ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2021

காலை பொழுதே வருக ! வருக !


ஞாயிறு போற்றுதும் ! ஞாயிறு போற்றுதும்! 

"ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்
காவிரி நாடன் திகிரிபோல் பொற்கோட்டு 
மேரு வலம்திரி தலான்."

சூரியனை போற்றி பாடும் பாடல்

- மங்கல வாழ்த்துப் பாடல் , சிலப்பதிகாரம்

 காலை பொழுது வரும் சூரியன்  நம் மனதுக்கு மகிழ்ச்சியும் உடலுக்கும் நலமும் கொடுக்கும். 

ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு கிழமை  சிறப்பு.  ஆவணி மாதம் ஞாயிற்றுக்கிழமை  சிறப்பு. சூரிய வழிபாடு பழமையான வழிபாடு. சூரியன் ஒவ்வொரு பருவ காலத்திலும்  ,ஒவ்வொரு வண்ணத்தில் காட்சி தருவாராம். வசந்த காலத்தில் பொன் வண்ணம்(தங்க நிறம்) , கோடை காலத்தில் செண்பகப்பூ நிறம், மழைக்காலத்தில் வெண்மை நிறம், முன்பனிக்காலம் தாமரை நிறம் ,பின் பனிக்காலம் சிவப்பு நிறம் .

 ஆடி வெள்ளி சிறப்பு  , அது போல  ஆவணி ஞாயிறு சிறப்பு  .
நாங்கள் ஆவணி ஞாயிறு சூரியனுக்கு பொங்கல் வைத்து வணங்குவோம்.

இந்த மாதம்  (ஆகஸ்டு) 22 ம் தேதி ஆவணி ஞாயிறு வருகிறது. 

வீட்டு வாசலில்  ஆவணி மாதம்  அதிகாலையில் சூரியனுக்கு பொங்கல் வைக்கும் காட்சி ( தங்கை வீடு மதுரை)
சூரியனை சிறிது நேரம் பார்த்துக் கொண்டு இருந்தால் போதும். உணவே தேவையில்லை என்று ஆராய்ச்சி செய்து விஞ்ஞானிகள் சொல்லிய உண்மையை  நம் முன்னோர்கள் முன்பே சொல்லி இருக்கிறார்கள்.  பிறந்த குழந்தையின் எலும்புகள் பலம் பெற உடலில்  தேங்காய் எண்ணெய் தடவி சிறிது நேரம் வெயிலில்  படுக்க வைப்பார்கள் , குழந்தை கை காலை ஆட்டி விளையாடும் .  அது குழந்தைக்கு நல்ல உடற்பயிற்சி. எலும்புகளுக்கு நல்ல பலம் தரும். 

இப்போது கால்வலி, முட்டி வலி என்று மருத்துவரிடம் போனால் அவர்கள் ஏதாவது எண்ணெய் கொடுத்து தடவி கொண்டு சிறிது நேரம் காலைவெயிலில் இருக்கச் சொல்கிறார்கள்.

உடற்பயிற்சி , சூரிய நமஸ்காரம் செய்பவர்களும் அதிகாலை நேரம் தான் செய்வார்கள்.

அதிகாலை மகன் வீட்டுத் தோட்டத்திலிருந்து சூரியனைப்  பார்ப்பது பிடிக்கும் எனக்கு. அப்படியே வணங்கி கொள்வேன் சூரியனை.
 அப்போது நான் எடுத்த படங்கள் இந்த பதிவில் வருகிறது.


கதிரவன்  மலை மேல்  எழுவதைப் பார்க்கும்  போது இந்த பாடல்கள் நினைவுக்கு வரும்.

கதிரவன் குணதிசைச் சிகரம் வந்து அணைந்தான்
கனை இருள் அகன்றது காலை அம் பொழுதாய்
மது விரிந்து ஒழுகின மா மலர் எல்லாம்
வானவர் அரசர்கள் வந்து வந்து ஈண்டி
எதிர் திசை நிறைந்தனர் இவரொடும் புகுந்த
இருங்க் களிற்று ஈட்டமும் பிடியொடு முரசும் 
அதிர்தலும் அலை கடல் போன்றுளது எங்கும்
அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே

- தொண்டரடிப் பொடியாழ்வாரின்  திருப்பள்ளியெழுச்சி

தேன் அதிகம் உள்ள பூக்கள்.  இலை தெரியாமல் பூக்கும். பார்க்க டிசம்பர் பூ போல் இருக்கும். காலை நேரம் அத்தனை தேனீக்களும் வந்து விடும்.

போன முறை இங்கு வந்து இருந்த போது ஒரு பூங்காவில் எடுத்த தாமரை பூ

போற்றி ! என் வாழ்முதல் ஆகிய பொருளே!
புலர்ந்தது ; பூங்கழற் கிணைதுணை மலர் கொண்டு
ஏற்றிநின்  திருமுகத்  தெமக்கருள் மலரும்
எழில்நகை  கொண்டுநின் திருவடி தொழுகோம்;
சேற்றிதழ்க் கமலங்கள்  மலரும்தண் வயல்சூழ்
ஏற்றுயர் கொடியுடையாய்! எமை உடையாய்! 
எம்பெருமான் ! பள்ளி எழுந்தருளாயே!

- மாணிக்கவாசகர்  அருளிய திருப்பள்ளியெழுச்சி


கதிரவன் வரவு கண்டு கமல முகம் மலர்ந்தது.
மலர்கோலத்தில் சூரியனும் தாமரையும் (நான் போட்ட மலர் கோலம்.)கடி - மலர்க் கமலங்கள் மலர்ந்தன இவையோ 
கதிரவன் கனைகடல் முளைத்தனன் இவனோ
துடியிடையார் சுரி சூழல் பிழிந்து உதறித்
துகில் உடுத்து ஏறினர் சூழ்  புனல் அரங்கா
தொடை ஒத்த துளவமும் கூடையும் பொலிந்து 
தோன்றிய தோள் தொண்டரடிப் பொடி என்னும் 
அடியனை அளியன் என்று அருளி உன் அடியாருக்கு
ஆட்படுத்தாய் பள்ளி எழுந்தருளாயே

- தொண்டரடிப் பொடியாழ்வாரின்  திருப்பள்ளியெழுச்சி 


 அதிகாலை பொழுதில் கதிரவன்  வரும் முன் வானம் 
கதிரவன் வண்ணத்துரிகையால்  தீட்டிய ஓவியம்
செவ்வானம்


மகன் வீட்டுத்தோட்டத்திலிருந்து எடுத்த படங்கள்.


பருதியின் பேரொளி வானிடைக்  கண்டோம்;
பார்மிசை நின்னொளி காணுதற்கு அலைந்தோம்;
கருதிநின் சேவடி அணிவதற்கு என்றே
கனிவுறு நெஞ்சக மலர்கொடு வந்தோம்;
சுருதிகள் பயந்தன ; சாத்திரம் கோடி
சொல்லரு மாண்பின் ஈன்றனை அம்மே!
நிருதர்கள் நடுக்குறச் சூழ்கரத்து ஏற்றாய்!
நிர்மலையே பள்ளி யெழுந்தருளாயே!
பாரத மாதா திருப்பள்ளி எழுச்சி.

- மகா கவி பாரதியார் 


மகன் வீட்டுத் தோட்டத்தில் பூத்த மலர்கள்அருணன் இந்திரன்திசை அணுகினன்; இருள்போய்
அகன்றது ; உதயம்நின் மலர்திரு முகத்தின்
கருணையின் சூரியன் எழஎழ , நயனக்
கடிமலர் , மலர, மற்றண்ணல் அங்கண்ணாம்
திரள்நிரை அறுபதம் முரள்வன; இவையோர்
திருப்பெருந் துறையுறை சிவபெருமானே;
அருள்நிதி தரவரும் ஆனந்த மலையே;
அலைகடலே; பள்ளி எழுந்தருளாயே!
- மாணிக்கவாசகர்


சூரிய உதயம் கண்டு இதய தாமரை மலர்கிறது. இதயத்திற்கும் நல்லது சூரிய வழிபாடு.

சூரிய உதயம் பார்க்க பார்க்க மகிழ்ச்சியை தருகிறது. இன்னும் வரும் சூரிய உதயக் காட்சிகள். 

மனபலம், உடல் பலம் தரும் சூரியனை வணங்கி நலம் பெறுவோம்.  நோய் நொடி இல்லா ஆரோக்கிய வாழ்வுக்கு சூரிய வழிபாடு , விரதங்கள் நலம் பயக்கும். இப்போது உள்ள  தீ நுண்மியை சூரியன் சுட்டு பொசுக்கி அழித்து அனைவருக்கும் நல வாழ்வை அருள வேண்டும்.

சீலமாய் வாழச் சீரருள் புரியும்
ஞாலம் புகழும் ஞாயிறே போற்றி
சூரியா போற்றி சுதந்திரா போற்றி
வீரியா போற்றி வினைகள் களைவாய் !

அனைவருக்கும் 75 வது  இனிய சுதந்திர தின நல்  வாழ்த்துக்கள்.

வாழ்க வையகம் ! வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன்!
 --------------------------------------------------------------------------------------------------

35 கருத்துகள்:

 1. அருமையான ஞாயிறுப் பதிவும் பாடல்களும்.
  அன்பு கோமதிமா வாழ்க வளமுடன்.

  இங்கும் இப்போது இரண்டு நாட்களாகக் கதிரவனைக் காண
  முடிகிறது. காலையும் மாலையும்
  வானம் விரிந்து செல்லும் வண்ணங்கள் இந்த ஊரில் தான்
  பார்க்கிறேன்.
  நம் ஊரில் கட்டிடங்கள் கதிரவனையும்,
  சந்திரனையும் மறைத்து விடும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்

   //வானம் விரிந்து செல்லும் வண்ணங்கள் இந்த ஊரில் தான்
   பார்க்கிறேன்.
   நம் ஊரில் கட்டிடங்கள் கதிரவனையும்,
   சந்திரனையும் மறைத்து விடும்//

   ஆமாம், அக்கா மதுரையில் மொட்டை மாடி போனால்தான் சூரியன் , சந்திரனை பார்க்க முடியும். வீட்டிலிருந்து தெரியாது. அல்லது காலை மாலை நடைபயிற்சிக்கு கீழே இறங்கி போனால் பார்க்கலாம்.

   நீக்கு
 2. கட்டபொம்மன் படத்தில் வரும் ஒரு வசனம்
  நினைவுக்கு வருகிறது:)
  பானர் மான் துரை ,'பொம்மனிடம் சவால் விடுவார்.
  அதற்க்கு கட்டபொம்மன் சூரியனே வேண்டாம் என்று சொன்ன பெண்கள்
  எங்கள் ஊரில் உண்டு என்று சூளுரைப்பார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கட்டபொம்மன் வசனம் நினைவுக்கு வந்து விட்டதா உங்களுக்கு?
   சூரியனை மறைய சொன்னதும், தோன்ற செய்வதும் புராணங்களில் உண்டுதான்.

   நீக்கு
 3. அத்தனை படங்களும் வெளிச்சத்தை அள்ளி வீசுகின்றன.
  வானம் எனக்கொரு போதி மரம்,
  நாளும் எனக்கொரு சேதி தரும் என்று பாடலாம்.
  ஆரஞ்சும், நீலமும், மஞ்சளும்
  மலைவாயில் எழும் அழகும்
  அருமை.
  ''உதிக்கின்ற செங்கதிர் உச்சித்திலகம்'' அபிராமி அந்தாதியின் அழகும்
  அம்மனின் பொன் வண்ணமும்
  மனதில் தோன்றுகின்றன.
  தொண்டரடிப் பொடியாரும், மாணிக்க வாசகரும்
  ஆடி, ஆவணி மாதங்களில் உங்கள்
  பதிவில் வந்து அலங்கரிக்கிறார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சூரியனை இங்கு மறையும் போது பார்ப்பதற்கு இடம் ஒவ்வொரு இடங்களில் வைத்து இருக்கிறார்கள். சூரிய உதயம் பார்க்க அப்படி வைத்து இருக்கிறார்களா என்று கேட்க வேண்டும் மகனிடம்.
   நாம் சூரியன் வரைந்தால் இரண்டு மலைகளுக்கு நடுவில் வரைவோம். அது போலவே இங்கு பார்க்கலாம். நாலு பக்கம் மலைகள் சூழ வாழ்கிறார்கள் இங்குள்ள மக்கள்.

   //உதிக்கின்ற செங்கதிர் உச்சித்திலகம்'' அபிராமி அந்தாதியின் அழகும்
   அம்மனின் பொன் வண்ணமும்
   மனதில் தோன்றுகின்றன.//

   அபிராமி அந்தாதி முதல் பாடல் சூரியன் உலகத்து இருளை போக்குபவர், அன்னையோ மக்களின் மன இருளை போக்குபவள். அவள் மனதில் தோன்றியது அருமை.

   //தொண்டரடிப் பொடியாரும், மாணிக்க வாசகரும்
   ஆடி, ஆவணி மாதங்களில் உங்கள்
   பதிவில் வந்து அலங்கரிக்கிறார்கள்.//

   முன்பு அடிக்கடி பாடும் பாடல்கள், மார்கழி மாதம் மாணிக்கவாசகர் திருப்பள்ளியெழிச்சி , பாடுவோம். அன்பர்களின் பாததுளியை தலைமேல் பூசி கொண்ட தொண்டரடிப் பொடியாழவார் பாடிய கதிரவன் குணதிசை பாடல் மிகவும் பிடித்த பாடல் சீர்காழி அவர்களின் கணீர் வெண்கல குரலில் இந்த பாடல் கேட்போம்.
   பாரதியின் பாட்டு பிடித்த பாடல். அவர் இயற்கையை ரசித்து எழுதிய பாடல்கள் எல்லாம் பிடிக்கும். படத்திற்கு பயன் படுத்திக் கொண்டேன்.
   உங்களுக்கு பிடித்து இருப்பது அறிந்து மகிழ்ச்சி.


   நீக்கு
 4. ஆடி ஞாயிறுகளில் கூழ் காய்ச்சி கொண்டாடுவார்கள்.    அடுத்து ஆவணி ஞாயிறுகளும் விசேஷமானவை போல.  தினம் இருபது நிமிஷங்களாவது உடம்பில் சூரிய ஒளி படும்படி நிற்கச் சொல்கிறார்கள்.  அது முடியாதவர்கள் D3 வகை மருந்துகளை வாரம் ஒருமுறை எடுத்துக் கொள்கிறார்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
   ஆமாம், ஆடி ஞாயிறு , ஆடி வெள்ளிகளில் கூழ் காய்ச்சி கொண்டாடுவார்கள்.
   ஆவணி ஞாயிறும் அம்மனுக்கு விசேஷமான தினம்தான். சூரியனுக்கு எங்கள் பக்கம் (திருநெல்வேலி) பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம்.

   வெயிலில் நிற்க முடியாதவர்கள் D3 வகை மருந்துகளை வாரம் ஒருமுறை எடுத்துக் கொள்கிறார்கள் போலும்.

   நீக்கு
 5. புகைப்படங்கள் அருமை. திருப்பள்ளியெழுச்சி பாடல்கள் குதூகலம் தருகின்றன. என்ன தமிழ்.. மலர்களால் நீங்கள் அமைக்கும் கோலங்கள் அற்புதம். பேஸ்புக்கில் நானும் அவற்றை வரிசையாகக் கண்டு ரசித்து வருகிறேன்,

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //புகைப்படங்கள் அருமை//
   நன்றி ஸ்ரீராம்.

   திருப்பள்ளியெழுச்சி பாடல்கள் குதூகலம் தருகின்றன. என்ன தமிழ்.//

   ஆமாம், நமக்கு புரிகிறமாதிரி இருக்கும் தமிழ் பாடல்களை படித்தால் குதுகலம்தான்.

   //மலர்களால் நீங்கள் அமைக்கும் கோலங்கள் அற்புதம். பேஸ்புக்கில் நானும் அவற்றை வரிசையாகக் கண்டு ரசித்து வருகிறேன்,//

   பார்த்தேன் நீங்கள் லைக் செய்வதை.

   காலை பொழுது மன ஆறுதலாக போகிறது. சார் படத்தின் முன் , இறைவன் திருவுருவங்கள் முன் மலர் கோலங்கள் போட்டு அலங்காரம் செய்கிறேன்.


   நீக்கு
 6. சிலப்பதிகாரப் பாடல், திருப்பள்ளியெழுச்சி பாடல்கள், பாரதியார் பாடல் என தேடித்தேடி அழகிய காலைப்பொழுதில் சூரிய பாடல்களை பகிர்ந்துள்ளது சிறப்பு.  பாரதிதாசனின் 'காலை இளம்பருதியிலே' கூட பொருத்தமானது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரீராம் நான் எடுத்த சூரியன் படங்களை இங்கு சேமித்து விட ஒரு பதிவு. இன்னும் அதிக்காலை சூரியன் படங்கள் இருக்கிறது அதற்கு அந்த பாடல் எடுத்து வைத்து இருக்கிறேன்.

   //சிலப்பதிகாரப் பாடல், திருப்பள்ளியெழுச்சி பாடல்கள், பாரதியார் பாடல் என தேடித்தேடி அழகிய காலைப்பொழுதில் சூரிய பாடல்களை பகிர்ந்துள்ளது சிறப்பு//
   உங்களுக்கு பிடித்து இருப்பது மகிழ்ச்சி.
   உங்கள் கருத்துக்களூக்கு நன்றி.

   நீக்கு
 7. நாடு வாழ்க..
  நாடெங்கும் நலம் வாழ்க...

  சுதந்திர தின நல்வாழ்த்துகளுடன்..
  துரை செல்வராஜூ..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்
   சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்.
   நாடெங்கும் நலம் வாழ்க

   நீக்கு
 8. வணக்கம் சகோதரி

  பதிவு அருமை. செங்கதிரவனின் படங்களை ஞாயறன்று பகிர்ந்தது சிறப்பு. சூரியன் பருவ நிலைகளுக்கேற்ப மாறும் கலர்களைப் பற்றி தெரிந்து கொண்டேன். அத்தனைப் படங்களையும் இயற்கை, சூரியனின் தினசரி வரவை ரசித்துப் போற்றியபடி, தன் வண்ணத்தூரிகையால் வரைந்தது போன்ற அமைப்பை ரசித்தேன். மிகப் பொறுமையாக அழகாக சூரியோதய படங்களை எடுத்திருக்கிறீர்கள். அதற்கு முதலில் வாழ்த்துகள். பாராட்டுக்கள்.

  படிப்படியாக சூரிய கதிர்களில் வானம் நிறம் மாறுவதையும், பளீரென சூரியன் ஜொலிக்கும் படங்களும் மிக அற்புதமாக ஒரு சூரியோதயத்தை நேரில் பார்ப்பது போல் இருந்தன. இங்கு இப்போது காலைச் சூரியனின் காட்சிகளை பார்ப்பது அரிது. ஆனால்,கோடையில் ஆரம்பம் முதற்கொண்டு பார்க்கலாம். அதுவும் நாங்கள் வசிக்கும் அப்பார்ட்மெண்ட்டில் கிழக்கே பார்த்த வாசல் என்றாலும், எதிரில் குடியிருப்புகள் இருப்பதால், காலை சூரியகாட்சியை பார்க்க முடியாது. மொட்டை மாடிக்குச் சென்றால் பார்க்கலாம். மாலை பால்கனி வழியாக நானும் மேற்கே செல்லும் சூரியனால் வானம் மாறும் காட்சிகளை அவ்வப்போது கைப்பேசியில் எடுப்பேன். ஆனால், அது அவ்வளவாக உங்கள் படங்களை போல தெளிவாக இருக்காது.

  ஞாயறைப் போற்றும் பாடல்கள் அத்தனையும் அருமை. ஆவணி ஞாயறு எங்கள் அம்மாவும் விரதம் இருப்பார்கள். ஆடிச் செவ்வாய், தை வெள்ளி, ஆவணி ஞாயிறு, கார்த்திகை திங்கள். புரட்டாசி சனிக்கிழமை என, மாதங்களுக்கு ஒரு நாள் ஒரு சிறப்பை வைத்த நம் முன்னோர்களின் செயலில் நல்ல சுபமான கருத்துகள் உள்ளது.

  தாங்கள் போட்ட மலர் கோலம் நன்றாக உள்ளது. மலர்களின் படங்கள் கண்களை கவர்கிறது. இலை தெரியாமல் மலர்ந்திருக்கும் வயலட் கலர் பூக்கள் படம் அழகாக உள்ளது. தாமரையின் அழகும் அருமை. அத்தனையும் ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்

   //செங்கதிரவனின் படங்களை ஞாயறன்று பகிர்ந்தது சிறப்பு.//
   வரப்போகும் ஆவணி ஞாயிறுக்கு பகிர்ந்தேன் இந்த பதிவை.

   //தன் வண்ணத்தூரிகையால் வரைந்தது போன்ற அமைப்பை ரசித்தேன்.//
   உங்களுக்கு எல்லாம் பிடிக்கும் என்பதால்தான் நானும் பகிர்ந்தேன் உங்களுக்கு பிடித்து இருப்பது அறிந்து மகிழ்ச்சி.

   //நாங்கள் வசிக்கும் அப்பார்ட்மெண்ட்டில் கிழக்கே பார்த்த வாசல் என்றாலும், எதிரில் குடியிருப்புகள் இருப்பதால், காலை சூரியகாட்சியை பார்க்க முடியாது. //

   நான் இருக்கும் மதுரை வீடும் அப்படித்தான். மதியம் 12 மணிக்கு சூரியன் தெரிவார். மாலைச்சூரியனும் தெரிய மாட்டார். கீழே போய் எடுப்பேன். இரண்டு புறமும் வீடுகள் மறைக்கும். எங்கள் வீடு மத்தியில் இருக்கிறது.

   நாங்கள் பல வருடமாக என் அம்மா சொன்னதால் எல்லா மாதமும் ஞாயிற்றுக்கிழமை விரதம் இருந்து வந்தோம். எங்கள் வீட்டில் நான், என் கண்வர், மகள், மகன் எல்லோரும் விரதம் இருந்தோம்.

   அவர்கள் திருமணம் ஆனதும் விட்டு விட்டார்கள். நானும் என் கணவரும் இரண்டு வருடங்களுக்கு முன் தான் விட்டோம். திருவெண்காடு அகோரமூர்த்திக்கு ஆவணி ஞாயிறு சிறப்பு அவரை நினைத்தும் சூரியனை நினைத்தும் விரதம் இருந்தோம். எங்கள் குடும்பத்தில் எல்லோரும் ஆவணி ஞாயிறு மட்டும் விரதம் இருப்பார்கள்.

   கார்த்திகை சோமாவாரம், புரட்டாசி சனிக்கிழமை விரதம் உண்டு ஷஷ்டி விரதம் இருந்தோம், நானும் என் கணவரும்.

   தாங்கள் போட்ட மலர் கோலம் நன்றாக உள்ளது//
   நன்றி.

   நான் போட்ட மலர் கோலங்கள் நிறைய இருக்கிறது பதிவு போட வேண்டும்.

   வைலட் கலர் பூ ரக ரகமாய் உள்ளது. கொஞ்ச நாள் இலைகளே தெரியாமல் பூக்கும் அப்புறம் ஒரு பூ கூட இருக்காது.

   அந்த தாமரை பூ தரையில் பூத்த அதிசயம். நீரில் பூக்கவில்லை.

   பதிவில் அனைத்தையும் ரசித்து கருத்துக்களை விரிவாக சொன்னதற்கு நன்றி.   நீக்கு
  2. வணக்கம் சகோதரி

   /அந்த தாமரை பூ தரையில் பூத்த அதிசயம். நீரில் பூக்கவில்லை./

   அப்படியா? தரையில் என்றால் மண் தரையிலா? அந்த மண்ணின் ஈரத்தையை உரமாக்கி கொண்டு, போதுமென்ற மனதோடு வளருகிறதா? அதிசயந்தான்..! இப்போதுதான் அந்த படத்தை விரிவாக்கிப் பார்த்தேன்.

   "தாமரை தடாகத்தில்" என்ற பெயரே அதற்குதானே..! இலைகளும் பச்சை பசேலென்று, பூவும் மொட்டு விரிய தொடங்கும் அழகும், அது தரையில் பூததிருக்கிறது என்பதை அறிய ஆச்சரியமாக உள்ளது. பூங்கா என்றீர்களே..!அதில் நடுவில் ஏதேனும் செயற்கை குளம் மாதிரி வைத்திருக்கிறார்களோ என நினைத்தேன். ஆச்சரியமாகதான் உள்ளது .. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
  3. நான் அந்த பழைய பதிவை தேடி தருகிறேன் உங்களுக்கு. 2013ல் நியூஜெர்சியில் இருந்தான் மகன் அப்போது கூட்டி போன இடத்தில் பார்த்தது. ஆற்றின் கரையில் இருக்கும் நாணல் புற்களோடு வளரருவது போல் வளர்ந்து இருந்தது.
   தாமரை தாடகம் இல்லை தான். "வெள்ளத்னைய மலர் நீட்டம் என்பார்கள் "
   சிறிது நீரில் வளர்ந்து இருந்தது.
   மீண்டும் வந்து கருத்து சொன்னதற்கு நன்றி.

   நீக்கு
 9. இனிய சுதந்திர தின வாழ்த்துகள் சகோ

  படங்கள் அனைத்துமே மிகவும் சிறப்பாக. சிரத்தையோடு காத்திருந்து எடுத்து இருக்கின்றீர்கள் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

   //இனிய சுதந்திர தின வாழ்த்துகள் சகோ//
   நன்றி. உங்களுக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்


   //படங்கள் அனைத்துமே மிகவும் சிறப்பாக. சிரத்தையோடு காத்திருந்து எடுத்து இருக்கின்றீர்கள் வாழ்த்துகள்.//

   நன்றி.

   உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.


   நீக்கு
 10. ஒவ்வொரு படமும் அருமை...

  இனிய சுதந்திர தின வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
   உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

   நீக்கு
 11. அருமையான ஞாயிறுப் பதிவு! பற்பல வண்ணங்களில் சூரியன் காட்சி தருவான் என்பதை நானும் முன்னர் படித்திருக்கிறேன். அழகான வானக்கோலங்களையும் உங்கள் மலர்க்கோலங்களையும் அளித்து ரசிக்கத்தந்தமைக்கு நன்றி. சிரத்தையாகப் படம் எடுக்கிறீர்கள். எல்லாப் படங்களும் அழகு. மகன் வீட்டுத்தோட்டத்து மலர்களின் சிரிப்பும் கண்களையும் மனதையும் கவர்ந்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கீதா சாமபசிவம், வாழ்க வளமுடன்

   //பற்பல வண்ணங்களில் சூரியன் காட்சி தருவான் என்பதை நானும் முன்னர் படித்திருக்கிறேன்.//
   நானும் படித்த செய்தியை பகிர்ந்து இருக்கிறேன்.

   //அழகான வானக்கோலங்களையும் உங்கள் மலர்க்கோலங்களையும் அளித்து ரசிக்கத்தந்தமைக்கு நன்றி.//

   ஆஹா ! அருமை வானக் கோலங்கள் என்று சொன்னதை ரசித்தேன்.

   உங்கள் வரவு மகிழ்ச்சி அளித்தது. உடல் நிலை சரியாகி இருக்கும் என்று நம்புகிறேன்.

   உங்கள் கருத்துக்கு நன்றி.   நீக்கு
 12. சிலப்பதிகாரம், தேவாரம், திவ்ய ப்ரபந்தம் - எனத் தொடங்கி மகாகவியின் பாடல் வரை பதிவு முழுதும் ஒளி வீசும் பாடல்கள்...

  உதய காலத்தின் படங்கள் உள்ளத்தைக் கொள்ளை கொள்கின்றன.

  ஞாயிறு போற்றுதும்..
  ஞாயிறு போற்றுதும்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோ துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்

   //சிலப்பதிகாரம், தேவாரம், திவ்ய ப்ரபந்தம் - எனத் தொடங்கி மகாகவியின் பாடல் வரை பதிவு முழுதும் ஒளி வீசும் பாடல்கள்...

   உதய காலத்தின் படங்கள் உள்ளத்தைக் கொள்ளை கொள்கின்றன.//

   உங்கள் கருத்துக்கு நன்றி.
   ஞாயிறு போற்றுதும்
   ஞாயிறு போற்றுதும்.   நீக்கு
 13. எழுஞாயிறு, சூரியக் காட்சிகளும் மிக அருமையாக இருக்கிறது.

  வீட்டில் பொங்கல் படத்தைப் பார்த்ததும், அந்த ஊரில் இது சாத்தியமா என்று யோசித்தேன். பிறகு தங்கை வீட்டில் நடந்த நிகழ்வு என்பதை அறிந்தேன்.

  //கனை இருள்// - கன இருள். //ங்க் களி// - இருங் களிற்று //அதிர்தலும் அலை//-அதிர்தலில் அலைகடல்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்

   //எழுஞாயிறு, சூரியக் காட்சிகளும் மிக அருமையாக இருக்கிறது.//

   நன்றி.

   மருமகள் இங்கு தோட்டத்தில் விறகு அடுப்பில் தான் பொங்கல் வைபாள், மகனே செய்த மண்பானையில் வைத்து இருக்கிறார்கள், வெண்கலப்பானையில் வைத்து இருக்கிறார்கள். இங்கு சாத்தியமே!
   ஆவணி ஞாயிறு 17ம் தேதிதான். தங்கை வீட்டில் போன வருடம் வாசலில் வைத்த பொங்கல் காட்சி இது.


   //கனை இருள்// - கன இருள். //ங்க் களி// - இருங் களிற்று //அதிர்தலும் அலை//-அதிர்தலில் அலைகடல்

   பாடல் விளக்கத்திற்கு நன்றி.
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 14. படங்கள் அனைத்தும் அழகு. குறிப்பாக சூரியனின் படங்கள். மிகவும் ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்

   படங்களை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

   நீக்கு
 15. ஞாயிறு போற்றும் படங்கள் யாவும் அருமை. வயலட் பூக்கள், தாமரை, பூக்கோலம் அழகு. மலைகளுக்குப் பின்னே வானின் வர்ண ஜாலங்கள் கண்ணைக் கவருகின்றன.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
   பதிவில் அனைத்தையும் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

   நீக்கு
 16. அதிகாலை சூரிய வணக்கமும் மலர்களும் இறைவளிபாட்டுத் துதியும் என மனம் கவர்ந்த பகிர்வு .படங்களும் சிறப்பு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
   பதிவும் படங்களும் உங்கள் மனம் கவர்ந்தது என்பதை கேட்கும் போது மகிழ்ச்சி.
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 17. வானின் வர்ண ஜாலங்கள் ..ஆஹா

  பதிலளிநீக்கு