வியாழன், 8 நவம்பர், 2018

முருகனைச் சிந்திப்போம்திருவேடகம் செல்லும் பாதையில்  இருந்த கோவில்


முருகனுக்கு உகந்த விரதங்கள் மூன்று. வாரத்தில் கடைப்பிடிக்க வேண்டிய விரதம் செவ்வாய்க் கிழமை விரதம்,  நட்சத்திரத்தை வைத்து கடைப்பிடிக்க வேண்டிய விரதம் கார்த்திகை விரதம், திதியை வைத்து கடைப்பிடிக்கப்படுவது சஷ்டி விரதம்.

முருகனுக்கு உகந்த விழா கந்தசஷ்டி விழாவாகும்.  சூரபன்மனைச்  சம்ஹாரம் செய்த வைபவத்தைக் கொண்டாடுவது கந்தசஷ்டி விழா.

இன்று கந்த சஷ்டி தொடக்க நாள்.  கந்தன் பெருமைகளை, பாடல்களைப் பாடி விரதம் இருப்பார்கள். தீபாவளி பலகாரங்கள் சாப்பிட்டு முடிக்கும் முன்னே சஷ்டி விழா வந்து விடும். 

தீபாவளி பலகாரங்களை மறந்து மன வைராக்கியத்தோடு  கந்தனை நினைத்து வேண்டும் வரங்களைத் தரச்சொல்லி விரதம் இருப்பார்கள்.
ஆறு நாளும் மூன்று வேளையும் சாப்பிடாமல் விரதம் இருப்பவர்கள் சிலர். ஒரு வேளை உணவு எடுத்துக் கொள்பவர்கள்  உண்டு, அவர்கள் காலையும், மாலையும் பால் பழம் எடுத்துக் கொள்வார்கள். ஒரு வேளை மட்டும் சாப்பிட்டு. சூரசம்காரம் அன்று முழுவது உணவு அருந்தாமல், மறுநாள் விரதத்தைப் பூர்த்தி செய்வார்கள். ஆறு நாளும் சாப்பிடாமல் முருகன் கோவிலில் தங்கி விரதம் இருப்போரும் உண்டு.

கோயில் வாசலில் கோலம்
தீபாவளி அன்று  திருவேடகம் போகும் போது பாதையில் கண்ட ஆறுமுகர் 
பின் பகுதியில் தெரியும் முகம்
முருகன் சன்னதியில்  கவலையின்றித் தூங்கும் செல்லக்குட்டி
ஆறுமுகர்   முன்பு இந்த இடத்தில் இருந்து இருப்பார் போல  இப்போது ஆடு, செல்லங்களின் அடைக்கல இடமாய் இருக்கிறது.

               இப்போது இந்த ஓட்டுக்கூரைக்கு அடியில் இருக்கிறார் ஆறுமுகர்.

கந்த சஷ்டி விரதத்தின் போது, தினமும் கந்த சஷ்டி கவசம், கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, திருப்புகழ், கச்சியப்ப சுவாமிகளின் கந்த புராணம் ஆகியவற்றைப்  படிப்பார்கள். முருகன் கோவிலுக்குப் போய் அவரைத் தரிசனம் செய்வார்கள்.

முடியவில்லை என்றால் கந்தா சரணம், முருகா சரணம், கார்த்திகை பாலா சரணம் என்று  சரணங்களைச்சொல்லலாம் என்கிறார்கள்.

நான்  கச்சியப்ப சுவாமிகளின் கந்த புராணம் படித்து வருகிறேன் முருகன் அருளால் பல காலமாய். 

முருகப்பெருமானைச் சிந்திப்பதில் இன்று தீபாவளி அன்று பார்த்த ஆறுமுகர் கோவில், மற்றும் கச்சியப்பர் வரலாறும்.

சமஸ்க்ருத மொழியில்  வியாசபகவான் எழுதிய கந்தபுராணம், கச்சியப்ப சிவாச்சாரியாரால் தமிழில் எழுதபட்டது. 


