எங்கள் குடியிருப்பு வளாகத்தில் உள்ள விநாயகருக்கு புதிதாக செய்யப்பட்ட செப்பு கவசம். ஜனவரி 25 ஆம் தேதி சாற்றப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அந்த படங்கள் இதில் இடம்பெருகிறது இந்த பதிவில்..
இன்று சங்கடஹர சதுர்த்தி அதனால் இந்த பகிர்வு.
தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் நன்கு தேர்வு எழுத பிரார்த்தனைகள்.
பூஜை செய்ய எடுத்து கொடுக்கும் போது என்னையும் தொட்டுக் கொடுக்க சொன்னது மகிழ்ச்சியாக இருந்தது , நான் விநாயகருக்கு பின் பக்கம் இருக்கிறேன்.
கணபதி களிரே போற்றி
ஐங்கரத்து அப்பா போற்றி
சிவம் மகிழ் சிறுவா போற்றி
செந்நெறி காட்டுவாய் போற்றி
திருமறை உதவினாய் போற்றி
திங்களணி திருவே போற்றி
அறுகுத்தார் அரசே போற்றி
அல்லல் தீர்க்கும் அமுதே போற்றி
வெண்ணிற உடையாய் போற்றி
விசும்பெலாம் விரிந்தாய் போற்றி
திங்களின் நிறத்தாய் போற்றி
திரண்ட நால் தோளாய் போற்றி
ஆனைமா முகத்தாய் போற்றி
அனைத்திடர் களைவாய் போற்றி
திருவெலாந் தருவாய் போற்றி
திருவடி இணைகள் போற்றி
கவசத்திற்கு அர்ச்சனை மற்றும் பூஜை செய்யப்பட்டது
போக்கஸ் லைட் பொருத்தபட்டு உள்ளது தெரிகிறதா ?
பாலும் தெளித்தேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன்- கோலம்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்குச்
சங்கத் தமிழ் மூன்றும் தா !
- ஒளவையார்
உருகும் அடியார் அள்ளூர உள்ளே ஊறும் தேன் வருக
உண்ணத் தெவிட்டாச் சிவானந்த ஒளியே வருக புலன்வழிபோய்த்
திருகும் உள்ளத்தார் நினைவினுக்கும் சேயாய் வருக எமை
ஆண்ட செல்வா வருக உயிர்ப்பைங்கூழ் தழைக்க கருணை
மழை பரப்பும் முகிலே வருக நறும்பாகே வருக வரை கிழித்த
முருகவேட்கு முன் உதித்த முதல்வா வருக வருகவே
மூரிக் கலசைச் செங்கழுநீர் முனிவா வருக வருகவே.
வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது - பூக்கொண்டு
துப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு
- ஒளவையார்
திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும் பெருக்கும் - உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்
காதலால் கூப்புவர் தங்கை.
- கபிலர்
அன்று வழங்கப்பெற்ற பிரசாதங்கள்
2023 ஆம் ஆண்டு போட்ட பதிவு புதிதாக கட்டப்பட்ட விநாயகர் மண்டலபூஜை நிறைவு நாளில் செய்த சந்தனக்காப்பு அலங்கார படம்.
ஒவ்வொரு சங்கடஹர சதுர்த்தியும் சிறப்பாக நடைபெறுகிறது. சங்கடஹர சதுர்த்திக்கு கவசம் சாற்றப்பட்டு சிறப்பாக பூஜை நடைபெறும். இன்று மாலை 6 மணிக்கு ஆரம்பித்து 8 மணி வரை பூஜை நடைபெறும்.
தேர்வு நேரம் குழந்தைகள் தங்கள் உற்ற நண்பனாய் கருதும் விநாயகரை வணங்கி தேர்வு எழுத செல்வார்கள். பெற்றோர்களிடம் தாத்தா, பாட்டியிடம் ஆசி பெற்று செல்வார்கள். பள்ளியிலும் ஆசிரியர்கள் நன்றாக எழுதுங்கள் பதட்டம் இல்லாமல் வாழ்த்தி அனுப்புவார்கள்.
அவர்கள் படிக்கும் பிள்ளையார் பாடல்களை பகிர்ந்து இருக்கிறேன்.
குழந்தைகளுக்கு அவர்கள் படித்த பாடங்களை மறக்காமல் எழுதவும், நல்ல உடல் நலத்தோடு தேர்வு காலங்களில் இருக்கவும்
வரசக்தி விநாயகர் அருள் புரிய வேண்டும்.
இன்று காலை ஹலோ எப். எம்பில் பிராத்தனை நேரத்தில் குழந்தைகள் நன்கு தேர்வு எழுத பிரார்த்தனை செய்யப்பட்டது.
பொதுத்தேர்வுகள் மார்ச் 2 ஆம் தேதி தொடங்கி மார்ச் 26 ஆம் தெதி வரை நடைபெற உள்ளது.
எல்லா மாணவ மாணவிகளும் நன்கு தேர்வு எழுத வாழ்த்துகள் வாழ்க வளமுடன்.
வாழ்க வையகம்! வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன்!
------------------------------------------------------------------------------------------------------------------------



.jpg)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக