வியாழன், 4 நவம்பர், 2021

தீபாவளி நினைவுகள்!

 தீபாவளி என்றாலே மகிழ்ச்சி, ஆனந்தம் !   பொதுவாக, சிறுவயதில் தான் நிறைய தீபாவளி எதிர்பார்ப்புகள்   இருக்கும்.  அந்தக் கால நினைவுகளில் கொஞ்சம்  பார்ப்போம்.

எங்கள் ப்ளாகில் இன்று தீபாவளி நினைவுகளை பகிர்ந்துகொண்டார்கள்.அதை படித்தவுடன்  என் தீபாவளி நினைவுகளை பகிர்ந்து கொண்டேன்.

எல்லோரும் தீபாவளி பண்டிகை விழாவை மகிழ்வாய் கொண்டாடி விட்டு ஓய்வு எடுத்துக் கொண்டு இருப்பீர்கள். மெதுவாக படிக்கலாம் என் பதிவை.

சிறுவர் சிறுமியாக இருக்கும்போது புத்தாடை எதிர்பார்ப்பு,  வாண வேடிக்கைக்கு என்ன புது மாதிரி மார்க்கட்டுக்கு வந்து இருக்கிறது என்று பார்த்து வாங்குவது என்று ஆண்டு தோறும் தீபாவளி வருவதற்கு முந்திய மாதமே ஏற்பாடுகள் நடக்கும். சக வயது தோழி, தோழர்களிடம் நான் அது வாங்கப் போகிறேன், இது வாங்கப் போகிறேன் என்று சொல்லிக் கொள்வது. கேப் வெடிக்க புது மாதிரி துப்பாக்கி , தூக்கத்திலும் கனவில் அதைப்பற்றிய நினைவுதான்.

பத்திரிக்கைகளில் தீபாவளி சமயத்தில் வரும் சிரிப்புகளில் முக்கியம், ”சட்டையைக் கொஞ்சம் பெரிதாகத் தையுங்கள் . வளரும் பிள்ளைகள் !”என்று தையல்காரர்களிடம் சொல்வது தான். எங்கள் வீட்டில் அப்படிச் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.  பெரியவளுக்குப்  பத்தாமல்  போனால் சின்னவள் போட்டுக் கொள்ளலாம்., பெரியவனுக்குப் பத்தாமல்  போனால் சின்னவன் போட்டுக் கொள்ளலாம். அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் அப்பா பொருத்தமான  அளவில் தான் வாங்குவார்கள் எல்லோருக்கும். வித விதமாக ரெடிமேட் உடைகள் தான் வாங்குவார்கள்.பாவாடை, தாவணி போடும்போது மட்டும் தைக்கப்பட்டது. அதை அக்கா அழகாய்த் தைத்துத் தருவார்கள். இப்போது அதுவும் ரெடிமேட் கிடைக்கிறது.

 இப்போது போல் விளம்பரங்கள் தொலைக்காட்சியில் பார்ப்பதற்கு இல்லை என்றாலும்  வார, மாத இதழ், தீபாவளி  சிறப்பிதழ்  மூலம் நமக்குக் கிடைத்து விடும். வானொலியிலும் தீபாவளிச் சிறப்புத் தேன் கிண்ணம், தீபாவளிப் பாடல்கள் என்று  தீபாவளிக் கொண்டாட்டங்களைக் கேட்கலாம்.

இப்போது மாதிரி எப்போது வேண்டுமென்றாலும் (நினைத்தபோது எல்லாம்) துணி எடுக்கும் வழக்கம் எல்லாம் அப்போது இல்லை. தீபாவளி, பிறந்தநாள், பொங்கல் மட்டும்தான்.  ஏதாவது துணி அதிகப்படியாக எடுத்தது இருந்தால் அது கார்த்திகைக்கும் கிடைக்கும். அதுபோல் தான் வெடிகள் மத்தாப்பு, மற்றும் பூச்சட்டி எனும் புஸ்வாணம், இதைக் கொஞ்சம் கார்த்திகை தீபத்திற்கு என்று பத்திரப்படுத்தி வைத்துக் கொள்வார்கள் அம்மா.( எல்லாவ்ற்றையும் ஒரே நாளில்கொளுத்திக் கரியாக்காதீர்கள் என்பது அம்மாவின் கருத்து) அப்பா,” குழந்தைகளை திருப்தியாக வெடிக்க விடு! கார்த்திகைக்கு வேறு வாங்கிக் கொள்ளலாம் ”என்பார்கள். பூஜையின் போது சரவெடி வெடிக்கப்படும்.

 10 நாட்களுக்கு முன்பே பலகாரங்கள் தயார் செய்வார்கள் அம்மா. பிஸ்கட் டின்கள், மற்றும் பித்தளை, எவர்சில்வர் டிரம்களில் பலகாரம் செய்து வைத்திருப்பார்கள்.

தீபாவளிக்கு முன்பே ,தினமும் பலகாரங்கள் சாப்பிடுவது, தீபாவளிக்கு வாங்கிய துணிமணிகளை  வீட்டுக்கு வந்தவர்களிடமும், அக்கம்பக்கத்தில் இருப்பவர்களிடமும் காட்டி மகிழ்வது என்று மனதுக்கு மகிழ்ச்சி அளிப்பது தீபாவளித் திருநாள்.

தீபாவளி அன்று வீட்டில் சாமி கும்பிட்டபின் புத்தாடைகளைக்கட்டிக் கொண்டு அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுக்கு, உறவினர்களுக்கு என்று பலகாரம் கொடுத்து வரச் சொல்வார்கள் அம்மா . இந்த வெடிகளை வெடித்து விட்டு கொஞ்சநேரம் கழித்துச் செல்கிறோம் என்றால் விட மாட்டார்கள் . ”முதலில் கொடுத்து விட்டு வந்து, சாப்பிட்டு விட்டு,அப்புறம் போய் நிதானமாய் வெடிகளை வெடிக்கலாம் ”என்பார்கள்.

சுத்தியல் மாதிரி அமைப்பில், கந்தகம் வைத்துத் தரையில் ஓங்கி அடித்து அண்ணன் வெடிப்பான். அப்பா திட்டுவார்கள்,” விதவிதமாய் வெடிகள் வாங்கிக் கொடுத்து இருக்கிறேன், இதை எங்கு இருந்து வாங்கினான்? காதை அடைக்கிறது” என்று. அப்போதெல்லாம்  எல்லாப் பையன்களும் அப்படி வெடிப்பார்கள். அப்புறம் அது தடை செய்யப்பட்டு விட்டது என்று நினைக்கிறேன்.

 வட்டமாய் நட்டு போன்ற அமைப்பில் பொட்டுவெடிகளை வைத்து, தரையில் ஓங்கி அடிக்கும் உத்தி வந்தது. ஓலை வெடியை தனித் தனியாகப் பொருத்திப் போட, ஆளுக்கு ஒரு பாக்கெட் உண்டு.  ஊசி வெடியும் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக உண்டு.. அதுவும் ஆளுக்கு ஒரு பாக்கெட்,

பட்டர்பிளை, பாம்புமாத்திரை, என்று தனித்தனியாக எடுத்துக் கொண்டு அவரவர்களுடைய  நண்பர்களுடன் கதைகள் பேசி மகிழ்ந்து வெடிப்போம்.  ஒன்று ஒன்றாக வெடிக்கச் சோம்பல்பட்டும் சத்தம் அதிகமாய் கேட்க ஆசைப்பட்டும் ஆறு ஏழு ஊசி வெடியின் திரிகளை  ஒன்றாகச் சுற்றி வைத்து வெடித்து  மகிழ்வோம்


ராக்கெட் விட, பாட்டில்கள் தயார் செய்து வைத்துக் கொள்வோம். சரம் வைக்கும் போதும், லட்சுமி வெடி வைக்கும் போதும், ”திரியைக் கிள்ளி வை !இல்லையென்றால் வெடிக்காது”என்று அண்ணன் சொல்வதைக் கேளாமல், பற்ற வைத்து விட்டுஓடி வருவேன். ”நுனியில் கொஞ்சம் தீக்கொழுந்து
கனன்று வரும் போது தான் ஓடி வரவேண்டும்” என்று அண்ணன் சொல்லித் தந்தான்.  வைத்து விட்டு வெடி பற்றுவதற்கு  முன்பே ஓடிவந்தால் ஒரே சிரிப்பு.  சில நேரம் திரியில் தீப்பொறி வரவில்லை என்று பக்கத்தில் பார்க்கப் போனால் டபாரென்று வெடித்து நம்மைப் பயமுறுத்தும்.அவை எல்லாம் அற்புதமான நேரங்கள். திரும்பி வராத காலங்கள்.

பெரிய வெடிகள், லட்சுமிவெடி, பெரிய சரம் , தரை சக்கரம், புஸ்வாணம் எல்லாம்  அப்பா பக்கத்தில் இருக்கும் போது தான் வெடிக்க வேண்டும் என்பது கட்டளை. அது எல்லாம் இரவுதான். எல்லோரும் பார்த்து ரசிப்பதற்கும் பாதுகாப்பை உத்தேசித்தும்.

’பார்த்தால் நிறைய பகிர்ந்தால்  கொஞ்சம் ’என்பது போல்  அம்மா செய்த பலகாரங்கள்  மட மட என்று குறைந்து விடும், டின்களில்,  ”என்னம்மா! பலகாரம் கொஞ்சம் தான் இருக்கு போல”  என்றால், ”மறுபடியும் செய்துகொள்ளலாம்.” என்பார்கள் . கொஞ்சத்தை வேறு பாத்திரத்தில் முன்னதாகவே எடுத்து வைத்து இருப்பார்கள் . டின்களில் உள்ளதை காலி செய்தபின் அவை வெளியே வரும்.  கார்த்திகை வரை இந்த பலகாரம் ஓடும் அடுத்து கார்த்திகைக்கு அவல்பொரி, நெல்பொரி, அரிசி பொரி உருண்டைகள் அப்பம் என்று வந்து விடும்.


அக்கா, தம்பி, தங்கைகளுடன் ஆனந்தமாகக் கொண்டாடிய தீபாவளி
எப்போதும் மனதை விட்டு நீங்காத மகிழ்ச்சியான தருணங்கள்.. இப்போதும் தம்பி, தங்கைகள் கூப்பிட்டார்கள் ,”  உங்களுக்கு இந்த வருடம் தீபாவளி கிடையாதே! இங்கு  வாருங்கள்  எல்லோரும் சேர்ந்து கொண்டாடலாம்” என்று.

திருமணம் ஆனவுடன், தலை தீபாவளியைப் புகுந்த வீட்டில் கொண்டாடியதும் மகிழ்ச்சியை கொடுத்தது. எங்கள் பக்கம் பண்டிகை விழாக்கள் எல்லாம் கணவன் வீட்டில் தான்!  பெண்வீட்டார் , வரிசைகளைக் புகுந்த வீட்டில் கொண்டுவந்து கொடுத்துச் செல்வார்கள்.

என் அப்பா தீபாவளிக்கு முன் கோவைக்கு என் மாமனார் வீட்டுக்கு வந்து, சீர் கொண்டு வந்து கொடுத்தார்கள்.. வைலட் கலரில் இளம் மஞ்சள் கலர் பார்டர்-  உடல் முழுவதும் நட்சத்திர ஜரிகை வேலைப்பாடு- கொண்ட பட்டுப்புடவை மற்றும் தேன்குழல், நெய் உருண்டை, காரசேவ், சோமாசி எல்லாம் கொடுத்து விட்டிருந்தார்கள் அம்மா.

எங்கள் மாமனார் வீட்டில் ஒவ்வொரு தீபாவளிக்கும் போட்டோ ஸ்டுடியோவுக்குச்  சென்று குடும்பப்படம் எடுத்துக் கொள்வது வழக்கம்.
அதை மனதில் வைத்துக் கொண்டு  சீர் கொடுக்க வந்த அப்பாவிடம் நான்,
”தீபாவளிக்கு அம்மாவுக்கு என்ன புடவை எடுத்தீர்கள்?  நீங்களும் அம்மாவும் போட்டோ  எடுத்து அனுப்பி வையுங்கள்” என்று சொல்லி அவர்களை ஊருக்கு வழி  அனுப்பி வைத்தேன்.  (அப்பா என் கண்ணில் இருந்து மறையும் வரை பார்த்துக் கொண்டு இருந்தேன். அது தான் அவர்களைக் கடைசியாக நான் பார்ப்பது என்று அப்போது தெரியாது ,) அப்பாவும் ஊருக்குப் போய்  போட்டோ எடுத்து அனுப்பினார்கள். கார்த்திகை சோமவாரத்தில் இறந்து போனார்கள் அப்போது  அவர்களுக்கு வயது 51. தீபாவளி வரும் போதெல்லாம் அப்பாவின் வருகையும் நினைவுக்கு வரும்.
                         என் கண்வர் வரைந்த ஓவியம்

போன தீபாவளியின் போது எடுத்த படம் 

இப்போது ஒரு வெடி டப்பாவில் இருந்து பலவெடிகள் வெடித்துக் கொண்டே இருப்பது போல், எங்கள் தலைதீபாவளியின் போது   ’டபுள்ஷாட் " எனும் வெடிகள் வந்திருந்தது. கணவர் அதை வாங்கி வந்தார்கள். கீழே ஒரு வெடி வெடித்து விட்டு, மேலே போய் இன்னொரு வெடி வெடிக்கும். இலட்சுமி வெடி, சரவெடிகள், அணுகுண்டுகள், ராக்கெட், சாட்டை, பென்சில், வித வித  மத்தாப்புகள்,  என்று வாங்கிவந்தார்கள்.

இப்படி தீபாவளிக்கு வெடித்து  வந்ததில் ஒரு மாற்றம்- நானும் அம்மா ஆனவுடன். குழந்தைகள் நிறைய வெடிக்க வேண்டும் என்பதால் நான் வெடிப்பதைக் குறைத்துக்கொண்டேன்.  அவர்கள் வெடிப்பதைப் பார்த்து ஆனந்தம் அடைவதுடன் நிறுத்திக் கொண்டேன். இருந்தாலும் என் பிள்ளைகள் கொஞ்சமாவது என்னை வெடிக்க வைப்பார்கள்.

:”வெடி ரோக்கா ”(வெடியின் பெயர், விலை விபரம் உள்ள சீட்டு) வாங்கி வந்து ,
என்ன வேண்டும், எவ்வளவு வேண்டும் என்று குறித்துக் கொண்டு அப்பாவும் மகனும், மகளும் கடைக்குப் போவார்கள்.  அதன்படி வாங்கி வருவார்கள்.
இப்போது தங்கள் ஊரில் வெடிக்க முடியாது என்பதால், மகன் இங்கு தீபாவளிக்கு வந்தால் இஷ்டம் போல் விதவிதமாய் வெடிகள் வாங்கி வெடித்து மகிழ்வான்.

சிறுவயதில், எங்கள் மகன் பகலில் சாட்டை வைக்க வேண்டும் என்று
”சாட்டை! சாட்டை” என்று அழுதான். அவனது அழுகையைக்  டேப் செய்ய ஆசைப் பட்டு சாட்டையை கொடுக்காமல் பகலில் சாட்டை வைக்க கூடாது என்று சொல்லி மேலும் அழ வைத்து டேப் செய்தார்கள். எல்லோரும் எதுக்கு அழுகிறாய் என்று கேட்டால் மறுபடியும் ஆரம்பிப்பான் ”சாட்டை சாட்டை” என்று  இப்படி அவனை எல்லோரும் சேர்ந்து கலாட்டா செய்ததை  டேப்பில் பதிவு செய்து வைத்து இருந்தோம்.   அடிக்கடி போட்டுக் கேட்டு மகிழ்வோம்.


என் மகன் வெகு நாட்களுக்கு அப்பா மாதிரி சட்டை தான் வேண்டும் என்பான். இருவருக்கும் ஒரே மாதிரி சட்டை எடுத்துத் தைக்கக் கொடுப்போம். கல்லூரி சென்றபின் தான் ”அப்பாவுக்கு வேறு வாங்க வேண்டும். எனக்கு வேறு வாங்க வேண்டும். அப்போதுதான்  இரண்டு சட்டைகளையும் நான்  போடலாம்” என்பான்.

என் பெண்ணுக்கு நான் எடுத்துக் கொடுக்கும் துணிகள் பிடிக்கும். அம்மா
செலக்ட் செய்தால் மிக அருமையாக இருக்கும் என்பாள். இப்போது காலம் மாறுது கருத்துகளும் மாறுது . இப்போது சேலை மட்டும் தான் என் தேர்வு. மகள் மருமகளுக்கு எல்லாம்,   மாடல் உடைகள் அவர்கள் தேர்வு.

அத்தையும் அம்மாவைப் போலவே ருசியாக  நிறைய பலகாரங்கள் செய்வார்கள்.  கை முறுக்கு, தட்டை,  மைசூர்பாக், பாதாம் ஸ்வீட் , நெய் உருண்டை என்று எல்லாம்  செய்வார்கள்..

அம்மாவைப் போல நானும் தீபாவளி சமயம்  பலகாரங்கள் நிறைய செய்தகாலம் உண்டு. இப்போது  ஏதோ கொஞ்சம் செய்கிறேன்.  புதிது புதிதாக
செய்த  ஆர்வம் இப்போது இல்லை.  முன்பெல்லாம் தீபாவளி அன்று புதுவகையான இனிப்புதான் ஒவ்வொரு வருடமும். இறைவன் அருளால் அது நன்றாக அமைத்து விடும்.

ஆதவன் தீபாவளி தொடர் அழைப்பு  என்ற பதிவில் எங்கள் வீட்டுத் தீபாவளிக் கொண்டாட்டங்கள் பற்றி ஆதவன் அவர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்லி இருப்பேன்.  எங்கள் வீட்டுத் தீபாவளி எப்படி இருக்கும் என்பதை படிக்க விரும்பினால் படிக்கலாம்.

புத்தகத்தில் படித்த  தீபாவளி கருத்துக்கள்  :-

புத்தகத்தில் படித்த  தீபாவளி கருத்துக்கள்  :-

ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு வரலாறு உண்டு. துலாமாத மகாத்மியத்தில் தீபாவளியைப் பற்றி குறிப்பிடும் போது “தையலே லட்சுமி! ஜல கங்கா” என்றுவருகிறது.அன்று எந்த இடத்தில்   குளித்தாலும்  கங்கையில் குளித்த பலன் என்று சொல்லப்படுகிறது. ஆதிகாலத்தில் தீபாவளியை ”எண்ணெய்த் திருவிழா ”என்றே குறிப்பிட்டார்களாம்.

தீப ஒளி வழிபாடு நம் பண்பாடு, இறைவன் இசையால் மகிழ்பவன். இசையின் மூலம் ஒலி  இசையாக மாற்றாமல் ஒலியையே இறைவனுக்கு சமர்ப்பிப்பது வெடி வழிபாடு. ஒளி வழிபாட்டோடு  ஒலி வழிபாடும் இறைவனுக்கு உகந்ததே! கோவில் திருவிழாக்களில் வெடி வெடித்தும் பல்வண்ண வாணவேடிக்கைகளும் இடம்பெறும்.

தீபாவளி என்பது இறைவனுக்கு நாம் செய்யும் ஒளி, ஒலி வழிபாடு. எண்ணெய்க் குளியல், புத்தாடை, பலவித பக்ஷணங்கள், பெரியவர்களிடம்
 ஆசி பெறுதல், வெடி வெடித்தல், மத்தாப்பு கொளுத்துதல், ஆலயம், செல்லுதல், அனைத்தும் தீபாவளி கொண்டாட்டங்களில் இருப்பதால் அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கும் பண்டிகை..

பெரியவர்களிடம் ஆசி பெறுதல் எனும்போது என் மாமனார் அவர்களின்  நினைவு வந்து விட்டது.  முன்பு எல்லாம் அவர்கள் கடிதம் எழுதும் போது ”தீபாவளிக்கு முன்னதாக  வந்து சேருங்கள் ”என்று எழுதுவார்கள். போன தீபாவளிக்கு மகனுடன் அவனது ஊரில் கொண்டாடியதால்  கோவையில்  இருக்கும் மாமாவிடம் ஸ்கைப் மூலம்  ஆசி பெற்றோம். இந்த வருடம் தெய்வமாக இருந்து அனைவருக்கும் ஆசி வழங்குவார்கள். அவர்கள் ஒவ்வொரு தீபாவளிக்கும் மாமா கொடுக்கும் பணத்தைப் பத்திரமாக வைத்து இருக்கிறேன்.

மகன், மருமகள் பேரனுடன் கொண்டாடடிய போன தீபாவளியை நினைத்து மகிழ்ந்து கொண்டு இருக்கிறோம் இப்போது.   குழந்தைகள் வரும் நாளே தீபாவளிப் பண்டிகை  போல் மகிழ்ச்சி தரும் நாள்.

காலையில் இறைவனை வழிபட்டு,  தீபாவளி மருந்து சாப்பிட்டு விட்டு,  பின் பலகாரங்கள் சாப்பிட்டு,  வாணங்களைக் கவனமாய்  வெடித்து, மகிழ்ச்சியாக தீபாவளியைக் கொண்டாடி மகிழுங்கள்.

அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்!

                 வாழ்க வையகம்! வாழ்க வையகம்!    வாழ்க வளமுடன்!
-------------------------------------------------------------------------------------------------------------------------


34 கருத்துகள்:

 1. அன்பின் கோமதி மா,
  வாழ்க வளமுடன்.

  எங்கள் ப்ளாக் பதிவு உண்மையிலேயே
  என் நினைவுகளையும் தொடர வைத்தது.
  பிறகு அதிலேயே மூழ்கி விட்டேன்,
  எழுதத் தோன்றும்போதுதான் எழுத வேண்டும்.

  உங்கள் தந்தை நினைவு கண்டிப்பாக வரும்
  என்றே நினைத்தேன்.
  அதுவும் சார் இல்லாமல் வரும் முதல் தீபாவளி.
  எத்தனை நினைவுகளைத் தான் நாம் தாண்டி
  வருவோமோ என்று தெரியவில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்

   //எங்கள் ப்ளாக் பதிவு உண்மையிலேயே
   என் நினைவுகளையும் தொடர வைத்தது.
   பிறகு அதிலேயே மூழ்கி விட்டேன்,
   எழுதத் தோன்றும்போதுதான் எழுத வேண்டும்.//

   எழுத தோன்றும் போது எழுதுங்கள் நீங்கள் அருமையாக சொல்வீர்கள்.

   ஆமாம், தலை தீபாவளி என்றால் அப்பா நினைவுக்கு வராமல் இருக்க மாட்டார்கள்.

   இனி வரும் பண்டிகை மற்றும் குடும்ப விழாக்கள் அவர்கள் நினைவை சொல்லி கொண்டே இருக்கும்.

   நீக்கு
 2. நீங்கள் சொல்லி இருக்கும் எல்லா நிகழ்வுகளும் நம் எல்லோருக்கும்

  பொதுவாகவே இருக்கிறது.

  தந்தையும் அது போலவே தான்.
  சிவகாசிக்கே சென்று வாங்கி வந்து விடுவார்கள்.
  திருமங்கலம், ஸ்ரீவில்லிபுத்தூர் எல்லாம்
  பக்கம் தானே.
  பிறகு எல்லாமே நண்பர்களுடன் சேர்ந்து வாங்கி
  பகிர்ந்து கொள்வோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //நீங்கள் சொல்லி இருக்கும் எல்லா நிகழ்வுகளும் நம் எல்லோருக்கும்

   பொதுவாகவே இருக்கிறது.//

   அந்தக் கால நினைவுகள் எல்லோருக்கும் ஒன்றாகத்தான் இருக்கும் அக்கா.


   நாங்கள் சிவகாசியில் இருந்து இருக்கிறோம்.அப்பாவின் நண்பர்கள் வெடிகள், மத்தாப்புக்கள் கொண்டு வந்து கொடுப்பார்கள் எங்களுக்கு வித விதமாக வெடித்து மகிழ்ந்து இருக்கிறோம். அக்கம் பக்கம், மற்றும் உறவுகளுடன்.

   நீக்கு
 3. வெடிகளின் பட்டியல் அப்படியே அந்த நாட்களை நினைவில் கொண்டு வந்தது.

  முக்கியமாக ரயில் மத்தாப்பும், சாட்டையும்.

  ஆளுக்கு 10 ரூபாய்க்கு வாங்கினால் எக்கச் சக்கமாக
  இருக்கும்.
  சித்தப்பா குழந்தைகளும் வருவார்கள்.
  கொண்டாட்டம் தான்.

  அன்பின் கோமதி,
  நல்ல நினைவுகளைப் பதிப்பது மிக அருமை.

  அனுபவித்துப் படித்தேன்.
  வரும் நாட்கள் நல்லபடியாக இருக்க இறைவன் அருள்வான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //வெடிகளின் பட்டியல் அப்படியே அந்த நாட்களை நினைவில் கொண்டு வந்தது.

   முக்கியமாக ரயில் மத்தாப்பும், சாட்டையும்.//

   இப்போது எல்லாம் வித விதமாக பேர்கள் வைத்து வருகிறது.
   முன்பு நமக்கு தெரிந்தவை பொதுவானது.

   //ஆளுக்கு 10 ரூபாய்க்கு வாங்கினால் எக்கச் சக்கமாக
   இருக்கும்.//

   எனக்கு வில்லையே தெரியாது . வெடித்த நினைவுகள் மட்டுமே இருக்கிறது.
   என் அம்மாதான் வெடியில் இவ்வளவு காசு போட வேண்டுமா என்று கேட்பார்கள், ஆனால் பிள்ளைகள் மகிழ்ச்சியாக வெடிப்பதை மகிழ்ச்சியாக பார்ப்பார்கள்.

   இந்த நினைவுகள் முன்பு பதிந்தவைதான் அக்கா.

   //அனுபவித்துப் படித்தேன்.
   வரும் நாட்கள் நல்லபடியாக இருக்க இறைவன் அருள்வான்.//

   நீங்கள் அனுபவதித்துப்படித்தது மகிழ்ச்சி.
   உங்கள் வாழ்த்துக்கும், கருத்துக்கும் நன்றி அக்கா.

   நீக்கு
 4. உங்களது தீபாவளி அனுபவம் படிக்க ரசனையாக அமைந்திருந்தது.

  அந்தக் காலங்களைக் கண் முன் கொண்டுவந்துவிட்டீர்கள்.

  என்னவோ ... படிக்கும்போது அவருடைய 70 வயதில் என் அப்பா என்னிடம் சொன்னது நினைவுக்கு வருது. பல மைல்கள் நடந்திருக்கிறேன்.. ஏகப்பட்ட சாமான்கள் கடையிலிருந்து வீட்டிற்குச் சுமந்துகொண்டு வந்திருக்கிறேன். இப்போ உடலில் அசதி... கை விழுந்து போனதுபோல சக்தி போனதுபோல இருக்கு என்றார்.

  சென்ற நவம்பர் தீபாவளி படமா சாரோடது? உற்சாகம் தெரிகிறதே....

  இந்த்த தடவை தீபாவளிக்கு என்ன செய்தீர்கள், கொண்டாட்டம் இல்லாவிடினும்? சாரின் புகைப்படம் மனதைக் கலங்கடிக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்

   //உங்களது தீபாவளி அனுபவம் படிக்க ரசனையாக அமைந்திருந்தது
   அந்தக் காலங்களைக் கண் முன் கொண்டுவந்துவிட்டீர்கள்//

   நன்றி.

   அப்பா சொன்னது சரிதான். அந்தக்கால மனிதர்கள் நடக்க தயங்க மாட்டார்கள்.
   குடும்பத்திற்கு பார்த்து பார்த்து செய்து மகிழ்ந்தவர்கள் வய்தானபின் அதே போல உழைக்க முடியவில்லை என்றால் வருத்தம் வரும்தான்.

   //சென்ற நவம்பர் தீபாவளி படமா சாரோடது? உற்சாகம் தெரிகிறதே....//

   நான் தான் இரண்டு மாத்தாப்பு வைப்போம் என்று பிடிக்கச்சொல்லி வீடியோ எடுத்தேன், படம் எடுத்தேன். பிள்ளைகளுக்கு அனுப்ப என்று.

   ஒன்றும் செய்யவில்லை. இட்லி சுடச்சுட எடுத்த போது அவர்கள் ஒவ்வொரு தீபாவளிக்கும் சொல்வது நினைவுக்கு வந்தது. இலையை போட்டு பலகாரங்களை வைத்து கொண்டு இருக்கும் போது முதலில் சுடச்சுட இட்லி கொண்டு வாங்க என்று சொல்வது நினைவுக்கு வந்தது.இடலியும், குடமிளகாய் சட்னியும் செய்தாள் மகள்.

   தீபாவளி உடை அவர்கள் அணிந்து இருப்பது.   நீக்கு
 5. சார் வரைந்த ஓவியத்தை ரசித்தேன். எழுத விட்டுப்போய்விட்டது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சார் வரைந்த ஓவியத்தை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

   நீக்கு
 6. மிக இனிமையான நினைவுகள்..  எங்கள் பிளாக்கில் அவரவருக்கு பத்துவரி மட்டுமே பாகுபாடு செய்திருந்தேன்.  விளக்கமாக ஒவ்வொன்றாக நினைவில் கொண்டு வந்திருக்கிறீர்கள்.  திரி கிள்ளுவது எதற்கென்றால் சட்டெனப் பற்றவும், நமக்கு விலகி ஓடிவர நேரம் இருக்கவும்தான்.  சமயங்களில் பூவாணம் கூட வெடித்து பயமுறுத்தும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
   உங்கள் ப்ளாக் தான் என்னை என் நினைவுகளை பகிர வைத்தது.
   உங்களுக்கு நன்றி.

   // திரி கிள்ளுவது எதற்கென்றால் சட்டெனப் பற்றவும், நமக்கு விலகி ஓடிவர நேரம் இருக்கவும்தான்.//

   ஆமாம்.நீங்கள் சொல்வது போல் சில நேரம் பூவாணம் வெடித்துசிதறி பயமுறுத்தும்தான். வெடிக்கும் பூவாணம் மகன் ஊரில் இருக்கிறது அதுபோல தயார் செய்து இருக்கிரார்கள்.


   நீக்கு
 7. துணிகள் விஷயத்தில் அப்பா சட்டையையோ, அண்ணன் சட்டையோ நான் அணிந்ததில்லை.  சரியாய் இருக்காது.  என் அப்பா ஒரு தீபாவளி நாழிதான் தன் அப்பாவை இழந்ததால் அவர் தீபாவளிக்கு ட்ரெஸ் எடுத்துக் கொள்ள மாட்டார்.  இப்போது யோசித்துப் பார்த்தல் அவ தனக்கென்று எப்போது புது ட்ரெஸ் எடுத்தார் என்று நினைவில் தேடித்தான் பார்க்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கல்லூரி செல்லும் போது மகன் அவன் அப்பா போலவே இருந்தான். சார் ஒல்லியாக இருப்பார்கள். மகளும் அவள் அபாவும் போனால் உன் அண்ணாவா என்று கேட்பார்கள். அபாவுக்கும், மகனும் ஒரே அளவுதான் சட்டை ரெடிமேட் வாங்குவோம்.

   அப்பாவின் நினைவுகளை பகிர்ந்து கொண்டது நெகிழவு.

   நீக்கு
 8. எங்கள் வீட்டில் தீபாவளிக்கு முதல்நாள் தாத்தா திவசம் வரும். அதை முடிஹதுதான் பட்சணம் வேலைகளை ஆரம்பிப்பார் அம்மா.  திவச வேலைகளையும் முடித்து, பட்சண வேலைகளையும் செய்வது அம்மாவுக்கு எவ்வளவு கஷ்டம் என்று உணரத்தொடங்கிய காலம் முதல் நானும் உதவிக்கு இருப்பேன். அம்மியில் அரைத்துக் கொடுப்பது, வாணலியில் போட்டு எடுப்பது என்று அத்தனை எடுபிடி வேலைகளையும் செய்வேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அம்மாவுக்கு உதவியாக நீங்கள் இருந்ததை என் பதிவுகளின் பின்னூட்டத்தில் நீங்கள் சொல்ல கேட்டு இருக்கிறேன். அக்கா, தங்கைகள் எருந்தாலும் நீங்களும் உதவியது அம்மாவின் மேல் நீங்கள் வைத்து இருக்கும் பாசத்தை சொல்கிறது. அம்மாவுக்கு உதவியாக வாசலில் கோலம் கூட போட்டு இருக்கிறீர்கள் நீங்கள் .

   வீட்டில் உங்கள் மனைவிக்கும் உறுதுணையாக இருப்பீர்கள் அல்லவா?
   நல்ல மனிதர் நீங்கள்.
   நீக்கு
 9. சொல்லச் சொல்ல சொல்லிக்கொண்டே போகலாம் பழைய நினைவுகளை..   அதற்கு முடிவேது?  நிச்சயமாய் அந்தக் காலம் போல இனி வராது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்கள் சொல்வது போல நினைவுகளை சொல்லி கொண்டே போகலாம்.
   அதற்கு முடிவு இல்லை. அந்தக்காலம் இனி எப்படி வரும்?
   நினைவுகள் இருகட்டும் என்றும் நம்முடன்.

   உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. என் நினைவுகளை பதிய வைத்தமைக்கு நன்றி நன்றி.

   நீக்கு
 10. சிறு வயதில் துவங்கி தலை தீபாவளியை விவரித்து தற்போதைய தீபாவ்ளிக் கொண்டாட்டங்களை விவரித்து, என்று கட்டுரை நன்றாக உள்ளது. 

  எழுதத் தெரிந்தவர்களுக்கு தலைப்பு முக்கியமில்லை. எந்தத்  தலைப்பிலும் அவர்களுக்கு எழுத விவரங்கள் கிடைக்கும் என்பதை உறுதி செய்கிறது கட்டுரை.

   Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஜெயக்குமார் சார், வாழ்க வளமுடன்
   தீபாவளி நினைவுகள் என்று சொல்லும் போது எல்லா நினைவுகளும் வருகிறதே!

   பதிவு உங்களுக்கு பிடித்து இருப்பது அறிந்து மகிழ்ச்சி.

   உங்கள் பாராட்டுக்கும், அன்பான கருத்துக்கும் நன்றி.   நீக்கு
 11. தீபாவளி நினைவுகள் அருமை... வாழ்த்துகள் அம்மா...

  "இதுவும் ஒரு நாள் - கடந்து போய் விட்டது" எனும் எண்ணம் சில வருடங்களாக... ம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்

   //"இதுவும் ஒரு நாள் - கடந்து போய் விட்டது" எனும் எண்ணம் சில வருடங்களாக...

   ம்...//


   ஆமாம், பண்டிகைகள் அப்படித்தான் நினைப்பை கொண்டு வருகிறது.
   உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

   நீக்கு
 12. தீபாவளி நினைவலைகள் அருமை அவை பொற்காலமே... இனிமேல் வராது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
   நீங்கள் சொல்வது சரி அந்த காலம் பொற்காலம்தான் ஜி.
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 13. பதில்கள்
  1. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார்.
   வாழ்த்துக்களுக்கு நன்றி.

   நீக்கு
 14. தீபாவளி நினைவுகளை மிக அழகாக பகிர்ந்து கொண்டிருக்கிறீர்கள். உங்கள் தந்தை பற்றிய நினைவுகள் நெகிழ்ச்சி! சார் வரைந்திருக்கும் படம் சிறப்பாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் பானுமதி வெங்கடேஷ்வரன், வாழ்க வளமுடன்

   //தீபாவளி நினைவுகளை மிக அழகாக பகிர்ந்து கொண்டிருக்கிறீர்கள்.//

   நன்றி.

   தந்தையை தீபாவளி, கார்த்திகை சோமாவாரம் நினைக்காமல் இருக்க முடியாது.
   தாய், தந்தை, என் கணவர் மூவரும் கார்த்திகை மாதம் இறைவனிடம் சென்றுவிட்டார்கள். எப்போதும் நினைவுகளில்.

   //சார் வரைந்திருக்கும் படம் சிறப்பாக இருக்கிறது.//

   நன்றி.

   உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.


   நீக்கு
 15. மிக அழகாக அந்நாளைய தீபாவளி நிகழ்வுகளை பதிவில் கொண்டு வந்திருக்கின்றீர்கள்..

  ஐயாவைப் பற்றிச் சொல்லியிருக்கின்றீர்கள்..
  என் மனமும் கனக்கின்றது..

  வாழ்ந்த வாழ்க்கை மகத்துவம் என்று அமைதி கொள்வதைத் தவிர வேறு வழியும் உளதோ..

  நலம் வாழ்க என்றென்றும்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்

   ஒவ்வொரு தீபாவளி அன்றும் அந்நாளைய தீபாவளி நிகழ்வுகளை நினைக்காமல் இருக்க முடியாது.

   //வாழ்ந்த வாழ்க்கை மகத்துவம் என்று அமைதி கொள்வதைத் தவிர வேறு வழியும் உளதோ..//

   ஆமாம், அமைதி கொள்ளத்தான் வேண்டும்.
   எங்கள் அனைவருக்கும் எப்போதும் உறுதுணையாக இருக்க வேண்டும், தெய்வமாய் வழி நடத்த வேண்டும் .
   உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

   நீக்கு
 16. வணக்கம் சகோதரி

  பதிவு அருமையாக உள்ளது. உங்கள் தீபாவளி கட்டுரை உங்கள் படிப்படியான நினைவுகளுடன் நன்றாக உள்ளது. சின்ன வயதில் நாம் எப்படி இருந்தோமென உங்கள் கட்டுரை ஒவ்வொரு வரியிலும் நினைவுக்கு கொண்டு வருகிறது. தீபாவளிக்கு நாளை எண்ணிக் கொண்டு காத்திருப்போம் . அந்நாளைய வெடிகளையும், அதை வெடிக்கும் முறைகளையும் நீங்கள் குறிப்பிட்டு கூறியதும் நானும் அந்த நாளைக்கே போய் விட்டேன். மிக அருமையாக எழுதியிருக்கிறீர்கள். எ.பியில் என்னுடையதிற்கு பதிலாக இந்தக் கட்டுரை வந்திருக்கலாம். அந்தளவிற்கு அழகாக உள்ளது. ரசித்துப் படித்தேன். நான் தாமதமாக வந்து படிப்பதற்கு வருந்துகிறேன். சுற்றங்களின் வரவால், நேரம் சரியாக இருந்தது அதனால்
  அன்றே வர இயலவில்லை.

  நீங்கள் உங்கள் அப்பாவின் நினைவுகளை பகிர்ந்தது வருத்தமாக உள்ளது. என் அப்பாவும், தன் பேத்தியின் (என் மகள்) ஆண்டு நிறைவு விழாவிற்கு (தீபாவளி முடிந்தவுடன் வரும்) சென்னை வந்திருந்தார். அது வரை வராதவர் தன் பேத்திக்காக தீபாவளிக்கே வந்திருந்து இங்கேயே எங்களுடன் கொண்டாடி பிறந்த நாள் விழாவையும் நடத்தி வைத்தார். அவரை ஊருக்கு மறுபடியும் வழியனுப்ப எக்மோருக்கு நானும் என் கணவருடன் சென்றிருந்தேன். அன்றுதான் நான் கடைசியாக கண்ணில் நீருடன் அவரைப் பார்த்தது.பிறந்த நாள் விழா முடிந்து சென்னையிலிருந்து அவர்கள் ஊருக்கு (தி. லி) சென்ற பதினைந்தாவது நாள் இரவு தீடிரென அவர் மறைவு செய்தி வந்ததும் மனம் கலங்கி விட்டேன். இன்றும் தீபாவளி வந்தால் இதே நினைவுதான். என்னவோ.. நம் அப்பாக்களின் நினைவுகள் ஒன்றாய் அமைந்திருக்கிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கம்லா ஹரிஹ்ரன், வாழ்க வளமுடன்
   வீட்டில் உறவினர் வருகை என்று சொன்னீர்கள் அவர்கள் இருக்கும் போது எப்படிபதிவுகளுக்கு வந்து பின்னூட்டம் போட முடியும்.
   பரவாயில்லை வருத்தப்பட வேண்டாம்.
   உங்கள் கட்டுரை மிக அருமையாக இருந்தது.
   ரசித்து படித்து கருத்து சொன்னதற்கு நன்றி.


   உங்கள் அப்பாவின் நினைவுகளை பகிர்ந்து கொண்டது நெகிழ்வு.
   நினைவுகள் ஒன்றாய் அமைந்து இருக்கிறது!
   நீங்கள் எழுதி இருப்பதை படிக்கும் போது மனது வேதனைபடுகிறது.

   நீக்கு
 17. இனிய நினைவலைகள். ஒவ்வொன்றையும் நினைவு கூர்ந்து அருமையாகப் பகிர்ந்துள்ளீர்கள்.
  அனைவருக்கும் நல்வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
   உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

   நீக்கு