திங்கள், 10 ஏப்ரல், 2023

தோட்டத்திற்கு வந்த அணில்



                       மகள் வீட்டுத் தோட்டத்திற்கு வந்த அணில்.

காலை முதல் மாலை வரை அணில்கள், பறவைகளை பார்ப்பது மகிழ்ச்சியான பொழுது போக்கு. மகளுக்கு சிறு சிறு உதவிகள் செய்து கொடுத்து விட்டு பின் அவைகளை பார்ப்பது மகிழ்ச்சி.

இரண்டு மூன்று அணில்கள் மரத்தில் ஓடி பிடித்து விளையாடின. இந்த பதிவில் ஒரு அணில் மட்டும் தான் இடம்பெறுகிறது.

நீ எப்போது ஊரிலிருந்து வந்தாய் என்ற பார்வை
நலமா?


ஓளிந்து விளையாடும் என்னிடம், நான் இருக்கிறேனா என்று ஒரு பார்வை.

வேறு ஒரு அணில் கொறித்து கொண்டு இருந்தது. காமிரா எடுத்து வந்து   கொறிப்பதை  போட்டோ   எடுக்க போனேன்,
அது கொறிப்பதை விட்டு விட்டு மிரண்டு போய் பார்த்தது.

அட்லாண்டா பயந்த அணில் என்று பேர் கொடுத்து இருக்கிறேன்.

ஏதோ கொறித்து கொண்டு இருந்தது அணில். என்னைப்பார்த்ததும் அப்படியே ஒரு கணம் என்ன செய்வது என்று தெரியாது "திக்பிரமை" பிடித்தது போல் நின்று விட்டது. மூச்சு மட்டும் போய் வந்து கொண்டு இருக்கிறது. நான் அது ஓடுவதை காணொளி எடுக்கலாம் என்று இருந்தேன், அது அப்படியே சிறிது நேரம் நின்று விட்டு ஒரே ஓட்டமாக புதர் செடிக்குள் மறைந்து விட்டது. 



இந்த மரம் தான் அணில்கள் ஓடி விளையாடும் மரம்.  நான் வீட்டு வாசலில் இருந்து ஜூம் செய்து எடுத்தேன் காமிராவில்.



நானும் இந்த அணில் மாதிரி அட்லாண்டாவிற்கு விமானத்தில் தனியாக வர பயந்தேன் . விமானத்தில் முதன் முதலில் அத்தை, மாமாவை அழைத்து கொண்டு நாங்கள் டெல்லி போனோம்.
அப்புறம் அமெரிக்கா மற்றும் பல ஊர்களுக்கும் ,  கணவருடன், பிள்ளைகளுடன் தான் பயணம். தனியாக இதுவே முதல் முறை.

மகன் அனுமதி பெற்று உள்ளே வந்து விமானம் ஏற்றி விட்டான்.  "நான்கு மணி நேரம் தான் ஆகும் அதற்கு ஏன் பயம் என்று சொல்லி ஏற்றி விட்டான்." கால்வலி, இடுப்புவலி. இந்த முறை சக்கர நாற்காலி   வாங்கி அதில் தள்ளி கொண்டு வந்தான் மகன். விமானத்தில் என்னால் அமர்ந்து இருக்க முடியவில்லை, நின்று கொண்டு பயணம். என் பக்கத்தில் அமர்ந்து இருந்த இருவரும் நல்ல தூக்கம் , எனக்கு எழுந்து நிற்க வசதியாக ஓரத்து இருக்கை வாங்கி இருந்தான் மகன். அதனால் அவர்களை தொந்திரவு செய்யாமல் நின்று கொண்டேன். மகள் அங்கும் சக்கரநாற்காலி வசதி  சொல்லி இருந்தாள், அதனால் அவள் நிற்கும் இடம் வரை உதவியாளர் கூட்டி வந்து விட்டார், பின் மகள் அழைத்து வந்தாள் கார் வரை.

ஊருக்கு போக  20 மணி நேரத்திற்கு மேலாக அமர்ந்து இருக்க வேண்டும் . "விமான பயணம் என்னால் முடியவில்லை, இனி நீங்கள் வந்து பார்க்க வாருங்கள்" என்று சொல்லி கொண்டு இருக்கிறேன். "ஒருநாள் கஷ்டப்பட்டு வந்தால் ஆறு மாதம், ஒரு வருடம் மகிழ்ச்சியாக எங்களுடன் இருக்கலாம் , நாங்கள் வந்தால் கொஞ்ச நாள்தான் இருக்கலாம்" என்கிறார்கள்.

 இந்தியா வரும் போது மகன் குடும்பத்துடன் உடன் வருவான்.

அந்த சின்ன அணில் என்னை பயந்த அணில் என்று போட்டு இருக்கிறாய் நீயும் தானே பயந்தாய் அட்லாண்டா வர என்று கேட்பது போல இருக்கிறது.

"உங்களை எல்லாம் பார்த்தவுடன் பயம் போய் விட்டது. மகிழ்ச்சியாக இருக்கிறது. தினம்  வாங்க நீங்கள் எல்லாம்" என்று சொல்லி இருக்கிறேன். பறவைகளும், அணில்களும் பூனைகளும் இனி தொடர்ந்து வருவதாக வாக்கு அளித்து இருக்கிறார்கள். எல்லோரும் வேலைக்கு போய் விட்டால் அவர்கள் வரும் வரை இவர்கள்தான் துணை எனக்கு. 

அவர்களை படம் எடுத்து போடுகிறேன். 

வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
----------------------------------------------------------------------------------------------------

36 கருத்துகள்:

  1. வயதானல் விமானப்பயணம் ஒவ்வாதுதான். பேசாமல் பிள்ளைகளோடு இங்கேயே இருந்துவிடுங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மதுரை தமிழன், வாழ்க வளமுடன்
      //வயதானல் விமானப்பயணம் ஒவ்வாதுதான். பேசாமல் பிள்ளைகளோடு இங்கேயே இருந்துவிடுங்கள்//

      முடிந்தால் இங்கேயே இருந்து விடுவேன். இப்போது இருக்க முடியாதே! ந்டைமுறை சட்ட,திட்டங்கள் இருக்கே! கிரீன் கார்ட்டு வாங்க வேண்டுமே!
      உங்கள் வரவுக்கும் , கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  2. அந்த அணில் உண்மையிலேயே செய்வதறியாமல் கைகளைக் கோர்த்துக்கொண்டு விழிப்பது நல்ல காட்சி.  ஆனாலும் ஏதோ ஒரு நம்பிக்கையில் உடனே ஓடி ஒழியாமல் உங்களை முதலிலிருந்தே எட்டிப் பார்ப்பதும் விளையாடுவதுமாக இருந்திருக்கிறது.  புதிய ஆட்களையும் அடையாளம் கண்டு கொள்ளுமோ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

      //அந்த அணில் உண்மையிலேயே செய்வதறியாமல் கைகளைக் கோர்த்துக்கொண்டு விழிப்பது நல்ல காட்சி. //

      ஜன்னல் வழியே அணில் கொறிப்பதை பார்த்து போனேன், அது என்னை எதிர்பார்க்கவில்லை, சிலையாக நின்று விட்டது.


      //ஆனாலும் ஏதோ ஒரு நம்பிக்கையில் உடனே ஓடி ஒழியாமல் உங்களை முதலிலிருந்தே எட்டிப் பார்ப்பதும் விளையாடுவதுமாக இருந்திருக்கிறது. புதிய ஆட்களையும் அடையாளம் கண்டு கொள்ளுமோ...//

      ஆமாம், அவைகளுக்கும் எல்லாம் தெரியும்.



      நீக்கு
  3. முதல்முறை தனியாக பயணம் என்பது நெகிழ்த்தியது.  சில சமயங்களில் நம்மால் நம் இளவயதுகளில், அதாவது செயல்திறன் கூடிய நாட்களில் அமையாத வாய்ப்பு இப்படி வேறு வழியின்றி அமையும்போது சிரமமாகவும் இருக்கும்.  அப்போதிலிருந்தே இப்படி தனிப்பயணம் செய்திருந்தால் நமக்கும் பழகிப் போயிருந்திருக்கும்.  விமானப்பயணம் என்றில்லை.  நிறைய அனுபவங்கள் இப்படிதான்!   அதிலும் இடுப்புவலி, கால்வலி வேறு வாட்டும்போது உங்கள் பயணம்.  நின்றுகொண்டு பயணம் என்பது சங்கடமானது இல்லையா?  மற்றவர்கள் வினோதமாக பார்ப்பார்கள்.  விமான பணிப்பெண்களுக்கு உங்கள் மகன் முன்கூட்டியே சொல்லி இருந்திருப்பார்.  பறக்கும் விமானத்தில் குறுகிய இடைவெளியில் இருக்கைக்கு நடுவே நிற்பது என்பதும் சிரமம்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //முதல்முறை தனியாக பயணம் என்பது நெகிழ்த்தியது//

      சிறு வயதில் தனியாக பஸ், ரயிலில் பயணம் செய்து இருக்கிறேன்.
      விமான பயணம் இதுதான் முதல் முறை.

      //நம் இளவயதுகளில், அதாவது செயல்திறன் கூடிய நாட்களில் அமையாத வாய்ப்பு இப்படி வேறு வழியின்றி அமையும்போது சிரமமாகவும் இருக்கும்
      அப்போதிலிருந்தே இப்படி தனிப்பயணம் செய்திருந்தால் நமக்கும் பழகிப் போயிருந்திருக்கும். விமானப்பயணம் என்றில்லை. நிறைய அனுபவங்கள் இப்படிதான்! //

      ஆமாம், உண்மை. சரியாக சொன்னீர்கள். நிறைய அனுபவங்கள் இருக்கிறது. தினம் கற்றுக் கொண்டு வருகிறேன்.

      //அதிலும் இடுப்புவலி, கால்வலி வேறு வாட்டும்போது உங்கள் பயணம். நின்றுகொண்டு பயணம் என்பது சங்கடமானது இல்லையா?//

      ஆமாம், சங்கடமானதுதான்.

      மற்றவர்கள் வினோதமாக பார்ப்பார்கள். விமான பணிப்பெண்களுக்கு உங்கள் மகன் முன்கூட்டியே சொல்லி இருந்திருப்பார். பறக்கும் விமானத்தில் குறுகிய இடைவெளியில் இருக்கைக்கு நடுவே நிற்பது என்பதும் சிரமம்தான்.//

      இல்லை என்னை புரிந்து கொண்டார்கள் பாதையில் நிற்கும் போது கழிவரை செல்ல வரும் போது, நான் இருக்கைக்கு நடுவே போய் விடுவேன். அப்போது என்னிடம் மன்னிப்பு கேட்டு நன்றி சொல்லி போவார்கள்.
      விமான பணிப்பெண்கள் , ஆண்கள் ஏதாவது தேவையா என்று அன்புடன் விசாரித்து போவார்கள். வலி மாத்திரை போட்டு கொஞ்சம் வலியை போக்கினேன். ஓரத்து இருக்கை என்பதால் என்னுடன் இருந்தவர்களை தொந்திரவு செய்யாமல் நின்று கொண்டேன்.
      . உடகாருவதை விட நின்று கொண்டு இருந்தது தேவலை என்ற நிலமை. மற்ற விமானங்களில் நடக்கலாம். இதில் நடக்க முடியாது.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. அணில் படங்கள் நன்று.

    மகள் வீட்டில் மகிழ்ச்சியாக இருங்கள். தொடர்ந்து பதிவுகள் வரட்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

      //அணில் படங்கள் நன்று.

      மகள் வீட்டில் மகிழ்ச்சியாக இருங்கள். தொடர்ந்து பதிவுகள் வரட்டும்//

      அணில் போட்டாச்சு, பூனைகள், மற்றும் பறவைகள் வரும்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  5. பறவைகள், அணில் போன்றவற்றைப் பார்த்துக்கொண்டு இருந்தாலே பொழுது மகிழ்ச்சியாகப் போகும். கூடவே நமக்குப் பிடித்த சீரியல், விளையாட்டு நிகழ்ச்சிகளும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்

      //பறவைகள், அணில் போன்றவற்றைப் பார்த்துக்கொண்டு இருந்தாலே பொழுது மகிழ்ச்சியாகப் போகும்.//
      ஆமாம். பொழுது மகிழ்ச்சியாக போகிறது.

      //கூடவே நமக்குப் பிடித்த சீரியல், விளையாட்டு நிகழ்ச்சிகளும்.//
      சீரியல் ஒன்று இரண்டு பார்க்கிறேன். கவினுடன் வீடியோவில் ஒரு மணி நேரம் , விளையாட்டு, பேச்சு என்று நேரம் போகிறது.

      நீக்கு
  6. அணில் நினைத்திருக்குமோ.... மாட்டிக்கொண்டோம். துப்பாக்கி போலிருக்கு என்று. காணொளி நன்று

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அணில் நினைத்திருக்குமோ.... மாட்டிக்கொண்டோம். துப்பாக்கி போலிருக்கு என்று..//

      இருக்கலாம்.

      காணொளி நன்று//

      காணொளி பார்த்தது மகிழ்ச்சி, நன்றி.

      நீக்கு
  7. 20 மணி நேரப் பயணம் மிகச் சிரம்ம்தான். பொதுவா சில மணி நேரங்களுக்கு சில தடவை, விமானத்தில் நடப்பது உண்டு.

    நின்றுகொண்டே பயணம் என்றால் இன்னும் கடினமே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //20 மணி நேரப் பயணம் மிகச் சிரம்ம்தான். பொதுவா சில மணி நேரங்களுக்கு சில தடவை, விமானத்தில் நடப்பது உண்டு.//

      நானும் நடப்பேன், சீட் பெல்ட் கழற்றலாம் என்று வந்தவுடன் கழற்றி விட்டு நடப்பேன். சிறிது நேரம் நிறபேன், சிறிது நேரம் சினிமா பார்ப்பேன், புத்தகம் படிப்பேன். இருந்தாலும் முன்பு மாதிரி நீண்ட நேரம் உட்காரமுடியாமல் வலி தொந்திரவு செய்கிறது.

      //நின்றுகொண்டே பயணம் என்றால் இன்னும் கடினமே.//

      இந்த முறை தான் நான்கு மணி நேரம் கூட உட்கார முடியாமல் போனது.
      அதுதான் போகும் போது எப்படி 20 மணி நேரம் அமர்ந்து போக போகிறோம் என்ற கவலை வந்து விட்டது.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  8. லண்டன் ஹைடன் பார்க்கில் பெரிய அணிலைப் பார்த்து ஆச்சர்யப்பட்டேன். அதுபோல முக்க் குண்டான அண்டங்காக்காய்களும்.

    மரம் அழகாக இருக்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //லண்டன் ஹைடன் பார்க்கில் பெரிய அணிலைப் பார்த்து ஆச்சர்யப்பட்டேன். அதுபோல முக்க் குண்டான அண்டங்காக்காய்களும்.//

      ஆமாம், இதைவிட பெரிய அணில்கள் இருக்கிறது. அண்டங்காக்காய்களும் பெரிதே. நீங்கள் பார்த்தவைகளை பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி.

      //மரம் அழகாக இருக்கிறது//
      இந்த மரம் பல கிளைகளாக பிரிந்து பார்க்க அழகாய் இருக்கும்.

      இந்த குடியிருப்பு வீடுகளில் ஒவ்வொரு வீட்டிலும் நிறைய மரங்கள் இருக்கிறது.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  9. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. அணில்கள் பார்க்க அழகாக இருக்கின்றன. அவைகளை படமெடுத்து அதற்கு தகுந்தாற் போல வாக்கியங்களை அமைத்து நீங்கள் தந்திருப்பது நன்றாக உள்ளது.

    காணொளி பார்த்தேன். நீங்கள் சொல்வது போல் சிறிது நேரம் அசையாமல் நின்று விட்டு ஓடுகிறது. அணில்களுக்கே ஓடும் வேகம் அதிகம். அது ஓடியாடி விளையாடும் போதோ, இல்லை ஏதாவதொன்றை கொறிக்கும் போதோ நம்மை அசையாமல் பார்த்தால் முணுமுணுவென்று வாய்க்குள் கூறுவது போல் தோன்றும்.

    இராமாயண காலத்தில் ஸ்ரீ ராமரிடம் இந்த ஓடி உழைக்கும் செயலுக்காக அன்பு பரிசெனும் ஒரு அடையாளத்தை வாங்கியது அல்லவா!!

    இங்கு அதிகமாக அணில்களை காண முடிவதில்லை. நாம்தான் கீழே வாழும் குடியிருப்பை விட்டு வானத்தை இடமாக கொண்டிருக்கும் கழுகுகளுக்கு போட்டியாக மேலே ஏற ஆரம்பித்து விட்டோமே.. (மூன்றாவது மாடி) இன்னமும் இருபது மாடி, அதற்கு மேலும் என்றெல்லாம் இருப்பவர்கள் கழுகை கூட பார்க்க முடியாது என நினைக்கிறேன். இப்போதைக்கு என்னால் கழுகுகள், புறாக்கள் பறப்பதைதான் காண முடிகிறது. (மேலும் இங்கு கழுகுகள்தான் அதிகம்.)

    தங்களின் பயம் புரிகிறது. விமானத்தில் நீண்ட நேரம் அமர்ந்து செல்வதும் கடினம்தான். கீரீன்கார்டு சீக்கிரம் கிடைத்து விட்டால் நல்லது. உங்களின் இரு குழந்தைகளும் அங்கேயே இருக்கும் பட்சத்தில் எப்படியாவது முயற்சித்தால் கிடைக்க வாய்ப்பு இருக்குமே.. அங்கேயே நீங்களும் அவர்களுடன் எப்போதும் தங்கியிருக்குபடி விரைவில் குடியுரிமை கார்டு கிடைக்க நானும் பிரார்த்தித்துக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    உங்களின் நேற்றைய பதிவுக்கும் என்னால் வர இயலவில்லை. இங்கு பேரனின் பேத்திகளுக்கு பள்ளி விடுமுறை என்பதினால் அவர்களுக்காக குடும்பத்துடன் இப்படி எங்காவது வெளியில் செல்வதால் நேரம் சரியாக போய் விடுகிறது. பிறகு மதிய வாக்கில் வருகிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்

      //பதிவு அருமை. அணில்கள் பார்க்க அழகாக இருக்கின்றன. அவைகளை படமெடுத்து அதற்கு தகுந்தாற் போல வாக்கியங்களை அமைத்து நீங்கள் தந்திருப்பது நன்றாக உள்ளது.//

      நன்றி கமலா.

      //காணொளி பார்த்தேன். நீங்கள் சொல்வது போல் சிறிது நேரம் அசையாமல் நின்று விட்டு ஓடுகிறது. அணில்களுக்கே ஓடும் வேகம் அதிகம். அது ஓடியாடி விளையாடும் போதோ, இல்லை ஏதாவதொன்றை கொறிக்கும் போதோ நம்மை அசையாமல் பார்த்தால் முணுமுணுவென்று வாய்க்குள் கூறுவது போல் தோன்றும்.//

      ஆமாம். நீங்கள் நன்றாக கவ்னைத்து இருக்கிறீர்கள்.

      //இங்கு அதிகமாக அணில்களை காண முடிவதில்லை. நாம்தான் கீழே வாழும் குடியிருப்பை விட்டு வானத்தை இடமாக கொண்டிருக்கும் கழுகுகளுக்கு போட்டியாக மேலே ஏற ஆரம்பித்து விட்டோமே.. (மூன்றாவது மாடி) இன்னமும் இருபது மாடி, அதற்கு மேலும் என்றெல்லாம் இருப்பவர்கள் கழுகை கூட பார்க்க முடியாது என நினைக்கிறேன். இப்போதைக்கு என்னால் கழுகுகள், புறாக்கள் பறப்பதைதான் காண முடிகிறது. (மேலும் இங்கு கழுகுகள்தான் அதிகம்.)//

      வான் உயர்ந்த கட்டிடங்கள் இல்லையா?
      கழுகு, கருடன், புறாக்கள் பார்க்க முடிவதே மகிழ்ச்சிதான்.



      //இராமாயண காலத்தில் ஸ்ரீ ராமரிடம் இந்த ஓடி உழைக்கும் செயலுக்காக அன்பு பரிசெனும் ஒரு அடையாளத்தை வாங்கியது அல்லவா!!//

      ஆமாம். இந்த அணில் முதுகில் கோடுகள் கிடையாது. மகன் ஊரில் நம் ஊர் அணில் போல சின்னதாக முதுகில் கோடுகள் இருக்கும். கோடு இல்லாத இது போன்ற பெரிய அணில்களும் உண்டு.


      //தங்களின் பயம் புரிகிறது. விமானத்தில் நீண்ட நேரம் அமர்ந்து செல்வதும் கடினம்தான். கீரீன்கார்டு சீக்கிரம் கிடைத்து விட்டால் நல்லது. உங்களின் இரு குழந்தைகளும் அங்கேயே இருக்கும் பட்சத்தில் எப்படியாவது முயற்சித்தால் கிடைக்க வாய்ப்பு இருக்குமே.. அங்கேயே நீங்களும் அவர்களுடன் எப்போதும் தங்கியிருக்குபடி விரைவில் குடியுரிமை கார்டு கிடைக்க நானும் பிரார்த்தித்துக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.//

      இரண்டு வருடங்களில் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. உங்கள் பிரார்த்தனைகளுக்கு நன்றி .

      //உங்களின் நேற்றைய பதிவுக்கும் என்னால் வர இயலவில்லை. இங்கு பேரனின் பேத்திகளுக்கு பள்ளி விடுமுறை என்பதினால் அவர்களுக்காக குடும்பத்துடன் இப்படி எங்காவது வெளியில் செல்வதால் நேரம் சரியாக போய் விடுகிறது. பிறகு மதிய வாக்கில் வருகிறேன். நன்றி.//

      நேரம் கிடைக்கும் போது வாங்க. அங்கு தேர்வுகள் முடிந்து விடுமுறை விட்டு விடார்களா? இங்கு பேரனுக்கு ஈஸ்டர் விடுமுறை.

      உங்கள் விரிவான கருத்துக்கு நன்றி.





      நீக்கு
  10. அணில் விளையாட்டு அருமை...

    சிரமங்கள் கடந்து போகட்டும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்

      //அணில் விளையாட்டு அருமை...//

      ஆமாம், அணில் ஓடி விளையாடுவது பார்க்க அருமையாக இருக்கும்.


      சிரமங்கள் கடந்து போகட்டும்...//

      அதுதான் வேண்டும்.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  11. படங்களும் அதற்கான வாசகங்களும் காணொளியும் அருமை. அணில்களின் விளையாட்டைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.

    எங்கள் அம்மாவும் இனி பெங்களூர் வருவது சிரமம் நீங்களே வந்து பாருங்கள் என்றே சொல்கிறார்கள். நீண்ட நேர விமான பயணம் உங்களுக்கு சிரமம்தான். ஒரு நாள் சிரமத்தைத் தாண்டி விட்டால் ஆறு மாதம் ஒரு வருடம் அங்கே மகிழ்ச்சியாக இருக்கலாம் எனப் பிள்ளைகள் சொல்வதும் சரியே.

    அணிலின் பயத்தை ஒட்டி, தங்கள் சிந்தனையோட்டத்தைப் பகிர்ந்த விதம் சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்

      //படங்களும் அதற்கான வாசகங்களும் காணொளியும் அருமை. //
      நன்றி.

      //அணில்களின் விளையாட்டைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.//
      ஆமாம் ராமலக்ஷ்மி.


      //எங்கள் அம்மாவும் இனி பெங்களூர் வருவது சிரமம் நீங்களே வந்து பாருங்கள் என்றே சொல்கிறார்கள்.//
      அம்மாவும் அப்படி சொல்லி விட்டார்களா?

      //நீண்ட நேர விமான பயணம் உங்களுக்கு சிரமம்தான். //
      நான்கு மணி நேரம் கூட அமர்ந்து போவது கஷ்டமாய் இருக்கிறது.

      //ஒரு நாள் சிரமத்தைத் தாண்டி விட்டால் ஆறு மாதம் ஒரு வருடம் அங்கே மகிழ்ச்சியாக இருக்கலாம் எனப் பிள்ளைகள் சொல்வதும் சரியே.//
      அவர்கள் சொல்வது சரிதான். அங்கு போய் அவர்களுக்கு கஷ்டத்தை கொடுப்பதற்கு இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் நல்லது என்று மனம் சொல்கிறது.

      //அணிலின் பயத்தை ஒட்டி, தங்கள் சிந்தனையோட்டத்தைப் பகிர்ந்த விதம் சிறப்பு.//

      சிந்தனையை புரிந்து கொண்டது மகிழ்ச்சி.
      உங்கள் கருத்துக்கு நன்றி ராமலக்ஷ்மி.



      நீக்கு
  12. அக்கா நீங்கள் அங்கு வந்திருக்கீங்க என்றதும் அணில் வந்துவிட்டது பாருங்கள். அணில் ஓடி விளையாடுவதைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். நானும் இங்கு ஏரியில் மரத்தின் கிளையில் விளையாடுவதை காணொளி எடுத்திருக்கிறேன். பதிவாகப் போட்டு யுட்யூபில் போடலாம் என்று இருக்கிறேன். எல்லாம் சொல்கிறேன் ஆனால் சாத்தியப்படவில்லை. க பல கஷ்டங்கள். என்னால் மனம் ஒன்றிச் செய்ய முடியவில்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதாரெங்கன், வாழ்க வளமுடன்

      //அக்கா நீங்கள் அங்கு வந்திருக்கீங்க என்றதும் அணில் வந்துவிட்டது பாருங்கள்.//

      ஆமாம்.

      //அணில் ஓடி விளையாடுவதைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். நானும் இங்கு ஏரியில் மரத்தின் கிளையில் விளையாடுவதை காணொளி எடுத்திருக்கிறேன்.//

      மகிழ்ச்சி.

      //பதிவாகப் போட்டு யுட்யூபில் போடலாம் என்று இருக்கிறேன். எல்லாம் சொல்கிறேன் ஆனால் சாத்தியப்படவில்லை. க பல கஷ்டங்கள். என்னால் மனம் ஒன்றிச் செய்ய முடியவில்லை.//

      மனம் ஒன்றும் போது செய்யுங்கள்.

      நீக்கு
  13. என் மகன் சொல்வதும் இதுதான் நான் அங்கு வந்தால் கொஞ்சம் நாள்தான் நீங்கள் இங்கு வந்தால் 6 மாதம் வரை இருக்கலாம் என்று. ஆனால் எனக்கு விசாவே இன்னும் எடுக்கவில்லை. அடுத்த வருடம் தான் தேதி கிடைத்திருக்கிறது.

    க்ரீன் கார்ட் வாங்கினால்தான் அங்கு அவங்களோடு இருக்க முடியும்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //என் மகன் சொல்வதும் இதுதான் நான் அங்கு வந்தால் கொஞ்சம் நாள்தான் நீங்கள் இங்கு வந்தால் 6 மாதம் வரை இருக்கலாம் என்று. ஆனால் எனக்கு விசாவே இன்னும் எடுக்கவில்லை. அடுத்த வருடம் தான் தேதி கிடைத்திருக்கிறது.//

      உங்களுக்கு விசா விரைவில் கிடைக்க வாழ்த்துக்கள்.

      //க்ரீன் கார்ட் வாங்கினால்தான் அங்கு அவங்களோடு இருக்க முடியும்...//

      முதலில் அவர்களுக்கு க்ரீன் கார்ட் கிடைக்க வேண்டும், அப்புறம் பல வருடம் கழித்துதான் நமக்கு கிடைக்கும்.

      நீக்கு
  14. அணில் பயந்து தின்பதை நிறுத்தி விட்டுப் பார்ப்பது செம க்யூட்!!! ரசித்துப் பார்த்தேன் கோமதிக்கா...அதுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை போல...ஆனால் இது நின்று கொண்டு பார்க்கிறதே!! இங்கெல்லாம் உடனே ஓடிவிடுகிறதே...அப்போ பயம் விட எப்படிச் சாப்பிட? பார்க்கறாங்களேண்னு தோன்றியிருக்குமோ?!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அணில் பயந்து தின்பதை நிறுத்தி விட்டுப் பார்ப்பது செம க்யூட்!!!//
      ஆமாம்.

      //ரசித்துப் பார்த்தேன் கோமதிக்கா...அதுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை போல...ஆனால் இது நின்று கொண்டு பார்க்கிறதே!!//

      எனக்கும் ஆச்சிரியம் அது நிற்பதைப்பார்த்து.


      //இங்கெல்லாம் உடனே ஓடிவிடுகிறதே...அப்போ பயம் விட எப்படிச் சாப்பிட? பார்க்கறாங்களேண்னு தோன்றியிருக்குமோ?!!!//
      எல்லா அணிலும் அப்படித்தான் ஓடும். அது நின்றது வியப்புதான்.
      அது சாப்பிடுவதை பார்க்க கூடாதுதான்., நிம்மதியாக சாப்பிட முடியவில்லையே!

      நீக்கு
  15. இனி எல்லாரும் வருவாங்க உங்களைப் பார்க்க....

    நீங்கள் ஒளிந்து விளையாடியது சூப்பர் கோமதிக்கா...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இனி எல்லாரும் வருவாங்க உங்களைப் பார்க்க....

      நீங்கள் ஒளிந்து விளையாடியது சூப்பர் கோமதிக்கா...//

      ஆஹா! கீதா அணில்தான் என்னுடன் ஒளிந்து விளையாடியது. நான் அதை ரசித்தேன். நான் எங்கிருந்து ஓடி விளையாட?

      நீக்கு
  16. அக்கா அங்கு விமானப்பணியாளர்கள் கவனித்தது ரொம்ப மகிழ்வான விஷயம். அங்கு செய்வார்கள். அது போல வீல் சேரில் அமர்த்தி வைத்தும் கொண்டு வருவார்கள். இங்கும் இப்போது செய்கிறார்கள்தான் ஆனால் சில சமயம் பைசா கேப்பாங்களோ என்ற ஒரு உணர்வு இருந்து கொண்டே இருக்கும் அவர்களின் பேச்சு அப்படி இருக்கும்.

    நின்று கொண்டே பயணம் ...கஷ்டமாக இருந்திருக்கும் ஆனால் உட்கார்ந்து செல்வதற்கு அது பரவாயில்லையோ?!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அக்கா அங்கு விமானப்பணியாளர்கள் கவனித்தது ரொம்ப மகிழ்வான விஷயம். அங்கு செய்வார்கள். அது போல வீல் சேரில் அமர்த்தி வைத்தும் கொண்டு வருவார்கள். இங்கும் இப்போது செய்கிறார்கள்தான் ஆனால் சில சமயம் பைசா கேப்பாங்களோ என்ற ஒரு உணர்வு இருந்து கொண்டே இருக்கும் அவர்களின் பேச்சு அப்படி இருக்கும்.//

      போனமூறை பெங்ககளுரில் வீல் சேர் வைத்து இருந்தோம். பணம் கொடுத்தான் மகன் என்று நினைக்கிறேன்.

      //நின்று கொண்டே பயணம் ...கஷ்டமாக இருந்திருக்கும் ஆனால் உட்கார்ந்து செல்வதற்கு அது பரவாயில்லையோ?!//

      ஆமாம். இடது பக்கம் இடுப்பு, கை, கால்வலி எனக்கு. அதனால் உட்கார முடியவில்லை. எனக்கு அந்த வலி வரும் போது எழுந்து நடக்க வேண்டும்.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  17. அடடா..
    இந்தப் பதிவை கவனிக்க வில்லையே..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம், சகோ துரை செல்வராஜு, வாழ்க வளமுடன்
      கவனித்து இருக்க மாட்டீர்கள் என்று தான் நானும் நினைத்தேன்.

      நீக்கு
  18. அணில்கள் அழகானவை.. துடிப்புள்ள சிறு ஜீவன்.. அவற்றுள் பெரும்பாலானவை மனிதர்களுடன் பழகுவதில் அச்சம் கொள்பவை.. அவற்றைப் பற்றிய அழகான பதிவு..

    பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு வாடகைக்கு இருந்த வீட்டைச் சுற்றிலும் மரங்கள்..

    அணில்கள் ஓடி வந்து விளையாடும்..

    அதற்கப்புறம் ஒரு வீட்டின் அருகே கொய்யா மரம்.. இயல்பாகவே அணில்கள் அதிகம்.. கொய்யாக் காய்க்காக எந்நேரமும் தகர டப்பாவை போட்டு அடித்து சத்தம் எழுப்பிக்கொண்டு இருந்ததால அணில்கள் பயந்து ஓடி விட்டன.. இத்தனைக்கும் வீட்டு உரிமையாளரும் மனைவியும் வாத்தியார்கள்..
    மாற்று சமயத்தினர்.. சிற்றுயிர் மீது இரக்கம் காட்டுவதற்கு அறியாதவர்கள்..

    இப்போது இருக்கும் வீட்டைச் சுற்றி எந்த மரமும் கிடையாது..

    ஆனாலும் அணில்கள் எங்கிருந்தோ வந்து செல்கின்றன..

    அணில்களுக்கும் எங்களுக்கும் ஏதோ ஒரு பந்தம்.. அத்னால் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் ஒரே சம்பவம் நிகழ்ந்தது.. அதைப் பிறகு சொல்கின்றேன்..

    சந்தோஷமான நாட்கள் மீண்டும் வரட்டும்..

    பதிலளிநீக்கு
  19. அணில்கள் அழகானவை.. துடிப்புள்ள சிறு ஜீவன்.. அவற்றுள் பெரும்பாலானவை மனிதர்களுடன் பழகுவதில் அச்சம் கொள்பவை//

    ஆமாம்.

    கொய்யா பழங்கள் என்று இல்லை எல்லா பழமரங்களூக்கும் அணில் வரும். எங்கள் அம்மா வீட்டில் மாதுளைக்கு துணி கட்டி விடுவார்கள். சில அணிலுக்கு என்று விடுவார்கள். கொய்யா பழம் பழுக்கும் முன் பறித்து வைத்து விடுவார்கள், கொஞ்சம் அணிலுக்கு விடுவார்கள்.

    பப்பாளி காக்கைக்கு போக தான் நமக்கு கிடைக்கும்.
    பாதி காயாக இருக்கும் போதே பறித்து வைக்க வேண்டும்.
    என்ன செய்வது !

    //அணில்களுக்கும் எங்களுக்கும் ஏதோ ஒரு பந்தம்.. அத்னால் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் ஒரே சம்பவம் நிகழ்ந்தது.. அதைப் பிறகு சொல்கின்றேன்..//

    சொல்லுங்கள்.

    //சந்தோஷமான நாட்கள் மீண்டும் வரட்டும்..//

    உங்கள் வாழ்த்துக்கும் , கருத்துக்கும் நன்றி.



    பதிலளிநீக்கு