வெள்ளி, 17 நவம்பர், 2023

பழனி ஆண்டவரும் மகனின் வெகு நாள் ஆசையும்
என் கணவரின்  இஷ்ட தெய்வம் பழனி ஆண்டவர். 

ஓவியர் சில்பி அவர்கள் வரைந்த பழனி தண்டாயுதபாணி தெய்வ படம்.  தீபாவளி மலரில் வந்தபடத்தை அவர்கள் பழனி ஆண்டவர் கல்லூரியில் படிக்கும் போது தன் அறையில் வைத்து வணங்கியது.   எங்கள் பூஜை அறையில் நடுநாயகமாக இருப்பார்.
பழனி மலை முருகன் பதிவுகள் நிறைய  போட்டு இருக்கிறேன். ரோப் காரில் போனது படி வழியாக ஏறி போய் முருகனை தரிசனம் செய்த பதிவுகள்  போட்டு இருக்கிறேன்.

 இந்த முறை  யானை பாதை வழியாக  முருகனை  தரிசனம் செய்து வந்த காட்சிகள் , மற்றும் முருகன் மகனின் நீண்ட நாள் ஆசையை பூர்த்தி செய்த விவரமும் இருக்கும். சஷ்டி நாளில் முருகனை நினைக்கும் போது பல பழைய நினைவுகளும் வந்தது . 


பிள்ளையாருக்கு தேங்காய் உடைத்து  படியேறுவார்கள்
2017 ம் வருடம் மகன்  அரிசோனாவிலிருந்து மதுரை வந்த போது பழனி போய் இருந்தோம். குடும்பத்தோடு. நாங்களும் யானை பாதை வழியாக ஏறி போனோம்.

சிவபாலன்

வள்ளி, தெய்வானையுடன் முருகன்


மாங்கனி கதையை சொல்லும் சிற்பங்கள்.  துணிகளை போட்டு கட்டி மறைத்து  வைத்து இருக்கிறார்கள்

யானைபாதையில் உள்ள கோவில்

நாகராஜனாக சிவன் 

நந்தி அழகிய வேலைப்பாடு


கோவிந்தன்

காளிங்க நர்த்தனர்

இடும்பாயுதனே இடும்பா போற்றி! 

இடும்பனை வணங்கிய பின் தான் முருகனை வணங்க வேண்டும்.

இடும்பனிடம் முருகன் "உன்னை  வணங்கிய பின்னேதான் என்னை வணங்க வேண்டும்" என்று   வரம் தந்து விட்டார்.


ப்ரணவ மந்திரத்தை மறந்தான் பிரம்மனே !
அவனைச் சிறையினிலே அடைத்தான் முருகனே!

, மாமனும் இருக்கிறார்,  பிரம்மா,  பிரணவ மந்திர சொரூபன் . அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பையா, அகத்தியர்

வேடானக வந்த முருகன் வள்ளியிடம்

 பெண்ணே! உன் பெயர் யாதோ? ஊர் யாதோ? அவ்வூருக்குச் செல்லும் வழிதான் யாதோ? என்று கேட்கிறார்


 மான் வயிற்றில் பிறந்த மங்கை வள்ளியிடம்  "மான்விழி மாதே ! மான் வர கண்டாயா? என்ற கேள்வி 

மலை பாம்பு 
ஒளவையிடம்   கேள்விகள் கேட்கிறார்

ஒளவையே உலகில் அரியது என்ன?

அரியது கேட்கும் வடி வடிவேலோய்
அரிது அரிது மானிடராதல் அரிது
மானிடராயினும் குன் குருடு செவிடு 
பேடு நீங்கிப் பிறத்தல் அரிது.


சிவ குடும்பம் கைலை
மயில் மேல் ஏறி உலகத்தை சுற்றி வருவதற்குள் தாய் தந்தையரை வணங்கி மாங்கனியை பெற்று விட்டார் அண்ணன்."மாங்கனியை அண்ணனுக்கு கொடுத்து விட்டதால் தானே நான் இங்கு வந்தேன்"
தேவியர் இருவருடன் அழகு முருகன்
பழனி உட்பிரகாரத்தில் கல்வெட்டு

பேரன் கவின் முருகனை தரிசனம் செய்து வந்து விட்ட மகிழ்ச்சியால் ஆட்டம்

                                        மயில் போல ஆடவா?

கூட்டத்தில் தள்ளி விட்டுவிடுவார்களோ பேரனை என்று கவலையுடன் பார்வை


 பழனி மலை முருகன் இருக்கும் மூலஸ்தானம் தங்க விமானம்
அபிசேகம், அலங்காரத்திற்கு பணம் கட்டியதால் குருக்கள் உள்ளே அழைத்து போய் முருகன் முன் சிறிது நேரம் அமர வைத்து ஒரு ஆரத்தி காட்டி , மாலை மரியாதை செய்து  பிரசாதங்களை கொடுத்து அனுப்பி விட்டார்கள். 

மண்டபத்தில் சிறிது நேரம் அமர்ந்து என் மகன் 


 தன் மகனிடம்  தன் சிறு வயதில்  பழனி வந்த போது தான்  வாங்கிய முருகன் டாலரை பற்றி சொன்னான்.

மகனை சிறு வயதில்   பழனிக்கு அழைத்து சென்ற போது  ஒரு ரூபாய்க்கு கறுப்பு கயிரில்  அலுமினிய டாலர்  முருகன் மயிலுடன் இருப்பதை வாங்கி கொடுத்தோம் (அவன் தான் தேர்வு செய்து வாங்கினான்.) . சிறுவயதில் உடம்பு சரியில்லாமல் போகும் போது "முருகனை வணங்கி கொள் சரியாகிவிடும் "என்று சொன்னதை நம்பி அப்படியே வேண்டிக் கொள்வான் உடம்பு சரியில்லாமல் போனால் முருகன் டாலரை கையில் பிடித்து வேண்டிக் கொள்வான்.

 தினம் குளிக்கும் போது முருகனையும்  குளிபாட்டிவிடுவான் சோப்பு போட்டு. டாலர் தேய்ந்து போய் விட்டது வேறு வாங்கி தருகிறேன், என்றாலும்  கேட்கவில்லை. வெள்ளி டாலர் சுவமிமலை முருகன் வாங்கி கொடுத்தோம் போட மாட்டேன் என்று சொல்லி விட்டான். பழனி மலை முருகன் டாலர்தான் அவன் கழுத்தில் எப்போதும் இருக்கும் . கறுப்பு கயிறு மட்டும் வருடா வருடம் மாறும். தங்க செயின் செய்து கொடுத்தோம் அதில் அந்த டாலரை மாட்டி கொண்டான். 

அந்த கதையை கோவிலில் வைத்து  கவின் கிட்ட சொன்னான்


அவன் வெகு நாள் ஆசை டாலரை சுற்றி தங்கம் கட்டி செயினில் போட வேன்டும் என்று. எல்லா நகை செய்பவர்களும் அலுமினிய டாலரை சுற்றி தங்க கட்ட வேண்டாம், இதே போல தங்க டாலர் செய்து தருகிறோம் என்றார்கள்.

 மகன் இந்த டாலரில் தான் தங்கம் கட்ட வேண்டும்   உறுதியாக இருந்தான். இந்த முறை வரும் போது கொண்டு வந்தான் மருமகள் அம்மாவிற்கு தெரிந்த நகை கடையில் கேட்டுப்பார்த்தோம், செய்து தருகிறேன் நீங்கள் சொல்வது போல என்று செய்து தந்தார். 

வெகு நாள் ஆசையை முருகன் பூர்த்தி செய்தார்.பக்தர்களின் வேண்டுகோளை நிறைவேற்றுபவன் அல்லவா வேலவன். மகன் ஆசையை நிறைவேற்றி விட்டார்.கோவிலை வலம் வந்து 
மன நிறைவுடன் முருகனின் பஞ்சாமிர்தம் வாங்கி கொண்டு வீடு வந்து சேர்ந்தோம்.
பழனி முருகன்  திருப்புகழ்  (யூடுயூப்பில் பகிர்ந்தவருக்கு நன்றி.)


பழனி என்னும் ஊரிலே சூலமங்கல சகோதரிகள் பாடியது
(யூடியூப்பில் பகிர்ந்தவருக்கு நன்றி)


பழனி மலை முருகன் அனைவருக்கும் எல்லா நலங்களும் அருளட்டும்.

வாழ்க வையகம் ! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன் !
------------------------------------------------------------------------------------------------

30 கருத்துகள்:

 1. யானைப் பாதையில் பழனி மலை யாத்திரை அருமை

  எவ்வளவு படிகள்? எவ்வளவு நேரமானது?

  பாதையில் எடுக்கப்பட்ட படங்கள் சிறப்பு. மலைப்பாம்பு உண்மையானதா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் நெல்லைததமிழன், வாழ்க வளமுடன்

   //யானைப் பாதையில் பழனி மலை யாத்திரை அருமை//

   ஆமாம், நன்றாக இருக்கும் நிறைய கடைகள், மேலே இருந்து பழனி ஊரை படம் எடுக்கலாம். எடுத்தேன். முதல் உதவிக்கு சின்ன மருந்தகம் அனைத்தும் இருக்கும்.


   //எவ்வளவு படிகள்? எவ்வளவு நேரமானது?//

   படிகள் கிடையாது , நடைபாதைதான் உண்டு, மண்டபம் இருக்கும் வெயில் தெரியாது, வழியில் நிறைய பெஞ்ச் இருக்கும் அமர்ந்து போக
   எவ்வளவு நேரமானது என்று நினைவு இல்லை. படிகளில் ஏறுவதை விட விரைவில் போய் விட்டோம். திருமணம் ஆன புதிசில் காலை , மாலை யானை பாதையில் இயற்கை ரசித்து நடந்து போய் இறைவனை வணங்குவோம்.

   //பாதையில் எடுக்கப்பட்ட படங்கள் சிறப்பு. மலைப்பாம்பு உண்மையானதா?//

   இல்லை சிற்பம் தான். வேலி இட்டு இருக்கிறார்களே!

   நீக்கு
 2. அலுமினிய டாலர் மனதை நெகிழ்த்தியது. அதன் அருமை, போட்டுக்கொண்டிருப்பவருக்குத்தான் தெரியும். பொக்கிஷம்

  நானும் என் அப்பாவிடமிருந்த 71ம் வருடத்து பத்து ரூபாய் காயினை வைத்திருக்கிறேன். வெள்ளி செயினில் கோர்த்திருந்தாலும் கனம் தாங்காமல் அறுந்துவிட்டது.

  சாரின் புகைப்படத் கண்டு மகிழ்ந்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //அலுமினிய டாலர் மனதை நெகிழ்த்தியது. அதன் அருமை, போட்டுக்கொண்டிருப்பவருக்குத்தான் தெரியும். பொக்கிஷம்//

   மகன் அதை பொக்கிஷமாகதான் பாதுகாத்தான். எல்லோரும் "பழசாக ஆகி விட்டது வேறு வாங்கு" என்று கேலி செய்தாலும் பொருட்படுத்த மாட்டான்.

   //நானும் என் அப்பாவிடமிருந்த 71ம் வருடத்து பத்து ரூபாய் காயினை வைத்திருக்கிறேன். வெள்ளி செயினில் கோர்த்திருந்தாலும் கனம் தாங்காமல் அறுந்துவிட்டது.//

   என்னிடமும் 10 ரூபாய் காயின் இருக்கிறது. மிகவும் கனமாக இருக்கும்.

   //சாரின் புகைப்படத் கண்டு மகிழ்ந்தேன்.//

   பழைய கோவில் படங்களில் அவர்கள் இருப்பதை எடுத்துப்பார்த்து கொண்டு நானும் மகிழ்ந்து கொள்கிறேன்.

   உங்கள் கருத்துக்களுக்கு நன்றி நெல்லைத்தமிழன்.


   நீக்கு
 3. சில நம்பிக்கைகள்.  அந்த டாலரை சிறுவயதிலிருந்து மாற்றாமல் வைத்திருப்பபது மேகிழ்ச்சியைக் கொடுக்கிறது.  உங்கள் மகன் அந்த டாலரைத் தொடும்போதும் பார்க்கும்போதும் சிறுவனாகி விடுவார்.  முருகனுக்கு முன் என்றென்றும் நாம் சின்னஞ்சிறியவர்கள்தாம்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
   //சில நம்பிக்கைகள். அந்த டாலரை சிறுவயதிலிருந்து மாற்றாமல் வைத்திருப்பபது மேகிழ்ச்சியைக் கொடுக்கிறது//

   சிறு வயது நம்பிக்கைகள் நம்மிடம் பசுமையாக இருக்கும். என்றும் மகிழ்ச்சி தரும்.

   //உங்கள் மகன் அந்த டாலரைத் தொடும்போதும் பார்க்கும்போதும் சிறுவனாகி விடுவார். முருகனுக்கு முன் என்றென்றும் நாம் சின்னஞ்சிறியவர்கள்தாம்!//
   ஆமாம், மகனுக்கும் ஒரு டாலர் செயின் வாங்கி கொடுத்து விட்டு அந்த செயினையும், தன் செயினையும் இருவரும் பிடித்து கொண்டு எனக்கு படம் எடுக்க போஸ் கொடுத்தார்கள். தேடினேன் கிடைக்கவில்லை.

   நாம் முருகனுக்கு குழந்தைகள் தான் என்றும்.

   நீக்கு
 4. மூன்றாவது படிக்கும்போது (அதுதான் எனக்கு முதல் பள்ளி அனுபவமே) எனக்கும் இது மாதிரி ஒரு சங்கடம் நேர்ந்தபோது அம்மா தனது இஷ்ட தெய்வமான முருகனை எனக்கு காட்டிக் கொடுத்தார்.  ஒரு வாரம் கந்தர் சஷ்டி கவசம் படிக்கச் சொன்னார்.  அப்புறம் எனக்கு அந்த வயதில் ஒரு பெரிய (!!) கஷ்டம் வந்தபோது நான் வேண்டிக்கொண்டது  'இதில் மட்டும் நீ என்னைக் காப்பாற்றி விட்டால் வாழ்நாள் பூராவும் கந்தர் சஷ்டி கவசம் தினம் காலை சொல்வேன்...'  என்ன பேரம்!  காப்பாற்றினார்.  இன்று வரை சொல்லிக்கொண்டிருக்கிறேன் - இயந்திரமாய்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //மூன்றாவது படிக்கும்போது (அதுதான் எனக்கு முதல் பள்ளி அனுபவமே) எனக்கும் இது மாதிரி ஒரு சங்கடம் நேர்ந்தபோது அம்மா தனது இஷ்ட தெய்வமான முருகனை எனக்கு காட்டிக் கொடுத்தார். ஒரு வாரம் கந்தர் சஷ்டி கவசம் படிக்கச் சொன்னார். //

   அம்மாதான் நமக்கு நம்பிக்கை ஊட்டும் நம்பிக்கை நட்சத்திரம்.

   //எனக்கு அந்த வயதில் ஒரு பெரிய (!!) கஷ்டம் வந்தபோது நான் வேண்டிக்கொண்டது 'இதில் மட்டும் நீ என்னைக் காப்பாற்றி விட்டால் வாழ்நாள் பூராவும் கந்தர் சஷ்டி கவசம் தினம் காலை சொல்வேன்...' என்ன பேரம்! காப்பாற்றினார். இன்று வரை சொல்லிக்கொண்டிருக்கிறேன் - இயந்திரமாய்!//

   இயந்திரமாக சொன்னாலும், ஆற அமர சொன்னாலும் மனதில் நம்பிக்கை முருகன் மேல் இருக்கிறது அது போதும்.
   நம்பிக்கை நம்மை வாழ வைக்கும்.

   நீக்கு
 5. படங்களும் விவரங்களும் அருமை, சுவாரஸ்யம். அந்த டாலருக்கு தங்க வளையம் நன்றாய் இருக்கிறது.  என்ன ஒரு இளமைக்கால நினைவு, இல்லை?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //படங்களும் விவரங்களும் அருமை, சுவாரஸ்யம். அந்த டாலருக்கு தங்க வளையம் நன்றாய் இருக்கிறது. என்ன ஒரு இளமைக்கால நினைவு, இல்லை?//

   டாலரை இளமைகால நினைவுகளை ரசித்துப்பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி.

   பழனி மலை நிறைய நினைவுகளை கொடுத்து இருக்கிறது. இரண்டு குழந்தைகளுக்கும் மொட்டை யடித்து காது குத்தினோம். வருடத்திற்கு ஒரு முறை அழைத்து செல்வார்கள் சார் பழனிக்கு முன்பு.

   உங்கள் கருத்துக்களுக்கு நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 6. படங்கள் வழக்கம் போல அழகிய கோணத்தில் எடுத்து இருக்கிறீர்கள்.

  பிறருக்கு அது சாதாரண அலுமினிய டாலர் உங்கள் மகனுக்கு அது பொக்கிஷம்.

  இது பலருக்கு புரியாது நானும் இப்படி பல பொருட்களை பொக்கிஷமாக பல வருடங்களாக பாதுகாத்து வைத்து இருக்கிறேன்‌. எனக்கு புரியும் அவரது உணர்வு.

  காணொளிகள் கண்டேன் சிறப்பு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

   //படங்கள் வழக்கம் போல அழகிய கோணத்தில் எடுத்து இருக்கிறீர்கள்.//

   நன்றி.

   //பிறருக்கு அது சாதாரண அலுமினிய டாலர் உங்கள் மகனுக்கு அது பொக்கிஷம்.//

   ஆமாம். சிறு வயதில் உடம்பு சரியில்லாமல் இருக்கும் போது முருகன் டாலரை பிடித்து கொண்டுதான் தூங்குவான்.

   //இது பலருக்கு புரியாது நானும் இப்படி பல பொருட்களை பொக்கிஷமாக பல வருடங்களாக பாதுகாத்து வைத்து இருக்கிறேன்‌. எனக்கு புரியும் அவரது உணர்வு.//

   ஆமாம் , பல பொருட்களை பொக்கிஷமாக போற்றி பாதுகாக்கும் உங்களுக்கு மகனின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடியும்.

   //காணொளிகள் கண்டேன் சிறப்பு.//

   காணொளிகள் பார்த்தது மகிழ்ச்சி.

   உங்கள் கருத்துக்கு நன்றி. இன்று அனைத்து பதிவுகளையும் படித்து கருத்து சொன்னதற்கு நன்றி. வேலை, தங்கும் இடம் எல்லாம் வசதியாக இருக்கிறதா? பழகிய ஊர் அதனால் கவலை இல்லை.
   நீக்கு
  2. வேலை சரியாகி விட்டது மற்ற அபீஸியல் பேப்பர் சரியானதும் நம்பர் வாங்கி விடுவேன்.

   கம்பெனி போனை பர்சனலுக்கு உபயோகிப்பதில்லை.

   வந்து கொண்டு இருக்கும் எனது பதிவுகள் ஊரில் செட்யூல் செய்தது.

   நான் இணையம் வருவது சற்று தாமதமாகும் மன்னிக்கவும் நன்றி.

   நீக்கு
  3. மீண்டும் வந்து பதில் அளித்தமைக்கு நன்றி ஜி.

   //கம்பெனி போனை பர்சனலுக்கு உபயோகிப்பதில்லை//

   .அதுதான் நல்லது.

   வந்து கொண்டு இருக்கும் எனது பதிவுகள் ஊரில் செட்யூல் செய்தது.//

   நினைத்தேன் அப்படித்தான் இருக்கும் என்று.

   //நான் இணையம் வருவது சற்று தாமதமாகும் மன்னிக்கவும் நன்றி.//

   மன்னிப்பு எல்லாம் வேண்டாம். நேரம் கிடைக்கும் போது பதிவுகளை கண்டு கருத்து அளிக்கலாம்.

   நீக்கு
 7. கோமதிக்கா, படங்களும் பதிவும் சிறப்பாக இருக்கிறது அதுவும் உணர்வுபூர்வமான நிகழ்வுகளுடன்.

  பேரன் கவினின் நடனம் படம் மகிழ்ச்சி, மாமாவின் படம் - நெகிழ்ச்சி.

  யானைப்பாதை என்பது, முன்பு யானைகள் போகும் பாதையாக இருந்ததோ கோமதிக்கா?

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்

   //கோமதிக்கா, படங்களும் பதிவும் சிறப்பாக இருக்கிறது அதுவும் உணர்வுபூர்வமான நிகழ்வுகளுடன்.

   பேரன் கவினின் நடனம் படம் மகிழ்ச்சி, மாமாவின் படம் - நெகிழ்ச்சி.//


   நன்றி கீதா.

   //யானைப்பாதை என்பது, முன்பு யானைகள் போகும் பாதையாக இருந்ததோ கோமதிக்கா?//

   முன்பும் , இப்போதும் யானைகள் ஏறி வரும் பாதைதான்.
   படிகள் 600க்கு மேலே உள்ளது அவை சிறியாதாக இருப்பதால் அதில் யானைகள் ஏறி வருவது கடினம். அதனால் இந்த பாதை அமைக்கபட்டது. திருவிழா சமயங்களில் யானைகள் ஏறி வரும்.

   நீக்கு
 8. ஒவ்வொருவரது நம்பிக்கைகள் அதைச் சார்ந்த உணர்வுகள். மகனின் சிறு வயது ஆசை நிறைவேறியது மகிழ்வான விஷயம். தங்கம் பார்டர் அழகாக உள்ளது. அந்த டாலரை பொக்கிஷமாக வைத்து அணிந்திருப்பது அதுதான் அவருடைய உணர்வு சம்பந்தப்பட்ட விஷயம். இல்லையா...அது பொக்கிஷம் இல்லையா அவருக்கு. மனதை நெகிழ்த்திய விஷயங்கள் கோமதிக்கா.

  நந்தி படங்கள் எல்லாம் மிக அழகு. அது போன்று இறைவன் படங்களும்.

  தினமும் சஷ்டிக்கவசம் கேட்பதுண்டு, ஸ்கந்தகுரு கவசமும்.

  வேண்டுதல் என்று நான் எதுவும் செய்வதில்லை கோமதிக்கா ஆனால் முழு நம்பிக்கை இறைவனைத் தியானித்து துதிக்கும் போது மனம் அமைதி அடைந்து சரியாகச் சிந்தித்துச் செயல்பட வழி காட்டும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு.

  அனைத்துப் படங்களும் அருமை.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //ஒவ்வொருவரது நம்பிக்கைகள் அதைச் சார்ந்த உணர்வுகள். மகனின் சிறு வயது ஆசை நிறைவேறியது மகிழ்வான விஷயம். தங்கம் பார்டர் அழகாக உள்ளது. அந்த டாலரை பொக்கிஷமாக வைத்து அணிந்திருப்பது அதுதான் அவருடைய உணர்வு சம்பந்தப்பட்ட விஷயம். இல்லையா...அது பொக்கிஷம் இல்லையா அவருக்கு. மனதை நெகிழ்த்திய விஷயங்கள் கோமதிக்கா.//

   ஆமாம் கீதா நம்பிக்கைகள் ஓவ்வொருவருக்கு ஒவ்வொரு மாதிரி.
   நம்நினைவுகளும், சில பொருட்களும் நமக்கு பொக்கிஷம் தான்.
   மகனுக்கு பொக்கிஷம் தான்.

   //நந்தி படங்கள் எல்லாம் மிக அழகு. அது போன்று இறைவன் படங்களும்.//

   நன்றி.

   தினமும் சஷ்டிக்கவசம் கேட்பதுண்டு, ஸ்கந்தகுரு கவசமும்.
   வேண்டுதல் என்று நான் எதுவும் செய்வதில்லை கோமதிக்கா ஆனால் முழு நம்பிக்கை இறைவனைத் தியானித்து துதிக்கும் போது மனம் அமைதி அடைந்து சரியாகச் சிந்தித்துச் செயல்பட வழி காட்டும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு.//

   அசைக்க முடியாத நம்பிக்கை ஒன்று போதும் அது உண்களை வழி நடத்தி செல்லும் கீதா.

   யாவர்க்கும் ஆம் இறைவர்க்கு ஒரு பச்சிலை
   யாவர்க்கும் ஆம் பசுவுக்கு ஒரு வாயுறை
   யாவர்க்கும் ஆம் உண்ணும்போது ஒரு கைப்பிடி
   யாவர்க்கும் ஆம் பிறர்க்கு இன்னுரை தானே//

   திருமந்திரத்தில் திருமூலர் சொன்னது போல நீங்கள் பிறருக்கு கூறும் இன்னுரை ஒன்று போதும் கீதா. மந்திரம், இறை நாமங்கள் ஜெபிக்க வேண்டும் என்று இல்லை.

   //அனைத்துப் படங்களும் அருமை.//
   நன்றி கீதா.   நீக்கு
 9. இப்படிப் பாதுகாப்பது பலருக்கும் வினோதமாக இருக்கும். நானும் சில பொருட்களை ரொம்ப பொக்கிஷமாகப் பாதுகாக்கிறேன். அம்மா பயன்படுத்திய தோசைக்கல், உருளி, மகன் சிறு வயதில் ஆசையாகச் சேகரித்த கோலிகள், காயின்கள், இன்னும் சில பொருட்கள்.

  காணொளி கண்டேன் கோமதிக்கா.. சிறப்பாக இருக்கு

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //இப்படிப் பாதுகாப்பது பலருக்கும் வினோதமாக இருக்கும். நானும் சில பொருட்களை ரொம்ப பொக்கிஷமாகப் பாதுகாக்கிறேன். அம்மா பயன்படுத்திய தோசைக்கல், உருளி, மகன் சிறு வயதில் ஆசையாகச் சேகரித்த கோலிகள், காயின்கள், இன்னும் சில பொருட்கள்//

   நானும் நிறைய பொக்கிஷசேமிப்புகள் வைத்து இருக்கிறேன் உங்களை போல!

   //.காணொளி கண்டேன் கோமதிக்கா.. சிறப்பாக இருக்கு//

   காணொளிகளை கேட்டு பதிவை ரசித்து கருத்துக்கள் சொன்னதற்கு நன்றி கீதா.

   நீக்கு
 10. அட எங்கள் பக்கத்து ஊர் ஆன்மிக சுற்றுலா சிறப்பு..

  படங்களும் விளம்பரங்களும் அருமை...

  பேரனுக்கு வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன் வாழ்க வளமுடன்
   உங்கள் கருத்துக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி.

   நீக்கு
 11. பழனி முருகன் யானைப்பாதையில் சென்று தரிசனம் பெற்றோம். நேரில் தரிசித்ததுபோல இருந்தது.மிக்க மகிழ்ச்சி. படங்களும் அழகு.

  மகனின் ஆசையை முருகன் நிறைவேற்றிவிட்டார்.

  பழனி முருகன் இருதடவை தரிசனம் பெற்றிருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்

   //பழனி முருகன் யானைப்பாதையில் சென்று தரிசனம் பெற்றோம். நேரில் தரிசித்ததுபோல இருந்தது.மிக்க மகிழ்ச்சி. படங்களும் அழகு.//

   நன்றி மாதேவி.

   //மகனின் ஆசையை முருகன் நிறைவேற்றிவிட்டார்.//

   நீண்ட நாள் ஆசை முருகன் நிறைவேற்றி விட்டார்.


   //பழனி முருகன் இருதடவை தரிசனம் பெற்றிருக்கிறேன்.//

   ஓ அப்படியா மகிழ்ச்சி.
   உங்கள் கருத்துக்கு நன்றி மாதேவி.

   நீக்கு
 12. படங்களும் பகிர்வும் சிறப்பு. சில பொருட்கள் மேல் நமக்கான பிடிப்பு தவிர்க்க முடியாதது. விரும்பிய வண்ணமே தங்கத்தில் டாலரைப் பொருத்தி விட்டதில் மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்

   //படங்களும் பகிர்வும் சிறப்பு.//

   நன்றி.

   //சில பொருட்கள் மேல் நமக்கான பிடிப்பு தவிர்க்க முடியாதது. //

   ஆமாம்.

   //விரும்பிய வண்ணமே தங்கத்தில் டாலரைப் பொருத்தி விட்டதில் மகிழ்ச்சி.//

   ஆமாம் எல்லோருக்கும் மகிழ்ச்சி.

   உங்கள் கருத்துக்கு நன்றி ராமலக்ஷ்மி.

   நீக்கு
 13. எந்த மலைப்பாதையிலும் ஏறி நான் மேலே போனதே இல்லை. அஹோபிலம் தவிர்த்து. அது கடுமையான மலைப்பாதை. நரசிம்மர் அருளால் ஏறி விட்டேன். இப்போ நினைச்சுக் கூடப் பார்க்க முடியாது. யானைப்பாதையில் நீங்க பழனி மலை ஏறியது சிறப்பு. படங்கள் அனைத்தும் காணக்கிடைக்காதது. உங்கள் மகனின் ஆசை பூர்த்தி ஆனது முருகன் அருளே. டாலர் நன்றாக இருக்கிறது. கவின் சின்னக் குழந்தையாக இருக்கிறான். இப்போ நல்ல உயரமாக வளர்ந்து விட்டான். பழநிக்கு ஒரே முறை போனோம். கீழே திருவாவினன்குடியைப் பார்க்காமல் அசடுகளாகத் திரும்பி வந்தோம். போன வருஷம் மகன், மருமகளிடம் சொல்லிக் குழந்தையுடன் திருவாவினன் குடி, பழனி மலை இரண்டுக்கும் போகச் சொன்னோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்

   //எந்த மலைப்பாதையிலும் ஏறி நான் மேலே போனதே இல்லை. அஹோபிலம் தவிர்த்து. அது கடுமையான மலைப்பாதை. நரசிம்மர் அருளால் ஏறி விட்டேன். இப்போ நினைச்சுக் கூடப் பார்க்க முடியாது//

   ஆமாம், இப்போது போக முடியாதுதான்.

   //யானைப்பாதையில் நீங்க பழனி மலை ஏறியது சிறப்பு. படங்கள் அனைத்தும் காணக்கிடைக்காதது.//

   அது 2015 ல் போனது.

   //உங்கள் மகனின் ஆசை பூர்த்தி ஆனது முருகன் அருளே//

   ஆமாம்.

   . //டாலர் நன்றாக இருக்கிறது.//

   நன்றி.

   //கவின் சின்னக் குழந்தையாக இருக்கிறான். இப்போ நல்ல உயரமாக வளர்ந்து விட்டான்//

   ஆமாம் , வளர்ந்து விட்டான்.

   //பழநிக்கு ஒரே முறை போனோம். கீழே திருவாவினன்குடியைப் பார்க்காமல் அசடுகளாகத் திரும்பி வந்தோம். போன வருஷம் மகன், மருமகளிடம் சொல்லிக் குழந்தையுடன் திருவாவினன் குடி, பழனி மலை இரண்டுக்கும் போகச் சொன்னோம்.//

   திருவாவினன்குடிதான் படைவீடு. மகன், மருமகள், பேத்தி போய் வந்தது மகிழ்ச்சி.

   உங்கள் கருத்துக்கு நன்றி.


   நீக்கு
 14. விருப்பம் நிறைவேறியதில் மகிழ்ச்சி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்

   //விருப்பம் நிறைவேறியதில் மகிழ்ச்சி//

   ஆமாம்,, எல்லோருக்கும் மகிழ்ச்சி.

   நீக்கு