கச்சியப்பர் வரலாறு :-

கந்தபுராணத்தைத் தமிழில் நமக்குத் தந்தவர் கச்சியப்பசிவாச்சாரியார். இவர் குமரக்கோட்ட முருகனை  பரம்பரை அர்ச்சகராகப்  பூஜை செய்து வந்த காளத்தியப்ப சிவாச்சாரியாருக்கு மகனாகத் தோன்றியவர்.

கச்சியப்பர் குமரக்கோட்டத்துப் பெருமானின் மேல் அதிகபக்தி கொண்டவர்.
முருகப்பெருமான் கந்தபுராணத்தைத் தமிழில் கொணர விருப்பம் கொண்டு கச்சியப்பர் கனவில் மயில் மேல் கையில் வேலுடன் தோன்றி 'சங்கர சம்ஹிதையில் 'முதற்காண்டமான  சிவ ரகசியத்துள்ளே நமது சரிதை கூறப்பட்டுள்ளது. அதனை  நற்றமிழில் பாடுவாயாக! என்றார்.  புராணத்தை எழுதத் தொடங்க"திகடசக்கர' என அடி எடுத்து கொடுத்தார். 

காலை எழுந்து நீராடி திருவெண்ணீறு அணிந்து ருத்ராக்ஷமாலை அணிந்து குமரக்கோட்டம் சென்று கோவிலை வலம் வந்து குமரக்கோட்டத்து முருகன் சந்நதி வந்து விநாயகரை வணங்கிப் பிள்ளையார் சுழி போட்டு  எழுதத் தொடங்கினார்.

திகடசக்கரச் செம்முகம் ஐந்துளான்
சகட சக்கரத் தாமரை  நாயகன்
அகட சக்கர விண்மணி யாவுறை
விகட சங்கரன் மெய்ப் பதம் போற்றுவோம்.

என்று விநாயகர் காப்புப் பாயிரம் எழுதி முடித்தார்.

ஒரு நாளுக்கு 100 பாடல் என்று எழுதினார். இரவு முருகப்பெருமான் பாதத்தில் வைத்து வந்து விடுவார்.

மறு நாள் காலை வந்து எடுத்து மீண்டும் படிக்கும் போது  அவர் எழுதிய பாடல்களில்  ஆங்காங்கே  பிழைதிருத்தம் செய்யப்பட்டிருந்தது.இப்படியாக 
கச்சியப்பர் பாடல்கள் எழுதுவதும், முருகப்பெருமான் திருத்துவதுமாய் 10345 பாடல்களைப் பாடி முருகன் திருமேனிக்குப் பாமாலை சாற்றினார்.

நல்ல நாளில்  மன்னர்கள், புலவர்கள், புரவலர்கள் முன் அரகேற்றம் செய்ய முதல் பாடலை திகட  சக்கரச் செம்முகம் ஐந்துளான்' என்ற .பாடலை படித்தவுடன்  அதில் குற்றம் உள்ளது என்றதும், கச்சியப்பர் காப்பின் முதலடி முருகப்பெருமான் எடுத்துக் கொடுத்தது என்றதும், அப்படியானால் முருகப்பெருமானே அவை முன் வந்து  சொல்லட்டும் .தான் தான் அடி எடுத்து கொடுத்ததைச் சொல்லட்டும் என்றதும் கச்சியப்பர் நாளை உங்கள் கேள்விக்குப் பதில் தரப்படும் என்று சொல்லிவிட்டுப் போய் விட்டார்.

கச்சியப்பர் முருகனிடம் கண்ணீர் மல்கத் தியானம் செய்தார், நீங்கள்  எடுத்துக் கொடுத்த அடிக்கு இலக்கண விளக்கம் சொல்ல வர வேண்டும் என்று பிரார்த்தனை செய்தார்.

அன்று இரவு கச்சியப்பர் கனவில் வந்து  "சுந்தரத் தமிழால் எமது புராணம் பாடிய  புலவா! வருந்த வேண்டாம்  விடிகின்ற பொழுது உமக்கு வெற்றியைத் தரும்  நிம்மதி கொள்வாய் என்று சொல்லி மறைந்தார்."

மறுநாள் அழகான தோற்றத்தில் ஏட்டுச்சுவடி ஏந்திச் சோழ நாட்டுப் புலவன் என்று சொல்லி முருகப்பெருமான்    வந்தார் . நேற்று நீங்கள் எழுப்பிய வினாவிற்கு விளக்கம் சொல்ல வந்து இருப்பதாய்ச் சொல்லி விளக்கம் சொல்லி அவர்கள் சந்தேகத்தைத் தீர்த்து மறைந்து விட்டார்.
அவையினர்பக்தனுக்காக இறைவனே முதலடி எடுத்துக் கொடுத்து அதற்கு விளக்கமும் சொல்லி மறைந்ததை வியந்து போற்றினர். கச்சியப்பருக்காக இறைவன் நடத்திய திருவிளையாடலை  எண்ணி வியந்து கச்சியப்பரைப் பாராட்டினர்.

அதன் பின் கச்சியப்பர் கந்தபுராணம் முழுவதும் பாடி அரங்கேற்றம் செய்தார். மன்னர் விருதுகளும் , பொன்னும், பொருளும், கொடுத்து சில கிராமங்களையும்  தானமாகக்  கொடுத்தார். தங்கப் பல்லக்கில் அமர வைத்து  வீதி உலா வர வைத்து சிறப்பு செய்தார். கச்சியப்பர்  பல்லாண்டு வாழ்ந்து முருகப்பெருமானைப் பாடிப் புகழந்து போற்றி அவர் திருவடி அடைந்தார்.

கந்தபுராணம்  சம்பவகாணடம், அசுரகாண்டம், வீரமகேந்திரகாண்டம், யுத்தகாண்டம், தேவ காண்டம், தக்ஷகாண்டம் என்று ஆறு  காண்டங்களைக்  கொண்டது. ஆறு நாளும்  இவற்றைப் படித்துப் பலன் அடையலாம்.

                                            


கந்தன் வந்தான் கவிதை தந்தான் என்ற பாடல் இந்த பதிவுக்குப் பொருத்தமாய் இருக்கிறது என்று  போட்டு இருக்கிறேன்.
இது குமரகுருபர் சிறு குழந்தையாக இருக்கும்போது பேச முடியாமல் இருந்து திருச்செந்தூர் முருகப்பெருமான் அருளால் கவிதை பாடும் அருள் பெற்ற படத்தின் பாடல் என்று நினைக்கிறேன்.

                                                         வாழ்க வளமுடன்.

27 கருத்துகள்:

 1. சிறப்பான தொடக்கம்... விளக்கங்களும் அழகு அம்மா...

  அருமையான பாடல்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன். வாழ்க வளமுடன்.
   உங்கள் கருத்துக்கு நன்றி.
   பாடலை கேட்டு கருத்து சொன்னதற்கும் நன்றி.

   நீக்கு
 2. சிறப்பான பகிர்வும்மா....

  தெரியாத சில தகவல்கள் அறிந்து கொண்டேன். நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் வெங்கட், வாழ்க வளமுடன்.
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 3. ஆறு நாட்களும் மூன்று வேளைகளும் உணவெடுக்காமல் இருக்க முடியுமா? ஆச்சர்யம். முருகன் சன்னதியில் தூங்கும் செல்லம் அழகு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
   ஆறு நாட்களும் உணவு உட் கொள்ளாமல் திருச்செந்தூரில் மண்டபத்தில் படுத்து இருப்பார்கள். உணவு உண்ணவில்லை என்றால் உடல் லேசாகி விடும் அவர்கள் கடற்காற்றை உட் கொண்டு இறைவன் நாமத்தை சொல்லிக் கொண்டே இருக்கும் போது பசி, தாகம் இருக்காது.

   முருகன் இருக்கும் வளாகத்தில் தண்ணீர், காற்று இயற்கை எல்லாம் நன்றாக இருக்கிறது அதனால் செல்லத்திற்கு காலை வேளை நல்ல தூக்கம்

   நீக்கு
 4. தந்தைக்கு மந்திரத்தை சாற்றி பொருளுரைத்த முந்துகவி சக்தி மகன் முருகன் வந்தான்... பாடல் எனக்கும் மிகவும் பிடிக்கும்.

  பதிலளிநீக்கு
 5. சரியாய் நினைவில்லை என்றாலும் சுமார் பத்து வயதிலிருந்து இன்று வரை தினமும் கந்தர் சஷ்டி கவசம் சொல்லி வருகிறேன். சிறுபிள்ளையில் ஏதோ ஒரு வேண்டுதல்... ஆயுள் முழுவதும் தினமும் சொல்வேன் என்று வேண்டிக் கொண்டது... இன்று வரை தொடர்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரீராம் வாவ்!! என் மகனும் நானும் தினமும் கேட்டுவிடுவோம்...பைஹார்ட்டா சொல்லத்தெரியாது என்றாலும்...தினமும் கேட்போம்...

   கீதா

   நீக்கு
 6. ஆயுள் முழுதும் சொல்லுங்கள் நலம் உண்டாகும்.
  அருமையான வேண்டுதல். மன உறுதியுடன் இன்று வரை தொடர்வது மகிழ்ச்சி.
  நானும் சொல்வேன் சிறு வயதிலிருந்து , சில நேரம் சொல்லமுடியாமல் போய் விடும்.
  கந்த குரு கவசம் , படிப்பேன், சில நாள் சண்முக கவசம் படிப்பேன், சத்ரு சங்கார வேற்பதிகம் படிப்பேன்.

  உங்கள் கருத்துக்களுக்கு நன்றி ஸ்ரீராம்.

  உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 7. தகவல்கள் நன்று.
  காணொளி கேட்டேன் நல்லபாடல்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 8. திருவேடகத்துக்கு 96 ஆம் வருடம் ஒரு முறையும் 97 ஆம் வருடம் தீபாவளி கழிந்த உடனேயும் போனோம். இரு முறையும் என் கணவர் வரலை. முதலில் நானும், பெண்ணும் என் பெரியம்மாவுடன் போனோம். அடுத்த முறை பெண், மாப்பிள்ளை, தம்பி, தம்பி மனைவி, குழந்தைகள் ஆகியோருடன் போனோம். பெண்ணும், மாப்பிள்ளையும் பல படங்கள் எடுத்தனர். எல்லாம் எங்கே இருக்குனு தேடணும். :))) சப்தமாதர், ஜேஷ்டா தேவிப் பிரதிஷ்டை ஆன கோயில். எதிரே வைகை நதி! நாங்க போனப்போ வைகையில் வெள்ளம் சுழித்துக் கொண்டு ஓடியது பார்க்க மனம் சந்தோஷமாக இருந்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்.
   திருவேடகம் கோபுர படம் மட்டும் திபாவளி பதிவில் போட்டேன்.
   திருவேடகத்தில் வைகை பார்க்கவில்லை.
   திருவேடகத்தில் சாய்பாபா கோவில் போனோம் அங்கு எதிரிலிருந்த வைகையை படம் எடுத்தேன் அப்புறம் போட வேண்டும்.

   நீக்கு
 9. இந்த முருகன் கோயில் போனதில்லை. கந்த சஷ்டியில் முருகனை வேண்டி ஒரு காலத்தில் விரதங்கள் இருந்திருக்கேன். எல்லாம் பொய்யாய்ப் பழங்கனவாய்ப் போயாச்சு! இப்போ செவ்வாய்க்கிழமை விரதம் கூட இருக்க முடியலை! :) அதே போல் கந்தசஷ்டி கவசம் எப்போதுமே என்னைக் காத்தும் வருகிறது. கல்யாணம் ஆன புதுசில் பலத்த எதிர்ப்புகளுக்கிடையேயும் விடாமல் சொல்லுவேன். அப்புறமா எதிர்த்தவங்களே சொல்ல ஆரம்பிச்சதும் அவன் அருளாலே தான்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நாங்களும் முன்பு மாதத்தில் வரும் இரண்டு சஷ்டியில் விரதம் இருந்தோம்.
   செவ்வாய் விரதம் இருந்தேன், கந்த சஷ்டி விரதம் இருவரும் இருப்போம்.
   கார்த்திகை சோமவார விரதம் இருப்பேன் இரவுதான் சாப்பிடுவேன் மாவிளக்கு செய்து வணங்கி விட்டு. இந்த வருடம் அதுவும் செய்ய முடியாது.

   நீங்கள் சொல்வது போல் கந்த் சஷ்டி கவசத்தை பெண்கள் பாடக்கூடாது. அதுவும் குழந்தை உண்டாகி இருக்கும் போது பாடக்கூடாது என்று சொன்னார்கள் தான்.

   பலத்த எதிர்ப்பு செய்தவர்களையும் பாட வைத்து இருக்கிறார். அவர்களையும் ஆட் கொண்டது முருகன் அருள்தான்.

   உங்கள் அருமையான கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 10. தினமும் கந்த ஷஷ்டி கவசமும்,ஷண்முகக் கவசமும்
  தினம் கேட்டே மனப் பாடமாகிவிட்டது.
  அருமையான படகளுடன், முருகனைப் பற்றி அழகான விளக்கங்களும்

  முருகன் நேரே வந்து அடியாரைக் காப்பாற்றியதும் மனசுக்கு நெகிழ்வு.

  மிக மிக நன்றி கோமதி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் அக்கா, வாழ்க வளமுடன்.
   //தினமும் கந்த ஷஷ்டி கவசமும்,ஷண்முகக் கவசமும்
   தினம் கேட்டே மனப் பாடமாகிவிட்டது.//

   தினம் கேட்டு மனப்பாடம் ஆகிவிடுவது உண்மை.

   முருகன் சிவபெருமான் போல நிறைய திரு விளைடாடல் செய்து இருப்பதை படித்து இருக்கிறோம்தானே!
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 11. அருமையான அழகான கோயில். சிறிய கோயில் என்றாலும்...

  பதிவு நன்று கந்தசஷ்டி தொடங்கிவிட்டது இல்லையா

  துளசிதரன்.

  அக்கா அழகான கோயில் ...முருகன் மனம் கவர்ந்த உம்மாச்சி எனக்கு...செல்லங்கள் எல்லாமே அழகு...வைகை நதி படம் போடுங்க அக்கா...பாபா கோயில் படங்கள்ம்...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் துளசிதரன், கீதா, வாழ்க வளமுடன்.
   சிறிய கோயிலாக இருந்தாலும் முருகன் பெரிய முருகன் அழகு.
   கந்தசஷ்டி தொடங்க்கி விட்டது. உங்கள் கருத்துக்கு நன்றி.

   வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்.
   முருகன் எல்லோருக்கும் பிடிக்கும் தானே!
   வைகை நதி, பாபா படம் எல்லாம் போடுகிறேன்.
   உங்கள் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 12. கச்சியப்பர் வரலாறு அறிந்துக் கொண்டேன் மா..அழகிய முருகன் அருளால் ..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் அனுராதா, வாழ்க வளமுடன்.
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 13. ஆறு நாட்களும் உணவு உட்கொள்ளாமல் திருச்செந்தூரில் மக்கள் கூடியிருப்பதைக் கேட்டுள்ளேன்...

  கார்த்திகை விரதம் - கவலையைத் தீர்க்கும்...
  மன உறுதியைத் தரும்!...

  அமரர் இடர்தீர அமரம் புரிந்த
  குமரனடி நெஞ்சே குறி..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்.
   ஆறு நாட்களும் மக்கள் உணவு உட் கொள்ளாமல் கடுமையான விரதம் இருப்பார்கள். மதியம் மட்டும் ஒருவேளை உணவு உண்டு விரதம் ஆறுநாளும் இருந்தார்கள் எங்கள், மாமனார், மாமியார் சாரின் அண்ணன் குடும்பம் எல்லாம் திருச்செந்தூர் போய்.
   நாங்கள் வீட்டிலேயே அப்படி இருந்தோம்.

   கார்த்திகை சோமவார விரதம் எங்க்களை எல்லாம் எங்கள் அம்மா இருக்க வைத்தார்கள் அது தொடர்கிறது.
   நீங்கள் சொல்வது போல் கவலைக்கு மருந்து, மன உறுதி இரண்டையும் கொடுத்து இருக்கிறது.
   குமரன் நம்மை எல்லாம் காப்பார்.
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 14. அருமையான ஆரம்பம். இனிய பாடலுக்கும் வரலாற்றுத் தகவல்களுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு