திங்கள், 15 மார்ச், 2021

ஆலங்கட்டி மழைமாடி  பால்கனியில் குவிந்து இருந்த பனிக்கட்டி மழை(ஆலங்கட்டி மழை) துகள்களை   சேகரித்து எனக்கு காட்ட எடுத்து வந்தான் மகன்

அரிசோனா குறைவான மழை பொழிவு உள்ள பாலைவனப்பகுதி. அங்கும் இந்த முறை இரண்டு நாள் பனிபொழிவு இருந்தது. அது பனிப்பொழிவு இல்லை என்றாலும் பனிக்கட்டி தானே! ஆலங்கட்டி மழை என்கிறார்கள். வெளியே குளிர் இருந்த காரணத்தால்  கரைந்து போகாமல் இரண்டு நாள் இருந்தது.

  படத்தில் இராண்டாவதில்  இருப்பது போலதான் ஆலங்கட்டி மழை பெய்தது.


 பனிபொழிவு சிறிது இருந்த போது  எடுத்த படங்கள் இந்த பதிவில். மற்றும் மகன் முன்பு நியூஜெர்சியில் இருந்த போது  செய்த பனி சிற்பங்களின்  படங்கள் இடம் பெற்று இருக்கிறது.

வீட்டின் பின் பகுதி  
பின் பக்கம் தோட்டத்திலிருந்து எடுத்த படம்

மகன் வீட்டில் இருந்து பார்த்தால் மலைத்தொடர் மிக அருமையாக இருக்கும்.
வெயில் , மழை மேகம், வெண்மேகம் இவற்றால் மலை நிறம் மாறி கொண்டே இருப்பது பார்க்க அழகு. 
மகன் வீட்டு மாடி பால்கனியிலிருந்து எடுத்த படம் ஒரே நாளில் மூன்று பக்க மலைகளும் காட்டிய வெவ்வேறு தோற்றம்.

                                  ஆலங்கட்டி மழை பெய்த போது எடுத்த படங்கள்


சிறு சிறு ஜவ்வரிசி முத்துக்கள் உதிர்வது போல் பார்க்க அழகாய் இருந்தது முதல் நாள் அது அப்படியே கரைந்து விட்டது. தங்கைக்கு படம் அனுப்பிய போது ஆலங்கட்டியை எடுத்துவை மருத்துவ பயன்கள் உண்டு என்றாள்.

ஆலங்கட்டிகள் முத்து போல் விழுந்தால் பாதிப்பு இல்லை , நானும் , பேரனும் சிறிது ஆலங்கட்டி மழையில் நனைந்தோம். உடையை நனைக்கவில்லை.

பெரிது பெரிதாக பனிக்கட்டிகள் விழுந்தால்  பாதிப்பு.

 அடுத்த நாள்  சிறு சதுர கல்கண்டு கட்டிகள் போல விழுந்தது . இரண்டு மூன்று நாள் வரை இருந்தது. ஆலங்கட்டி மழை கீழே விழுந்த போது முத்துக்கள் உருண்டு ஓடியதை போல் இருந்தது சின்ன காணொளிதான் பார்த்து விட்டுச் சொல்லுங்கள்.
                                                
லோகனில் இருந்த போது செய்த பனி மனிதன்
                                              கவின் குட்டியும் பனி மனிதனும் (நியூஜெர்சி)பனிப்புயல் காத்த விநாயகர் நியூஜெர்சியில்  ஜனவரி 2011ல்  பனி புயல் வந்த போது செய்த விநாயகர்.

//மகனும் மருமகளும். போனமுறை பனிமனிதன் செய்து மகிழ்ந்தார்கள் இந்தமுறை விநாயகர். மரங்கள் சாய்கின்றன, போக்குவரத்து பாதிக்கப் படுகிறது. பள்ளி கல்லுரிகள் விடுமுறை அளிக்கிறார்கள். இவர்கள் வீட்டு அருகில் இருந்த மரம் போன பனி புயலில் விழுந்து விட்டது. நல்லவேளை யாருக்கும் எந்த துன்பம் தராமல். இந்த முறை கார் நிறுத்தும் இடத்தின் அருகில் உள்ள மரம் சாய்ந்து நிற்கிறதாம்.கேட்கும் போது பயமாய் இருக்கிறது. கவனமாய் இருங்கள் என்று சொல்கிறோம். அதனால் மருமகள் யாருக்கும் எந்த சேதமும் இல்லாமல் இனி வரும் நாட்கள் இனிதாக இருக்க பிராத்தனை செய்கிறாள். //

- பனிப்புயல் காத்த  விநாயகர் பதிவிலிருந்து அருள்மிகு ஹெர்க்குலேஸ்வரர் மகன் நியூஜெர்சியில்  இருக்கும் போது  செய்த பனி லிங்கம். ஜனவரி 2014ல் செய்த  பனி லிங்கம்.

//அங்கு உள்ள மக்களுக்கு ’ஹெர்க்குலிஸ் பனிப்புயல்’ எந்த விதப் பாதிப்பையும் தராமல் இருக்கப் பிரார்த்தனை செய்துகொண்டார்களாம். பிரசாதமாய் மருமகள் பிரட் அல்வா செய்தாளாம். //

-அருள்மிகு ஹெர்க்குலேஸ்வரர் பதிவிலிருந்து.

பனி போர்வை வெண்ணிறத்தில் மரம், செடி, கொடி எல்லாம்  போர்த்தி இருப்பதைப் பார்க்க அழகுதான். ஆனால் அதனால் ஏற்படும் பாதிப்புக்கள்  இயல்பு வாழ்க்கையை வாழ  முடியாமல் மக்கள் படும் துன்பங்கள்  நீடித்தால் மிகவும் கஷ்டம்.

பல வருடங்களுக்கு முன்  எடுத்த படம். (2004)

குலுமணாலிக்கு   பனிபொழிவைப் பார்க்க போன போது என் மகனும் , என் பேத்தியும். தன் மாமாவுடன்  பனி மனிதனை செய்து விளையாடிய என்பேத்தி 

கோடை காலத்தில் சிம்லா, குலுமணாலி, காஷ்மீர் எல்லாம் பனி பொழிவு இருக்கும்  சமயம் பார்க்க போவார்கள்.  கோடை  காலத்தில் சுற்றுலா செய்யும்   ஒரு நாள், இரண்டு நாள் ரசிக்கலாம். தினம் என்றால்   நமக்கு கஷ்டம்தான்.

மக்கள்  சீதோஷ்ணநிலை மாறுபாட்டால்   இன்ப துன்பங்களை அனுபவித்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

காலமாற்றம் ஏற்படும் போது மழை பெய்யும் அப்படி இரண்டு நாளாக மழை பெய்கிறது இங்கு குளிரும் கொஞ்சம் அதிகமாய் இருக்கிறது. கிராண்ட் கேன்யானில் மலை மீது பனி மழை பொழிகிறது.

இயற்கையின் இந்த காலமாற்றத்தால் ஏற்படும் இடையூறுகளிலிருந்து அனைவரையும் இறை ஆற்றல் காத்து அருள வேண்டும்.

                       வாழ்க வையகம் ! வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன்.
========================================================================

46 கருத்துகள்:

 1. மீதான் 1ஸ்ட்டூஊஊஊஊ:))...

  இந்த ஆலங்கட்டி என்றால் என்னவென்று எனக்கு தமிழில் தெரியாமல் இருந்தது, பாட்டில் வரும்போது யோசிப்பேன், பின்புதான் அறிஞ்சேன் கெய்ல் ஸ்ரோன் எனில் ஆலங்கட்டி எனத் தமிழில் சொல்வார்கள் என்று.. அது ஏன் ஆலங்கட்டி என வந்ததோ தெரியாது...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்
   நீங்கதான் முதலில்
   முந்தின பதிவுக்கு வரவில்லையே! மலர்கள் பார்க்க.
   ஆலம் என்றால் பனி. பனி கட்டி மழை ஆலங்கட்டி மழை

   நீக்கு
 2. ஓ மகன் வீட்டிலும் பிள்ளையார் சிவன் எனச் செய்திருக்கிறார்களோ ஐ இல்.. நாங்கல் இங்கு ஸ்னோ மான் தவிர வேறேதும் செய்ததில்லை. சமீபத்தில ஒரு வீடியோ உலா வந்துது, ஸ்னோவில பிள்ளையார் செய்து வச்சுப்போட்டுக் குளிரில நிண்டு தீபம் காட்டிப் பூஜை வேறு நடக்கிறது..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //இங்கு ஸ்னோ மான் தவிர வேறேதும் செய்ததில்லை//
   ஓ ஒரு மகிழ்ச்சிதானே இப்படி செய்து விளையாடுவது இல்லையா?

   //ஸ்னோவில பிள்ளையார் செய்து வச்சுப்போட்டுக் குளிரில நிண்டு தீபம் காட்டிப் பூஜை வேறு நடக்கிறது..//

   மருமகளும் சுண்டல் எல்லாம் செய்து வைத்து பூஜை செய்தாள்.

   நீக்கு
 3. குட்டி கெவின் குண்டாக அழகாக இருக்கிறார்... படங்கள் அழகு.

  ஆச்சியும் பேரனும் நல்லா என் ஜோய் பண்ணுறீங்க ஆலங்கட்டி மழையை ஹா ஹா ஹா. அனைத்தும் நன்று கோமதி அக்கா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //ஆச்சியும் பேரனும் நல்லா என் ஜோய் பண்ணுறீங்க ஆலங்கட்டி மழையை ஹா ஹா ஹா. //

   அவனுடன் நானும் குழந்தையாகி போனேன்.

   உங்கள் கருத்துக்களுக்கு நன்றி அதிரா.

   நீக்கு
 4. ஆலங்கட்டி மழை  கோலிக்குண்டு சதுர கற்கண்டு என்று  இங்கே விழும்க்கா .சிலநேரம் ஜவ்வரிசி கொட்டினாற்போலவும் விழும் .வெள்ளிக்கிழமை இரவு 10 மணிக்கு திடீர்னு கொட்டி நின்னுச்சு .ஒரு செகண்ட் படடன்னு கொட்டி விட்டது .அந்த snow  விநாயகர்  அழகா இருக்கார் .குட்டி கவினும் பனிமனிதனும் அழகு ..ஸ்னோ வேண்டவே வேண்டாம்னு நினைப்பேன் அழகு என்றாலும் அதனால் ஆபத்துமுண்டு 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஏஞ்சல், வாழ்க வளமுடன்
   ஸ்னோ பார்க்க அழகு ஆனால் அதை அப்புறபடுத்த எவ்வளவு கஷ்டம், அதிகமாய் விழுந்தால் பாதிப்பு அதிகம் அல்லவா?
   வெள்ளிக்கிழமை அங்கு ஆலங்கட்டி மழை கொட்டியதா?
   ஆபத்து இல்லாமல் அழகாய் பெய்து விட்டு போனால் பரவாயில்லை.
   குட்டி கவின், மற்றும் பனி சிற்பங்களையும் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி ஏஞ்சல்.

   நீக்கு
 5. அந்த மலைகள் தெரியும் படங்கள் அழகு.  ஒரே நாளில் வெவேறு நிறங்களில் காட்சி அளிக்கும் மலை அழகு.  வீடுகள் தள்ளி தள்ளிதான் இருக்குமோ...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
   மலையின் தோற்றம் மாறி கொண்டு இருப்பது பார்க்க அழகாய் இருக்கும்.
   வீடுகள் கொஞ்சம் தள்ளி தள்ளிதான் இருக்கும்.

   நீக்கு
 6. காணொளி பார்த்தேன்.  ஆலங்கட்டியில் என்ன மருத்துவப் பயன்கள்?  என்ன செய்வார்கள்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆலங்கட்டிகள் தேள் கடிக்கு கடிவாயில் வைத்தால் விஷம் ஏறாது என்பார்கள்.
   ஆலங்கட்டி மழை தண்ணீர் குடித்தால் நல்லது என்பார்கள். மழை நீர் சேகரித்து குடிதண்ணீராக பயன்படுத்துவது போல் இதையும் பயன்படுத்தலாம் என்பார்கள்.
   எனக்கு இவ்வளவு தான் தெரியும்.

   உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

   நீக்கு
 7. பழைய பதிவு  சென்று பார்த்து வந்தேன்.  பனியில் அழகிய விநாயகர்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பழைய பதிவையும் பார்த்து வந்தது மகிழ்ச்சி ஸ்ரீராம்.
   வாழ்க வளமுடன், காலை வணக்கம்

   நீக்கு
 8. அழகிய காட்சிகள் பனிப்பொழிவை காணவைத்தமைக்கு நன்றி.

  சிறிய காணொளியும் கண்டேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
   உங்கள் கருத்துக்கு நன்றி ஜி, காணொளியை கண்டது மகிழ்ச்சி.

   நீக்கு
 9. அருமையான, அழகான படங்கள். ஆலங்கட்டி மழையைச் சின்ன வயசில் மதுரையில் அடிக்கடி பார்த்திருக்கேன். கற்களாகவே விழும். ஆனால் ஜவ்வரிசி போல, கல்கண்டு போலவெல்லாம் இமயமலைப் பயணத்தில் பார்த்து ரசித்திருக்கிறேன். அதுவும் இரண்டாம் நால் பரிக்ரமாவின் போது சாப்பிட நிறுத்தி இருந்த இடத்தில் சாப்பிடும்போதே மேலே ஜவ்வரிசியாய்ப் பனி! கொட்டிக் கொண்டே இருந்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்
   நானும் மாயவரத்தில், மதுரையில் பார்த்து இருக்கிறேன் ஆலங்கட்டி மழையை. பெரிய கட்டிகளாக தான் விழும். இமயமலைப் பயணத்தில் பார்த்து இருக்கிறீர்களா ஓ சரி.

   நாங்கள் கேதார்நாத் போய் இருந்த போது பார்த்தோம். பனி உருகி மலையிலிருந்து வருவதை எல்லாம் படம் எடுத்து கேதார்நாத் பதிவில் போட்டு இருக்கிறேன்.

   நீக்கு
 10. பனிக்கட்டி விநாயகரும்,ஹெர்குலேஸ்வரரும் அருமை. நல்ல கற்பனா சக்தி. வளமான அழகான கற்பனைகள். கவினைச் சிறிய வயதுப் புகைப்படத்தில் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. அப்படியே நீங்கள் தான். உங்கள் பேத்தியின் முகம் சரியாகத் தெரியவில்லை. ஆனால் அவள் அம்மா ஜாடை என நினைக்கிறேன். நல்லதொரு பகிர்வுக்கு நன்றி. பழைய பதிவுகளையும் போய்ப் பார்க்கணும். பின்னர் வருகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பனிக்கட்டி சிற்பங்களை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.
   பேத்தி அவள் அம்மா ஜாடைதான். பழைய பதிவுகளை நேரம் இருக்கும் போது பாருங்கள்.பதிவை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

   நீக்கு
 11. ஒரே ஒரு முறை சின்னவயதில் திருச்சியில் ஆலங்கட்டி மழையை அனுபவித்திருக்கிறேன். ஆலங்கட்டி மழையிலும் பல விதங்கள் உண்டு என்பது எனக்கு புதிய செய்தி. பதிவும் படங்களும் நன்றாக உள்ளன. 

  Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஜெயக்குமார் சார், வாழ்க வளமுடன்
   உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 12. ஆலங்கட்டி மழை மிக அழகு. படங்களும் ரொம்ப நன்றாக இருந்தன.

  4ம் வகுப்பு படிக்கும்போதும், 95ல் பஹ்ரைனிலும் ஆலங்கட்டி மழையைப் பார்த்திருக்கிறேன்.

  பனிச் சிற்பங்கள் அழகு. அதிலும் பிள்ளையார் மிக அழகு. உங்கள் மகன் செய்திருப்பார் என்று நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்
   இருமுறை பார்த்து இருக்கிறீர்களா?
   பனிச்சிற்பங்களை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.
   மகன் தான் எல்லாம் செய்தான். மருமகளும் கூட உதவிகள் செய்து இருக்கிறார் என்பதால் இருவரையும் சொன்னேன்.

   நீக்கு
 13. வணக்கம் மா....

  அழகான படங்கள். பனிப்பொழிவு சமயத்தில் ஹிமாச்சலப் பிரதேசத்திலும், உத்திராகண்ட் மாநிலத்திலும் இருந்திருக்கிறேன். சிறப்பான அனுபவங்கள் அவை. மகன் செய்த பனிக்கட்டிச் சிற்பங்கள் அனைத்தும் அருமை.

  ஆலங்கட்டி மழை - சில சமயங்களில் தில்லியிலும் வருவதுண்டு.

  நலமே விளையட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்
   நீங்கள் தான் அந்த பதிவுகள் போட்டீர்களே படித்து இருக்கிறேன்.
   ஆலங்கட்டி மழை வெப்பம் அதிகமாகும் போது வருமே! டெல்லியில் வெயில் அதிகமான சமயம் வரும் தானே!
   //மகன் செய்த பனிக்கட்டிச் சிற்பங்கள் அனைத்தும் அருமை//
   நன்றி.

   உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி வெங்கட்.

   நீக்கு
 14. பதில்கள்
  1. வணக்கம் சகோ துரைசெல்வராஜூ வாழ்க வளமுடன்
   வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

   நீக்கு
 15. இருபது ஆண்டுகளுக்கு முன்பொரு நாள்
  முதன்முறையாக இங்கே பனிக்கட்டி மழையைப் பார்த்திருக்கிறேன்..

  முன்னிரவுப் பொழுதில் தட பட என்று விழுந்ததில் கார்க் கண்ணாடிகள் நொறுங்கிப் போயின..

  இதுபோன்ற ஆலங்கட்டி மழையை மேகங்களின் சிதறல் என்கிறார்கள்..

  சிதறல்கள் விழுந்த சிறிது நேரத்தில் மேகத் துளிகள் முத்து முத்தாக உதிர்ந்தன.. ஓடிச்சென்று கையில் ஏந்தி ஏதோ உந்துதலால் வாயில் போட்டுக் கொண்டேன்..

  அதுபோல இங்கு மண் மாரியையும் புழுதிப் புயலையும் அனுபவித்தாயிற்று...

  எல்லாம் இறைவன் செயல்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பெரிதாக ஆலங்கட்டிகள் விழும் போது நிறைய சேதம் உண்டாக்கும்.
   இடி மின்னலில் உருவாகும் இடி மேகங்ககளில் இந்த திட நிலை மழை பொழிவே ஆலங்கட்டி மழை என்கிறார்கள். கோடையில் தான் நம் ஊர் பக்கம் பொழியும்.

   //சிதறல்கள் விழுந்த சிறிது நேரத்தில் மேகத் துளிகள் முத்து முத்தாக உதிர்ந்தன.. ஓடிச்சென்று கையில் ஏந்தி ஏதோ உந்துதலால் வாயில் போட்டுக் கொண்டேன்..//
   நல்லதுதான்.

   //அதுபோல இங்கு மண் மாரியையும் புழுதிப் புயலையும் அனுபவித்தாயிற்று...

   எல்லாம் இறைவன் செயல்.//

   பாலைவன பகுதியில் மண் மாரியும், புழுதி புயலும் இருக்கும் அல்லவா?
   இந்த ஊரில் அதுதான் மண் இருக்கும் இடமெல்லாம் கல்லை போட்டு நிரப்பி வைக்கிறார்கள் புழுதி புயலில் மண் பற்க்காமல் இருக்க.

   இறைவன் செயல்தான் எல்லாம். அந்த அந்த ஊரில் வசிப்பவர்களை காலசூழ்நிலைக்கு ஏற்ப வாழ வைப்பவன் அவன் தானே!

   உங்கள் கருத்துக்கு நன்றி..   நீக்கு
 16. ரசித்தேன் அம்மா... இப்போதே இங்கு அடிக்கும் வெயிலுக்கு மனதிற்கு இதம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் திண்டுக்கல் தனாபாலன், வாழ்க வளமுடன்
   கோடை காலத்தில் மழையை பார்த்தால் மனதுக்கு இதம் தான்.
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 17. ஆலங்கட்டி மழை 2,3 முறைகள் பார்த்திருக்கிறேன். ஆனால் இப்படி அள்ளி எடுக்கும் அளவுக்குப் பார்த்ததில்லை:). காணொளியில் பேரனின் குதூகலத்தை உணர முடிகிறது. இயற்கை எழில் கொஞ்சும் மலைக் காட்சிகள் மனதுக்கு இதம் தரும். நல்ல பகிர்வு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
   நம் ஊரில் பெரிய கட்டியாக பெய்யும் பெய்த வேகத்தில் கரைந்து விடும்.

   காணொளியில் பேரனின் குதூகலத்தை உணர முடிகிறது. //
   அந்த குதூகலத்தில் நம்மையும் இணைத்துக் கொள்வான் அதுதான் மனதுக்கு இதம்.

   இயற்கை வனப்பில் மனதை பறி கொடுக்கலாம் ராமலக்ஷ்மி.
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 18. மலைகளும் மேகங்களும் பனியுமாக இயற்கையின் அருமை விளையாட்டு.
  அன்பு கோமதிமா,
  பதிவு காணத் தாமதமாக வந்திருக்கிறேன்.
  தங்களின் குடும்பம் கலைத்தாயின்
  அருள் பெற்றது.
  பனிப்பொழிவு, ஆலங்கட்டி எல்லாமே மிதமாக இருந்தால்
  ரசிக்கலாம்.
  இங்கே விழும் ஆலங்கட்டி மிகப் பெரிய கூழாங்கல்லாக மனிதர்களைத் துன்புறுத்தும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் அக்கா வாழ்க வளமுடன்
   பதிவு போட்ட அன்றே வந்து விட்டீர்களே! தாமதம் எல்லாம் இல்லை.
   இயற்கையின் விளையாட்டு அளவாக இருந்தால் அருமைதான் அக்கா.
   பெரிதாக ஆலங்கட்டி இருந்தால் ஆபத்துதான்.


   நீக்கு
 19. பேரன், பேத்தி மகன் எல்லோருடைய பாமும் இனிமை. நியூஜெர்சி
  புயலுக்காக இறைவனை வேண்டிப் பூஜை செய்த மகன் ,மருமக்ள்க்கு வாழ்த்துகள்.
  இறைவன் இல்லாமல் நமக்கு ஏது கதி?

  மகனின் கலைத்திறமை மிக மிக அற்புதமானது.
  எல்லா நலங்களும் கூடி நன்றாக இருக்க வேண்டும்.

  சாரின் ஆசியோடு குடும்பம்
  தழைத்திருக்கும்.
  வாழ்க வளமுடன் அன்பு கோமதி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எல்லா படங்களையும் , பனிசிற்பங்களையும் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி அக்கா.


   //மகனின் கலைத்திறமை மிக மிக அற்புதமானது.
   எல்லா நலங்களும் கூடி நன்றாக இருக்க வேண்டும்.//

   உங்கள் அன்பான கருத்துக்கும் ஆசிகளுக்கும் நன்றி அக்கா.

   //சாரின் ஆசியோடு குடும்பம்
   தழைத்திருக்கும்.//

   ஆமாம் அக்கா , அவர்களின் ஆசியில் குடும்பம் தழைத்திருக்கட்டும் .


   உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.   நீக்கு
 20. அத்தனை படங்களும் அழகு. ஒரே நாளில் வேறு வேறு முகங்கள் காட்டும் மலையைச் சொல்வதா? பனி விநாயகரை சொல்வதா? சிவ லிங்கத்தை சொல்வதா? அருமை அருமை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் பானுமதி வெங்கடேஷ்வரன், வாழ்க வளமுடன்
   படங்களை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி பானு.

   நீக்கு
 21. வணக்கம் சகோதரி

  பதிவு அருமை. ஆலங்கட்டி மழைக் குவியல் பார்க்க அழகாக உள்ளது. காணொளியும் பார்த்தேன். அது முத்து, முத்தாக பெய்யும் போது எவ்வளவு அழகாக உள்ளது. படங்கள் அனைத்தும் அருமையாக உள்ளது. உங்கள் பேரனுடன் சேர்ந்து பனி மழையில் நனைந்து நீங்கள் உற்சாகமாக இருந்ததற்கு மிக்க மகிழ்ச்சியடைந்தேன். இங்கு பெங்களூரிலும் நாங்கள் வசிக்கும் பகுதியில் நான்கைந்து வருடங்களுக்கு முன்பு கோடையில் முதல் மழையாக ஆலங்கட்டி மழை ஒரு தடவை பெய்தது.

  அவ்வளவு இக்கட்டான நேரத்திலும் பனியில் அழகான இறைவன் சிற்பங்கள் செய்து வழிபட்ட தங்கள் மகன் மருமகளுக்கு என் அன்பார்ந்த வாழ்த்துகள். தங்கள் பேரன் கவின் குட்டியாய் பனி மனிதனுக்கு அருகில் அழகாய் நிற்கிறார். அவருக்கும் வாழ்த்துகள்

  மாறி மாறி விதவிதமான அழகான கலரில் தோற்றமளிக்கும் மலைகள் கண்களுக்கு விருந்தாக இருக்கின்றது. மலைகளை சூழ்ந்த மழை மேகங்களின் இயற்கை அழகு மனதை கவர்கிறது. அனைத்தையும் மிகவும் ரசித்து படம் எடுத்துள்ளீர்கள். உங்களுக்கு மனம நிறைந்த பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
   ஆலங்கட்டி மழை குவியல் பார்க்க அழகுதான்.
   முத்து முத்தாக பெய்து உருண்டு ஓடும் போது பார்க்க அழகாய் இருந்தது கமலா.
   பேரன் மகிழ்ச்சி கண்டு நானும் குழந்தையாகி போனேன். அம்மா வந்து என்ன இது குழந்தை மாதிரி உடம்புக்கு வந்துவிடும் என்று அதட்டும் குரல் கேட்டு பேரனையும் அழைத்துக் கொண்டு உள்ளே வந்தேன். சிறு வயதில் மழையில் நனைந்து வந்தால் அம்மாவிடம் திட்டு விழும் "எங்காவது ஒதுங்கி நின்று மழை விட்டபின் வந்தால் என்ன" என்று.

   நியூஜெ₹இயில் இருக்கும் போது கார் சுத்தம் செய்ய வேண்டும், வீட்டின் முன்புறம் சுத்தம் செய்ய வேண்டும் இந்த பனி விழுந்தால் அத்தனை கஷ்டத்திலும் பிள்ளையார், பனி மனிதன் செய்து மகிழ்ந்தது மனதுக்கு ஆறுதல்.

   ஆமாம் , மலையின் வண்ணம் மாறி கொண்டே இருக்கும் பார்க்க அழகு. வெண்மேகமும், கருமேகமும், செவ்வானமும் அழகாய் இருக்கும்.

   பதிவில் அத்தனை படங்கள், செய்திகளை படித்து எப்போதும் போல் விரிவான் கருத்தை பகிர்ந்தற்கு நன்றி. உங்கள் அன்பான வாழ்த்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும் நன்றி நன்றி கமலா.

   நீக்கு
 22. படங்கள் அனைத்தும் அழகோ அழகு
  சிறு வயதில் ஆலங்கட்டி மழை பார்த்திருக்கிறேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்
   உங்கள் கருத்துக்கு நன்றி சகோ.

   நீக்கு
 23. அழகிய படங்களுடன் ஆலங்கட்டி மழை ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் மாதேவி , வாழ்க வளமுடன்
   நல்மா? வெகு நாட்கள் காணவில்லையே! ஊருக்கு போய் இருந்தீர்களா?
   பதிவை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

   நீக்கு