வியாழன், 11 பிப்ரவரி, 2021

திருமங்கையாழ்வார் மங்களாசாசன வைபவம்

 
திருமங்கையாழ்வார் மங்களாசாசன வைபவம்
(எம்பெருமான் மீது திருப்பாசுரம் பாடியருளல்)
(திருவெள்ளக்குளம்)
25. 1. 2012

திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்!

வாழி பரகாலன் வாழி கலிகன்றி
வாழி குறையலூர் வாழ்வேந்தன் – வாழியரோ
மாயோனை வாள் வலியால்
மந்திரங்கொள் மங்கையர்கோன்
தூயோன் சுடர்மான வேல் - (தனியன்)

வாடினேன் வாடிவருந்தினேன் மனத்தால்
பெருந்துயர் இடும்பையில் பிறந்து
கூடினேன் கூடி இளையவர்தம்மொடு
அவர்தரும் கலவியே கருதி
ஓடினேன் ஓடிஉய்வதோர் பொருளால்
உணர்வெனும் பெரும்பதம் தெரிந்து
நாடினேன் நாடிநான் கண்டுகொண்டேன்
நாராயணா என்னும் நாமம்
– திருமங்கையாழ்வார்.

தை அமாவாசையை ஒட்டி மூன்று நாட்கள் சீர்காழி
அருகில் உள்ள திருநாங்கூரில் 11 கருட சேவை
நடக்கும். இந்த ஆண்டு 23.01.2012, 24.01.2012,
25.01.2012 ஆகிய நாட்களில் நடைபெற்றது. முதல்
நாள் திருமங்கையாழ்வார் திருநகரியிலிருந்து
புறப்பட்டு ஸ்ரீ நாராயணப் பெருமாளிடம் தொடங்கி,
11 திவ்யதேசங்களையும் மங்களாசாஸனம் செய்யும்
விழா நடைபெறும். அடுத்த நாள் ஸ்ரீ திருமங்கை
யாழ்வார் ஹம்ஸவாஹன உத்ஸவமும் நடக்கும்.

முதல் நாள் அதிகாலை 1 மணிக்கு ஸ்ரீ திருமங்கை
யாழ்வார் திருநகரியிலிருந்து புறப்பட்டு திருக்குறை
யலூர், திருமங்கைமடம்,
1. திருக்காவளம்பாடி, ஸ்ரீகோபாலன்.
2. திருமணிக்கூடம், ஸ்ரீவரதராஜன்
3. திருப்பார்த்தன் பள்ளி ,ஸ்ரீபார்த்தசாரதி
ஆகிய திவ்யதேசங்களுக்கு
சென்று மங்களாசாஸனம் செய்து விட்டு, மஞ்சள்
குளி மண்டபம் எழுந்தருளுவார்.அங்கு திருநறையூர்
நம்பியையும், ஸ்ரீ ரங்கம் அழகியமணவாளனையும்
மங்களாசாஸனம் செய்த பிறகு திருமஞ்சனம்,
திருப்பாவை சாற்றுமுறை நடைபெறும். அருகில்
இருக்கும் நதியில்இருந்து நீர் எடுத்து வந்து
திருமஞ்சனம் நடைபெறுகிறது. திருமஞ்சனம்
முடிந்த பின் திருமங்கையாழ்வார் தன் மனைவியார்
குமுதவல்லிநாச்சியாரின் வஸ்திரத்தைத்
தலையில் சூடிக்கொள்கிறார். தன்னைக் கடைத்
தேற்றிய குமுதவல்லிநாச்சியாரை உயர்த்த அந்த
வஸ்திரத்தை அணிந்துகொள்கிறார்.

மாலை 6 மணிக்கு ஆரம்பித்து திருநாங்கூரிலிருந்து
புறப்பட்டு,
4.மணிமாடக்கோயில், -ஸ்ரீநாராயணப்பெருமாள்
5.வண்புருடோத்தமம், -ஸ்ரீவண்புருடோத்தமப்
பெருமாள்
6.வைகுந்த விண்ணகரம் - ஸ்ரீவைகுண்டநாதர்,
7.செம்பொன்செய்கோயில்,- ஸ்ரீசெம்பொன்னரங்கர்
8.திருத்தெற்றியம்பலம்-ஸ்ரீபள்ளிகொண்டபெருமாள்
9.அரிமேய விண்ணகரம் -ஸ்ரீகுடமாடுகூத்தர்
ஆகிய திவ்யதேசங்களுக்கு எழுந்தருளி மங்களா
சாஸனம் செய்துமுடித்து இரவு மணிமாடக்கோயி
லுக்கு எழுந்தருளிய பின் அர்த்தஜாமம் நடைபெறும்.

இரண்டாம் நாள் பகலில் சுமார் 12 மணி அளவில்
மேற்கண்ட 9 திவ்யதேசத்து எம்பெருமான்களுடன்
10 திருவெள்ளக்குளம்,_ ஸ்ரீஅண்ணன் பெருமாள்
11 திருத்தேவனார் தொகை_ ஸ்ரீமாதவப்பெருமாள்
ஆக 11 திவ்ய தேசத்து எம்பெருமான்களும் மணி
மாடக்கோயில் முன் பந்தலில் எழுந்தருளுவர்.
அவர்களை ஸ்ரீ திருமங்கையாழ்வார் மங்களாசாசனம்
செய்வார்.

ஸ்ரீ புருஷோத்தமப்பெருமாள் ஸந்நிதியில்
எழுந்தருளி இருக்கும் ஸ்ரீமணவாளமாமுனிகள்
ஸ்ரீ திருமங்கையாழ்வாரை மங்களாசாஸனம்
செய்வார். மாலை பதினொரு திவ்யதேசத்து
எம்பெருமான்களுக்கும் மற்றும்
ஸ்ரீ திருமங்கையாழ்வாருக்கும் திருமஞ்சனம் நடை
பெறும். இரவு பதினொரு எம்பெருமாளுக்கும் கருட
சேவையும், ஸ்ரீ திருமங்கையாழ்வாருக்கு ஹம்ஸ
வாஹன உத்ஸவமும் ஸ்ரீ மணவாள மாமுனிகள்
திருவீதி புறப்பாடும் நடைபெறும்.நாங்கூர் மணிமாடக்கோயில்மூன்றாம் நாள் காலை மணிமாடக்கோயிலில்
ஸ்ரீ திருமங்கையாழ்வாருக்கு திருமஞ்சனம்,
திருப்பாவை சாற்றுமுறை, நடைபெறும்.பிறகு
காலையில் 11 மணியளவில் புறப்பட்டு திருவெள்ளக்
குளம், திருததேவனார்தொகை, திருவாலி ஆகிய
திவ்யதேசங்களுக்கு எழுந்தருளி மங்களாசாஸனம்
செய்து திருநகரி சேர்வார். இரவு திருநகரியில்
ஸ்ரீ வயலாலி மணவாளன் கருடசேவையும்
ஸ்ரீதிருமங்கையாழ்வார் மங்களாசாஸனமும்
நடைபெறும்.

***

நாங்கள் கருடசேவையை முன்பு பார்த்திருக்கிறோம்.
ஆனால் திருமங்கையாழ்வார் 11 திவ்யதேசங்களை
மங்களாசாஸனம் செய்வதைப் பார்த்தது இல்லை.
25.01.2012 அன்று திருவெள்ளக்குளத்தில் ஆழ்வார்
மங்களாசாசனம் செய்யும் வைபவத்தைப் பார்க்கப்
போனோம். மூன்றாம் நாள் உற்சவத்தைப் பார்த்து
வந்தோம்.

திருநாங்கூர் மணிமாடக் கோயிலில் முதலில்
திருப்பாவை படித்தார்கள். அதன் பின் சர்க்கரைப்
பொங்கல், தயிர்சாதம் பிரசாதம் தந்தார்கள். பின்
திருமங்கையாழ்வார் பல்லக்கில் மனைவியார்
குமுதவல்லி நாச்சியாருடன் புறப்பட்டார்.


பாண்டு வாத்தியம், மேளம், இவற்றோடு அண்ணன்
கோயிலுக்குப் புறப்பட்டுப் போனார். நாங்களும்
போனோம்
தெருவெல்லாம் வீடுகளில் கோலங்கள்
போட்டு அவரை சிறப்பாய் வரவேற்றனர்.
திருமங்கையாழ்வாரின் வடிவழகை ஸ்ரீ மணவாள
மாமுனிகள் வருணித்துப் பாடுகிறார். அப்படி ஒரு
அழகு. அவர் கையில் வைத்து இருக்கும் வேல்
போன்ற ஆயுதத்தில் சிவப்பு கற்களால் அழகூட்டப்
பட்டுள்ளது. குமுதவல்லித் தாயார் கையில் உள்ள
கிளிக்கும் சிவப்புக்கற்களால் அழகூட்டப்பட்டுள்ளது
.பல்லக்கும் அழகு! அதைத் தூக்கி வருபவர்களுக்கு
பச்சைக் கலரில் பனியன் வழங்கி இருந்தார்கள்.
அவர்கள் உற்சாகமாய் தங்கள் பைகளை பல்லக்கின்
இரு புறமும் மாட்டி கொண்டு சந்தோஷமாய்
பல்லக்கை தூக்கி வருகிறார்கள்.பல்லக்கு தூக்கி வரும் அடியார்களும் ஆழ்வார்கள்
தான் என்று அங்கு உபன்யாசம் செய்தவர் சொன்னார்.

***

அண்ணன் கோயில் சிறிய அழகிய கோயிலாக
உள்ளது.

திருக்கோயிலின் சிறப்புகள்

இக்கோயிலை அண்ணன் பெருமாள் கோயில்
என்பார்கள்-நாங்கூர்க்கோயில்களில் ஒன்று – இந்த
இடத்தை மேலச்சாலை என்று கூறுகிறார்கள்.

* மூலவர் திருநாமம்:
ஸ்ரீநிவாசன், கண்ணன், நாராயணன்,
அண்ணன் பெருமாள்.
* நின்ற திருக்கோலம்,
* கிழக்கே திருமுக மண்டலம்.
* தாயார் திருநாமம் :
ஸ்ரீ அலர்மேல் மங்கை,
ஸ்ரீ பூவார் திருமகள் நாசசியார். பத்மாவதி
* தீர்த்தம்: திருவெள்ளக்குளம்,ஸ்வேத புஷ்கரிணி
* விமானம்-தத்வத்யோதக விமானம்
* மங்களாசாசனம்- திருமங்கையாழ்வார்
1308-17(10 பாசுரங்கள்)
இத்தலத்து இறைவன் சுவேதராஜாவிற்கு இறவா
வரம் தந்ததாகத் தலபுராணம் கூறுகிறது. இத்தலத்துப்
பெருமாள் திருப்பதி பெருமாளுக்கு அண்ணன் என்பர்.
திருப்பதி பெருமாளுக்கான பிரார்த்தனையை இங்கும்
செலுத்தலாம் என்கின்றனர்.

நல்லார் பலர் வேதியர் மன்னிய நாங்கூர், சேலார்
வயல்சூழ் திருவெள்ளக்குளம்,செந்தாமரை நீர்த்
திருவெள்ளக்குளம்,தேனார் பொழில்சூழ்
திருவெள்ளக்குளம் என்றெல்லாம் ஆழ்வார்
பாடுகிறார்
கோவிலுக்கு எதிரே திருக்குளம் உள்ளது. நடுவில்
நீராழி மண்டபத்திற்குரியமேடை இருக்கிறது.
மண்டபம் தற்போது இல்லை. இரை தேடும் கொக்கு
அங்கே அமர்ந்திருந்தது. உச்சி வேளை வெயிலைத்
தாங்க முடியாத எருமைகள் திருக்குளத்தில் ஆனந்த
மாய் மூழ்கி இருந்தன.ஆழ்வார் திருவெள்ளக்குளம் திருக்கோயிலை வலம்
வருகிறார்ஆழ்வாரை மேளதாளத்துடன் வரவேற்கிறார்கள்
திருமங்கையாழ்வார் கோயிலுக்கு முன்னே
வந்ததும் உள்ளே இருந்து ஸ்ரீ அண்ணன் பெருமாள்
சூடிய மாலை,அவர் உடுத்திக் களைந்த ஆடை
இவற்றைக்கொண்டு அவருக்குத் தந்து மரியாதை
செய்கிறார்கள். அவர் கோயிலுக்கு உள்ளே வர
நடை பாவாடை விரித்து அழைக்கிறார்கள்.

திருமங்கையாழ்வார் எழுந்தருளுவதை ‘வாங்கா’
வாத்தியம் எல்லோருக்கும் அறிவிக்கிறது


பின்னர் ஆழ்வார் திருக்கோயிலின் உள்ளே
அடியார்களுடன் எழுந்தருள்கிறார்.

அதன்பின்னர் மூலஸ்தானத்தருகே மங்களா
சாசனம் நிகழ்கிறது.

கண்ணார் கடல்போல் திருமேனி கரியாய்
நண்ணார்முனை வென்றிகொள்வார் மன்னுநாங்கூர்
திண்ணார் மதில்சூழ் திருவெள்ளக்குளத்துள்
அண்ணா அடியேன் இடரைக் களையாயே


என்று தொடங்கி அவர் பாடிய 10 திருப்பாசுரங்களை
பட்டாச்சாரியர்களும் பிறரும் சந்நிதியில்
பாடுகிறார்கள். கேட்டு அனுபவித்தோம்.

இந்த திவ்ய தேசத்தில் பல்லக்கு மூலஸ்தானத்தின்
அருகிலேயே போய் விடுகிறது. அந்த மண்டபத்
திற்குள் அந்தச்சமயத்தில் பெண்கள் போக அனுமதி
இல்லையாம். போட்டோ எடுக்கவும் அனுமதி
யில்லையாம்.

அந்தக் காலத்தில் திருமங்கையாழ்வார் பல்லக்கில்
எப்படி வயலிலும், சேற்றிலும், ஆற்றிலும் இறங்கி
நடந்து வந்து பெருமாள் கோயில்களுக்கு வந்து
திருப்பாசுரங்கள் பாடினாரோ அப்படியே அதை
இப்போது உத்சவமாக நடத்திக்காட்டுகிறார்கள்.

திருவெள்ளக்குளத்தில் மங்களாசாசனம் முடிந்ததும்
ஆழ்வார் திருத்தேவனார் தொகை, திருவாலி ஆகிய
தலங்களில் மங்களாசாசனம் செய்து திருநகரி
அடைகிறார்.

திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்.


                                                            வாழ்க வளமுடன்

=====================================================================

21 கருத்துகள்:

 1. அண்ணன் பெருமாள் கோவில் ஒருமுறை சென்ற நினைவு.  சரியாய் நினைவில்லை.  நல்ல சுவாரஸ்யமான நினைவுகள்.  ஒவ்வொரு கோவிலிலும் எவ்வளவு முறைகள் வைத்து இணைவனுக்கு திருப்பணி செய்கிறார்கள்!  மக்களுக்கும் ஆனந்தம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
   அண்ணன் கோவில் போய் இருப்பீர்கள்.
   அண்ணன் கோவில் இயற்கை எழில் சூழ்ந்த கோவில்.
   தைமாதம் நடக்கும் திருநாங்கூர் கருடசேவை மற்றும் அதற்கு முன் நடக்கும்
   இந்த விழாவிற்கு சார் அழைத்து போனது மனதில் வந்து சென்றது.
   உடனே மீள் பதிவு செய்து விட்டேன்.
   நீங்கள் சொல்வது போல் ஒவ்வொரு வீட்டிலும் உறவினர் வருகை, ஊர் மக்கள் எல்லாம் ஆனந்த வெள்ளத்தில் தான்.

   கீழே கொடுத்த சுட்டியில் உள்ள பதிவு பார்த்தீர்களா ?

   உங்கள் கருத்துக்கு நன்றி.   நீக்கு
 2. அன்பு கோமதி மா,
  ஒரு கருட சேர்வை தரிசிப்பதே மிக புண்ணியம். பதினோரு பெருமாள்கள்,
  பதினோரு கருடன்கள்.
  பார்ப்பதே கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.
  மூன்று நாட்கள் நடைபெறு திருவிழா என்றால் எவ்வளவு முயற்சி
  வேண்டும்.
  அதுவும் திரு நாங்கூர் செவை மிகப் பிரபலம்.
  திருமங்கையாழ்வாரின் தருதுயரம் பாசுரம் நாங்கள் மனப்பாடம் செய்யவேண்டிய
  பல பாசுரங்களுள் ஒன்று.

  படங்களில் வந்திருக்கும் கோவில்களும் மிக அருமை.
  சென்னையிலிருந்து பாட்டி வருடா வருடம் சென்று வருவார்.
  எனக்கு இந்தப் பாக்கியம் உங்கள் பதிவு
  வழியே கிடைத்தது மா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்
   மூண்று நாள் உற்சவத்திற்கும் சார் அழைத்து போனார்கள்.
   தொடர் பதிவாக போட்டேன் முன்பு.
   திருநாங்கூர் கருடசேவை இரண்டு தடவை பார்த்து இருக்கிறோம்.

   //சென்னையிலிருந்து பாட்டி வருடா வருடம் சென்று வருவார்.//

   கொடுத்து வைத்தவர் பாட்டி.
   அன்று எல்லோர் வீடுகளிலும் உறவினர்கள் வெளியூர்களில் இருந்து வருகை இருக்கும்.
   உங்கள் கருத்துக்கு நன்றி அக்கா.

   நீக்கு
 3. நாங்களும் திருநாங்கூர் திவ்யதேசங்கள் சிதம்பரத்தில் தங்கிக் கொண்டு போய் வந்தோம். சில கசப்பான அனுபவங்கள். மற்றபடி இறை தரிசனம் நன்றாகவே கிடைத்தது. சில கோயில்களில் ஒரே பட்டாசாரியார் 2,3 கோயில்கள் பார்த்துக்கொண்டிருந்தார்கள். நாங்க போனது பத்து வருடங்களுக்கும் மேல். இப்போ மாறி இருக்கலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்
   நீங்கள் சொல்வது சரிதான்.ஒரே பட்டாசாரியார் 2,3 கோவில்களை பார்ப்பார்கள்.
   நாங்கள் பட்டர் வீட்டுக்கு போய் அவரை அழைத்துக் கொண்டு போய் சில கோவில்களை பார்த்து இருக்கிறோம். சில கோவில்களில் பட்டர் வரும் வரை காத்து இருந்து பார்த்து வந்து இருக்கிறோம்.

   அதனால் வைகுண்ட ஏகாதசிக்கு எப்படியும் கோவில் திறந்து யாராவது இருப்பார்கள் என்று ஒரே நாளில் பார்த்து இருக்கிறோம்.
   வைகுண்ட ஏகாதசிக்கு போய் வந்த பதிவும் போட்டு இருப்பேன்.

   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 4. மிக அருமையான பதிவு. இன்னும் ஆழ்ந்து படித்துவிட்டு பிறகு வருகிறேன்.

  இந்தக் கோயில்களை 2019ல் சேவித்தோம். திருநாங்கூர் கருடசேவை இன்னும் சேவித்ததில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்
   வாங்க வாங்க

   2019ல் சேவித்து விட்டீர்களா மகிழ்ச்சி.
   திருநாங்கூர் கருட சேவை மிக நன்றாக இருக்கும் ஒரு முறை போய் வாருங்கள்.
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 5. கோவில் பற்றிய தகவல்களும் படங்களும் அருமை...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன் , வாழ்க வளமுடன்
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 6. இன்றைய பதிவில் திவ்ய தேசங்களின் தரிசனம் ...

  நேரில் கண்டு கண் குளிரும் நாள்
  எந்நாளோ..

  ஹரி ஓம் நமோ நாராயணாய..

  பதிலளிநீக்கு
 7. சிறப்பான தரிசனம். திருநாங்கூர் திவ்யதேசங்கள் செல்ல வேண்டும் என்ற ஆவல் உண்டு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்
   உங்கள் ஆசை நிறைவேறட்டும் பெருமாள் அருளால்.
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 8. கும்பகோணத்திலும், தஞ்சாவூரிலும் இதையொத்த விழாக்களைப் பார்த்துள்ளேன். திருநாங்கூர் சென்றுள்ளேன். ஆனால் இந்த கருட சேவையைக் காண ஆவலோடு காத்திருக்கிறேன்.உங்கள்பதிவு அங்கு சென்ற மன நிறைவைத் தந்தது.
  அண்மையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சில ஆய்வுப்பணிகள் காரணமாக தொடர்ந்து வலைப்பக்கம் வர இயலவில்லை. பொறுத்துக்கொள்ள வேண்டுகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் முனைவர் ஐயா, வாழ்க வளமுடன்
   பதிவை படித்து நல்ல கருத்து சொன்னதற்கு நன்றி.

   //அண்மையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சில ஆய்வுப்பணிகள் காரணமாக தொடர்ந்து வலைப்பக்கம் வர இயலவில்லை. பொறுத்துக்கொள்ள வேண்டுகிறேன்.//

   உங்கள் ஆய்வுப்பணி சிறப்பாக நடக்க வாழ்த்துக்கள்.
   பொறுத்துக்கொள்க என்பது எல்லாம் பெரிய வார்த்தைகள் ஐயா,

   நேரம் கிடைக்கும் போது வந்து நீங்கள் கருத்து சொல்வது பெரிய மகிழ்ச்சி அது போதும்.

   நீக்கு
 9. படங்களுடன் விரிவான விவரங்கள் நன்று. ‘வாங்கா’ வாத்தியக் கருவியை இப்போதுதான் பார்க்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்

   வாங்கா வாத்தியம் திருவிழா காலங்களில் எல்லா கோவில்களிலும் முன்பு வாசிக்கப்படும்.
   இப்போது அதை வாசிக்க ஆட்கள் குறைவாக இருப்பதால் எல்லா கோவில்களிலும் இல்லை போலும்.

   உங்கள் கருத்துக்கு நன்றி ராமலக்ஷ்மி.

   நீக்கு
 10. வணக்கம் சகோதரி

  அருமையான பதிவு. படங்கள் அனைத்தும் நல்ல அழகு. நான் கருடசேவை பார்த்துள்ளேன். ஆனால் இந்த மாதிரி. பிரமாண்டமான 11 கருடசேவை சேர்ந்தாற் போல் பார்த்ததில்லை. முதலில் கேள்விபட்டதேயில்லை. திருமங்கையாழ்வார் பற்றியும் அவருடைய பக்தியைப் பற்றியும் மிக அருமையாக சொல்லியிருக்கிறீர்கள். நிறைய ஊர்களும் அந்தந்த இறைவன் பெயர்களும். படிக்கவே நன்றாக உள்ளது. இந்த பக்கமெல்லாம் சென்று சேவிக்கும் பாக்கியம் எனக்கு கிடைக்கவில்லை. தங்கள் பதிவின் மூலம் அனைத்துப் பெருமாளையும் மானசீகமாக பார்த்து வணங்கிக் கொண்டேன். ஒருமுறைக்கு இரண்டுமுறை படித்து இறைவனார் பெயர்களை மனதில் ஏற்றிக் கொண்டேன்.

  தங்களின் முந்தைய பதிவையும் சென்று படித்து வந்தேன். அதையும் மிக அழகான படங்களுடன் பதிவுமாக போட்டுள்ளீர்கள். இது ஒரு அழகான தெய்வ கைங்கரியம். இதை அனைவருக்கும் தொகுத்து தரும் பாக்கியம் உங்களுக்கும், படித்து நாங்கள் பெறும் பேறு எங்களுக்கும் தந்த அந்த இறைவனுக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். உங்களுக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
   எனக்கும் இரண்டு மூன்று முறைகள்தான் கிடைத்து இருக்கிறது கருடசேவையை தரிசிக்கும் பாக்கியம். மாயவரத்தில் இருந்ததால் இந்த வாய்ப்பு கிடைத்தது.

   முந்தைய பதிவையும் படித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

   கோவில்களுக்கு அழைத்து சென்ற என் கணவருக்கும் இதை இங்கு பகிர வாய்ப்பு அளித்த இறைவனுக்கு நானும் நன்றி .

   நீக்கு
 11. ஆஹா மிக அருமையான தரிசனம் மா ...

  அப்பா பல முறை இந்த 11 கருட சேவைக்கு சென்று வந்து அவரின் அனுபவங்களை கூறி இருக்கிறார்...இந்த வருடமும் செல்லும் ஆவலில் இருந்தார் ரயிலில் முன் பதிவு கூட செய்து விட்டார் , ஆனால் சில பல வேலையால் செல்ல வில்லை ..


  இதில் ஆழ்வாருடன் செல்லும் போது நிறைய வித்தியாச அனுபவங்கள் கிடைக்கும் என்பார் , ஆமாம் ஆழ்வார் பல்லக்கு மிக வேகமாக வயல் வெளியில் நடந்தும், ஓடியும் செல்வார்களாம் . அவர்களை தொடர்ந்து செல்வதே நமக்கு கடினம் என்பார் ...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் அனுபிரேம், வாழ்க வளமுடன்
   பலமுறை வந்தவர்களை பார்க்க முடியும். 11 கருட சேவைக்கு எல்லோர் வீடுகளீலும் உறவினர்கள், நண்பர்கள் நிறைய இருப்பார்கள்.

   //ஆழ்வாருடன் செல்லும் போது நிறைய வித்தியாச அனுபவங்கள் கிடைக்கும் என்பார்//
   அப்பா சொல்வது சரிதான் நிறைய அனுபவங்கள் கிடைக்கும்.


   //ஆமாம் ஆழ்வார் பல்லக்கு மிக வேகமாக வயல் வெளியில் நடந்தும், ஓடியும் செல்வார்களாம் . அவர்களை தொடர்ந்து செல்வதே நமக்கு கடினம் என்பார்//

   ஆமாம்.

   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு