விழா நாயகர் லிங்கோத்பவர்
திருவண்ணாமலை ஆலயத்தில் கருவறை கோஷ்டத்தில் மூலவருக்கு நேர் பின்புறத்தில் மேற்கு திசை நோக்கி லிங்கோத்பவர் இருப்பதைக் காணலாம். இந்த லிங்கோத்பவர், மும்மூர்த்திகளின் அருளையும் ஒரே திருவுருவில் வழங்கிக் கொண்டிருப்பதாக ஐதீகம்.
அக்னிஜுவாலை சொரூபமாகிய இறைவனை வழிபடும் நாள் கார்த்திகைத் தீபத்திருநாள். ஐசுவரியம், வீரம், தேஜஸ், செல்வம், ஞானம், வைராக்கியம் எனும் ஆறுகுணங்களும் ஆறுமுகங்களாய் கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்ட முருகப் பெருமானை வணங்கும் நாளும் இந் நாளே. கார்த்திகை நட்சத்திரத்தில் சரவணனை விரதமிருந்து வணங்குவோர் நலம் பல பெற்று நற்கதி அடைவார்கள் என்று கந்த புராணம் சொல்கிறது.