வெள்ளி, 26 நவம்பர், 2021

நன்றி சொல்ல வேண்டும் இறைவனுக்கு!

                            

           அன்பான கணவர் பேரனுடன். மகன் அனுப்பிய படம்

வெளி நாட்டில் நன்றி தெரிவிக்க ஒரு நாள் வைத்து இருக்கிறார்கள். நம் நாட்டு தை பொங்கல் போன்ற நாள்.

உறவுகளுடன் கொண்டாடும் நாளாம். விடுமுறை நாள் அவர்களுக்கு.

Happy Thanksgiving

🦃 🍁 Day Aachi!

பேரன் எனக்கு சொல்லி இருக்கிறான் இன்று.


பேரன் "வாழ்க்கை என்றால் என்ன தெரியுமா ஆச்சி" என்று கேள்வி கேட்டு விட்டு பதிலை அவனே சொல்வான். நன்றி சொல்வது தான் என்பான்.

நானும் இன்று நன்றி சொல்லி கொள்கிறேன்.

என் கணவர் என்னை விட்டு பிரிந்த இந்த ஒரு வருட காலத்தில் எனக்கு உறுதுணையாக இருக்கும் என் பிள்ளைகள், பேரன்கள், பேத்தி, மற்றும் நண்பர்கள், உறவினர்கள், இருபக்க உடன்பிறந்தவர்கள் என்று எல்லோருக்கும் நானும் இன்று நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

நேற்று உறவுகள் என் கணவரின் நினைவுகளை பகிர்ந்து கொண்டார்கள்.

நட்புகள் பேசினார்கள். நெகிழ்ந்து போனேன்.
அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றி.


என் கணவரின் அண்ணா பிறந்த நாள் விழாவிற்கு திரு. சுகிசிவம் அவர்கள் பேச வந்து இருந்தார்கள் அவர்கள் அண்ணாவின் நண்பர். எங்கள் குடும்ப விழாவில் எல்லாம் கலந்து கொள்வார்கள். மாமாவின் 80 வது பிறந்த நாளுக்கு பேசினார்கள் அதை குறிப்பிட்டு அவர்களை பேச அழைக்கும் சிறிய காணொளி.

மாமனார் அவர்களின் "பொன்முழுக்கு" விழாவில் கணவரின் இன்னொரு அண்ணன் அவர்கள் தயார் செய்த பாடல்பெற்ற "சிவதலவழிகாட்டி" புத்தக வெளியீட்டு விழாவில் பேசியது.


காணொளிகளும் படங்களும் என் கணவரின் தம்பி பகிர்ந்து கொண்டது எங்கள் குடும்ப வாட்ஸ் அப் குழுவில்.


முகநூலில் என் கணவரின் தங்கை( சித்தப்பா மகள்) எழுதி இருக்கிறார்:-


“ஓராண்டு அதுக்குள்ள ஓடிப்போச்சு....”🌹
‘நேற்றிருந்தவர் இன்றில்லை ‘என்ற பெருமை சூழ்
உலகில் இருக்கிறோம். குடும்பத்தில் ஒரு இழப்பு
என்றுமே காலியிடமாகவே உள்ள நிலையில் மனதை
தைரியப்படுத்திக் கொண்டு தான் நாட்களை
நகர்த்த வேண்டியுள்ளது.என் அன்பு அண்ணன்
திரு.அ.திருநாவுக்கரசு (கல்லூரிப் பேராசிரியர் -தமிழ்)
அவர்கள் நினைவு தினம் இன்று.
சிறு வயது நினைவுகள், கல்லூரி கால நினைவுகள்,
திருமண கால நினைவுகள்,குழந்தைகளின் வரவிற்குப்
பின்னான நிகழ்வுகள்,கோவிலுக்குச் சென்று மகிழ்ந்த
நினைவுகள் என்று பலவகைகள் இருக்கலாம்.
இரண்டரை ஆண்டுகளுக்கு முன் மே 1ஆம் தேதி
மதுரை சென்று இருந்தேன்.மருமகளின் தங்கையின்
திருமணம் என்பதால் முதல்நாள் மதியம் வருவதாக
போனில் தெரிவித்தேன். என் அண்ணியும் மதிய
உணவைத் தயாரித்துக் கொண்டு இருந்தார்கள். நான் சிம்பிளாகச் செய்யச் சொல்லியும் விருந்து மாதிரி
தயாரித்து விட்டார்கள்.மதினியோடு (திருமதி.கோமதி அரசு )பேசிக்கொண்டே வீட்டைச்சுற்றிக் காண்பித்து
சமையல் முடிந்தவுடன் சற்றுநேரம் திருநாவுக்கரசு அண்ணனிடம் பேசிக்கொண்டு,சிரித்துக் கொண்டு
இருந்தோம்.
அருமையான
சமையலைச்
சாப்பிட்டு விட்டுப் பேசிய விசயங்கள்..! எத்தனையோ
நினைவுகளை அசைபோட்ட நிலையில் இன்றும் நினைவில் உள்ளது .

இவர் தம் வாழ்நாளில் எழுதிய புத்தகங்கள் என்றும் இவர் நினைவில்..!
அதற்கப்புறம் ஓரிரு நிகழ்வுகளில் சிறிது நேரம்
பேசிக்கொண்டு பிரிந்த நாட்கள் தான் அதிகம்.
எந்த ஒரு விசேஷத்திற்கும் தவறாமல் கலந்து
கொள்வார்.விசயங்களை நிதானமாகச் சொல்வார்.
சிறந்த பக்திமான்.உறவுகளை என்றுமே நேசிப்பவர்.
ஆச்சி,அத்தைகள் என்றால் ரொம்பப் பிரியம்.அவர்
கல்லூரியில் வேலை பார்த்தபோது (திருமணமாகாத நிலையில் )பொங்கிப்போட்ட நிகழ்வுகளில் கணபதி ஆச்சியின் அன்பு ,சிக்கனமான வாழ்வு முறை,சமையல்
கைமணத்தை நினைவு கூர்வார்.குருமலை அத்தை,
தென்காசி அத்தையின் பேரன்பில்,கைமணத்தில்
ரசனை கண்டவர். எப்பவும் கோவை வந்தால்
என்னைப் பார்க்காமல் செல்ல மாட்டார்.அழகான
கையெழுத்துக்கு சொந்தக்காரர்.ஓவியத்தில்,களிமண்
சிலை செய்வதில் கைதேர்ந்தவர்.சரஸ்வதி பூஜை
பொம்மைகள் இவர் கைவண்ணத்தால் மிளிரும்.
ஒவ்வொரு நாளும் அந்த இன்பநாட்களை தனியாக
மதினியை நினைக்க வைத்துப் பிரிந்து செல்ல
உங்களால் எப்படி முடிந்தது.? காலனே ..!கடிகார முள்
பார்த்து எதையும் திட்டமிட்டு செய்யும் ,அவர்வாழ்க்கை அட்டவணையில் சிவப்புக்குறியை நீஏன் வரைந்தாய்..?ரசனையால் தன் காலத்தை நகர்த்தியவரை
கவர்ந்து செல்ல உன்னால் எப்படி முடிந்தது..?
பெரியவர்கள் வழங்கிய நற்சொல்,நல்லாசிகள் என்றும் உண்டு என்பார்களே..?
இப்படி எத்தனையோ கேள்விகள்..? காலமே நீ பதில் சொல்லு....அது வரை
நினைவுகளில் உயிர் கொடுப்போம்.🙏🏻


//சென்ற நவம்பரில் இறையடி இணைந்த அன்பு கோமதி அரசுவின் கணவருக்கு
அஞ்சலிகள்.
அன்பின் கோமதி கலக்கங்கள் நீங்கி தன் மக்களோடு
அமைதிவாழ்வு பெற இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.//

வல்லி அக்கா தன் பதிவில் என் நலனுக்கு பிரார்த்தனை செய்து இருக்கிறார்கள்.
அக்காவிற்கு நன்றி.

நல்ல உறவுகளை, நட்புகளை கொடுத்த இறைவனுக்கும் நன்றி.
வாழ்க வளமுடன்.வாழ்க வையகம் ! வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன்.

--------------------------------------------------------------------------------------------

38 கருத்துகள்:

 1. ஸாரின் தங்கை எழுதி இருப்பது நெகிழ்ச்சி.  அவரின் ஆளுமைகளையும், அன்பையும், திறமைகளையும் சொல்லி பிரிவுத் துயரைப் பகிர்ந்திருக்கிறார்.  ஆடியோ இரண்டும் கேட்டேன்.  எவ்வளவு திறமைகள், எவ்வளவு அன்பு ஒரு கணத்தில் முடக்கப்பட்டிருக்கிறது இறைவனால்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
   என் நாத்தனார் பள்ளியில் தமிழ் ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர்.
   மிகவும் அன்பானவர்.ஸார் சிறு வயதில் விடுமுறைக்கு இவர்கள் வீட்டுக்குதான் அடிக்கடி போவார்கள். சித்தி அம்மாவின் தங்கை.சித்தப்பா அப்பாவின் தம்பி. இரண்டுபேரும் நெருங்கிய உறவு.

   என்னிடமும் இவர்கள் மிகவும் பிரியமாக இருப்பார்கள்.
   விழாக்களில் சந்தித்து கொண்டால் மிகவும் மகிழ்ச்சியாக உரையாடுவார்கள். சிரிப்பு வெடிகள் அரங்கை நிறைக்கும். இவர்கள் அண்ணனும் கழுகுமலையில் விளையாடிய காலங்களை பகிர்ந்து இருக்கிறார்கள். பதிவு நீண்டு விடும் என்று பகிர வில்லை.
   சார் பாடும் பாடல்கள், ஓவியம் பற்றி அவர்களும் சொல்லி இருக்கிறார்கள்.

   நீக்கு
 2. ஒருவருக்கொருவர் நன்றி சொல்வதில்தான் வாழ்க்கையின் மகிழ்ச்சியே இருக்கிறது.  அதை உங்கள் பேரன் இப்போதே புரிந்து கொண்டிருப்பது வளமான எதிர்காலத்தைக் கொடுக்கும்.  தாத்தாவின் ஆசியும் பேரனுக்கு எப்போதும் இருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //ஒருவருக்கொருவர் நன்றி சொல்வதில்தான் வாழ்க்கையின் மகிழ்ச்சியே இருக்கிறது.//

   ஆமாம் , ஸ்ரீராம். நீங்கள் சொல்வது உண்மை. என் சித்தி ஒருவர் (சித்தப்பா மனைவி)
   எல்லாவற்றுக்கும் தேங்க்ஸ் என்று சொல்வார். என் ஆச்சி கேலி செய்வார்கள் பேபி ஆ, ஊ என்றால் தேங்கஸ் சொல்கிறாள் என்று. அவர்கள் அதற்கும் தேங்கஸ் சொல்வார்கள்.
   நான் அவர்களை பார்த்துதான் மெளனம் இருக்க கற்றுக் கொண்டேன். மெளன் விரதம் பதிவில் அவர்களுக்கு நன்றி சொல்லி இருப்பேன்.


   //அதை உங்கள் பேரன் இப்போதே புரிந்து கொண்டிருப்பது வளமான எதிர்காலத்தைக் கொடுக்கும். தாத்தாவின் ஆசியும் பேரனுக்கு எப்போதும் இருக்கும்.//

   உங்கள் வாக்கு பலிக்கட்டும்.
   நீக்கு
 3. வெவ்வேறு வயதில் அவர் இருக்கும் படங்களின் கொலாஜ் அருமை.  குடும்பக் குழுவில் பகிர்ந்திருந்ததை எங்களுடனும் பகிர்ந்து கொண்டதற்கு மகிழ்ச்சி கோமதி அக்கா.  

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //வெவ்வேறு வயதில் அவர் இருக்கும் படங்களின் கொலாஜ் அருமை//

   சாரின் தம்பி பகிர்ந்த படம் தான்.

   நானும் நிறைய பழைய படங்களை, நினைவுகளை பகிர்ந்து கொண்டு உறவுகள், நட்புகளுடன் பேசினேன் நேற்று முழுவதும் .

   உங்கள் கருத்துக்களுக்கு நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 4. திரு அரசு சார் அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த அஞ்சலிகள். என்றென்றும் அவர் நினைவுகள் உங்களை மகிழ்ச்சியும் அமைதியும் அடைய வைக்கட்டும். அதே போல் உங்கள் குழந்தைகள், பேரன், பேத்தி, மற்றும் அனைத்து உறவுகளும் உங்களுக்குத் துணையாகப் பாதுகாப்பாக என்றென்றும் இருக்கவும் பிரார்த்தனைகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்

   //திரு அரசு சார் அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த அஞ்சலிகள். என்றென்றும் அவர் நினைவுகள் உங்களை மகிழ்ச்சியும் அமைதியும் அடைய வைக்கட்டும்.//

   நீங்கள் சொன்னது போல் நினைவுகள் மகிழ்ச்சியை , மன அமைதியை தரவேண்டும்.
   உங்கள் கருத்துக்கும் பிரார்த்தனைகளுக்கு நன்றி.
   நீக்கு
 5. அன்பின் கோமதி,

  வாழ்க வளமுடன்.
  என்றுமே நினைவை விட்டு நீங்காத உறவு,
  காணொளிகள் மிக மிக அருமை.

  இத்தனை சிறப்புகள் சேர்ந்த மனிதரோடு
  நீங்கள் இருந்த காலங்கள் பொன்னானவை.
  சாரின் தம்பி பகிர்ந்திருக்கும் படங்கள் மிகத் தெளிவு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்.

   //என்றுமே நினைவை விட்டு நீங்காத உறவு,//
   ஆமாம் அக்கா.

   //இத்தனை சிறப்புகள் சேர்ந்த மனிதரோடு
   நீங்கள் இருந்த காலங்கள் பொன்னானவை.//

   ஆமாம். நிறைய கற்று கொண்டு இருக்க வேண்டும் அவர்களிடம். வாய்ப்புகளை தவறவிட்டவள்.

   எங்கள் கல்யாண நாளை, என் பிறந்த நாளை எல்லாம் நினைவு வைத்து கொண்டு வாழ்த்துவீர்கள். அது போல சாரின் நினைவு நாளுக்கும் என் நலனுக்கு பிரார்த்தனை செய்து கொண்டதற்கு நன்றி அக்கா.

   காணொளிகளை கேட்டது மகிழ்ச்சி.

   நீக்கு
 6. திரு அரசு சார் அவர்களுக்கு எனது ஆத்மார்த்தமான அஞ்சலிகள்.

  துணையின் பிரிவு எவ்வளவு வேதனையை கொடுக்கும் என்பதை முழுமையாக அறிந்தவன் நான்.

  ஒலியலை இரண்டும் கேட்டேன், அவரது சகோதரியின் இரங்கட்பா படித்து மனம் கனத்து விட்டது.

  இறைவனின் தீர்ப்பை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டியதுதான்.

  தங்களது மன அமைதிக்கு எனது பிரார்த்தனைகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
   அஞ்சலிகளுக்கு நன்றி.

   துணையின் பிரிவு எவ்வளவு வேதனையை கொடுக்கும் என்பதை முழுமையாக அறிந்தவன் நான்.//

   வாழ்கை துணையின் பிரிவு நாம் வாழும் காலம் வரை வேதனை கொடுக்கும் தான்.

   //ஒலியலை இரண்டும் கேட்டேன், அவரது சகோதரியின் இரங்கட்பா படித்து மனம் கனத்து விட்டது.//

   அண்ணன் மேல் மிகவும் அன்பு உடையவர்.

   //இறைவனின் தீர்ப்பை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டியதுதான்.//

   ஆமாம்.

   உங்கள் கருத்துக்கும், பிரார்த்தனைகளுக்கும் நன்றி ஜி.

   நீக்கு
 7. குடும்ப உறவுகள் சிறப்பு... என்றும் அவர் உடன் இருப்பார்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
   ஆமாம், என்றும் உடன் இருப்பதாகத்தான் நினைத்து கொண்டு இருக்கிறேன்.

   உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 8. மனதுக்கு கஷ்டமான பதிவு.

  அனைவரும் மகிழ்ச்சியோடு நினைவுகொள்ளும் ஒரு ஆத்மா.... திடீர் கயிலாய பயணம்.. ரொம்பவே மனவருத்தம் தரும். ஒரு வருடம் ஆகிவிட்டதா? பல பதிவுகளில் படம் வரைந்து அதனை நீங்கள் பகிர்ந்து கொள்வீர்களே... அவ்வப்போது செல்லும் கோயில்விஸிட்களை படம் எடுத்து பகிர்வீர்களே.. உங்கள் மாமா நெடிய ஆயுளைக்கொண்டவர். அவர் வம்சத்தில் இப்படி எப்படி நிகழ்ந்தது.

  படங்கள் அனைத்துமே சாரை நினைவுபடுத்துகின்றன.

  காணொளியைப் பார்க்கிறேன்.

  நேற்றிருந்தார் இன்றில்லை என்பதெல்லாம் உண்மைதான். அதனை digest செய்துகொள்வது கடினம்.

  அவர் இன்னொரு அறையில் இருக்கிறார்... இல்லை வெளியூர் போயிருக்கிறார் என்ற நினைப்புடன் இருந்தால்தான் மனது வேதனை பட்டுக்கொண்டு இருக்காது.

  தங்களுக்கு அந்த மன தைரியத்தை அவரே வழங்குவார்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் நெல்லைத தமிழன், வாழ்க வளமுடன்

   //அனைவரும் மகிழ்ச்சியோடு நினைவுகொள்ளும் ஒரு ஆத்மா.//...

   அனைவரிடமும் புன்னகை பூத்த முகத்தோடு உரையாடுவார்கள்.
   அவரை நினைவு கொள்ளுபவர்கள் எல்லோரும் புன்சிரிப்பை தான் சொல்வார்கள்.
   அண்ணன், தம்பி, உறவுகளுடன் இருக்கும் போது சத்தமாக சிரிப்பது அவர்கள்தான்.
   அம்மா இறந்ததிலிருந்து அவர்கள் டல்லாகி விட்டார்கள்.

   //திடீர் கயிலாய பயணம்.. ரொம்பவே மனவருத்தம் தரும். ஒரு வருடம் ஆகிவிட்டதா? பல பதிவுகளில் படம் வரைந்து அதனை நீங்கள் பகிர்ந்து கொள்வீர்களே... அவ்வப்போது//

   டிசம்பர் 14ம் தேதி அவர்கள் திதி வருகிறது. நவம்பர் 25 கயிலை சென்ற தினம்.

   நிறைய பதிவுகளுக்கு படம் வரைந்து தர கேட்டு இருக்கலாம், அவர்கள் புத்தகங்கள் எழுதி கொண்டு இருந்தார்கள். ஆராய்ச்சி கட்டுரை எழுதி அனுப்பி கொண்டு இருந்தார்கள். பிஸியாக இருப்பதால் தொந்திரவு வேண்டாம் என்று விட்டு விட்டேன்.

   அவர்கள் அத்தைகள், ஆச்சிகள், அம்மா, அப்பா எல்லோரும் அதிக காலம் வாழ்ந்தவர்கள்தான்.
   இவர்கள் 70ம் வயதிலேயே எனக்கு இவ்வளவுதான் என்று கைரேகை பார்த்து சொல்லி கொண்டு இருந்தார்கள், இரண்டு வருடம் அதிகமாய் இருந்து விட்டார்கள். நீ அதிக காலம் இருப்பாய், நான் இருக்க மாட்டேன் வெகு காலம் என்பார்கள். நீங்கள் இல்லாமல் நான் இருக்க முடியாது என்று வசனம் பேசினேன், இருக்கிறேன் இன்னும்.


   //அவர் இன்னொரு அறையில் இருக்கிறார்... இல்லை வெளியூர் போயிருக்கிறார் என்ற நினைப்புடன் இருந்தால்தான் மனது வேதனை பட்டுக்கொண்டு இருக்காது.//

   மகனும், மற்ற உறவினர்களும் நீங்கள் சொல்வது போல தான் சொல்கிறார்கள், அந்த நினைப்புகளுடன் மிகுதி நாட்களை வாழ பழக வேண்டும்.

   இறைவனும், அவர்களும் அதற்கு உதவுவார்கள் என்று நம்புகிறேன்.

   தங்களுக்கு அந்த மன தைரியத்தை அவரே வழங்குவார்//

   அன்றே அந்த தைரியத்தை தந்தார்கள், எப்படி அக்கம் பக்கத்தில் உதவிக்கு அழைத்தேன், பிள்ளைகளிடம் பேசினேன், உறவினர்களுக்கு பக்கத்தில் உள்ளவர்களிடம் அவர்கள் போன் நம்பர் கொடுத்து பேச சொன்னேன் என்று இன்று நினைத்தாலும் திகைக்க வைக்கிறது.
   நீக்கு
  2. உங்கள் பதில் மனதைத் தொடுகிறது.

   நீக்கு
  3. மீண்டும் வந்து கருத்து சொன்னதற்கு நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 9. இருந்தபோதிலும் பேரனுடன் அவர் செலவழித்த நேரங்கள்... பேரனுக்கு அவர் நினைவை என்றும் வைத்திருக்கும்.

  சாரின் தங்கை அவர்கள் எழுதியது மனதைத் தொட்டது. அவர் அப்பாவைப்போல் 90+ வயது இருந்து சென்றிருக்கலாம் (அவர் அப்பா கடைசிவரை ஆரோக்கியமாக இருந்தார் என்றே நினைக்கிறேன்)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //இருந்தபோதிலும் பேரனுடன் அவர் செலவழித்த நேரங்கள்... பேரனுக்கு அவர் நினைவை என்றும் வைத்திருக்கும்.//

   பேரன் இன்றும் தாத்தாவாக ஒரு பொம்மையை வைத்து கொண்டு விளையாடுகிறான்.
   ஏன் இரண்டு தாத்தாவும் சீக்கீரம் போய் விட்டார்கள் என்று கேட்பான். அவன் அம்மாவின் அப்பாவை பார்த்தது இல்லை. 60 வயதில் அவர்கள் இறைவனடி சென்று விட்டார்கள்.

   சாரின் தங்கை மிகவும் அன்பாய் இருப்பார் அண்ணனிடம். ஒவ்வொரு தீபாவளிக்கும் உருளை போண்டா செய்து வருவாள் பெரியம்மாவீட்டுக்கு, எல்லா அண்ணனுக்கும் அது பிடிக்கும் என்று. போன தீபாவளிக்கு தன் தங்கை நினைத்து கொண்டு பேசினார்கள். போண்டா செய் என்று என்னை கேட்டார்கள், அப்படி அதை செய் இதை செய் என்று கேட்காதவர்கள் சோமாஸி, போண்டா கேட்டார்கள். செய்தேன்.அதை எல்லாம் நினைத்தால் கண்ணீர் கண்ணை மறைக்கிறது.

   மாமா சிறு வயதில் அல்சர், ஆஸ்துமா வந்து கஷ்டபட்டு இருக்கிறார்கள். அப்புறம் முதுமை மட்டுமே ! நோய்கள் இல்லை.

   105 வயது வாழ்ந்தார்கள்.

   உங்கள் ஆறுதலான கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 10. மனம் கனத்து விட்டது. உங்கள் பதிவை சரியாக படிக்க முடியவில்லை. கண்கள் கலங்குகின்றன. அம்மாவை கவனமாக அன்புடன் பார்த்துக்கொள்ளும் உங்கள் மகனைத்தான் மனம் நிறைய வாழ்த்துகிறேன். அவர் பல காலம் நிறைந்த செளபாக்கியங்களுடன் நலமாக அவர் குடும்பத்துடன் மகிழ்ந்திருக்க வேண்டும்.
  காலம் உங்கள் மனப்புண்ணை ஆற்றவேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் மனோ சாமிநாதன், வாழ்க வளமுடன்
   மகனுக்கு மனம் நிறைய வாழ்த்துக்கள் சொன்னதற்கு நன்றி.

   //அவர் பல காலம் நிறைந்த செளபாக்கியங்களுடன் நலமாக அவர் குடும்பத்துடன் மகிழ்ந்திருக்க வேண்டும்.//

   உங்கள் ஆசீர்வாதங்களுக்கு நன்றி.

   இறைவனின் கருணையால் அன்பான சொந்தங்கள், நட்புகள் மனபுண்ணை ஆற்றும் நல் மருந்தாக இருக்கிறது. உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 11. வணக்கம் சகோதரி

  உங்கள் பதிவை படித்ததும், மனம் கலங்கி விட்டேன்.நேற்று என்னால் வலைப்பக்கம் வர இயலவில்லை. உங்கள் நாத்தனாரின் கட்டுரை மனதை நெகிழ வைத்து விட்டது. உங்கள் கணவரின் உறவினர்கள் அவரின் நல்ல செயல்களை மறக்காது, அவர் இழப்பிற்கு பெரிதும் வாடுவதை காணும் போது கண்களில் கண்ணீர் வருகிறது.

  காணொளிகளும், குடும்ப வாட்சப் போட்டோகளும் கண்டேன். உங்கள் பேரனின் நல்ல எண்ணங்களுக்கும் பழக்கங்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். இதையெல்லாம் இன்னும் சிலகாலம் இருந்து பார்த்து உங்கள் கணவர் சந்தோஷமடைந்திருக்கலாம்...
  என்ன செய்வது? என்றுமே விதியின் ஆற்றலை நாம் புறக்கணிக்க இயலாமல் இருக்கிறோமே...

  எனக்கும் திருக்கார்த்திகை தீபத்திருநாள் வரும் போது உங்கள் நினைவு வந்து மனம் வருத்தமாக இருந்தது. ஆனால், குறிப்பிட்ட நாள் நினைவிலில்லை. விதி வழியே நாம் செல்லுமாறு இறைவன் நம் எல்லோரையும் படைத்துள்ளான். ஆனால், இந்த நினைவுகளை நம்முடன் கூடவே அசை போடும் திறனையும், அளவுக்கு அதிகமாக தந்து நம்மை வருத்துகிறான். அப்படியும் நாம் அவனை சரணடைந்து நினைவுகள் தரும் துன்பங்களை ஒதுக்கியபடி வாழவும் வழி வகுக்கிறான். மனித வாழ்க்கையே எனக்கு சில சமயம் விசித்திரமாகத்தான் தோன்றுகிறது.

  தைரியமாக இருங்கள். அன்பான குழந்தைகள், பேரன், மற்றும் உறவுகள் அனைவரையும் உங்களுக்கு தந்த ஆண்டவனுக்கு நானும் நன்றி கூறிக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்

  1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்

   இருபக்கம் உறவினர்களும் அவர்களை நினைவு கூர்ந்தார்கள்.
   //உங்கள் பேரனின் நல்ல எண்ணங்களுக்கும் பழக்கங்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்//

   நன்றி.


   இதையெல்லாம் இன்னும் சிலகாலம் இருந்து பார்த்து உங்கள் கணவர் சந்தோஷமடைந்திருக்கலாம்...//

   இதைதான் நாங்கள் பேசி கொள்கிறோம்.


   என்ன செய்வது? என்றுமே விதியின் ஆற்றலை நாம் புறக்கணிக்க இயலாமல் இருக்கிறோமே...

   உண்மைதான். நம்மால் மாற்ற முடியாத செயலை ஏற்று கொள்வதை தவிர வேறு வழியில்லை .

   தீபத்திருநாள் அன்று என் நினைவு வந்ததா? அன்புக்கு நன்றி.
   ஆமாம், படைத்தவனை சரண் அடைந்துதான் நினைவுகள் தரும் துன்பத்தை போக்க வேண்டும்.

   நீங்கள் சொன்னது போல மனித வாழ்க்கை விசித்திரம்தான் .

   ஆமாம், தைரியமாக இருக்க வேண்டும், அன்பான குழந்தைகள், சொந்தங்கள், நட்புகள் கிடைத்ததற்கு நாளும் இறைவனுக்கு நன்றி சொல்லி மிகுதி காலங்களை அமைதியாக வாழ வேண்டும்.

   உங்கள் விரிவான அன்பான கருத்துக்கு நன்றி கமலா.

   நீக்கு
 12. நினைவுகளில் என்றென்றும் வாழ்ந்து கொண்டிருப்பார்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்
   ஆமாம், நினைவுகளில் வாழ்ந்து கொண்டு இருப்பார்கள் என்றும்.
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 13. // மனதை தைரியப்படுத்திக் கொண்டு தான் நாட்களை நகர்த்த வேண்டியுள்ளது... //

  சத்தியமான வார்த்தைகள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோ துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்

   குழந்தைகள், உறவுகள், நட்புகள் எல்லாம் மனதைரியத்தை தருகிறார்கள்.

   நீக்கு
  2. என் நாந்தனார் அவர்கள் எனக்கு அடிக்கடி பேசி ஆறுதலும், மனதைரியமும் தருகிறார்கள்.

   நீக்கு
 14. இந்தப் பதிவை -
  தைரியமாகப் படிக்கும்படிக்கு மனதிற்குத் தைரியம் இல்லை..

  பதிலளிநீக்கு
 15. வல்லியம்மா அவர்களது வார்த்தைகளே சற்று மாறுதலுடன்...

  சென்ற நவம்பரில் இறையடியில் இணைந்த தங்களது அன்புக் கணவருக்கு அஞ்சலிகள்.

  தாங்கள் - மனக் கலக்கங்களில் இருந்து நீங்கி தங்களது மக்களோடு
  அமைதியான வாழ்வினைப் பெறுவதற்கு இறைவன் நல்லருள் புரிவானாக...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சென்ற நவம்பரில் இறையடியில் இணைந்த தங்களது அன்புக் கணவருக்கு அஞ்சலிகள்.

   தாங்கள் - மனக் கலக்கங்களில் இருந்து நீங்கி தங்களது மக்களோடு
   அமைதியான வாழ்வினைப் பெறுவதற்கு இறைவன் நல்லருள் புரிவானாக...//

   அஞ்சலிக்கு நன்றி.

   உங்கள் பிரார்த்தனைக்களுக்கும் நன்றி.


   நீக்கு
 16. தமிழகத்தின் தேவாரத் திருத் தலங்கள் மற்றும் திருக்கயிலாயம் என, தரிசனம் செய்திருக்கும் தெய்வத் தம்பதியராகிய தங்கள் இருவரையும் கண்டு வணங்கிட எண்ணியிருந்தேன்..

  சிவாய திருச்சிற்றம்பலம்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //தமிழகத்தின் தேவாரத் திருத் தலங்கள் மற்றும் திருக்கயிலாயம் என, தரிசனம் செய்திருக்கும் தெய்வத் தம்பதியராகிய தங்கள் இருவரையும் கண்டு வணங்கிட எண்ணியிருந்தேன்..//
   சார்தான் 274 தேவார தலங்கள் அனைத்தும் பார்த்து இருக்கிறார்கள். பல வருடமாக பார்த்து நிறைவு செய்தார்கள். நான் இன்னும் கொஞ்சம் பார்க்க வேண்டியது இருக்கிறது.
   உங்கள் அன்புக்கு நன்றி.


   இறைவன் திருவுள்ளம் படியே அனைத்தும் நடக்கும்.

   உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

   நீக்கு
 17. மனதை நெகிழவைதாத பகிர்வு. என்றும் உங்களுடன் வாழும் திரு அரசு அவர்களுக்கு அஞ்சலிகள்.

  பிள்ளைகள் பேரக்குழந்தைகள் உறவினர்களுடன் மகிழ்ந்திருங்கள் நலமாக.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
   அஞ்சலிகளுக்கு நன்றி.

   உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

   நீக்கு
 18. முதலாம் ஆண்டு நினைவு தினத்தில் சாருக்கு என் வணக்கமும் அஞ்சலிகளும். படங்களும் பகிர்வும் நெகிழ்வு. இரண்டு உரையும் அருமை. அவரது சகோதரியின் பகிர்வை முகநூலிலும் வாசித்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க் வளமுடன்

   உங்கள் வணக்கத்திற்கும், அஞ்சலிகளுக்கும் நன்றி ராமலக்ஷ்மி.
   உரைகளை கேட்டு பகிர்வை படித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

   நீக்கு