொரு ஆண்டும் பதிவு போடுவேன்.
இந்த ஆண்டு புதிதாக போட குருவிகள் எங்கள் வளாகத்திற்கு வரவில்லை.
வீட்டு இருபக்கமும் முன்பு காலி மனைகள் அதில் ஏராளமான மரங்கள், செடி, கொடிகள் இருந்தன. குருவிகளுக்கு கூடு கட்ட இலை தளைகளும், உணவாக புழு பூச்சிகளும் கிடைத்தன, அவை வந்து எங்கள் குடியிருப்புகளில் கூடு கட்டி மகிழ்வாய் இருந்தது.
இப்போது புறாக்களை வர விடாமல் தடுத்து வலை தடுப்புகள் போட்டதால் குருவிகளுக்கு வீடு கட்ட இடம் இல்லை. அதற்கு உணவும் வீடு கட்ட பொருடகள் கொடுத்த காலி மனைகளில் வளர்ந்து இருந்த செடி, கொடி மரங்களும் இல்லை வீடாகி வருகிறது அதனால் குருவிகள் வரத்து இல்லை.
அதற்கு வசதியான இடம் பார்த்து போய் விட்டது.அதனால் பழைய பதிவுகளிலிருந்து படங்கள் போட்டு இருக்கிறேன்.
அவற்றின் சுட்டிகளும் அந்த பதிவில் உள்ள படங்களும்.:-
உலக சிட்டுக் குருவிகள் தினம் 2012 ஆம் ஆண்டு போட்ட பதிவு
அதிலிருந்து சில :-
குருவிகளிடம் நான் பேசுவது போல போட்ட பதிவு.
சிட்டுக் குருவி சிட்டுக் குருவி எங்கே போனாய் ? நீ வாழ உனக்கு கூடு கட்ட வசதியாக வீடு இல்லை. உன் பசியாற தன் குடும்பத்திற்கு சமைக்க வைத்து இருந்த அரிசி இறைத்து நீ உண்பதை கண்டு களிக்க முண்டாசு கவிஞ்ன் இல்லை. பரசுராமர் தன் தந்தையின் கட்டளைக்கு அடி பணிந்து தன் அன்னையை கொன்றதால் நீ திருவனந்தபுரத்தில் அடைக்கலக்குருவி என்று அழைக்கப்படும் நீ இல்லை என்று என் தாத்தா சொல்வார்கள். உனக்கு ஏன் "அடைக்கலக் குருவி" என்று பெயர் வந்த்தது என்றால் நீ அடைக்கலமாய் மனிதர் வாழும் வீடுகளில் கூடு கட்டி வசிப்பதால் அந்த பெயர் உனக்கு.
ஊர்க்குருவி என்ற பெயரும் உண்டு உனக்கு.
மூடர்களிடம், முட்டாள்களிடம் மல்லுக்கட்டக் கூடாது என்று உன் கதையை சிறுவர்களுக்குப்
பாடாமாக்கினார்கள். அந்தக் கதை உனக்குத் தெரியுமே, இருந்தாலும் கேள்! ஒருநாள் சோவென்று பெருமழை பெய்தது. காற்று சுழற்றி அடித்தது. அப்போது நீகூடு கட்டி வாழும் மரத்தின் அடியில் ஒரு குரங்கு வந்து மழைக்கு ஒதுங்கியது. அப்போது நீ சும்மா இருக்காமல் அந்த குரங்கைப் பார்த்து "உனக்கு வசிக்க வீடு இல்லையா நீ வீடு கட்டிக் கொள்ளலாமே எங்களை போல்," என்று கேட்டாய் உடனே கோபப்பட்ட" குரங்கார், ஊசிமூஞ்சி மூடா! எனக்கு கூடு கட்டத் தெரியாது ஆனால் கூட்டைப் பிய்த்து எறியத் தெரியும்" என்று உன் கூட்டை பிய்த்து எறிந்து விட்டது.
பாங்க் விளம்பரத்தில் குருவியைப்போல் சேமிங்க என்று சொல்வார்கள். "சிட்டுப் போல் சுறு சுறுப்பாய் இருக்கா பெண்" என்று சுறு சுறுப்பான பெண்ணைப் பார்த்துச் சொல்வார்கள்.
சின்ன அழகான பெண்ணைப்பார்த்து "சின்னச் சிறிய சிட்டாட்டம் இருக்கா பெண்" என்று வர்ணிப்பார்கள்.
எங்கள் வீட்டு அலமாரியில் உள்ள கண்ணாடியில் உன் முகத்தைப்பார்த்து, அது வேறு குருவி என்று நினைத்துக் கொத்தி கொத்திப் பார்ப்பாய். என் அம்மா உன் அலகு வலிக்குமே என்று நீ அடுத்தமுறை வருவதற்குள் அலமாரி கண்ணாடிக்குத் திரைச்சீலை தைத்து மாட்டி விட்டார்கள்.
தூத்துக்குடியில் நாங்கள் இருந்த போது முன் அறையில் மாட்டி இருக்கும் படத்துக்குப் பின் வந்து வைக்கோலால் கூடு கட்டினாய். மின் விசிறி ஓடும் போது குறுக்கே குறுக்கே போகிறது, மின் விசிறியில் அடிபட்டு செத்து விடும் என்று என் அப்பா கவலைப்பட்டு நீ வரும் போது மின் விசிறியை அணைப்பார்கள்.
சிட்டுக்குருவிக்கு என்ன கட்டுப்பாடு என்று பாடிய கவிஞன் இன்று சிட்டுக்குருவிக்கு என்ன தட்டுப்பாடு என்றுதான் பாட வேண்டும் .
பூலோகம் எங்கும் பறந்து பறந்து ஊர்வலம் வந்து விளையாடும் நாளை எதிர்பார்க்கும் மனது இறைவனிடம் மன்றாடிக் கேட்கிறது, ஊர்க் குருவியைக் காப்பாற்று என்று.
சின்னஞ் சிறு குருவி 2019 ஆம் ஆண்டு போட்ட பதிவிலிருந்து சில பகுதி:-
சிங்கார சிட்டுக்கள் 2020 ஆம் ஆண்டு அதிராவின் கேள்வியால் பதிவாக்கியது.
மகன் வீட்டுத்தோட்டத்தில் படிகட்டுகளில் வரிசையாக அமர்ந்து இருக்கும் குருவிகள்.
//இன்றைய சிட்டுக்குருவிகளைக் கொண்டாட மறந்திட்டீங்களே கோமதி அக்கா:)//
நான் மறந்தாலும் மார்க் மறக்காமல் போன வருடம் போட்டதைக் காட்டியது அதைப் போட்டு விட்டேன்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக