ஞாயிறு, 19 அக்டோபர், 2025

அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துகள்




தீபமங்கள ஜோதி நமோ நம!

இனிய தீபாவளி  நல்  வாழ்த்துகள்

உறவினர் , நட்புகள் வந்தால்  (வீட்டு முறைப்படி)  சாப்பாடு கொண்டு வந்து தரும் இடத்தில் பலகாரங்கள் ஆர்டர் செய்து வாங்கி கொண்டேன்.


ரிப்பன் பக்கோடா, மனோகரம், மனவோலம் என்று சொல்லப்படுகிற இனிப்பு  வாங்கி முன்பே தங்கை, அண்ணிக்கு கொடுத்து விட்டேன், அப்புறம் மற்றவர்களுக்கு  தேன்குழல், அதிரசம் வாங்கி கொடுத்து விட்டேன், வீட்டில் செய்வதால் நாம் செய்தது போலவே இருக்கும்.

எல்லோர் வீடுகளிலும் குலோப்ஜாமுன் செய்வார்கள்,     அதனால் ரசகுல்லா கொடுக்கலாம் என்று வாங்கினேன். இனிப்பும் குறைவாக இருக்கும். 

இந்த வருட தீபாவளிக்கு  மகன் , தங்கை மகன், அக்கா மகன் , எல்லோரும் புடவை எடுத்து கொடுத்தர்கள். பல காரங்கள் தம்பி தங்கைகள் கொண்டு வந்து முன்பே கொடுத்து விட்டு அவர்கள் வீட்டுக்கு அழைத்து போனார்கள்.

நானும் வழக்கம் போல பின்னர் வருகிறேன் என்று சொல்லி விட்டேன்.

குடியிருப்பு வளாக நட்புகள் வேறு பலகாரம் கொடுத்து விட்டார்கள் சனிக்கிழமையே! நானும் அவர்களுக்கு வைத்து கொடுத்து விட்டேன்.

அரவிந்த் செட்டி நாட்டு பலகாரம்

ஸ்ரீ பத்மாவதி கேட்டரிங்கில் வாங்கியதை கீழ்வீட்டு மாமி கொடுத்து போனார்கள்

தீபாவளிக்கு முன் வீட்டுக்கு வீடுஇப்படி மீனாட்சி படத்தோடு  உள்ள விலை பட்டியல் உள்ள நோட்டீஸ் கொடுத்து போனார்
ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு சாமி படம் கொடுப்பார்.


வீட்டில்  பெரிய தூக்குகள்,  பிரிட்டாடினியாபிஸ்கட் டின்னில் பலகாரங்கள் செய்து வைப்போம்.

பலசரக்கு கடையில் பிஸ்கட் டின் புதுசாக  வேண்டும் என்று சொல்லி வைப்போம்  அவர் நினைவாக எடுத்து வைத்து கொடுப்பார், அதில் அடைத்து வைக்கும் குறுக்கு, தேன்குழல், தட்டைஎல்லாம் நல்ல மொறு மொறு என்றும் இருக்கும்.

 வீட்டில் நிறைய செய்து அக்கம் பக்கம்  விநியோகம் செய்த காலங்கள்  போய் இப்படி வாங்கி கொடுக்கும் காலம் ஆகிவிட்டது. செய்து வைத்தால் சாப்பிட  ஆட்கள் இல்லை,  செய்யவும்  உடலில் பலம் இல்லை . 

"அப்பா ஏன் இப்படி நிறைய செய்கிறாய் உடலை வருத்தி கொள்ளாதே "என்றால் அம்மா சொல்வார்கள் "பார்த்தால்   நிறைய இருப்பது போல இருக்கும் பகிர்ந்தால் கொஞ்சமாகி விடும்  என்பார்கள்.

இப்போது வீடு வீடாய் கொண்டு கொடுக்கவும்  ஆள் இல்லை.  வீட்டுக்கு கொண்டு வந்து கொடுப்பவர்களுக்கு  கொடுக்க வேண்டுமே  ! அதுதான் வாங்கி வைத்து கொள்ள வேண்டி உள்ளது.

இது எல்லாம் என் சொந்தங்கள்   கொடுத்தவை


இப்படி டிரேயில் வைத்து வீடுவீடாய் அம்மா  கொடுத்தை எடுத்து கொண்டு அக்கம் பக்கம், உறவுகளுக்கு  கொடுத்த நினைவுகள் வருகிறதா? தீபாவளி விடியற்காலையில் செய்யும் பஜ்ஜி , வடை,  சுசியமும் இருக்கும்  முன்பு இப்போது அது கிடையாது  முதல் நாளே கொடுத்து விடுவதால்.

தீபாவளிக்கு வரும்  பத்திரிக்கைகளில் பண்டிகை ஸ்பெஷ்ல் மலர்களில்  தீபாவளி பட்சணங்கள் 108 அப்படி இப்படி என்று  களை கட்டும். 

அது போல  இபோது யூடியூப் காணொளிகள் களை கட்டுகிறது.

 இனிப்பு, நெய் நிறைய சேர்த்து கொள்ள மாட்டேன் என்பவர்கள்  நெய்யில்லாமல், இனிப்பு குறைவாக போட்டு மைசூர்பாக்எளிதாக செய்யும் பட்சணங்கள் என்று மக்களை கவர்ந்து இழுக்கிறார்கள் அழகிய படங்களுடன் 



.https://www.youtube.com/shorts/8ywyWw8Wb1Q


https://www.youtube.com/watch?v=k2RG0ukfGTY

இந்த வருடம் வந்த புது பாடல் கேட்டுப்பாருங்கள்.

இந்த பாடலில் எண்ணெய் தேய்த்து குளித்து , தீபங்களை ஏற்றி வைத்து புத்தாடை அணிந்து  பலகாரம் உண்டு, வெடி வெடிப்பதில் நம் கெத்தை காட்டுவோம் என்று மகிழ்வாய் பாடுகிறார்  தேவகோட்டை அபிராமி. 

தீபாவளி என்றால் வெடி இல்லாமல் இருக்குமா? இப்போது உள்ள  இளவயது குழந்தைகள் வெடி வைப்பதில் கெத்து காட்டுவார்கள் என்று இவர் சொல்கிறார். முன்பு வெடிகள் வாங்கி தந்து அதில் பாதியை கார்த்திகைக்கு வைத்து கொள்ளுங்கள் என்று சொல்லும் பெற்றோர் . இப்போது குழந்தைகள் ஆசைபட்டால் வேண்டும் அளவு உங்கள் ஆசைக்கு  வெடித்து கொள்ளுங்கள் கார்த்திகைக்கு பின்னர் வாங்கி கொள்ளலாம் என்று சொல்லும் பெற்றோர்.  

 வானத்தில் வெடிக்கும் வாணங்கள், பூசட்டி, மத்தப்பு ஓளியில்   தீபாவளி வாழ்த்துடன் பாட்டு நிறைவாகி  விட்டது கண்டு மகிழுங்கள்.

 வெடிப்பவர்கள் பாதுகாப்பாய்  வெடித்து மகிழுங்கள்


இப்போது நாள் தோறும் தீபாவளி கொண்டாலாம்  நினைத்த போது பலகாரங்கள், நினைத்த போது துணிமணிகள் என்று ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கி  கொண்டு இருக்கும் காலத்தில் இருக்கிறோம்.

தீபாவளிக்கு முன்பு இருந்தே பழைய நினைப்புகளை அசைபோட ஆரம்பித்து விட்டேன். தீபாவளி கொண்டாடிய காலங்கள் மனத்திரையில் வந்து போகிறது.

அப்பா , அம்மா, சகோதர சகோதரிகளுடன் கொண்டாடியது, அப்புறம் புகுந்தவீட்டினர்,கணவர், குழந்தைகளுடன் கொண்டாடியது, பின்னர் மகன், மகளுடன் கொண்டாடியது என்று நினைவுகள் வந்து  போகிறது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு உணர்வுகளை நமக்கு தந்து செல்கிறது.

மடிகணினியின்  கீபோர்ட் வேலை செய்யவில்லை,  மகன் தந்த ஆலோசனைபடி ஒயர்லெஸ் கீபோர்டு  வைத்து இப்போது அடித்து கொண்டு இருக்கிறேன். 

பக்கத்து வீட்டு ராதா அவர் நடத்தும்  கம்ப்யூட்டர் கம்பெனியிலிருந்து மடிகணினியை சரிப்பார்க்க ஆள் அனுப்பினார், அவரும்  பார்த்து விட்டு கீபோர்டு தான் கெட்டுப்போய் இருக்கிறது என்றார்.   

அவரும் மகன் சொன்ன ஆலோசனைபடி  இது தான் இப்போது நல்லது இப்படியே இருக்கட்டும் தீபாவளிக்கு அப்புறம்  மடிகணினியின் கீபோர்டை சரி செய்யலாம் என்றார்.


எது எப்படியோ இறை அருளால்  எனக்கு பதிவு போட முடிகிறது , உங்கள் எல்லோருக்கும் வாழ்த்து சொல்ல முடிகிறது அது போதும்.  மகன், ராதா இறைவன் எல்லோருக்கும் நன்றிகள்.

அனைவருக்கும் மீண்டும் இனிய  தீபாவளி திருநாள் நல் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். எல்லோரும் உற்றம், சுற்றத்தோடு மகிழ்வாய்  கொண்டாடுங்கள்.

வாழ்க வையகம்! வாழ்க வையகம்!  வாழ்க வளமுடன்
-----------------------------------------------------------------------------------------------------

6 கருத்துகள்:

  1. அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்.  

    பதிலளிநீக்கு
  2. ரசகுல்லாவில் இனிப்பு கம்மியாக இருக்கும் என்றா சொல்கிறீர்கள்?  அதிகம் அழுத்தப்பட்டிருக்கும் என்று எனக்குத்தோன்றும்!

    பதிலளிநீக்கு
  3. அடேங்கப்பா... நவராத்திரி கொலு போல ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஸ்வீட் காரம் பாக்ஸ் வந்திருக்கிறதே... பதில் மரியாதை செய்ய நாமும் நிறைய வாங்கி வைக்க வேண்டும் போலிருக்கே.. இங்கே அந்த பழக்கமெல்லாம் இல்லை.

    பதிலளிநீக்கு
  4. வெடிய வெடிச்சு பாரு..
    தீபாவளி ஜோரு 
    எண்ணெய் தேய்ச்சு குளிச்சு - நீ 
    ஜாலியா கொண்டாடு..

    பாட்டு ரொம்ப ரசனை.  கேட்கும்போதே  ஆட வைக்கிறது.  அவரும் ஆடிக்கொண்டே பாடுகிறார். என்ன ஒரு உற்சாகம்...  அருமை.    நல்ல எடிட்டிங்.. ரிதமிக்காக வரும் தாளம்...  கணவரே இசை அமைத்திருப்பாரோ..  

    பதிலளிநீக்கு
  5. ஆமாம் இப்;போது நாளெல்லாம் தீபாவளி..  நினைத்த நேரத்தில் பலகாரம், புதுத்துணி...  தீபாவளியின் சில எதிர்பார்ப்பு உற்சாகங்கள் இதிலேயே வடிந்து விடுகின்றன.

    பதிலளிநீக்கு
  6. மடிக்கணினியில் தட்டச்சு செய்வது எனக்கு அலர்ஜி!  அதில் இருக்கும் கீபோர்ட் நன்றாய் இருந்தாலுமே நான் ஒரு எக்ஸ்டர்னல் கீ போர்ட் வைத்துதான் அடிப்பேன்! 

    உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி.  உங்களுக்கும் தீபாவளி வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு