புதன், 1 மார்ச், 2023

அபயாம்பிகை உடனுறை மயூரநாதர் திருக்கோவில்


மயிலாடுதுறை மயூரநாதர் திருக்கோவில்

டிசம்பர் 12. 11. 2022 ல் மயிலாடுதுறை போன போது அங்கு பார்த்த கோவில்கள் பதிவுகள் தொடர் பதிவாக போட்டு வருகிறேன். 

மயிலாடுதுறை மயூரநாதர் திருக்கோவில் இந்த பதிவில்.
இடம் பெறுகிறது . பாடல்பெற்ற சிவத்தலம். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் இருவரும் தேவாரம் பாடி இருக்கிறார்கள். 


 கோவில் யானை, கோபுர வாசலின்  பக்கத்தில் தான் யானையின் தங்கும் இடம் இருக்கிறது

அம்பாள் மயில் வடிவில் வழிபட்ட தலம் அதை  சொல்லும் கோபுரவாசல் சிலை

அம்பாள் இறைவனை மயில் வடிவில் வழிபட்டதால்  இத்தலம் மயிலாடுதுறை என்றும் அவர் ஆடிய  நடனம் கெளரி தாண்டவம் எனப்படும்  இதனால் இத்தலம் கெளரி மாயூரம் என்று அழைக்கப்படுகிறது. காசிக்கு  செல்ல முடியவில்லை என்று  வருந்த வேண்டாம், இத்தலம் காசிக்கு சமமான தலம் என்பார்கள்.

கோவில் விழாக்களில் எல்லாம் எங்கும் முழங்கும் ஒரு "வார்த்தை ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகுமா" என்பதுதான்.
எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது. அங்கிருந்து வந்த பின்னும் மாயவரம் நினைவுகளை மறக்க முடியவில்லை. 


திருக்குளம் பிரம்மதீர்த்தம், ரிஷப தீர்த்தம்  என்று அழைக்கப்படுகிறது

தலவிருட்சம் மாமரம், வன்னி அந்த பக்கம் போகவில்லை அதனால் படம் எடுக்கவில்லை.  

தண்ணீர் நிறைய இருக்கிறது
நீராழி மண்டபம் நந்தி தெரிகிறது
படித்துறையை மூடி வைத்து இருக்கிறார்கள், திருக்குளத்தில்  முன்பு  காலையில்  குளித்து கொண்டு இருப்பதை பார்த்து இருக்கிறேன். இப்போது தடை போலும் .


இராஜ கோபுரத்தின்  உள்ளே வரும் போது  இடது புறம் திருக்குளம், வலது புறம் குமரக்கட்டளை அலுவலகம் உள்ளது.
தர்மபுர ஆதீனத்திற்கு சொந்தமானது.

14.9. 2005 ம் ஆண்டு திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடந்த விவரம் அடங்கிய கல்வெட்டு
75 ஆவது சுதந்திர தின வாழ்த்து  பலகை கோவில் வாசலில் வைத்து இருந்தார்கள். இந்த வரலாற்று சிறப்பு மிக்க செய்தி தெரிந்து இருக்கும் எல்லோருக்கும்.



திருவாடுதுறை ஆதீன 20 ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக சுவாமிகள் உடல் நலம் சரியில்லாத காரணத்தால் ஆக்ஸ்ட் 15 ஆம்  நாள் நள்ளிரவில் மெளண்ட் பேட்டனிடமிருந்து செங்கோலை திருவாடுதுறை ஆதீன கட்டளைத் தம்பிரான் சடைச்சாமி என்றழைக்கப்பட்ட  ஸ்ரீமதி திருவதிகை குமாரசாமி தம்பிரான் சுவாமிகள்   பெற்றார்.

மேலும் விவரங்கள் இதில் இருக்கிறது படிக்க முடியும் என்று நினைக்கிறேன்.

கும்பாபிஷேக பணிகள் நடைபெறுகிறது

மேல் விதானத்தில் அழகிய  மலர் வடிவம்
பெரிய பிள்ளையார் இவரை தினம் இக்கோவில் யானை  வணங்கி செல்லும். பக்கத்தில் மடப்பள்ளி இருக்கிறது. உணவு கவளங்களை உண்ட பின் அங்கு உள்ள குழாயில் நீர் அருந்தும். முன்பு பகிர்ந்து இருக்கிறேன். 



உட் பிரகாரம்


மகா வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் தலபுராணம் எழுதியிருக்கிறார். 

இத்தலத்து அம்பாள் அபயாம்பிகை மேல் அபயாம்பிகை மாலையும், அபயாம்பிகை அந்தாதியும் பாடி இருக்கிறார்.

கரவின் றிநன்மா மலர் கொண்டு
இரவும் பகலுந் தொழுவார்கள்
சிரமொன்றிய செஞ் சடையான் வாழ்
வரமா மயிலாடுதுறையே
- திருஞானசம்பந்தர் தேவாரம்

கொள்ளும் காதன்மை பெய்து உறும் கோல்வளை
உள்ளம் உள்கி உரைக்கும் திருப்பெயர்
வள்ளல் மா மயிலாடுதுறை உறை
வெள்ளம் தாங்கு சடையனை வேண்டியே
- திருநாவுக்கரசர் தேவாரம்



கோபுர வாசலில் இருந்து இரு பக்கமும் இலவம் பஞ்சு மரங்கள் முன்பு இருக்கும். இப்போது தூண்களுடன் மண்டபம் வர போகிறது. இந்த முறை நான் எடுத்த படங்கள் கொஞ்சமே, மகன் எடுத்தவைகள் தான் அதிகம் வர போகிறது. என் மனம் என் வசத்தில் இல்லை. நினைவுகளில் ஆழ்ந்து விட்டதால்  நிறைய படம் நான் எடுக்கவில்லை. என் கணவர் இந்த கோவிலில்  "திருவிளையாடல் புராணம்"  தொடர் சொற்பொழிவு பல முறை செய்து இருக்கிறார்கள், "திருவாசக முற்றோதல் " பல முறை செய்து இருக்கிறார்கள்.


இந்த கோவிலில் எங்கள் நினைவுகள் நிறைய இருக்கிறது இன்னும் வரும். 



வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
__________________________________________________________________

42 கருத்துகள்:

  1. ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகுமா!...

    அவரவர்க்கு விதிக்கப்பட்டது தான்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரை செல்வாராஜூ , வாழ்க வளமுடன்

      //ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகுமா!...

      அவரவர்க்கு விதிக்கப்பட்டது தான்...//

      ஆமாம், எவ்வளவு காலம் , எங்கு வசிப்பது எல்லாம் அவர்வர்க்கு விதிக்கப்பட்டதுதான். அப்பாவுடன் ஊர் ஊராக பயணம்.(மாற்றல் ஆகும் உத்தியோகம்) கணவருடன் திருவெண்காடு, மயிலாடுதுறை இரண்டும் மட்டும். மயிலாடுதுறை பல வருடம் இருந்த ஊர் அதனால் அதன் மேல் ஒரு பிரியம்.

      நீக்கு
  2. தஞ்சை மாவட்டத்தில் எனக்குப் பிடித்த ஊர்களுள் இதுவும் ஒன்று..

    பதிலளிநீக்கு
  3. விஸ்தாரமான ரயில்வே ஸ்டேஷன், இயல்பான கடைத்தெரு, எளிமையான மக்கள், பாரம்பரியமான உணவு...

    இப்போது கொஞ்சம் கொஞ்சமாக மாறிக் கொண்டே இருக்கின்றது
    மயிலாடுதுறை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விஸ்தாரமான ரயில்வே ஸ்டேஷன், இயல்பான கடைத்தெரு, எளிமையான மக்கள், பாரம்பரியமான உணவு...//

      பல எழுத்தாளர்கள் மாயவரம் ரயில் நிலையத்தை பற்றி சொல்லாமல் இருக்க மாட்டார்கள்.
      1877ல் சென்னை -தூத்துக்குடி ரெயில் பாதை அமைக்கபட்டபோது முக்கிய இரயில் சந்திப்பாக மயிலாடுதுறை இருந்து இருக்கிறது.
      இப்போதும் "ஜனஸ்தாப்தி" விரைவு ரயில் வந்த பின் மக்கள் மயிலாடுதுறை வருவது அதிகமாகி விட்டது, கோவில்கள் போக மக்களுக்கு வசதியாக இருக்கிறது.
      எங்களுக்கும் கோவை போய் வர மிக வசதியாக இருந்தது.
      ரயில் நிலைய உணவுகள் மிகவும் பிரசித்தம்.

      //இப்போது கொஞ்சம் கொஞ்சமாக மாறிக் கொண்டே இருக்கின்றது
      மயிலாடுதுறை..//
      மயிலாடுதுறை தனி மாவட்ட அந்தஸ்து பெற்று விட்டது, மாற்றங்கள் ஏற்படத்தான் செய்யும்.

      நீக்கு
  4. தேவார முழக்கத்துடன் சுதந்திரம் பெற்ற செய்தியை இணைய உலகிற்கு வந்த பிறகே அறிந்து கொண்டேன்..

    அப்போது பள்ளிப் புத்தகங்களில் இச்செய்தி இடம் பெற்று விடாமல் பார்த்துக் கொண்டார்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தேவார முழக்கத்துடன் சுதந்திரம் பெற்ற செய்தியை இணைய உலகிற்கு வந்த பிறகே அறிந்து கொண்டேன்..//

      நான் திருவாடுதுறை கோவிலுக்கு அடிக்கடி செல்ல ஆற்ம்பித்தபின் தெரிந்து கொண்டேன்.. பதிவிலும் முன்பு சொல்லி இருக்கிறேன்.

      //அப்போது பள்ளிப் புத்தகங்களில் இச்செய்தி இடம் பெற்று விடாமல் பார்த்துக் கொண்டார்கள்..//

      பள்ளியில் படிக்கவில்லை. பள்ளி பாடத்தில் இயம் பெற்று இருக்கலாம்.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  5. அழகான கோயில் நான் இதுவரை சென்றதில்லை.

    விவரங்கள் அருமை, படங்கள் மிகவும் அழகான இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

      //அழகான கோயில் நான் இதுவரை சென்றதில்லை.//

      ஆமாம், மிக அழகான அமைதியான கோவில்.
      கும்பாபிஷேகம் நடந்தவுடன் போய் வாருங்கள்.

      விவரங்கள் அருமை, படங்கள் மிகவும் அழகான இருக்கிறது.//

      கோவில் படங்கள் இன்னும் வரும் அடுத்த அடுத்த பதிவுகளில்.
      உங்கள் கருத்துக்கு நன்றி ஜி.

      நீக்கு
  6. அருமையான விவரிப்பு அம்மா...

    இனிய நினைவுகள் மனதில் அமைதியை உண்டாக்குவது தொடரட்டும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்

      //அருமையான விவரிப்பு அம்மா...

      இனிய நினைவுகள் மனதில் அமைதியை உண்டாக்குவது தொடரட்டும்...//

      இந்த கோலில் பல இனிய நினைவுகள் இருக்கிறது.
      மேலும் கோவில் படங்களுடன் செய்திகள் வரும்.

      உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

      நீக்கு
  7. மயிலாடுதுறை மாயூரநாதர் தரிசனம் பெற்றோம் படங்கள் காட்சிகள் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்

      //மயிலாடுதுறை மாயூரநாதர் தரிசனம் பெற்றோம் படங்கள் காட்சிகள் அழகு.//

      உங்கள் கருத்துக்கு நன்றி மாதேவி.

      நீக்கு
  8. முதல் படம் கோபுரம் புதுப்பிக்கிறாங்க போல....

    இரண்டாம் படத்தில் யானை!!!!! அழகு

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்

      //முதல் படம் கோபுரம் புதுப்பிக்கிறாங்க போல....
      ஆமாம், கும்பாபிஷேகம் நடக்க போகிறது, வேலைகள் நடக்கிறது.

      இரண்டாம் படத்தில் யானை!!!!! அழகு//
      யானை நாங்கள் வெளியே வந்து காரில் ஏறும் போது வந்தது, தூரத்திலிருந்து எடுத்த படம்.

      நீக்கு
  9. அம்பாள் இறைவனை மயில் வடிவில் வழிபட்டதால் இத்தலம் மயிலாடுதுறை என்றும் அவர் ஆடிய நடனம் கெளரி தாண்டவம் எனப்படும் இதனால் இத்தலம் கெளரி மாயூரம் என்று அழைக்கப்படுகிறது. காசிக்கு செல்ல முடியவில்லை என்று வருந்த வேண்டாம், இத்தலம் காசிக்கு சமமான தலம் என்பார்கள்.//

    மயிலைக்கும் (மயிலாப்பூர்) இக்கதை வழங்கப்படும் இல்லையா? கோமதிக்கா?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மயிலைக்கும் (மயிலாப்பூர்) இக்கதை வழங்கப்படும் இல்லையா? கோமதிக்கா?//

      ஆமாம்.

      நீக்கு
  10. கோவில் விழாக்களில் எல்லாம் எங்கும் முழங்கும் ஒரு "வார்த்தை ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகுமா" என்பதுதான்.//

    மாயவரம் வேறு மயிலாடுதுரை வேறு என்று முதலில் (பல வருடங்களுக்கு முன் நினைத்திருந்தேன்) அதன் பின் இரண்டும் ஒன்று என்று தெரிந்து கொண்டேன். (இதுவும் பல வருடங்களுக்கு முன் அங்கு ஒரு குடும்ப நிகழ்விற்குச் சென்ற போது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மாயவரம் வேறு மயிலாடுதுரை வேறு என்று முதலில் (பல வருடங்களுக்கு முன் நினைத்திருந்தேன்) அதன் பின் இரண்டும் ஒன்று என்று தெரிந்து கொண்டேன். (இதுவும் பல வருடங்களுக்கு முன் அங்கு ஒரு குடும்ப நிகழ்விற்குச் சென்ற போது.//

      பழைய வரலாற்றில் மயிலாடுதுறை, அப்புறம் மாயவரம் . மீண்டும் எம்.ஜி.ஆர் அவர்கள் மயிலாடுதுறை என்று அறிவித்தார். அதிலிருந்து மயிலாடுதுறை.

      நீக்கு
  11. திருக்குளம் படம் கவர்கிறது. ரொம்ப அழகாக இருக்கிறது நடுவில் நீராழி மண்டபம்...அதன் நடுவில் நந்தீஸ்வரர். அப்படங்கள் எல்லாமே அழகு..

    படித்துறையை மூடி வைத்து இருக்கிறார்கள், திருக்குளத்தில் முன்பு காலையில் குளித்து கொண்டு இருப்பதை பார்த்து இருக்கிறேன். இப்போது தடை போலும்//

    அதுநல்லதுதான் இல்லையா அக்கா. குளிக்கும் போது சோப் போட்டுத் துவைத்து குளித்து நீரில் சோப் கலப்பது திருக்குளத்திற்கு நல்லது இல்லையே...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருக்குளம் படம் கவர்கிறது. ரொம்ப அழகாக இருக்கிறது நடுவில் நீராழி மண்டபம்...அதன் நடுவில் நந்தீஸ்வரர். அப்படங்கள் எல்லாமே அழகு..//

      தண்ணீர் குறைவாக இருந்தால் நீராழி மண்டபம் நன்கு தெரியும்.
      நிறைய படம் நீராழி மண்டபத்தை பக்கம், தூரம் என்று வெவ்வேறு கோனத்தில் மகன் எடுத்து இருக்கிறான்.

      //அதுநல்லதுதான் இல்லையா அக்கா. குளிக்கும் போது சோப் போட்டுத் துவைத்து குளித்து நீரில் சோப் கலப்பது திருக்குளத்திற்கு நல்லது இல்லையே...//

      ஆமாம். நீங்கள் சொல்வது போல புனித நீரில் நீராடுதல் மட்டும் என்றால் நன்றாக இருக்கும்.

      நீக்கு
  12. இந்த வரலாற்று சிறப்பு மிக்க செய்தி தெரிந்து இருக்கும் எல்லோருக்கும்.//

    ஆமாம் ...செங்கோல் வாங்கியது ஆதீனம்...வரலாற்றுச் செய்தியை வாசிக்க முடிந்தது. சிறப்பான நிகழ்வு.

    மண்டபங்கள் வரிசையாக இருக்க அந்த பிராகாரம் படம் செம அழகு. எனக்கு இப்படியான படங்கள் ரொம்பப் பிடிக்கும் பார்க்கவும், எடுக்கவும்.

    இதே போன்று ராமேஸ்வரம் கோயில் பிராகாரம் அழகாக இருக்கும்.

    கீதா


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ...செங்கோல் வாங்கியது ஆதீனம்...வரலாற்றுச் செய்தியை வாசிக்க முடிந்தது. சிறப்பான நிகழ்வு.//

      ஆமாம், சிறப்பான நிகழ்வுதான்.

      //மண்டபங்கள் வரிசையாக இருக்க அந்த பிராகாரம் படம் செம அழகு. எனக்கு இப்படியான படங்கள் ரொம்பப் பிடிக்கும் பார்க்கவும், எடுக்கவும்.//
      ஆமாம், மகன் நிறைய எடுத்து இருக்கிறான் இந்த இடத்தை.
      உங்களுக்கு பிடிக்காமல் இருக்குமா?

      //இதே போன்று ராமேஸ்வரம் கோயில் பிராகாரம் அழகாக இருக்கும்.//
      ஆமாம். நிறைய கோவில்களில் இப்படி பிரகாரம் உண்டு.


      நீக்கு
  13. மகன் அருகில் நீங்கள் நிற்கும் போது மகன் ரொம்பவே உயரமாகத் தெரிகிறார்!!!!!

    உங்கள் மகன் எடுத்த படங்களைப் பார்க்க ஆவலுடன் இருக்கிறேன்.

    //என் மனம் என் வசத்தில் இல்லை. நினைவுகளில் ஆழ்ந்து விட்டதால் நிறைய படம் நான் எடுக்கவில்லை. என் கணவர் இந்த கோவிலில் "திருவிளையாடல் புராணம்" தொடர் சொற்பொழிவு பல முறை செய்து இருக்கிறார்கள், "திருவாசக முற்றோதல் " பல முறை செய்து இருக்கிறார்கள்.

    இந்த கோவிலில் எங்கள் நினைவுகள் நிறைய இருக்கிறது இன்னும் வரும். //

    இப்படியான நிகழ்வுகள் நிறைந்திருக்கும் போது...நீங்கள் மாமாவை மிஸ் செய்வீர்கள்...ஆனால் இறைவனின் சித்தம் வேறாக இருக்க...இப்போதும் இறைவடிவில் மாமா உங்களுக்குத் துணையாக இருக்கிறார்...இருப்பார் கண்டிப்பாக!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மகன் அருகில் நீங்கள் நிற்கும் போது மகன் ரொம்பவே உயரமாகத் தெரிகிறார்!!!!!//
      அவன் உயரம், நான் குள்ளம்தான்.

      உங்கள் மகன் எடுத்த படங்களைப் பார்க்க ஆவலுடன் இருக்கிறேன்.//
      மகன் எடுத்த படங்கள் தான் இவையும். இன்னும் வரும் அவன் எடுத்த படங்கள். நான் சில படங்கள் தான் எடுத்தேன்.

      //இப்படியான நிகழ்வுகள் நிறைந்திருக்கும் போது...நீங்கள் மாமாவை மிஸ் செய்வீர்கள்...ஆனால் இறைவனின் சித்தம் வேறாக இருக்க...இப்போதும் இறைவடிவில் மாமா உங்களுக்குத் துணையாக இருக்கிறார்...இருப்பார் கண்டிப்பாக!//

      ஆமாம். நீங்கள் சொல்வது சரிதான். எல்லாம் இறைவன் சித்தம். நித்தம் என் நினைவுகளில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி கீதா.

      நீக்கு
  14. சில முறைகள் அந்தப் பக்கமாக வந்தும் பார்க்க முடியாமல் போன கோவில்.  பார்க்கவ வேண்டும் என்று ஆவல் மிகுந்திருக்கும் கோவில்களுள் இதுவும் வைத்தீஸ்வரன் கோவிலும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

      //சில முறைகள் அந்தப் பக்கமாக வந்தும் பார்க்க முடியாமல் போன கோவில். பார்க்கவ வேண்டும் என்று ஆவல் மிகுந்திருக்கும் கோவில்களுள் இதுவும் வைத்தீஸ்வரன் கோவிலும்.//

      புதுபொலிவுடன் ஆக போகிறது கோவில் அப்போது வந்து பார்க்கலாம்.
      வைத்தீஸ்வரன் கோவிலும் அழகாய் இருக்கிறது இப்போது.

      நீக்கு
  15. கோவில்கள் படங்களை பார்க்கும்போது வந்து தரிசிக்க ஆவலாக இருக்கிறது.  என்று கைகூடுமோ...  திருக்குளத்தில் நீர் நிறைந்திருப்பபது மகிழ்ச்சியைத் தருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கோவில்கள் படங்களை பார்க்கும்போது வந்து தரிசிக்க ஆவலாக இருக்கிறது. என்று கைகூடுமோ... திருக்குளத்தில் நீர் நிறைந்திருப்பபது மகிழ்ச்சியைத் தருகிறது.//

      கோவில் படங்கள் நிறைய இருக்கிறது, இன்னும் நிறைய எடுக்கலாம், நேரம் இல்லை. கோவிலுக்கு நிறைய நேரம் ஒதுக்கி ஒவ்வொன்றாக பார்க்கலாம் அவ்வளவு சிறப்பான கோவில்.

      திருக்குளத்து சுற்றுச்சுவர் எல்லாம் இடிந்து போய் இருக்கிறது. குளத்தை சுற்றி இருக்கும் வீடுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக காட்சி அளிக்கிறது. முன்பு ஓட்டு வீடுகள் இருந்தது, திருக்குளம் அழகாய் காட்சி அளிக்கும், இப்போது திருக்குளம் அமைப்பே மாறியது போல இருக்கிறது,.
      நீர் நிறைந்து இருப்பது பார்க்க மகிழ்ச்சிதான்.

      நீக்கு
  16. செங்கோல் வாங்கி நாட்டை திரும்பப் பெற்ற வரலாற்றை வாசித்திருக்கிறேன்.  பெருமையான நிகழ்வு அது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //செங்கோல் வாங்கி நாட்டை திரும்பப் பெற்ற வரலாற்றை வாசித்திருக்கிறேன். பெருமையான நிகழ்வு அது.//

      ஆமாம், மன கண்ணில் பார்க்கும் போதே நன்றாக இருக்கிறது. .
      பெருமையான நிகழ்வுதான்.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  17. என் பேத்திக்கு மொட்டை அடிப்பதற்காக வைதீஸ்வரன் கோவில் சென்றபொழுது, மாயவரம் மயூரநாதர் கோவிலுக்குச் சென்றேன். படங்கள், குறிப்பாக மண்டபம் மற்றும் குளம் அழகு.
    //அங்கிருந்து வந்த பின்னும் மாயவரம் நினைவுகளை மறக்க முடியவில்லை.// உணர்வுபூர்வமான பந்தம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பானுமதி வெங்கடேஷ்வரன், வாழ்க வளமுடன்
      உங்களை எங்கள் ப்ளாக்கில் பார்த்த போதே நலம் விசாரிக்க நினைத்தேன். நலமா? பேத்திக்கு மொட்டையடிக்க வைதீஸ்வரன் கோவில் போனீர்களா? ஒரு வயது ஆகி விட்டதா?

      படங்களை ரசித்து என் உணர்வுகளை புரிந்து கொண்ட உங்கள் கருத்துக்கு நன்றி பானுமதி.

      நீக்கு
  18. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை.அருமையான பதிவும் படங்களும் என்னையும் கோவிலுக்கு அழைத்துச் செல்கின்றன. மயூரநாதர் கோவிலுக்கு இதுவரை சென்றதில்லை. நவகிரக கோவில்களுக்கு மட்டும், குழந்தைகளுடனும் (அவர்களும் வளர்ந்து பெரியவர்கள் ஆன பிறகு) எங்கள் அண்ணா பையன் குடும்பத்துடனும் சேர்ந்து இங்கு வந்த புததில் சென்று வந்தோம். தஞ்சையில், மற்றும் கும்பகோணத்தில் எண்ணற்ற கோவில்கள் உள்ளன. காணும் ஆவல் உள்ளது. நீங்களும், சகோதரர் துரைசெல்வராஜ் அவர்களும் பதிவுகளில் அந்த கோவில்களை பகிரும் போது உங்கள் பதிவுகளை பார்த்து படித்து ஆனந்தம் அடைந்து கொள்கிறேன். இந்த வகையான பேறு இப்போது கிடைத்ததற்கு இறைவனுக்கு நன்றியும் சொல்லிக் கொள்கிறேன்.

    இந்தப்பதிவை படித்ததும் எனக்கும் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயம் நினைவுக்கு வந்தது. நாங்கள் மயிலையில் இருந்த போது அடிக்கடி செல்லும் கோவில் அது ஒன்றுதான்.

    மாயவரம் ஊரைப்பற்றிய உங்கள் நினைவுகள் என்றும் மதிக்கத் தக்கது. உங்கள் கணவர் சிறந்த சிவ தொண்டர். நீங்களும் அவருக்கு சளைத்தவரல்ல.. அவரை நினைத்து உங்கள் மனம் கனிந்து போனதை என்னால் உணர முடிகிறது. உங்கள் மகன் உங்களுக்கு என்றும் பக்கபலமாக இருப்பார். கவலை வேண்டாம். அவர் அங்கு இப்போது எடுத்த கோவில் போட்டோக்களையும், மேலும் கோவிலின் சிறப்புக்களை பற்றிய தங்கள் பதிவையும் அறிய ஆவலாக உள்ளேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    எபியில் இன்று பதிந்திருந்த என் கருத்துக்கு உடனடியாக வந்து ஆறுதலான பதில் கருத்து தந்த உங்கள் அன்புக்கு நான் என்றும் கடமை பட்டுள்ளேன் சகோதரி.

    ஆமாம்.. தாங்கள் சொல்லிய படி இப்போதைய கால மாறுதல் ரொம்பபடுத்துகிறது. எங்கள் வீட்டில் மாற்றி, மாற்றி ஒவ்வொருவருக்கும் சளி ஜுரம் என ஏதோ படுத்தல்கள்தான். எதையும் கடந்து செல்லும் ஆற்றலை இறைவன் தர வேண்டும். நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்

      //பதிவு அருமை.அருமையான பதிவும் படங்களும் என்னையும் கோவிலுக்கு அழைத்துச் செல்கின்றன.//

      நன்றி.

      // மயூரநாதர் கோவிலுக்கு இதுவரை சென்றதில்லை. நவகிரக கோவில்களுக்கு மட்டும், குழந்தைகளுடனும் (அவர்களும் வளர்ந்து பெரியவர்கள் ஆன பிறகு) எங்கள் அண்ணா பையன் குடும்பத்துடனும் சேர்ந்து இங்கு வந்த புததில் சென்று வந்தோம். //
      நவக்கிரக கோவில்கள் பார்த்து விட்டீர்களா? அதிலேயே நிறைய் பாடல் பெற்ற தலங்கள் வந்து விடும்.


      //தஞ்சையில், மற்றும் கும்பகோணத்தில் எண்ணற்ற கோவில்கள் உள்ளன. காணும் ஆவல் உள்ளது. நீங்களும், சகோதரர் துரைசெல்வராஜ் அவர்களும் பதிவுகளில் அந்த கோவில்களை பகிரும் போது உங்கள் பதிவுகளை பார்த்து படித்து ஆனந்தம் அடைந்து கொள்கிறேன்.//

      மயிலாடுதுறையில் இருந்ததால் இந்த கோவில்களை பார்க்க முடிந்தது. கும்பகோணம் அருகில் இருந்ததால் பார்க்க அடிக்கடி சந்தர்ப்பம் கிடைத்தது. பாடல் பெற்ற தலங்கள் பார்ப்பது என்ர குறிக்கோள் கணவர் வைத்து இருந்ததால் பார்க்கும் பாக்கியம் கிடைத்தது.

      //இந்த வகையான பேறு இப்போது கிடைத்ததற்கு இறைவனுக்கு நன்றியும் சொல்லிக் கொள்கிறேன்.//

      ஆமாம், இறைவன் அருளால் நடப்பதாக நினைக்கிறேன், நன்றி சொல்லி வாழ்வோம்.

      //இந்தப்பதிவை படித்ததும் எனக்கும் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயம் நினைவுக்கு வந்தது. நாங்கள் மயிலையில் இருந்த போது அடிக்கடி செல்லும் கோவில் அது ஒன்றுதான்.//
      மயிலையை அடிக்கடி தரிசிக்கும் பேறு பெற்றது அறிந்து மகிழ்ச்சி.

      //மாயவரம் ஊரைப்பற்றிய உங்கள் நினைவுகள் என்றும் மதிக்கத் தக்கது. உங்கள் கணவர் சிறந்த சிவ தொண்டர். நீங்களும் அவருக்கு சளைத்தவரல்ல.. அவரை நினைத்து உங்கள் மனம் கனிந்து போனதை என்னால் உணர முடிகிறது. அவர் அங்கு இப்போது எடுத்த கோவில் போட்டோக்களையும், மேலும் கோவிலின் சிறப்புக்களை பற்றிய தங்கள் பதிவையும் அறிய ஆவலாக உள்ளேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.//

      மகனும் தன் நண்பர்களுடன் அடிக்கடி போகும் கோவில். நாங்கள் வீட்ட்டில் எல்லோர் பிறந்தநாள், திருமண நாளுக்கு போகும் கோவில். உறவினர், நண்பர்கள் வந்தால் அழைத்து செல்லும் கோவில்.
      பெரிய கோவில் என்று அழைப்போம்.

      //உங்கள் மகன் உங்களுக்கு என்றும் பக்கபலமாக இருப்பார். கவலை வேண்டாம்.//

      உங்கள் அன்பான வார்த்தைக்கு நன்றி.

      //எபியில் இன்று பதிந்திருந்த என் கருத்துக்கு உடனடியாக வந்து ஆறுதலான பதில் கருத்து தந்த உங்கள் அன்புக்கு நான் என்றும் கடமை பட்டுள்ளேன் சகோதரி.//
      ஒருவருக்கு ஒருவர் அன்பையும், ஆறுதலையும் என்றும் பகிர்ந்து கொள்வோம் கமலா.

      //ஆமாம்.. தாங்கள் சொல்லிய படி இப்போதைய கால மாறுதல் ரொம்பபடுத்துகிறது. எங்கள் வீட்டில் மாற்றி, மாற்றி ஒவ்வொருவருக்கும் சளி ஜுரம் என ஏதோ படுத்தல்கள்தான். எதையும் கடந்து செல்லும் ஆற்றலை இறைவன் தர வேண்டும். நன்றி சகோதரி.//

      இங்கும் பருவநிலை மாற போகிறது, அதனால் அதிக காற்று, மழை என்று இருக்கிறது, குளிரும் குறையவில்லை. மகன், பேரன், எனக்கு சளி, இருமல், தொண்டைவலி படுத்தியது, இப்போது மருமகளுக்கு வந்து இருக்கிறது. மருந்து மாத்திரைகள் எடுத்து கொள்கிறாள்.
      கடந்து செல்லும் ஆற்றலை இறைவன் தருவார்.
      உங்கள் விரிவான கருத்துக்கு நன்றி.







      நீக்கு
  19. மாயவரம் எனும் மயிலாடுதுறை சில முறை சென்று இருந்தாலும் இது வரை கோவிலுக்குச் சென்றதில்லை. உங்கள் பதிவு வழி கோவிலை தரிசித்து மகிழ்ந்தேன். நேரில் சென்று பார்க்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்
      //மாயவரம் எனும் மயிலாடுதுறை சில முறை சென்று இருந்தாலும் இது வரை கோவிலுக்குச் சென்றதில்லை.
      உங்கள் பதிவு வழி கோவிலை தரிசித்து மகிழ்ந்தேன். நேரில் சென்று பார்க்க வேண்டும்.//

      மயிலாடுதுறையில் நிறைய பார்க்க வேண்டிய கோவில்கள் இருக்கிறது. வாய்ப்பு கிடைக்கும் போது போய் பாருங்கள்.
      நீங்கள் போகும் போது கோவில் புது பொலிவுடன் இருக்கப்போகிறது.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  20. மூன்று பாகங்களையும் வாசித்து விட்டு வருகிறேன். சிறப்பாகத் தொகுத்து அளித்துள்ளீர்கள்.

    கோயில் திருக்குளமும் நீராழி மண்டபத்துள் நந்தியும் மிக அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்

      //மூன்று பாகங்களையும் வாசித்து விட்டு வருகிறேன். சிறப்பாகத் தொகுத்து அளித்துள்ளீர்கள்.//
      மூன்று பாகங்களையும் வாசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      //கோயில் திருக்குளமும் நீராழி மண்டபத்துள் நந்தியும் மிக அழகு.//

      இன்னும் சில மாதங்களில் நீராழி மண்டபத்தின் தோற்றம் மேலும் அழகாய் புது பொலிவுடன் இருக்கும்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  21. வந்ததுமே நம்மாளு நிற்கிறாரே! உண்மை தான். ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகுமோ என்றே இன்றும் சொல்கின்றனர். அங்கேயே வாழ்நாளின் பெரும்பகுதியைக்கழித்த உங்களுக்கு இன்னமும் மாய்வரம் நினைவுகள் இருப்பதில் வியப்பே இல்லை. பழைய நினைவுகளை மறக்க முடியுமா? உங்கள் கணவர் என்றென்றும் உங்கள் உணர்வுகளில் கலந்து கொண்டு உங்களுக்குத் துணையாக இருப்பார்/இருக்கிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்

      //வந்ததுமே நம்மாளு நிற்கிறாரே!//

      ஆமாம். அவரை பக்கத்தில் படம் எடுக்க முடியவில்லை
      காருக்கு வந்த பின் தான் பார்த்தோம், தூரத்திலிருந்து எடுத்த படம்.


      //உண்மை தான். ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகுமோ என்றே இன்றும் சொல்கின்றனர். அங்கேயே வாழ்நாளின் பெரும்பகுதியைக்கழித்த உங்களுக்கு இன்னமும் மாய்வரம் நினைவுகள் இருப்பதில் வியப்பே இல்லை. //

      நிறைய நினைவுகள் இருக்கிறது அங்கு.

      //பழைய நினைவுகளை மறக்க முடியுமா? //

      பழைய நினைவுகளை மறக்க முடியாது.

      //உங்கள் கணவர் என்றென்றும் உங்கள் உணர்வுகளில் கலந்து கொண்டு உங்களுக்குத் துணையாக இருப்பார்/இருக்கிறார்.////
      அது போதும் கீதா எனக்கு.. உங்கள் ஆறுதல் மொழிகளுக்கும், கருத்துக்கும் நன்றி.

      நீக்கு