செவ்வாய், 7 மார்ச், 2023

அபயாம்பிகை உடனுறை மயூரநாதர் திருக்கோவில் பகுதி - 4



மயூர நாதர் கோவில்

டிசம்பர் 12. 11. 2022 ல் மயிலாடுதுறை போன போது அங்கு பார்த்த கோவில்கள் பதிவுகள் தொடர் பதிவாக போட்டு வருகிறேன். 

மயிலாடுதுறை மயூரநாதர் திருக்கோவில் இந்த பதிவில்.
இடம் பெறுகிறது . பாடல்பெற்ற சிவத்தலம். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் இருவரும் தேவாரம் பாடி இருக்கிறார்கள்.


மயூரநாத கோவில் அம்மன் பேர் அபயாம்பிகை, நாடி வருபவர்களுக்கு அபயம் அளித்து காக்கும் அம்பிகை. அம்மன் சன்னதி போன பதிவில் பார்த்தோம்.
இந்த பதிவில் கோவில் பிரகாரம் வலம் வருவோம்.
-------------------------------------------------------------------------------------------------------------------------

மயூர நாதர் கோவிலுக்குள் நழைந்தவுடன்  இடப்பக்கம் இருக்கும்  தர்மபுரத்திற்கு சொந்தமான குமரக்கட்டளை முருகன் உற்சவ காலத்தில் இங்கு  எழுந்தருளுவார்.அபிஷேக ஆராதனைகள் நடக்கும். கும்பாபிஷேகம் வேலைகளில் தர்மபுர ஆதீனத்தின் வேலைகள்  நடந்து விட்டது. திவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான கோவில் . சுப்பிரமணியருக்கு  மட்டும் தர்மபுர ஆதீனகட்டளை உள்ளது.  

  

வெளிப்பிரகாரம் சுற்றி வரலாம்

இந்த பக்கம், மீனாட்சி, சொக்கநாதர் இருப்பார்.

சிறு தேரின் சக்கரமாக இருக்கும் என்று நினைக்கிறேன். பழமையை நினைவு படுத்த இன்னும் வைத்து இருக்கிறார்கள் போலும்

மயூரநாதர் கோவில்  5 பிரகாரங்களை  ஒரு முறை அல்லது மூன்று முறை வலம் வந்தாலே  போதும் நடை பயிற்சி என்று தனியாக செய்ய வேண்டாம். மாலை நேரம் வெளி பிரகாரத்தை வலம் வந்தால் பறவைகளின் ஒலியை கேட்கலாம், சுகமான சுத்தமான காற்றை சுவசிக்கலாம்.

கோயில் முழு தோற்றம் தெரியும்


மகன் எடுத்த படங்கள். நான் வெளிபிரகாரம் போகவில்லை. அம்மன் சன்னதியில் அமர்ந்து இருந்தேன். மகன் மட்டும் வெளி பிரகாரம் போய் படங்கள் எடுத்து வந்தான்.


ஸ்ரீ உச்சிஷ்ட  ஞான கணபதி


                                    இரட்டை பிள்ளையார்

 மாணவ , மாணவிகளை தேர்வில் வெற்றிபெற வைப்பார் என்ற நம்பிக்கை . கும்பாபிஷேகம் நிறைவு பெற்றதும் இப்படி சுவரில் எழுதாமல் தங்கள் நம்பரை  ஸ்ரீராமஜெயம்  எழுதி மாலை செய்வது போல செய்து  விநாயகருக்கு சாற்றலாம். அவர் இடம் சுத்தமாக இருக்கும் என்று நினைத்தேன்,  ஆனால் தினம் அபிஷேகம் செய்யும் போது அதை  எடுத்து விடுவார்கள் என்று மாணவர்களுக்கு பயமாக இருக்கும், அதனால் அங்கு வருகை பதிவேடு மாதிரி வைத்து அதில் மாணவ மாணவிகள் தங்கள் நம்பரை எழுதி வைக்கலாம். கோவில் சுவர் சுத்தமாக இருக்கும்.


என் மகன் தன் நண்பர்களுடன் ஞாயிறு தோறும் இந்த கோவிலுக்கு போவான், கோவிலை வலம் வந்து திருக்குளத்துக்கு அருகே இருக்கும் ஆசனங்களில் அமர்ந்து கதை பேசி மகிழ்வார்கள்.

மகனிடம் கேட்டேன் இப்படி பிள்ளையாரிடம் " நீ  உன் நம்பரை எழுதி இருக்கிறாயா" என்று இல்லை என்றான்.


                       மரங்கள் வெட்டப்பட்டு வேலை நடக்கிறது
ஓரு கொம்பு மட்டும் தெரியும் நந்தி  வித்தியாசமாக இருக்கிறார். இன்னொரு கொம்பு அந்த பக்கம் இருக்கிறது.

 
நாதசர்மா இருக்கும் விமானம்

  இந்த இடத்தில் தான் நாத சர்மா  இருக்கிறார், போன பதிவில் இவரைப் பற்றி சொல்லி இருந்தேன்

இங்கு தானிய களஞ்சியம், கணக்கடி பிள்ளையார் இருக்கிறார்கள்

பிரகாரத்தில் தெரியும் சுப்பிரமணிய சாமி விமானம் . மழை அடிக்கடி பெய்து கொண்டே இருப்பதால் விரைவில் பாசம் பிடித்து விடும் .
தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான குமரக்கட்டளை சுப்பிரமணிய சாமி  தேவஸ்தானம்


சிவன் , பார்வதி மகிழ்ச்சியாக ஊஞ்சலில் இருக்க ஒரு பக்கம் திருமால், மறுபக்கம் பிரம்மா, பிள்ளையார், முருகன் நந்தி, நாரதர் இருக்கிறார்கள். நந்தி சிவனின்  வலது பாதத்தை கையில் ஏந்தி இருக்கிறார். அழகாய் இருக்கிறது. சித்திரம் வரைந்தவர்கள் என்று  இரண்டு பேர்  போட்டு இருக்கிறது.  திரு . ராம்குமார்  ஸ்தபதியை தெரியும் .சிறு வயதுதான் நிறைய கோவில்களுக்கு சிற்பங்கள் செய்து  வருகிறார். முத்து ஸ்தபதி  அவர் தம்பி. இந்த சித்திரம்  கோவிலின் முன் வாசல் பக்கம் இருக்கிறது.

அபயாம்பிகை  உடனுறை மயூரநாதர் அனைவருக்கும் எல்லா நலங்களையும் அருள வேண்டும்.

மயூரநாதர் பதிவுகள் இத்துடன் நிறைவு பெறுகிறது. இன்னும் மயிலாடுதுறையில் பார்த்த கோவில்கள் பகிர்வில் புனுகீஸ்வரர் கோவில் இருக்கிறது. இறையருளால் பார்ப்போம்.

வாழ்க வையகம்! வாழ்கவையகம் ! வாழ்க வளமுடன்!
--------------------------------------------------------------------------------------------------

32 கருத்துகள்:

  1. வெளிப்பிரகார நடையில் கோவில் முழு தோற்றம் தெரியும் புகைப்படம் அருமை.மரங்கள் வெட்டப்பட்டிருப்பது வருத்தம் தருகிறது!  பெரிய கோவில் என்பது உங்கள் படங்களிலிருந்து புலனாகிறது.  அவசியம் சென்று தரிசனம் செய்ய வேண்டும்.  அதற்கு அவன் அருள் வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

      //வெளிப்பிரகார நடையில் கோவில் முழு தோற்றம் தெரியும் புகைப்படம் அருமை.//

      நன்றி.

      //பெரிய கோவில் என்பது உங்கள் படங்களிலிருந்து புலனாகிறது. அவசியம் சென்று தரிசனம் செய்ய வேண்டும். அதற்கு அவன் அருள் வேண்டும்.//

      ஆமாம், அவன் அருள் கண்டிப்பாய் கிட்டும். தரிசனம் செய்வீர்கள் விரைவில்,

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  2. தாங்கள் படத்தில் காட்டியிருக்கும் சக்கரம் போலவே அந்தக் காலத்தில் வண்டிகளின் சக்கரங்களும் இருக்கும்..

    இன்றைக்கு வாழ்க்கைச் சக்கரம் மாற்றப் பட்டு விட்டதைப் போல.. கோயில்களில் பட்டறை சப்பரம் இவைகளின் சக்கரங்களும் மாற்றப்பட்டு விட்டன..

    தற்போது ஸ்வாமி எழுந்தருளும் பட்டறைகளில் ஐயர் உட்கார்ந்து வர முடியாதபடிக்கு உருவாக்கப் படுகின்றனவோ என்று ஐயம் எழுகின்றது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்

      //தாங்கள் படத்தில் காட்டியிருக்கும் சக்கரம் போலவே அந்தக் காலத்தில் வண்டிகளின் சக்கரங்களும் இருக்கும்..//

      ஆமாம், மாயவரம் வந்த போது மாட்டு வண்டியில் கூறைநாட்டில் வண்டிகள் நிற்கும் அதில் பயணம் செய்து மயூரநாதர் கோவிலுக்கு போய் இருக்கிறோம்.

      நெல் மூட்டைகளை அரவை மில்லுக்கு எடுத்து செல்ல வரும் மாட்டு வண்டிகள் உண்டு.

      உற்சவ சிலைகளை அலங்காரம் செய்து வீதிகளில் வரும் இரட்டை மாட்டு வண்டிகள் உண்டு. இப்போது டயர் வண்டி இருக்கிறது. நல்ல வசதியாக குருக்கள் உட்கார்ந்து வருகிறார்.

      நீக்கு
  3. சென்ற வருடம் சென்றிருந்த போது நானும் இதைப் பார்த்தேன்.. அங்கேயே கிடக்கின்றது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //சென்ற வருடம் சென்றிருந்த போது நானும் இதைப் பார்த்தேன்.. அங்கேயே கிடக்கின்றது....

      நினைவு சின்னம் போல வைத்து இருக்கிறார்கள் போலும்
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  4. படங்கள் அருமை...

    /// மகனிடம் கேட்டேன் இப்படி பிள்ளையாரிடம் " நீ உன் நம்பரை எழுதி இருக்கிறாயா" என்று இல்லை என்றான்...///

    தன்னம்பிக்கை சிறக்கட்டும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்

      //தன்னம்பிக்கை சிறக்கட்டும்...//

      தன்னம்பிக்கை மட்டும் அல்ல தனபாலன், இறைவனையும் வணங்கி செல்வான் பரீட்சை நேரம். எங்களிடமும் விபூதி பூசி செல்வான்.
      இப்படி சுவரில் எழுதவில்லை.

      //படங்கள் அருமை...//

      உங்கள் கருத்துக்கு நன்றி தன்பாலன்



      நீக்கு
  5. படங்கள் அனைத்தும் வழக்கம் போல சிறப்பு தரிசித்துக் கொண்டேன்.

    கோயிலில் பிரகாரம் சுற்றும் வழக்கத்தை வைத்ததே காலில் அக்குபஞ்சர் என்னும் சிகிச்சைக்காகத்தான்.

    இதனால்தான் அன்று காலில் மூட்டு வலிகள் வருவது குறைவாக இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

      //படங்கள் அனைத்தும் வழக்கம் போல சிறப்பு தரிசித்துக் கொண்டேன்.//

      நன்றி .


      //கோயிலில் பிரகாரம் சுற்றும் வழக்கத்தை வைத்ததே காலில் அக்குபஞ்சர் என்னும் சிகிச்சைக்காகத்தான்.
      இதனால்தான் அன்று காலில் மூட்டு வலிகள் வருவது குறைவாக இருந்தது.//

      ஆமாம், நீங்கள் சொல்வது உண்மை.
      வெறுங்காலுடன் இப்போது கோவிலில் மட்டும் தான் நடக்கும் பழக்கம் வந்து இருக்கிறது.(வீட்டிலும் செருப்பு)
      பிரகாரம் முன்பு கல் தரையாக இருந்தது, அது அக்குபஞ்சராக செயல்படும்.

      பிரதோஷ நேரத்தில் சுவாமியுடன் மூன்று முறை வலம் வருவார்கள்.
      மாலை நேரம் கோவிலில் பிரகாரம் வலம் வந்து சாயரட்சை பூஜை பார்த்து செல்லும் வயதானவர்கள் நிறைய இருந்தார்கள்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  6. கோயில் பெரிய கோயில் இல்லையா....முதல் படத்தில் பிராகாரம் நீளமாக இருக்கிறது

    சக்கரம் இப்படித்தானே மாட்டுவண்டிகளில் இருக்கும். குதிரை வண்டிகளில் கூட...ஆமாம் சிறுதேரின் சக்கரமாக இருக்கும் படத்தில் இருப்பது

    மயூரநாதர் கோவில் 5 பிரகாரங்களை ஒரு முறை அல்லது மூன்று முறை வலம் வந்தாலே போதும் நடை பயிற்சி என்று தனியாக செய்ய வேண்டாம். மாலை நேரம் வெளி பிரகாரத்தை வலம் வந்தால் பறவைகளின் ஒலியை கேட்கலாம், சுகமான சுத்தமான காற்றை சுவசிக்கலாம்.//

    சொல்ல வந்தேன் நீங்களே சொல்லிட்டீங்க பறவைகளின் ஒலி அந்த வரியைத் தவிர....நான் போனதுஇல்லையே,,,,நல்ல நடைப்பயிற்சி!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதாரெங்கன், வாழ்க வளமுடன்
      //கோயில் பெரிய கோயில் இல்லையா....முதல் படத்தில் பிராகாரம் நீளமாக இருக்கிறது//
      பெரிய கோவில்தான்.அம்மன் கோவில் பிரகாரம், சுவாமி கோவில் பிரகாரம் எல்லாம் நல்ல பெரிதாக இருக்கும்.
      அப்புறம் இரண்டு கோவில் உள் பிரகாரம் அதன் பின் வெளி பிரகாரம் என்று 5 பிரகாரம் இதை சுற்றி வந்தாலே போதும் இறைவனை கோவிலில் வணங்கியது போலவும் ஆச்சு, நடைபயிற்சியும் ஆச்சு. நான் புனுகீஸ்வரர் கோவிலை தினம் வலம் வந்தேன்,பல வருடங்களுக்கு முன்.

      //சொல்ல வந்தேன் நீங்களே சொல்லிட்டீங்க பறவைகளின் ஒலி அந்த வரியைத் தவிர....நான் போனதுஇல்லையே,,,,நல்ல நடைப்பயிற்சி!!//


      மாலை நேரம் கூட்டுக்கு திரும்பும் பறவைகளின் ஒலி கேட்கலாம்.
      பலதரபட்ட ஒலியாக இருக்கும். காலை மாலை கிளிகளின் சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கும்.

      நீக்கு
  7. கோயில் முழுத்தோற்றம் அந்த ஆங்கிள் சூப்பர். அதற்கு அடுத்த படம் விமானம் படமும் அழகு ...மிகவும் ரசித்தேன். மகன் நன்றாக எடுத்திருக்கிறார்.

    பிள்ளையார் சன்னதி சுவற்றில் இப்படி எழுதி பார்க்க என்னவோ மாதிரி இருக்கிறதே. மனதில் தன்னம்பிக்கையும் பிள்ளையாரை தியானித்தலும் போதுமே இல்லையா...உங்கள் மகன் அந்தக் கட்சி!!!!!!!

    இந்த இடத்தில் தான் நாத சர்மா இருக்கிறார், போன பதிவில் இவரைப் பற்றி சொல்லி இருந்தேன்//

    ஆமாம் நினைவு இருக்கு கதையும் சொல்லியிருந்தீங்க. ஆதீனம் கட்டளையும் சொல்லியிருந்தீங்க.

    பல இடங்கள் பராமரிப்பு வேண்டி நிற்பது போல் இருக்கிறது .

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கோயில் முழுத்தோற்றம் அந்த ஆங்கிள் சூப்பர். அதற்கு அடுத்த படம் விமானம் படமும் அழகு ...மிகவும் ரசித்தேன். மகன் நன்றாக எடுத்திருக்கிறார்.//

      ஆமாம். நீங்கள் ரப்பீர்கள் என்று தெரியும்.

      //பிள்ளையார் சன்னதி சுவற்றில் இப்படி எழுதி பார்க்க என்னவோ மாதிரி இருக்கிறதே. மனதில் தன்னம்பிக்கையும் பிள்ளையாரை தியானித்தலும் போதுமே இல்லையா...உங்கள் மகன் அந்தக் கட்சி!!!!!!!//

      ஆமாம். யாரோ ஒருவர் செய்தவுடன் எல்லோருக்கும் அந்த எண்ணம் வந்து இருக்கிறது.

      //பல இடங்கள் பராமரிப்பு வேண்டி நிற்பது போல் இருக்கிறது .//
      பராமரிப்பு வேலை நடந்து கொண்டு இருக்கிறது கீதா.

      நீக்கு
  8. சுப்பிரமணி சுவாமி விமானம் செம அழகு ஆனால் பாசி...செடிகள் எல்லாம் வளர்ந்திருக்கின்றன....

    ராம்குமார் முத்துக்குமார் ஸ்தபதிகளின் படம் ரொம்ப அழகு. சிற்பங்களும் அருமையாகச் செய்வாங்கன்னு நினைக்கிறேன்.

    படங்கள் எல்லாம் ரசித்தேன் விவரங்களும் அருமை கோமதிக்கா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //சுப்பிரமணி சுவாமி விமானம் செம அழகு ஆனால் பாசி...செடிகள் எல்லாம் வளர்ந்திருக்கின்றன....//
      கும்பாபிஷேகம் நடக்க போகிறது அப்புறம் நன்றாக இருக்கும். ஆனால் சில வருடங்களில் பாசம் பிடித்து விடும் மழை, உப்பு காற்று.

      //ராம்குமார் முத்துக்குமார் ஸ்தபதிகளின் படம் ரொம்ப அழகு. சிற்பங்களும் அருமையாகச் செய்வாங்கன்னு நினைக்கிறேன்.//

      நன்றாக செய்வார்கள். பல கோவில்களில் புதுபிக்கும் பணி அவர்களுக்கு கொடுப்பார்கள்.

      //படங்கள் எல்லாம் ரசித்தேன் விவரங்களும் அருமை கோமதிக்கா//

      அனைத்தையும் ரசித்து கருத்துக்கள் சொன்னதற்கு நன்றி கீதா.

      நீக்கு
  9. பிள்ளையார், பிரமனைப்போல நான்கு தலை கொண்டவரில்லயே.. திரும்பி சுவரைப் பார்த்து நம்பர் நோட்பண்ணிக்கொள்ள

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்
      //பிள்ளையார், பிரமனைப்போல நான்கு தலை கொண்டவரில்லயே.. திரும்பி சுவரைப் பார்த்து நம்பர் நோட்பண்ணிக்கொள்ள//

      இறைவனுக்கு கூட பின்னால் கண் வேண்டுமா! எத்திசையிலும் இறைவன் இருக்கிறானே! அந்த குழந்தைகள் பின்னால் எழுதினாலும் பிள்ளையாருக்கு தெரியும் என்ற நம்பிக்கையில் எழுதி வைத்து இருக்கிறார்கள்.

      நீக்கு
  10. இரட்டைப் பிள்ளையாரை இன்னொரு புராதானக் கோவிலில் கண்டிருக்கிறேன், சட் என நினைவுக்கு வரலை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இரட்டைப் பிள்ளையாரை இன்னொரு புராதானக் கோவிலில் கண்டிருக்கிறேன், சட் என நினைவுக்கு வரலை//

      நிறைய கோவில்களில் இரட்டை பிள்ளையார் இருக்கிறார் நெல்லை.

      நீக்கு
  11. படங்கள் மிக அழகு. பிராகாரம் வலம் வருவது நல்ல யோசனை. நானும் மன்னார்குடியில் அப்படித்தான் செய்தேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //படங்கள் மிக அழகு. பிராகாரம் வலம் வருவது நல்ல யோசனை. நானும் மன்னார்குடியில் அப்படித்தான் செய்தேன்//

      மன்னார்குடி கோவில் பிரகாரம் பெரிது. கோவிலில் நடந்ததை முன்பு சொல்லி இருந்தீர்கள்.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி நெல்லை.

      நீக்கு
  12. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை எல்லா கோவிலின் படங்களும் வழக்கும் போல் நன்றாக உள்ளது.

    கோவிலின் முழுத்தோற்றம் தெரியும் வண்ணம் எடுத்திருக்கும் படம் நன்றாக உள்ளது. வித்தியாசமான கோணத்தில் அருமையாக எடுத்திருக்கும் உங்கள் மகனுக்கு வாழ்த்துக்கள்.

    இரட்டை பிள்ளையார் பற்றி தெரிந்து கொண்டேன். மாணவ, மாணவிகள் சுவர்களில் கிறுக்கி இடத்தை நாசப்படுத்தாமல் தங்கள் யோசனைப்படி செய்யலாம். அதற்கு அவர்கள் மனம் ஒத்துக் கொள்ள வேண்டுமே.... விநாயகர்தான் இந்த யோசனையை அங்கீகரிக்க வேண்டும்.

    என் கைப்பேசியில் சார்ஜ் தீர்ந்து விட்டதென அறிவிக்கிறது. மீண்டும் வருகிறேன். பகிர்வுக்கு நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்

      //பதிவு அருமை எல்லா கோவிலின் படங்களும் வழக்கும் போல் நன்றாக உள்ளது.//

      நன்றி கமலா

      //கோவிலின் முழுத்தோற்றம் தெரியும் வண்ணம் எடுத்திருக்கும் படம் நன்றாக உள்ளது. வித்தியாசமான கோணத்தில் அருமையாக எடுத்திருக்கும் உங்கள் மகனுக்கு வாழ்த்துக்கள்.//

      அலைபேசியில் தான் எடுத்தான். உங்கள் பாராட்டுக்கும், வாழ்த்துகளுக்கு நன்றி.

      //இரட்டை பிள்ளையார் பற்றி தெரிந்து கொண்டேன். மாணவ, மாணவிகள் சுவர்களில் கிறுக்கி இடத்தை நாசப்படுத்தாமல் தங்கள் யோசனைப்படி செய்யலாம். அதற்கு அவர்கள் மனம் ஒத்துக் கொள்ள வேண்டுமே.... விநாயகர்தான் இந்த யோசனையை அங்கீகரிக்க வேண்டும்.//

      ஆமாம், அவர்கள் ஒத்துக் கொள்ள வேண்டும். விநாயகர் நம் மனதில் உள்ளதை அங்கீகரிக்கும் போது இதையும் அங்கீகரிப்பார் என்று நினைக்கிறேன்.

      //என் கைப்பேசியில் சார்ஜ் தீர்ந்து விட்டதென அறிவிக்கிறது. மீண்டும் வருகிறேன். பகிர்வுக்கு நன்றி.//
      வாங்க வாங்க.
      உங்கள் கருத்துக்கு நன்றி கமலா.

      நீக்கு
  13. படங்களும் தகவல்களும் மிகவும் சிறப்பாக இருந்தது. நான் செல்ல நினைத்திருக்கும் கோவில்களில் இந்தக் கோவிலும் உண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்

      //படங்களும் தகவல்களும் மிகவும் சிறப்பாக இருந்தது. நான் செல்ல நினைத்திருக்கும் கோவில்களில் இந்தக் கோவிலும் உண்டு.//

      நேரம் கிடைக்கும் போது அவசியம் பார்த்து வாங்க.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  14. ஒரே முறை போனோம் இந்தக் கோயிலுக்கு. அபி அப்பா பலமுறை மாயவரம் அழைத்துக்கொண்டே இருந்தார். உங்களைப் பற்றியும் சொல்லுவார். அறிமுகம் செய்து வைக்கிறேன் என்பார். ஒரு முறை கும்பகோணம் வந்தப்போ அங்கே தங்கிக் கொண்டு எங்க ஊர்க்கோயிலின் திருப்பணி வேலைகளையும் பார்த்துக் கொண்டு மாயவரமும் போய் வந்தோம்.. உப்பிலி அப்பன் கோயிலில் ஒரு கல்யாணமும் கலந்து கொண்டோம். அப்போப் போனது தான் இந்தக் கோயிலுக்கு. அபி அப்பாதான் அழைத்துச் சென்றார். மாலை ரயிலைப் பிடிக்கும் அவசரத்தில் பார்த்தோம். ஆகவே நீங்க சொல்லி இருக்கும் சந்நிதிகளெல்லாம் போகவே இல்லை. அப்படியும் ரயிலைப் பிடிக்க முடியாமல் பேருந்துக் கூட்டத்தில் இடிபட்டுக் கொண்டு கும்பகோணம் வந்தோம். பத்துப் பனிரண்டு வருஷங்கள் இருக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்

      //ஒரே முறை போனோம் இந்தக் கோயிலுக்கு. அபி அப்பா பலமுறை மாயவரம் அழைத்துக்கொண்டே இருந்தார். உங்களைப் பற்றியும் சொல்லுவார். அறிமுகம் செய்து வைக்கிறேன் என்பார்.//

      ஆமாம், அவர் வீட்டில் ஒரு முறை வலைதள அன்பர்கள் கலந்து கொண்ட சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது கலந்து கொண்டு இருக்கிறேன் மகளுடன்.
      அப்புறம் அவருக்கு இரண்டாவது குழந்தை பிறந்த போது போய் பார்த்து இருக்கிறோம். துளசி கோபால் வந்த போது அவர் வீட்டுக்கு போய் வந்தார்கள். நீங்களும் முன்பு போய் வந்த விவரம் சொன்னீர்கள்.

      //ஒரு முறை கும்பகோணம் வந்தப்போ அங்கே தங்கிக் கொண்டு எங்க ஊர்க்கோயிலின் திருப்பணி வேலைகளையும் பார்த்துக் கொண்டு மாயவரமும் போய் வந்தோம்.. உப்பிலி அப்பன் கோயிலில் ஒரு கல்யாணமும் கலந்து கொண்டோம். அப்போப் போனது தான் இந்தக் கோயிலுக்கு. அபி அப்பாதான் அழைத்துச் சென்றார். மாலை ரயிலைப் பிடிக்கும் அவசரத்தில் பார்த்தோம். ஆகவே நீங்க சொல்லி இருக்கும் சந்நிதிகளெல்லாம் போகவே இல்லை. அப்படியும் ரயிலைப் பிடிக்க முடியாமல் பேருந்துக் கூட்டத்தில் இடிபட்டுக் கொண்டு கும்பகோணம் வந்தோம். பத்துப் பனிரண்டு வருஷங்கள் இருக்கலாம்.//

      பாலசுப்பிரமணியம் சாரை இந்த கோவிலுக்கு அழைத்து போய் இருக்கிறோம் நாங்கள். உங்கள் நினைவுகளை பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி.

      மீண்டும் இறையருளால் வாய்ப்பு கிடைத்து பார்க்கலாம்.

      மயூரநாதர் தொடர் பதிவை அனைத்தையும் படித்து கருத்துக்கள் சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  15. வணக்கம் சகோதரி

    நேற்று பதிவை படித்து பாதி வரைக்கும்தான் கருத்துரை இட்டேன். அதன்பின் மகன் குழந்தைகள் வருகை என பொழுது போய் விட்டது. அதனால் சொன்னபடி உடனே வர இயலவில்லை.

    நீங்கள் சொல்வது போல் கோவில் கோபுரத்தில் பாசி படர்ந்து செடிகள் வேறு வளர்ந்திருக்கின்றனவே.. இப்போது அனைத்தையும் களைந்து அப்புறப்படுத்தி கும்பாபிஷேகத்திற்கு தயார் செய்து விட்டால் கோபுர சிலைகளுக்கு பங்கம் வராமல் இருக்கும். நல்லதுதான்.

    கோவிலின் பிரமாண்ட படங்கள் அனைத்தும் அழகாக உள்ளது. சமயம் கிடைத்து இந்த கோவிலுக்கு சென்று வர இறைவன் அருள வேண்டும். அந்தப்பக்கம் எந்த உறவுகளும் இல்லை. பார்க்கலாம்.

    சிவன், பார்வதி குடும்பத்துடன் இருக்கும் ஓவியம் மிகவும் அழகாக இருக்கிறது. அந்தக்கால ஓவியத்தின் சாயல் தெரிகிறது. கோவிலிலுள்ள எல்லாவற்றையும் உங்கள் தயவால் நன்றாக விபரமாக படித்துப் பார்த்து மகிழ முடிந்தது. உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் , வாழ்க வளமுடன்

      //நேற்று பதிவை படித்து பாதி வரைக்கும்தான் கருத்துரை இட்டேன். அதன்பின் மகன் குழந்தைகள் வருகை என பொழுது போய் விட்டது. அதனால் சொன்னபடி உடனே வர இயலவில்லை.//

      அவர்களுடன் உரையாடுவது தான் முதன்மை. என் பதிவை எப்போது வேண்டுமென்றாலும் படிக்கலாம்.

      //நீங்கள் சொல்வது போல் கோவில் கோபுரத்தில் பாசி படர்ந்து செடிகள் வேறு வளர்ந்திருக்கின்றனவே.. இப்போது அனைத்தையும் களைந்து அப்புறப்படுத்தி கும்பாபிஷேகத்திற்கு தயார் செய்து விட்டால் கோபுர சிலைகளுக்கு பங்கம் வராமல் இருக்கும். நல்லதுதான்.//

      மிக அருமையாக செய்து விடுவார்கள். சிறிது காலத்தில் பாசி பிடித்து விடும் ஊரின் இயல்பு அது என்று சொல்கிறேன்.

      //கோவிலின் பிரமாண்ட படங்கள் அனைத்தும் அழகாக உள்ளது. சமயம் கிடைத்து இந்த கோவிலுக்கு சென்று வர இறைவன் அருள வேண்டும். அந்தப்பக்கம் எந்த உறவுகளும் இல்லை. பார்க்கலாம்.//

      உறவு இல்லை என்றாலும் சில கோவில்களை திட்டம் போட்டு போகிறோம் இல்லையா அது போல சிதம்பரம்,சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், மற்றும் திவ்ய தேசங்கள் எல்லாம் பார்க்க பெங்களூர் மயிலாடுதுறை விரவு வண்டியில் வந்து மக்கள் பார்த்து போகிறார்கள். அழைத்து போக நல்ல துணையும், உடல் நலமும் இருந்தால் இறையருளால் பார்க்கலாம். நீங்கள் மனசு வைத்தால் இறைவன் நிறைவேற்றுவார் வாய்ப்பை உருவாக்கி.


      //சிவன், பார்வதி குடும்பத்துடன் இருக்கும் ஓவியம் மிகவும் அழகாக இருக்கிறது. அந்தக்கால ஓவியத்தின் சாயல் தெரிகிறது. //

      அதுதான் இங்கு பகிர்ந்தேன் ரசிப்பீர்கள் என்று தெரியும்.

      //கோவிலிலுள்ள எல்லாவற்றையும் உங்கள் தயவால் நன்றாக விபரமாக படித்துப் பார்த்து மகிழ முடிந்தது. உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.//

      நேரத்தை ஒதுக்கி அனைத்தையும் படித்து விரிவான கருத்து சொன்னதற்கு நன்றி கமலா. மீண்டும் வந்து கருத்து சொன்னது மகிழ்ச்சி, நன்றி.

      நீக்கு
  16. படங்களும் பகிர்வும் அருமை.

    இரட்டைப் பிள்ளையாருக்கு வேண்டுதல் வைக்கும் மாணவர்கள் தங்கள் ஆலோசனையை பின்பற்றினால் நன்றாக இருக்கும்.

    அற்புதமான ஓவியம்.

    அனைத்தையும் காண வாய்ப்பளித்த தங்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்

      //படங்களும் பகிர்வும் அருமை.//

      நன்றி ராமலக்ஷ்மி.

      //இரட்டைப் பிள்ளையாருக்கு வேண்டுதல் வைக்கும் மாணவர்கள் தங்கள் ஆலோசனையை பின்பற்றினால் நன்றாக இருக்கும்.//

      ஆமாம். ஆனால் செய்வார்களா என்று தெரியவில்லை, பழக்கத்தை மாற்றுவது கடினம். சுவற்றில் எழுதாதீர்கள் என்று ஒரு பலகையில் எழுதி வைக்கலாம்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு