புதன், 19 ஆகஸ்ட், 2020

சிட்டுக்கள்! சின்னச் சிட்டுக்கள்!




என் வீட்டு ஜன்னலில்

சிட்டுக்குருவிகள் பக்கத்துவீட்டுச் சுவரில் ஒவ்வொரு தடவையும்  கூடு கட்டிக் குஞ்சு பொரிக்கும்.  இந்த இடம் உங்களுக்குத் தெரிந்த இடம் தான். ஓவ்வொரு முறை குஞ்சு பொரித்துப் போகும்போதும் பதிவுகள் போட்டு இருக்கிறேன்.

குஞ்சுகள்பொரிந்து சத்தம் கொடுக்க ஆரம்பித்தவுடன்  வழக்கம் போல் (எப்போதும் செய்யும் பிரார்த்தனை ) "நல்லபடியாகப் பறந்து போகவேண்டுமே !"என்ற பிரார்த்தனை செய்ய ஆரம்பித்து விடுவேன்.

ஆகஸ்ட் 15 தேதி கூட்டுக்குப் பக்கம் இருந்து பெற்றோர் குருவிகளின் கூக்குரல். என்ன சத்தம் ! என்று பால்கனியில் போய்ப் பார்த்தால் கூட்டில் இருந்து சர் என்று ஒரு குஞ்சு பறந்துபோனது. அதைத் தொடர்ந்து தாய்க்குருவி வேகமாய் அதன் பின்னால் பறந்துபோனது. அடுத்து கொஞ்ச நேரத்தில் இரண்டாவது குருவி  பறந்து வந்து எங்கள் வீட்டு ஜன்னலில் அமர்ந்து விட்டது.
வெகுநேரம் முகம் காட்ட மறுத்து முதுகு பக்கம் காட்டியே அமர்ந்து இருந்தது.

தந்தைக் குருவி

தாய்க் குருவி

தகப்பன் குருவி, தாய்க் குருவி இரண்டும்,' பத்திரமாய் இருக்கிறாயா? பறக்க முடிந்தால் பற'' என்று சொல்லிவிட்டுப் போன பின் -
(அலைபேசிப் படங்கள்)

தைரியம் வந்து திரும்பிப் பார்த்தது

காமிரா எடுத்துவந்து பக்கத்தில் போய் எடுத்தேன். அமைதியாக அமர்ந்து என்னை வேடிக்கை பார்த்தது

குருவி தன் பறந்து போன முதல் குஞ்சைத் தேடும்போது அந்த வழியாக வந்த கறுப்புப் பூனையைப் பார்த்து ஒரே கத்தல் ! 
அது ,''ஏன் இப்படி கத்துகிறாய்!' என்று ஒரு பார்வைபார்த்து ஓடிப் போனது.





சிறிது நேரமே இந்தக் காணொளி - எங்கள் வீட்டு ஜன்னலில் அமர்ந்து இருக்கும் குஞ்சு,  இன்னொரு குஞ்சைத் தேடும் தகப்பன் குருவி. அதன் தவிப்பைப் பார்க்கவே மிகவும் கஷ்டமாய் இருந்தது. நீ இங்கு பத்திரமாய் இரு, நான் உன் சகோதரனைத் தேடி வருகிறேன் என்று பறந்து போவதுபோல் இருக்கும். நேரம் கிடைக்கும்போது பார்த்து கருத்து சொல்லுங்கள்.

மூன்றாவது குஞ்சு இது -கூட்டை விட்டுக் கீழே விழுந்துவிட்டது.  முதல்நாள் சத்தமே இல்லாமல் தேங்காய் நார்களுக்கு அடியில் இருந்தது, தெரியவில்லை ,
மறுநாள் உணவு கொடுக்க வந்த தந்தைப் பறவையின் சத்தம் கேட்டு மெலிதாகச் சத்தம் கொடுத்தது.  

சிட்டுக்குருவிப் பெற்றோர்கள் தன் குஞ்சுகளுக்கு நான் தட்டில் வைத்து இருக்கும் உணவை ஒவ்வொரு  பருக்கையாக(சோற்றுப் பருக்கை)  சளைக்காமல் கொத்திக் கொண்டுபோய்க் கொடுக்கும் . காலை முதல் மாலை வரை கொடுக்கும்.




நான் தட்டில் வைத்து இருக்கும் உணவைக் கொண்டுவந்துவந்து கொடுத்தது அதன் பின் அதற்கு சத்தம் நன்றாக வந்தது. 


மாலை  என் அடுக்களை ஜன்னலுக்குப் பறந்து வந்து உட்கார்ந்து இருந்தது. அப்புறம்  தொலைபேசி அழைப்பு வந்துவிட்டது எனக்கு .மாலை கூட்டுப்பிரார்த்தனைக்கு . அது முடிந்து வந்து பார்த்தால் மூன்றாவது குருவியும் பறந்து போய்விட்டது. நல்லபடியாகப் பறந்து போனது மனதுக்கு மகிழ்ச்சி.




குருவிக்கூட்டில் குருவிக்குஞ்சுகளின் சினுங் , சினுங் ஒலி

குஞ்சுகள் வளர்ந்து பறந்து போகும் வரை இந்த ஒலி காலை முதல் இரவு வரை கேட்டுக் கொண்டே இருக்கும்

குஞ்சுகள் கூட்டை விட்டுப் பறந்து போன பின்  இந்த ஒலி இல்லாமல் வெறிச் என்று இருக்கும்.  உங்களுக்குக்  குஞ்சுகள் சத்தம் எப்படி கேட்கிறது என்று சொல்லுங்கள். மிகச் சிறிய காணொளிதான்.

குருவிகள் இருந்த வரை எங்களுக்கு மகிழ்ச்சியை அள்ளித் தந்தது.இனி காத்து இருக்க வேண்டும் மீண்டும் வரும் வரை.

                                            வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்


56 கருத்துகள்:

  1. சிட்டுக்குருவி சப்தமே நல்லா இருக்கு.

    படங்களும் அழகாக வந்திருக்கு.

    இங்கெல்லாம் சிட்டுக்குருவி கூடுகளையே பார்க்க முடிவதில்லை. பருந்து, புறா, கிளி, சில சமயம் மயில், செம்போத்து, இன்னும் கலர் கலர் குருவிகள், நிறைய மைனாக்கள், காக்கைகள்தான் பார்க்கிறோம்.

    படங்கள் பார்த்ததும் சிறு வயது கிராமம் நினைவுக்கு வந்துவிட்டது. அங்குதான் நிறைய குருவிகள், அதிலும் வீட்டுக்குள்ளேயே பறந்துபோகும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்
      சிட்டுக்குருவியை தவிர மற்ற பறவைகள் வருகிறதே!

      தாளவாடி கிராமம் தானே? பார்க்க நன்றாக இருக்குமே ஊர் குருவி வாழ ஏற்ற இடம்.

      கடைசி காணொளி வரவே மாட்டேன் என்கிறது மீண்டும் மீண்டும் வலை ஏற்றிப் பார்த்து விட்டேன்.

      முகநூலில் போட்டேன் இங்கு வரமாட்டேன் என்கிறது
      படங்களை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
    2. இல்லை கோமதி அரசு மேடம்... தாளவாடி இல்லை (அது மலைக் கிராமம். 7,8வது அங்கு படித்தேன். நட்டுவாக்காளி, தேள், நாகப் பாம்பு, மலைப் பாம்புலாம் சர்வ சாதாரணம். பக்கத்துல திம்பம் பகுதிலலாம் யானை அடித்துப்போடுவதுவும் சாதாரண செய்திதான். அந்த ஊரில் ஒரு ஆறு உண்டு. மலையில் மழை பெய்யும்போது காட்டாறாக மிக மிக வேகமா வரும். இங்கும் பறவைகள், அதிலும் செம்போத்து நிறைய உண்டு). நான் சொன்ன கிராமம், கீழநத்தம், திருநெல்வேலி.

      நீக்கு
    3. ஆமாம், மறந்து விட்டது உங்கள் ஊர் கீழநத்தம் திருநெல்வேலி என்று சொன்னதை மறந்து விட்டேன்.

      தாளவாடி பற்றி ஒரு முறை சொல்லி இருந்தீர்கள் அதனால் அதுவோ என்று நினைத்தேன்.

      திருநெல்வேலியில் குருவிகள் நிறைய உண்டு. பாளையங்கோட்டையில் எங்கள் வீட்டில் குருவிகள் கூடு கட்டும்.

      தாளவாடி காட்டுப் பகுதி அல்லவா? அதனால் நீங்கள் சொல்வது எல்லாம் வரும்.

      மலை பகுதி, காட்டாறு பறவைகள் இதும் அழகாய்தான் இருக்கும்.
      மீண்டும் வந்து கருத்து சொன்னத்ற்கு நன்றி.





      நீக்கு
  2. சிட்டுக் குருவிகள் கூடு கட்டுவது குல் விருத்தி என்பார்கள்...

    மீண்டும் மீண்டும் சிட்டுக் குருவிகள் தங்களைத் தேடி வர இருக்கின்றன...

    வாழ்க வளமுடன்..
    வாழ்க வையகம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்.
      பக்கத்து வீடு எங்கள் வீடு இல்லை.
      குருவிகள் எங்கள் வீட்டுக்கு வரும்.
      புள்ளிச்சில்லை எனும் குருவிதான் எங்கள் வீட்டில் கூடு கட்டி இருந்தது.
      இந்த சிட்டுக்குருவிகள் பக்கத்து வீட்டு சுவரில் கட்டும் .
      உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

      நீக்கு
  3. உங்கள் இல்லத்தை தங்கள் இல்லம் போல நினைக்கின்றன சிட்டுக்குருவிகள்.  என்ன ஒரு நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறீர்கள் அவற்றுக்கு...    காணொளியில் இரண்டு காணொளி வீடியோ இல்லை என்று ஆச்சர்யக்குறி காட்டுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
      இன்னும் நிறைய படங்கள் எடுத்தேன், வேறு ஒரு தினத்தில் போட வேண்டும்.
      முகநூலில் பார்த்து இருப்பீர்கள் கூட்டுக்குள் குருவிகள் குரல் மட்டும் கேட்கும் வீடியோ
      அது இங்கு வலைஏற்றினேன் வரவே மாட்டேன் என்கிறது. நிறைய தடவை முயற்சி செய்து விட்டேன்.

      நீக்கு
    2. ஆமாம்.  பேஸ்புக்கில் பார்த்தேன்.

      நீக்கு
  4. தாய்க்குருவியுடன் தந்தைக்குருவியும் பொறுப்பு எடுத்துக்கொள்வது ஆச்சர்யம்.  சில பறவைகள் வகைகளில் தாய் முட்டையிட்டு பறந்து விட்டால் தந்தை மட்டுமே பார்த்துக்கொள்ளும் இல்லை?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரண்டும் பறவைகளும் சேர்ந்து வந்து தான் மாறி மாறி உணவு கொடுக்கும்.

      //சில பறவைகள் வகைகளில் தாய் முட்டையிட்டு பறந்து விட்டால் தந்தை மட்டுமே பார்த்துக்கொள்ளும் இல்லை?//

      தெரியவில்லை ஸ்ரீராம். முதலில் பறந்த குஞ்சோடு தாய் பறவை பறந்து போனது, அப்புறம் வந்த மாதிரி தெரியவில்லை.

      தந்தை பறவைதான் உணவு கொடுக்கிறது.

      நீக்கு
  5. அலைபேசி படங்களாயினும் தெளிவாய் வந்திருக்கின்றன.  சட்சட்டென பறக்கும் சிட்டுக்குருவிகள் போட்டோவுக்கு ஓடாமல் போஸ் கொடுத்திருப்பதற்கே பாராட்ட வேண்டும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் துணி காயபோடப் போகும் போது உணவு எடுக்க வரும் பயப்படாமல் சாதத்தை கொத்தி சாப்பிடும். பழகி விட்டது
      நீங்கள் சொல்வது போல் போஸ் கொடுத்த சிட்டுக்குருவியை பாராட்ட வேண்டும் தான்.

      குஞ்சுக்கு பயமில்லை அதனால் பக்கத்தில் எடுத்தேன். சில படங்கள் தூரத்தில்
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  6. படங்கள் அழகு
    தங்கள் மனது புரிந்து, தங்களது இல்லத்தை, அவை தங்கள் இல்லமாக எண்ணி
    வாழ வருகின்றன
    வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்
      பறவைகள் என்றுமே மகிழ்ச்சியை அள்ளித் தரும்.
      ஜன்னலில் வந்து அமர்ந்து அது நம்மைப் பார்க்கும் போது மனதுக்கு ஆறுதல்.
      உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

      நீக்கு
  7. சிட்டுக்குருவிகளை மீண்டும் மீட்டெடுத்து வாழ விடவேண்டும். அலைபேசி கோபுரங்களால் நிறைய அழிந்து விட்டன.

    மனிதர்கள் பறவையினத்தை மறந்து விட்டனர். மனிதஇனம் இல்லாமல் பறவைகள் வாழ்ந்து விடும்.

    ஆனால் பறவையினம் இல்லையெனில் மனிதஇனம் அழிந்து விடும்.

    பறவைகள்தான் வனங்களை வளர்த்து விடுகின்றன அதனால்தான் மழை வருகிறது. இதை மனிதர்கள் உணரவில்லை.

    காணொளி இல்லையே...
    படங்கள் அருமை சகோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தேவகோட்டை ஜி ,வாழ்க வளமுடன்

      சிட்டுக்குருவிகள் இப்போது நிறைய இடங்களில் காணப்படுகிறது ஜி.
      கோவையில் எங்கள் மாமியார் வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் இயற்கை விவசாயி தன் வயலில் இயற்கை விவசாயம் செய்கிறார். பறவைகளுக்கு என்று சிறு தானியங்களை பயிர் செய்கிறார் தன் வயலில் ஒரு பக்கத்தில். அதை அவர் பறவைகளுக்கு என்று விட்டு விடுகிறார் பறவைகள் வந்து கொத்தி செல்கிறது. இந்த உலகம் நமக்கு மட்டும் இல்லை என்று அவர் அடிக்கடி சொல்வார். (நீங்கள் அடிக்கடி சொல்வது போல்)

      நேற்று அவர் வயலையும் அவர் பேட்டியை இரண்டு மூன்று சேனல்களில் காட்டினார்கள்.

      பறவைகளின் அவசியம் உணர்ந்து வருவது மகிழ்ச்சியே.
      ஒரு காணொளி இருக்கே ஜன்னலில் அமர்ந்து குஞ்சை தேடுவதும் ஜன்னலில் வந்து உட்கார்ந்து இருக்கும் குருவியிடம் பேசுவதும்.

      உங்கள் அருமையான கருத்துக்கு நன்றி.


      நீக்கு
    2. இரண்டு காணொளிகள் கண்டு ஒலி கேட்டேன்.

      நீக்கு
    3. இரண்டு காணொளிகளும் கேட்டது மகிழ்ச்சி, நன்றி.
      காலையில் மீண்டும் முயற்சி செய்து போட்டு விட்டேன்.

      நீக்கு
  8. உங்களின் இந்தப்பாசம் என்னை நெகிழச் செய்கிறது அம்மா...

    அந்த தவிப்பை வாசிக்கும் போதும் உணர்ந்தேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்

      அவைகளுடன் ஒரு பாசப்பிடிப்பு வந்து விட்டது.நம்மை நலம் விசாரித்து போகும் தினம்.
      பறவைகளின் வானத்தில் மகிழ்ச்சியாக சிறகடித்து பறப்பது போல் நமக்கு காட்சி அளிக்கிறது ஆனால் அதன் வாழ்க்கை முறை !ஏவ்வளவு இடர்களை தாங்க வேண்டி இருக்கிறது.

      நீக்கு
  9. காணொளி எந்த format-ல் உள்ளது...? mp4 ஆக மாற்ற :-

    இணையத்தில் : http://www.convertfiles.com/
    கணினியில் : VLC Player

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தனபாலன் நான் போனில் இருந்து அப்படியே மெயிலுக்கு அனுப்பி, டவுன் லோடு செய்தேன். தொழில் நுட்பம் ஒன்று தெரியவில்லை. நீங்கள் சொல்வது போல் செய்து பார்க்கிறேன்.நான் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய.
      உங்கள் கருத்துக்கும் உங்கள் உதவிக்கும் நன்றி.
      முயற்சி செய்து பார்க்கிறேன்.

      நீக்கு
    2. மீண்டும் காணொளிகளை ரசித்து பார்த்தமைக்கு நன்றி.

      நேற்று மின்சாரம் இல்லை. இன்வெட்டரில் ஓடியது.

      mp4 format-ல் தான் இருந்தது நீங்கள் சொன்ன பின் பார்த்தேன். இணைய வேகம் குறைந்து இருந்ததால் ஒரு காணொளி மட்டும் ஏறி இருந்தது. மீண்டும் மறு நாள் முயற்சி செய்தேன் வந்து விட்டது.
      அதனால் போகவில்லை போலும்

      நீக்கு
  10. ஆஹா சிட்டுக் குருவிகள் எனில், பார்த்துக் கொண்டே இருக்கலாம் கோமதி அக்கா... பார்க்கப் பார்க்க ஆசையாக இருக்கும். இம்முறை உலக நாடுகளில், கொரோனாவால சிட்டுக்கள் மற்றும் பொதுவாகப் பறவைகள் பெருகியிருப்பதாக எல்லோரும் சொல்கிறார்கள். எங்கள் வீட்டிலும் அவதானிக்கிறேன், அதிகமான சிட்டுக்கள் இம்முறை குஞ்சு பொரித்துப் பெருகியிருக்கு. வழமையை விட இம்முறை டெய்சிக்கும் அதிகம் சிட்டுக்குருவிகள் இரையாகிவிட்டன:(.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்
      ஆமாம் அதிரா, சிட்டுக்களை பார்த்துக் கொண்டே இருக்கலாம் தான்.
      கெட்டதிலும் நன்மை ஏற்பட்டு என்று சொல்லுங்கள். பறவைகள் பெருகி இருப்பது நல்லதுதான். டெய்சிக்கும் இறைவன் கொடுக்கிறார். குருவிகள் முட்டை யிட்ட சமயம் பூனை, மற்ற பறவைகள் கூட்டு பக்கம் வந்து விட கூடாது காட்டுக்கத்தல் கத்தும் குருவிகள். இத்தனைக்கும் அந்த பொந்துக்குள் எதும் நுழைய முடியாது.

      நீக்கு
  11. முந்திக் கட்டிய அதே இடத்திலேயே இம்முறையும் கூடு கட்டியிருக்கின்றன போல இருக்கே... கறுப்புக் கலர் கலந்திருப்பவை ஆண் சிட்டுக்களோ கோமதி அக்கா?
    ஆனா குஞ்சுகளைப் பார்க்க, அவையும் தாய்ப்பறவையைப்போல பெரிசாக இருக்கின்றனவே..

    வீடியோவிலும் சிட்டுக் குஞ்சு அழகாகப் போஸ் குடுக்குது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முந்தி கட்டிய இடமே தான். அடுத்த தடவை முட்டையிட வரும் போது கூட்டில் உள்ள பழைய குப்பைகளை வெளியே தள்ளி இரண்டு பற்வைகளும் சுத்தம் செய்யும். பஞ்சு, தேய்காய் நார்கள், குச்சிகள் கொண்டு வந்து கூட்டை அமைக்கும் சில நாட்கள் அப்புறம் தான் முட்டையிடும். மூன்று குஞ்சு களில் முதலில் முண்டி அடித்து உணவை வாங்கும் குஞ்சு பெரிதாக முதலில் பறந்து விடுகிறது, அடியில் இருக்கும் நிதானமாய் உணவை வாங்கும் பறவை சிறிதாக இருக்கிறது. உணவு கொடுக்கும் குஞ்சு பார்க்க சின்னதாக தெரிகிறது , பறந்து வந்து ஜன்னலில் அமர்ந்த போது அதுவும் தாய் பறவை அளவு இருக்கிறது.

      இந்த முறை குஞ்சு ஆண்குஞ்சுகள் பயம் இல்லாமல் போஸ் குடுத்தது.
      இன்னும் நிறைய வீடியோ எடுத்தேன். குஞ்சு எங்கள் வீட்டு ஜன்னலில், பெரிய குருவிகள் எதிர் வீட்டு ஜன்னலில் அவைகள் பேசிக் கொள்வது எல்லாம் கவிதை, கதை எழுதுபவர்கள் எழுதலாம் அவ்வளவு தவிப்பு அவைகளிடம் இருக்கிறது.

      நீக்கு
  12. இங்கு எங்களுக்கு ஸ்கூல் தொடங்கிவிட்டது கோமதி அக்கா, அதனால என்னால முடியவில்லை.. அதிலும் நீண்ட நாட்கள் வராமல் விட்டமையால ரைப் பண்ணுவதற்கு எழுத்துக்களும் மறந்து, கை பாவுதில்லை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பள்ளி வேலைகள் அதிகம் இருக்கும். முடிந்த போது வந்து சின்னதாக கருத்து போடுங்கள் போதும். அப்படியே பழகி விட்டால் டைப் செய்ய வந்து விடும். பழக்கம் மறக்காது.
      முடிந்த் அபோது போஸ்ட் போடுங்கள்.விடுமுறையில் தைத்த துணிகள் பற்றி, நீங்கல் செய்த கை வேலைகள். எல்லாம் போடுங்கள் உற்சாகம் தன்னால் வந்து விடும்.
      பாடங்களும் தயார் செய்து குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும் இல்லையா? இந்த ஆண்டு பாடத்திட்டம் எப்படி இருக்கிறது?
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  13. அன்பு கோமதி
    இனிய காலை வணக்கம்.
    எத்தனை அற்புதமான படங்கள்.
    குருவிகள் கூடு கட்ட அருமையான இடம் உங்களுக்கு எதிர்த்தாப்போல் கிடைத்து விட்டது.
    சிட்டுக் குருவிகளின் சத்தம் என்றுமே இனிமை.
    அதுவும் குஞ்சுகளின் சத்தம் கூட்டுக்குள்ளிருந்து கேட்கும் போது
    குதூகலம் தான். உங்களுக்கு இனிமையான் பொழுது கழிய இன்னும்
    பல குருவிகள் அங்கே கூடு கட்டி
    பலவாகப் பெருகப்
    பிரார்த்தனைகள்.
    ஒரு வீடியோ வந்தது.
    மற்றவை வரவில்லைம்மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்
      காலை வணக்கத்திற்கு நன்றி.
      இந்த வீட்டுக்கு வந்தவுடன் என் மனதை கவர்ந்தது சிட்டுக்குருவிகள்தான்.

      //அதுவும் குஞ்சுகளின் சத்தம் கூட்டுக்குள்ளிருந்து கேட்கும் போது
      குதூகலம் தான். உங்களுக்கு இனிமையான் பொழுது கழிய இன்னும்
      பல குருவிகள் அங்கே கூடு கட்டி
      பலவாகப் பெருகப்
      பிரார்த்தனைகள்.//

      குஞ்சுகளின் சத்தம் என்றும் இனிமைதான்.
      உங்கள் கருத்துக்கும் பிரார்த்தனைகளுக்கும் நன்றி.
      திண்டுக்கல் தனபாலன் சொன்னது போல் mp4 ஆக மாற்றி போட முயற்சி செய்கிறேன்.

      நீக்கு
  14. படங்களும் குருவிகள் என்ன பேசிக் கொள்ளும் என்பதை உங்கள் கற்பனையில் சொன்னதும் மிக அருமை. இங்குச் சிட்டுக் குருவிகளை அதிகம் காணலாம். பல பறவைகள் வந்து செல்லும். பொறுமையாகப் படம் பிடித்துள்ளீர்கள் வாழ்த்துகள் சகோதரி

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துளசிதரன், வாழ்க வளமுடன்
      சிட்டுக்குருவிகள் நிறைய இருக்கா அங்கு ? திருவனந்தபுரத்தில் இந்த அடைக்கலக்குருவி கிடையாது என்பார்கள். பாலக்காட்டில் இருக்கிறது என்பது மகிழ்ச்சி.
      பல பறவைகளை வருவது மகிழ்ச்சி.
      உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

      நீக்கு
  15. கோமதிக்கா சூப்பர் படங்கள் என்ன அழகா இருக்கு! ஹையோ கையில் பிடித்து வருடிக் கொடுக்க வேண்டும் போல இருக்கு. அதன் கண்கள் என்ன அழகு. மொபைல் ஃபோட்டோக்களே நல்லா வந்திருக்கு கோமதிக்கா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதாரெங்கன், வாழ்க வளமுடன்
      கையில் பிடித்து வருடிக் கொடுக்க ஆசையா? சிட்டாக பறந்து விடும்.
      காணொளி ஒன்று பார்த்தேன், கீழே விழுந்த குஞ்சை அவரே வளர்க்கிறார், உணவு கொடுக்கிறார் கையில் வைத்து முதலில் பயந்து பயந்து கொத்திய குருவி பழகி விட்டபின் அவர் மேல் ஏறி விளையாடுகிறது. மரத்தில் மேல் கொண்டு வைத்தாலும் பறந்து வந்து அவர் தோள் மேல் அமர்ந்து கொள்கிறது.

      நீக்கு
  16. ஆண் பறவையும் பொறுப்பு எடுக்குது பாருங்க.

    பெங்குவின் கூட பெண் முட்டை இட்ட பிறகு ஆண் தான் பார்த்துக் கொள்ளும். இரண்டுமே பொறுப்பெடுத்துக் கொள்ளும்.

    இயற்கையின் அதிசயங்கள்!

    மூன்றாவதும் பறந்துவிட்டதோ. பத்திரமாக இருக்க வேண்டும்

    சிட்டுக்குச் செல்ல சிட்டுக்கு சிறகு முளைத்தது பாடல் நினைவுக்கு வந்தது.

    சூப்பர் படங்கள் குருவிகள் பேசும் உங்களின் உரையாடல்களை ரசித்தேன் கோமதிக்கா.

    அந்த எலக்ற்றிக் வயர்கள் பைப்கள் செல்லும் போர்டுதான் இவர்களின் முட்டையிடும் இடமோ. அவர்களின் பிரசவ ஆஸ்பத்திரி போலும்!!!!!!! அதான் மருத்துவக் கண்காணிப்புக்கு நீங்க இருக்கீங்களே!!!! முன்பும் இந்தப் படம் போல ஒன்று பகிர்ந்திருந்தீங்கல்லியா

    எல்லாமே ரசித்தேன் கோமதிக்கா. இதுங்களை எப்பவுமே பார்த்துக் கொண்டே இருக்கலாம்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //சிட்டுக்குச் செல்ல சிட்டுக்கு சிறகு முளைத்தது பாடல் நினைவுக்கு வந்தது.//

      இந்த தலைப்பில் பேரனைப்பற்றி பதிவு போட்டு விட்டேன் அதனால் இந்த தலைப்பை தேர்ந்து எடுக்கவில்லை. எனக்கு சிட்டுக்கள் என்று அடிக்கும் போதே உங்களை போல் இந்த பாடல் நினைவுக்கு வந்தது.

      குருவிகள் உரையாடலை ரசித்தமைக்கு நன்றி.

      //அந்த எலக்ற்றிக் வயர்கள் பைப்கள் செல்லும் போர்டுதான்//

      இல்லை , தொலைக்காட்சி கேபிள் ஓயர் செல்லும் பாக்ஸ்.


      //இவர்களின் முட்டையிடும் இடமோ. அவர்களின் பிரசவ ஆஸ்பத்திரி போலும்!!!!!!! அதான் மருத்துவக் கண்காணிப்புக்கு நீங்க இருக்கீங்களே!!!! முன்பும் இந்தப் படம் போல ஒன்று பகிர்ந்திருந்தீங்கல்லியா//

      ஆமாம், முன்பு இந்த இடத்திலிருந்துதான் எங்கள் வீட்டு பால்கனியில் விழுந்து விட்டது குருவி.ஒரு நாள் இருந்து மறு நாள் பறந்து போனது. சகோ துரைசெல்வாராஜூ அவர்கள் கவிதை எல்லாம் எழுதினார்கள்.


      நீக்கு
  17. இங்கு கிளிகள், புறாக்கள், கழுகு, வால்குருவி. கொண்டைக்குருவி. கருங்குருவி எப்பவாச்சும் சிட்டு வருகின்றன. அப்புறம் சன் பேர்ட் அதுவும் வரும். படம் எடுத்திருக்கிறேன் ஆனால் குருவிகள் ரொம்பக் குட்டி அதுவும் கொஞ்சம் தூரத்தில் என் கேமரா ஜூம் திறன் அவ்வளவுதான்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் வீட்டுக்கும் இத்தனை பற்வைகள் வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.
      முடிந்தவரை ஜூம் செய்து எடுத்து விட்டு எடிட் செய்தால் போச்சு.
      எடுத்த் படங்களை போடுங்கள்.
      பறவைகளை, பதிவை ரசித்து படித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  18. அருமையான ஃபோட்டோ கதை.காணொளிகள் கண்டேன். தந்தைக் குருவியின் தவிப்பு பார்த்த உங்களையும் தவிக்க வைத்திருக்கும். குருவியின் குஞ்சுகள் நல்லபடியாகப் பறந்திருக்கும். குருவிகளின் இனிய சத்தம் இனி அடுத்த சீசனில் கேட்கும்.

    இங்கே சிட்டுக் குருவிகளைப் பார்க்க முடிவதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்

      அருமையான ஃபோட்டோ கதை.//

      கதை சொல்கிறதா போட்டோக்கள்! மகிழ்ச்சி.
      காணொளிகள் பார்த்தீர்களா மகிழ்ச்சி.
      நல்லபடியாக இங்கிருந்து பறந்து விட்டது.

      //குருவிகளின் இனிய சத்தம் இனி அடுத்த சீசனில் கேட்கும்.//

      ஆமாம், இனி அடுத்த சீசனில்தான்.
      அங்கு பார்க்க முடியவில்லையா?
      தேன் சிட்டு, தூக்கணாக்குருவி வருகிறது உங்கள் தோட்டத்திற்கு இல்லையா?
      உங்கள் கருத்துக்கு நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  19. குருவிகளோடு குடித்தனம் எல்லாம் ராஜஸ்தான், குஜராத்தோடு போயே போயாச்சு. அம்பத்தூர் வீட்டில் இதே மாதிரித் தேன் சிட்டுக்கள் நிறைய வரும். அதோடு மஞ்சள் நிறத் தேன்சிட்டு, பச்சை நிறத் தேன் சிட்டுக்கள் வரும். குருவி மாதிரியான தேன்சிட்டின் குரல் அபாரமான ஒலியோடு இருக்கும். உடம்பு இத்தனூண்டு, குரல் பெரிசு! இந்தச் சிட்டுக்குருவிகள் இங்கே உள் வீதிகளில் பழைய வீடுகளாக இருப்பதால் அங்கே நிறையக் காண முடியும். அதுங்களுக்கு இப்படியான வீடுகள் தான் வேண்டும் போல! உங்க வீட்டுக்கு வருகிறதே! அதுவே ஆச்சரியம் தான். நீங்க உணவு கொடுத்துப் பழக்கி இருப்பதால் வருகின்றன. இங்கேயும் அணிலார் குளியலறை ஜன்னலில் கூடு கட்ட ஆரம்பித்திருக்கார். பால்கனியில் வந்து அவ்வப்போது விளையாடும். பறவைகள் சப்தம் இங்கே அதிகமாகவே கேட்கும், பக்கத்தில் தோப்பு இருப்பதால். உங்கள் காணொளிகள் இரண்டுமே பார்த்தேன். இரண்டாவதில் சப்தம் மெலிதாகக் கேட்டது.

    பதிலளிநீக்கு
  20. அதுங்க முட்டையிட்டுக் குஞ்சு பொரித்துப் போவதற்குள்ளாக நமக்கு ஓர் கவலையும், பயமும் ஆட்டி வைக்கும். நல்லபடியாப் பறந்து போனது சந்தோஷம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், நீங்கள் சொல்வது போல்த்தான் ஆகி விடுகிறது மனம்.
      நல்லபடியாக பறந்து போனது ஆனந்தம்.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  21. சிட்டுக்குருவிகளை இங்கு வீட்டுபிள்ளைகள் என்பார்கள் அக்கா. இங்கு இவர்கள் அதிகம். எனக்கு கிச்சன் ரோட் சைட் இருப்பதாலும், பக்கதுவீட்டுகாரர் வேறு நிறைய பறவைகள் கூட்டில் வளர்க்கிறார். அவரின் வீடு சோலையாக இருக்கும் சம்மர் டைம் ல் அவ்ர் வீட்டு மரங்களிலும், எங்க வீட்டிலுமா நிறையபேர் இருப்பார்கள்.
    இம்முறை எங்க வீட்டிலும் கூடுகட்டி முட்டையிட்டு குஞ்சு பொரித்தன. ஆனா எனக்குதான் அவைகளை படம் எடுக்கமுடியாமல் போய்விட்டது. மர உச்சியில் கூடு. ஒருமுறை எடுத்து போட்டேன்.
    உங்களுக்கும் இவர்கள் நன்றாகவே பழகிவிட்டார்கள். ஒவ்வொருமுறையும் உங்கள் பரிதவிப்பை பார்க்கிறேன்.உங்கள் இடத்தில் பூனை,நாய் என பயம்தான். இங்கு அந்த பயம் இல்லைதபடியால் அவைகள் சுதந்திரமோ சுதந்திரம். இப்ப நான் கார்டினில் துணி காயபோட்டால் கூட பயப்பிடுவதில்லை. பழக்கமானால் அவர்களுக்கு ஓகே. இந்த சத்தம் நாளாந்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். நல்லாயிருக்கும். இப்போ எங்க வீட்டில் ஒரு புதிய குருவி வேறு வந்து குடியிருக்கினம். ஆனா பயந்தவர். இவரால் சின்ன பிரச்சனை.ரோஜா செடி மண் எல்லாம் கீழே கொத்தி சிதறடிக்கிறார். கஷ்டமா இருக்கு. நான் ஒன்றும்தொந்தரவு செய்வதில்லை.. பின் மண்ணை கூட்டி அள்ளி திரும்ப போடுவேன். எக்ஸ்ரா வேலையாகிட்டுது.
    உங்க வீட்டு சிட்டுகள் அழ்கா இருக்கிரார்கள்.வீடியோவில் பார்த்தேன். நல்லபடியாக அவைகள் பறந்துசென்றது உங்களுக்கு ஆறுதலா இருக்கும். அடுத்தவருடமும் தொடரும் என நினக்கிறேன். அழகான படங்கள் அக்கா. போஸ் அழகா கொடுக்கிறதை பாருங்கள். நல்லதொரு பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பிரியசகி, வாழ்க வளமுடன்
      சிட்டுக்குருவிகள் அங்கு நிறைய இருப்பது வீட்டுபிள்ளைகள் என்று அழைப்பதும் அருமை.
      நம்மை அடைக்கலமாக வீட்டுக்கு தேடிவருதால் அடைக்கலக்குருவி என்பார்கள்.
      இப்போது குருவிகளை பார்த்து ரசிக்கலாம் உங்களுக்கு இல்லையா?

      நாய் கிடையாது எங்கள் வளாகத்தில், பூனை யாரும் வளர்க்கும் பூனை இல்லை எப்போதாவது வரும். குருவிகள் கீழே விழுந்தால் பூனை சாப்பிடலாம் என்று இது கத்துகிறது.

      //எங்க வீட்டில் ஒரு புதிய குருவி வேறு வந்து குடியிருக்கினம். ஆனா பயந்தவர். இவரால் சின்ன பிரச்சனை.ரோஜா செடி மண் எல்லாம் கீழே கொத்தி சிதறடிக்கிறார்.//
      அவரை படம் எடுத்து போடுங்கள் பதிவில்.

      ரோஜா செடி தொட்டி மண்ணை கொத்துகிறார் என்றால் அதில் புழு, பூச்சிகளை தேடுகிறது போலும். வேலை அதிகம் செய்து விட்டதா குருவியார்!

      ஆமாம் அம்மு, நல்லபடியாக பறந்து போனது மகிழ்ச்சி ஆறுதல்
      காணொளிகள் கண்டது மகிழ்ச்சி.


      பதிவை ரசித்து படித்து அழகான விரிவான கருத்து சொன்னதற்கு நன்றி அம்மு.

      நீக்கு
  22. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. சிட்டுக்குருவிகளை நன்றாக படமெடுத்து இருக்கிறீர்கள். அழகான படங்கள். ஒவ்வொரு படங்களுக்கும் நன்றாக விளக்கமும் தந்திருக்கிறீர்கள்.

    அந்த குட்டிக்குருவியும் உங்களுக்கு மிக அழகாக போஸ் தந்துள்ளதே.... இரண்டு காணொளியும் கேட்டேன். முதலில் அம்மா குருவி வந்து அதன் பாஷையில் தன் குட்டியிடம் ஏதோ சொல்லி, "இப்படித்தான் பறக்க வேண்டும்" என்று பறந்து சென்று காண்பிக்கிறது.

    எலெக்ட்ரிக் கூண்டுக்குள்ளா கூடு கட்டியுள்ளது..நிறைய வயர்கள் தெரிகிறதே.. எப்படியோ அது தன் வழியைப் பார்த்துக் கொண்டு பறந்து போனதே... அதுவரை நீங்களும் அதற்கு அது பறக்கும் வரை அன்னமிட்டு உதவியுள்ளீர்கள். உங்களுக்கு அது எப்போதும் நன்றிக் கடன்பட்டிருக்கும். பறவைகளின் ஆர்வலரான உங்களுக்கு பாராட்டுக்கள்.. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
      //இப்படித்தான் பறக்க வேண்டும்" என்று பறந்து சென்று காண்பிக்கிறது.//
      நீங்கள் சொல்வது போலவும் பறந்து காட்டும், ஆனால் அது உள்பக்கம் தேடுவது போல் இருக்கும் பாருங்கள் அதன் பார்வை. மற்ற குஞ்சை தேடி போய்விட்டது.அது பறந்து போய் வெகு நேரம் கழித்து தான் திரும்பி வந்தது.

      இரண்டு காணொளிகளை கண்டு அருமையான கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி கமலா.
      அதற்கு என்று ஒரு தட்டில் கூட்டுக்கு அருகில் இருக்கும் பால்கனியில் சாப்பாடு வைத்தேன் அதை அது சாபிட மாட்டேன் என்று விட்டது, வழ்க்கமாய் எல்லா பறவைகளுக்கும் வைக்கும் உணவியத்தான் கொத்தி வந்து கொடுத்தது.
      உங்கள் கருத்துக்கும், பாராட்டுகளுக்கும் நன்றி.

      நீக்கு
  23. சிட்டுக்குருவிகள் ஒவ்வொரு புகைப்படத்தில் ஒவ்வொரு வித அழகுடன் மனதுக்கு இனிமை தருகிறது. கீழே வாசகங்களும் அருமை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மனோ சாமிநாதன் , வாழ்க வளமுடன்
      படங்களையும் , பதிவையும் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  24. சிட்டுக்குருவிகள் மூன்றும் நல்ல படியாக பறந்து சென்றது அறிந்து திருப்தி. படங்கள் அனைத்துமே அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்

      பல பதிவுகளில் உங்கள் பின்னூட்டம் இல்லை, வேலை அதிகமோ அல்லது உங்களுக்கு என் பதிவு காட்டவில்லையோ என்று நினைத்தேன்.

      சிட்டுக்குருவிகள் நல்லபடியாக பறந்து சென்றது திருப்திதான்.
      படங்களை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி வெங்கட்.

      நீக்கு
    2. சில நாட்களாகவே வேலை அதிகம் தான் அம்மா... முடிந்த போது படிக்காத பதிவுகளும் படித்து விடுவேன்.

      நீக்கு
    3. எனக்கு உங்களுக்கு என் பதிவு டேஸ்போர்டில் காட்டவில்லையோ என்பதற்கு கேட்டேன்.
      முடிந்த போது வாங்க வெங்கட்.
      மீண்டும் வந்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு