ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2021

சூரியன் வருவது யாராலே!


அதிகாலை சூரியன் உதயமாகும்  நேரம்

ஆவணி மாதம் சூரிய வழிபாடு சிறந்தது.  நான் எடுத்த அதிகாலைச்சூரியன் படங்களை பதிவாக்கி  இங்கு பகிர்ந்து வருகிறேன்  . இதற்கு முன் போட்ட பதிவுகள் :-

இந்த பதிவில்  நாமக்கல் கவிஞர் பாடலும், சூரியன் படங்களும்.

சூரியன் வருவது யாராலே? தலைப்பு நாமக்கல் கவிஞர் வெ. ராமலிங்கம் பிள்ளை  அவர்கள் எழுதிய  பாடல். உங்கள் எல்லோருக்கும் தெரிந்து இருக்கும். சிலர் சிறு வயதில் அம்மா சொல்லி கொடுத்து பாடி இருப்பீர்கள் . என் அம்மா நோட்டு புத்தகத்தில் எழுதி வைத்து இருந்தார்கள்.

இந்த காணொளி நன்றாக இருக்கிறது உங்களுக்கு பிடிக்கும் பாருங்கள்.  இதில் பார்க்க முடியவில்லை என்றால் கீழே சுட்டி கொடுத்து இருக்கிறேன்.  இயற்கை வழிபாடே நடந்து இருக்கிறது இந்த காணொளியில். இதை பகிர்ந்தவர்களுக்கு நன்றி.


பாடல் வரிகளை தேடினேன் கூகுளில்  காவிரி மைந்தன் என்பவர் தளத்திலிருந்து எடுத்து பகிர்ந்து இருக்கிறேன். அவருக்கு நன்றி. 

ஊரில் எங்கள் வீட்டில்  நாமக்கல்  கவிஞர் புத்தகம் இருக்கிறது. அதில் அவர் எழுதிய கவிதைகள், அவரைப்பற்றிய விவரங்கள் அடங்கி இருக்கும். 

எல்லாம் வல்ல தெய்வம் ஒன்று இருக்கிறது, அதை ஒவ்வொருவரும் ஒவ்வொரு பேர்ச் சொல்லி  வணங்கி மகிழ்கிறார்கள்.

எப்படி வணங்கினால் நமக்கு என்ன? பிறரை நிந்தை பேசாமல்,  அவர்களுக்கு கெடுதல் செய்யாமல்  இருந்தாலே போதும் என்கிறார். 

சூரியன் வருவது யாராலே?
சந்திரன் திரிவதும் எவராலே?
காரிருள் வானில் மின்மினிபோல்
கண்ணிற் படுவன அவைஎன்ன?

பேரிடி மின்னல் எதனாலே?
பெருமழை பெய்வதும் எவராலே?
யாரிதற் கெல்லாம் அதிகாரி?
அதைநாம் எண்ணிட வேண்டாவோ?

தண்ணீர் விழுந்ததும் விதையின்றித்
தரையில் முளைத்திடும் புல் ஏது?

மண்ணில் போட்டது விதையொன்று
மரஞ்செடி யாவது யாராலே?

கண்ணில்தெரியாச் சிசுவை எல்லாம்
கருவில் வளர்பதுயார் வேலை?
எண்ணிப் பார்த்தால் இதற்கெல்லாம்
ஏதோ ஒருவிசை இருக்குமன்றோ?

எத்தனை மிருகம்! எத்தனை மீன்!
எத்தனை ஊர்வன பறப்பனபார்!
எத்தனை பூச்சிகள் புழுவகைகள்!
எண்ணத் தொலையாச் செடிகொடிகள்!

எத்தனை நிறங்கள் உருவங்கள்!
எல்லா வற்றையும் எண்ணுங்கால்
அத்தனை யும்தர ஒருகர்த்தன்
யாரோ எங்கோ இருப்பதுமெய்

அல்லா வென்பார் சிலபேர்கள்;

அரன் அரியென்பார் சிலபேர்கள்;

வல்லான் அவன்பர மண்டலத்தில்
வாழும் தந்தையென்பார்கள்;

சொல்லால் விளங்கா ‘ நிர்வாணம்’
என்றும் சிலபேர் சொல்வாகள்;

எல்லா மிப்படிப் பலபேசும்
ஏதோ ஒருபொருள் இருக்கிறதே!

அந்தப் பொருளை நாம்நினைத்தே
அனைவரும் அன்பாய்க் குலவிடுவோம்,

எந்தப் படியாய் எவர் அதனை
எப்படித் தொழுதால் நமக்கென்ன?


நிந்தை பிறரைப் பேசாமல்
நினைவிலும் கெடுதல் செய்யாமல்

வந்திப்போம் அதை வணங்கிடுவோம்;
வாழ்வோம் சுகமாய் வாழ்ந்திடுவோம்.

இனி நான் எடுத்த படங்கள்:-


கருமேகம் சூரியனை வெளி வரவிடாமல் தடுத்துக் கொண்டு இருந்தது.








வந்து விட்டார்
இன்னும் கொஞ்சம் மேகம் இருக்கிறது
மஞ்சள் வானக் கடலில் முழு வெண்ணிலா   போல் எழுந்து வந்து விட்டார் 

படித்த செய்தி:-

//கொரோனா தொற்று உலகம் முழுவதும் உள்ள மக்களை அச்சுறுத்தி வருகிறது.உலகம் முழுவது நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து கொண்டே செல்கிறது. மேலும் மக்கள் வீட்டைவிட்டு வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த நிலை எப்பொழுது சீராகும் என்று ஏக்கத்துடன் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனாவிடம் இருந்து தம்மை காத்து கொள்ள மக்கள் பல்வேறு யுத்திகளை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது அமெரிக்கா நடத்திய ஆய்வில் சூரிய ஒளி மூலம் எவ்வாறு கட்டுப்படுத்த முடியும் என்று பரிசோதிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆய்வில் மேற்பரப்பு மற்றும் காற்றில் இருக்கும் கொரோனா தொற்றை சூரிய ஒளி அழிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் 21 – 24 டிகிரி செல்சியஸ் வரை உள்ள வெப்ப நிலை மற்றும் 20% ஈரப்பத்தில் கொரோனா தொற்று ஆயுள் 18 மணி நேரம் ஆக இருக்கும் போது 80% ஈரப்பதத்தை உயர்த்தும் போது 6 மணி நேரமாக குறைக்கப்படுகிறது. மேற்படி காற்றில் இருக்கும் கொரோனா தொற்று சூரிய ஒளி பட்டதும் அழிந்து விடுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.//

இந்த செய்தி இணையத்தில் கிடைத்தது அவர்களுக்கு நன்றி.


படித்த நல்ல செய்தி:-

ஒரு விவசாயம் செய்யும் பெண்மணி அவர்கள் ஒரு நாள் காஞ்சி மகா பெரியவரை தரிசனம் செய்ய வந்தார்களாம். அவர்கள் குருவிடம் "சாமி நான் கோயிலுக்கு எல்லாம் போகவே முடியவில்லை . என் குடும்பம் பெரிது. வயதான மாமியார், மற்றும் 5 குழந்தைகள் அவர்களை காக்கும் பொறுப்பு எனக்கு . காலையில் சமைத்து வைத்து விட்டு , காலை முதல் மாலை வரை வயலில் வேலை.மாலை வீடு  வந்து இரவு உணவு சமைத்தல் மற்றும்  மற்ற   வேலைகள் என்று இருக்கும் போது ஆலயம் சென்று இறைவனை எப்படி வணங்குவது" என்று கேட்டாராம்.

அதற்கு காஞ்சி பெரியவர் சொன்னது :-  "காலை வயலுக்கு போகும் முன் கிழக்கே பார்த்து சூரியனை வணங்கு, மாலையில் வீடு திரும்பும் போது மேற்கே பார்த்து சூரியனை வணங்கு அது போதும் " அந்த பெண்மணி மிகுந்த மகிழ்ச்சியோடு திரும்பி போனார் என்று படித்தேன்.

முன்பு இருந்த வீடுகள் சூரிய ஒளியை வீட்டுக்குள் தரும். இப்போது உள்ள அடுக்கு மாடி வீடுகள் சில வீடுகள் தவிர்த்து வீட்டுக்குள் வெயிலே வராமல் இருக்கிறது. காலையும் , மாலையும்  சூரியன் இருக்கும் திசையை நினைத்து  வணங்கி  கொள்ள வேண்டியதுதான் அல்லது    மொட்டை மாடி போய் வணங்கி வரலாம். 

காலை எழுந்து பர பர என்று வேலைக்கு போகும் நேரத்திலும் சிறிது நேரம் ஒதுக்கி சூரியனை பாருங்கள் அதற்கு வணக்கம் சொல்லுங்கள்.


இங்கு பள்ளிகள் எல்லாம் திறந்து விட்டது பள்ளிக்கு போகிறார்கள் குழந்தைகள். நம் நாட்டில்  குழந்தைகள் பள்ளிக்கு போக முடியவில்லை, மாலையில் அக்கம் பக்கத்து குழந்தைகளுடன் விளையாட முடியவில்லை. கொரோனா தொற்றால் பயம். அவை எல்லாம் நீங்கி இயல்பு வாழ்க்கை வர வேண்டும்.  (செப்டம்பர் மாதம்  பள்ளிக்கூடம் திறக்கும் என்று கேள்வி பட்டேன்)

        வாழ்க வையகம் !  வாழ்க  வையகம்! வாழ்க வளமுடன்!
--------------------------------------------------------------------------------------------------

27 கருத்துகள்:

  1. நாமக்கல் கவிஞர் வரிகள் அருமை.  இப்போதுதான் அறிகிறேன்.  காணொளி கண்டேன்.   கடவுள் படைத்த தீம் பார்க் பூமி!  எத்தனை எத்தனை உயிரினங்கள், புழுபூச்சி விலங்குகள் பறவைகள்..  மரங்கள் செடிகொடிகள், தாவரங்கள், நீர் நிலைகள், எரிமலைகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
      நாமக்கல் கவிஞார் பாடல் , காணொளி உங்களுக்கு பிடித்து இருப்பது மகிழ்ச்சி.
      கடவுள் படைத்த தீ பார்க் பூமி என்பது உண்மைதான்.

      நீக்கு
  2. கருமேகம் கொண்டு மறைத்தாலும் துளையிட்டுக் கொண்டு வெளி வருகிறார் சூரியனார்.  வானம் நமக்கு காட்டும் அற்புதமான காட்சிகள். வானம் நமது தந்தை பாடலும் நினைவுக்கு வருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கருமேகம் கொண்டு மறைத்தாலும் துளையிட்டுக் கொண்டு வெளி வருகிறார் சூரியனார்//

      ஆமாம்,அன்று கருமேகம் வரவால் சூரியன் வர வெகு நேரம் ஆச்சு .
      வானம் இங்கு மிகவும் அழகாய் இருக்கிறது, வெண் மேகம் நீலவானத்தில் நிறைய தோற்றங்களை கொடுப்பதை பார்த்துக் கொண்டு இருந்தால் இறைவனுக்கு நன்றி சொல்ல தோன்றும்.வானம் நமது தந்தை பாடல் நினைவுக்கு வந்தது மகிழ்ச்சி.

      நீக்கு
  3. சூரிய வெப்பத்தால் கொரோனா அழிவதாய் இருந்தால் சென்ற ஏப்ரல் மேக்களில் ந்தியாவில் அது பரவியிருக்கவே கூடாதே...   இங்கும் அரபு நாடுகளிலும் இல்லாத வெய்யில்லா, வெப்பமா?! 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சூரிய வெப்பத்தால் கிருமிகள் அழிவு உண்டு என்று சொல்வார்கள்.
      அழிந்தால் நல்லதுதான். மனம் விரும்புகிறது . அதிக வெயிலும் நோயை உண்டாக்கும் எல்லாம் அளவுடன் இருந்தால் நல்லதுதான்.

      நீக்கு
  4. காலை ஆறரை மணிக்கு நான் அலுவலகம் கிளம்பும் நேரம் எங்கள் தெருமுனையில் வயதான மாது ஒருவர் வீட்டு வாசலைப் பெருக்கிக் கோலமிடுவார்.  கோலமிட்டு முடித்ததும் கிழக்கு நோக்கி வணங்கி, குனிந்து கீழே வளைந்து கும்பிட்டு உள்ளே செல்வார்.  அந்த வீட்டில் வேலை செய்யும் பெண்மணி அவர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் காலை அலுவலகம் போகும் போது பார்த்தக்காட்சியை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
      அந்தக்கால அம்மா அவர்கள் காலை சூரியனை வணங்காமல் அவர்கள் காலை பொழுது போகாது. என் அம்மா தினம் காலையில் குளித்தவுடன் சூரிய வழிபாடு செய்து விட்டுத்தான் மற்ற வேலைகளை செய்வார்கள்.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  5. அது என்ன tornado போன்ற ஒரு ஒளிக்கீற்று. ராக்கெட் அல்லது விமானம் ஏதாவது உண்டாக்கியதா? ஒளிக்கீற்று எப்படி மேல்நோக்கிப்போகிறது என்பது எனக்கு புரியவில்லை.அழகாக வந்திருக்கின்றன. 

    ஆனாலும் படங்கள் zoom செய்து எடுக்கப்பட்டவையாகத் தோன்றுகின்றன. கடைசி படம் filter அல்லது polarisar போட்டு எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

     Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஜெயக்குமார் சந்திரசேகரன் சார், வாழ்க வளமுடன்
      சூறாவளி போன்ற ஓளிக்கீற்றா! ராக்கெட், விமானம் எல்லாம் உண்டாக்கியது இல்லை சூரியன் உருவாக்கியதுதான்.
      சூரியன் உதிக்கும் போது ஒளிக்கீற்று மேல் நோக்கிதானே போகும்.
      ஜூம் செய்து தன் எடுத்தேன்.

      /கடைசி படம் filter அல்லது polarisar போட்டு எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.//

      ஓ சரி.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  6. அழகான படங்கள்... கேட்பொலியாக இந்தப் பாடலை மாற்றி வைத்துள்ளேன் - ஒரு பதிவிற்காக...

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
    // கேட்பொலியாக இந்தப் பாடலை மாற்றி வைத்துள்ளேன் - ஒரு பதிவிற்காக...//
    ஓ சரி, நல்லது.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  8. பாடல் அருமை. படங்கள் யாவும் அற்புதம். சூரிய ஒளியால் நோய்க்கிருமிகள் அழிந்தால் நல்லதே. சூரிய ஒளியில் நின்று விட்டமின் டி எடுத்துக் கொள்வதும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் எனப் பரிந்துரைக்கிறார்கள். ஆம், இங்கும் உயர் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் அடுத்த மாதம் திறக்கின்றன.

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
    பாடல், மற்றும் படங்கள் உங்களுக்கு பிடித்து இருப்பதற்கு நன்றி.

    //சூரிய ஒளியால் நோய்க்கிருமிகள் அழிந்தால் நல்லதே. சூரிய ஒளியில் நின்று விட்டமின் டி எடுத்துக் கொள்வதும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் எனப் பரிந்துரைக்கிறார்கள்.//
    ஆமாம் ராமலக்ஷ்மி. இதை போன பதிவிலும் பதிவு செய்து இருந்தேன். மருத்துவர்கள் எல்லோரும் இப்போது சொல்வது இரு வேளையும் நடைப்பயி₹இ செய்யும் போது இதமான வெயிலில் நடக்கச்சொல்கிறார்கள்.

    //ஆம், இங்கும் உயர் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் அடுத்த மாதம் திறக்கின்றன.//

    நல்லது.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  10. சூரியனின் வரவு மனதுக்கு மகிழ்ச்சியை உண்டாக்கும். மேகங்களைக் கிழித்துக்கொண்டு வருகையில் கொஞ்சம் ஒளி குறைவான தோற்றத்தில் காணப்படும் சூரியன் சில நிமிடங்களில் கண்களைப் பறிக்கும் ஒளியுடன் மாறுவார். படங்கள் எல்லாம் அழகாக வந்திருக்கின்றன. வெயிலில் நின்றால் நடந்தால் நல்லது தான். விடமின் டி கிடைக்கும். எலும்புகளுக்கு உறுதி. கிருமிகள் அழிந்தாலும் நன்மையே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்

      //சூரியனின் வரவு மனதுக்கு மகிழ்ச்சியை உண்டாக்கும்.//

      ஆமாம, சூரியனின் வரவு மனதுக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது.

      //மேகங்களைக் கிழித்துக்கொண்டு வருகையில் கொஞ்சம் ஒளி குறைவான தோற்றத்தில் காணப்படும் சூரியன் சில நிமிடங்களில் கண்களைப் பறிக்கும் ஒளியுடன்
      மாறுவார்.//


      ஆமாம், அப்போது பார்க்க மிகவும் அழகாய் இருப்பார்.

      //படங்கள் எல்லாம் அழகாக வந்திருக்கின்றன. //

      நன்றி.

      //வெயிலில் நின்றால் நடந்தால் நல்லது தான். விடமின் டி கிடைக்கும். எலும்புகளுக்கு உறுதி. கிருமிகள் அழிந்தாலும் நன்மையே!//

      ஆமாம், கிருமிகள் அழிந்தால் நன்மையே!







      நீக்கு
  11. இங்கேயும் செப்டெம்பர் ஒன்றாம் தேதி முதல் பள்ளிகள்/கல்லூரிகள் திறக்கின்றனர். அங்கே அம்பேரிக்காவில் தொற்று நாளுக்கு நாள் அதிகமாகி வருவதாகத் தொலைக்காட்சிச் செய்திகள் சொல்கின்றன. எங்கள் பெண்ணும் சொன்னாள். சின்னவளைப் பள்ளிக்கு அனுப்ப வேண்டிய கட்டாயம். அவளுக்கு மனசே இல்லை. அனுப்பி விட்டு வீட்டில் திக், திக் என்று இருக்கு என்கிறாள். என்ன செய்ய முடியும். மாஸ்க் எல்லாக் குழந்தைகளும் போடுவதில்லையாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பேரனுக்கு ஆகஸ்ட் மாதம் முதல் பள்ளி ஆரம்பித்து போய் வருகிறான்.
      இரண்டு ஊசி போட்டு விட்டாலும் பள்ளி போய் வருவது பயமாகத்தான் இருக்கிறது.

      இங்கும் மாஸ்க் எல்லா குழந்தைகளும் போடுவதில்லை.

      //செப்டெம்பர் ஒன்றாம் தேதி முதல் பள்ளிகள்/கல்லூரிகள் திறக்கின்றனர்//

      எல்லா குழந்தைகளும் நலமாக இருக்க வேண்டும்.
      உங்கள் கருத்துகளுக்கு நன்றி.


      நீக்கு
  12. அன்பின் கோமதிமா,
    வாழ்க வளமுடன்.

    சூரியப் பதிவும் மிகவும் அருமை.
    படங்கள் உயிர்ப்புடன் ஒளிவிடுகின்றன. '

    ஆவணி மாதச் சூரியனுக்குத் தான் எத்தனை வணக்கங்கள் சொல்லி இருக்கிறீர்கள்.!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்

      //சூரியப் பதிவும் மிகவும் அருமை.
      படங்கள் உயிர்ப்புடன் ஒளிவிடுகின்றன. //

      நன்றி அக்கா.

      //ஆவணி மாதச் சூரியனுக்குத் தான் எத்தனை வணக்கங்கள் சொல்லி இருக்கிறீர்கள்.!!!//

      இங்கு இருக்கும் வரை பார்த்து மகிழ்வதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். ஆவணி மாதம் விரதம் இருப்பேன், ஒவ்வொரு ஞாயிறும் விரதம் இருப்பேன் இப்போது ஒன்று இல்லை. நேரில் பார்த்து வணக்கம் மட்டுமாவது செய்வோம்.

      '

      நீக்கு
  13. நாமக்கல் கவிஞர் பாடல் இதுவரை படித்ததில்லை.
    அத்தனையும் முத்துக்களான சொற்கள்.

    குழந்தைகளுக்கு எளிமையில் புரியும் விதமாக
    அருமையாக எழுதி இருக்கிறார்.
    படிக்கக் கொடுத்தமைக்கு நன்றி மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நாமக்கல் கவிஞர் பாடல் இதுவரை படித்ததில்லை.
      அத்தனையும் முத்துக்களான சொற்கள்.//

      ஆமாம் அக்கா.

      //குழந்தைகளுக்கு எளிமையில் புரியும் விதமாக
      அருமையாக எழுதி இருக்கிறார்//

      ஆமாம் அக்கா.
      உங்களுக்கு இந்த பாடல் பிடித்து இருப்பது மகிழ்ச்சி.

      நீக்கு
  14. சூரிய ஒளியால் நோய்க்கிருமிகள் அழியத்தான் செய்யும். இந்த ஊரில்
    வெய்யிலை மிகவும் கொண்டாடுகிறார்கள்.
    அதிகப் படியான கதிர்சக்தி எடுத்துக் கொள்ளாவிட்டாலும் காலையில் சூரிய நமஸ்காரம் கண்களுக்கு மிக நன்மை.

    உங்கள் அம்மாவும் இந்த சூரிய வணக்கம் செய்தது
    அப்படியே உங்களுக்கும் வந்திருக்கிறது.
    படங்கள் அவ்வளவு தெளிவாக இருக்கிறது.
    படிப்படியாகக் கதிரவன் வெளி வருவதைப் படம் எடுத்திருக்கிறீர்கள்.
    மனம் நிறை பாராட்டுகள் அம்மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெயிலின் அருமை அவர்களுக்கு நன்கு தெரியும். குளி பிரதேஷங்களில் வெய்லை கொண்டாடுவது இயற்கை தானே!

      //அதிகப் படியான கதிர்சக்தி எடுத்துக் கொள்ளாவிட்டாலும் காலையில் சூரிய நமஸ்காரம் கண்களுக்கு மிக நன்மை.//

      ஆமாம் அக்கா. முன்பு வயதானவர்கள் எல்லாம் காலை சூரிய வணக்கம் சொல்லாமல் சாப்பிட மாட்டார்கள். அவர்கள் கண்கள் நன்றாக இருந்தது உண்மை.

      //உங்கள் அம்மாவும் இந்த சூரிய வணக்கம் செய்தது
      அப்படியே உங்களுக்கும் வந்திருக்கிறது.
      படங்கள் அவ்வளவு தெளிவாக இருக்கிறது.//

      நன்றி அக்கா.

      உங்கள் அன்பான கருத்துக்கும், பாராட்டுக்களுக்கும் நன்றி அக்கா.

      நீக்கு
  15. படங்கள் அழகு.

    எங்கள் அம்மா குளித்தபின் சூரியனுக்கு பூப்போட்டு கும்பிடுவார். இதேவழக்கம் எங்கள் பக்கத்து வீட்டு மாமிகளிடமும் இருந்தது கண்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்

      //படங்கள் அழகு.//

      நன்றி.

      //எங்கள் அம்மா குளித்தபின் சூரியனுக்கு பூப்போட்டு கும்பிடுவார். இதேவழக்கம் எங்கள் பக்கத்து வீட்டு மாமிகளிடமும் இருந்தது கண்டிருக்கிறேன்.//

      ஆமாம், அப்போது எல்லாம் சூரிய நமஸ்காரம் செய்யாமல் சாப்பிட மாட்டார்கள்.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  16. அனைத்துமே அழகான படங்கள் மா. தகவல்களும் சிறப்பாக இருக்கிறது.

    தீநுண்மி வேதனையிலிருந்து அனைவரும் மீண்டும் சிறப்புற வாழ எனது பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு