செவ்வாய், 21 மே, 2024

முதியவர்- காப்பான்
பேரன் தமிழ்பள்ளிக்கு செய்த  திட்டப்பணி
"முதியவர் காப்பான்"  இதன் பயன்பாடுகளை படித்து உடனே ஆர்டர் செய்யுங்கள். 


செயற்கை நுண் அறிவு  கொண்டு தயார் செய்த ரோபோ

பேரன் தமிழ் பள்ளிக்கு செய்த    முதியவர் காப்பான்.
காப்பான் மேம்பட்ட தொழில்நுடபத்துடன் வடிவமைக்கப்பட்ட ஒரு அசாதாரண துணை. நமது மூத்தவர்களின் தேவைகளை மையமாக கொண்டு உதவியின் கலங்கரை விளக்காமாக "முதியவர் - காப்பான் " உள்ளது. ஆனால், முதியவர் காப்பான் என்ன செய்யும்? அது எப்படி   வேலை செய்யும் ?  சரிவாங்க பார்க்கலாம்.


 என்னவெல்லாம் செய்யும் என்பதை  பார்க்கலாம் வாருங்கள் முதியவர்களுக்கு அவர்கள் அன்றாட வாழ்வில் உதவக்கூடிய திறன்களின் வரிசையுடன் பொருத்தப்பட்டுள்ளது. மருந்து சாப்பிடுவதை நினைவூட்டுவது முதல் , வீட்டு வேலைகளுக்கு உதவுவது வரை.

1.முதியவர் காப்பான் சுகாதார கண்காணிப்பு அம்சங்களை கொண்டுள்ளது. 
2.இதை வைத்து  முக்கிய அறிகுறிகளை கண்காணிக்கலாம்

3.மென்மையான உடற்பயிற்சிகளை செய்வதற்கு நினைவூட்டல்களை வழங்கும் மற்றும் ஏதேனும் உடல் நலக்குறைவு ஏற்பட்டால் மருத்துவர்களை எச்சரிக்கலாம். 
 
4. முதியவர்- காப்பான்   ஒரு ரோபோ  உதவியாளர் என்பதை விட ஒரு  நண்பனை போல  செயல்படுகிறது.

பயனர்  நட்பு வடிவமைப்பு

முதியவர் -காப்பான் பயனரை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. அது முதியவர்களின்  அன்றாட வாழ்வில் தடையின்றி வேலைகளை செய்ய உதவுகிறது.

அதன் அழகான தோற்றம் மற்றும் பயன்படுத்த எளிதான அம்சங்கள் முதியவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். 


முதியவர் காப்பான் என்ன செய்யும்?

முதியவர் காப்பான் அன்பாக முதியவர்களை  கவனித்துக் கொள்ளும் வகையில்வடிவமைக்கப்பட்டுள்ளது. வெறும் ஒரு இயந்திரத்தைப்போல இல்லாமல், முதியவர் காப்பான்  என்பது செயற்கை நுண்ணறிவின் (செ.நு) ஒரு அற்புதமாகும். உதவியை மட்டுமல்ல , உண்மையான தோழமையையும்  வழங்குகிறது.
  
யாரிடமாவது பேச வேண்டும்  என்று தோன்றினால் அந்த பெயரை சொன்னாலே முதியவர் காப்பான் உங்கள் நண்பர், குடும்பத்தினர்களை  அழைக்க அதன் கைபேசி அம்சத்தை பயன்படுத்தும். இந்த அம்சத்தை அழைப்பதற்கு மட்டுமல்ல  , விளையாடவும் பயன்படுத்தலாம். கைபேசி அம்சத்தில் நிறைய அற்புதமான விளையாட்டுகள் உள்ளன. நடனம் , கேக் தயாரிப்பது பலவற்றை பார்க்கலாம்.ரோபோ இந்த சொல் எங்கிருந்து வந்தது?
ரோபோ என்பதற்கு  மனிதன் இடும் கட்டளைகளை, நிறைவேவேற்றும்  இயந்திர மனிதன் என பொதுவாக கூறலாம். ரோபோ எனும் சொல்லை முதன் முதலில் செக் குடியரசு எழுத்தாளர் காரெல் கேபெக்  என்பவர் 1921 ஆண்டு பயன்படுத்தினார்.

ஜப்பான் ரோபோ :-  ஜப்பான் நாட்டில் பல மில்லியன் தொழிற்துறை ரோபோக்கள் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக இதன் மூலம் அதிக லாபம்  வருகிறது என்று ஜப்பான்  நாட்டில் உள்ள  பல தனியார் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.


பேரன் கவின் எழுதியதை படிக்க முடியவில்லை என்றால் படிக்கலாம் என்று  நான் அதை படங்களுக்கு கீழே  எழுதி  இருக்கிறேன்.

பேரன் செய்த காப்பானை படித்தவுடன் தனிமையில் இருக்கும் முதியவர்களுக்கு மிகவும் அவசியம் என மனம் சொன்னது.
மாத்திரை மறந்து விடும் பெரியவர்களுக்கு  சில நேரம், அதை நினைவூட்டுமாம், உடற்பயிற்சி செய்ய சோம்பலாக இருந்தால் அது செய்ய சொல்கிறது உறவினர்களுடன் பேச வைக்கிறது. 

மிக முக்கியமானது உடல் நிலை சரியில்லை என்றால் மருத்துவரை அழைக்கிறது. அது போதுமே! நான் பேரனிடம் ஒன்று ஆர்டர் செய்து விட்டேன்.

இனி வருங்காலம் இப்படித்தான் இருக்கும்  என்று ரோபோ தயாரிப்பவர்கள்  புதிதாக யோசித்து தங்கள் கண்டுபிடிப்புகளில் வெற்றி அடைந்து வருகிறார்கள்.   இது இல்லாமல் முடியாத காலமும் வரும் போல.

மகன் வீட்டில் வீடு கூட்டும்  இயந்திரம்சில உணவு விடுதிகளில் உணவை ரோபோக்கள் வந்து கொடுக்கிறது. சென்ற ஆண்டு மகன் அழைத்து போன ஓட்டலில் இந்த ரோபோக்களை பார்த்தேன்.எந்த மேஜைக்கு உணவு கொண்டு போக வேண்டும் செட் செய்கிறார்.


மேஜைக்கு பக்கத்தில் வந்து நிற்கும் நாம் எடுத்து கொள்ள வேண்டும்.

அது அவை வேலை  செய்யும் அழகை வீடியோ எடுத்தேன், வலை ஏற மறுக்கிறது.

வீட்டு வேலைகளை செய்ய பல வித  இயந்திரம் வந்து விட்டது போல ஓடி கொண்டு இருக்கும் மனிதர்களுக்கு பேச நேரமில்லாத போது தோழமையுடன் இருக்கும்  காப்பான்களும் அவசியம் தான். 

இறைவன் எனும்  காப்பான் இது போன்ற இயந்திரங்களை கண்டுபிடிக்க   அறிவு  உள்ள  மனிதர்களை படைத்து இருக்கிறான். 

கலைவாணர் அவர்கள்  பாட்டில்  சொன்னது போல அனைத்தும் நடந்து கொண்டு இருக்கிறது.


//நெல்லுகுத்த, மாவரைக்க, நீர் இறைக்க மிஷினு 
அல்லும்,பகலும் ஆக்கி  அடுக்க அதுக்கொரு மிஷினு

கொல்ல புரத்தில குழாய் வைக்கணும்
குளிரு மிஷினும் கூட வைக்கணும்
பள்ளிக்கூடத்துக்கு புள்ளைங்க போகாம  
படிக்க கருவி பண்ணியும் வைக்கணும்..

முடிஞ்சுதா?. 

ஒன்ன  மறந்துட்டேன்.. 

என்னாம்மா?

பட்டனை தட்டி விட்டா ரெண்டு தட்டிலே 
இட்டிலியும், காப்பி நம்ம பக்கத்தில் வந்திடணும் 

கட்டிலுக்கு மேலே ஃபேனு  காத்து சுத்தோணும்  
காலம் காட்டும் கருவியும் வேணும் //


வேலையை எளிதாக்க  நிறைய பேர் வீட்டுக்கு வந்து இருக்கும் போது தோசை (முறுகல் தோசை) செய்ய  தோசை மிஷின் வாங்கி இருக்கிறது மகன் வீட்டில். முன்பு சப்பாத்தி மெஷின் வாங்கினான். 


 .  

வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
---------------------------------------------------------------------------------------------------
 

32 கருத்துகள்:

 1. பேரனின் முயற்சிக்கு பாராட்டுகள்.  அரிய முயற்சி, அரிய செயல்.  பிரமிப்பாய் இருக்கிறது.  பாராட்டுகளும் வாழ்த்துகளும்.  இப்படி எல்லாம் தோன்ற கடவுள் அருள் வேண்டும்.  அன்பான பெற்றோர், அருமையான தாத்தா பாட்டி வேண்டும்.  இது அத்தனையும் வாய்த்திருக்கிறியாது கவினுக்கு. பாராட்டுகளும், வாழ்த்துகளும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

   //பேரனின் முயற்சிக்கு பாராட்டுகள். அரிய முயற்சி, அரிய செயல். பிரமிப்பாய் இருக்கிறது. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.//

   உங்கள் பாராட்டுக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி.


   //இப்படி எல்லாம் தோன்ற கடவுள் அருள் வேண்டும். அன்பான பெற்றோர், அருமையான தாத்தா பாட்டி வேண்டும். இது அத்தனையும் வாய்த்திருக்கிறியாது கவினுக்கு. பாராட்டுகளும், வாழ்த்துகளும்.//

   ஸ்ரீராம், கவின் தன் தமிழ் பள்ளிக்கு செய்த புராஜெக்ட் ஒர்க் இது . உண்மையில் செய்யவில்லை. செயற்கை நுண் அறிவு கொண்டு செய்ததாக கற்பனை . அதில் உள்ளது போல ஜப்பானில் நிறைய செய்து வெற்றியும் பெற்று இருக்கிறார்கள். எதிர்காலத்தில் செய்யலாம், அதற்கு உங்கள் பாராட்டுக்களும், வாழ்த்துகளும் உதவும். நன்றி, நன்றி

   நீக்கு
 2. என்ன விலை?  சார்ஜில் எத்தனை நேரம் போடுவீர்கள்?  எத்தனை நேரம் வேலை செய்யும்?  பேசுமா?  குரல் உண்டா?  மொழி நாம் தெரிவு செய்ய முடியுமா? அதன் செயல்முறையை ஒரு குட்டி வீடியோ போட்டிருக்கலாமே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //என்ன விலை? சார்ஜில் எத்தனை நேரம் போடுவீர்கள்? எத்தனை நேரம் வேலை செய்யும்? பேசுமா? குரல் உண்டா? மொழி நாம் தெரிவு செய்ய முடியுமா? அதன் செயல்முறையை ஒரு குட்டி வீடியோ போட்டிருக்கலாமே...//

   ஆஹா! கற்பனை மிக ஆவலை தூண்டி விட்டு இருக்கிறது.

   https://www.youtube.com/watch?v=IoepSHWF8oQ இந்த வீடியோவை பாருங்க எல்லாம் செய்கிறது. குழந்தைகளுக்கு விளையாட்டு தோழன், படிப்புக்கு உறுதுணையான ரோபோக்கள். வேலைக்கு போய் இருக்கும் பெற்றோர்கள் குழந்தைகளை கவனித்துகொள்ள தங்கள் கட்டளைகளை அதன் மூலம் நிறைவேற்றி கொள்ள வாங்கி கொடுக்கிறார்கள்.

   https://www.youtube.com/watch?v=GgDIvHh87jM மனித ரோபோக்கள் இருக்கிறது. எல்லாம் நாம் செட் செய்து வைத்து இருப்பதுதானே!. மனிதர்களை போலவே இருக்கிறது. தனிமையை போக்க உதவுகிறது.

   நீக்கு
 3. தோசை மெஷின் வீடியோ ஒன்று போட்டிருக்கக் கூடாதோ?  யு டியூப் பேச புக் விளம்பரங்களில் தோசை மெஷின் பார்த்திருக்கிறேன்.  ஆனால் தோசை நாம் தோசைத்தட்டில் கையால் எண்ணெயிட்டு வார்பபது போல இயற்கையாக வருகிறதா?  எனக்கு கையால் தேய்த்து செய்யும் சப்பாத்திதான் பிடிக்கும்.  அதுபோல தோசையும்  செயற்கையாக இருக்குமா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தோசை மெஷின் வீடியோ எடுத்து இருந்தேன், மிகவும் சின்ன வீடியோ, யு டியூப் செய்தால் தான் என் வலைபக்கம் ஏறுகிறது. இன்னொரு முறை தனியாக எடுத்து யூடியூப் செய்து போடுகிறேன்.

   இப்போது https://www.youtube.com/watch?v=s3IO2xePWBY இந்த காணொளி பாருங்கள். நம் கை மணத்தை எதிர்பார்க்க கூடாது. ஓட்டல் தோசை போல வருகிறது. ஆனால் நாம் இட்லிக்கு அரைக்கும் மாவு பதத்தில் அரைக்க கூடாது. கொஞ்சம் பிறு பிறு என்று அரைக்க வேண்டும். எண்ணெய் விட்டு வார்த்தால் நன்றாக இருக்கிறது, எண்ணெய் வேண்டாதவர்களுக்கு வரபிரசாதம்.

   சப்பத்தி மெஷினில் மெலிதாக போட்டு எடுத்து தோசை கல்லில் போட்டு எடுத்துவிடுவாள் மருமகள். அது நன்றாக இருக்கிறது. அதுவே சுட்டு தள்ளுவது கொஞ்சம் கனம். சாப்பிடுவது கஷ்டம்.
   ஓட்டலில் முன்பு மெஷின் செய்வதை போட்டு இருந்தேன்.

   நீக்கு
 4. என் எஸ் கிருஷ்ணன் பாட்டு சுவாரஸ்யம்.  உண்மையிலேயே நாம் அப்போது முடியாது, சாத்தியமில்லை என்று நினைத்தவற்றை நிஜமாக்கிக் கொண்டிருக்கிறது தொழில் நுட்பம்.  அதிலும் இந்த செயற்கை நுண்ணறிவு ஒரு அற்புதம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //என் எஸ் கிருஷ்ணன் பாட்டு சுவாரஸ்யம். உண்மையிலேயே நாம் அப்போது முடியாது, சாத்தியமில்லை என்று நினைத்தவற்றை நிஜமாக்கிக் கொண்டிருக்கிறது தொழில் நுட்பம். அதிலும் இந்த செயற்கை நுண்ணறிவு ஒரு அற்புதம்.//

   ஆமாம், ஸ்ரீராம். நிறைய விஷயங்கள் சாத்தியமில்லை என்றவை இப்போது சாத்தியபட்டு இருக்கிறது. தொழில் நுட்பம் வளர்ந்து கொண்டு போகிறது. வீட்டு உபயோகத்திற்கு வாங்கும் நிறைய தொழில் நுட்ப கருவிகளை இயக்க படிக்க வேண்டி உள்ளது.

   உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

   நீக்கு
 5. கோமதிக்கா கவினின் பணித்திட்டம் அருமை. நல்லா கற்பனையோடு செய்திருக்கிறார். எதிர்காலத்தில் அவரே கூட பெரிய அளவில் இதைச் செய்யலாம் இன்னும் விரிவாக.

  இப்போது கொஞ்சம் வந்திருக்கிறதே! ஆங்காங்கே முதியவர் களுக்கான ஏ ஐக்கள் வந்திருக்கின்றன. அருமை கோமதிக்கா கவினுக்கு வாழ்த்துகள் பாராட்டுகள்!

  ப்ராஜெக்ட் - திட்டப்பணி என்றுதான் நானும் முதலில் மொழிபெயர்த்து வந்தேன். அதன் பின் இப்படி யோசித்தேன் அதாவது திட்டப் பணி என்றால் திட்டம் போடுவதற்கான பணி என்றாகிறதோ....பணித்திட்டம் என்றால்...ஒரு பணிக்கான திட்டம் என்று எடுத்துக் கொள்ளலாமே என்று அப்படி மொழிபெயர்த்துக்கொடுத்தேன். அவர்களுக்கும் அது சரி என்று பட்டது. யாரிடமேனும் இதைத் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைத்தேன்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கீதாரெங்கன், வாழ்க வளமுடன்

   //கோமதிக்கா கவினின் பணித்திட்டம் அருமை.//
   நன்றி.

   //நல்லா கற்பனையோடு செய்திருக்கிறார். எதிர்காலத்தில் அவரே கூட பெரிய அளவில் இதைச் செய்யலாம் இன்னும் விரிவாக.//

   ஆமாம், நமக்கு தேவையானவைகளை மேலும் இணைக்கலாம்.

   //இப்போது கொஞ்சம் வந்திருக்கிறதே! ஆங்காங்கே முதியவர் களுக்கான ஏ ஐக்கள் வந்திருக்கின்றன. அருமை கோமதிக்கா கவினுக்கு வாழ்த்துகள் பாராட்டுகள்!//

   ஆமாம் வெளிநாட்டில் நிறைய முதியவர்களுக்கு வந்து விட்டது.
   கவினுக்கு வாழ்த்துகள், பாராட்டுகள் சொன்னதற்கு நன்றி.

   //ப்ராஜெக்ட் - திட்டப்பணி என்றுதான் நானும் முதலில் மொழிபெயர்த்து வந்தேன். அதன் பின் இப்படி யோசித்தேன் அதாவது திட்டப் பணி என்றால் திட்டம் போடுவதற்கான பணி என்றாகிறதோ....பணித்திட்டம் என்றால்...ஒரு பணிக்கான திட்டம் என்று எடுத்துக் கொள்ளலாமே என்று அப்படி மொழிபெயர்த்துக்கொடுத்தேன். அவர்களுக்கும் அது சரி என்று பட்டது. யாரிடமேனும் இதைத் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைத்தேன்.//

   ஒரு பணியை செய்ய போகும் முன் அதற்கான திட்டங்கள் வகுத்துதானே அந்த பணியை செய்ய முடியும். நீங்கள் சொல்வது போலவும் சொல்லலாம்.

   நீக்கு
 6. கவினின் எழுத்துகள் வாசிக்க முடிகிறது கோமதிக்கா.

  மென்மையான உடற்பயிற்சிகளைச் செய்வதற்கு நினைவூட்டல்//

  ஆமாம் இப்ப நம்ம மொபைலிலேயே இதுக்கான ஆப் வந்திருக்கே! காலையில் எத்தனை மணிக்கு நடக்க வேண்டும், உடற்பயிற்சி...அந்த நேரத்தை அதில் பதிந்துவிட்டால் அது நமக்கு நினைவூட்டும். நாம் மொபைலை வைத்துக் கொண்டே செய்தால் எவ்வளவு கலோரி குறைந்திருக்கு என்றெல்லாம் காட்டுகிறது....

  ஆனால் நம்மை விட தனிமையில் இருக்கும் முதியவர்களுக்கு இது மிகவும் பயன்படும்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கவினின் எழுத்துகள் வாசிக்க முடிகிறது கோமதிக்கா.//
   ஓ சரி.

   நல்லது, கணினி, கைபேசி அனைத்திலும் பெரிது செய்து படிக்கலாம்.

   //ஆமாம் இப்ப நம்ம மொபைலிலேயே இதுக்கான ஆப் வந்திருக்கே! காலையில் எத்தனை மணிக்கு நடக்க வேண்டும், உடற்பயிற்சி...அந்த நேரத்தை அதில் பதிந்துவிட்டால் அது நமக்கு நினைவூட்டும். நாம் மொபைலை வைத்துக் கொண்டே செய்தால் எவ்வளவு கலோரி குறைந்திருக்கு என்றெல்லாம் காட்டுகிறது...//

   ஆமாம். நிறைய வசதிகள் வந்து விட்டது. நாம் கொடுக்கும் பணத்திற்கு ஏற்றார் போல கூடுதல் வசதிகள் கொடுக்கிறது.

   கை கடிகாரத்தில் எல்லாம் இருக்கிறது. இவ்வளவு நடந்து இருக்கிறாய் இன்னும் நீ நடக்க வேண்டியது இவ்வளவு என்று எல்லாம் சொல்கிறது.
   நினைவூட்டல் , அலாரம் எல்லாம் மொபைலில் இருக்கிறது.

   இந்த ரோபோ நாம் பேச நினைக்கும் உறவுகளுடன் பேச வைக்கிறது, உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டால் மருத்துவரை நாம் சொல்லாமல் அழைக்கிறது.

   //தனிமையில் இருக்கும் முதியவர்களுக்கு இது மிகவும் பயன்படும்.//

   ஆமாம் கீதா.

   நீக்கு
 7. கதைகள், கட்டுரைகள் கூட வாசித்துக் காட்டும். ஆனால் அதை இயக்க அந்த முதியவர்களுக்குப் பழக்கம் வேண்டும். இது முழுவடிவில் வடிவமைக்கப்பட்டால், மனிதனை போலவே முதியவரை நன்றாகப்பார்த்துக் கொள்ளும். இனி எதிர்காலத்தில் அல்ஜிமர் வந்து அவதிப்படும் முதியவர்களுக்கான காப்பான்கள் கூட வந்துவிடும்! கவின் அது பற்றியும் சிந்திக்கலாம்! இது மிகவும் பயன்படும் என்று தோன்றுகிறது.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //கதைகள், கட்டுரைகள் கூட வாசித்துக் காட்டும். ஆனால் அதை இயக்க அந்த முதியவர்களுக்குப் பழக்கம் வேண்டும். இது முழுவடிவில் வடிவமைக்கப்பட்டால், மனிதனை போலவே முதியவரை நன்றாகப்பார்த்துக் கொள்ளும். இனி எதிர்காலத்தில் அல்ஜிமர் வந்து அவதிப்படும் முதியவர்களுக்கான காப்பான்கள் கூட வந்துவிடும்! கவின் அது பற்றியும் சிந்திக்கலாம்! இது மிகவும் பயன்படும் என்று தோன்றுகிறது.//

   ஆமாம். நீங்கள் சொல்வது உண்மை. இப்போது வயதானவர்கள் நிறைய கற்றுக் கொண்டு இருக்கிறார்கள். தூரத்தில் இருக்கும் குழந்தைகளுடன் பேச , செய்தி அனுப்ப என்று.
   கூகுள் குட்டப்பா என்று படம் பார்த்தீர்களா? அது மலையாளத்திலும் தமிழிலும் வந்தது. அதில் தூரத்தில் இருக்கும் மகன் தனிமையில் இருக்கும் அப்பாவை பார்த்து கொள்ள கூகுள் குட்டப்பா எனும் ரோபோவை அனுப்புவார். முழு நேரமும் அவர் அதனுடன் பொழுது போக்குவார், மகிழ்ச்சியாக இருப்பார்.

   அது பழுது பட்ட போது மிகவும் வருத்தபடுவார். இப்போது நாம் கணினி, நீரைய வசதிகள் உள்ள கைபேசியை பயன்படுத்த ஆரம்பித்தவுடன் அது பழுது பட்டால் கை உடைந்து போல இருக்கிறது என்கிறோம்.
   அல்ஜிமருக்கு நினைவூட்டல் ரோபோ நல்லதுதான். நாம் மணியளவு வைத்து அதற்கு கட்டளைகளை அளிக்கலாம்.
   எல்லாம் சாத்தியபடும் நிகழ், எதிர்காலங்களில்.

   நீக்கு
 8. யாரிடமாவது பேச வேண்டும் என்று தோன்றினால் அந்த பெயரை சொன்னாலே முதியவர் காப்பான் உங்கள் நண்பர், குடும்பத்தினர்களை அழைக்க அதன் கைபேசி அம்சத்தை பயன்படுத்தும்.//

  இதுக்கானதைத்தான் முந்தைய கருத்தில் சொன்னேன். இதைக் கூடச் செய்ய முடியாத முதியவர்களுக்கான காப்பான்கள்...அது பெரிய திட்டம் தான். ஆனால் கவினால் செய்ய முடியும். அவர் யோசிக்கலாம்.

  .நாங்கள் வீட்டில் இது பற்றி யோசித்ததுண்டு. நம் வீட்டவர் இந்த செநு வில்தானே பாடங்கள் ரெக்கார்ட் செய்கிறார்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //இதுக்கானதைத்தான் முந்தைய கருத்தில் சொன்னேன். இதைக் கூடச் செய்ய முடியாத முதியவர்களுக்கான காப்பான்கள்...அது பெரிய திட்டம் தான். ஆனால் கவினால் செய்ய முடியும். அவர் யோசிக்கலாம்.//

   ஆமாம், இப்போதே யோசித்து நிறைய செய்கிறார்கள் விஞ்ஞானிகள்.
   கவினும் யோசிப்பான்.


   //நாங்கள் வீட்டில் இது பற்றி யோசித்ததுண்டு. நம் வீட்டவர் இந்த செநு வில்தானே பாடங்கள் ரெக்கார்ட் செய்கிறார்.//

   நல்லது கீதா.

   நீக்கு
 9. பேரன் கவின் எழுதியதை படிக்க முடியவில்லை என்றால் படிக்கலாம் என்று நான் அதை படங்களுக்கு கீழே எழுதி இருக்கிறேன்//

  நன்றாக வாசிக்க முடிகிறது கோமதிக்கா.

  கவினுக்கு வாழ்த்துகள் பாராட்டுகள்! மேன்மேலும் சிறக்க எதிர்காலத்தில் விஞ்ஞானியாக அதாவது உலகத்திற்குப் பயனுள்ள விஞ்ஞானியாக வர இறைவனின் அருள்!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்


  1. //நன்றாக வாசிக்க முடிகிறது கோமதிக்கா.//
   வாசிக்க முடிவது மகிழ்ச்சி.

   //கவினுக்கு வாழ்த்துகள் பாராட்டுகள்! மேன்மேலும் சிறக்க எதிர்காலத்தில் விஞ்ஞானியாக அதாவது உலகத்திற்குப் பயனுள்ள விஞ்ஞானியாக வர இறைவனின் அருள்!//
   உங்கள் வாழ்த்துக்கள், பாராட்டுக்கள் கவினை மேன்மேலும் வளர உதவும். நன்றி கீதா.

   நீக்கு
 10. வீட்டு வேலைக்கு, உணவகங்களுக்கு, உணவு தயாரிப்பதற்கு (னீங்களும் கொடுத்திருக்கீங்க தோசை, சப்பாத்தி செய்ய) என்று பல வந்தாச்சு.

  கலைவாணர் பாட்டு சூப்பர். பாருங்க அப்பவே இதெல்லாம் பாடியிருக்காங்க.

  எதிர்கால உலகம் மெஷின் மயம் யார் உண்மையான மனிதர் யார் செநு மனிதர் என்று தெரியாத அளவிற்கு எதிர்கால உலகம் இயங்கும். நான் இதை ஒட்டி ஒன்று எழுதியிருக்கிறேன் முடிக்க வேண்டும்.

  கவினுக்கு மீண்டும் வாழ்த்துகள் சொல்றேன் அவரிடம் சொல்லுங்க கோமதிக்கா.

  ரசித்தேன் பதிவை

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //வீட்டு வேலைக்கு, உணவகங்களுக்கு, உணவு தயாரிப்பதற்கு (னீங்களும் கொடுத்திருக்கீங்க தோசை, சப்பாத்தி செய்ய) என்று பல வந்தாச்சு.//

   நவீன சமையல் அறை என்று நிறைய வந்து விட்டது. திருப்பூரில் கூட உணவு மேஜைக்கு உணவை எடுத்து செல்லும் ரோபோக்கள் வந்து விட்டது.


   கலைவாணர் பாட்டு சூப்பர். பாருங்க அப்பவே இதெல்லாம் பாடியிருக்காங்க.

   //எதிர்கால உலகம் மெஷின் மயம் யார் உண்மையான மனிதர் யார் செநு மனிதர் என்று தெரியாத அளவிற்கு எதிர்கால உலகம் இயங்கும். நான் இதை ஒட்டி ஒன்று எழுதியிருக்கிறேன் முடிக்க வேண்டும்.//

   சுஜாதா எழுதிய "என் இனிய இயந்திரா "போல உங்கள் கதையும் வரட்டும். விரைவில் எழுதி அனுப்புங்கள். 'ஜீனோ' என்கிற ரோபாட் நாய்தான் கதாநாயகன் எங்கள் வீட்டில் அம்மா பைண்ட் செய்து வைத்து இருந்தார்கள்.

   //கவினுக்கு மீண்டும் வாழ்த்துகள் சொல்றேன் அவரிடம் சொல்லுங்க கோமதிக்கா.

   ரசித்தேன் பதிவை//

   கண்டிப்பாய் சொல்கிறேன்.
   உங்கள் அனைத்து கருத்துக்களுக்கும் நன்றி கீதா.

   நீக்கு
 11. மனிதன் இன்னும் எவ்வளவு தூரம் போகப்போகின்றானோ ?

  ஆனால் இனி மனிதர்களுக்கு உறவுகளின் பாசம், பற்றுதல் கிடைக்காது.

  கவினுக்கு வாழ்த்துகள் சொல்லவும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

   //மனிதன் இன்னும் எவ்வளவு தூரம் போகப்போகின்றானோ ?//
   மாற்றங்களை கொடுத்து கொண்டு முன்னேறி போய் கொண்டே இருப்பான் ஜி.

   //ஆனால் இனி மனிதர்களுக்கு உறவுகளின் பாசம், பற்றுதல் கிடைக்காது.//

   முன்பு கடிதம், அப்புறம் கணினி மூலம் நேரே பார்த்து பேச முடிகிறது இல்லையா? முன்பு வெளிநாட்டில் வேலை பார்த்தால் டிரங்கால் போட்டு பேச வேண்டும். இப்போது வாட்ஸப் காலில் பேச முடிகிறது. உறவுகள் திருமணத்தை ஜூம் மீட் போட்டு அனைவரும் பார்க்க முடிகிறது. முன்பை விட உறவுகள் பாசம் பற்றுதல் இருக்கும் ஜி.

   இஅயந்திரங்களுடன் பழகி மனிதன் இயந்திரம் ஆகி விட்டான் என்று பேசினாலும் இயந்திரம் இல்லாம்ல் வேலை ஓடாது என்ற நிலைமைக்கு தள்லப்பட்டு இருக்கிறோம்.

   எங்களை போன்ற முதியவர்களுக்கு உறவுகளை வீடியோகாலில் பேசுவதே பெரிய மனநிறைவுதான். அடிக்கடி வந்து போக முடியாத தூரத்தில் இருப்பவர்களுக்கு இது வரபிரசாதம்.
   இந்த அவசர உலகத்திலும் நம்முடன் தொடர்பு கொள்ள் கருவிகள் கண்டு பிடிப்பது மகிழ்ச்சிதான்.

   //கவினுக்கு வாழ்த்துகள் சொல்லவும்.//

   கண்டிப்பாய் சொல்வேன். நீங்கள் எல்லோரும் சொல்லும் கருத்து வாழ்த்து எல்லாம் நான் சொல்வேன். நன்றி சொல்ல சொல்வான்.

   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 12. வணக்கம் சகோதரி

  பதிவு அருமை. படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. தங்கள் பேரன் கவினின் திறமைகள் வளர்ந்து கொண்டே போகிறது. அவர் கண்டு பிடித்த முதியோர் காப்பான் நல்லதொரு முயற்சி. முதியோர்களுக்கு வசதியாக இருக்கும். என் மனமார்ந்த வாழ்த்துக்களை கவினிடம் கூறுங்கள்.

  ஆம்.. நீங்கள் கூறுவது போல ரோபோவின் தேவைகள் பெருகி கொண்டே போகிறது. அது எல்லாவற்றையும் நம் வசதிபட செய்கிறது.

  கலைவாணரின் இந்தப்பாடல் எனக்கும் மிகவும் பிடித்தமானது. அவர் அன்றே மாறி வரும் உலகத்தை கணித்த மாமனிதர். யதேச்சையாக இந்தப்பாடல் வரிகளை இரண்டொரு நாட்கள் முன்னர் பாடிக் கொண்டிருந்தேன். நீங்களும் இன்று உங்கள் பதிவில் போட்டு விட்டீர்கள். அவர் பாடலில் சொன்ன மாதிரி எல்லாமே வந்து விட்டது. இங்கும் ஓரிடத்தில், பணம் போட்டோ, கார்டு காண்பித்தாலோ, நாம் கேட்ட இட்லி சுடச்சுட வருகிறது (முன்பு நாம் டோக்கன் பால் வாங்குவதை போல.) என்றார் என் மகன். இன்னமும் நாங்கள் அங்கு போகவில்லை. விஞ்ஞானம் முன்னேறி விட்டது. நாமும் அதன் வளர்ச்சியெனும் ஏணியில் ஏறி முன்னேறி கொண்டுள்ளோம். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்

   //பதிவு அருமை. படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. //

   நன்றி.

   //தங்கள் பேரன் கவினின் திறமைகள் வளர்ந்து கொண்டே போகிறது. அவர் கண்டு பிடித்த முதியோர் காப்பான் நல்லதொரு முயற்சி. முதியோர்களுக்கு வசதியாக இருக்கும். என் மனமார்ந்த வாழ்த்துக்களை கவினிடம் கூறுங்கள்.//

   மகிழ்ச்சி, வாழ்த்துக்களை சொல்கிறேன்.

   //ஆம்.. நீங்கள் கூறுவது போல ரோபோவின் தேவைகள் பெருகி கொண்டே போகிறது. அது எல்லாவற்றையும் நம் வசதிபட செய்கிறது.//

   ஆமாம். ரோபோவின் தேவைகள் பெருகி கொண்டுதான் போகிறது. நம் வசதிகளுக்கு ஏற்ப வடிவமைக்கபடுகிறது.

   //கலைவாணரின் இந்தப்பாடல் எனக்கும் மிகவும் பிடித்தமானது. அவர் அன்றே மாறி வரும் உலகத்தை கணித்த மாமனிதர். யதேச்சையாக இந்தப்பாடல் வரிகளை இரண்டொரு நாட்கள் முன்னர் பாடிக் கொண்டிருந்தேன். நீங்களும் இன்று உங்கள் பதிவில் போட்டு விட்டீர்கள். அவர் பாடலில் சொன்ன மாதிரி எல்லாமே வந்து விட்டது. //

   அவர் சொன்னது போல விஞ்ஞான வளர்ச்சியை அழிவுக்கு பயன்படுத்தாமல், ஆக்கத்திற்கு பயன்படுத்தவேண்டும்.

   //இங்கும் ஓரிடத்தில், பணம் போட்டோ, கார்டு காண்பித்தாலோ, நாம் கேட்ட இட்லி சுடச்சுட வருகிறது (முன்பு நாம் டோக்கன் பால் வாங்குவதை போல.) என்றார் என் மகன். இன்னமும் நாங்கள் அங்கு போகவில்லை. விஞ்ஞானம் முன்னேறி விட்டது. நாமும் அதன் வளர்ச்சியெனும் ஏணியில் ஏறி முன்னேறி கொண்டுள்ளோம். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.//

   காரில் அமர்ந்து கொண்டே நாம் ஆர்டர் செய்யலாம். பின் ஒரு இடத்தில் தயாராக இருக்கும் எடுத்து கொள்ளலாம். எல்லாம் வந்து விடும். வளர்ச்சி பாதையில் மனிதன் முன்னேறி கொடு இருக்கிரான் என்பது உண்மைதான்.

   உங்கள் கருத்துக்கு நன்றி கமலா.

   நீக்கு
 13. பேரனின் திட்டப்பணி அருமை.

  இனி எல்லாம் ஆர்டிஃபிசியல் இன்டெலிஜென்ஸ் கையில்

  கலைவாணர் பாடல் அருமை. பட்டனை தட்டி ப்ளே அருகில் வ ந் ததை பார்த்ததும் இப்போது அது செயல்பாட்டில் வ ந் துவிட்டதே என்று அன்றைய பாடலின் சிறப்பை உணர முடி ந் தது.

  பேரன் கவின் இது போல் இப்போது இது திட்டப் பணியாக இரு ந் தாலும் எதிர்காலத்தில் சாதனைகள் படைப்பார் உறுதி.

  வாழ்ததுகள் பாராட்டுகள் பேரனுக்கு.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோ துளசிதரன், வாழ்க வளமுடன்

   //பேரனின் திட்டப்பணி அருமை.//

   நன்றி.

   //இனி எல்லாம் ஆர்டிஃபிசியல் இன்டெலிஜென்ஸ் கையில்//

   ஆமாம்.

   //கலைவாணர் பாடல் அருமை. பட்டனை தட்டி ப்ளே அருகில் வ ந் ததை பார்த்ததும் இப்போது அது செயல்பாட்டில் வ ந் துவிட்டதே என்று அன்றைய பாடலின் சிறப்பை உணர முடி ந் தது.//

   ஆமாம். கனவுகள் நனவு ஆகிறது. வானத்தில் ஏறி சந்திர மண்டல வாசலை தொடலாமா? என்ற பாடலில் வந்தௌ போல சந்திர மண்டலத்திற்கு போய் விட்டான். அங்கு வாழ்வும் போகிறான்.
   "மாண்டு கிடக்கும் மனிதனின் மேனி மறுபடி எழலாமா?" அதுவும் நடக்கிறது.


   //பேரன் கவின் இது போல் இப்போது இது திட்டப் பணியாக இரு ந் தாலும் எதிர்காலத்தில் சாதனைகள் படைப்பார் உறுதி.

   வாழ்ததுகள் பாராட்டுகள் பேரனுக்கு.//

   உங்கள் வாழ்த்துகளுக்கும் கருத்துக்கும் நன்றி

   நீக்கு
 14. பேரன் கவினுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! இந்த வயதிலேயே எவ்வளவு சமூக சிந்தனை! எதிர்காலத்தில் இந்த வகையான ரோபோக்கள் நிச்சயம் உருவாக வாய்ப்பு உள்ளது. இன்று விழுந்த விதை நாளை விருட்சமாக வாழ்த்துகள். கவினின் கற்பனையோடு கையெழுத்தும் மிக அழகாக உள்ளது.

  கலைவாணர் பாடலின் கற்பனை வரிகள் யாவும் இன்று நடப்பில்! எல்லாமே கருவி மயமாகிக் கொண்டிருக்கும் இந்நாட்களில் மனித முகங்களில் புன்னகையைக் காண்பது அரிதாகிக் கொண்டே வருகிறது. உணவு பரிமாறுவதைக் கூட ரோபோ செய்கிறது! என்ன செய்ய முடியும்? எல்லாம் காலத்தின் கட்டாயம். ஏற்றுக்கொண்டாகவேண்டும்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கீதமஞ்சரி, வாழ்க வளமுடன்

   //பேரன் கவினுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! //

   பேரனை வாழ்த்தியதற்கு நன்றி.

   //இந்த வயதிலேயே எவ்வளவு சமூக சிந்தனை! எதிர்காலத்தில் இந்த வகையான ரோபோக்கள் நிச்சயம் உருவாக வாய்ப்பு உள்ளது. இன்று விழுந்த விதை நாளை விருட்சமாக வாழ்த்துகள்
   கவினின் கற்பனையோடு கையெழுத்தும் மிக அழகாக உள்ளது.//

   நன்றி கீதமஞ்சரி. நாளும் கண்டுபிடிப்புகள் நடந்து கொண்டு இருக்கிறது. உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி.

   //கலைவாணர் பாடலின் கற்பனை வரிகள் யாவும் இன்று நடப்பில்! //

   ஆமாம்.

   //எல்லாமே கருவி மயமாகிக் கொண்டிருக்கும் இந்நாட்களில் மனித முகங்களில் புன்னகையைக் காண்பது அரிதாகிக் கொண்டே வருகிறது.//
   ஆமாம், சதா சிந்தனை வயப்பட்ட முகங்கள். அடுத்து என்ன அடுத்து என்ன என்று ஓடி கொண்டு இருக்கிறார்கள். இலக்குகளை அடைய பாடும் படும் போது உறவுகள், நட்புகள், மற்றும் சமூகத்திற்கு நினைவு இருப்பது மகிழ்ச்சிக்குரிய விஷ்யம் தான்.


   //உணவு பரிமாறுவதைக் கூட ரோபோ செய்கிறது! என்ன செய்ய முடியும்? எல்லாம் காலத்தின் கட்டாயம். ஏற்றுக்கொண்டாகவேண்டும்!//

   ஆமாம். முன்பு ஓட்டலில் உணவு கொண்டு வந்து கொடுக்கும் பணியாளருக்கும் , உணவு உண்பவருக்கும் ஒரு நட்பை கொடுத்த விஷயம். அவர் உணவு பரிமாறும் மேஜையில் அமர்ந்து அவர் வரவை எதிர்பார்த்து நட்புடன் புன்னகை, மற்றும் நலம் விசாரிப்போம். அவை இல்லை.

   நீங்கள்சொல்வது போல எல்லாம் காலத்தின் கட்டாயம். ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

   உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி கீதமஞ்சரி.

   .

   நீக்கு
 15. முதியவர் காப்பான் குறித்த பேரனின் ஆய்வு மிகச் சிறப்பு. வாழ்த்துகளும் பாராட்டுகளும். உணவு பரிமாறும் இயந்திரம், தோடை சுடும் இயந்திரம் குறித்தத் தகவல்கள் புதிது. வீடு சுத்தம் செய்யும் ரூம்பா ஐரோபோட் லாக் டவுன் முடிந்த சமயத்தில் வாங்கி வைத்தேன் அவசரத்துக்கு உதவுமென.
  தொகுப்பு நன்று.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்

   //முதியவர் காப்பான் குறித்த பேரனின் ஆய்வு மிகச் சிறப்பு. வாழ்த்துகளும் பாராட்டுகளும்.//


   உங்கள் வாழ்த்துகளுக்கும், பாராட்டுகளுக்கும் நன்றி.

   //உணவு பரிமாறும் இயந்திரம், தோசை சுடும் இயந்திரம் குறித்தத் தகவல்கள் புதிது. //

   உணவு பரிமாறும் இயந்திரம் திருப்பூர் ஓட்டலில் வந்து விட்டது.
   தோசை சுடும் இயந்திரங்கள் இப்போது தொலைக்காட்சி தொடர் கதாநாயர்கள், நாயகிகள் விளம்பரம் செய்கிறார்கள் இன்ஸ்டாகிராமில்.


   //வீடு சுத்தம் செய்யும் ரூம்பா ஐரோபோட் லாக் டவுன் முடிந்த சமயத்தில் வாங்கி வைத்தேன் அவசரத்துக்கு உதவுமென.//

   ஆமாம், வீட்டு உதவியாளர் வராத போது பயன்படுத்தி கொள்ளலாம்.
   ஆனால் அதற்கு கீழே ஒன்றும் இல்லாமல் ஒதுங்க வைத்து கொடுக்க வேண்டி உள்ளது. பாதையில் எதுவும் தடைகள் இருக்க கூடாது.

   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 16. கவினின் முயற்சி பிரமிக்க வைக்கிறது பாராட்டுகள். வருங்காலத்தில் பிரகாசமாக விளங்குவார் வாழ்த்துகள்.

  ரொபோ படங்கள் அசத்தலாக இருக்கிறது.

  இக்கால கட்டத்தில் வயதானவர்களுக்கு நிச்சயம் இவ் உதவிகள் தேவை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்

   //கவினின் முயற்சி பிரமிக்க வைக்கிறது பாராட்டுகள். வருங்காலத்தில் பிரகாசமாக விளங்குவார் வாழ்த்துகள்.//

   உங்கள் பாராட்டுக்களும், வாழ்த்துகளும் பேரனுக்கு கிடைத்தது மகிழ்ச்சி, நன்றி.

   //ரொபோ படங்கள் அசத்தலாக இருக்கிறது.

   இக்கால கட்டத்தில் வயதானவர்களுக்கு நிச்சயம் இவ் உதவிகள் தேவை.//

   ஆமாம் ,வயதானவர்களுக்கு நிச்சயம் உதவியாக , பக்க துணையாக இருக்கும்.
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு