வெள்ளி, 23 நவம்பர், 2018

அண்ணாமலைக்கு அரோகரா!

விழா நாயகர் லிங்கோத்பவர்

திருவண்ணாமலை ஆலயத்தில் கருவறை கோஷ்டத்தில் மூலவருக்கு நேர் பின்புறத்தில் மேற்கு திசை நோக்கி லிங்கோத்பவர் இருப்பதைக் காணலாம். இந்த லிங்கோத்பவர், மும்மூர்த்திகளின் அருளையும் ஒரே திருவுருவில் வழங்கிக் கொண்டிருப்பதாக ஐதீகம்.

அக்னிஜுவாலை சொரூபமாகிய இறைவனை வழிபடும் நாள் கார்த்திகைத் தீபத்திருநாள்.  ஐசுவரியம், வீரம், தேஜஸ், செல்வம், ஞானம், வைராக்கியம் எனும்    ஆறுகுணங்களும்   ஆறுமுகங்களாய்  கார்த்திகைப்  பெண்களால்  வளர்க்கப்பட்ட முருகப் பெருமானை வணங்கும் நாளும் இந் நாளே.  கார்த்திகை நட்சத்திரத்தில் சரவணனை விரதமிருந்து  வணங்குவோர் நலம் பல பெற்று நற்கதி அடைவார்கள் என்று கந்த புராணம் சொல்கிறது.



எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் கோவிலில் உள்ள லிங்கோத்பவர்.

சிவனுக்குரிய 64 வடிவங்களில் ஒன்று அண்ணாமலையார். 'லிங்கோத்பவ மூர்த்தி' என்றும் குறிப்பிடுவர். சிவன் கோயில்களில் கருவறையின் பின்புறம் இவருக்குச் சன்னிதி இருக்கும்.

பொதுவாக லிங்கோத்பவரைப் பார்க்கும்போதெல்லாம் அவருக்கு விளக்கு ஏற்றி வைத்து வழிபட வேண்டும். மாலையில் இருட்டத் தொடங்கும் நேரத்தில் இவரது சன்னதியில் விளக்கேற்றி வழிபட்டால் நமது ஆணவம், அகந்தை எல்லாம் ஓடோடி விடும் என்று சொல்கிறார்கள்.

//சிவபெருமான் திருவண்ணாமலையில் இரண்டு தடவை ஜோதி ரூபமாக தன்னை வெளிப்படுத்திக் கொண்டார். மாசி மாதம் விஷ்ணு, பிரம்மாவின் ஆணவத்தையும், அகந்தையையும் விரட்ட நெருப்புப் பிழம்பாக வந்தார். கார்த்திகை மாதம் அம்பாளுக்குத் தன் இடப்பாகத்தில் இடம் கொடுத்தபோது ஜோதிச்சுடராக வந்தார். முதல் ஜோதி தரிசனத்துக்கும் இரண்டாம் ஜோதி தரிசனத்துக்கும் வித்தியாசம் உள்ளதை பக்தர்கள் புரிந்து கொள்ள வேண்டும். மாசியில் நெருப்புப் பிழம்பு, கார்த்திகையில் ஜோதி சுடர்.

உலக உயிர்கள் “நான்”, “எனது” என்பன போன்ற ஆணவம், அகந்தை கொள்ளாமல், தானும் இந்தப் பிரபஞ்சத்தில் ஒரு சிறு அணுவே என்பதை உணர்ந்து புரிந்து கொள்வதே லிங்கோத்பவர் வடிவத்தின் தத்துவமாக உள்ளது. இந்த வடிவை வழிபட்டால் உடல் நலமும், மோட்ச பிராப்தமும் கிடைக்கும். எனவேதான் இந்த வழிபாட்டை, “மோட்ச பிரதாயினி” என்று சொல்கிறார்கள்.//
நன்றி- மாலை மலர்.

திருவண்ணாமலை பற்றிய சில தகவல்கள்:-


* திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தைச் சிறப்பிக்கும் விதத்தில், அகல் தீபமிட்ட சித்திர முத்திரையை 1997 டிச.12ல் அஞ்சல் துறை வெளியிட்டது.

கார்த்திகை தீப திருவிழாவின் போது பஞ்சமூர்த்திகள் புறப்படுவர். அதற்கு முன் அர்த்தநாரீஸ்வரர் வேகமாக எழுந்தருள்வார். அவர் வந்ததும் மலையில் மகா தீபம் ஏற்றப்படும்.

* கார்த்திகை தீபத்திற்கு முன் அண்ணாமலையார் சன்னிதியில் பரணி தீபம் ஏற்றப்படும். அண்ணாமலை தீபம் மலைக்குப் புறப்படும் முன் கஜ பூஜை நடத்தப்படும்.
                                         அண்ணாமலைக்கு அரோகரா!

* மலை தீபம் ஏற்ற காண்பிக்கப்படும் தீப்பந்தத்தை 'எலால்' என்பர். சிக்னல் போல இதைக் காட்டியதும், மலையில் தீபம் ஏற்றுவர். அப்போது 'அண்ணாமலைக்கு அரோகரா' என்னும் கோஷம் எதிரொலிக்கும்.

உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய வொருவன்    
பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ    
மண்ணார்ந்தன அருவித்திரள் மழலைம்முழ வதிரும்    
அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ணம் அறுமே.      

- சம்பந்தர் தேவாரம்.

எனக்குப் பிடித்த பாடல்-  'எங்க வீட்டுப் பெண்' படத்தில் கண்ணதாசன் அவர்கள் பாடல். 
கார்த்திகை  விளக்கு திருக்கார்த்திகை விளக்கு பாடல். பாடல் வித்தியாசமாய் இருக்கும், இரண்டு பாடல் போல் இருக்கும் முழுவதும் கேட்டுப்பாருங்கள் நன்றாக இருக்கும்.

கடைசியில் வரும் வரிகள் அருமையாக இருக்கும். "நேற்று வந்த துன்பம் இன்று  விலகவும், நாளை நேருகின்ற வாழ்வில் இன்பம் பெருகவும்" என்ற வரும். புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் வாழ்வின் துயரம் விலகி  இனி வாழ்வில் இன்பம் பெற இறைவன் அருள்புரிய வேண்டும்.
பழைய கதைகள் பைண்டிங்க் செய்து வைத்து இருந்த புத்தகத்தில்  உள்ள விளம்பரம்.

12  ஜோதிர்லிங்கம் பற்றி  வாரப் பத்திரிக்கையில் தொடர்ந்து வந்தது, துணி விளம்பரத்திலும் இறைத் தொண்டு.

இயற்கையின் சீற்றத்தால் அல்லல் அடைந்த மக்கள் வாழ்வில் நாளை நம் நிலை  என்ன ?என்ற  அச்ச  இருளை நீக்கி மீண்டும்  எழுவோம் நல்லபடியாக என்ற நம்பிக்கை ஒளியைத் தர வேண்டும் இறைவன்.

                                               தீப மங்கள ஜோதீ நமோநம
                                                    தூய அம்பலலீலா நமோநம
                                                         தேவகுஞ்சரி பாகா நமோநம
                                                                                               -திருப்புகழ்.

  
அனைவருக்கும் திருக்கார்த்திகை  நல் வாழ்த்துக்கள். 
வாழ்க வளமுடன்.
----------------------------------------------------

26 கருத்துகள்:

  1. திருக்கார்த்திகை குறித்து நல்ல பாடலுடன் அழகிய விளக்கம் நன்றி சகோ.

    வாழ்க வளமுடன்

    அண்ணாமலைக்கு அரோகரா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.
      பாடலை கேட்டது மகிழ்ச்சி.
      உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

      நீக்கு
  2. திருக்கார்த்திகை வாழ்த்துகள். நல்ல அருமையான விளக்கம். படங்களும் அருமை! ஒரே முறை தான் திருவண்ணாமலை போனோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்.
      வாழ்த்துக்களுக்கு நன்றி.
      நான் இரண்டு முறை கிரிவலம் வந்து இருக்கிறேன்.
      இன்னொரு முறை போக வேண்டும் என்று நினைத்து கைகூடவில்லை.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  3. ஐதிகம் என்றால் பலர் பல விதமாகச் சொல்லிச் சென்றதே நம்பிக்கையாகி விட்டதோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.

      ஆமாம், அப்படித்தான் இருக்க வேண்டும்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  4. திருக்கார்த்திகை வாழ்த்துகள் அம்மா...

    பாடல் அருமை...

    புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு துயரம் நீங்க வேண்டுகிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
      பாடலை ரசித்தமைக்கு நன்றி.
      புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு
      எல்லோர் வேண்டுதலும் நலம் அளிக்கட்டும்.

      நீக்கு
  5. இந்தப் பக்கத்தில் பாடல் கேட்டபடியே உங்கள் முந்தைய பதிவுகளைப் படித்துக் கொண்டிருந்தேன். சிறப்பான பாடல்.

    அனைவருக்கும் கார்த்திகை தீபத் திருநாள் நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வெங்கட், வாழ்க வளமுடன்.
      பாடலை கேட்டது மகிழ்ச்சி.
      கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

      நீக்கு
  6. இந்தப்பாடல் நான் கேட்டதில்லை.

    பழைய பைண்டிங் புத்தகங்களை பிரித்து போட்டோ எடுக்கையில் பைண்டிங் பிரிந்து விடுமோ என்று தயக்கமாக இருக்கும்.

    இனிய கார்திகைத் திருநாள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
      பாடல் பிடித்து இருக்கா? பாடல் வித்தியாசமாய் இருந்தது இல்லையா?
      பழைய பைண்டிங்க் புத்தகம் அம்மா கையால் தைத்த புத்தகம்.எனக்கும் பயமாய் தான் இருந்தது கவனமாய் எடுத்தேன்.
      உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

      நீக்கு
  7. நல்ல பதிவு....

    இடருற்றோர் இன்னல் எல்லாம்
    தீரட்டும்...
    இறையருளால் நலங்கள் எங்கும்
    பெருகட்டும்..

    கார்த்திகைத் திருநாள்
    நல்வாழ்த்துகள்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரை செல்வாராஜூ, வாழ்க வளமுடன்.
      உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.
      இறைவன் அருளால் கூட்டு வழிபாட்டால் இடருற்றோர் இன்னல் எல்லாம் விரைவில் தீரும் என்று நம்புவோம்.

      நீக்கு
  8. திருவண்ணாமலை தீபம் பற்றிய விவரங்கள் அருமை. லிங்கோத்பவரை வழிபட ஆணவம் அழியும் என்னும் புதிய தகவலை தெரிவித்தற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் பானுமதி வெங்கேடஷ்வரன், வாழ்க வளமுடன்.
    லிங்கோத்பவர் வழிபட ஆணவம் அழியும் என்பது புதிய தகவல் இல்லை பானு.
    கால காலமாய் சொல்லபடும் கதைதான். நான் புதிதாக சொல்லவில்லை. சிவனின்
    அடிமுடி காணவிழைந்த போது இருந்து சொல்லபட்ட கதை.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  10. தகவல்களும் பாடல் பகிர்வுமாக அருமையான பதிவு.

    திருக்கார்த்திகை வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
      உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

      நீக்கு
  11. பல நல்ல கருத்துகளைச் சொல்லி இருக்கிறீர்கள் கோமதி.
    நம் இன்பம் நிலைக்கவும், இன்பங்கள் பெருகவௌம் முருகனும், அவனது தந்தையும், அவனது மாமனும் அருள் செய்வார்கள். என்றும் இரு தீபங்கள் ஏற்றி
    மங்கலத்தை வரவேற்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அக்கா, வாழ்க வளமுடன்.
      நீங்கள் சொல்வது போல் நம் இன்பங்கள் நிலைக்க இன்பங்கள் பெருக இறைவன் அருள வேண்டும் என்பது உண்மை.
      உங்கள் அனபான கருத்துக்கு நன்றி அக்கா.

      நீக்கு
  12. உங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் லிங்கோத்பவர் மிக அழகு..

    திருவண்ணாமலை ரகசியங்களும் தெரிந்து கொண்டேன்.. கார்த்திகை விளக்கீடு என்பது ஊரில் இருந்தபோது, பந்தம் கொழுத்தி எடுத்துப் போய் வளவெல்லாம் நட்டு விடுவது, வாசலில் வாழைமரத்தில் தீபம் ஏற்றி எரியவிடுவது பின்பு அடுத்த நாள் கோயிலுக்குப் போய் சொக்கப்பனை எரிவது பார்ப்பது.. இப்போதெல்லாம் மறைந்து விட்டதே வெளிநாடுகளில்..

    இது நல்லூர் சொக்கப்பனை..

    https://www.youtube.com/watch?v=I1S0zM7P6OY&t=811s

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.
      லிங்கோத்பவருக்கு கவசம் சாற்றி இருப்பது இந்த் கோவிலின் விசேஷம், மற்ற பெரிய கோவில்களில் கூட நான் இப்படி கவசம் சாற்றி பார்த்தது இல்லை.

      உங்கள் ஊரில் கார்த்திகை தீபத்திருநாள் பகிர்வு அருமை.
      நான் நல்லூர் சொக்கப்பனை பார்க்கிறேன்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  13. திருவண்ணாமலை பற்றிய தகவல்கள் அனைத்தும் சிறப்பு

    துளசிதரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் துளசிதரன், வாழ்க வளமுடன்.
      உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  14. திருவண்ணாமலை தகவல்கள் அருமை அக்கா.. நிறைய தெரிந்து கொண்டேன்.

    பாட்டு இது வரை கேட்டதில்லை நன்றாக இருக்கிறது அக்கா. ஆமாம் இரு வகைப்பாடல்கள் போல இருக்கு சூப்பரா இருக்கு.... நாட்டுப்புற இசையும் கலந்து சூப்பரா இருக்கு...ரொம்ப வித்தியாசமாக மூன்று வகைன்னு சொல்லலாமா அக்கா....ஆனால் எல்லாம் இணைந்து சூப்பரா இருக்கு அக்கா...

    அந்த லிங்கோத்பவர் ரொம்ப அழகு! அக்கா...

    புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டும் பழையபடி வாழ்வுக்குத் திரும்ப வேண்டும் என்று பிரார்த்தனைகள் ..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்.
      பாட்டு உங்களுக்கு பிடிக்கும் என்று தெரியும் அதுதான் பகிர்ந்து கொண்டேன்.

      //புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டும் பழையபடி வாழ்வுக்குத் திரும்ப வேண்டும் என்று பிரார்த்தனைகள் ..//
      அனைவரின் பிரார்த்தனகைகளும் இடர்பட்ட மக்களை மீண்டும் பழையபடி வாழ வைக்கும்.
      உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

      நீக்கு