சனி, 18 செப்டம்பர், 2021

அருள்மிகு வீரநாராயணப் பெருமாள்


புரட்டாசி மாதம் பெருமாள் கோவில்கள் தரிசனம் செய்வது வழக்கம்.
அப்படி முன்பு சென்று வந்து போட்ட பதிவுகளை மீண்டும் படித்தேன்.

இந்த பெருமாள்  கோயில் ஜனவரி 1ம் தேதி பார்க்கும் கோயில்.
திங்கள், 17 ஜனவரி , 2011ல் போட்ட பதிவு இது.
ஆங்கிலப் புத்தாண்டுக்கு நாங்கள் ஒவ்வொரு முறையும் கங்கை கொண்ட சோழபுரம் கோவிலும் , குருவாலப்பர் கோவிலும் போய் வருவோம். 
கங்கை கொண்ட சோழபுரம் கோவில் எல்லோருக்கும் தெரியும்.
 இராஜ இராஜ சோழரின் மகன் இராஜேந்திர சோழர் கட்டியது. 
தன் தந்தை கட்டிய, காலத்தால் அழியாத
 புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவில் போலக் கட்ட வேண்டும்
 என்று ஆசைப் பட்டு ஏறக்குறைய அதேமாதிரி கட்டியது.
முதன் முதலில் நாங்கள் போகும் போது கோபுரத்தின் மேல் 
அடுக்கு எல்லாம் பார்த்து இருக்கிறோம்.

 இப்போது அங்கெல்லாம் மக்களை ஏறவிடுவது இல்லை. 
இந்த முறை அங்கு சுற்றுலாத் துறையினரும் சிறப்பான விழா ஒன்றை நடத்தினர்.இந்தக்கோயிலுக்கு நாளுக்கு நாள் கூட்டம் நிறைய வருகிறது.

இந்த ஆண்டு ஜனவரி முதல் தேதியன்று முதலில் வழக்கம் போல்
 கங்கைகொண்ட சோழபுரம் கோவில் போய் சேர்ந்த போது பாதையில்
 ஒரு பஸ் எங்கள் காரை வழிமறித்து நின்றது. நீங்கள் பின்னால்
 போங்கள் என்று சொன்னார். பஸ்ஸுக்காக வழி விட்டு ஒதுங்கியதில் ,
அங்கு முள் இருந்து இருக்கும் போல. டயர் பஞ்சர் ஆகிவிட்டது. 
என்ன இது இப்படி ஆகிவிட்டதே என்று நினைத்தாலும் 
கோவில் வாசலில் தானே நின்றது, சாமி தரிசனம் முடிந்து வந்து பார்த்துக்கொள்ளலாம் என கோவிலுக்குப் போய் விட்டோம். 
நன்கு தரிசனம் செய்து குடும்ப நலன், நாட்டு நலனுக்காக வேண்டி வந்தோம்.

வெளியில் வந்தவுடன் ஸ்டெப்னி மாற்ற வேண்டுமே என்ற கவலைபிடித்துக் கொண்டது. என் கணவருக்கு டயர் மாற்றத்தெரிந்தாலும் பக்கத்தில்
 கார் மெக்கானிக் கடை இருக்கிறதா என கோவில் அருகிலிருந்த
 ஒட்டலில் கேட்டால் ,அவர் கூட்டு ரோட்டுக்குப் போக வேண்டும் 
என்று சொல்லி விட்டார். குருவாலப்பர் கோயில் பெருமாளை 
சேவிக்க வேண்டுமே நேரம் ஆகி விட்டால் நடை சார்ர்த்தி விடுவார்களே! 
என்ற கவலையில் பெருமாளை வேண்டிக்கொண்டு எதற்கும் அருகில் இருந்த வேன் டிரைவரைக் கேளுங்கள் அவர் முடியாது என்றால் நீங்களே டயர் மாற்றுங்கள் என்று சொன்னேன். என் கணவரும் சரி என்று போய் கேட்க அவர் உடனே சம்மதித்து நொடியில் மாற்றிக் கொடுத்தார். பணம் கொடுத்தால் வாங்க மாட்டேன் என்று சொல்லி விட்டார். இன்று நான் உங்களுக்கு உதவி செய்தால் எனக்கு யாராவது வந்து உதவி செய்வார்கள் என்றார். எங்கள் திருப்திக்கு 
பிஸ்கட் பாக்கெட்டாவது எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டபின் எடுத்துக் கொண்டார். பின் தன் விசிட்டிங் கார்டு கொடுத்தார். 
பார்த்தால் பாலாஜி டிராவல்ஸ்” என்று போட்டு இருந்தது. 
குருவாலப்பர் பெருமாளே வந்து உதவி செயதது போல் இருந்தது. 
அவர் பேர் சுந்தர். கதிராமங்கலமாம் ஊர் .வண்டி தேவைப் பட்டால்
 சொல்லுங்கள் என்றார். உதவிக்கு கூப்பிட்ட போது, அதைவிட
 என்ன சார் வருகிறேன் என்று வந்தாரே அந்த உதவி செய்யும் பெரிய மனதைப் பாராட்ட வேண்டும்.

அவருக்கு வாழ்த்துச் சொல்லிவிட்டு குருவாலப்பர் கோவில் சென்றோம். 
கோவிலுக்கு நேர் எதிரே ஆஞ்சநேயர் பெருமாளைச் சேவித்தபடி இருக்கிறார். அந்த கோவிலில் பெரிய ஆலமரம் ஒன்று இருக்கும். அழகாய் அதில் நிறைய தேன் கூடுகள் இருக்கும். கோவில் திருப்பணி ஆரம்பித்தவுடன் மரம் பாதியாய்க் குறைக்கப் பட்டுவிட்டது மனதுக்கு மிகவும் வருத்தமாய் இருந்தது.ஆலமரத்திற்கு எதிரில் அல்லி மலர்கள் பூத்த புஷ்கரணி உள்ளது. இத்தலப் பெருமாள், 
தாயாரிடம் என்ன வேண்டிக் கொண்டாலும் அதை 
நிறைவேற்றித் தருவார் என்றார் பட்டர்.

நாங்கள் அங்கு 5,6 வருடமாய் சென்று தரிசித்து வருகிறோம்.அந்த கோவிலுக்கு செல்ல விரும்புபவர்களுக்கு உதவும் வகையில் இந்த கோவிலின் விபரம் கொடுத்துள்ளேன். முடிந்த போது தரிசனம் செய்து வாருங்கள்.

கோவிலுக்கு உள்ளூர் பக்தர்கள் வந்தாலே நல்லாஇருக்கும் என்றார் பட்டர். 
வெளியூர் பக்தர் ஒருவர் தீபத்திற்கு எண்ணெய், நெய் எல்லாம்
 நிறைய பட்டரிடம் கொடுத்தார். உள்ளூர் பக்தர் ஒருவர் 
குடும்பத்துடன் வந்து இருந்தார். கோவிலை விட்டு வரும் போது வேனில் சென்னையிலிருந்து ஒரு வைணவ குடும்பம் வந்தார்கள் 
பெருமாளைச் சேவிக்க.

குருவாலப்பர் கோயில்:


குருகை காவலரப்பர் திருக்கோயில் என்பது மருவி, குருவாலப்பர் கோயில்
 என்று தற்போது வழங்கப்படுகிறது குருகை காவலப்பர், வைணவ ஆச்சாரியரான நாதமுனிகளின் சீடர்களில் ஒருவராவார். இவர் நாதமுனிகளிடம் இருந்து யோகசாஸ்திரத்தைக் கற்றுக்கொண்டவர். நாலாயிர திவ்விய பிரபந்தத்தில் அமைந்துள்ள பேயாழ்வார் அருளிச் செய்த மூன்றாம் திருவந்தாதியில் குருகைக்காவலப்பர் அருளிய தனியன் உள்ளது.
அப்பாடல்:

//சீராரும் மாடத் திருக்கோவ லூரதனுள்
காரார் கருமுகிலைக் காணப்புக்கு-ஓராத்
திருக்கண்டேன் என்றுரைத்த சீரான் கழலே
உரைக்கண்டாய் நெஞ்சே உகந்து.//

இராஜேந்திரசோழன் வடநாட்டிலிருந்த நாதமுனிகளைத் தமிழ்நாட்டிற்கு
 வரவழைத்து கங்கைகொண்டசோழபுரம் என்னும் தலைநகரை நிருமாணித்தான்.அவரைத் தனது ராஜ ஆலோசகராகக் கொண்டான். இராஜேந்திரசோழ்னின் மனைவியின் முயற்சியால் இத்திருக்கோயில்
 உருவாயிற்று என்பார்கள். குருவாலப்பர்கோயில் என்னும் ஊர் தனது
 ஆட்சிக்குள் 85 சிற்றூர் மற்றும் ஜமீன்களைக் கொண்டு விளங்கியிருக்கிறது. கங்கைகொண்டசோழபுரம் என்ற ஊரும் இதனுள் அடக்கம்.

திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள

இறைவன் பெயர் : அருள்மிகு வீரநாராயணப் பெருமாள்;
இறைவியின் பெயர்: அருள்மிகு மரகதவல்லித்தாயார்
மகாலட்சுமி அவதாரம் பண்ணிப் பெருமாளைத் தவம் செய்து
விவாகம் பண்ணிய தலம்.

நின்ற திருக்கோலம்
கிழக்கே திருமுகமண்டலம்
பார்க்கவ சேத்திரம்
மரகதவல்லித்தாயார்,இராமர்,ஆண்டாள்,ஆழ்வார்கள்,விஷ்வக்சேனர்
ஆகியோருக்குச் சன்னதிகள் தனித்தனியாக அமைந்துள்ளன.
உற்சவமூர்த்தி-துவாரகாநாதர்
நாதமுனிகளுக்குக் கிருஷ்ணனாக சேவைசாதித்த தலம்
இங்கு வந்து வணங்கியவர்களின் கொடிய பாவங்களும் தீரும் என்கிறார்கள்

வைகாசி விசாகத்தன்று தேர்த்திருவிழா நடைபெற்று வந்திருக்கிறது.
 நீண்டகாலமாக கவனிப்பாரின்றி இருந்த இத்திருக்கோயிலுக்கு 
கும்பாபிஷேகம் செய்ய ஏற்பாடுகள் நடந்துவருகின்றன.
நீண்டகாலம் இங்கு முன்பு பணியாற்றிய 
முதுபெரும்பட்டாச்சாரியாருக்குப் பிறகு தற்போது
 திருவரங்கத்தில் இருந்து வந்துள்ள திருமிகு.கண்ணன் பட்டாச்சாரியார் பொறுப்பேற்று கோயில் பணிகளைச் சிறப்பாகச் செய்துவருகிறார்.நாங்கள் முதன்முதலில் இங்கு சென்றபோது முன்பிருந்த பட்டாச்சாரியார் அடிக்கடி இத்தலத்துக்கு வாருங்கள் என்று அன்புடன் கூறினார், அதில் இருந்து
 ஒவ்வோராண்டும் போய் வருகிறோம்.

இப்போதுள்ள தொடர்புகொள்ள:

கண்ணன் பட்டாச்சார்யார்-செல்:9965342123
----------


இருப்பிடம்:

இத்தலம் கங்கை கொண்ட சோழபுரத்திற்கு மேற்கே 2 கி.மீ தூரத்தில் உள்ளது.
இத் தலம் திருச்சியிலிருந்து-91 கி.மீ தூரத்திலும்
கும்பகோணத்திலிருந்து 46கி.மீ தூரத்திலும்
அரியலூரிலிருந்து38கி.மீ தூரத்திலும் உள்ளது

முகவரி:

அருள்மிகு குருவாலப்பர் திருக்கோயில்,
ஜெயம்கொண்டம் தாலுக்கா
அரியலூர் மாவட்டம்.
பின்கோடு-612901


கும்பாபிஷேகம் ஆகி கோவில் அழகாய் காட்சி அளிக்கும்  பதிவு போட்ட
 நினைவு இருக்கிறது. தேடி கொண்டு இருக்கிறேன். பெருமாள் அருளால் 
கிடைத்தால் அடுத்த வாரம் போடுகிறேன்.

வாழ்க வையகம் ! வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன்.

---------------------------------------------------------------------------------------------------------------------------

34 கருத்துகள்:

 1. நான் காட்டு மன்னார்குடி என நினைச்சுட்டேன். இந்தக் கோயிலைப் பற்றிக் கேட்டதே இல்லை. கங்கை கொண்ட சோழபுரமே இன்னமும் போக முடியலை. பார்ப்போம். அனைத்து விபரங்களுக்கும், அருமையான விளக்கங்களுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்

   //நான் காட்டு மன்னார்குடி என நினைச்சுட்டேன்.//

   அந்த பெருமாள் பேரும் இதுதான், அதனால் நினைக்க வாய்ப்பு உண்டு.

   //கங்கை கொண்ட சோழபுரமே இன்னமும் போக முடியலை. பார்ப்போம்.//

   வாய்ப்பு கிடைக்கும் போய் வருவீர்கள்.

   உங்கள் கருத்துக்கு நன்றி.


   நீக்கு
 2. பதில்கள்
  1. வணக்கம் கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்

   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 3. முன்னர் தஞ்சைப் பெரிய கோவிலின் மேலும் ஏறிப்பார்க்க அனுமதித்தார்கள்.  நான் இரண்டு இடங்களிலும் பார்த்ததில்லை என்பது வருத்தம்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
   தஞ்சைப் பெரிய கோவில் உள்ளே ஓவியங்கள் பார்த்து இருக்கிறோம். உள்ளே இருந்து கோபுரத்தை பார்க்க அழகாய் இருக்கும். மேலேயும் போய் இருக்கிறோம்.

   நீக்கு
 4. நேரத்துக்கு பெருமாள் போல வந்து உதவினார் என்று நினைத்தால் பெயரும்...  சில சமயங்களில் இபப்டி அமைந்து விடுகிறது...   அவனருள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அந்த அன்பர் செய்த உதவி "காலத்தால் செய்த உதவி " இன்னும் வாழ்த்தி கொண்டு இருக்கிறது மனது. அவனருள்தானே எல்லாவற்றையும் நடத்துகிறது.

   நீக்கு
 5. குருவாலப்பர் கோவில் பற்றி இதுவரை அறிந்ததில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குருவாலப்பர் பதிவு முன்பு போட்டு இருந்த போது நீங்கள் படிக்கவில்லை.
   அதனால் புதிய பதிவு போல படித்து இருக்கிறீர்கள். கங்கை கொண்ட சோழபுரம் போக வாய்ப்பு கிடைத்தால் பெருமாளையும் தரிசனம் செய்து வாருங்கள்.
   உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

   நீக்கு
 6. படங்கள் அருமை சகோ

  //இன்று நான் உங்களுக்கு உதவி செய்தால் நாளை எனக்கு யாராவது வந்து உதவி செய்வார்கள்//

  இதுதான் வாழ்வியல் உண்மை எனது கொள்கையும்கூட...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

   //இன்று நான் உங்களுக்கு உதவி செய்தால் நாளை எனக்கு யாராவது வந்து உதவி செய்வார்கள்//

   இதுதான் வாழ்வியல் உண்மை எனது கொள்கையும்கூட...

   ஆமாம் ஜி, நீங்கள் சொல்வது உண்மை. நாம் உதவி செய்தவர்களே நமக்கு மீண்டும் உதவி செய்வார்கள் என்று எதிர்ப்பார்த்து நாம் உதவி செய்வது இல்லை.
   அதனால் வேறு யாராவது வந்து நமக்கு தகுந்த நேரத்தில் உதவ இறைவன் அருள்புரிவார்.

   போன பதிவில் உங்களை பார்க்கவில்லையே!
   உங்கள் நண்பர் வீட்டு வேலைகள் முடிந்து விட்டதா?

   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 7. பணம் கொடுத்தால் வாங்க மாட்டேன் என்று சொல்லி விட்டார். இன்று நான் உங்களுக்கு உதவி செய்தால் எனக்கு யாராவது வந்து உதவி செய்வார்கள் என்றார். எங்கள் திருப்திக்கு
  பிஸ்கட் பாக்கெட்டாவது எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டபின் எடுத்துக் கொண்டார். பின் தன் விசிட்டிங் கார்டு கொடுத்தார்.
  பார்த்தால் பாலாஜி டிராவல்ஸ்” //

  ஆமாம் கோமதிக்கா பாருங்க கரெக்ட்டா வந்து உதவியிருக்கிறார் அதுவுமில்லாம நல்ல மனம் படைத்தவர்கள் இப்படி இருக்கிறார்கள்...ஒரு விளக்கிலிருந்து மற்றொரு விளக்கு ஏற்றுவது போல இவர் உதவி செய்ய தனக்கு வேறொரு விதத்தில் உதவி வரும்னு இப்படித் தொடர் சங்கிலியாய் எவ்வளவு நல்ல விஷயம்!

  இந்த இரு கோயில்களும் ஒரு முறை செல்ல நினைத்தும் செல்ல இயலாமல் போனது. எங்கள் முழு குடும்ப ட்ரிப் ஒன்று திருச்சி கரூர், வாங்கல் எல்லாம் போன போது..

  விவரங்கள் அனைத்திற்கும் மிக்க நன்றி கோமதிக்கா. படங்கள் சிறப்பு.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கீதாரெங்கன், வாழ்க வளமுடன்

   //நல்ல மனம் படைத்தவர்கள் இப்படி இருக்கிறார்கள்...ஒரு விளக்கிலிருந்து மற்றொரு விளக்கு ஏற்றுவது போல இவர் உதவி செய்ய தனக்கு வேறொரு விதத்தில் உதவி வரும்னு இப்படித் தொடர் சங்கிலியாய் எவ்வளவு நல்ல விஷயம்!//

   ஆமாம் கீதா, உதவிகள் தொடர் சங்கிலியாக தொடர்வது மகிழ்ச்சி. அந்த அன்பர் எவ்வளவு இயல்பாய் சொல்லி விட்டார்.


   //இந்த இரு கோயில்களும் ஒரு முறை செல்ல நினைத்தும் செல்ல இயலாமல் போனது. எங்கள் முழு குடும்ப ட்ரிப் ஒன்று திருச்சி கரூர், வாங்கல் எல்லாம் போன போது..//

   அவருக்கு எப்போது நம்மை அழைக்க வேண்டும் என்று தெரியும் தானே! அழைப்பார் .

   பழைய பதிவுகளை படித்து அவர் அழைத்த காலங்களை, என் கணவர் அழைத்து போனதை நினைத்து பார்த்து நன்றி சொல்லி கொண்டு இருக்கிறேன்.

   உங்கள் கருத்துக்கு நன்றி.   நீக்கு
 8. அருமையான கோவிலை அறிமுகம் செய்துள்ளீர்கள்.

  குருகைக் காவலப்பர் கோயிலுக்குக் கண்டிப்பாகச் செல்லும் வாய்ப்பை அவன் வழங்கவேண்டும் எனப் ப்ரார்த்தித்துக்கொண்டேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்

   குருகைக் காவலப்பர் கோயிலுக்கு வாய்ப்பு கிடைக்கும் போய் வாருங்கள்.

   மீன்சுருட்டி கூட்டுச் சாலையிலிருந்து கங்கைகொண்ட சோழபுரம் போகும் பாதையில் இடதுபுறம் 200மீட்டர் தூரத்தில் ஸ்ரீமந் நாதமுனிகள் திருவரசு அமைந்து இருக்கிறது. அந்த புனித இடத்திற்குப் பெயர் ’சொர்க்கப் பள்ளம்’.

   அப்படியே இங்கும் சென்று வாருங்கள்.

   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 9. படங்கள் அருமை... அனைத்து தகவல்களை கொடுத்ததும் சிறப்பு...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
   படங்களை, பதிவை ரசித்து படித்து கருத்து சொன்னதற்கு நன்றி.
   தகவல்கள் கொடுத்து ஒருவர் போய் வந்து எனக்கு பதிவில் போய் வந்ததை சொன்னார்.
   அதுதான் மனதுக்கு மகிழ்ச்சி.

   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 10. வணக்கம் சகோதரி

  பதிவு அருமையாக உள்ளது. இதை நான் படித்ததாக நினைவில்லை. புரட்டாசி சனியன்று பெருமாள் கோவில் கோபுரங்களையும் தரிசித்து, கருவறையிலிருக்கும் அருள் மிகும் வீரநாராயணனை பக்தியுடன் பணிந்து பிரார்த்தனைகள் செய்து கொண்டேன். கோவிலைப்பற்றிய தகவல்கள் அருமை.

  மற்றொரு கோவிலான குருவாலப்பர் கோவிலைப் பற்றிய தகவல்களும் அறிந்து கொண்டேன். நன்றாக விபரமாக கூறியிருக்கிறீர்கள். கார் ஸ்டெப்னி மாற்றுவதற்கு உதவிய நண்பரின் பெயரை நீங்கள் சொன்னதும் எனக்கும் மெய்சிலிர்ப்பு உண்டானது. இது போன்ற அதிசயங்கள் நமக்கு நிகழும் போது, வந்தவர் கடவுளின் பிரதிநிதியாக நாம் உணர்கிறோம். உண்மைதான்...

  அந்த கோவிலைப் பற்றிய வரலாற்று சிறப்புகளையும் படிக்க ஆவலாக உள்ளேன். வெளியிடுங்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
   2011 ல் போட்டது அப்போது நீங்கள் என் பதிவுக்கு வந்தது இல்லை.

   முதல் கோயில் நாங்கள் அடிக்கடி போகும் கங்கை கொண்ட சோழபுர கோயில். அந்த கோயிலை நிறைய முறை படங்களுடன் பதிவு செய்து இருக்கிறேன்.

   குருவாலப்பர் கோவிவில் வரலாறு இந்த பதிவில் இருப்பதுதான். கோயில் கும்பாபிஷேகம் ஆனபிறகு எடுத்த படங்களுடன் பதிவு செய்த பதிவு கிடைக்கவில்லை கிடைத்தால் போடுகிறேன் என்றேன்.


   //கார் ஸ்டெப்னி மாற்றுவதற்கு உதவிய நண்பரின் பெயரை நீங்கள் சொன்னதும் எனக்கும் மெய்சிலிர்ப்பு உண்டானது. இது போன்ற அதிசயங்கள் நமக்கு நிகழும் போது, வந்தவர் கடவுளின் பிரதிநிதியாக நாம் உணர்கிறோம். உண்மைதான்...//

   ஆமாம், நீங்கள் சொல்வது போல்தான் எனக்கும் அனுபவம் ஏற்பட்டது.

   உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 11. விரிவான தகவல்களுடன் சிறப்பான பகிர்வு. அந்த வேன் ட்ரைவரைப் போலப் பிரதிபலன் பாராது உதவுகின்றவர்கள் இருக்கிறார்கள். இறையருளால் தக்க நேரத்தில் உதவி கிடைத்தது. உள்ளூர் பக்தர்களாவது வரவேண்டுமென்கிற பட்டரின் ஆதங்கம் புரிகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்

   //வேன் ட்ரைவரைப் போலப் பிரதிபலன் பாராது உதவுகின்றவர்கள் இருக்கிறார்கள்.//

   ஆமாம், ராமலக்ஷமி . நல்லமனிதர்கள் இருக்கிறார்கள்.

   //இறையருளால் தக்க நேரத்தில் உதவி கிடைத்தது. உள்ளூர் பக்தர்களாவது வரவேண்டுமென்கிற பட்டரின் ஆதங்கம் புரிகிறது.//

   கும்பாபிஷேகம் ஆனபின் பெரியவர் இல்லை. வயது அதிகமாகி விட்டதால் பிள்ளை தன் ஊருக்கு அழைத்து சென்று விட்டார் என்றார்கள். அதன் பின் உள்ளூர் பக்தர்கள் கூட்டம் வருகிறது என்றார்கள். நல்லோர் நினைப்பு எப்போதும் பலிக்கும் தானே!

   உங்கள் கருத்துக்கு நன்றி.


   நீக்கு
 12. பிஸ்கட் பாக்கெட்டாவது எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டபின் எடுத்துக் கொண்டார். பின் தன் விசிட்டிங் கார்டு கொடுத்தார்.
  பார்த்தால் பாலாஜி டிராவல்ஸ்” என்று போட்டு இருந்தது. ////// இதுதான் மனத்தில் நின்றது.
  பெருமாளின் கருணையே கருணை. அந்த
  ட்ரைவரைக் கேட்கத் தோன்றியதே உங்களுக்கு. !!

  நீங்களும் ஸாரும் வேறு யாருக்காவது உதவ் இருப்பீர்கள். நெடுஞ்சாலைப்
  பயணங்களில்
  இது போன்ற தொந்தரவுகள் நேரத்தான் செய்யும்.
  காவலப்பர் வந்து உதவி செய்துவிட்டார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்


   //பெருமாளின் கருணையே கருணை. அந்த
   ட்ரைவரைக் கேட்கத் தோன்றியதே உங்களுக்கு. !!//

   ஆமாம், சார் கேட்க தயங்கினார்கள் நான் தான் கேட்டுப்பாருங்கள் என்று அவர்களை மீண்டும் மீண்டும் சொன்னேன், அதனால்தான் போய் கேட்டார்கள்.


   //நீங்களும் ஸாரும் வேறு யாருக்காவது உதவ் இருப்பீர்கள்.//

   நாங்கள் பஸ் வசதி இல்லா கோயில் இருக்கும் ஊருக்கு போனால் வரும் போது கோயிலுக்கு வந்து இருக்கும் அன்பர்கள் இரண்டு மூன்று பேரை அடிக்கடி அழைத்து வந்து ஊருக்குள் விட்டு இருக்கிறோம், மாயவரம் என்றால் தொடர்ந்து எங்களுடன் பயணம் செய்து இருக்கிறார்கள்.
   அக்கம் பக்கத்து குழந்தைகள், பெரியவர்கள் எங்களுடன் கோயிலுக்கு வருகிறோம் என்று வருவார்கள்.

   //நெடுஞ்சாலைப்
   பயணங்களில்
   இது போன்ற தொந்தரவுகள் நேரத்தான் செய்யும்.//
   அப்படி நல்லவேளை ஏதும் நடக்கவில்லை. கோயில் அருகில் நடந்ததுதான் முதல் அனுபவம்.

   காவலப்பரை மறக்க முடியாத நினைவுகள்.

   நீக்கு
 13. அன்பின் கோமதிமா,
  வாழக வளமுடன்.
  புரட்டாசிப் பதிவாகப் பெருமாள் தரிசனம்,
  கோபுர தரிசனம் அத்தனையும் நன்று.
  கோவில்கள் செல்வதற்கும் மிகக் கொடுப்பினை
  வேண்டும்.
  வீர நாராயணப் பெருமாளும் தாயாரையும்
  பற்றிக் கேள்விப்பட்டதே இல்லை.
  வீர நாராயணபுரம் ஏரி மட்டும் பொன்னியின் செல்வன் தயவில் தெரியும்:)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வீர நாராயண ஏரி மிகவும் பெரியது. காட்டு மன்னார்குடி வீரநாராயண பெருமாள் பதிவு இரண்டு போட்டு இருக்கிறேன் அக்கா.

   பொன்னியின் செல்வனையும் ஏரிக்கரை பூங்குழலி பரிசில் ஓட்டி செல்வதையும் மறக்க முடியுமா?

   இந்த கோயில் அது இல்லை.ஆனால் இவர் பெயரும் வீர நராயணபெருமாள்தான்.

   நீக்கு
 14. கங்கைகொண்ட சோழபுரம் போகும் பாதையில் இடதுபுறம் 200மீட்டர் தூரத்தில் ஸ்ரீமந் நாதமுனிகள் திருவரசு அமைந்து இருக்கிறது. அந்த புனித இடத்திற்குப் பெயர் ’சொர்க்கப் பள்ளம்’.இப்பொழுது பிரபந்த வகுப்பில் ஸ்ரீ நாதமுனிகள் பற்றிய
  கேள்விபதில்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

  மகா முதல் ஆச்சாரியரின் திருவரசு
  அமைந்த இடத்தை நீங்கள் சொல்கிறீர்கள்.
  இது எனக்குக் கிடைத்த பெரிய பாக்கியமாக உணர்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //மகா முதல் ஆச்சாரியரின் திருவரசு
   அமைந்த இடத்தை நீங்கள் சொல்கிறீர்கள்.
   இது எனக்குக் கிடைத்த பெரிய பாக்கியமாக உணர்கிறேன்.//

   நன்றி அக்கா. உங்களுக்கு சுட்டி அனுப்பி இருக்கிறேன். படித்து பாருங்கள் நேரம் இருக்கும் போது. நாலயிரதிவய பிரபந்தம் கிடைக்க காரண கர்த்தா இல்லையா!


   //இப்பொழுது பிரபந்த வகுப்பில் ஸ்ரீ நாதமுனிகள் பற்றிய
   கேள்விபதில்கள் நடந்து கொண்டிருக்கின்றன.//

   ஓ மகிழ்ச்சி. இரண்டு பதிவுகளை படித்தால் நீங்கள் மகிழ்வீர்கள்.

   உங்கள் கருத்துக்களுக்கு நன்றி அக்கா.

   நீக்கு
 15. காலையிலேயே இந்தப் பதிவை படித்து விட்டேன்...

  தமிழகத்தின் திருக் கோயில்கள் அனைத்தையும் தரிசிப்பது என்றால் ஏழு பிறவிகளும் போதாது....

  அதனால் தான் அப்பர் ஸ்வாமிகளும் ஆழ்வாரும் மீண்டும் பூமியில் பிறப்பதற்கு வேண்டிக் கொண்டனர்..

  வாழ்க வையகம்
  வாழ்க வளமுடன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்

   //தமிழகத்தின் திருக் கோயில்கள் அனைத்தையும் தரிசிப்பது என்றால் ஏழு பிறவிகளும் போதாது....//

   ஆமாம்.


   //அதனால் தான் அப்பர் ஸ்வாமிகளும் ஆழ்வாரும் மீண்டும் பூமியில் பிறப்பதற்கு வேண்டிக் கொண்டனர்..//

   மீண்டும் பிறந்தாலும் இறைவனை மறவாத நிலை வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டனர்.

   உங்கள் கருத்துக்கு நன்றி.   நீக்கு
 16. கோவில் பழமையாக இருந்தாலும் அழகாக இருக்கிறது! ஆனால் இந்தக் கோவில் பற்றி கேள்விப்படட்தில்லை. நீங்கள் தான் அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள்!
  உதவி செய்த 'வான் டிரைவர்' பற்றி நீங்கள் எழுதியிருந்ததைப் படித்தேன். இப்படித்தான் பெரிய சிக்கலில் மாட்டிக்கொண்டிருக்கும்போது, முன் பின் அறியாத யாரோ வந்து உதவி செய்வார்கள். அந்த உதவி காலத்துக்கும் நம்மால் மறக்க முடியாததாய் மனதில் பதிந்து போகும். உதவி செய்தவரும் நம்மை மறந்து போயிருப்பார். ஆனால் நம்மால் என்றைக்குமே மறக்க இயலாதவராய் அவர் அமைந்து விடுவார். இந்த அனுபவம் எங்கள் வாழ்க்கையிலும் கிடைத்திருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் மனோ சாமிநாதன், வாழ்க வளமுடன்

   கோவில் இப்போது புதுமையாக நன்றாக இருக்கிறது. முன்பு நான் பதிவு போட்ட போது பழமையாக இருந்தது.

   //ஆனால் நம்மால் என்றைக்குமே மறக்க இயலாதவராய் அவர் அமைந்து விடுவார்.//


   வேன் டிரைவர் செய்த உதவியை மறக்க முடியவில்லை . காலத்தால் செய்த உதவி இல்லையா?

   //இந்த அனுபவம் எங்கள் வாழ்க்கையிலும் கிடைத்திருக்கிறது//

   ஆமாம், ஒவ்வொருவர் வாழ்விலும் இது போன்ற அனுபவம் கிடைத்து இருக்கும். அவை மறக்கவே முடியாது.

   உங்கள் கருத்துக்கு நன்றி.


   நீக்கு
 17. பதில்கள்
  1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
   உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

   நீக்கு