செவ்வாய், 22 மார்ச், 2022

உலக தண்ணீர் தினம் (2022)





//ஒவ்வொரு ஆண்டும் தண்ணீர் குறித்தான விழிப்புணர்வை முன்வைக்க சில தீம்கள் கையாளப்படும். அந்த வகையில் நேற்று  செனகலின் டாக்கரில் 9வது உலக நீர் மன்றத்தின் தொடக்க அமர்வில் IGRAC (nternational Groundwater Resources Assessment Centre)  தனது கருப்பொருளான நிலத்தடி நீர் - Making The Invisible Visible என்பது முன்மொழியப்பட்டுள்ளது. //

நன்றி - தினமலர்.

இந்த பதிவில்  எங்கள் குடியிருப்பு பக்கம் ஏற்பட்டு இருக்கும் மாற்றம் . அதனால் பறவைகள் படும் துயரம் இவற்றை இந்த உலக தண்ணீர் தின நாளில் எழுதலாம் என்று எழுதி இருக்கிறேன் .


எங்கள் குடியிருப்பு வளாகத்துக்கு அருகில்  இருக்கும் இந்த மரங்கள் அடர்ந்த பகுதியில் தான்   பல வகை பறவைகள்  இருந்தன.  இந்த படத்தில் முள்ளு மரங்கள் வெட்டப்பட்டு விட்டது.  இன்னும் அதிகமாய் அடர்த்தியாக இருந்தது. காலை நேரம்  குயிலின் கீதம், செம்போந்து பறவையின் ஒலி  தவிட்டுக்குருவி, மைனா, புல் புல், செண்பகப் பறவை  என்று பறவைகளின் ஒலி அதிகாலை முதல் மாலை வரை கேட்கும்.  அங்கிருந்துதான் எங்கள் குடியிருப்புக்கு பறவைகள் வரும்.

மழை பெய்யும் இந்த சிறிய காணொளி பார்த்தீர்கள் என்றால் தெரியும் மரங்கள் எப்படி அடர்த்தியாக இருந்தது என்று.

மரங்கள் இருந்த போது மழை பெய்யும் போது எடுத்த காணொளி


மனிதருக்கு வீடு கட்ட பறவைகள் வாழ்ந்த மரங்கள் அழிக்கப்பட்டு விட்டது.   அவைகளுக்கு வீடு இல்லை, அவைகள் எங்கு  போய் விட்டது என்று தெரியவில்லை. 

இந்த மரங்கள் இருந்த போது அடிக்கடி மழை பெய்து கொண்டு இருக்கும். மழை காணொளி நிறைய முகநூலில் பகிர்ந்து கொண்டு இருப்பேன். இப்போது   இந்த மரங்கள் அழிக்கப்பட்டவுடன் மழை இல்லை என்ற எண்ணம் வந்து விட்டது. கோடையில் மழை பெய்யும் இந்த முறை மழையே இல்லை.



மனிதனே மரங்களை வெட்டுவது என்றால்   வெகு நாள் ஆகும்,அது வரை பறவைகள் இருக்கும் . இப்போது  மின் அறுவை இயந்திரங்கள் வைத்தும், ஜேசிபி எனும் கனரக வாகனங்களை வைத்து முள்ளு காடுகள், கட்டிடம் இடிப்பது , பூமியை தோண்டுவது என்று வேலை எளிதானதும். மக்கள் உடனே மரங்களை அழித்து விடுகிறார்கள். உடனே பறவைகள் காணாமல் போய் விடுகிறது.


ஒரு பால்கனி இப்படி தடுப்பு போட்டு இருக்கிறேன்  அது வழியாக   எடுத்த படம்
வீட்டுமனை ஆகப் போகிறது, ஒரு வீடு இருந்த இடத்தில் பல வீடுகள் அடுக்குமாடி குடியிருப்பு வரப்போகிறது. ஆழ்துளை கிணறு போடப்படும் . எங்கள் குடியிருப்பிக்கும் தண்ணீர் தட்டுபாடு ஏற்படும்.


தண்ணீர் லாரிகள் இப்போது குடியிருப்புகளின் தேவையை பூர்த்தி செய்து வருகிறது. எவ்வளவு காலம்  இது  பூர்த்தி செய்யும்? கேள்வி நெஞ்சில் அலை மோதுகிறது. இந்த நிலை மாற வேண்டும்.

நிலத்தடி நீர் இருந்தால் தானே தண்ணீர் கிடைக்கும். இன்னும் இன்னும் என்று பூமியை ஆழ ஆழ தோண்டிக் கொண்டே இருக்கிறார்கள். அங்கு இருந்தால் தானே தண்ணீர் வரும்.






இப்படி கூடு கட்ட குச்சிகளை அங்கிருந்துதான் எடுத்து வரும். இனி எங்கள் வளாகத்தில் உள்ள மரங்களில் குச்சிகள் எடுக்க வேண்டும்.

மகன் கூடு வாங்கி தந்தான், என் கணவர் இதை ஒரு பால்கனியில் அமைத்தார்கள். ஆனால் இதில் வசிக்க  மாட்டேன் எங்கிறது.  முட்டையிடும் நேரம் இந்த கூட்டுக்கு வந்து விடும் பழகிய பழைய வீடுதான் அதற்கு பிடித்து இருக்கிறது. 
குருவிகள் பழைய வீட்டை சரி செய்து முட்டையிட போகிறது. ஒரு  குருவி  குப்பைகளை தள்ளுகிறது, இன்னொரு  குருவி யாராவது வருகிறார்களா என்று பார்க்கிறது.
இரண்டு நாட்களுக்கு முன் மீண்டும் முட்டையிட வந்து இருக்கிறது குருவிகள்.


 முன்பு அடர்ந்த காடு மாதிரி இருக்கும் அந்த பழைய இடத்திலிருந்து காய்ந்த சருகுகள், நார்கள், பஞ்சு போன்ற காய்களை கொண்டு வரும், இப்போது வெகு தூரம் போய் தேடி கொண்டு வருகிறது, சணல் கயிறு, தேங்காய் நார் கொண்டு வருகிறது கூட்டை அமைக்க.

இப்படி நமக்கு கண்ணுக்கு தெரிந்தே சில  பறவைகள் துன்ப படுவது தெரிகிறது, இன்னும் எத்தனை எத்தனை பறவைகள் துன்பபடப்போகிறதோ!

 இந்த  பதிவை 391 பேர் படித்து இருக்கிறார்கள்.


 இந்த பதிவை 256 பேர் படித்து இருக்கிறார்கள்.

  இந்த பதிவை 672 பேர் படித்து இருக்கிறார்கள்

இந்த பதிவை 7411 பேர் படித்து இருக்கிறார்கள்.

 உலக தண்ணீர் தினத்தில் பழைய பதிவுகளை படித்து பார்த்தேன். நிறைய படித்து நிறைய சேகரிப்புகள் செய்து எழுதியது. படிக்க வில்லை என்றால் அதன் சுட்டிகள் மேலே இருக்கிறது படித்துப்பார்க்கலாம்.

மரங்கள் வளர்ப்போம் , மழை பெறுவோம் என்ற வாசகத்தை படிக்கும் போதும், இப்படி மரங்கள் அழிக்கப்படும் போதும் மனது சங்கடபடத்தான் செய்கிறது.  சொந்த வீடு ஒன்று என்று இருந்த நிலை மாறி வருங்கால சொத்து  சேமிப்பு என்று வீட்டு தேவைகள் அதிகமாகி வருகிறது. 

நீர் வளத்தையும், நிலவளத்தையும் பாதுகாக்க வேண்டும், நம் எதிர்கால சந்ததியினர்களுக்காக.

இருக்கும் நீரை சிக்கனமாக பயன்படுத்துவோம்.
வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்
----------------------------------------------------------------------------------------------------

40 கருத்துகள்:

  1. பொதுநலமான தங்களது வேண்டுகோள் நன்று. ஆனால் இன்றைய தலைமுறையினர் இதை காதில் வாங்கிக் கொள்ளாமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது.

    காணொளி கண்டேன்.

    மனிதன் இல்லாமல் பறவைகள் வாழும். ஆனால் பறவைகள் அனைத்தும் அழிந்து போனால் மனிதன் வாழமுடியாது இதை மனிதன் இன்னும் உணரவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
      செங்கல் சூளைக்கு மண் ஜேசிபி வைத்து தோண்டி தோண்டி எடுக்கிறார்கள் . வீடுகட்ட செங்கல்கள் அவ்வளவு தேவைபடுகிறது.

      காணொளி பார்த்தது மகிழ்ச்சி.

      //மனிதன் இல்லாமல் பறவைகள் வாழும். ஆனால் பறவைகள் அனைத்தும் அழிந்து போனால் மனிதன் வாழமுடியாது இதை மனிதன் இன்னும் உணரவில்லை.//

      நீங்கள் சொல்வது உண்மைதான். நன்றாக சொன்னீர்கள். பறவைகள் நமக்கு பலவிதமாக உதவிகள் செய்கிறது.

      இன்று கொண்டைலாத்தி பறவை படம் போட்டு அதை பற்றி படித்து செய்தி எழுதினேன்.

      பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் பெரும்
      பங்காற்றுகிறதாம் இந்த கொண்டைலாத்தி பறவை. பறவைகள் தன் எச்சங்களால் மரங்களை உருவாக்கும். நாம் அந்த மரங்களை அழிக்கிறோம்.

      உங்கள் கருத்துக்கு நன்றி ஜி.

      நீக்கு
  2. உண்மைதான். அனைவரும் தனக்கு ஒரு வீடு இருக்கணும் என்று நினைப்பதால் நிறைய அபார்ட்மெண்ட்டுகள் வந்துவிட்டன, மரங்களும் மறைந்துகொண்டிருக்கின்றன.

    எனக்குமே பெங்களூர் அபார்ட்மெண்ட்ஸ் பெருகும் வேகத்தில், தமிழகத்துக்கு காவிரித் தண்ணீர் போகுமா இல்லை எல்லாமே பெங்களூர்காரங்களுக்கு என்று ஆகிவிடுமா என்று தோன்றும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்
      உங்கள் ஆன்மீக சுற்றுலா நல்லபடியாக நடக்கிறதா?

      //எனக்குமே பெங்களூர் அபார்ட்மெண்ட்ஸ் பெருகும் வேகத்தில், தமிழகத்துக்கு காவிரித் தண்ணீர் போகுமா இல்லை எல்லாமே பெங்களூர்காரங்களுக்கு என்று ஆகிவிடுமா என்று தோன்றும்.//

      அங்குமே சில இடங்களில் தண்ணீர் பற்றாகுறை இருக்கிறது என்று தகவல் சொல்கிறது.

      நீக்கு
    2. முன்பு போல பெங்களூர் இல்லை,மரங்கள் வெட்டபட்டு விட்டதால் குளுமை இல்லை என்று சொல்கிறார்கள். பெங்களூர் போன பழைய ஆட்கள்.

      நீக்கு
    3. ஆமாம். பெங்களூரில் குளிர்ச்சி மிகவும் குறைந்துவிட்டது. அதிலும் மார்ச்-மே மாதங்கள் ரொம்பவே சூடாக இருக்கின்றன (இரவில்). ஏசி தேவையாக இருக்கிறது.

      நீக்கு
    4. வெகு காலமாக இருந்த மரங்கள் மெட்ரோவுக்கு என்று வெட்டபட்டது காரணம் என்கிறார்கள். பெங்களூர் குளர்ச்சி என்று சென்னை வாசிகள் அங்கு தங்கினார்கள்.
      நான் 9வது படிக்கும் போது பள்ளி சுற்றுலா பெங்களூர் போன போது தங்கிய வீட்டில் ஹீட்டர் போட்டு இருந்தார்கள். அந்த ஊர் மக்கள் இரவே கோலம் போட்டு இருப்பதை பார்த்தேன். அப்புறம் வந்த போது அவ்வளவு குளிர் உணரவில்லை.

      மீண்டும் வந்து பதில் சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  3. தண்ணீர் சிக்கனம் - சமீப சென்னைப் பயணத்தில் இது தோன்றியது. பெங்களூரில் நாங்கள் இருக்கும் இடத்தில் பலர் தண்ணீரைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. ஏராளமாக இருக்கிறது. இருந்தாலும் நான் எப்போதுமே சிக்கனமாக உபயோகிப்பேன்.

    உங்கள் வீட்டுச் சிட்டுக்குருவிக் கூடு (மின்சார வயர்கள் அருகில்) நினைவில் இருக்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தண்ணீர் தராளமாக கிடைக்கும் போதும் சிக்கனமாக இருப்பது நல்ல குணம்.
      தண்ணீர் கஷ்டபட்டு சுமந்து வந்தும் தண்ணீரை கொட்டுபவர்கள் இருக்கிறார்கள்.
      தண்ணீரை சிக்கனமாக செல்வு செய்வது எல்லோருக்கும் நல்லது.

      //உங்கள் வீட்டுச் சிட்டுக்குருவிக் கூடு (மின்சார வயர்கள் அருகில்) நினைவில் இருக்கிறது//

      அது மின்சார வயர்கள் இல்லை, கேபிள் (தொலைக்காட்சி) வயர்கள். இப்போது எல்லோரும் டிஷ் பயன்படுத்துவதால் அவை துண்டிக்கப்பட்டு இருக்கிறது.
      என் வீட்டில் இல்லை பக்கத்துவீட்டு சுவரில் இருக்கிறது. பால்கனியிலிருந்து பார்த்து படம் எடுப்பேன். மூன்று பால்கனி உள்ளது என் வீட்டில். ஒரு பால்கனியிலிருந்து புறா , மற்றும் பல பறவைகள், குருவியை படம் எடுக்க வேறு பால்கனி. வசந்த காலம் வரும் போது எல்லாம் முட்டையிட வந்துவிடும் நானும் அதை படம் எடுத்து பதிவாக்கி விடுவேன். எல்லோருக்கும் அது நினைவில் இருக்கும்.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  4. கோமதிக்கா சிறு வயதில் தண்ணீர் சூழ்ந்த பகுதியில் பிறந்து வளர்ந்து, இப்போது இங்கு தண்ணீர் நன்றாக வருகிறது என்றாலும் கூட விவசாயப்பாடத்தில் தண்ணீர் வருங்காலத்தில் எப்படி ஆகும், நிலங்கள் என்னாகும், விளைச்சல் என்னாகும் என்று நீர் மேலாண்மை குறித்துப் படித்ததிலிருந்து மிகவும் அதைப் பற்றிச் சிந்திப்பதுண்டு. சென்னையில் இருந்திருக்கிறேன் வறண்ட பகுதியிலும் இருந்திருக்கிறேன் எனவே மிகவும் சிக்கனமாகச் செலவழிப்பதுண்டு. ஆனால் பங்க்ளூரிலும் விரைவில் வந்துவிடும் தண்ணீர்ப் பிரச்சனை. அது போல கேரளத்திலும் நகரங்களில் இப்போதே சொல்லத் தொடங்கிவிட்டார்கள் தண்ணீரை வேஸ்ட் பண்ணாதீர்கள் என்று.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதாரெங்கன், வாழ்க வளமுடன்

      //தண்ணீர் வருங்காலத்தில் எப்படி ஆகும், நிலங்கள் என்னாகும், விளைச்சல் என்னாகும் என்று நீர் மேலாண்மை குறித்துப் படித்ததிலிருந்து மிகவும் அதைப் பற்றிச் சிந்திப்பதுண்டு//

      சிந்திப்பது நல்லது.

      //சென்னையில் இருந்திருக்கிறேன் வறண்ட பகுதியிலும் இருந்திருக்கிறேன் எனவே மிகவும் சிக்கனமாகச் செலவழிப்பதுண்டு.//

      நானும் சிறு வயதில் சிவகாசி ஊரில் இருந்து இருக்கிறேன். எங்கள் வீட்டில் போர்வெல் பைப் இருந்தது. நல்ல தண்ணீர் கிடையாது. வண்டியில் வரும் ஒரு குடம் 10 பைசா கொடுத்து தண்ணீர் வாங்குவோம். பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் நல்லதண்ணீர் உள்ள கிணறுகளை நாடி போய் தலையில் ஒன்றும், இடுப்பில் ஒன்றும் கொண்டுவருவார்கள் குடிக்க, சமைக்க என்று. கோவில்பட்டியில் உறவினர்கள் இருந்தார்கள் அவர்கள் மர பீப்பாய்கள் வைத்த வண்டியில் தண்ணீர் வாங்குவார்கள் பார்த்து இருக்கிறேன். அம்மா உங்களுக்கு கஷ்டம் இல்லை, மற்றவர்கள் எவ்வளவு கஷ்டபடுகிறார்கள் பாருங்கள், தண்ணீரை வீணாக்காதீர்கள் என்று சொல்வார்கள்.

      எல்லா ஊர்களிலும் தண்ணீர் தட்டுபாடு சில இடங்களில் இருக்கவே இருக்கிறது.
      எங்கள் குடியிருப்பில் அறிக்கை அனுப்பி விடார்கள் கோடை காலம் வந்து விட்டது. கிணற்றில் நீர் குறைந்து வருகிறது, வெளியில் வாங்கிதான் மேல் நிலை தொட்டிகளில் ஏற்றுகிறோம், சிக்கனமாக செலவு செய்யுங்கள் என்று .

      நீக்கு
  5. அக்கா பதிவை வாசித்தேன் ஆனால் மனம் மிகவும் கனத்துவிட்டது.

    //மனிதருக்கு வீடு கட்ட பறவைகள் வாழ்ந்த மரங்கள் அழிக்கப்பட்டு விட்டது. அவைகளுக்கு வீடு இல்லை, அவைகள் எங்கு போய் விட்டது என்று தெரியவில்லை. //

    இதற்குப் பல காரணங்கள். ஆனால் அழிந்த பகுதி பார்த்து மனம் கனத்துவிட்டது பாவம் அந்தப் பறவைகள். எங்கு போகும்? மனிதனை விட மிக மோசமான உயிரினம் இருக்க முடியாது கோமதிக்கா என்னையும் உட்படுத்தித்தான்.

    குருவி அழகு புறா அழகு ஆனால் இந்த அழகுச் செல்லங்கள் என்ன செய்யப் போகின்றன பாவம்...மனம் மிகவும் வேதனை அடைகிறது கோமதிக்கா...பாவம். தினமும் இங்கு ஏரியில் பல பறவைகள் வருகின்றன பார்க்கிறேன். அழியாமல் இருக்க வேண்டும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பறவைகளின் வரத்து குறைந்து விட்டது பறவைகளின் ஒலி குறைந்து விட்டது. குயில்களின் கீதம் கொஞ்சம் தான் கேட்கிறது. இல்லையென்றால் 4 மணிக்கே ஒரே சத்தமாய் கத்தி ( அதுகள் பேசும்) சில நேரங்களில் இனிமையாக கூவும். எலோறையும் எழுப்பி விடும் இப்போது அந்த சத்தம் கம்மி.

      //மனிதனை விட மிக மோசமான உயிரினம் இருக்க முடியாது கோமதிக்கா என்னையும் உட்படுத்தித்தான்.//

      ஆமாம். மனிதர்கள் என்றால் நாம் எல்லோரும் அடக்கம் தான்.

      குருவி சிறு பூச்சிகளை , சிறு புழுக்களை,இலைகளுக்கு பின் புறம் உள்ள கொசு முட்டைகளை கொண்டு வந்து கொடுக்கும் இப்போது வெகு தூரம் சென்று தேடி கொண்டு வர வேண்டும்.

      உங்களுக்கு தினம் ஏரிக்கரையோரம் பறவைகள் பார்க்க கிடைக்கிறது, அப்படியே கிடைக்கட்டும்.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  6. அம்மா தினம், அப்பா தினம், தண்ணீர் தினம், பசுமை தினம், குருவிகள் தினம், அந்த தினம், இந்த தினம் -

    எல்லாமே மேலை நாட்டு
    நாசங்களால் விளைந்தவை..

    மேலைக் கல்வியால் இழந்த எதையும் திரும்பப் பெற இயலாது...

    மனம் மிகவும் வலிக்கின்றது..

    போன வாரத்தில் பக்கத்தில் இருக்கும் சாலை ஓரத்தின் புளிய மரங்கள் அனைத்தையும் வெட்டிக் கொன்று விட்டார்கள்..

    காரணம் சாலை விரிவாக்கம்..

    20 கி.மீ நீளத்துக்கு சங்கிலியைப் போட்டு இழுத்த மாதிரி இருசக்கர வாகனங்கள்.

    சுற்றுச் சூழல் கெடுவதற்காகவே
    ஒவ்வொன்றும் இயங்குகின்றன..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்

      ஏதோ இந்த தினங்களால் மக்கள் நினைத்து கொள்கிறார்கள் அல்லவா ! அது போதும்.

      மேலைக்கல்வியால் நன்மையும் இருக்கிறது, கெட்டதும் இருக்கிறதுதான்.

      சாலை விரிவாக்கம், விரைவு வழி சாலைகளுக்காக் மரங்கள் வெட்டப்படுவது மனதுக்கு கஷ்டம் தான், வெட்டப்பட்ட மரங்களுக்கு பதில் நிறைய மரங்களை நடலாம்.
      வேருடன் பிடிங்கி வேறு இடத்தில் நடலாம்.


      //20 கி.மீ நீளத்துக்கு சங்கிலியைப் போட்டு இழுத்த மாதிரி இருசக்கர வாகனங்கள்.

      சுற்றுச் சூழல் கெடுவதற்காகவே
      ஒவ்வொன்றும் இயங்குகின்றன..//

      வேறு வழி யில்லை விரைவான வாழ்க்கை, பழைய வாழ்க்கைக்கு யாரும் திரும்பி போக முடியாது. இப்போது பெட்ரோல் விலை ஏறி விட்டது என்று சைக்கிள் , பழைய கால வண்டிகளில் பயணம் செய்ய மக்கள் விரும்புவது இல்லை.

      //இழந்த எதையும் திரும்பப் பெற இயலாது...

      மனம் மிகவும் வலிக்கின்றது..//

      இழந்த எதையும் திரும்ப பெற இயலாதுதான்.

      புலம்பி கொண்டு ,அலுத்து கொண்டும் பழகிய வாழ்க்கையை வாழ்ந்து ஆக வேண்டிதான் உள்ளது.

      நேற்று சதுர்த்தி என்று வெகு நாட்களுக்கு பிறது பக்கத்தில் இருக்கும் அய்யனார் கோவில் போனேன். ஒரு பள்ளி மாணவன் புது சைக்கிள் வாங்கி குருக்களை பூஜை செய்ய சொன்னான். அது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. பள்ளி மாணவன் சைக்கிள் மகிழ்ச்சி தருகிறது, கல்லூரி காலத்தில் பைக் விரும்புவான், வேலை திருமணம் என்றானதும் கார் வாங்க விரும்புவான் இதுதான் நடக்கிறது.

      அயல் நாட்டில் புகை இல்லா கார் பேட்டரி கார் வாங்க சொல்கிறார்கள் அது விலை அதிகம் எல்லோரும் வாங்க முடியாது. சார்ஜ் செய்து கொள்ள எல்லா இடங்களிலும் அங்கு வசதியும் இருக்கிறது.

      உங்கள் கருத்துக்கு நன்றி.


      நீக்கு
  7. ஆற்றின் கரையில் மீன் இறைச்சி கடைகள்.. கழிவுகளை அங்கேயே போடுகின்றனர்..

    நிர்வாகத் துறைகள் பற்பல.. இருந்தும் கண்டு கொள்ளப் படுவதில்லை..

    அன்றைக்கு அரசனும் நீதியும் ஒன்றே.. அச்சம் இருந்தது..

    இன்று அரசு இருக்கின்றது..
    நீதி தவிக்கின்றது..

    தண்ணீரைக் காக்க வேண்டுமென அரசுகளே நினைக்க வில்லை...

    பாவம் மக்கள்..

    நம்மைப் பொறுத்த வரை இயற்கையே தெய்வம்..

    வாழ வைப்பதும்
    வாட்டி எடுப்பதும் -
    அதன் கையில்!..

    தண்ணீர் வாழ்க!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஆற்றின் கரையில் மீன் இறைச்சி கடைகள்.. கழிவுகளை அங்கேயே போடுகின்றனர்..//

      வீட்டுக் கழிவுகள், மற்றும் தொழில்சாலை கழிவுகள், நிறைய ஏரிகள், ஆறுகளில் , கலந்து கொண்டு இருக்கிறது. அன்று ஒரு நாள் கீதா ரெங்கன் கூட படம் பகிர்ந்து இருந்தார்.


      சட்டங்கள் போட்டு மக்களை திருத்த முடியாது நீங்கள் சொல்வது போல மக்களிடம் தப்பு செய்யும் அச்சம் வேண்டும்.

      //நம்மை பொறுத்தவரை இயற்கையே தெய்வம்//

      ஆமாம், நீங்கள் சொல்வது போல வாழ வைப்பதும், வாட்டி எடுப்பதும் அதன் கையில்தான்.

      தண்ணீர் வாழ்க!

      தண்ணீர் நம் அனைவரையும் வாழ வைக்கும்.
      வாழ்க வளமுடன்.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  8. அன்பின் கோமதிமா,
    வாழ்க வளமுடன்.
    பறவைகளின் படங்கள் அற்புதம். அந்தப் புறாவின் கண்
    பேசுகிறது.!!!

    தண்ணீருக்காகக் கஷ்டப்பட்ட வருடங்கள்
    கணக்கில் அடங்காது.
    இங்கே தண்ணீருக்குப் பஞ்சம் இல்லை.
    இருந்தும் ஐந்து நிமிடங்களுக்கு மேல் ஷவர்
    செய்ய மனம் இல்லை.

    அத்தனையும் நல்ல தண்ணீர்.
    குடம் எடுத்துப் போய் சிரமப்பட்டுக் கொண்டு வந்த
    நாட்கள் இன்னும் எனக்கு மறக்கவில்லை.

    ஜேசிபி எந்திரத்தைப் பார்த்தாலே மனம் கலக்கம் அடைகிறது.
    தாமிரபரணி ஆற்றைச் சுரண்டிய நேரங்கள் நினைவில்.

    அருமையான பதிவு அம்மா.
    நலமுடன் இருப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்
      புறா கண் பேசுகிறதா? நன்றி.

      சென்னையில் தண்ணீர் கஷ்டங்கள் இருந்து இருக்கிறதா?

      தண்ணீருக்காக கஷ்டபட்ட நாட்களை நினைக்கும் போது த்ண்ணீரை வீணாக்க பிடிக்காது. தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த சொலி வளர்க்கப்பட்டோம்.

      இப்போதும் அலவுக்கு அதிகமாக செங்கல் சூளைக்கு பயன் படுத்த ஜேசிபி இயந்திரங்களை கொண்டு மணல் அள்ளுவதை காட்டினார்கள் தொலைக்காட்சியில்
      அரசிடம் தடை செய்ய சொல்லி இருக்கிறார்கள் பொது மக்கள்.

      போன பதிவு மலர்களை பார்த்தீர்களா அக்கா?
      ஊங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி அக்கா.


      நீக்கு
  9. முள்ளு மரங்கள் என்றால் கருவேல மரங்களா...   அவற்றை முன்னரே அழிக்கச் சொல்லி நீதிமன்ற உத்தரவு இருந்தது.  சமீபத்தில் அந்த நடவடிக்கை எந்த நிலையில் இருக்கிறது என்று கோர்ட் கேட்டிருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
      கருவேலமரங்கள் என்றால் நீதிமன்ற உத்தரவில் அழித்து இருப்பார்கள். உருண்டையாக காய்கள் இருக்கும் முள்ளும் இருக்கும் அந்த மரத்தில்.
      கருவேல மரத்திலேயே இரண்டு வகை உண்டு இல்லையா? வீட்டுமனைக்குஅழித்துதான் ஆகவேண்டும் அதனால் இப்போது அழிக்கிறார்கள் .

      வாங்கி போட்டு வைத்து இருக்கும் மனைகளில் கருவேலம மரம் வளர்ந்து இருந்தால் அழிக்க சொன்னார்கள், நிலத்தடி நீரை அது உறிஞ்சிவிடும் என்று.

      நீக்கு
  10. நீங்கள் சொல்லி இருக்கும் விவரங்கள் உண்மை.  பல்லாயிரம் வீடுகளுக்காக தண்ணீர் எடுக்க ஆழ்துளைக்கிணறுகள் தோண்டப்பட்டு வரும் இந்நாளில் எதிர்கால தண்ணீர் நிலைமை எப்படி ஆகுமோ என்கிற கவலை எனக்கும் அடிக்கடி எழும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கட்டுமானபணிகளுக்கு தண்ணீர் விலைக்கு வாங்குகிறார்கள் சில இடங்களில் நிலத்தடியில் நீர் இல்லை. குடியிருப்பவர்கள் வண்டி தண்ணீரை எதிர்ப்பாத்து இருக்கிறார்கள். இந்த முறை வைகையில் தண்ணீர் இருக்கிறது. பெரிய தண்ணீர் தட்டுபாடு இருக்காது என்கிறார்கள்.

      //பல்லாயிரம் வீடுகளுக்காக தண்ணீர் எடுக்க ஆழ்துளைக்கிணறுகள் தோண்டப்பட்டு வரும் இந்நாளில் எதிர்கால தண்ணீர் நிலைமை எப்படி ஆகுமோ என்கிற கவலை எனக்கும் அடிக்கடி எழும்.//

      கண்டிப்பாய் இந்த எண்ணம் வரும் தான்.

      நீக்கு
  11. மரங்கள் அடர்ந்து இருந்த இடம் அவை வெட்டப்பட்டு வெறிச்சென்று ஆவது மனதை நோகவைக்கும் காட்சி.  பாவம் பறவைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பால்கனியில் போய் நின்று பார்த்தாலே கஷ்டமாய் இருக்கிறது. மழை பெய்யும் போது பார்த்து ரசிப்பேன். காலையில், மாலையில், நேரம் கிடைக்கும் போது எல்லாம் கொஞ்சம் எட்டிப்பார்ப்பேன், பறவைகள் ஒலி கேட்க்கும் போதும் போய் பார்ப்பேன். இப்போது காலை நேரம் பறவைகளின் ஒலி குறைவாய் இருப்பது மனதுக்கு கவலை அளிக்கிறது. வேறு நல்ல இடம் பார்த்து போய் இருக்கும் பறவைகள். அங்கு இன்னும் மகிழ்ச்சியாக பறவைகள் இருக்க வேண்டும்.
      உங்களின் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  12. இங்கேயும் இப்படித்தான் பக்கத்துத் தோப்புகள் எல்லாம் அழிக்கப்பட்டுக் கல்யாண மண்டபமாகவும், குடியிருப்பு வளாகங்களாகவும் மாறி வருகின்றன. மனிதனின் ஆசைக்கு அளவே இல்லை. ஆனால் இயற்கையோடு எதிர்த்துப் போராட முடியுமா? என்னவோ போங்க. பறவைகள் குடியிருக்க இடம் இல்லாமல் தவிக்கின்றன. அவைகளுக்காகப் பேசுபவர்கள் யாருமே இல்லை/நம்மைத் தவிர்த்து! :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்

      எல்லா இடங்களிலும் தோப்புகள், வயல்கள் எல்லாமே குடியிருப்பு வளாகங்களாக மாறி வருகிறது. நாம் ஒன்றும் செய்ய முடியாது. நம் கருத்தை சொல்லி பேசி கொள்ள முடியும் அவ்வளவே!
      இத்தனை நாள் பார்த்த பறவைகளை பார்க்க முடியவில்லியே என்று மனது வருந்தி புலம்பல் பதிவு.
      நிலத்தடி நீரை அதிகரிக்க இந்த ஆண்டு தண்ணீர் தின சொல்கிறது.
      அதனால் இப்படி நிறைய வீடு வரப்போகிறதே! நிலத்தடி நீர் இன்னும் எடுக்க படுமே என்ற கவலைதான்.

      பறவைகள்குடியிருக்க அவைகளுக்கு உணவு கிடைக்க படைத்தவன் வழி செய்வான் என்று நம்ம மட்டுமே முடியும்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  13. அனைத்து மக்களும் நீரின் சிறப்பை உணர வேண்டிய நாட்கள் வெகுதூரம் இல்லை என்று தோன்றுகிறது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
      உங்களை மீண்டும் வலைத்தளத்தில் பார்த்தது மகிழ்ச்சி.
      இன்றும், நேற்றும் நீரின் மேன்மையை நிலத்தடி நீரை மேம்படுத்த நல்ல நல்ல யோசனைகள் சொல்கிறார்கள் மக்கள்.க்ற்ட்க நன்றாக இருக்கிறது.
      தெரிந்து தான் இருக்கிறார்கள். அதை செயல் படுத்தினால் நீரின் அளவு குறையாமல் எல்லோருக்கும் கிடைக்கும்.

      நீங்கள் சொல்வது போல நீரின் சிறப்பை அனைத்து மக்களும் உணர்ந்து நீரை சிக்கனமாக பயன்படுத்தினால் நல்லது.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  14. மரங்களுடன் அடர்த்தியாக இருந்த பல பகுதிகள் அழிக்கப்பட்டு இன்றைக்கு அடுக்குமாடி கட்டிடங்கள் ஆக மாறியிருப்பது முன்னேற்றம் என்றாலும் பறவைகளுக்கும் இயற்கைக்கும் கேடுதான். உலக தண்ணீர் தினம் அன்று வெளியிட்ட இந்த பதிவு நம் எல்லோரின் ஆதங்கத்தையும் வெளிப்படுத்துகிறது. படங்களும் காணொளியும் கண்டேன்.

    பதிலளிநீக்கு
  15. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்

    //மரங்களுடன் அடர்த்தியாக இருந்த பல பகுதிகள் அழிக்கப்பட்டு இன்றைக்கு அடுக்குமாடி கட்டிடங்கள் ஆக மாறியிருப்பது முன்னேற்றம் என்றாலும் பறவைகளுக்கும் இயற்கைக்கும் கேடுதான்//

    ஆமாம், நீங்கள் சொல்வது சரிதான் வெங்கட்.

    // உலக தண்ணீர் தினம் அன்று வெளியிட்ட இந்த பதிவு நம் எல்லோரின் ஆதங்கத்தையும் வெளிப்படுத்துகிறது. படங்களும் காணொளியும் கண்டேன்.//

    ஆமாம் வெங்கட், நம் ஆதங்கத்தை வெளிபடுத்தவே இந்த பதிவு.

    நீங்கள் காணொளி கண்டது மகிழ்ச்சி.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  16. மிகவும் சமூக அக்கறையோடு எழுதப்பட்டிருக்கும் பதிவு. நிறைய கேள்விகளை எழுப்பியிருக்கிறீரகள், பதில் சொல்லத்தான் ஆள் இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பானுமதி வெங்டேஷ்வரன், வாழ்க வளமுடன்
      நலமா?

      என்னுள் எழுந்த கேள்விகள் இவை.பறவைகளை பார்ப்பது என் பொழுது போக்காக இருந்தது. எப்போதும் பறவைகள் ஒலி எழுப்பி எங்கள் வளாகத்தை சிற்றி வரும். இப்போது அமைதியாக பறவைகளின் ஆரவார ஒலி இல்லாமல் இருக்கிறது. வெகு தூரத்தில் சேவல் கூவும் ஒலி கேட்கிறது.

      உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  17. மரங்கள் வெட்டப்படுவதும் பறவைகள் தவிப்பதும் எல்லா இடங்களிலும் நடக்கின்றன :(. இந்தப் பதிவு மட்டமல்ல, தண்ணீர் தினத்தன்று நீங்கள் முன்னர் பகிர்ந்த விழிப்புணர்வுப் பதிவுகள் அனைத்துமே சிறப்பானவை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
      வின்சென்ட் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க நாம் தண்ணீர் தினத்திற்கு தொடர் பதிவு போட்டது நினைவில் வருகிறது.
      அப்போது நிறைய படித்து விஷயங்களை பகிர்ந்து கொண்டோம்.
      மீண்டும் அது போன்ற காலங்கள் வர வேண்டும். நீங்கள் கதைகள், கட்டுரைகள் எழுத வேண்டும் ராமலக்ஷ்மி.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  18. நதிகளை ஏன் இணைக்கக்கூடாது என என் வலைப்பூவில் சில கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். முடிந்தால் வாசித்துப் பாருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பா. சதீஸ் முத்து கோபால், வாழ்க வளமுடன்
      உங்கள் கட்டுரைகளை வாசித்து பார்க்கிறேன்.

      தகவலுக்கு நன்றி.

      நீக்கு
    2. நீங்கள் உங்கள் கட்டுரையின் சுட்டி கொடுத்து இருக்கலாம்.

      நீக்கு
    3. மரங்கள் வெட்டப்படும் பறவைகள் அவதிப்படுவதும் நகரங்களில் நடந்து கொண்டுதான் இருக்கிறது கவலைதான். .
      இங்கும் எங்கள் நகர வீட்டு கிச்சன் எக்சோசிஸ்ட் குழாயுள் றொபின் குஞ்சுகள் வைத்து தொடர்ந்து குடிஇருக்கிறது நாங்கள் அதனால் எக்சோசிஸ்ட் போடுவதில்லை யன்னலை திறந்துவிட்டு சமைப்போம்.வலையை வைத்து வாயை மூடுவமா என்பார்கள் பிள்ளைகள் நான் வேண்டாம் அவை குடி இருக்கட்டும் என்று கூறிவிட்டேன்.

      நீக்கு
    4. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
      ஆமாம், மரங்கள் வெட்டப்படுவது கவலைதான்.

      றொபின் பறவைக்கு நல்ல அன்பானவர் வீடு கிடைத்து இருக்கிறது.
      அவைகள் மகிச்சியாக குடி இருக்கட்டும்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு